Tuesday, July 6, 2010

ரெட்டைத் தெரு - குறும்படம் வெளியீட்டு விழா

மதுரையில் ஜூலை 9ம் தேதி (வெள்ளிக்கிழமை) ரெட்டைத் தெரு குறும்படம் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. அமெரிக்கன் கல்லூரியில் காலை 10 மணிக்கு நடைபெறும் குறும்பட வெளியீட்டு விழாவின் அழைப்பிதழ் இங்கே.

கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி 2010

கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி (2010) பற்றிய எனது பார்வை தமிழ்ஹிந்துவில் வெளியாகியுள்ளது. இதனைப் படிக்க: http://www.tamilhindu.com/2010/07/kovai-world-classical-tamil-conference-bookfair-2010/

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்து, எவ்விதத் தொந்தரவும் இன்றிப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றுவந்தேன்.

கோவையில் அதிகமாக வளர்ந்து செழித்துப் படர்ந்திருந்த தமிழ்ப் பயிர்களையெல்லாம் நீக்கிவிட்டு, நடைபாதையைக் கண்டுபிடித்து நடப்பதே பெரிய காரியமாக இருந்தது. செம்மொழி மாநாட்டுக்குப்பின் கோவையே ‘களை’யாக இருந்தது. பாரத ஸ்டேட் வங்கி உள்குத்துடன் அனைத்துத் தமிழ்ப் பெருங்குடி மக்களையும் வருக வருக என அழைத்திருந்தது. செங்கதிரால் மலரும் தாமரைகள்… உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டால் வளரும் கொங்குத் தமிழ்… என்றெல்லாம் வானுயர வளர்ந்திருந்த தமிழைக் கண்டு பெரும் இறுமாப்புடன் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றேன்.

wctc-2010-entranceமழை விட்டும் தூவானம் விடவில்லை என்பார்கள். தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக நிறுவப்பட்ட அரங்குகளையும், இனியவை நாற்பதையும் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாகக் குவிந்த வண்ணம் இருந்தனர். வெள்ளிக் கிழமை மட்டும் அதைப் பார்க்க கிட்டத்தட்ட 70,000 பேர் வந்திருப்பார்கள். எனக்குத் தலை சுற்றியது. சனிக்கிழமை ஒரு லட்சம் மக்கள் பார்த்திருக்கக்கூடும். இதனால் சில இடையூறுகள் ஏற்பட்டன. சிறிய அளவிலான இடையூறுகள்தான்; பேருந்து நேரத்துக்குச் செல்லாது, நேரத்துக்குக் கிடைக்காது, உணவு கிடைப்பது போன்றவை. ஆனாலும் காவல்காரர்கள் திறமையாகவே இதனைக் கையாண்டார்கள் எனச் சொல்லவேண்டும்.

தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நுழைவாயிலின் கண்றாவித் தோற்றத்தைப் பார்த்துவிட்டு, அதன் எதிரே அமைக்கப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சி அரங்கினுள் நுழைந்தேன்.

மிகச் சிறிய புத்தகக் கண்காட்சி. மொத்தமே 125 பதிப்பகங்கள்தான் கலந்துகொண்டன. பதிப்பகங்கள் குறைந்த அளவே இருந்தன என்பதாலோ என்னவோ உள்ளரங்கக் கட்டமைப்பு, செய்யப்பட்டிருந்த வசதிகள் என எல்லாவற்றிலுமே பபாஸி சிறப்பாகச் செயல்பட்டிருந்தது.

காலநிலையும் பபாஸிக்கு ஒத்துழைத்தது! பெங்களூரு புத்தகக் கண்காட்சி போல, டெல்லி புத்தகக் கண்காட்சி போல அப்படி ஒரு குளிரான புத்தகக் கண்காட்சி. நல்ல காற்று, அதோடு மின்விசிறியும் சேர்ந்துகொள்ள, கிழக்கு பதிப்பகத்து அரங்கத்தின் அருகில் இருந்த இடத்தில் ஒரு கட்டிலைப் போட்டுத் தூங்கியிருந்தால், சொர்க்கத்தைப் பார்த்திருக்கலாம். வியர்வையே இல்லாத முதல் தமிழ்நாட்டுப் புத்தகக் கண்காட்சி இதுவாகத்தான் இருக்கும். மாலை 7 மணிக்கெல்லாம் பதிப்பாளர்களின் புகார்கள் தாங்காமல் மின்விசிறியை நிறுத்திவிட்டார்கள். அப்படி ஒரு குளிர்.

பெங்களூரு புத்தகக் கண்காட்சியைப் போல, எல்லா அரங்குகளுக்கும் தண்ணீர் பாட்டிலைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டார்கள். இதனால் அங்கங்கே தண்ணீர் வைப்பது, பதிப்பாளர்கள் தேவைக்கும் அதிகமாகப் பிடித்து வைத்துக்கொள்வது, தேவையானவர்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் போவது போன்ற கூத்துகளெல்லாம் நடக்காமல் போனது. இதனையே சென்னை புத்தகக் கண்காட்சிக்கும் செய்துவிடலாம்.

kovai-bookfair2இதைவிட பபாஸி அசர வைத்தது இன்னொரு விஷயத்தில். ஒவ்வொரு அரங்கத்துக்கும் எல்லா நாளும் மதிய உணவை அழகாக பேக் செய்து கொடுத்துவிட்டார்கள். ஓர் அரங்கத்துக்கு இரண்டு எலுமிச்சை சாதம் (அல்லது வேறு ஏதோ ஒன்று) இரண்டு தயிர் சாதம். இதனை ஏன் தனியே குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்பதற்குக் காரணம் இருக்கிறது. கிட்டத்தட்ட 600 பதிப்பகங்கள் கலந்துகொள்ளும் சென்னை புத்தகக் கண்காட்சியில், கல்யாண வீடு போல ஷாமியானா கட்டி, இலை போட்டுச் சாப்பாடு போடுவார்கள். அங்கே இடம் கிடைக்கவே அதிக நேரம் ஆகும். 11 மணிக்குத் தொடங்கும் சாப்பாடு, முடிய 3 மணி ஆகும். இதில் பதிப்பாளர்களின் குறை ஏகத்துக்கும் இருக்கும். இவை எல்லாமே இல்லாமல் ஆகிப் போனது கோவை புத்தகக் கண்காட்சியில். கோவை புத்தகக் கண்காட்சியில் வழங்கப்பட்ட உணவின் தரமும் மிக நன்றாகவே இருந்தது. சென்னை புத்தகக் கண்காட்சியிலும் இதனையே செய்துவிட்டால், இரண்டு இரண்டு பேராக உணவுக்குச் சென்று வந்து, அடுத்த இரண்டு பேர் சென்று வந்து என வீணாக நேரம் செலவாவதைத் தடுக்கலாம். இதனைச் செய்வது பற்றி பபாஸி பரீசிலிக்கவேண்டும். சாம்பார், வத்தக்குழம்பு, பொறியல், கூட்டு, அப்பளம், மோர் எனக் கல்யாணச் சாப்பாட்டை யாரும் கேட்கவில்லை. எல்லாருக்கும் தேவை, அந்தப் பசி நேரத்தில் ஏதேனும் ஓர் உணவு மட்டுமே. இப்படி பல வகைகளுடன் உணவு தருவதற்குப் பதிலாக, ஏதேனும் ஒரு கலவை சாதமும் தயிர் சாதமும் கொடுத்தால், அதை அதிகத் தரத்துடனும் வழங்கமுடியும்; தேவையற்ற நேர விரயத்தையும் தவிர்க்கமுடியும்.

