Thursday, February 28, 2008

சுஜாதா - சில கணங்கள்

1997ல் TACல் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, அங்கிருந்த புத்தகசாலையில் இருந்த புத்தகங்களில் சுஜாதாவின் புத்தகங்களை ஒன்றுவிடாமல் வரிசையாக வாசிக்க ஆரம்பித்தேன். அப்போது தொடங்கிய சுஜாதா எழுத்தின் மீதான மோகம் இன்றுவரை அப்படியே தொடர்வதை நினைக்கும்போது, காலம் காலமாகத் தன் எழுத்தின் மூலம் வாசகர்களைக் கட்டிப்போட்ட அவரது அசாத்திய திறமை ஆச்சரியம் அளிக்கிறது. அந்த நேரத்தில் நான் தீவிரமாக வாசித்த பாலகுமாரனின் எழுத்துகள் அந்த இடத்திலேயே நின்றுபோனதையும் சுஜாதா என்னுடன் தொடர்ந்து வந்துவிட்டிருப்பதையும் நினைத்துப் பார்க்கிறேன். பல தலைமுறைகளுக்கான எழுத்தாளர் சுஜாதா. அம்பலம்.காமில் சுஜாதா அரட்டைக்கு வருகிறார் என்று தெரிந்தபோது நானும் அரட்டையில் கலந்துகொள்வேன். அப்போது நான் துபாயில் இருந்தேன். சனிக்கிழமை அங்கு விடுமுறை இல்லை. அதனால் என்று சனிக்கிழமை அரசு விடுமுறை வருகிறதோ அன்றுமட்டுமே அவருடன் அரட்டை செய்யமுடியும். அப்படியும் சில சனிக்கிழமைகள் அவருடன் அரட்டை அடித்திருக்கிறேன். நான் அரட்டை செய்த சமயங்களில் அரட்டை செம சூடாக இருந்ததுண்டு. ஆனால் எந்த விதமான கேள்விகளுக்கும் சுஜாதா மிக எளிமையான பதிலால் எளிதாக என் கேள்விகளைத் தாண்டிச் சென்றது நினைவிருக்கிறது. மரத்தடியில் 'எழுத்தாளர்களைக் கேளுங்கள்' என்கிற நிகழ்ச்சியை நடத்தியபோது, தேசிகன் மூலம் சுஜாதாவிடம் தொடர்புகொண்டோம். பொதுவாகவே இணையக் குழுமங்களின் மீதும், இணையத் தமிழின் மீதும் மதிப்பு இல்லாதவராக இருந்தார் சுஜாதா. ஆனாலும் மரத்தடியில் அவர் கேள்வி பதில் இடம் பெற வேண்டும் என்கிற எண்ணத்தில், விடுமுறைக்காக மஸ்கட் சென்றிருந்தபோது அங்கிருந்து தொலைபேசினேன். அப்போதுதான் அவருடன் அரட்டையிலும் பேசியிருந்தேன். தொலைபேசியில் அழைத்து, 'சார் எப்படி இருக்கீங்க' என்ற கேட்டபோது, 'தேங்க்ஸ்' என்றார். நான் பேசிய நான்கைந்து முறையும் எப்படி இருக்கீங்க என்ற கேள்விக்கு தேங்க்ஸ் என்றுதான் பதில் சொன்னார். மரத்தடி குழுமத்தின் மூலம் நடத்தப்படும் 'எழுத்தாளரைக் கேளுங்கள்' நிகழ்ச்சியில் அவர் பங்குகொள்ளவேண்டும் என்றபோது, 'க்ரூப்ஸ்லல்லாம் அப்யூஸிவா எழுதுறாங்க. ஸோ வேண்டாம்' என்று சொல்லிவிட்டார் ராகாகியில் நடந்த விஷயங்கள் அவருக்கு சலிப்பைத் தந்திருக்கவேண்டும். பின்னர் தேசிகன் மூலம் அணுகியதும் சரி என்று ஒப்புக்கொண்டார். ஆனால் சில தினங்களில் அவருக்கு கண்ணில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாகவும் உடல்நிலைக் குறைவு காரணமாகவும் அது சாத்தியமில்லாமல் ஆனது.

