Friday, March 6, 2009

குதலைக் குறிப்புகள் - 4

ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருது வென்றிருக்கிறார். மிகப்பெரிய சாதனை. ஏ.ஆர். ரகுமான் தொடக்கத்தில் இசையமைக்கத் தொடங்கியபோது, இளையராஜாவின் தீவிர ரசிகனாக இருந்த நான், ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களையெல்லாம் ‘ஒன்றுக்கும் ஆகாது’ பட்டியலில் வைத்திருந்தேன். முன் அனுமானம். அவர் டூயட் படத்துக்கு இசையமைத்தபோது, ‘என்ன பாட்டு இதெல்லாம்’ என்று நண்பர்களுடன் பேசியது நினைவுக்கு வருகிறது. ஆனால் உள்ளூர, இளையராஜாவை வீழ்த்தி வளரும் ஏ.ஆர்.ரகுமானின் பிரம்மாண்ட எழுச்சியைப் பற்றிய கலக்கம் இருந்தது. போகப் போக ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் மெல்ல ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. ஏ.ஆர். ரகுமான் ரஜினியின் படத்துக்கு முதலில் இசையமைத்தபோது எழுந்த பல குற்றச்சாட்டுகளையும், அவர் தற்போது இசையமைத்த சிவாஜி படத்தின் பாட்டுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், ரஜினி ரசிகர்களை தன் இசைக்கு அவர் பழக்கபப்டுத்தியிருப்பது புரிகிறது. இப்படி உலகத்தையும் தன் இசைக்குப் பழக்கப்படுத்திவிட்டார். இளையராஜாவும் எம்.எஸ்.விஸ்வநாதனும் ஏ.ஆர்.ரகுமானை ஒரே மேடையில் பாராட்டியிருப்பதும் நல்ல விஷயம்.

சில தோழர்களும் முற்போக்காளர்களும், ஏ.ஆர்.ரகுமான் விருது பெறும்போது இலங்கைத் தமிழர்களுக்காகவோ, உலகின் பல்வேறு இடங்களில் தீவிரவாதத்தால் இன்னலுறும் இஸ்லாமியர்களுக்காகவோ ஏன் வருத்தம் தெரிவிக்கவில்லை என்ற ‘ஆழமான’ கோரிக்கை ஒன்றை எழுப்பியிருக்கிறார்கள். மணிவண்ணன் போன்ற நடிகர்கள் அடிக்கும் கூத்துக்களில் இதுவும் ஒன்று. மணிவண்ணன் தோழர்கள் போல சிந்திக்கத் தொடங்கிவிட்டாரா அல்லது தோழர்கள் மணிவண்ணன் போல சிந்திக்கத் தொடங்கிவிட்டார்களா எனப் புரியவில்லை. இலங்கைப் பிரச்சினைக்காக மணிவண்ணன் துறந்தவை எவை என்று அவர் முதலில் பட்டியலிடலாம். மேலும், இது இறந்துகொண்டிருக்கும் ஈழத் தமிழர்களின் மீதான அனுதாபமா அல்லது புலிப்பாசமா என்பதையும் தெளிவுபடுத்தலாம்.

-oOo-

ரெசுல் பூக்குட்டி விருதுபெறும்போது, தான் ஓம் என்ற வார்த்தையை உலகுக்கு அளித்த நாட்டிலிருந்து வந்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். செக்யூலர்களுக்கு இந்த வரி பிடிக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டு மத எதிர்ப்பாளர்களும், கடவுள் மறுப்பாளர்களும் ’எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்ற ஏ.ஆர்.ரகுமானின் சமர்ப்பணத்தை மட்டும் எதிர்க்கமாட்டார்கள் என்பது அறிந்ததுதான்.

இதில் ஜெய்கோ பாடலை காங்கிரஸ் தனது தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்த உரிமம் பெற்றுவிட்டதாக அறிந்தேன்.
இது ஒரு காமெடி என்றால், இன்னொரு காமெடி, இப்பாடலை நரேந்திர மோடி தன் மேடையில் பயன்படுத்தியிருப்பதற்காக அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் முயன்றிருப்பதுதான். நானும் இங்கே ஜெய்கோ என்று எழுதியிருக்கிறேன். ’குத்லை’க்குறிப்புகளின் மீது கேஸ் வருமா என்று ’நாக்கை’த் தொங்கப்பட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். ஜெய்கோ பாடலை அரசியலுக்குப் பயன்படுத்துவது கேவலமான உத்தி என்று குல்சார் சொல்லியிருக்கிறார். கேவலாமனதைத்தானே அரசியல் செய்யும்?

