Friday, August 12, 2011

வாஸவேச்வரம் - காமம் விளையும் நிலம்


வாஸவேச்வரம் நாவலை வாங்கி வைத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. சென்ற வாரம்தான் திடீரென்று அதனைப் படிக்கவேண்டும் என்று தோன்றியது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல். பெண்கள் எழுதிய நாவல்கள் இதுவரை எத்தனை படித்திருக்கிறேன் என்று யோசித்துப் பார்த்தால் ஒன்றிரண்டுதான் நினைவுக்கு வருகின்றன. சுமதியின் கல்மண்டபம், ஹெப்சிகாவின் புத்தம் வீடு. இன்னும் சில படித்திருக்கலாம், நினைவுக்கு வரவில்லை. பெண்கள் எழுதிய நாவலைப் படிக்கிறோம் என்னும்போதே அந்நாவல் பெண்ணியக் கருத்துகளை மிக வெளிப்படையாய்ப் பேசுமோ என்ற அச்சம் உள்ளே இருக்கிறது. பேசினால் என்ன தவறு? தவறொன்றுமில்லை. எனக்கு அச்சம். அவ்வளவுதான். இது தவறான அச்சமாகவே இருக்கலாம். ஒருவேளை இதற்கான நியாயமும் இருக்கக்கூடும். ஆனால் அச்சம் இருப்பதென்னவோ உண்மைதான். வாஸவேச்வரத்தில் இந்தப் பிரச்சினைகள் எழவில்லை. இந்நாவலை பெண்ணியப் பிரதியாகவே வாசிக்கமுடியும். ஆனால் அது ஒருவகையில் நாவலை குறுக்கிவிடும். எப்படி ஆண் எழுதிய நாவல் ஒன்றை வெளிப்படையாக வாசிக்கிறோமோ அப்படியே இந்நாவலையும் வாசிப்பதுதான் இந்நாவலுக்குச் செய்யும் மரியாதை.

கிருத்திகா தான் கண்ட 3 கிராமங்களைக் கொண்டு ஒரு புதிய கிராமத்தை உருவாக்கியிருக்கிறார். வாஸவேச்வரம் என்ற அக்கிராமத்திலுள்ள பிராமணக் குடும்பங்களுக்கு இடையேயான கதையே நாவல். நான் சிறிய வயதில் ஒரு சில அக்ரஹராகத்தில் இருந்தபோது அக்ரஹாரத்தில் நிலவும் பேச்சுக்களுக்களின் அடிநாதமாக பாலுறவே இருப்பதைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலான சமயங்களில் அது மறைமுகமாகவும், சில சமயங்களில் வெளிப்படையாகவும் இருக்கும். இந்நாவலில் அப்படிப்பட்ட பாலியல் ஒழுக்கங்களும் ஒழுக்க மீறல்களும் முன்வைக்கப்படுகின்றன. இதற்குத் தேவையான காரணத்தை புராணங்களில் இருந்து அம்மக்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். புராணக் கதைகளில் பாலுறவுக் காட்சிகள் சொல்லப்படும்போதெல்லாம் கிராமத்தில் இரவு வெப்பம் மிகுந்ததாகவே இருக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்னும் மரபெல்லாம் புராணக் கதைகள் தரும் எழுச்சியில் காணாமல் போகிறது.