அடுத்தமுறை சுஜாதாவுடன் பேசியது ஆசி·ப்மீரானுடன் வசந்தபவன் ஹோட்டலில் சாப்பிடுக்கொண்டிருந்தபோது. அப்போது நாடோடித் தென்றல் படத்திலிருந்து ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. சில நாள்களுக்கு முன்பு துபாய் வந்திருந்த சுந்தர் நாடோடித் தென்றல் படம் சுஜாதாவின் 'ரத்தம் ஒரே நிறம்' நாவலைப் பின்னி எடுக்கப்பட்டிருந்தது என்று சொல்லியிருந்தார். நான் அதை ஆசி·பிடம் சொன்னேன். ஆசி·ப் இல்லவே இல்லை என்றார். நான் அந்த நாவலைத்தான் படம் எடுத்திருக்கிறார்கள் என்று சொல்லவும், அவர், 'சுஜாதா நம்பர் உங்கிட்ட இருந்தா கேளுயா' என்றார். நான் அவரது நம்பரைச் சொன்னேன். உடனே அவரது தொலைபேசியிலிருந்தே அழைத்துவிட்டார். சுஜாதாவுடன் என்ன பேசுவது என்று தெரியாமல், நேரடியாக 'நாடோடித் தென்றல் ரத்தம் ஒரே நிறம் நாவலோட வடிவமா சார்' என்று கேட்டேன். இல்லை என்றார். சரி சார் என்று சொல்லி வைத்துவிட்டேன். வேறெதுவும் பேசாதது மிகவும் கஷ்டமாக இருந்தது. இதைச் சொல்லி ஆசி·ப் நிறைய நாள் சிரித்துக்கொண்டிருந்தார். இப்போது யோசித்துப் பார்த்தால், சுஜாதா தன் எழுத்து மூலம் அவரது வாசகர்களை ஒரு நண்பனைப் போல் அடைந்திருக்கிறார் என்று புரிகிறது. அவரது தீவிர வாசகர்கள் எப்போதும் அவருடன் மானசீகமாகப் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். இல்லையென்றால் அப்படி சட்டென என்னால் சுஜாதாவை அழைத்திருக்கமுடியாது.

