Showing posts with label திரை. Show all posts
Showing posts with label திரை. Show all posts

Monday, August 8, 2011

தெய்வத் திருமகள் - காப்பி அண்ட் பேஸ்ட்

இந்தத் திரைப்படமே ஒரு மோசடி. ஐம் சாம் படத்தை அப்படியே உருவியிருக்கிறார்கள். இப்படி உருவிவிட்டு தனது பெயரை இயக்குநர் என்று போட்டுக்கொள்ள ஒரு மாதிரியான கல்நெஞ்சோடு பிறந்தால்தான் முடியும். விஜய் செய்த முதல் தவறு இது.

நான் இன்னும் ஐம் சாம் பார்கக்வில்லை. இந்தப் படம் பார்த்துவிட்டு வந்த இரவு யூ ட்யூபில் சும்மா அரை மணி நேரம் பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது, இந்தப் படத்துக்கு ஐம் சாம் இயக்குநர் எத்தகைய ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கிறார் என்பதும், தமிழில் இதனை விஜய் எப்படி சீரழித்திருக்கிறார் என்பதும். அரை மணி நேரம் பார்த்ததுக்கே இத்தனை கோபம் வந்துவிட்டது. எனவேதான் இது. :-)

யோசனை என்பதே இல்லை. ஐம் சாமின் ஹீரோவின் ஹேர் ஸ்டைலைக்கூடவா காப்பி அடிப்பார்கள்? ஐம் சாம் படத்தின் ஹீரோ மெண்டல்லி ரிடார்ட்டாக இருந்தாலும், அதிலும் அவருக்கு ஒரு மெச்சூரிட்டி இருந்தது. இந்தக் குணமே அந்தப் படத்தின் பல கேள்விகளுக்கு லாஜிக்காக பதில் சொன்னது. ஆனால் தமிழ்ப்படத்தில் விக்ரமுக்கு கொஞ்சம்கூட மெச்சூரிட்டி இல்லை. இயக்குநருக்கு மெச்சூரிட்டி இருந்தால்தானே நடிகருக்கு வர! ஆனால் இதனை இயக்குநரின் தவறாகவே பார்க்கமுடியும்.

திரைக்கதை நன்றாக உள்ளது என்று சிலர் சொல்லியிருந்தார்கள். திரைக்கதை தமிழில் படு சொதப்பல். படத்தை ஓட்டத் தெரியாமல், விக்ரமுக்கும் தனது மனைவிக்கும் கள்ளத் தொடர்பு உள்ளதோ என்று பாஸ்கர் அலைகிறார். அதில் கொஞ்ச நேரம் காமெடி காட்சிகள். இதில் எதாவது லாஜிக் உள்ளதா? ஆனால் மக்களை சிரிக்க வைக்க வேண்டுமாம். சாட்சி சொல்லப் போகும் பாஸ்கரைக் கண்டுபிடிக்க இன்னொரு அரை மணி நேர அறுவை. இதுவே ஒரு கிரேஸி மோகன் படத்தில் வந்திருந்தால் அது வேறு. இந்தப் படம் அப்படிப்பட்ட படமா? விக்ரமுக்கு மெண்டல்லி ரிடார்ட். ஆனால் பாடத் தெரியும். குழந்தை பெற்றுக்கொள்ளத் தெரியும். இதற்கு ஒரு வசனமும் உண்டு, ஒரு சம்பவம் நடக்கும்போது அது என்னன்னு ஒருத்தருக்குத் தெரிஞ்சா போதாதான்னு. அவருக்குப் பிறக்கும் குழந்தை தன் அப்பாவை பைத்தியம் இல்லை என்று சொல்லும். ஐம் சாமில் ஒரு காட்சியில், ஒரு சிறுவன் கேட்கிறான், உங்க அப்பா மெண்டல்லி ரிடார்டா என்று. அவள் சொல்கிறாள், ஆமாம். அப்ப நீ என்கிறான் சிறுவன். அவள் இல்லை என்கிறாள். எத்தனை தெளிவான திரைக்கதை பாருங்கள். குழந்தை தன் அப்பா மெண்டல்லி ரிடர்ட் என்பதைப் புரிந்துகொண்டு, அதனை ஏற்றுக்கொண்டு பேசுகிறது. இத்தனை தெளிவு தமிழ்ப்படத்தில் இருக்கிறதா?