கொடீசியா அரங்கில் வைத்து புத்தகக் கண்காட்சி நடைபெற்றதால், கழிப்பிட வசதி குறித்த பிரச்சினை ஏற்படவில்லை. திறந்த வெளி சிறுநீர்க் கழிப்பிடங்கள் பரந்து விரிந்து இருந்ததால், துர்நாற்றம் போன்ற பிரச்சினைகள் ஏற்படவில்லை. இந்த கழிப்பிட வசதிப் பிரச்சினையை பபாஸி எப்படி சென்னை புத்தகக் கண்காட்சியில் எதிர்கொள்ளப் போகிறது எனத் தெரியவில்லை.

kovai-bookfair3இப்படிப் பல விஷயங்களில் நன்றாகச் செயல்பட்டிருந்தாலும், பபாஸி கோட்டை விட்டது விளம்பர விஷயத்தில். கோவை தொடர்வண்டி நிலையத்தில் இருந்து, புத்தகக் கண்காட்சி நடக்கும் கொடீசியா அரங்கம் கிட்டத்தட்ட 12 கிமீ தொலைவில் உள்ளது. நான் பேருந்தில் சென்று வந்தேன். நான்கு முறை சென்று வந்தபோதும், ஒரு தடவைகூட புத்தகக் கண்காட்சி பற்றிய ஓர் அறிவிப்பைக் கூடப் பார்க்கவில்லை. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் குதிரையிலேயே சவாரி செய்துவிடலாம் என நினைத்திருப்பார்கள் போல. நான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு அரங்குக்குள் செல்லவில்லை. நான் கேள்விப்பட்டவரை, அங்கேயும் புத்தகக் கண்காட்சி பற்றிய அறிவிப்பு எங்கேயும் இல்லை. இதனால் நிறையப் பேருக்குப் புத்தகக் கண்காட்சி நடைபெற்றதே தெரியாமல் போய்விட்டது.

கிழக்கு பதிப்பகத்தின் சார்பாக அதன் கோவை வாசகர்களுக்குத் தனியே கடிதம் அனுப்பியிருந்தோம். அதில் சிலர் எங்களை அழைத்து, தமிழ்ச் செம்மொழி மாநாட்டோடு புத்தகக் கண்காட்சியும் நடைபெறுகிறதா எனக் கேட்டார்கள். காலச்சுவடு இதழில் வெளியாகியிருந்த, காலச்சுவடு அரங்கு எண் குறித்த விளம்பரத்தைப் பார்த்த சிலரும் காலச்சுவடை அழைத்து, இதே கேள்வியைக் கேட்டதாகத் தெரிகிறது.

இனியவை நாற்பது என்னும் நிகழ்ச்சியை முதல் நான்கு நாள்கள், புத்தகக் கண்காட்சி அரங்கத்துக்கு எதிரில் வைத்திருந்தார்கள். அதைப் பார்க்கக் குவிந்த கூட்டத்தினர் பலர் அப்படியே புத்தகக் கண்காட்சியையும் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள். திங்கள் கிழமைக்குப் பின்னர், அந்த இனியவை நாற்பது அரங்கத்தை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு அரங்கத்தினுள்ளேயே வைத்துவிட்டார்கள். இதனால் புத்தகக் கண்காட்சிக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துபோனது.

புத்தகக் கண்காட்சியை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கும் அரங்கத்தின் உள்ளேயே வைத்திருக்கலாம். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டோடு நேரடியாகத் தொடர்பு கொண்டது புத்தகங்களாக மட்டுமே இருக்கமுடியும் என்றுதான் என் சிற்றறிவுக்குத் தெரிகிறது. ஆனால் தமிழை வளர்க்கப் புத்தகங்கள் தேவையில்லை என நினைப்பவர்கள் புத்தகக் கண்காட்சியை வெளியே கழற்றிவிட்டுவிட்டார்கள். அப்படிச் செய்யாமல் அரங்கத்தினுள்ளேயே வைத்திருந்தால், இந்தப் புத்தகக் கண்காட்சி, வரலாறு காணாத வெற்றி பெற்றிருக்கும்.

kovai-bookfair1கோவை புத்தகக் கண்காட்சி என்றாலே ஒருவித ஒவ்வாமைதான் பதிப்பாளர்களுக்கு இருந்து வந்திருக்கிறது. சென்ற ஆண்டோ அதற்கு முந்தைய ஆண்டோ கோவையில் புத்தகக் கண்காட்சி நடைபெறவே இல்லை என நினைக்கிறேன். (உறுதியாகத் தெரியவில்லை.) அந்த அளவு கோவை புத்தகக் கண்காட்சி குறித்த தோல்வி பயம் நிலவி வந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு கண்காட்சி சிறப்பாக நடைபெற்றிருந்தால், கோவை புத்தகக் கண்காட்சியை, சென்னை, ஈரோடு, மதுரையைத் தொடர்ந்து ஒரு முக்கியமான புத்தகக் காட்சியாக மாற்றியிருக்கலாம்.

செம்மொழி மாநாட்டால், கடந்த ஆண்டுகளை விட கோவை புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டு, அதிலேயே பபாஸி மகிழ்ந்துவிடக் கூடாது. ஒவ்வொரு ஆண்டும் கோவையிலும் புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெற பபாஸி முயற்சிகளைச் செய்யவேண்டும்.

பல பதிப்பாளர்கள் கோவை புத்தகக் கண்காட்சியில் பங்கேற்பதே இல்லை. இந்த முறை பங்கேற்றவர்கள் கூட, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்பதற்காகப் பங்கேற்றோமே அன்றி, புத்தகக் கண்காட்சிக்காக அல்ல என்று சொன்னார்கள். அடுத்த முறை பங்கேற்கப் போவதில்லை என்றும் சொன்னார்கள்! இந்த நிலையை மாறவேண்டும். பபாஸி நினைத்தால் இதனை எளிதாக மாற்றிவிடலாம். கோவை அப்படி ஒன்றும் புத்தகமே வாசிக்காதவர்கள் வாழும் கிரகமல்ல.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வருபவர்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்தது சரிதான். ஆனால் செம்மொழி மாநாட்டிலேயே அலைந்து திரிந்து ஓய்ந்து வருபவர்கள் புத்தகக் கண்காட்சியில் எவ்வித ஆர்வமும் காட்டாமல், நடக்க முடியாமல் சோர்ந்து போய், ஒரு தடவை பார்த்துவிட்டுப் போய்விடுகிறார்கள். ஒரு நண்பர், ‘புத்தகங்கள் விற்பனைக்கு’ என்று அட்டை வைக்கலாமா என்று கேட்டார்.

செம்மொழி மாநாட்டுக்காக இல்லாமல், புத்தகக் கண்காட்சிக்காகவே வருபவர்கள் நிறையப் பேர் என்பதால், வந்தவர்களில் ஒரு புத்தகமாவது வாங்குபவர்கள் சதவீதம் அதிகமாக இருந்தது. ஆனால் ஒரு புத்தகக் கண்காட்சியின் விற்பனை வெற்றிக்கு இது போதாது. புத்தகம் வாங்க நினைக்காதவர்கள் கூட உள்ளே வந்து புத்தகம் வாங்கவேண்டும். இதனால் உள்ளே வருபவர்களில் எத்தனை பேர் புத்தகம் வாங்குகிறார்கள் என்னும் சதவீதம் குறைந்தாலும், ஒட்டுமொத்த விற்பனை அதிகமாகும். சென்னை புத்தகக் கண்காட்சியில் நடப்பது இதுதான். எனவேதான் அங்கே புத்தகக் கண்காட்சி வெற்றியடைகிறது.

kovai-bookfair4பெரும்பாலான பதிப்பகங்கள் விற்பனை மிக மந்தம் என்றுதான் சொன்னார்கள். கிழக்கு பதிப்பகத்தைப் பொருத்தவரை நல்ல விற்பனை என்றுதான் சொல்லவேண்டும். நாங்கள் எதிர்பார்த்ததைவிடவே நல்ல விற்பனைதான். கடந்த 3 முதல் 4 மாதங்களாக நிலவி வந்த காகிதப் பற்றாக்குறையால், நிறையப் புத்தகங்களை இருப்பில் வைத்திருக்க இயலவில்லை. இதனையும் மீறி நல்ல விற்பனை. எல்லாப் புத்தகங்களும் இருப்பில் இருந்திருந்தால் கோவையை இன்னும் அதிகமாகக் கலக்கியிருக்கலாம்.