-oOo-

கருணாநிதிக்கும் காந்திக்குமான ‘ஐயோ தம்பி இப்படி மோசம் பண்ணிட்டியேப்பா’ ரக கடிதப் போக்குவரத்துகள் நல்ல சுவாரஸ்யம். அரசு யாரிடமும் கோராமல், கலந்தாலோசிக்காமல் நாட்டுடைமையை அறிவித்துவிடுமாம். அதை ஏற்றுக்கொள்ள மனமில்லை என்றால், அரசு கட்டாயப்படுத்தாதாம். இதுபோன்ற ஒரு நடைமுறையை அரசு கையாள்வது அறிவற்ற செயல். இது தேவையற்ற குழப்பங்களுக்கே வழிவகுக்கும். இது ஒருபுறமிருக்க, கருணாநிதியின் கடிதம் இன்னும் மோசமானது. அதில் அவர் சொல்ல வரும் கருத்துக்கள் என்ன? ஒரு கோடி ரூபாய் அவர் நிதி அளித்தது தனி மனிதரை நம்பியா அல்லது பபாசி என்கிற அமைப்பை நம்பியா? விருது எழுத்தாளர்களுக்கு இல்லையா? அப்படியானால் விருது பெறும் எழுத்தாளர்கள் என்ன பொம்மைகளா? விருது பெறும் எழுத்தாளர்கள் பட்டியல் தன்க்குத் தெரியாது என்று இன்னொரு குற்றச்சாட்டு. உலகத்துக்கே தெரியும் விஷயம் கருணாநிதிக்குத் தெரியாமல் போயிருக்கிறது. பபாசியோ காந்தி கண்ணதாசனோ, தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்களை கருணாநிதியிடம் சொல்லாமல் இருந்திருப்பார்கள் என்பது நம்பும்படியாக இல்லை. ஒருவேளை, தேர்ந்தெடுக்குமுன்பே சொல்லவேண்டும் என்று கருணாநிதி எதிர்பார்த்திருந்திருக்கலாம். இதை வெளிப்படையாகச் சொல்லமுடியுமா? சொல்லிவிட்டால், ‘எழுத்தாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் தலையிட்டதே இல்லை’ என்று எப்படி பின்னர் பெருமையடித்துக்கொள்ளமுடியும்? காந்தி கண்ணதாசனுக்கு இப்படி விழுந்து விழுந்து பதில் சொல்லியிருக்கும் கருணாநிதி, காலச்சுவடு கண்ணனுக்கு ஏன் பதில் சொல்லவில்லை. கருணாநிதி ஒரு பக்கம் பதில் சொன்னால், காலச்சுவடு கண்ணன் பத்து பக்கம் பதில் சொல்வார் என்பது கருணாநிதிக்குச் சொல்லபப்ட்டிருக்கும்.

காலச்சுவடு பதிப்பகத்தை ஒழித்துக்கட்டவே சுந்தர ராமசாமியின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டது என்று காலச்சுவடு கண்ணன் நினைப்பதற்குத் தேவையான காரணங்கள் உள்ளன. இதில் கனிமொழியின் பங்கு இருக்க வாய்ப்பிருக்கிறது என்று கண்ணன் நினைப்பது முற்றிலும் தவறு என்று சொல்லிவிடமுடியாது. நூலகங்களுக்கு காலச்சுவடு ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது, ஏன் நிறுத்தப்பட்டது என்பதற்கு இன்றுவரை என்ன காரணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன? கொடுத்தவனே எடுத்துக்கொண்டாண்டி என்பதே தமிழ்நாட்டின் தேசியப்பாட்டு.