40 அல்லது 50 வருடங்களுக்கு முன்பு நடந்த கதை என்பதுதான் நாவல் எனக்குத் தந்த பிம்பம். ஆனால் நாவலின் முன்னுரையில் பெருந்தேவியோ நாவல் நடந்த காலகட்டம் 1930கள் எனச் சொல்லியிருக்கிறார். எனக்கு நாவலின் காலகட்டம் குழப்பமாகவே உள்ளது. 1930கள் எனக்கொண்டால், சுந்தரப் போராட்டம் பற்றியோ காந்தியைப் பற்றியோ வெள்ளையர்களைப் பாராட்டியோ எதிர்த்தோ நாவலில் எந்த கதாபாத்திரமும் எப்படிப் பேசாமல் இருந்திருப்பார்கள் என்பது பெரிய கேள்வியாக உருவெடுக்கிறது. பெண்கள் தங்களுக்குள் நல்ல படிப்பு படித்து நவீன வாழ்க்கை வாழவேண்டும் என்று எண்ணியதாகவெல்லாம் நாவலில் வருகிறது. 30களில் எத்தனை பெண்கள், அதுவும் கட்டுப்பெட்டித்தனமாக வளர்க்கப்பட்டு சிறிய வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்படும் பிராமணப் பெண்கள் இப்படி நினைத்திருபபார்கள்? கம்யூனிஸ்ட்டுகள் கூடி கூடிப் பேசுகிறார்கள். அவர்களும் சுதந்திரம் பற்றியோ வெள்ளையர்கள் பற்றியோ வாயே திறப்பதில்லை. 1960கள் என்று கொண்டால் மட்டுமே கிருத்திகா எழுதியிருப்பது பொருந்திவருகிறது.

கதை நடந்த காலகட்டத்தில் பிராமணர்களுக்குள்ளேயே எட்டிப் பார்த்த கம்யூனிசமும் முற்போக்கும் அதற்கு வரும் எதிர்ப்பும் இந்நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முற்போக்கு மிக எளிதாகத் தோற்கடிக்கப்பட்டும்விடுகிறது. அதிலும் பிறன்மனைப் பெண்ணொருத்திக்காக தனது எல்லாக் கொள்கைகளையும் விட்டுவிடுபவனாகவே முற்போக்காளன் பிச்சாண்டி வருகிறான். அவனது முற்போக்குத்தனத்தைக்கூட வாஸவேச்வரத்தின் மரபு கட்டிப் போட்டுவிடுகிறது. மிக எளிதான சதியில் அவனது கூட்டாளிகளே அவனுக்கு எதிராகப் போகவும் அவன் தன் வழி பார்த்துக்கொண்டு போக முடிவெடுக்கிறான்.

புராணக் கதைகளை கதாகாலக்ஷேபமாகச் சொல்லும் ஐயருக்கும் தொடுப்பு உண்டு. சொல்லப்போனால் எல்லா ஆண்களுக்குமே ஏதோ ஒரு வகையில் மோகம் கரைபுரண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. தன்னால் எதுவும் முடியாது என்று நினைக்கும் ஆணிலிருந்து தனக்கு சமம் யாரும் இல்லை என்று நினைக்கும் ஆண்வரை மனதில் எப்போதும் காமத்தையே சுமந்து திரிகிறார்கள். பெண்களும் அப்படியே.

ஒரு கொலை நிகழ்ந்துவிடவும் நாவல் தேவையற்ற விவரிப்புகளில் அலைபாய்கிறது. அதுவரை அந்நாவல் கொண்டிருந்த இறுக்கமும் நோக்கமும் சிதைந்துவிடுகிறது. விச்சுவின் கணவன் தற்கொலை செய்துகொள்வதும், பிச்சாண்டி தியாகியாவதும் நாடகத்தன்மை வாய்ந்த காட்சிகளாகிவிடுகின்றன. இறுதியில் வரும் பாட்டாவைப் பற்றிய விவரணைகளும் இப்படியே. இவற்றையெல்லாம் வாசகர்களின் கவனத்துக்கே விட்டிருக்கலாம். ஆனால் 40 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல் என்ற எண்ணத்தோடு வாசிக்கும்போது இதனைப் பெரிய பிழையாகக் கொள்ளமுடியாது என்பதும் உண்மையே.

