Wednesday, November 17, 2010

ஹிந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம் - ஒரு சிறிய அறிமுகம்

எந்த ஒரு கோட்பாட்டுக்கும் ‘இதுதான் அந்தக் கோட்பாடு’ என்று தெளிவாகச் சொல்லும் புத்தகம் வேண்டும் என்றபடிதான் பேச்சுத் தொடங்கியது. உலகத்தில் இரண்டு வகையான ஹிந்துத்துவவாதிகள் உண்டு. உண்மையில் பசிக்கான ஹிந்துத்துவவாதிகள். இவர்கள் கோட்பாட்டுவாதிகள். இன்னொன்று பஞ்சத்துக்கு ஹிந்துத்துவவாதிகள். அதாவது கோட்பாட்டுவாந்திகள். நான் இரண்டாவது வகை. அதாவது ஹிந்துத்துவவாதி என்றாக்கப்பட்டவன்.



ஹிந்துத்துவவாதி என்பதும், பிராமணர் என்பதும் ஒருவகைத் தண்டனை என்று அறியப்படுகிற நிலையில், ஆமாம் இப்போ அதுக்கென்ன என்றது மட்டுமே என்னை ஹிந்துத்துவவாதி ஆக்கியது என்று சுருங்கச் சொல்லலாம். மற்றபடி ஹிந்துத்துவ சித்தாந்தங்கள் மீது ஈர்ப்பு இருந்தது/இருப்பது உண்மைதான். ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் என்று வேண்டுமானால் எங்களைச் சொல்லலாம். உண்மையான ஹிந்துத்துவவாதிகளிடம் திட்டு வாங்கவேண்டுமானால், நீங்கள் ஹிந்துத்துவ ஆதரவாளராக இருந்தால்தான் முடியும். அப்போதுதான் அதன் வலி புரியும்! இந்த ஆதரவாளர் அவ்வப்போது சில உண்மைகளை அல்லது உண்மை என்று நம்புவற்றைப் பேசிவிடுவார். அது தவறாகவே இருக்கலாம். ஆனால் அதை உண்மை என்று நம்பிவிட்டார் பாவம். ஆனால் கோட்பாட்டுவாதிகளுக்கு இந்தப் பிரச்சினை வராது. இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், இப்படித்தான் ‘ஹிந்துத்துவம் என்றால் என்ன’ என்ற ஒரு புத்தகம் வேண்டும் என்ற கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது.

எனக்குத் தெரிந்த ஹிந்துத்துவவாதி அரவிந்தன் நீலகண்டன் எழுதினால் சரியாக இருக்கும் என்று சொன்னேன். அவர் எழுதினால் யாருக்கும் புரியாது என்பது பெரிய ப்ளஸ் பாய்ண்ட். இனிமேல் ’இந்தக் கோட்பாட்டை இப்படி வரையறுக்கவேண்டும்’ என்னும் புத்தகச் சிந்தனைகளுக்கு ஒட்டுமொத்த முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்தானே!

மற்ற கோட்பாடுகளை வரையறுப்பது போல ஹிந்துத்துவத்தை வரையறுக்க முடியாது என்று சொல்லிப் பார்த்தேன். அப்படியானால் ’இதெல்லாம் ஹிந்துத்துவம், இதெல்லாம் ஹிந்துத்துவம் இல்லை’ என்று சொல்லிப் புத்தகம் வரலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. விதி வலிது.

ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸுக்கு ஆள்பிடிக்கும் கூட்டம் கிழக்கு மொட்டை மாடியில்தான் இருக்கிறது என்று சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுவிட்ட நிலையில், இப்புத்தகம் என்ன செய்துவிடும் என்றும் என்னை தைரியப்படுத்திக்கொண்டேன். இந்தச் சூழ்நிலையில் பெரிய அதிர்ச்சியாக அரவிந்தன் நீலகண்டன் தெளிவாகப் புரியும்படி எழுதிவிட்டார். இந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே சிறிது காலம் தேவைப்பட்டது. பாராவின் எடிட்டிங் அதனை இன்னும் சிறப்பாக்கியது. ஒரு வழியாகப் புத்தகம் வந்தது.