தேர்தல் தேதிகளை அறிவித்துவிட்டார்கள். இனி இரண்டு மாதங்களுக்கு நல்ல ஜாலிதான். கருணாநிதியும் ஜெயலலிதாவும் அறிக்கைகளைத் தவிர்த்தால் ஆயிரம் மரங்களாவது மிஞ்சலாம். கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத ஒரு அரசு தமிழ்நாட்டில் அமையுமானால் நல்லது. ஆனால் அது நடக்கும் வாய்ப்பில்லை. தீவிரவாதப் பரிவு, ஹிந்துமதத்துவேஷம், மின்வெட்டு, விலைவாசி உயர்வு, நிர்வாகத் திறமையின்மை மற்றும் கட்டுப்பாட்டின்மை எனப் பல்வேறு எரிச்சல்கள் இந்த ஆட்சியின் மீது எனக்கு இருக்கின்றன. ஆனால் இப்போதிருக்கும் அதே கூட்டணியை (திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள்) திமுக தக்க வைத்துக்கொள்ளுமானால், இக்கூட்டணியே நிறைய இடங்களை வெல்லும் எனத் தோன்றுகிறது. அப்படி வென்றால், ஆற்காடு வீராச்சாமிக்குக் கொண்டாட்டம்தான். இன்னும் வெட்டித் தள்ளலாம். (யாரும் பின்னூட்டமாக, கருணாநிதி ஜெயலலிதாவுக்கு மாற்றாக பிஜேபி வராதா என்றெல்லாம் எழுதாதீர்கள், ப்ளீஸ்.)

-oOo-

வழக்கறிஞர்கள் – காவல்துறையினர் பிரச்சினையில், காவல்துறையை மட்டுமே குற்றம் சாட்டி ஊடகங்கள் எழுதுகின்றன. யாருமே வழக்கறிஞர்களின் அநாகரிகத்தை முன்வைப்பதில்லை. காவல்துறையினரின் தாக்குதல் கண்டிக்கப்படவேண்டியது என்றால், வழக்கறிஞர்களின் அநாகரிகமான தாக்குதல் மிகவும் கண்டிக்கப்படவேண்டியது. பிரச்சினை சுப்ரமணிய சுவாமியின்மீது முட்டை எறிந்ததில் இருந்து தொடங்கியதால், இப்பிரச்சினையை ஜாதி பிரச்சினையாக மாற்றிவிட்டார்கள். ஈழத்தமிழர் ஆதரவு என்கிற விஷயத்தை மறந்துவிட்டார்கள். (இது குறித்த மாலனின் மிகச்சிறப்பான கட்டுரை, வழக்கறிஞர்களால் பதில் சொல்லமுடியாத கேள்விகளை முன்வைக்கிறது.) நான் கல்லூரியில் படிக்கும்போது, கல்லூரி கேண்டீனில் போடும் வடையில் ஓட்டையின் அளவு பெரியதாகிவிட்டது என்று ஒரு ஸ்டிரைக் செய்தோம். பிரச்சினை பெரியதானதும், காவிரி பிரச்சினைக்கு ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்ததற்கு ஆதரவாகத்தான் ஸ்டிரைக் செய்ததாக ஒரு பெரிய பல்டி அடித்தார் எங்கள் VP. அரண்டு போனது கல்லூரி நிர்வாகம். இது இப்போது நினைவுக்கு வருகிறது.

எல்லாப் பிரச்சினைக்கும் பாப்பானே காரணம் என்பது எளிமையான பதில். (இந்த வார குமுதத்தில் வந்த ஒரு கேள்வி பதில். “ரஹ்மானைப் பாராட்டும்போதுகூட சிலர் இளையராஜாவை ஜாடைமாடையாகக் குத்துகிறார்களே?” “அது வேறு வெறுப்பு. இன்றும் தொடரும் ஆதிகால வெறுப்பு. திருத்த முடியாது.” – அதாவது இளையராஜா தாழ்த்தப்பட்ட ஜாதி என்னும் அர்த்தத்தில் இந்த பதில் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் முரண் என்னவென்றால், இளையராஜா பார்ப்பனிய வாழ்க்கை வாழ்கிறார் என்று முற்போக்காளர்கள் பலர் குற்றம் சாட்டியிருக்கிறார்கள் என்பதுதான.) சுப்ரமணிய சாமி ஜாதி சொல்லித் திட்டினார் என்பது இன்னும் எளிமையான குற்றச்சாட்டு. நேற்று விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடந்த ஈழ உணர்வு தெருக் கிளர்ச்சியில், ‘சுப்ரமணிய சாமி பேசலை, ஜெயலலிதா பேசலை, ஏன் ஏன் பேசலை, பாப்பாந்தான் சாகலை, அதனால பேசலை’ என்று கோஷம் போட்டுக்கொண்டு சென்றார்கள். பாப்பான் சாவதாக வைத்துக்கொண்டால், திருமாவளவன், நெடுமாறன், வீரமணி, கருணாநிதி பேசியிருப்பார்களா என்ன?