நாவல் முழுக்கப் பயன்படுத்திருக்கும் பிராமணப் பேச்சு வழக்கு கச்சிதம். இத்தனை கச்சிதமாக பிராமண வழக்கு கையாளப் பட்டிருக்கும் நாவல்கள் குறைவாகவே இருக்கமுடியும். சில இடங்களில் வாஸவேச்வரத்துக்கென்றே பிரத்யேக பிராமண வழக்கும் உண்டோ என்றெல்லாம் நினைக்கும் அளவுக்கு மொழியை அபாரமாகப் பயன்படுத்தியிருக்கிறார் கிருத்திகா. முதல் இரண்டு மூன்று பக்கங்கள் படிக்க வித்தியாசமான சூழலைக் கொடுக்கும் நாவல் பிற்பாடு நம்மோடு சேர்ந்துவிடுகிறது. ஏற்கெனவே பழக்கப்பட்ட மொழியைப் போல நாமும் விரைவாகப் படித்துக்கொண்டு போகமுடிகிறது.

மிக நேரடியான நாவல். முக்கியமான நாவலும் கூட.

வாஸவேச்வரம், நாவல், கிருத்திகா, காலச்சுவடு வெளியீடு, விலை: 140 ரூ, ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-074-0.html

Tuesday, August 9, 2011

சமச்சீர்க் கல்வி - இன்று தீர்ப்பு

சமச்சீர் கல்வி தீர்ப்பு இன்று வருகிறது. ஆகஸ்ட் 2, பின்பு 10ம் தேதிக்குள் புத்தகங்கள் தரப்படவேண்டும் என்று சொல்லி இதுவரை தரப்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டும் இதற்கும் ஒன்றும் செய்ததாகத் தெரியவில்லை. பாடப் புத்தகங்களைத் தரவேண்டும் என்று சொல்லிவிட்டதால் சமச்சீர்க் கல்வி இந்த ஆண்டே வரவேண்டும் என்றுதான் தீர்ப்பு வரும், எதிராக வர வாய்ப்பில்லை.

ஒருவேளை எதிராக வந்து, அடுத்த ஆண்டுமுதல் சம்ச்சீர்க் கல்வி, வேறு புதிய பாடங்களுடன் என்று தீர்ப்பு வந்தால், மகிழ்ச்சி! இல்லை என்றால், பசங்களுக்கு படிக்க எதாவது இப்பவாவது கிடைச்சதே என்னும் வகையிலும் கொஞ்சமே கொஞ்சம் மகிழ்ச்சியே… 2 மாதங்கள் படிக்காமல் போய்விட்டதால் பசங்க படிப்பே வீணாகப் போச்சு என்று சொல்வதில் கொஞ்சம் உடன்பாடு உண்டுதான் என்றாலும் முழுக்க உடன்பாடில்லை. நான் 8ம் வகுப்பு படித்தபோது 2 மாதங்கள் ஆசிரியர் ஸ்டிரைக் நடந்தது. +2 படித்த போது 2 மாதங்களுக்கும் மேலாக ஸ்டிரைக் நடந்தது. எப்படியோ எதையோ படித்துக்கொண்டிருந்தோம்! பெரிய அளவில் நஷ்டம் நேர்ந்ததாகத் தெரியவில்லை. ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போதும் இப்படி 2 மாதங்கள் பள்ளிகள் செயல்படவில்லை என்கிறார்கள். நிச்சயம் இது சரியான வழி அல்ல. குடிமூழ்கிப் போகக்கூடியதும் அல்ல. இந்த இரண்டு மாதங்களில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் இலக்கணத்தை உருப்படியாகக் கற்றுக் கொடுத்திருக்கலாம். பாடங்களைப் படிப்பது எப்படி என்றும், அதனை சுவாரயஸ்மாக அணுகுவது எப்படி என்றும் சொல்லித் தந்திருக்கலாம். இதற்கெல்லாம் பொதுவாக ஆசிரியர்களுக்கு நேரமே இருக்காது. கிடைத்த நேரத்தில் இதனைச் செய்திருக்கலாம். முதலில் இதுவெல்லாம் ஆசிரியர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்பதே நம் ஆசிரியர்களின் அடிப்படைப் பிரச்சினை.