ஐம் சாமில் மெண்டல்லி ரிடார்டாக இருப்பவரை வெறும் பைத்தியமாகக் காட்டி நோகடிக்கவில்லை. அவர் தன் குழந்தையுடன் சேர்ந்து வீட்டில் பாடங்களைப் படிக்கப் பார்க்கிறார். ஆனால் தமிழில்? விக்ரம் பைத்தியமேதான். அவருக்குத் தெரிந்ததெல்லாம் கையைத் தூக்கி தூக்கிப் பேசுவதுதான். அதுவும் மிஸ்டர் பீன் மற்றும் சிப்பிக்குள் முத்து கமலின் உடல் மொழியே.

அடுத்து வரும் கோர்ட் காட்சிகள். அனுஷ்காவின் கேரக்ட்ரை இத்தனை கேணத்தனமாக யாரும் உருவாக்க முடியாது. கூடவே வரும் கிறுக்கன் கேரக்டராக சந்தானம். இன்னொரு கிறுக்கனாக வரும், உதவும் வக்கீல். அத்தனை பெரிய வக்கீல் நாசரிடம் இருக்கும் உதவியாளரை தனக்கு வேவு பார்க்கச் சொல்வார்களாம். அப்படியாவது அவன் வேவு பார்த்துச் சொன்னது என்ன என்றால், ஒன்றுமே இல்லை. இதை வைத்துக்கொண்டு அரை மணி நேரம் குட்டிக்கரணம்.

அடுத்து நாசர் கேரக்டர். மிகப் பெரிய வக்கீலாம். ஆனால் அவருக்கு விகரமை மனநிலை சரியில்லாதவர் என்று கோர்ட்டில் நிரூபிக்கத் தெரியாதாம். ஏனென்றால் அனுஷ்காதான் ஹீரோயின். இவர் என்ன செய்வார்! தலையெழுத்து. கடைசியில் விக்ரம் மெண்டல்லி ரிடார்ட் இல்லை என்று ஒப்புக்கொண்டு விடுவாராம். விக்ரமும் குழந்தையும் சந்திக்க ஒரு மணி நேர அவகாசமாம். அந்தக் காட்சியில்தான் எத்தனை குழப்படி! அதில் விக்ரம் ஓடி வந்து விழும் காட்சி அப்படியே ஐம் சாமில் உள்ளது. தமிழ்த்தனமாக விழக்கூடவா தமிழனுக்குச் சுயபுத்தி இல்லை?

கோர்ட்டில் இரண்டு பேர் லூசுத்தனமாகப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஒருவர் நாமம் போட்டிருக்கிறார், இன்னொருவர் பட்டை அடித்திருக்கிறார். ஏன், அங்கே சைவ வைணவ விவாதமா நடக்கிறது?

மெண்டல்லி ரிடார்ட் விக்ரம்தான் பாட்டுப் பாடி நம்மைக் கொல்கிறார் என்றால், வக்கீலும் விக்ரமுடன் டூயட் பாடுகிறது. இந்த தமிழ் சினிமா விளங்கவே விளங்காதா? எந்த ’நல்ல பட’ இயக்குநராவது இப்படி ஒரு டூயட் காட்சி வைப்பாரா? கேட்டால் சமரசம் என்பார்கள்.

கடைசி காட்சியில் விக்ரமே குழந்தையை ஒப்படைத்துவிடுவாராம். கொடுமை. யார் மெண்ட்டல்லி ரிடார்ட்? நாமா? விக்ரமா?

விக்ரமுக்கும் குழந்தைக்குமான அன்னியோன்யம் குழந்தையின் பார்வையில் சரியாகப் பதியப்படவே இல்லை. உண்மையில் அதுதான் நம்மை நெகிழ்ச்சியின் உச்சத்துக்கே அழைத்துச் சென்றிருக்கும். அது இல்லாததால் கிளைமாக்ஸில் ஆச்சரியம் மட்டுமே மிஞ்சுகிறது. (இதுதான் நடக்கும் என்று யூகம் செய்துவிடும் என்னைப் போன்றவர்களுக்கு அதுவும் மிஸ்ஸிங்!) மனதில் ஒரு பதற்றம் ஏற்படவில்லை.