அடுத்த முறை சரியான இடத் தேர்வு, நிறைய விளம்பரங்கள் என்று செய்தால், கோவை புத்தகக் கண்காட்சியை தமிழ்நாட்டின் முக்கியமான புத்தகக் கண்காட்சியாக மாற்றிவிடலாம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

சில துளிகள்:

* பாரதி புத்தகாலயம் நிறைய பதிப்பாளர்களின் புத்தகப் பட்டியலை ஒரு சிடியில் வெளியிட்டுள்ளது. இதில் எத்தனை பதிப்பாளர்கள் உள்ளார்கள், எந்த வடிவமைப்பில் உள்ளது என்பதெல்லாம் தெரியாது. தேடும் வசதி இருக்காது என்றுதான் நினைக்கிறேன். இருந்தாலும் இப்படி ஒரு சிடி தேவை என்னும் எண்ணம் எழுந்திருப்பதே பாராட்டத் தக்கது. இனி வரும் காலங்களில் இந்த நினைப்பு மெருகூட்டப்பட்டு ஒரு நல்ல சிடி நமக்குக் கிடைக்கும் என எதிர்பார்ப்போம்.

* புத்தகக் கண்காட்சியைப் பார்த்துவிட்டுச் செல்லும் நபர் ஒருவர், ‘கலைஞர் இறந்துட்டா தமிழை யார்தான் காப்பாத்துவா? நல்லவேளை, அவர் இருக்கும்போது இந்த செம்மொழி மாநாடு நடந்தது; அவருக்குப் பின்னாடி தமிழை யார்தான் காப்பாத்தப் போறாங்களோ…,’ என்றாராம். ஒரு நண்பர் என்னிடம் இதைச் சொன்னார்.

* வழக்கம்போல வித்தியாசமான வாடிக்கையாளர்கள். 54 ரூபாய் ஒரு புத்தகம் என்றால் 4 ரூபாய் குறைத்தால் உங்களுக்கு என்ன நஷ்டம் என்ற கேள்விகள். அதிலும் ஒரு வாசகர், 200 ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கினார். இரண்டு நூறு ரூபாய் நோட்டுகள் கொடுத்தார். அதில் ஒன்று முற்றிலும் இரண்டாகக் கிழிந்துவிட்ட நிலையில், கடைசியில் நூலிழையில் ஒட்டிக்கொண்டிருந்தது. இது செல்லாது என்று சொன்னபோது, “இஷ்டம்னா இதை வெச்சிக்கிட்டுப் புத்தகத்தைக் கொடு, இல்லைன்னா புத்தகத்தை நீயே வெச்சிக்கோ,” என்றார். “இல்லை சார்,” என்று பணிவாகச் சொல்லிவிட்டு, பில்லை பணிவாக கேன்சல் செய்துவிட்டு, புத்தகத்தைப் பணிவாகத் திரும்ப வாங்கிக் கொண்டோம். ஒரு வாசகர் தனக்கு எல்லாப் பதிப்பகங்களும் 50 முதல் 60% வரை தள்ளுபடி தருவதாகச் சொல்லி, எங்களிடமும் அதைக் கேட்டு வாதாடினார். மீண்டும் பணிவான அதே பதில், “இல்லை சார்.”

* பாரதி புத்தகாலயத்தில் என்னைப் பார்த்த ஒருவர், ‘நீங்க இட்லிவடைதானே?” என்றார். இங்க வந்துமா என நினைத்துக்கொண்டே, “இல்லை, அதுல எழுதியிருக்கேன்,” என்றேன். நான் புத்தகக் கண்காட்சி பற்றிய எழுதிய பதிவுகளை வாசித்திருப்பதாகச் சொன்னார். அப்ப யார்தான் இட்லிவடை என்று என்னை அவர் கேட்டார். நான் இட்லிவடை இல்லை என்று திட்டவட்டமாகச் சொல்லி, கோவை புத்தகக் கண்காட்சி பற்றி எழுதினாலும் எழுதுவேன் என்றும் சொல்லி விடைபெற்றுக்கொண்டேன்.

* சுஜாதா புத்தகங்கள் - என்ன சொல்ல? இப்படி ஒரு ‘க்ரௌட் புல்லரை’ இனிமேல் பார்ப்பது அரிது. கிழக்கு பதிப்பகத்தைத் தாண்டிச் செல்லும் ஒவ்வொருவரும் சுஜாதாவின் புத்தகங்கள் இருப்பதைப் பார்த்துவிட்டு அரங்கினுக்குள்ளே வந்தார்கள் என்றால் மிகையில்லை. அதிலும் சுஜாதாவுக்கான பெண் வாசகர்கள் - வாய்ப்பே இல்லை.

* ஒரு நண்பர் நெட்டில் என்ன நடக்குது என்று கேட்டார். தமிழ்ஹிந்து பற்றியும் சொன்னேன். அப்படி ஒரு வலைத்தளம் இருக்குதா என்ன என்றார். ‘சட்ட கிழிஞ்சிருந்தா தெச்சு உடுத்திரலாம்… நெஞ்சு கிழிஞ்சிருச்சே… எங்க முறையிடலாம்’ என்ற பாட்டு பின்னணியில் ஓடியதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

* நாவல் வடிவில் கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருந்த சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, முத்தொள்ளாயிரம் எல்லாமே நன்றாக விற்பனை ஆயின. செம்மொழி மாநாட்டுக் காய்ச்சலாலோ என்னவோ, ஒவ்வொருவரும் வந்து சிலப்பதிகாரம் செய்யுள் வடிவில் இருக்கிறதா என்று கேட்டார்கள். இல்லை என்று பதில் சொல்லி மாளவில்லை. யாராவது ஒருவரிடமாவது, “இளங்கோவடிகளே எழுதின ஓலைதான் இருக்கு, அதைத் தர்றதில்லை,” என்று சொல்லிவிட எழுந்த எண்ணத்தை அடக்கிக்கொண்டேன். காரணம் பணிவுதான், வேறென்ன. :>

* ஏதேனும் ஒரு பதிப்பகத்துக்குப் போய் ஏதேனும் ஒரு வாசகர் ஏதேனும் ஒரு புத்தகத்தைக் கேட்டு, அந்த ஏதேனும் ஒரு புத்தகம் அங்கே இல்லை என்றால், அந்த ஏதேனும் ஒரு பதிப்பகத்து நிர்வாகி மறக்காமல் கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கும் என்று சொல்லிவிடுகிறார். வருபவர்கள் எல்லாம், நான் அங்கே கேட்டேன், இங்கே கேட்டேன், எல்லாரும் உங்க கடையிலதான் கிடைக்கும் என்று சொன்னார்கள் என்று சொல்லியவண்ணம் இருந்தார்கள். அவர்கள் கேட்ட புத்தகங்கள் எல்லாம் எங்கே கிடைக்கும் என்னும் விவரங்கள் எங்களுக்குத் தெரிந்திருந்தால் அதனைச் சொல்லி அனுப்பி வைத்தோம். இதற்கே ஒரு நாளில் கணிசமான நேரம் செலவானது. இது ஒரு சந்தோஷமான விஷயம்தான்!