ஹிந்துத்துவம் என்னும் கோட்பாட்டை இந்தப் புத்தகம் எப்படி வரையறுக்கிறது? உண்மையில் ஹிந்துத்துவத்தை சரியாக வரையறுப்பது கடினம் என்றுதான் இப்போதும் நினைக்கிறேன். ஹிந்துத்துவத்தை அரசியல் சுதந்திரம் என்றுதான் நான் வரையறுக்க விரும்புவேன். சுதந்திரத்தை எப்படி வரையறுப்பது? ஹிந்துத்துவம் பன்மைக்கு முக்கியத்துவம் தருவது. பன்மையை எப்படி வரையறுப்பது? எனவே நிகழ்ச்சிகள் சார்ந்து வரையறுப்பது என்னும் வரையறையை ஏற்படுத்திக்கொண்டார் அரவிந்தன் நீலகண்டன். நல்ல தேர்வுதான். இதனால் ஒவ்வொரு நிகழ்ச்சி சார்ந்தும் மெல்ல மெல்ல ஹிந்துத்துவத்தின் எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டே சென்றார். பாரா இந்தப் புத்தகத்தைப் பற்றிச் சொன்னது, ப்ரில்லியண்ட் க்ளெவர் புத்தகம்.(இந்தப் பதிலில் எனக்கு ஏற்பில்லை என்பது ஒருபுறம். ஆனால் மிகச்சிறந்த பதில் அது!) எனக்கு இந்தக் கோட்பாட்டின்பால் சாய்வு இருப்பதால், இதனை நல்ல புத்தகம் என்று நினைக்கத் தோன்றுகிறது. எதிர்த்தரப்புக்காரர்கள் காயத் துவைத்துப் போட்டால், நல்ல விவாதங்கள் வரலாம். வரவேண்டும்.

ஒரு மனிதனை நல்லவனா கெட்டவனா என்று எப்படிச் சொல்வது? அப்படி வேறு வழியில்லாமல் ஒரு பதில் சொல்லவேண்டுமென்றால், அவனுள் இருக்கும் பல நுண்மைகளை மறுத்துவிட்டுத்தான் சொல்லவேண்டியிருக்கும். எந்த ஒரு கோட்பாட்டையும், எந்த ஒரு மனிதனையும், எந்த ஒரு நிகழ்வையும் வரையறுக்கும்போது இந்த அபாயத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்றுதான் நினைக்கிறேன். எனவே, ஹிந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம் புத்தகம், பன்மைகளை அதனதன் தளத்தில் இருந்து வரையறுக்கத் தொடங்கியது. இதில் ஏற்பட்ட பிரச்சினை (வாசகர்களுக்கு) அல்லது பிளஸ் பாயிண்ட் (எழுத்தாளருக்கு) என்ன என்றால், இப்புத்தகத்தைப் படிக்கும் யாரும் ஏதோ ஒரு கட்டத்தில் தானும் ஹிந்துத்துவவாதிதானோ என்று எண்ணிக்கொண்டு விடலாம் என்பதுதான். இப்புத்தகத்தைப் படிக்கும் எதிர்த்தரப்புவாதிகள் கோட்பாட்டை விமர்சிக்காமல், நிகழ்வுகள் சார்ந்து கோட்பாட்டை விமர்சிப்பதும் எளிதாகிவிடும் என்பது இன்னொரு பலவீனம். ஆனால் ஹிந்துத்துவத்தை இப்படி அல்லாமல் வரையறுக்கமுடியாது என்றுதான் இப்போதும் தோன்றுகிறது. இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே எதிர்த்தரப்புவாதிகள் அரவிந்தனிடம் பல கேள்விகளை முன்வைக்கலாம். அவர் அதனையெல்லாம் எதிர்கொள்ளத் தயாராகத்தான் இருப்பார் என நினைக்கிறேன்.