இந்த ஆண்டு இதே சமச்சீர்ப் பாடங்கள் என்று தீர்ப்பு வந்தாலும், அடுத்த ஆண்டே இந்தப் பாடங்களை ஜெ. அரசு மாற்றவேண்டும். சமச்சீர்க் கல்வியை வைத்துக்கொண்டு சரியான பாடங்களோடு அதனைக் கொண்டு செல்லவேண்டும். பாடத் திட்டங்களை சரியாக்குகிறோம் என்று இன்னும் மோசமாக ஆக்காமல் இருப்பார்களாக என்று நம்புவோம்!

என்ன தீர்ப்பு வந்தாலும் அதனை ஏற்போம் என்று ஜெ சொல்லியிருப்பது நல்லது. வேறு வழியில்லை என்னும்போது இப்படித்தான் பேசவேண்டும். :-) இதனை ஒரு மாதத்துக்கு முன்பே சொல்லத் துவங்கி இருக்கவேண்டும். இதனைச் சொல்லிக்கொண்டே, சமச்சீர்க் கல்வியின்படித் தயாரிக்கப்பட்ட பாடங்களுக்கு எதிரான கருத்துகளை நீதிமன்றத்தில் சொல்லிக்கொண்டிருந்திருக்கவேண்டும். அரசியலை இன்னும் திறமையாகச் செய்யப் பழகவேண்டும் ஜெ. இரண்டாவது முறை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தபோதே இந்த ஆண்டே சமச்சீர்க் கல்வியை அரசு செயல்படுத்தும் என்று அரசு முடிவெடுத்திருந்தால், மக்களிடையே எழுந்துள்ள அதிருப்தியைக் கொஞ்சம் தவிர்த்திருந்திருக்கலாம். தொடர்ந்து உச்சநீதி மன்றத்தில் வழக்காடியது நிச்சயம் தவறல்ல. கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பது சரிதான். ஆனால் மக்களின் நிலையையும் கொஞ்சம் கவனத்தில் கொள்வது நல்லது. இனி இது தேவையில்லை. இன்றுதான் தீர்ப்பு வரப்போகிறதே. இந்த தொடர் வழக்கால் மக்கள் மத்தியில் இருக்கும் அதிருப்தி ஜெயலலிதாவுக்கு எதிராக மாறும் என்று நான் நம்பவில்லை. பார்க்கலாம்.

தொடர்ந்து வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது, அடிக்கடி எதையாவது சொல்லாமல், தேவையற்ற விவாதங்களைச் செய்யாமல், மௌனமாக, அதே சமயம் தெளிவாக நீதிமன்றத்தில் மட்டும் அரசு பேசியது நல்ல விஷயம். இதனையே எல்லா விஷயத்திலும் ஜெ கடைப்பிடிக்கவேண்டும். செயல்பாடே முக்கியம் என்னும் விஷயத்தை மக்கள் மனத்தில் பதிய வைக்க யோசிக்கவேண்டும். இல்லையென்றால் ஓட்டுப் போடாமல் விட்டுவிடுவார்கள்.

சமச்சீர்க் கல்வி வழக்கு தீர்ப்பு வருவதையொட்டி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துச் சொல்வதா வருத்தங்கள் சொல்வதா என்று தெரியவில்லை என்பதால் என்னவோ ஒண்ணு என்று மட்டும் சொல்லி வைக்கிறேன்.

உறுமி திரைப்பார்வை

http://www.tamiloviam.com/site/?p=1723

Monday, August 8, 2011

தெய்வத் திருமகள் - காப்பி அண்ட் பேஸ்ட்

இந்தத் திரைப்படமே ஒரு மோசடி. ஐம் சாம் படத்தை அப்படியே உருவியிருக்கிறார்கள். இப்படி உருவிவிட்டு தனது பெயரை இயக்குநர் என்று போட்டுக்கொள்ள ஒரு மாதிரியான கல்நெஞ்சோடு பிறந்தால்தான் முடியும். விஜய் செய்த முதல் தவறு இது.

