கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘ராஜிவ் காந்தி கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்’ என்னும் புத்தகத்தைப் படித்தேன். ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில், நம்மைக் கடந்துகொண்டிருக்கும் பிம்பங்களைப் பற்றிய யாதொரு பிரக்ஞையும் இல்லாமல், நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும் ஒரு புத்தகத்தை, சிறுவயதில் படித்த அனுபவம் மீண்டும் கிடைத்தது. இப்புத்தகத்தைப் படித்து முடிக்கும் வரை ஏதோ ஒரு சலனம் என்னைச் சுற்றி இருப்பது போலவே உணர்ந்தேன். தொடக்கம் முதல் இறுதி வரை அப்படி ஒரு வேகம். அர்த்தமுள்ள வேகம். நம்மைப் பதற வைக்கும் வேகம்.
நம் சமுதாயம் கதை சொல்லி, கதை கேட்டு வளர்ந்த பழக்கம் உடையது. எனவேதான் சிறுவயதில் நமக்குக் கதை சொல்லி வளர்க்கும் பாட்டிகளும் தாத்தாக்களும் நமக்கு எப்போதும் பிடித்தமானவர்களாகவும், பிரியமானவர்களாகவும் ஆகிப் போய்விடுகிறார்கள். ரகோத்தமன் (தலைமைப் புலனாய்வு அதிகாரி சி.பி.ஐ. - ஓய்வு) ராஜிவ் கொலை வழக்கு என்னும் நிஜத்தை ஒரு கதையைப் போலச் சொல்லி, அனைவருக்குமான கதை சொல்லி ஆகிவிடுகிறார். கதை சொல்லல் என்றால், மிக எளிமையான கற்பனையோடு இயைந்த கதை அல்ல இது. ரத்தமும் சதையும் நிறைந்த மனிதர்களின் உயிரோடு கலந்துவிட்ட நிஜமான சம்பவத்தின் கதை சொல்லல். இது அத்தனை எளிமையானது இல்ல. எங்கிருந்து தொடங்குகிறோம் என்பதிலிருந்து, யாரைப் பற்றிப் பேசுகிறோம் என்பது தொட்டு, எங்கே எப்போது எப்படி முடிக்கிறோம் என்பது வரை எவ்விதக் குழப்பமும் இன்றி சொல்லப்பட வேண்டிய கதை. இக்கதையை கேட்கப் போகிறவர்கள் கோடான கோடி பேர் என்னும்போது, இதன் முக்கியத்துவம் இன்னும் கூடுகிறது. ஆனால் இதனை மிக எளிதாகக் கடக்கிறார் ரகோத்தமன்.
ராஜிவ் காந்தி கொலையை முதலில் விவரித்துவிட்டு - இப்படி விவரிக்கும்போதே மிக அழகாக, தேவையான எல்லாவற்றையும் சொல்கிறார் - மீண்டும் அதே நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் அதன் முன் பின் காரண காரியங்களோடு ஆழமாக அலசுகிறார். ராஜிவ் கொலை நிகழ்ந்ததும் மனதுக்குள் எழும் சந்தேகங்களை வெறும் சந்தேகங்களாக மட்டும் வைத்துக்கொண்டு, ஊகங்களை வெறும் ஊகங்களாக மட்டும் வைத்துக்கொண்டு, கையில் கிடைக்கும் துப்பை வைத்துக்கொண்டு சிபிஐ வழக்கை நகர்த்திச் செல்லும் விதம் பெரும் ஆச்சரியம் அளிக்கிறது. ஒவ்வொரு சமயத்திலும் ஏதோ ஒரு ஆச்சரியமான துப்பு சிபிஐக்குக் கிடைத்த வண்ணம் இருந்திருப்பதை அறிய முடிகிறது.
ஒரு வழக்கை விசாரித்தல் என்பது மிக எளிமையான காரியம் அல்ல என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான். ஆனால் அது எப்படி அத்தனை எளிமையானது அல்ல என்பதனை விளக்குகிறது இப்புத்தகம். ராஜிவின் கொலையைப் பற்றிய இப்புத்தகம், இந்த வழக்கு விசாரணையின் எல்லா பரிமாணங்களையும் விளக்கும்போது, ஒரு முக்கிய வழக்கின் ஒட்டுமொத்த விஷயங்களையும் தெளிவாகச் சொல்லும் புத்தகம் என்னும் பரிமாணத்தை அடைகிறது. இது இப்புத்தகம் பெறும் மிக முக்கியமான அடையாளம்.