தேசிகன் மூலம் நண்பர்கள் சிலர் அவரைச் சந்தித்தோம். ஆறு மணிக்கு சரியாக உட்லேண்ஸ் டிரைவி இன் வந்த அவர் மிக இயல்பாக எல்லாருடனும் பேசினார். இப்படி சிலர் சேர்ந்து அவரை வறுத்தெடுக்கிறோமே என்று எல்லாருக்குமே தோன்றினாலும், விடாமல் அவருடன் பேசிக்கொண்டிருந்தோம். கமல், ரஜினி, சிறுகதை, தொடர்கதை, பிரபந்தம் என ஆளாளுக்குப் பல கேள்விகள் கேட்டோம். எல்லாவற்றிற்கும் பதில் சொன்னார். கவிதைகள் பற்றிப் பேச்சு வந்தபோது என்னைப் பார்த்து 'நீங்ககூட கவிதை நல்லா எழுதுறீங்களே' என்றார். இரண்டு முறை சொன்னார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. அவருக்கு அபுல்கலாம் ஆசாத்தின் கஜல் புத்தகத்தையும் ஹரிகிருஷ்ணனின் அனுமன் வார்ப்பும் வனப்பும் புத்தகத்தையும் அன்பளிப்பாகக் கொடுத்தேன். இனிமையாக முடிந்த அந்த சந்திப்புக்குப் பின்னர், இரண்டு நாள்கள் கழித்து வந்த ஆனந்தவிகடன் கற்றதும் பெற்றதும் பகுதியில், இந்த சத்திப்பைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, இதன் மூலம் அவருக்குக் கிடைத்த செய்தியாக 'வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையேயான இடைவெளி அவசியம்' என்பதைச் சொல்லியிருந்தார். சந்திப்பில் பங்குகொண்ட அனைவருக்குமே கொஞ்சம் திக்கென்றிருந்தது. சுஜாதாவுடன் சந்த்திப்பில் பேசிக்கொண்டிருந்தபோது, பலர் இடையே வந்து அவரிடம் ஆட்டோகிரா·ப் வாங்குவதும் அவரது ·போன் நம்பர் கேட்பதும் அவரது வீட்டுக்கு வரலாமா என்று கேட்பதுமாக இருந்தார்கள். அவருடைய பாப்புலாரிட்டியின் காரணமாக அவர் எப்போதும் வாசகனுடன் ஒரு இடைவெளியை வைத்திருக்க விரும்பினார். அதுமட்டுமின்றி என் கணிப்பில் அவர் ஒரு தனிமை விரும்பியாக இருந்தார். தனிமையைக் கொண்டாடுவாரோ என்று கூட நினைத்திருக்கிறேன். தேசிகனிடம் ஏன் கற்றதும் பெற்றதும் பகுதியில் சுஜாதா இப்படி எழுதினார் என்று கேட்டபோது, கற்றதும் பெற்றதும் பகுதியைப் படித்துவிட்டு பலர் அவருக்கு ·போன் செய்து, நாங்களும் டிரீட் தருவோம், எங்களுடனும் பேசவாருங்கள் என்று அழைத்தார்களாம், அதைத் தவிர்க்கவே சுஜாதா அப்படி எழுதினார் என்று விளக்கம் கூறினார். சுஜாதாவின் எழுத்துகள் அவரை அவரது வாசகர்களிடம் 'சுஜாதா என்பது நண்பன்' என்கிற தோரணையோடே அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் அவரது எழுத்து நடை. 1965இல் அவர் எழுதிய கட்டுரையை வாசிக்கும்போது நேற்று எழுதிய கட்டுரையை வாசிப்பதுபோன்றே தோன்றுகிறது. மிக நீண்ட நிகழ்வுகளைக் கூட சில வரிகளில் நமக்குச் சொல்லி முடிக்கிறார். அதோடு சம்பந்தமுடைய ஒரு நிகழ்ச்சியை ஒரு வரியில் சொல்வதன் மூலம் வாசகனை மிக நீண்ட பிராயணத்திற்கு சில நொடிகளில் தயார் செய்துவிடுகிறார். இந்த வேகம், எல்லாத் தலைமுறைகளையும் கவர்ந்திருக்கிறது. மட்டுமின்றி, தமிழின் நடையையே புரட்டிப் போட்டிருக்கிறது. இந்த வகையில் சுஜாதாவின் பங்களிப்பு என்றென்றும் முக்கியமானது. புத்தகக் காட்சியில் தமிழினி வசந்தகுமாரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவரும் சுஜாதாவின் பங்களிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொன்னார். மிகக் கறாரான தேர்ந்தெடுப்பின் மூலம் கூட அவர் எழுதிய 60 சிறுகதைகளையாவது சிறந்ததென பட்டியலிட்டுவிடமுடியும். சிறுகதை எழுத்தாளராக சுஜாதாவின் பங்கு மிக முக்கியமானது.

சுஜாதாவுடனான உட்லேண்ட் சந்திப்பு முடிந்த சில நாள்கள் கழித்து எனி இந்தியன் புத்தகக்கடைக்கு ஒருவர் புத்தகம் வாங்க வந்திருந்தார். சில முக்கியமான புத்தகங்களை அவர் வாங்குவதைப் பார்த்ததும் அவரிடம் பேசினேன். பேச்சில் அவர் திருநெல்வேலிக்காரர் என்று தெரிந்தது. ஏதும் எழுதுவீர்களா என்று கேட்டபோது சுஜாதாவுக்கு கேள்வி எழுதுவேன்,வேற ஒண்ணும் எழுதுறதில்லை என்றார். அந்த வாரம் அவர் கேட்ட கேள்விக்கு பாராட்டாக ஒரு புத்தகம் வந்தது என்றார். சாதாரணமாக என்ன புத்தகம் என்றேன். 'கஜல்னு ஒரு புத்தகம். யாரோ அவருக்கு பிரசண்ட் பண்ணியிருக்காங்க. உள்ள கையெழுத்தெல்லாம் இருக்கு' என்றார். பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அவருக்கு நான் தந்த புத்தகம். இது சாதாரணமாக நடந்த ஒரு பெரிய நிகழ்ச்சியாக எனக்குத் தோன்றியது. தேசிகனிடம் சொன்னேன். 'நல்ல சிறுகதை எழுதலாம் போல இருக்கே' என்றார். பின்னர், எல்லாப் புத்தகத்தையும் அவர் யாருக்காவது பிரசெண்ட் பண்ணிடுவார், இல்லைன்னா அது அப்படியே அவர் வீட்டுலயே இருந்து வேஸ்ட் ஆயிடும் என்றார்.