நான் இன்னும் ஐம் சாம் பார்கக்வில்லை. இந்தப் படம் பார்த்துவிட்டு வந்த இரவு யூ ட்யூபில் சும்மா அரை மணி நேரம் பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது, இந்தப் படத்துக்கு ஐம் சாம் இயக்குநர் எத்தகைய ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கிறார் என்பதும், தமிழில் இதனை விஜய் எப்படி சீரழித்திருக்கிறார் என்பதும். அரை மணி நேரம் பார்த்ததுக்கே இத்தனை கோபம் வந்துவிட்டது. எனவேதான் இது. :-)

யோசனை என்பதே இல்லை. ஐம் சாமின் ஹீரோவின் ஹேர் ஸ்டைலைக்கூடவா காப்பி அடிப்பார்கள்? ஐம் சாம் படத்தின் ஹீரோ மெண்டல்லி ரிடார்ட்டாக இருந்தாலும், அதிலும் அவருக்கு ஒரு மெச்சூரிட்டி இருந்தது. இந்தக் குணமே அந்தப் படத்தின் பல கேள்விகளுக்கு லாஜிக்காக பதில் சொன்னது. ஆனால் தமிழ்ப்படத்தில் விக்ரமுக்கு கொஞ்சம்கூட மெச்சூரிட்டி இல்லை. இயக்குநருக்கு மெச்சூரிட்டி இருந்தால்தானே நடிகருக்கு வர! ஆனால் இதனை இயக்குநரின் தவறாகவே பார்க்கமுடியும்.

திரைக்கதை நன்றாக உள்ளது என்று சிலர் சொல்லியிருந்தார்கள். திரைக்கதை தமிழில் படு சொதப்பல். படத்தை ஓட்டத் தெரியாமல், விக்ரமுக்கும் தனது மனைவிக்கும் கள்ளத் தொடர்பு உள்ளதோ என்று பாஸ்கர் அலைகிறார். அதில் கொஞ்ச நேரம் காமெடி காட்சிகள். இதில் எதாவது லாஜிக் உள்ளதா? ஆனால் மக்களை சிரிக்க வைக்க வேண்டுமாம். சாட்சி சொல்லப் போகும் பாஸ்கரைக் கண்டுபிடிக்க இன்னொரு அரை மணி நேர அறுவை. இதுவே ஒரு கிரேஸி மோகன் படத்தில் வந்திருந்தால் அது வேறு. இந்தப் படம் அப்படிப்பட்ட படமா? விக்ரமுக்கு மெண்டல்லி ரிடார்ட். ஆனால் பாடத் தெரியும். குழந்தை பெற்றுக்கொள்ளத் தெரியும். இதற்கு ஒரு வசனமும் உண்டு, ஒரு சம்பவம் நடக்கும்போது அது என்னன்னு ஒருத்தருக்குத் தெரிஞ்சா போதாதான்னு. அவருக்குப் பிறக்கும் குழந்தை தன் அப்பாவை பைத்தியம் இல்லை என்று சொல்லும். ஐம் சாமில் ஒரு காட்சியில், ஒரு சிறுவன் கேட்கிறான், உங்க அப்பா மெண்டல்லி ரிடார்டா என்று. அவள் சொல்கிறாள், ஆமாம். அப்ப நீ என்கிறான் சிறுவன். அவள் இல்லை என்கிறாள். எத்தனை தெளிவான திரைக்கதை பாருங்கள். குழந்தை தன் அப்பா மெண்டல்லி ரிடர்ட் என்பதைப் புரிந்துகொண்டு, அதனை ஏற்றுக்கொண்டு பேசுகிறது. இத்தனை தெளிவு தமிழ்ப்படத்தில் இருக்கிறதா?