இதுவரை தமிழில் ஒரு வழக்கு விசாரணையின் சகல பரிமாணங்களையும் விளக்கும் புத்தகம் வந்ததில்லை என்று நினைக்கிறேன். அக்குறையை இப்புத்தகம் நீக்கியிருக்கிறது. அதுவும், உலகமே நோக்கிய ஒரு முக்கியக் கொலை வழக்கு ஒன்றில், தமிழில் இது நிகழ்ந்திருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
சில திரைப்படங்களில் தீவிரவாதிகளின் சங்கேதக் குறிகள் பற்றிப் பேசி, அதைப் பார்த்துப் பழகிய மக்கள், இப்புத்தகத்தில் அச்சங்கேதக் குறிக்கான ‘கோட் ஷீட்’களைப் பார்க்கப் போகிறார்கள். அது மட்டுமல்ல, ராஜிவ் கொலைக்கு முன் கொலையாளிகள் சென்னை பூம்புகாரில் வாங்கிய சந்தன மாலைக்கான ரசீது உட்பட அனைத்தையும் இப்புத்தகத்தில் பார்க்கலாம். இத்தகைய சிறிய சிறிய விஷயங்கள் இப்புத்தகத்தை மிக சுவாரஸ்யமாக மாற்றுகின்றன. இத்தகைய சிறிய விஷயங்களே பின்னாளில் மிகப்பெரிய ஆதாரமாக அமைவதை, ஒரு நிஜமான வழக்கின் பின்னணியோடு பார்க்க முடிகிறது.
ஒரு வேகமான திரைப்படம் போலச் செல்லும் இப்புத்தகத்தில், சிறந்த காட்சிக்கான கூறுகளையும் பார்க்கலாம். ராஜிவ் காந்திக்கு மாலை அணிவிக்க அனுமதி பெறுவதற்கு கொலையாளிகள் செய்யும் பிரயத்தனம், மரகதம் சந்திரசேகரரின் வாய் பேசமுடியாத பேத்தி கொலையாளிகளின் படத்தைப் பார்த்து ஏதோ சொல்லும் காட்சி, ஒரு சிறுவன் பணத்தை மாடியில் இருந்து பறக்க விடும் காட்சி - இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் புத்தகத்தை சுவாரயஸ்யமாக்கும் விஷயங்கள். இவைபோக நம்மைப் பதறவைக்கும் சம்பவங்களுக்கும் குறைவில்லை.
முக்கியமாக வைகோ பற்றிய அத்தியாயத்தைச் சொல்லவேண்டும். ரகோத்தமன் இப்புத்தகத்தில் எழுப்பியிருக்கும் கேள்விகள் முக்கியமானவை. தமிழக அரசியல்வாதிகள் - வைகோ, கருணாநிதி, மரகதம் சந்திரசேகர் உட்பட - நியாயமாக விசாரிக்கப்படுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்கிறார். அதுமட்டுமல்ல, இவர்கள் தற்போதும் விசாரிக்கப்படலாம், அதற்கான வாய்ப்பு இன்னும் அப்படியே இருக்கிறது என்றும் சொல்கிறார். ஜெயின் கமிஷனுக்கு, சிபிஐ ராஜிவ் கொலையில் விசாரித்ததன் தகவல்கள் தரப்படவில்லை என்கிறார். இப்புத்தகம் வெளி வந்திருக்காவிட்டால், இவையெல்லாம் நமக்குத் தெரியாத செய்திகளாகவே காற்றில் போயிருக்கும்.
இப்புத்தகத்தைப் படித்துவிட்டு, நளினி, ஹரிபாபுவின் காதல் பற்றிப் பேசாவிட்டால் முழுமை பெறாது. ‘சீனா விலகும் திரை’ புத்தகத்தைப் படித்த போது அதில் ஒரு வரி என்னை ஈர்த்தது. சீனாவின் முழுமையான ஜனநாயகம் செக்ஸின் வழியாக வந்தது என்பது போன்ற வரி, ஒரு பத்திரிகையாளரின் நோக்காக வெளிப்பட்டிருந்தது. நீண்ட நாள் சிந்திக்க வைத்த அந்த வரியைப் போலவே, இப்புத்தகத்தில் வரும் ‘அவரை அடிக்காதீர்கள்’ என்னும் நளினியின் வரியும் சிந்திக்க வைத்தது. நளினிக்கும் முருகனுக்கும் இடையேயான காதலே இவ்வழக்கை உடைத்திருக்கிறது என்றுகூடச் சொல்லிவிடலாம். ஹரிபாவுக்கு சாந்தி எழுதிய கடிதமும் இதே உருக்கத்துடன், ஆழமான எதிர்பார்ப்புடன் எழுதப்பட்டுள்ளது. அக்கடிதமும் இப்புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்த ராஜிவ் கொலை என்பது நன்கு திட்டமிடப்பட்டு நடந்தது என்ற போதிலும், இது கொலையாளிகளின் வெற்றியா என்று யோசித்தால், வருத்தம் தோய இல்லை என்றே சொல்லவேண்டியிருக்கிறது. நிஜமாக இது ஓர் இந்தியத் தோல்வி. பெரும்பாலான இந்திய மனங்களில் புரையோடிப் போயிருக்கும், இந்திய தேசிய குணமான அலட்சிய மனோபாவமே ராஜிவ் காந்தியைக் கொன்றது எனலாம். இதற்கு உதவியிருப்பது - உளவுத் துறையின் இயலாமை.