-oOo-

கிழக்கு ப்திப்பகத்தின் எடிட்டோரியல் டீம், தமிழை எப்படி எளிமையாகவும் புரியும்படியும் எழுத வைப்பது என்பதற்காக மண்டையை போட்டு உடைத்துக்கொள்கிறது. அவர்களுக்கான ஒரு டிப்ஸ். கீழே கருணாநிதி எழுதியிருக்கும் அறிக்கையில் இருந்து ஒரு வரியைத் தந்துள்ளேன். இதுவே சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்பது. படித்துத் தெளிவடையுங்கள். (அனுப்பிய நண்பருக்கு நன்றி!)

"அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் விவாதங்கள், வாதங்கள், போராட்டங்கள் இவற்றுக்கு இடையில் கூட- பிற கட்சி தலைவர்களை இது போன்ற வார்த்தைகளால் தாக்க கூடாதென்றும், அப்படி தவறுதலாக ஒருவேளை யாராவது தாக்கி பேசினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் - அவர்களையே மன்னிப்பு கேட்க சொல்லியும் - அரசியலில் அன்று தொட்டு இன்றுவரை - அய்யா பெரியாரும், அறிஞர் அண்ணாவும் நடந்து காட்டிய வழியிலேயே இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கின்ற கழகத்தின் தலைமை - மற்ற கட்சித்தலைவர்கள் ஒவ்வொருவரையும் - மற்ற கட்சிகளின் தியாகிகள் அனைவரையும் எந்த அளவிற்கு மனதில் நிறுத்தி மக்களிடையே நினைவுச் சின்னங்களாக அமைத்து- இந்த இயக்கம் வளர்க்கப்பட்ட விதத்தையும், வளர்ந்து வருகின்ற விதத்தையும் விரிவான வரலாறாக ஆக்கியிருக்கிறது என்பதையும், இனியும் அந்த அரசியல் நாகரிகம் இந்த இயக்கத்தால் கடைப்பிடிக்கப்படும் என்பதையும் ஏனோ, தினமணி மறந்து விட்டு- தேவையற்ற திசை திருப்பங்களை செய்ய முயற்சிகளை மேற்கொள்கிறது".

எடிட்டோரியல் டீமுக்கு இனிமேல் சந்தேகமே வராது என்று நினைக்கிறேன்.

9 comments:

Anonymous said...

அந்த முதல் பத்தி (ரஹ்மான் வந்தபோது ராஜா ரசிகர்களின் உணர்வு) நானே எழுதியதுபோல் உணர்ந்தேன்!

இது பாராட்டா, திட்டா என்று முடிவு செய்வது உங்கள் இஷ்டம் ;)

Anonymous said...

//. கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத ஒரு அரசு தமிழ்நாட்டில் அமையுமானால் நல்லது.//

எனக்கும் இந்த விருப்பம் இருக்கிறது. விஜயகாந்தின் துடிப்பைக் காணும்போது ஒருவாய்ப்பு வழங்கினால் என்ன என்றுகூடத் தோன்றுகிறது. ஆனால் அவர் முதல்வர் ஆகிவிட்டால் ராமு வசந்தன் உள்துறை அமைச்சராகவும் அண்ணியார் பிரேமலதா கல்வித்துறை அமைச்சராகவும் எல்.கே. சுதீஷ் நிதி அமைச்சராகவும் ஆகிவிடுவார்களே என்கிற பயம்தான், அப்படியொரு விபரீதம் வேண்டாம் என்று நினைக்கவும் சொல்கிறது!

கானகம் said...

குதலைக் குறிப்புகள் அருமையாக போகிறது..இளையராஜாவை எல்லாம் அடிக்க இன்னொருத்தன் பொறந்துதாண்டா வரணும்னு நானும் சொல்லி இருக்கேன்.. ரஹ்மானை வாழ்த்தத்தான் வேண்டும் இப்போது.. உங்களது கருத்தான ரஹ்மான் இசையை மக்களுக்கு பழக்கப்படுத்திவிட்டார் என்பது அதீத குற்றச்சாட்டு.. மக்களுக்குப் பிடித்தது ஏற்றுக்கொண்டனர். ..அவ்வளவே.. அதே அளவு இன்றும் இளையரஜா ரசிகர்களும் இருக்கின்றனர்.