படம் முழுக்க ஓவர் ஆக்ட்சிங் செய்தால் மக்களுக்குப் பிடித்துவிடும் என்பது நம் மரபு. அப்படியே செய்திருக்கிறார் விக்ரம். பைத்தியமாக நடிப்பது சும்மா அசட்டுத்தனமாக அலட்டுவது என்று நமக்குப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், நம்ம ஊர் மெண்டல்லி ரிடார்டுகளெல்லாம் அழகானவர்களாகவும் அப்சரஸ்களாகவும் உலவும் ரகசியமும் புரிபடுவதில்லை. கமல், ஸ்ரீதேவி, ராதிகா, அஞ்சலியில் வரும் குழந்தை - இப்படி மெண்டல்லி ரிடார்டுகள் அழகானவர்களாகவே இருந்துவிடுகிறார்கள். ஆனால் விக்ரமுக்கு நண்பர்களாக வரும் 3 மெண்டல்லி ரிடார்டுகளில் ஒருவர்கூட அழகில்லை. அது எப்படி அப்படி ‘அமைந்துவிடுகிறது’ எனத் தெரியவில்லை.

இந்தத் திரைக்கதை படத்தை மனத்தில் வைத்து எழுதப்படவில்லை. மக்களை மனத்தில் வைத்து எழுதப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தில் சுயம் இல்லை. தமிழில் வரும் பெரும்பாலான படங்களில் சுயம் இல்லை. குறைந்தபட்சம் உலகெங்கும் எடுக்கப்படும் கதையை இங்கே எடுக்கிறார்கள் என்றாவது அமைதிகொள்ள முடிந்தது. இப்படத்தில் ஒரு படத்தையே அப்படியே சுட்டிருக்கிறார்கள். இது நிச்சயம் ஏமாற்று வேலை. அத்திரைப்படத்துக்கான கிரெட்டிட்டைக் கொடுக்கவில்லை என்பது இது மோசடியே என்பதை நிரூபிக்கிறது.

மோசமான திரைப்படங்களுக்கு மத்தியில் சுமாரான படங்களை வரவேற்பதே நமது தலைவிதி ஆகிவிட்டது. அதனால்தான் அழகர்சாமியின் குதிரை, தெய்வத் திருமகள், மைனா எல்லாம் பெரிய வரவேற்பைப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுப் போகிறது. அழகர்சாமியின் குதிரை, மைனாவிலாவது மண் சார்ந்த சுயம் என்பது கதையளவில் இருந்தது. இதில் அதுவும் இல்லை.

இத்திரைப்படத்தின் சில ப்ளஸ்கள்: ஒரு முயற்சி என்ற அளவில் - மனதைக் கல்லாக்கிக்கொண்டு - வரவேற்பது. குழந்தையாக வரும் பெண்ணின் மாசு மருவற்ற முகமும் அதன் நடிப்பும். கிளைமாக்ஸ் கோர்ட் காட்சியில் விக்ரமின் நடிப்பு. ஆரிரோ ஆராரிரோ எனும் நெஞ்சை அள்ளும் பாடல். (இந்தப் படத்தில் இரண்டு பாடல்களைச் சுட்டிருக்கிறார் ஜி.வி. பிரகாஷ். இயக்குநர் ஜாடிக்கேத்த நல்ல ஜிவி பிரகாஷ் மூடி!) நல்ல ஒளிப்பதிவு. நாசர், அனுஷ்கா, அமலா பாலின் நடிப்பு. இவ்வளவுதான். இதை இவர்கள் எந்தப் படத்திலும் செய்துவிடுவார்கள்.

மனதைக் கல்லாக்கிக் கொண்டேயானாலும், தெய்வத் திருமகள் போன்ற ஓர் அப்பட்டமான காப்பியை நாம் வரவேற்பதுகூட நிச்சயம் தவறுதான். கலைக்கு செய்யும் அவமரியாதை.

Saturday, July 23, 2011

காஞ்சனா - விடாது தமிழ்ப்பேய்

* தமிழில் பேய்ப்படங்கள் எப்படி இருக்கவேண்டுமோ அப்படியே இருக்கிறது காஞ்சனா. பயமே இல்லாமல் பார்க்கலாம். :-)

* அதே சரக் சரக் பேய், திடும் திடும் பேய். அதே தமிழ்ப்பேய். அதே ஓவர் ஆக்டிங் பேய். எல்லாம் சரி. கதையுமே அதுவேயா? முனி1ஐ அப்படியே எடுத்திருக்கிறார்கள். ஃப்ளாஷ் பேக் கதையை மாற்றிவிட்டார்கள். முனி1ன் ஸ்பெஷல் என்னவென்றால், அதற்கு முன்னர் வந்த பல பேய்ப்படங்களைப் போலவே அதுவும் எடுக்கப்பட்டிருந்ததுதான்.