ஐம் சாமில் மெண்டல்லி ரிடார்டாக இருப்பவரை வெறும் பைத்தியமாகக் காட்டி நோகடிக்கவில்லை. அவர் தன் குழந்தையுடன் சேர்ந்து வீட்டில் பாடங்களைப் படிக்கப் பார்க்கிறார். ஆனால் தமிழில்? விக்ரம் பைத்தியமேதான். அவருக்குத் தெரிந்ததெல்லாம் கையைத் தூக்கி தூக்கிப் பேசுவதுதான். அதுவும் மிஸ்டர் பீன் மற்றும் சிப்பிக்குள் முத்து கமலின் உடல் மொழியே.

அடுத்து வரும் கோர்ட் காட்சிகள். அனுஷ்காவின் கேரக்ட்ரை இத்தனை கேணத்தனமாக யாரும் உருவாக்க முடியாது. கூடவே வரும் கிறுக்கன் கேரக்டராக சந்தானம். இன்னொரு கிறுக்கனாக வரும், உதவும் வக்கீல். அத்தனை பெரிய வக்கீல் நாசரிடம் இருக்கும் உதவியாளரை தனக்கு வேவு பார்க்கச் சொல்வார்களாம். அப்படியாவது அவன் வேவு பார்த்துச் சொன்னது என்ன என்றால், ஒன்றுமே இல்லை. இதை வைத்துக்கொண்டு அரை மணி நேரம் குட்டிக்கரணம்.

அடுத்து நாசர் கேரக்டர். மிகப் பெரிய வக்கீலாம். ஆனால் அவருக்கு விகரமை மனநிலை சரியில்லாதவர் என்று கோர்ட்டில் நிரூபிக்கத் தெரியாதாம். ஏனென்றால் அனுஷ்காதான் ஹீரோயின். இவர் என்ன செய்வார்! தலையெழுத்து. கடைசியில் விக்ரம் மெண்டல்லி ரிடார்ட் இல்லை என்று ஒப்புக்கொண்டு விடுவாராம். விக்ரமும் குழந்தையும் சந்திக்க ஒரு மணி நேர அவகாசமாம். அந்தக் காட்சியில்தான் எத்தனை குழப்படி! அதில் விக்ரம் ஓடி வந்து விழும் காட்சி அப்படியே ஐம் சாமில் உள்ளது. தமிழ்த்தனமாக விழக்கூடவா தமிழனுக்குச் சுயபுத்தி இல்லை?

கோர்ட்டில் இரண்டு பேர் லூசுத்தனமாகப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஒருவர் நாமம் போட்டிருக்கிறார், இன்னொருவர் பட்டை அடித்திருக்கிறார். ஏன், அங்கே சைவ வைணவ விவாதமா நடக்கிறது?

மெண்டல்லி ரிடார்ட் விக்ரம்தான் பாட்டுப் பாடி நம்மைக் கொல்கிறார் என்றால், வக்கீலும் விக்ரமுடன் டூயட் பாடுகிறது. இந்த தமிழ் சினிமா விளங்கவே விளங்காதா? எந்த ’நல்ல பட’ இயக்குநராவது இப்படி ஒரு டூயட் காட்சி வைப்பாரா? கேட்டால் சமரசம் என்பார்கள்.

கடைசி காட்சியில் விக்ரமே குழந்தையை ஒப்படைத்துவிடுவாராம். கொடுமை. யார் மெண்ட்டல்லி ரிடார்ட்? நாமா? விக்ரமா?

விக்ரமுக்கும் குழந்தைக்குமான அன்னியோன்யம் குழந்தையின் பார்வையில் சரியாகப் பதியப்படவே இல்லை. உண்மையில் அதுதான் நம்மை நெகிழ்ச்சியின் உச்சத்துக்கே அழைத்துச் சென்றிருக்கும். அது இல்லாததால் கிளைமாக்ஸில் ஆச்சரியம் மட்டுமே மிஞ்சுகிறது. (இதுதான் நடக்கும் என்று யூகம் செய்துவிடும் என்னைப் போன்றவர்களுக்கு அதுவும் மிஸ்ஸிங்!) மனதில் ஒரு பதற்றம் ஏற்படவில்லை.