* காலை தொடர்வண்டி நிலையத்தில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்கு வரும்போது ஆட்டோ டிரைவர் என்னிடம் சொன்னார், “500 கோடில என்ன மாநாடு வேண்டியிருக்கு. வண்டில போறதுக்கு வர்றதுக்கு ஒழுங்கா ரோடு இல்லை…. அப்துல் கலாம் எல்லாம் இல்லாம ஒரு மாநாடா?…” என்றார். சரி ஜெயலலிதாவின் ஆதரவாளராக இருக்குமோ என சந்தேகம் வந்தபோது அவரே தீர்த்து வைத்தார், “நேத்து எஸ்.எஸ்.சந்திரன் கேட்டான் பாருங்க சார், தேசிய கீதத்துக்கே எந்திரிச்சி நிக்கமுடியலையே…”

நல்லவேளை, வீடு வந்துவிட்டது!

Monday, July 5, 2010

மலர்மன்னனின் கடிதம்

மலர்மன்னன் எழுதி, கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ‘ஆரிய சமாஜம்’ என்னும் நூலுக்கு நான் ஒரு விமர்சனம் எழுதியிருந்தேன். (அதைப் படிக்க:http://nizhalkal.blogspot.com/2010/06/blog-post_14.html) அதைப் படித்துவிட்டு மலர்மன்னன் எழுதியிருக்கும் கடிதம் இங்கே வெளியிடப்படுகிறது.

அன்புள்ள ஸ்ரீ ஹரன் பிரஸன்னா,

ஆரிய சமாஜம் நூலுக்கு நீங்கள் எழுதியுள்ள விமர்சனத்தை நண்பர்கள் அனுப்பித் தந்தமையால் வாசிக்கக் கிடைத்தது.

நூலாசிரியன் விளக்கம் அளித்தாக வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கும்படியான விமர்சனம் எழுதும் உங்கள் சாமர்த்தியத்தை முதலில் மெச்சுகிறேன்.

1. நீங்கள் பிராமணச் சார்பாகப் பார்ப்பதை நான் நியாயத்தின் சார்பாகப் பார்க்கிறேன். ஆகையால் எனது பார்வையை பகிரங்கப்படுத்துவதில் எனக்குச் சங்கடம் ஏதும் ஏற்படுவதில்லை.

2. 1857-ல் அது குறித்து சுவாமி தயானந்தரிடமிருந்து எதிர்ரவினை ஏதும் வராமை, ஸ்ரீ ராமகிருஷ்ணர் பரமஹம்ஸர்-தயானந்தர் நிலைப்பாடுகள், மனுஸ்மிருதி பற்றறிய அவரது கருத்து, முதலானவை குறித்துச் சரியான ஆதாரங்களின் அடிப்படையிலேயே எனது கருத்துகளை நிறுவியுள்ளேன். ஆகவே அவை யூகங்கள் என்கிற வட்டத்துக்குள் அடங்காது என நினைக்கிறேன். அதற்குப் பதிலாக வாதங்கள் எனக்கொள்வது சரியாக இருக்கலாம்.

3. ‘ம’ எனப் பிரபலமடைந்த மகேந்திரநாத் குப்தா, ‘Gospel of Sri Ramakrishna’ என்ற தலைப்பில் பரமஹம்சரின் சொற்ப கால அன்றாட நிககழ்வுகளைப் பதிவு செய்திருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இது அமுத மொழிகள் என்கிற தலைப்பில் மூன்று தொகுதிகளாக சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் வெளியாகியுள்ளது. இதில் சுவாமி தயானந்த சரஸ்வதி ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் பார்த்ததாகவும் அவரது சமாதி நிலை கண்டு வியந்து போற்றிச் சென்றதாகவும் குறிப்புகள் உள்ளன. ஆனால் இருவருக்குமிடையே உருவ வழிபாடு குறித்து ஸம்வாதம் ஏதும் நடைபெற்றதாகத் தகவல் இல்லை.

நான் பல்லாண்டுகளுக்கு முன் ‘ம’ வை ஆங்கிலத்தில் வாசித்திருந்தபோதிலும் ஆரிய சமாஜம் நூலை எழுதுகையில் இது எனது நினைவில் இல்லை. யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் எழுதிய தயானந்த ஜோதியிலிருந்து வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளைப் பயன் படுத்தியதால் அவற்றின் அடிப்படையில் இருவரிடையே சந்திப்பு நிகழ வாய்ப்பின்றி தயானந்தர் வங்காளத்தைவிட்டுச் சென்றுவிட்டார் என எழுதிவிட்டேன்..

பின்னர் ‘அமுத மொழிகளை’ வாங்கிப் படித்தபொழுது ஸ்ரீ ராம கிருஷ்ணரை தயானந்தர் பார்த்த விவரம் கவனத்திற்கு வந்தது. உடனே ஸ்ரீ பத்ரியுடன் தொடர்பு கொண்டு, புத்தகத்தில் இத்தகவலைச் சேர்த்துவிட வேண்டுமென்று சொன்னேன். அதற்குள் புத்தகம் அச்சாகிவிட்டபடியால் கால கடந்துவிட்டது, அடுத்த பதிப்பில் சேர்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்.

உண்மையில் சுவாமி தயானந்தர்-ஸ்ரீ ராம கிருஷ்ணர் இடையே சந்திப்போ, வாதப் பிரதி வாதங்களோ நிகழவில்லைதானே. சமாதி நிலையில் ஆழ்ந்திருந்த பரமஹம்சரைக் கண்டு, இது ஓர் அசாதாரன நிலை என்று தயானந்தர் போற்றிச் சென்றதாக மட்டுமே தகவல் உள்ளது.. ஆகையால் ஒருவகையில் எனது பதிவில் பெரிய முரண் இல்லை. எனக் கொள்ளலாம். உருவ வழிபாட்டில் ஈடுபாடு இல்லாத சுவாமி விவேகானந்தரையே தம்மை குருவாக ஏற்குமாறு செய்தவராயிற்றே,, கடவுளைப் பல உருவங்களாகவே பார்த்துப் பரவசமடைந்த ஸ்ரீ ராமகிருஷ்ணர்! இந்த அடிப்படையில், ராமகிருஷ்ணர் விக்கிரகங்களை வெறும் விக்கிரகங்களாக அல்லாமல் கடவுள்களாகவே பார்த்து சல்லாபிப்பவர் எனபதைக் கண்டுகொண்ட தயானந்தருக்கு ராமகிருஷ்ணரின் உருவவழிபாட்டில் என்ன பிரச்சினை இருந்திருக்கக் கூடும்?

4. நமது கலாசாரம் கோயில் கலாசாரமாக ஆழ வேரோடிவிட்ட பிறகு, நம் கலைகள் யாவும் உருவ வழிபாட்டைச் சார்ந்தே உருவாகிவிட்டபிறகு (ராமாயணமும் பாரதமும் இல்லை யென்றால் நமக்கு ரசிக்கத் தெருக்கூத்தே இல்லை என்று தெருக்கூத்துப் பிரியரான அண்ணா ஒருமுறை என்னிடம் மனம் திறந்து சொன்னதுண்டு!), பல்வேறு தொழில்களும் கோயில் நடை முறைகளைச் சார்ந்து உருவாகிப் பல்லாயிரம் மக்களின் ஜீவாதாரமாகிவிட்ட பிறகு, மேலும் மிகவும் முக்கியமாக மிகப் பெரும்பாலான மக்ககளுக்கு உருவ வழிபாடுகளின் மூலமாகவே தெய்வ நம்பிக்கையும் அதன் பயனாக ஆறுதலும் திட சித்தமும் முற்றிலும் கிடைக்கிற சாத்தியக் கூறு உள்ளபோது, உருவ வழிபாட்டிற்கு முற்றிலுமாக முழுக்குப் போடுவது சரியல்ல என்பதே எனது கருத்து. ஆரிய சமாஜத்துடன் எனக்குப் பல் ஆண்டுகளாகத் தொடர்பு சென்னையில் மட்டுமல்ல, வேறு நகரங்களிலும் உள்ளது. இன்று அதில் உள்ள பலர் உருவ வழிபாட்டைக் கைவிட மனமின்றி இருப்பதை அறிவேன். மேலும் சுவாமி தயானந்தரே ஹிந்து சமயம் பல்வேறு கோட்பாடுகளைச் சேர்ந்த நம்பிக்கையாளர்களால் கட்ட மைக்கப்படுள்ளது என்று கூறியிருப்பதையும் பதிவு செய்துள்ளேன். எனவே, என் குல தெய்வமான கொல்லூர் மூகாம்பிகையை என் அன்னையாகவே அறிந்துள்ள எனக்கு இந்த விஷயத்தில் தவிப்போ தத்தளிப்போ இல்லை. உருவ வழிபாட்டில் மக்களுக்கு உள்ள நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொண்டு நடைபெறும் முறைகேடுகள், பல தெய்வ வழிபாடு மக்களிடையே ஏற்படுத்தும் பேத உணர்வு முதலான பிரத்தியட்ச நிலவரங்கள்தாம் தயானந்தரை உருவ வழிபாட்டுக்கு எதிராக மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கச் செய்திருக்க வேண்டும்.. மனோ ரீதியாக பல தெய்வ நம்பிக்கையிலும் வழிபாட்டிலும் உள்ள பிற நன்மைகளையும் அறிந்துள்ளேன்.