ஒருசமயம், AnyIndian.comல் அவரது பூக்குட்டி புத்தகத்தை விற்பது தொடர்பாகப் பேச அவர் அழைத்தார். மிக அழகாக வடிவமைக்கப்பட்ட புத்தகத்தின் விலையை, விற்பனையாளர்களுக்குத் தரவேண்டிய கழிவு பற்றிய எண்ணமில்லாமல் வைத்துவிட்டதாகச் சொன்னார். இத்தனை நாள் எழுத்துலகில் இருக்கும் சுஜாதாவிற்கு இதுபோன்ற விஷயங்கள் புரியவே இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. கிட்டத்தட்ட ஐம்பது நிமிடங்கள் நீடித்த அந்த சந்திப்பில் அவர் AnyIndian செயல்பாடுகளைக் கேட்டுக்கொண்டார். தமிழில் எல்லாப் புத்தகங்களையும் ஓரிடத்தில் தேடலாம் என்கிற எண்ணமே அவருக்கு நிறைய மகிழ்ச்சியைத் தந்தது. எங்களது கஸ்டமர் சர்வீஸ் பற்றிச் சொன்னபோது, அது ரொம்ப முக்கியம் என்றார். பின்னர் பூக்குட்டி புத்தகம் பற்றி பேச்சு வந்தபோது, எப்படியாது தள்ளிடணும் என்றார். உண்மையில் வயது முதிர்ந்த குழந்தையுடன் பேசுவது போன்ற சித்திரத்தைத்தான் என்னால் யோசிக்கமுடிந்தது. அதற்குப் பின்பு வந்த புத்தகக் காட்சிகளில் சுஜாதாவை சந்திப்பேன். ஜஸ்ட் ஒரு ஹலோ மட்டுமே. அவரும் ஹலோ ஹரன் என்பார். மீண்டும் ஒருமுறை அவரை சந்தித்தபோது, பூக்குட்டியை எப்படியாவது வித்திடணும் என்றார். கூடவே அது மாதிரி இன்னொரு புத்தகம் போடப் போறேன் என்றார். பல விஷயங்களைப் பற்றிப் பேசினார். நாங்கள் பதிப்பித்த புத்தகங்களைப் பார்த்த அவர், எல்லாப் புத்தகங்களின் க்வாலிட்டியும் ரொம்ப நல்லா இருக்கு என்றார். டெக்னாலஜி ரொம்ப முன்னேறினதால எல்லாருமே நல்ல புத்தகங்கள் போட ஆரம்பிச்சிட்டாங்க, முன்னல்லாம் செட்டியாருங்க என்ன க்வாலிட்டி சொல்றாங்களோ அதுதான் க்வாலிட்டி, இப்பல்லாம் யார்வேணா சுலபமா க்வாலிட்டியா புக் போடமுடியுது என்றார். பல விஷயங்கள் பற்றி அன்று பேசினார். சுந்தர ராமசாமி பற்றிய பேச்சு வந்தபோது, எவ்ளோ நல்ல சிறுகதையாளர் என்றார். அவரது ஆரம்ப கால சிறுகதைகளை வெகுவாகச் சிலாகித்தார் சுஜாதா. 'பிராசதம் படிச்சுருக்கேங்களா? என்ன ஒரு பீஸ்' என்றார். சு.ராவின் சமீபத்திய சிறுகதைகள் எல்லாம் கதையை விட்டுவிட்டு நடையை மையப்படுத்தி எழுதப்பட்டவை என்றார். 'குழந்தைகள் ஆண்கள் பெண்கள்ல ஏதோ ஒண்ணு - ஆண்களோ பெண்களோ, நினைவில்லை - மட்டும் நல்லா இருக்கும். மத்ததெல்லாம் வெறும் எழுத்துதான். உத்வேகம் இல்லை' என்றார். நான் அவரிடம், 'இதையெல்லாம் நீங்க எங்கயும் எழுதுறதில்லையே சார்' என்றேன். புன்னகைத்துக்கொண்டார். சுஜாதாவிடம், கணையாழியின் கடைசிப்பக்கங்களில் வெளியான சீற்றமும் கடும் விமர்சனமும் கொண்ட மனிதன் உயிர்ப்போடு கடைசி வரை இருந்தான். ஆனால் அவர் அவனை அடக்கி வைத்திருந்தார். அவன் அவரது கடைசிக் காலங்களில் வெளிப்படவே இல்லை. நட்பு என்னும் பெரிய திரை அவரை முழுதுமாக இறுக்கிவிட்டது. விமர்சனத்தை விட நட்பு முக்கியம் என்கிற கட்சிக்குள் வெகுவேகமாக சென்று சேர்ந்துவிட்டவர் அவர் என்பது என் எண்ணம்.