படம் முழுக்க ஓவர் ஆக்ட்சிங் செய்தால் மக்களுக்குப் பிடித்துவிடும் என்பது நம் மரபு. அப்படியே செய்திருக்கிறார் விக்ரம். பைத்தியமாக நடிப்பது சும்மா அசட்டுத்தனமாக அலட்டுவது என்று நமக்குப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், நம்ம ஊர் மெண்டல்லி ரிடார்டுகளெல்லாம் அழகானவர்களாகவும் அப்சரஸ்களாகவும் உலவும் ரகசியமும் புரிபடுவதில்லை. கமல், ஸ்ரீதேவி, ராதிகா, அஞ்சலியில் வரும் குழந்தை - இப்படி மெண்டல்லி ரிடார்டுகள் அழகானவர்களாகவே இருந்துவிடுகிறார்கள். ஆனால் விக்ரமுக்கு நண்பர்களாக வரும் 3 மெண்டல்லி ரிடார்டுகளில் ஒருவர்கூட அழகில்லை. அது எப்படி அப்படி ‘அமைந்துவிடுகிறது’ எனத் தெரியவில்லை.

இந்தத் திரைக்கதை படத்தை மனத்தில் வைத்து எழுதப்படவில்லை. மக்களை மனத்தில் வைத்து எழுதப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தில் சுயம் இல்லை. தமிழில் வரும் பெரும்பாலான படங்களில் சுயம் இல்லை. குறைந்தபட்சம் உலகெங்கும் எடுக்கப்படும் கதையை இங்கே எடுக்கிறார்கள் என்றாவது அமைதிகொள்ள முடிந்தது. இப்படத்தில் ஒரு படத்தையே அப்படியே சுட்டிருக்கிறார்கள். இது நிச்சயம் ஏமாற்று வேலை. அத்திரைப்படத்துக்கான கிரெட்டிட்டைக் கொடுக்கவில்லை என்பது இது மோசடியே என்பதை நிரூபிக்கிறது.

மோசமான திரைப்படங்களுக்கு மத்தியில் சுமாரான படங்களை வரவேற்பதே நமது தலைவிதி ஆகிவிட்டது. அதனால்தான் அழகர்சாமியின் குதிரை, தெய்வத் திருமகள், மைனா எல்லாம் பெரிய வரவேற்பைப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுப் போகிறது. அழகர்சாமியின் குதிரை, மைனாவிலாவது மண் சார்ந்த சுயம் என்பது கதையளவில் இருந்தது. இதில் அதுவும் இல்லை.

இத்திரைப்படத்தின் சில ப்ளஸ்கள்: ஒரு முயற்சி என்ற அளவில் - மனதைக் கல்லாக்கிக்கொண்டு - வரவேற்பது. குழந்தையாக வரும் பெண்ணின் மாசு மருவற்ற முகமும் அதன் நடிப்பும். கிளைமாக்ஸ் கோர்ட் காட்சியில் விக்ரமின் நடிப்பு. ஆரிரோ ஆராரிரோ எனும் நெஞ்சை அள்ளும் பாடல். (இந்தப் படத்தில் இரண்டு பாடல்களைச் சுட்டிருக்கிறார் ஜி.வி. பிரகாஷ். இயக்குநர் ஜாடிக்கேத்த நல்ல ஜிவி பிரகாஷ் மூடி!) நல்ல ஒளிப்பதிவு. நாசர், அனுஷ்கா, அமலா பாலின் நடிப்பு. இவ்வளவுதான். இதை இவர்கள் எந்தப் படத்திலும் செய்துவிடுவார்கள்.

மனதைக் கல்லாக்கிக் கொண்டேயானாலும், தெய்வத் திருமகள் போன்ற ஓர் அப்பட்டமான காப்பியை நாம் வரவேற்பதுகூட நிச்சயம் தவறுதான். கலைக்கு செய்யும் அவமரியாதை.