5. சாதாரண எழுத்தாளர்களே தங்கள் எழுத்தில் முன்னுக்குப் பின் முரணாக எதேனும் எழுதிவிடுவோமோ என்று முன்னெச்சரிக்கையுடன் இருக்கையில், மனுவைப் போன்ற பேரறிஞர் முன்னுக்குப் பின் முரணாக விதிமுறைகளை எழுதுவாரா என்று யோசிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இதன் அடிப்படையில்தான் உலகில் உள்ள அறிஞர்கள் பலரும் மனுஸ்மிருதியில் பல இடைச் செருகல்கள் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்திருப்பதாகக் கூறுகிறார்கள். அதில் உள்ள 2685 வாக்குகளில் 1214 வாக்குகளே அசலானவை என ஆய்வாளர்கள் தெளிவாகக் கூறியிருப்பதைப் பதிவு செய்துள்ள ளேன். பெண்கள் விஷயத்தில் மனுவில் முரண்பாடு ஏதும் இல்லை. ‘புத்ரேண துஹிதா ஸமா’ (மகன்-மகள் இருவரும் சரிசமானவர்களே) என்று சொல்லியிருக்கும் மனு, எல்லா நிலையிலும் ஆண்கள் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற கருத்துப்பட அறிவுறுத்தியிருப்பதைப் பெண்கள் ஆண்களுக்கு அடங்கியிருக்க வேண்டும் என அவர் சொல்வதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

6. புரோகிதர்களாக இருந்து எல்லாச் சடங்குகளையும் செய்து வைக்க ஆரிய சமாஜத்தில் ஊழியர்கள் இருப்பதை எனது நூலில் பதிவு செய்துள்ளேன். இவர்கள் மந்திரங்களைச் சொல்வதோடு நின்றுவிடாமல் அவற்றின் பொருளையும் உடனுக்குடன் எடுத்துக் கூறுகிறார்கள். இந்த ஊழியர்கள் ஜாதியின் அடிப்படையில் பிராமணர்கள் அல்லவாயினும் வர்ண அடிப்படையில் பிராமணர்களாக உள்ளனர். எனவே பிராமண வர்ணத்தின் பணியை பிற வர்ணத்தவர் மேற்கொள்ள முன்வராததால் அதில் மட்டும் பிற வர்ண நுழைவு நிகழவில்லை எனக் கருதத் தேவையில்லை.

7. கும்ப மேளா போன்ற பல லட்சம் மக்கள் கூடுவதால் வரும் கழிவுகளை அகற்ற சுகாதார அதிகாரிகள் ஆறுகளையே பயன்படுத்தி வந்ததால் திருவிழாக்களின் போதெல்லாம் கலாரா பரவுவது இயல்பாக இருந்தது. தயானந்தர் ஆங்கிலேயே அதிகாரிகளைச் சந்தித்துக் கழிவுகளை ஆற்றில் எறியாமல் எரித்துவிடுமாறு அறிவுரை கூறினார். அதனால் எழும் புகைமண்டலத்திற்கு மாற்றாக மூலிகைச் சுள்ளிகளைத் தீயில் இட்டால் காற்று தூய்மையடையும் என்றும் கூறினார். ஆங்கிலேய அதிகாரிகள் எளிதில் புரிந்துகொண்டு சம்மதிக்க வேண்டும் என்பதற்காகவே சமயச் சடங்கு போன்ற வேள்வியை நடத்தலாம் எனக் கூறுவதை அவர் தவிர்த்திருக்கக் கூடும்.. இந்த விளக்கத்தை நான் தெரிவிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால் வேள்வித் தீயின் பயன் குறித்தும் ஓர் அனுமானம் போன்ற தொனி வந்துவிட்டிருக்கலாம்.

8. மனுஸ்மிருதியின் மூலப் பிரதியை எடுத்து வைத்துகொண்டு, வரிக்குவரி ஆராய்ந்து, எவையெல்லாம் அசல், எவையெல்லாம் இடைச் செருகல் என ஆதாரப் பூர்வமாக எழுத விருப்பம்தான். அதில் இறங்கிவிட்டால் பிறகு வேறு எந்த வேலையிலும்
ஈடுபட முடியாது. நானோ, இன்றளவும் முழுக்க முழுக்க எழுத்தின் மூலம் வரும் வருமானத்தையே நம்பியிருப்பவன். ஆகையால் யாராவது குறைந்த பட்சம் ஆறுமாத கால அவகாசம் தந்து ஸ்பான்ஸர் செய்தாலன்றி அந்த வேலையைக் கையில் எடுக்க இயலாது! நீங்கள் என்னிடம் மேலும் எதிர்பார்ப்பதாக எழுதியுள்ளமையால் இதனைக் குறிப்பிடுகிறேன்.

9. பண்டிதர்களும் புரோகிதர்களும் தங்கள் பிழைப்பைக் காத்துக் கொள்வதற்காக தயானந்தரைக் கொன்றுபோட முகமதிய நர்த்தகியையும் முகமதிய வைத்தியரையும் பயன்படுத்திக் கொண்டதை எனது நூலில் தெளிவாகவே பதிவு செய்துள்ளேன். எனவே முழுப்பழியையும் முகமதியர்மீது நான் சுமத்திவிடவில்லை!

இவ்வளவு விரிவான விளக்கம் தரக் காரணம், குறைகளுக்கு சமாதானம் சொல்லவேண்டும் என்கிற கவலை அல்ல. உங்களைப் போல் இந்த விஷயத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு முடிந்தவரை மனநிறைவளிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தனையும் எழுதலானேன்.

அன்புடன்,
மலர்மன்னன்
ஜூலை 05, 2010

Thursday, July 1, 2010

ராகவேந்திரர் என்னும் சன்னியாசி

எனது ‘ராகவேந்திரர் என்னும் சன்னியாசி’ என்னும் கட்டுரை தமிழ்ஹிந்துவில் வெளியாகியுள்ளது. வாசிக்க: http://www.tamilhindu.com/2010/06/sri-ragavendrar-a-hindu-saint/

இரண்டு நாள் பயணமாக மந்த்ராலயம் சென்றிருந்தேன். ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்த இடம் மன்சாலி எனப்படும் மாஞ்சாலி எனப்படும் மந்த்ராலய கிராமம். துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ளது. இன்றைய நிலையில் ஆந்திரப் பிரதேசத்தின் வசத்தில் உள்ள மந்த்ராலயம் இப்போதும் ஒரு குக்கிராமமே. ராகவேந்திரரின் மடத்தையும், மடத்தைச் சுற்றி நிகழ்ந்துகொண்டிருக்கும் வேலைகளையும் நீக்கி விட்டுப் பார்த்தால், இக்குக்கிராமத்தில் ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிடலாம்.