* கமல்ஹாசன் நடித்து தேசிய விருது பெறுவார் என்று 1990களில் இருந்து நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அரவாணி கேரக்டரை சரத்குமார் பண்ணியிருக்கிறார். நடிக்கவே வரவில்லை. பிரகாஷ் ராஜ், சரத்குமார் என இவர்கள் நடிக்கவே வராமல் அரவாணி போல் நடிப்பதைப் பார்க்கவேண்டியிருக்கிறது. இவர்களுக்கு இப்படி நடிக்க தைரியமாவது இருக்கிறது. கமலுக்கு எப்போது வருமோ.

* ஒரே ஆறுதல் அரவாணிகளை அசிங்கப்படுத்தாமல் உயர்ந்த நோக்கில் காட்டியிருப்பது. அரவாணிகளைப் பற்றிய ஓர் உண்மையான திரைப்படம் வரும்வரையில் இது போன்ற முயற்சிகளைப் பாராட்டிக்கொண்டிருக்கவேண்டியதுதான்.

* முனி1க்கும் 2க்கும் வித்தியாசம் காட்ட, அரவாணி, இஸ்லாமியப் பேய் ஓட்டும் முறை என்று என்னவோ காட்டிவிட்டார்கள்.

* அநியாயத்துக்கு படம் நீளம். இடைவேளைக்குப் பிறகுதான் காஞ்சனாவே வருகிறாள். இதுகூட ஓகே. கொலை, ஃப்ளாஷ்பேக் எல்லாமே இடைவேளைக்குப் பிறகு என்றால் ஒரு மனுஷன் தாங்கவேண்டாமா ஐயா?

* முனி1ல் எப்படி நடித்தாரோ அதையே மீண்டும் நடித்துவிட்டுப் போய்விட்டார்கள் ராகவா லாரன்ஸும், கோவை சரளாவும். நல்லவேளை, வினுச்சக்கரவர்த்தையைக் கொன்றுவிட்டார்கள்.

* பாடல்கள் இது பேய்ப்படம்தான் என்பதை உறுதி செய்கின்றன. பின்னணி இசையும் அப்படியே.

* முனி1 பெரிய ஹிட் இல்லை. ஆனால் இந்தப் படம் ஹிட்டாகும் வாய்ப்பு இருக்கிறது. சில இடங்களில் வாய்விட்டு சிரிக்க முடிகிறது. கொஞ்சம் எடிட் செய்து டிரிம்மாக்கி இருந்தால் நிச்சயம் பெரிய ஹிட் ஆகியிருக்கும்.

* படத்தின் உச்சகட்ட திகில் காட்சி கடைசி ஸ்லைடுதான். முனி3 வருமாம். கிறித்துவப் பேய் ஓட்டும் முறை மீதி உள்ளது என்னும்போது ராகவா லாரன்ஸை என்ன குற்றம் சொல்லமுடியும். 3 முக்கிய மதங்களை மட்டுமே நமக்குக் கொடுத்த அந்த இறைவன்தான் எவ்வளவு கருணைக்குரியவன்.

Saturday, March 19, 2011

பாலுமகேந்திரா - நிசப்தத்தில் மிதந்துவந்த குரல்

நேற்றைய கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் பாலுமகேந்திரா கலந்துகொண்டார். மிக மின்பு ஞாநி கலந்துகொண்ட மொட்டைமாடிக் கூட்டத்தில் அனல் பறந்தது. அன்று எல்லோருமே ஞாநி என்ன பேசுகிறார் என்பதைக் கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதன் பிறகு, நேற்று நடந்த மொட்டைமாடிக் கூட்டத்தில்தான் மீண்டும் அது நடந்தது என நினைக்கிறேன். வந்திருந்த அனைவரும் அத்தனை பெரிய நிசப்தத்தில் மிதந்துவரும் பாலுமகேந்திராவின் குரலை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். எங்கேயிருந்தும் அனாவசிய சத்தங்கள் இல்லை. பாலுமேந்திராவின், அவரே தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்ளும், ஹார்ஷ்நெஸ்ஸும் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.