மீண்டுமொருமுறை அவரைச் சந்தித்தேன். அந்தமுறை சிவாஜி திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகியிருந்தது. அவரைப் பார்க்க அவரது அலுவலகத்திற்குள் நுழையும்போதே என்னைப் பார்த்து, 'வெயிட் போட்டுட்டீங்க' என்றார். 'அதுவா ஏறுது சார்' என்றேன். 'லிக்கர் சாப்பிடுவீங்களா?' என்றார். இல்லை என்றேன். 'பாருங்க ஷங்கர் எப்படி வெயிட் போட்டுட்டார்னு' என்று ஆரம்பித்தார். 'ஸார் நானும் பேட்டில பார்த்தேன். எப்படி இப்படி வெயிட் போட்டார்' என்று கேட்டேன். 'சினி ·பீல்ட்ல எல்லாருமே லிக்கர் சாப்பிடுவாங்க. நான் ஷங்கர்கிட்ட சொன்னேன், வெயிட் போட்டது பத்தி. இப்பதான் சிவாஜி முடிச்சிருக்கேன், இது ரெஸ்ட் பீரியட், அடுத்தபட வேலை ஆரம்பிச்சா எல்லாம் சரியாயிடும்னு சொல்றார். அதுவும் உண்மைதான். படம்ங்கிறது பெரிய வேலை. அதுவும் ஷங்கர் மாதிரி படங்களுக்கு அப்படி மெனக்கெடனும்' என்றார். 'ஆனா ரஜினி மட்டும் ஸ்லிம்மா இருக்கார்' என்றேன். 'அவரோட ·புட் ஹேபிட்' என்றார். 'ஸார், நான் பாட்டு கேட்டேன். நெட்ல வந்தப்ப சும்மா ஏமாத்தறாங்களோன்னு நினைச்சேன்' 'இல்ல, அதுதான். ஏ.ஆர்.ரஹ்மான் ·பாரின்லேர்ந்து அனுப்பறார். இடையில யாரோ விளையாடிருப்பாங்க. இப்பல்லாம் நெட்ல எதுவேணா செய்யலாம்.' 'பாட்டு கேட்டேன், பல்லே லக்கா சுமாரா இருக்கு. மத்ததெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு.' 'அது சும்மா ஒரு ·பாஸ்ட் பீட் ஸாங். டைட்டில் சாங்' என்றார். பின் படத்தின் நெகடிவ், பாஸிடிவ் என்றெல்லாம் நிறைய பேசினார். தமிழ்ப்படங்கள் பற்றிய சில கடுமையான அபிப்பிராயங்களையும் சொன்னார். 'ஏன் இதெல்லாம் எழுதுறதில்லை ஸார்?' சிரித்துக்கொண்டே, 'கணையாழியில நிறைய எழுதிருக்கேன். நீங்க பார்த்தீங்கன்னா 35 வருஷமா எழுதறேன். ஆரம்பத்துல கணையாழியில இருந்த fire இப்ப கொண்டுவரமுடியாது. அப்படியே குறைஞ்சு குறைஞ்சு இப்ப கற்றதும் பெற்றதும் பாருங்க வெறும் டைரிக்குறிப்பு மாதிரிதான இருக்கு?' எனக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. என்ன ஒரு எளிமையான, ஆழமான மதிப்பீடு. சுந்தர ராமசாமியைப் பற்றிய அவரது மதிப்பீட்டிற்கு இணையாக அவரே அவரைப் பற்றிய மதிப்பீடு ஒன்றை வைத்திருக்கிறார். 'நீங்க உங்களுக்கு இருக்கிற எல்லா நண்பர்களையும் காயப்படுத்தாம இருக்க நினைக்கிறீங்க, அதனாலதான் க.பெ. இப்படி இருக்குன்றது என் எண்ணம்' என்றேன். காலச்சுவடு, உயிர்மை, ஆனந்தவிகடன் பற்றி பல விஷயங்களைப் பேசினோம். ஜெயமோகன் எழுதி அவருக்குக் காணிக்கையாக்கியிருந்த விசும்பு புத்தகத்தை அவருக்கு அனுப்பியிருந்தேன். அதைப் பற்றிக் கேட்டேன். ஹார்ட் சயின்ஸ் ·பிக்ஷன், சா·ப்ட் சயின்ஸ் ·பிஷன் பற்றிப் பேசிய அவர், ஜெயமோகனின் கதைகள் புதிய திறப்பை ஏற்படுத்துகின்றன என்பதில் ஐயமில்லை என்றார். 'நானே அவர்கிட்ட பேசறேன்' என்றும் சொன்னார். எங்கள் புத்தகங்களைப் பற்றிக் கேட்டபோது, பிரதாப சந்திர விலாசம் பற்றி ஆர்வமாகப் பேசினார். 'அந்த மாதிரி புத்தகங்கள மக்கள் கிட்ட கொண்டு போணும். நீங்க சொல்றதே இண்டிரஸ்டிங்கா இருக்கு. விருத்தம், வசனம் கலந்த நாடகம். இண்டரஸ்டிங். எனக்கு அனுப்புங்க நான் பார்க்கிறேன்' என்றார். 'ஸார், நான் அனுப்பலாம்னுதான் நினைப்பேன். ஆனா அப்ப அப்ப கற்றதும்பெற்றதும்ல யாரும் எனக்கு புத்தகங்கள் அனுப்பாதீங்கன்னு எழுதுறதைப் பார்த்து அனுப்பலை' என்றேன். 'அது எழுதுறது எதுக்குன்னா, ஒரு நாளைக்கு 50 பார்சல் வருது. யாரு வாங்கி படிக்கிறது? அதுக்காகத்தான். சிடி கூட அனுப்பறாங்க இப்பல்லாம். நேத்துகூட ஒரு சிடி வந்தது.' 'ஆனா அப்படி எழுதிட்டு அடுத்த வரில கிடைச்ச புத்தகங்கள்ளேர்ந்து ஒண்ண எழுதிடறீங்க. திரும்பவும் எல்லாரும் அனுப்புவாங்க.' 'வேற வழியில்லை' என்று சொல்லி சிரித்தார். அடுத்த வாரம் க.பெ.வில் பிரதாப சந்திர விலாசம் பற்றி எழுதியிருந்தார்.