மத்வாசாரியரால் மொழியப்பட்ட த்வைத நெறியில் வந்த ஆசார்யர்களுள் முக்கியமானவர் ராகவேந்திரர். இவருக்கு முன்பு வியாசராஜ யதி (வியாச யதி ராஜர்), ஸுரேந்திரர், விஜயீந்த்ர தீர்த்தர், ஸுதீந்திரர் போன்றவர்கள் மத்வத்தை முன்னெடுத்தவர்கள். மத்வருக்குப் பிறகு ராகவேந்திரரின் காலமே மத்வ, த்வைதத்தின் பொற்காலம் என்று அறியப்படுகிறது.

mantralayam-entrance1595-ல் புவனகிரியில் பிறந்த ராகவேந்திரர், வேதங்களைக் கற்று, உபநயனம் செய்துகொண்டு, திருமணம் செய்துகொண்டு, சன்னியாசம் மேற்கொண்டு, பாத யாத்திரை சென்று, வழியில் பல்வேறு வாதங்களை மேற்கொண்டு பலரை வென்று, இறுதியில் மாஞ்சாலி (மன்சாலி என்றும் சொல்லப்படுகிறது) என்னும் மந்த்ராலயத்தில் ஜீவ சமாதி அடைந்ததாக அவரது வாழ்க்கை வரலாறு விரிகிறது. ராகவேந்திரர் பற்றிய வாழ்க்கை வரலாறுகள் முழுவதுமே அவரை ஒரு சித்தராகவும் மகானாகவுமே காட்ட முனைகின்றன. அவர் தொட்டார், கண் பார்வை வந்தது; அவரை நினைத்ததும் படிப்பறிவு வந்தது என்பன போன்றவை. ராகவேந்திரரின் அக்கா மகனால், ராகவேந்திரரின் காலத்திலேயே எழுதப்பட்ட ஸ்ரீ ராகவேந்திர விஜயம் என்னும் நூலே ராகவேந்திரர் பற்றி அறிய உதவும் நூலாக உள்ளது. ராகவேந்திரரை மத்வ மடாதிபதியாக நிறுவும் பொருட்டும், அவரது மகான் தன்மையை விளக்கும் பொருட்டுமே அது எழுதப்பட்டிருக்கவேண்டும். அதுமட்டுமில்லாமல், ராகவேந்திரர் ஜீவ சமாதிக்குச் செல்லும் முன்பு ஆற்றிய உரையாகச் சொல்லப்படும் உரையில் அவரே தனது மகிமைகளைப் பற்றிப் பேசுகிறார். ஆனால் அது ராகவேந்திரர் ஆற்றிய உரை என்பதற்கு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த ‘மகிமை’களையெல்லாம் விட்டுவிட்டு, அந்த நூலில் இருந்து ராகவேந்திரரின் வரலாற்றைத் தேடித்தான் அறியவேண்டியுள்ளது. இத்தனைக்கும் 350 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்திருக்கிறார்.

மகிமைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ராகவேந்திரர் மிக முக்கியமான சன்னியாசியாக, பெரும் ஞானியாக வாழ்ந்திருக்கிறார் என்பது புலனாகிறது. ராகவேந்திரர் 64 கலைகளில் வல்லவர் என்கிறது ராகவேந்திர விஜயம். இது எத்துணை தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஆனால் ராகவேந்திரர் வீணை வாசிப்பதில் தேர்ந்தவராக விளங்கியிருக்கிறார். அவரது தாத்தா விஜயநகர அரசவையில் வீணை வாசிப்பவராக இருந்திருக்கிறார். (விஜய நகரப் பேரரசின் வீழ்ச்சியின் போது, வாழ்வாதாரம் தேடி கும்பகோணத்திற்கு இடம் பெயர்கிறது ராகவேந்திரரின் குடும்பம். அங்கேதான் ராகவேந்திரர் பிறக்கிறார்.) ராகவேந்திரரின் அப்பாவுக்கும் வீணை வாசிக்கத் தெரிந்திருக்கிறது. இதனால் ராகவேந்திரருக்கும் வீணை வாசிக்கத் தெரிந்திருக்கலாம் என்று யூகிக்கலாம். சமிஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமை பெற்றிருக்கிறார். அவர் சமிஸ்கிருத நூல்களுக்கு உரைகளும், வேறு சில சிறிய சிறிய உரைகளும் நிறைய எழுதியிருக்கிறார். ஆனால் அவற்றில் பல கிடைக்கவில்லை. நிறைய பாடல்களும் இயற்றியிருக்கிறார். அவர் இயற்றிய பாடல்களில் நமக்குக் கிடைக்கும் ஒரே கன்னடப் பாடல் ‘இந்து எனகே கோவிந்தா நிந்நய பாதாரவிந்தவ தோரோ முகுந்த’ என்ற பாடல் மட்டுமே என்கிறது ஒரு குறிப்பு.

wooden-chappel-used-by-raghavendra-swamiதனது திருமணத்துக்குப் பின் சன்னியாசம் மேற்கொள்ளுகிறார். சன்னியாசம் பற்றிய விவரணைகள் ஸ்ரீ ராகவேந்திர விஜயம் நூலில் உள்ளன. சன்னியாசம் மேற்கொண்டதால் அவரது மனைவி சரஸ்வதி தற்கொலை செய்து கொள்கிறார். (அவர் திருமணம் செய்துகொண்ட வருடம், அவர் சன்னியாசம் மேற்கொண்ட வருடம் பற்றிய குழப்பங்கள் நூல்களில் காணப்படுகின்றன.) அவரது சன்னியாச வாழ்க்கையில் ஒரு சன்னியாசிக்குள்ள கடமைகளை நிறைவேற்றுகிறார். க்ராம ஏக ராத்ரி வாஸ! என்பதற்கிணங்க தொடர்ந்து தென்னிந்தியாவெங்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். நிறைய வியாக்யானங்கள், நிறைய பாடல்கள் இயற்றுகிறார். மீமாஸத்திலும், த்வைதத்திலும் நிறைய பேரை வாதில் வெல்கிறார். (இவ்வளவுதான் சொல்கின்றன ராகவேந்திரரைப் பற்றிய நூல்கள். எவையும் அவர் அப்படி என்ன பேசி வாதில் வென்றார் எனச் சொல்லுவதில்லை!) சேது, திருவனந்தபுரம், மதுரை, ஸ்ரீரங்கம், வேலூர், உடுப்பி, மைசூர், மீண்டும் கும்பகோணம், கதக், பண்டரீபுரம், பீஜப்பூர், அல்லூர், ராய்ச்சூர், ஆதோனி, மான்சாலி எனத் தொடர்கிறது அவரது பயணம்.

அவர் இயற்றிய பாட்ட ஸங்கரஹம் என்னும் நூலை யானையில் வைத்து பெருமைப்படுத்தி அழைத்துச் சென்றார் நீலகண்ட சாஸ்திரி - இது நடந்தது மதுரையில். ராய்ச்சூரில், தாழ்த்தப்பட்ட இனமாகக் கருதப்பட்ட ஒருவர் ராகவேந்திரரிடம் பேசுகிறார். அவரை, தான் பூஜித்து வந்த மூல ராமருக்கு பூஜை செய்வாயாக என்கிறார் ராகவேந்திரர். அந்த மனிதர் நிறைய கடுகைக் கொண்டுவந்து பூஜை செய்கிறார். கடுகை விரதகாலத்தில் சேர்க்கக்கூடாது என்ற முறை இருந்தும், அதனை மறுத்து, கடுகைப் பயன்படுத்தும் வழிமுறையைக் கொண்டு வருகிறார் ராகவேந்திரர். (இவை போக, அவர் செல்லுமிடங்களிலெல்லாம் ராகவேந்திரரின் பெருமைகளும் மகிமைகளும் தொடர்கின்றன. ஆனால் இந்த இரண்டு மட்டுமே நம்பும்படியாக உள்ளன.) இப்படி கடுகைப் பயன்படுத்தியதால் வெறுப்படையும் ஆசார்யர்களைக் கண்டிக்கிறார் ராகவேந்திரர்.