Saturday, July 23, 2011

காஞ்சனா - விடாது தமிழ்ப்பேய்

* தமிழில் பேய்ப்படங்கள் எப்படி இருக்கவேண்டுமோ அப்படியே இருக்கிறது காஞ்சனா. பயமே இல்லாமல் பார்க்கலாம். :-)

* அதே சரக் சரக் பேய், திடும் திடும் பேய். அதே தமிழ்ப்பேய். அதே ஓவர் ஆக்டிங் பேய். எல்லாம் சரி. கதையுமே அதுவேயா? முனி1ஐ அப்படியே எடுத்திருக்கிறார்கள். ஃப்ளாஷ் பேக் கதையை மாற்றிவிட்டார்கள். முனி1ன் ஸ்பெஷல் என்னவென்றால், அதற்கு முன்னர் வந்த பல பேய்ப்படங்களைப் போலவே அதுவும் எடுக்கப்பட்டிருந்ததுதான்.

* கமல்ஹாசன் நடித்து தேசிய விருது பெறுவார் என்று 1990களில் இருந்து நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அரவாணி கேரக்டரை சரத்குமார் பண்ணியிருக்கிறார். நடிக்கவே வரவில்லை. பிரகாஷ் ராஜ், சரத்குமார் என இவர்கள் நடிக்கவே வராமல் அரவாணி போல் நடிப்பதைப் பார்க்கவேண்டியிருக்கிறது. இவர்களுக்கு இப்படி நடிக்க தைரியமாவது இருக்கிறது. கமலுக்கு எப்போது வருமோ.

* ஒரே ஆறுதல் அரவாணிகளை அசிங்கப்படுத்தாமல் உயர்ந்த நோக்கில் காட்டியிருப்பது. அரவாணிகளைப் பற்றிய ஓர் உண்மையான திரைப்படம் வரும்வரையில் இது போன்ற முயற்சிகளைப் பாராட்டிக்கொண்டிருக்கவேண்டியதுதான்.

* முனி1க்கும் 2க்கும் வித்தியாசம் காட்ட, அரவாணி, இஸ்லாமியப் பேய் ஓட்டும் முறை என்று என்னவோ காட்டிவிட்டார்கள்.

* அநியாயத்துக்கு படம் நீளம். இடைவேளைக்குப் பிறகுதான் காஞ்சனாவே வருகிறாள். இதுகூட ஓகே. கொலை, ஃப்ளாஷ்பேக் எல்லாமே இடைவேளைக்குப் பிறகு என்றால் ஒரு மனுஷன் தாங்கவேண்டாமா ஐயா?

* முனி1ல் எப்படி நடித்தாரோ அதையே மீண்டும் நடித்துவிட்டுப் போய்விட்டார்கள் ராகவா லாரன்ஸும், கோவை சரளாவும். நல்லவேளை, வினுச்சக்கரவர்த்தையைக் கொன்றுவிட்டார்கள்.

* பாடல்கள் இது பேய்ப்படம்தான் என்பதை உறுதி செய்கின்றன. பின்னணி இசையும் அப்படியே.

* முனி1 பெரிய ஹிட் இல்லை. ஆனால் இந்தப் படம் ஹிட்டாகும் வாய்ப்பு இருக்கிறது. சில இடங்களில் வாய்விட்டு சிரிக்க முடிகிறது. கொஞ்சம் எடிட் செய்து டிரிம்மாக்கி இருந்தால் நிச்சயம் பெரிய ஹிட் ஆகியிருக்கும்.

* படத்தின் உச்சகட்ட திகில் காட்சி கடைசி ஸ்லைடுதான். முனி3 வருமாம். கிறித்துவப் பேய் ஓட்டும் முறை மீதி உள்ளது என்னும்போது ராகவா லாரன்ஸை என்ன குற்றம் சொல்லமுடியும். 3 முக்கிய மதங்களை மட்டுமே நமக்குக் கொடுத்த அந்த இறைவன்தான் எவ்வளவு கருணைக்குரியவன்.