அதன்பின்பு அவரைப் பார்த்தது கடந்த புத்தகக் காட்சியில். 'ஸார் பிரசன்னா எனி இந்தியன்' என்றேன். 'ஹலோ ஹரன்' என்று சிரித்தார். சில புகைப்படங்கள் எடுத்தேன். வா. மணிகண்டனின் 'கண்ணாடியில் நகரும் வெயில்' கவிதைப்புத்தகத்தை வெளியிட்டார். அவர் அந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்க்கக்கூட இல்லை. மனுஷ்யபுத்திரன் வெளியிடச் சொன்னார், அவர் வெளியிட்டார். இதுவும் அவர் நட்பு மேல் கொண்டிருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு. கடைசிவரை அப்படியே வாழ்ந்தார் அவர். இரண்டு மாதங்களுக்கு முன்பு எனி இந்தியனுக்காக ஒரு புத்தகம் கேட்டோம். நிச்சயம் தருகிறேன் என்று சொல்லியிருந்தார். சில நாள்களுக்கெல்லாம் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவும் அதைப் பற்றிப் பேசாமல் இருந்தோம். நேற்று கோ.ராஜாராமுடன் இரவு பேசிக்கொண்டிருந்தபோது, 'நாம சுஜாதாவைப் பார்க்கலாம்' என்றேன். 'சரி' என்றார். இந்தப் பேச்சு நடந்த ஒரு மணி நேரத்தில் தொலைபேசியில் ஒரு சோகக்குரல் என்னை உலுக்குகிறது சுஜாதாவின் மரணத்தைச் சொல்லி. நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்த சோகத்தை நான் அடைந்தேன். எனது shape-upல் சுஜாதாவின் பங்கு கணிசமாக இருக்கிறது என்பதை எப்போதும் உணர்ந்திருக்கிறேன். சமகால எழுத்தாளர்கள் பலர் எழுத்தில் எங்கேனும் ஓரிடத்தில் அவரது பாதிப்பை என்னால் பார்க்கமுடிகிறது. சுஜாதா தலைமுறையையே உருவாக்கிய எழுத்தாளர். தேசிகன் அவரது வாழ்க்கை வரலாறை எழுதும் எண்ணம் கொண்டிருந்தார். அது நிறைவேறுவதற்கு முன்பு சுஜாதா மறைந்தது அவருக்கும் எனக்கும் வருத்தமான விஷயம். இன்று எத்தனையோ பேர் சுஜாதாவின் மரணத்துக்காக வருத்தப்படுகிறார்கள். சுஜாதாவைத் தவிர எதையும் படிக்காத தலைமுறைகூட ஒன்றிருக்கிறது. 'ஏன் இன்னும் கணேஷ் வசந்தெல்லாம் எழுதுறீங்க' என்று நான் கேட்டபோது, அதன் வழியாக நல்ல இலக்கியத்திற்கு அதன் வாசகர்களைக் கூட்டி வரலாம் என்று சுஜாதா சொன்னது இதுபோன்ற தலைமுறை ஒன்றை எண்ணியே. இந்தத் தலைமுறையெல்லாம் இன்று தன் வீட்டில் துக்கம் நிகழ்ந்ததாகவே கருதும். இது ஒரு எழுத்தாளனுக்கு அளிக்கப்படும் உச்சகட்ட கௌரவம்.