ஆதோனியில் வெங்கண்ணா என்பவர் ராகவேந்திரரின் சீடராகிறார். (ராகவேந்திரரின் மகிமையால் அவர் சுல்தான் மசூன் கானிடம் திவனாகிறார். அதனால் அவர் ராகவேந்திரரின் சீடராகிறார்.) ராகவேந்திரரைச் சோதிக்க நினைக்கும் சுல்தான், பின்னர் ராகவேந்திரரைப் புரிந்துகொண்டு, அவருக்கு தானமாக என்ன வேண்டும் எனக் கேட்க, ராகவேந்திரர் மன்சாலி கிராமத்தைக் கேட்கிறார். அது ஏற்கெனவே ஒரு ஹாஜிக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது என்றாலும், ராகவேந்திரர் அக்கிராமமே வேண்டும் எனக் கேட்க, சுல்தான் அந்த ஹாஜிக்கு வேறொரு கிராமத்தைக் கொடுத்துவிட்டு, மன்சாலியை ராகவேந்திரருக்குக் கொடுக்கிறார். அது பிரகலாதன் யாகம் செய்த இடம் என்று நம்பிய ராகவேந்திரர் அந்த இடத்தைக் கேட்டிருக்கிறார். 1671-ல் தான் சமாதி அடையும் இடத்தைத் தேர்ந்தெடுக்கிறார். பின்னர் வேறொரு இடத்தை, தான் முதலில் தேர்ந்தெடுத்த இடத்துக்கு அருகிலேயே தேர்ந்தெடுக்கிறார். முதலில் தேர்ந்தெடுத்த இடம், தனது அண்ணனின் கொள்ளுப் பேரப்பிள்ளையான வாதீந்தருக்கு இருக்கட்டும் என்று சொல்லிவிடுகிறார். (அப்போது வாதீந்தரருக்கு வயது 2.) தான் ஜீவ சமாதி அடையும் முன்பாக, தனது அண்ணனின் பேரப்பிள்ளையான யோகீந்திரரை மடாதிபதியாக்குகிறார்.

mantralayam-ragavendrarஉடலுடன் பிருந்தாவனம் புகும் நாள் வருகிறது. பிருந்தாவனத்துக்குள் மூச்சை அடக்கி தியானத்தில் ஆழ்ந்தார். அவரது கையில் இருந்த ஜபமாலை நழுவி விழுகிறது. இதனைப் புரிந்துகொள்ளும் வெங்கண்ணா கடைசியாக, திறந்திருந்த பகுதியை மூடிவிடுகிறார். இதன் பின்பு நெகிழ்ச்சி அடையச் செய்யும் நாடகத்தனமான காட்சிகள் அரங்கேறுகின்றன. துங்கபத்திரை நதியின் கரையில் அமைந்திருக்கிறது ராகவேந்திரர் சமாதி அடைந்த இடம். அதன் இன்னொரு கரையில் பிச்சாலய என்னும் ஊரில் (தற்போதும் உள்ளது) அப்பண்ணா என்பவர் - ராகவேந்திரரின் சீடர் இருக்கிறார். ராகவேந்திரர் ஜீவ சமாதி அடையப் போவதை அறிந்ததும் அவரைக் கடைசியாகக் கண்டுவிடும் உத்வேகத்தில் ஓடிவருகிறார். வழியில் துங்கபத்திரை பொங்கி வழிந்து ஓடுகிறது. அவர் ராகவேந்திரரை மனதில் நினைத்துக்கொண்டு, சமிஸ்கிருதத்தில் சுலோகம் பாடிக்கொண்டு, நதியில் இறங்கிக் கரையேறுகிறார். அதற்குள் ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்துவிடுகிறார். அப்பண்ணா பாடிக்கொண்டிருந்த சுலோகத்தில் கடைசி ஏழு எழுத்துகள் மட்டும் பாக்கி இருக்கின்றன. தம்மால் ராகவேந்திரரைப் பார்க்க முடியவில்லையே என்னும் சோகத்தில் அவரது நா தழுதழுத்துவிடுகிறது. ஆனால் ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்த பிருந்தாவனத்தில் இருந்து “ஸாக்ஷீ ஹயாஸ்யோத்ரஹி” என்பதாக அந்த சுலோகம் நிறைவு பெறும் உரத்த ஒலி வெளிவருகிறது. இதை எத்துனைத் தூரம் நம்பமுடியும் எனத் தெரியவில்லை. ஆனால் ராகவேந்திரர் மேலும், தெய்வீகத்தின் மேலும் நம்பிக்கை உள்ளவர்கள் நிச்சயம் நெகிழ்ந்துவிடும் இடம் இது. இது நடந்திருக்குமா இல்லையா என்பதையெல்லாம் மீறி, நானும் நெகிழ்ந்த இடம் இதுவே.

devotees-sitting-for-food-inside-annadhana-mandapamநான் என் குடும்பத்துடன் ஆதோனி வழியாக மந்த்ராலயம் சென்றேன். ராகவேந்திரர் சொன்னதை பெரும்பாலும் மறந்துவிட்டு, தமக்கென உருவாக்கிக்கொண்ட சாதி சார்ந்த வழக்குகளில் மூழ்கிக் கிடக்கிறது மந்த்ராலயம். இன்றும் பிராமணர்களுக்கும், அபிராமணர்களுக்கும் தனித்தனி சாப்பாட்டு இடம். ஆனால் ராகவேந்திரர் சொன்னதாக, மடமே வெளியிட்டிருக்கும் ராகவேந்திர வரலாறோ, அவர் தாழ்த்தப்பட்டவர்களை அரவணைத்தார் என்கிறது. கோயில் தரிசனத்தில்கூட, மிக நுணுக்கமாக இந்த வேறுபாட்டை நிறுவுகிறார்கள்.

இன்றும் ராகவேந்திரர் சமாதிக்கு அருகிலேயே, அவரது அண்ணனின் கொள்ளுப் பேரனான வாதீந்திரரின் சமாதியும் உள்ளது.

sri-manchallamma-templeமான்சாலியில் இன்னொரு முக்கியமான விஷயம், மாஞ்சாலம்மா என்னும் கிராம தேவதை பற்றியது. ராகவேந்திரரை தரிசிக்கச் செல்லும் முன்பு, மாஞ்சாலம்மாவை தரிசிப்பது அவசியம் என்கிறது நடைமுறை. ஆனால் இதைப் பற்றிய குறிப்பே இல்லை மடம் வெளியிட்டிருக்கும் நூலில். கிராம தேவதை பற்றிய வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பது ராகவேந்திரருக்குத் தெரிந்திருக்கிறது. ராகவேந்திரருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது! அதேபோல் ஆதோனியிலும் கிராம தேவதை வழிபாடு முக்கியமாக உள்ளது. (அதன் வரலாறு தெரியவில்லை. அடுத்த முறை செல்லும்போது கேட்கவேண்டும்.)



சில முக்கியமான, சுவாரஸ்யமான குறிப்புகள்

1. ராகவேந்திரர் ஜீவ சமாதிக்கு நுழையும் முன்பு பேசியதாகச் சொல்லப்படும் உரை:

* சரியான வாழ்க்கை நடத்தையின்றி சரியான சிந்தனை வராது.

* நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்.

* சாஸ்திரத்தை பின்பற்றாமல் தங்களைக் கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினாலும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது. சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது. சரியான ஞானம் இல்லாமல் செய்யப்படும் அற்புதங்கள் வெறும் சூனிய வித்தையே ஆகும். அவ்வித்தைகளை செய்பவருக்கோ அதை நம்புகிறவருக்கோ எந்த ஒரு நன்மையும் நேராது.