குதலைக் குறிப்புகள் தற்போது வாராந்திர செய்திகளின் நகைச்சுவைத் தொகுப்பாக இருக்கிறது.. இது பாராட்டுதான் ..

ஜெயக்குமார்

Anonymous said...

//சில தோழர்களும் முற்போக்காளர்களும், ஏ.ஆர்.ரகுமான் விருது பெறும்போது இலங்கைத் தமிழர்களுக்காகவோ, உலகின் பல்வேறு இடங்களில் தீவிரவாதத்தால் இன்னலுறும் இஸ்லாமியர்களுக்காகவோ ஏன் வருத்தம் தெரிவிக்கவில்லை என்ற ‘ஆழமான’ கோரிக்கை ஒன்றை எழுப்பியிருக்கிறார்கள்.//

ஈராக் ஆக்கிரமிப்பு பற்றி ரகுமான் வாயைத் திறக்காததுகூட சரிதான். இடமறிந்து வாயை மூடிக்கொண்டிருக்கிறார் என்று மன்னித்துவிடலாம். குறைந்தபட்சம், அமெரிக்கா தன் படைகளை குஜராத்துக்கு அனுப்பி நரேந்திர மோடியைக் கைதுசெய்து தண்டனை கொடுக்கவேண்டும் என்றாவது அவர் சொல்லியிருக்கலாம். நம்மூர் முற்போக்குகளுக்குப் புல்லரித்திருக்கும். இப்படியா நல்லதொரு வாய்ப்பை நழுவவிடுவது? அரே அல்லா!

ILA (a) இளா said...

கடைசி பாரா(paragraph) நச்

மண்குதிரை said...

வணக்கம்!

ரகுமானுக்கு பாராட்டு என்ற உடனே எல்லோரும் கேட்ட கேள்வி இளயராஜா பாராட்டினாரா? என்பதுதான். இளயராஜாவே மனம் திறந்து பாராட்டிவிட்டார்.

என்னளவில், திமுக-காங்கிரஸ் கூட்டணி தோல்வியை சந்திக்கும்.

வழக்கறிஞர்களின் வன்முறை ஒரு தொடர்கதையாகத்தான் இருக்கிறது. காவல் துறையினரும் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக எதிர் தாக்குதல் நடத்துவதும் கண்டிக்கத்தக்கதே. இதைப் பற்றி சுரேஷ்கண்ணன் விரிவாக எழுதியிருக்கிறார்.

உங்கள் குதலைக் குறிப்புகள் நான்கிற்கு என் வாழ்த்துக்கள்.

மண்குதிரை said...

வணக்கம்!

ரகுமானுக்கு பாராட்டு என்ற உடனே எல்லோரும் கேட்ட கேள்வி இளயராஜா பாராட்டினாரா? என்பதுதான். இளயராஜாவே மனம் திறந்து பாராட்டிவிட்டார்.

என்னளவில், திமுக-காங்கிரஸ் கூட்டணி தோல்வியை சந்திக்கும்.

வழக்கறிஞர்களின் வன்முறை ஒரு தொடர்கதையாகத்தான் இருக்கிறது. காவல் துறையினரும் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக எதிர் தாக்குதல் நடத்துவதும் கண்டிக்கத்தக்கதே. இதைப் பற்றி சுரேஷ்கண்ணன் விரிவாக எழுதியிருக்கிறார்.

உங்கள் குதலைக் குறிப்புகள் நான்கிற்கு என் வாழ்த்துக்கள்.

ச.முத்துவேல் said...

/போகப் போக ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் மெல்ல ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. /

போகப்போகப் பிடிப்பவைதான் ரஹ்மான் பாடல்கள்.அதுக்குன்னு, இவ்வளவு காலம் போகவேண்டியது இருந்திருக்கே, உங்களுக்கு.

ரஜினி ரசிகர்களை ரசனை மாற்றத்திற்கு இட்டுச் சென்றிருக்கிறார் ரஹ்மான் என்பது, நல்ல realisation.

ஹரன்பிரசன்னா said...

போகப் போகப் பிடித்துவிட்டது என்பது இறந்த கால வினை. :) அது நடந்து ஐந்து வருடங்கள் அல்லது பத்து வருடங்கள் கூட ஆகியிருக்கலாம்.