ராஜிவ் காந்தி கொல்லப்படுவதற்கு முன்பு, ராஜிவ் காந்திக்கு யார் யாரால் ஆபத்து ஏற்படலாம் என்று உளவுத்துறை சொன்ன பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் இல்லை. ராஜிவ் இறந்த பின்பு, சிபிஐ கொலையாளிகள் விடுதலைப் புலி அமைப்பினர்தான் என்று ஆதாரத்தோடு நெருங்கிவிட்ட நிலையிலும் கூட, விடாமல் உளவுத்துறை ‘இதற்கும் விடுதலைப் புலி அமைப்பிற்கும் தொடர்பு இல்லை’ என்று சொல்லி வந்திருக்கிறது! ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு வந்த விமானம் தாமதமாக வருவது கொலையாளிகளுக்குத் தெரிந்திருக்கும் நேரத்தில் காவல்துறைக்குத் தெரிந்திருக்கவில்லை!
ராஜிவ் காந்தி என்னும் ஒரு முன்னாள் பிரமருக்குத் தரப்பட்ட பாதுகாப்பின் லட்சணம் உலகம் பார்க்காதது. மாலையிட வரும் நபர்களை சாதாரண மெட்டல் டிடெக்டர் வைத்துச் சோதித்திருந்தாலே இப்படுகொலையைத் தவிர்த்திருக்கலாம் என்று ஆதங்கப்படுகிறார் ரகோத்தமன். ‘ஹியூமன் பாம்’ என்னும் சிடி ஒன்றை ரகோத்தமன் தயாரித்து வெளியிட்டிருந்தார். அதில் ராஜிவ் கலந்துகொண்ட பூந்தமல்லி கூட்டத்தைப் பற்றிய காட்சிகளைப் பார்த்தேன். அதிலும், முன்னாள் பிரதமருக்கு, கொலை செய்யப்படலாம் என்ற ஆபத்து எப்போதும் சூழ்ந்துள்ள முக்கியத் தலைவர் ஒருவருக்குத் தரப்படும் பாதுகாப்பின் லட்சணத்தைப் பார்த்தேன். இது போன்ற சிக்கல்களை, தலைவர்களும் தொண்டர்களின் மீதான அன்பு என்ற பேரில் தாங்களே தருவித்துக்கொள்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை என்றாலும், இக்கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளியே, நமது அதிகாரிகளின் ரத்தத்தோடு கலந்துவிட்ட அலட்சியம் என்னும் மனோபாவம்தான் என்பதில் சந்தேகமில்லை எனலாம்.
புத்தகம் என்கிற அளவில் இப்புத்தகத்தில் உள்ள குறைகளைச் சொல்லவேண்டும் என்றால், இப்புத்தகத்தில் வரும் நாடகத்தனமான சில வசனங்களைச் சொல்லலாம். சில இடங்களில் தோன்றும் இதுபோன்ற தன்னிலை வெளிப்பாடுகள், இப்புத்தகத்தின் சீரியஸ்தன்மையைக் குறைக்கிறது. அதுவே, ஒரு வாக்குமூலமாக வெளிப்படும்போது கடும் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது என்பதையும் சொல்லவேண்டும்.
ராஜிவ் கொலை வழக்கு பற்றிய புத்தகம், கொலை வழக்கு சதி பற்றிய பல்வேறு சந்தேகங்களைத் தீர்க்கும் அதே வேளையில், சில புதிய சர்ச்சைகளையும் உருவாக்கும் வாய்ப்புள்ளது.
ராஜிவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்,
ஆசிரியர்: ரகோத்தமன் (தலைமைப் புலனாய்வு அதிகாரி - சிபிஐ ஓய்வு)
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
விலை: ரூபாய் 100
தொடர்பு: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18. தொலைபேசி: 4200-9601.
(நன்றி: புத்தகம் பேசுது மாத இதழ்.)
5 comments:
பிரசன்னா,
நல்ல பதிவு. பகிர்விற்கு நன்றி.
//சில புதிய சர்ச்சைகளையும் உருவாக்கும் வாய்ப்புள்ளது.//
அப்படியெல்லாம் அப்பாவித்தனமாக எதிர்பார்க்காதீர்கள். ஒன்றுமே நிகழாது. அதுதான் இத்தனை வருட இந்திய ஜனநாயகத்தின் பலனாக நாம் அடைந்திருப்பது . ஒரு பரபரப்பை ஏற்படுத்தி அடங்குவதைத் தவிர [ofcourse புத்தக விற்பனையும்தான் :-)]வேறொன்றையும் இந்த நூல் சாதிக்கப் போவதில்லை.
புத்தக அறிமுகத்துக்கு நன்றி!!
அருமையான பதிவு. எனக்குத் தெரிந்து மிக அருமையான விமர்சனம் எல்லாத்தரப்பிலிருந்தும் வந்தது இந்தப் புத்தகத்திற்காக மட்டும்தான் என நினைக்கிறேன்.
ஜெயக்குமார்
நானும் இந்தப் புத்தகத்தை ஆர்வத்துடன் வாங்கிப் படித்தேன்..
நல்ல விசாரணை அதிகாரியாக இருந்திருக்கலாம்.. ஆனால் எழுத்து அமெச்சூர் என்பேன்
Thanks for the introdustion
Post a Comment