புத்தகக் காட்சியில் திருமகள் நிலையத்துக்கு வந்த சுஜாதா திரும்பிச் செல்லும்போது மெல்ல நடந்து சென்றார். அவரால் தனியாக நடந்து செல்லமுடியாது. திருமகள் நிலையம் பதிப்பகத்தின் நிறுவனர் அவரை அழைத்துச் சென்றார். அவரும் உடல் நிலை சரியில்லாமல் வேகமாக நடக்கமுடியாத நிலையில் இருப்பவர். அவர் சுஜாதாவை ஆதரவாகப் பிடித்திருக்க, சுஜாதா அவரை ஆதரவாகப் பிடித்திருக்க, இரண்டு பேரும் மெல்ல நடந்து என்னைக் கடந்து சென்றார்கள். என் கண்ணின் வழியே விரிந்த அந்தக் காட்சி என்றும் என் நினைவில் நின்றிருக்கும் என்று அப்போதே தோன்றியது. இரண்டு முதிய குழந்தைகள் தவழ்வதைப் போன்ற சித்திரம் என் கண்ணை இப்போதும் நிறைக்கிறது. அன்புள்ள சுஜாதா, வருத்ததுடன், நெஞ்ச நிறைவுடன் உங்களுக்கு ஒரு good-bye.

11 comments:

வல்லிசிம்ஹன் said...

மெரினாவில் நடக்கும்போது எதிர்ப்படுவார்.

ஏற்கனவே அறிமுகம் என்றாலும், அவரது முகத்தில் நினைவு ஏதும் தெரியாது.
சௌக்கியமா என்று கேட்டுவிட்டு மேலே நடந்து விடுவார்.

ஏனென்று தெரியாமல் மனம் வருத்தப்படும்.அந்த மெல்லிய தேகத்தில் இருந்த உறுதியான மனிதரை, அறிவை வணங்குகிறேன்.
நன்றி ஹரன்.