இன்னொரு முறை உண்டு. விரிவான முறை. ஹிந்துத்துவத்தின் ஒட்டுமொத்த வரலாற்றை, அதன் காலத்தை வைத்து முன்னிறுத்திப் பேசுவது. காலம் தோறும் எப்படி ஹிந்துத்துவம் மாறி வந்திருக்கிறது என்பதைப் பேசுவது. இதிலும் நிகழ்வுகள், செயல்பாடுகள் சார்ந்துதான் ஹிந்துத்துவத்தைப் பேசவேண்டியிருக்கும் என்றாலும், ஒரு விரிவான விவரிப்பு சாத்தியமாகும். அதனையும் அரவிந்தன் நீலகண்டன் செய்யவேண்டும். புரியும்படியாகத்தான். இதில் எழுத்தாளருக்கு உள்ள பிரச்சினை, அவர் ஏதோ ஓர் அமைப்பின் உறுப்பினராக இருந்தால், இந்தக் கோட்பாட்டை அந்த அமைப்பின் மீது வைத்துப் பரிசீலிப்பதில் ஏற்படும். ஆனால் அரவிந்தன் இதனை எளிதாக எதிர்கொள்பவர் என்பது எனக்குத் தெரிந்ததுதான். அரவிந்தன் போன்ற நிஜமான அறிவுஜீவிகள் இல்லாமல் இதைப் போன்ற ஒரு பணியைச் செய்வது நிச்சயம் கடினமே.

இதேபோன்று, கம்யூனிஸம் உள்ளிட்ட கோட்பாடுகளை எளிமையாக விவரிக்கும் புத்தகங்கள் வரவேண்டும் என்ற கருத்து வலுப்பட்டிருக்கிறது. கிழக்கு இதைப் போன்ற புத்தகங்களை நிச்சயம் கொண்டு வரும். ஏற்கெனவே கிழக்கு என்பது ஒரு தளம், அதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று பத்ரி வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார்.

கிழக்கு மொட்டை மாடியில் ஆர் எஸ் எஸுக்கு இடம் பிடிக்கும் கூட்டத்துக்குப் பக்கத்திலேயே கம்யூனிஸ்டுகளும் ஓர் இடம் பிடித்துக்கொள்ளலாம். தோழர்களே, வாருங்கள்.

வெளியீடு: மினிமேக்ஸ் | விலை: ரூ 25/- | ஆன்லைனில் வாங்க |

4 comments:

Sundar said...

தினமும் தமிழ் பேப்பரை நெட்டில் படிப்பதனால் அரவிந்தன் நீலகண்டன் மீது ஒரு மரியாதை கலந்த வியப்பு உண்டு. உங்கள் விமர்சனம் படித்ததும் அந்த புத்தகத்தை உடனே வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது.

சுந்தரவேல்.

para said...

'ப்ரில்லியண்ட்’ அல்ல; நான் குறிப்பிட்டது ‘க்ளவர்’ என்ற சொல். அரவிந்தனிடமும் இதனைச் சொன்னேன்.

ஜடாயு said...

பிரசன்னா,

இந்துத்துவம் பற்றி இனிய, எளிய அறிமுக நூலைக் கொணர்ந்ததற்காக உங்களுக்கும், பாராவுக்கும், கிழக்கு பதிப்பகத்திற்கும் வாழ்த்துக்கள்! இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். வாழ்க!

பாரா, நீங்கள் பயன்படுத்தியிருக்க வேண்டிய சொல் wise.

ADMIN said...

இந்துத்துவம் பற்றிய நூலைப் பற்றி எழுதிய விதம் அருமை..! படிக்கத்தோன்றுகிறது..!