* கடவுளின் மேல் நல்ல பக்தி இருத்தல் வேண்டும். இப்பக்தி குருட்டு நம்பிக்கையாக இருக்கக்கூடாது. கடவுளின் மேலாண்மையை முழு மனதோடு எற்றுக்கொள்ளுதல் பக்தி ஆகும். குருட்டு நம்பிக்கை உண்மையான பக்தி ஆகாது. அது வெறும் முட்டாள்த்தனமே ஆகும். நமக்கு கடவுள் மேல் மற்றும் இன்றி மற்ற இதர தேவதைகளிடமும் அவர்களின் தகுதிக்கேற்ப பக்தி இருத்தல் வேண்டும்.

இதில் “நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்” என்னும் வரி முக்கியமானது. அன்றைய, அவரது காலகட்டத்தில் அவர் பிராமணர்கள் என்றே சொல்லியிருக்கலாம். ஆனாலும் சொல்லவில்லை என்பது முக்கியமானது. இதனை இன்றைய மடங்கள் புரிந்துகொள்ளவேண்டும். கடவுள் மேல் மட்டுமன்றி இதர தேவதைகளிடமும் என்னும் வரியும் முக்கியமானது. ஆனால் இவை ராகவேந்திரரால்தான் சொல்லப்பட்டதா என்பதுதான் தெரியவில்லை!

sri-rangavendra-tamil-movie2. ஸ்ரீ ராகவேந்திரர் என்னும் திரைப்படம் ரஜினிகாந்த் நடிக்க தமிழில் வெளிவந்தது. அதில் வரும் எஸ்.பி.முத்துராமத்தனங்களை விட்டுவிட்டுப் பார்த்தால், பெரும்பாலும் அவரது வாழ்க்கைக் குறிப்புகளை ஒட்டியே எடுக்கப்பட்டுள்ளது. பிரம்ம ராக்ஷசனை அழிப்பது, படிப்பறிவற்ற வெங்கண்ணா படிப்பது, மாம்பழ ரசம் நிரம்பியுள்ள குண்டாவில் விழுந்து இறக்கும் குழந்தை ராகவேந்திர மகிமையால் உயிர் பிழைப்பது போன்றவை. ஆனால், கடைசியில் வரும் பாடல் ‘அழைக்கிறான் மாதவன்’ ராகவேந்திரராலேயே பாடப்படுவதாக உள்ளது. ராகவேந்திரர் சமிஸ்கிருதத்தில் பாடியதற்கான குறிப்புகள்கூட இல்லை. அப்பண்ணா துங்கபத்திரை நதிக்கரைக்கு தமிழில் பாடிக்கொண்டே ஓடிவரும்போது, துங்கபத்திரை இரண்டாகப் பிரிந்து வழி விடுகிறது. சென்ற வாரம் உதயா டிவியில் ஸ்ரீ ராகவேந்திரர் என்னும் ஒரு கன்னடப் படத்தின் கடைசி சில காட்சிகளை மட்டும் காண முடிந்தது. அதில் ராகவேந்திரர் கன்னடத்தில் பாடவில்லை. அப்பண்ணா துங்கபத்திரையில் இறங்கி நீரில் தத்தளித்து ஓடிவருகிறார். நதி இரண்டாகப் பிரிந்து வழிவிடவில்லை. அப்பண்ணா சமிஸ்கிருதத்தில் பாடுகிறார். கடைசி வரியின் ஒலி மட்டும் ராகவேந்திரரின் சமாதியிலிருந்து வெளிவருகிறது. அன்று அந்தப் படம் பார்த்தபோது எனக்கு இது புரியவில்லை. ராகவேந்திரரின் வரலாற்றைப் படித்தபோது, கன்னடப் படம் எப்படி ராகவேந்திரரின் வரலாற்றுக்கு அருகில் இருக்கிறது என்பதை நினைத்து ஆச்சரியம் ஏற்பட்டது. கன்னடத்தில் வெளி வந்த ஸ்ரீ ராகவேந்திரர் படத்தை முழுவதும் பார்த்தால் இன்னும் சுவாரஸ்யங்கள், ஆச்சரியங்கள் கிடைக்கலாம்.

3. ராகவேந்திரர் எழுதிய சிறு குறிப்புகளின் பட்டியல்:

* வேத பிரஸ்தனம்- என்னும் பொருள் பற்றி: வேதத்ரய விங்குதி (ரிக், யஜூர், சாம வேதங்கள்), மந்த்ரார்த்த மஞ்சரி, பஞ்ச சூக்த உரைகள், பத்து உபநிடதங்களில் உள்ள ஒவ்வொரு வாக்கியத்துக்கும் உரை.

* பகவத் கீதாப்ரஸ்தானம்- கீதா விங்ருதி, கீதாப்ரமேய தீபிகையின் உரை, கீதாதாத்பர்யத்திற்கு உரை.

* ஸூத்ரப்ரஸ்தானம்- தந்த்ர தீபிகா, ந்யாய முக்தாவளி, ப்ரஹ்ம ஸூத்ரபாஷ்ய தத்வப்ரகாசிகர்பாவதீபம், அனுபாஷ்ய டீகா, தசப்ரகரண டீகாவின் உரை.

* தர்க்க தாண்ட வ்யாக்யானம்

* வாதாவளீ வியாக்யானம்

* ப்ரமாண பக்ததி வியாக்யா

* ஸ்ரீராம சாரித்ர மஞ்சரி

* ஸ்ரீ க்ருஷ்ண சாரித்ர மஞ்சரி

* ஸ்ரீ மன்மஹாபாரத தாத்பர்ய நிர்ணய பாவ ஸாங்க்ரஹம்

* அணுமத்வ விஜய வ்யாக்யானம்

* ப்ராதஸ் ஸாங்கல்ப கத்யம்

* பாட்ட சங்க்ரஹம்

* ப்ரமேய ஸங்க்ரஹம்

(இவை எல்லாம் மடம் வெளியிட்டிருக்கும் நூலில் உள்ள விவரங்கள். இவற்றின் உண்மைத்தன்மை பற்றித் தெரியவில்லை.)

4. ராகவேந்திரரின் மீது கன்னட நடிகர் ராஜ்குமார் பாடிய பாடல்கள் அற்புதமானவை. துரதிர்ஷ்டம் என்னவென்றால், அந்த குறுவட்டு மந்த்ராலயத்திலும் கிடைக்கவில்லை என்பதுதான். (குறிப்பாக, ஹாலல்லா தரு ஹாது என்னும் பாடலின் மெட்டையும், ராஜ்குமாரின் அபூர்வமான குரலையும், அப்பாடலின் மெஸ்மெரிசத்தையும் மறக்க முடியவில்லை.) பெங்களூரில் எங்கேனும் இந்தக் குறுவட்டு கிடைத்தால் நண்பர்கள் சொல்லவும்.

shri-panchamuga-hanuman-temple5. எனது மந்த்ராலயப் பயணம் எனக்கு பெரிய மனநிறைவைத் தந்ததா என்றால் யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது. ஒரு திருப்பதி தரிசனம் போன்ற உணர்வு என்னை ஆட்கொள்ளவில்லை. ஆனால், ராகவேந்திரர் பற்றிய நினைவுகளும், அவர் தவம் செய்த இடத்தைப் பார்த்த போது (பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் உள்ள இடம், மந்த்ராலயத்திலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ளது) ஏற்பட்ட உணர்வும் வித்தியாசமானவை.



இக்கட்டுரைக்கு உதவியவை:

1. விக்கி பீடியா
2. நிலாச்சாரல்.காம்
3. ராகவேந்த்ர ஸ்வாமிகள் ஜீவ சரிதம் மற்றும் மஹிமைகள் என்னும் நூல்.
4. http://www.gururaghavendra1.org/