Bee'morgan said...

:-( மிக ஆழமானதொரு பதிவு.. தமிழ்ச் சூழலுக்கு மிகப்பெரிய இழப்பு இது.. இன்று காலையில்தான் எனக்கு தெரியவந்தது.
எத்தனை சத்தியமான வார்த்தைகள்.. எனக்கு தற்கால இலக்கியத்திற்கான கதவைத் திறந்து விட்டவர்கள் கணேசும் வசந்தும் தான். கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கையில், வார்த்தைகள் கூட வரமறுக்கின்றன.. :-(
அஞ்சலி செலுத்த எனக்கு விருப்பமில்லை.. வாழ்த்துகள் சுஜாதா. எழுத்தில் எந்தவித குறையும் வைக்காமல், ஏதேனும் ஒன்றை எழுதாமல் விட்டகுறை தொட்டகுறை இல்லாமல், தன் 'லீகசி'யை தன்னைத் தொடர்ந்த ஒரு தலைமுறைக்கே விட்டுச் சென்றிருக்கும் சுஜதாவுக்கு என் இறுதி வணக்கங்கள்..

கானகம் said...

அன்பு ஹரன் பிரசன்னா..

இதைவிட சிறப்பாய் சுஜாதாவுக்கு அஞ்சலி செய்ய முடியாது. நல்ல நிகழ்வுகளின் தொகுப்பு. உங்களுடன் நானும் இனைகிறேன்..அஞ்சலியில்..

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

ஹரன்,உங்கள் அஞ்சலியிலிருந்து சிலவற்றை எடுத்திருக்கிறேன்;அனுமதிப்பீர்கள் எனவே நம்புகிறேன்.
நன்றி.

Unknown said...

நல்ல தொகுப்பு....உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வார்த்தைகள் வர மறுக்கின்றன.. :-(.சுஜாதாவுக்கு என் இறுதி வணக்கங்கள்...

எம்.கே.குமார் said...

சுஜாதாவின் மறைவைப்பற்றிய எப்பதிவிலும் எனது இரங்கலைத் தெரிவிக்காதிருந்தது, இங்கு அதைப் பதிவு செய்வதற்காகவோ என்னவோ!

சுஜாதா என்ற நண்பனுக்கு எனது அஞ்சலி!

நன்றி நண்பனே! பிரிவோம்;சந்திப்போம்.

எம்.கே.குமார்.

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

அவரை இந்த அளவு சுவாசித்தவர்களால் மட்டுமே, இப்படிச் சொல்ல முடியும். நான் படித்த / கேட்ட இரங்கல் செய்திகள்/ அஞ்சலிகளில் உங்களுடையதயே சிறந்ததாய்ச் சொல்வேன்.

காலம் தாழ்த்தி பின்னூட்டம் செய்த பிழையைப் பொறுத்தருள்க

ஹரன் !!! அவர் எழுத்துகளால் நமது சிந்தனைகளில் செய்த வருடல் சுகம் நமக்கு நினவிருக்கும் வரை நம்மோடு இருக்கும்.

Nanda Nachimuthu said...

migavum valimaiyaaga indha valiyai padhivu seidhulleergal.office soozhnilai azhuvadharkku anumadhikka marukkiradhu.irundhum kangal kalangi vittana.

Unknown said...

Sujatha the Name itself gives Energy. sujatha i never forget this man in my life time, I never thought he dead, He always with me through its Greatest Books and write up. Thanks is a normal word in Dictionary.

Unknown said...

Sujatha the name itself give Energy to me, I never forget is name in my Lifetime. He always with me through its gretest Books ans write up.

Unknown said...

//எனது shape-upல் சுஜாதாவின் பங்கு கணிசமாக இருக்கிறது என்பதை எப்போதும் உணர்ந்திருக்கிறேன்.//

நானும் தான்.

முழுமையான பதிவு. குருநாதரின் மரணம், நினைத்தால் இன்றும் கண்ணீர் வருகிறது. அவர் என்றென்றும் நம்மிடையே வாழ்வார்.

நன்றி நண்பரே..