எழுத்திலிருந்து திரைக்கு என்பதுதான் பாலுமகேந்திரா பேச எடுத்துக்கொண்ட தலைப்பு. அந்தத் தலைப்பிலிருந்து சிறிதும் விலகாமல் பேசினார். எழுத்து திரைக்கு மாறும்போது ஒரு கலைஞன் எதிர்கொள்ளவேண்டிய முக்கியமான சவால்கள் குறித்து விளக்கினார். உருவமும் உள்ளடக்கமும்தான் ஒரு படைப்பின் சாராசம்ங்கள். அதைத் திரைக்கு மாற்றும்போது அதன் உள்ளடக்கம்தான் முக்கியமே ஒழிய, அதன் உருவம் இரண்டாம்பட்சம்தான் என்று சொன்னார். ஒரு படைப்பிலிருந்து எதனைத் திரைக்கு மாற்றவேண்டும் என்று அவர் கருதுவதாக நினைக்கிறாரோ அதுவே திரையில் மையப்படுத்தப்படுகிறது என்றார். இதன் அர்த்தமாக நான் புரிந்துகொண்டது, எழுத்தாளரின் கவனம் இரண்டாம் இடம் பெற்றுவிடுகிறது என்பதுதான். இதனை சில எழுத்தாளர்கள் முற்றிலுமாக மறுக்கக்கூடும். ஆனால் பாலுமகேந்திரா ஒரு திரைப்படம் எடுக்க முயலும்போது அதில் தனது பங்கை மிகத் தெளிவாகத் திட்டமிட்டுவிட்டே தொடங்குகிறார். ஓர் எழுத்தாளரின் படைப்பில் அவர் விட்டுவிட்ட பகுதிக்கு, அவருக்கான காரணங்கள் அவரளவில் தெளிவாகவே இருக்கின்றன.

இங்கேதான் எழுத்தாளர்கள் கடுமையாக முரண்படும் புள்ளியும் தொடங்குகிறது. பாலுமகேந்திராவின் கதை நேரக் கதைகளில், படைப்பாளியின் பெயர் என்பது எழுத்தாளர்தான் என்பதால், அதில் தங்கள் உரிமைதான் என்ன என்று அதனை எழுதிய எழுத்தாளர்கள் கேட்கக்கூடும். பாலுமகேந்திராவின் பதில் ஒன்றும் இல்லை என்பதுதான். நீங்கள் எழுதிய ஒரு கதையின் படைப்பாற்றலுக்கு என் படைப்போடு யாதொரு தொடர்பும் இல்லை என்கிறார். படைப்பாற்றலும் படைப்பும் இந்த இடத்தில் அடைந்த விலக்கம் என்ன அசர வைத்தது என்றே சொல்லவேண்டும். பாலுமகேந்திரா எழுத்தாளரின் படைப்பிலிருந்து எடுப்பது அதன் உள்ளடக்கத்தை மட்டுமே அன்றி அதன் படைப்பாற்றலை அல்ல. அவரளவில் இது தெளிவான பார்வையே. மட்டுமன்றி, ஒரு திரைமொழிக் கலைஞனுக்குத் தேவையானதும்கூட.

ஓர் எழுத்தாளர் ஒரு வரியில் எழுதிச் செல்லும் ஒரு காட்சிக்கு நான்கைந்து காட்சிகள் வைக்கவேண்டியிருக்கும் என்று சொல்லி, அதற்கு எடுத்துக்காட்டாக மாலனின் தப்புக்கணக்கு கதையை படமாக்கியவிதத்தை விளக்கினார். ஓர் எழுத்தாளர் ஆயிரம் பக்கங்கள் எழுதிச் செல்லும் ஒரு விஷயத்தை ஒரு திரைக்கலைஞன் ஒரு சட்டகத்தில் காண்பிக்கமுடியும் என்றார். உண்மைதான். ஆனால் அதேபோல் இதன் மறுபக்கமான, ஓர் எழுத்தாளன் உருவாக்கும் உன்னதத் தருணங்களை அதற்கு இணையான ஒரு தருணமாக எல்லா சமயங்களில் திரைக்கலைஞன் மாற்றிவிடமுடியாது என்பதும் உண்மையே. இதனால்தான் ஒரு கதையைத் தேர்ந்தெடுக்க பாலுமகேந்திரா ஐம்பது கதைகளைப் படிக்கவேண்டியிருந்திருக்கிறது.

எழுத்திலிருந்து திரைக்கு படைப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தால்தான் திரைமொழியின் அடிப்படை பலமாகவும் தீவிரமாகவும் அமையும் என்று நான் நினைக்கிறேன். அதற்கு பாலுமகேந்திரா போன்றவர்கள் இலக்கியத்துக்கும் திரைக்கும் இடையேயான தூரத்தைக் குறைப்பதில் காட்டிவரும் அக்கறை மிகவும் முக்கியமானது. கதை நேரம் போன்ற வரவேற்கப்படவேண்டிய முயற்சிகளை எழுத்தாளர்கள் எந்த ஓர் ஊடகத்திலும் பதிவு செய்யவில்லை என்கிற பாலுமகேந்திராவின் வருத்தமும் கோபமும் இங்கே இருந்துதான் தொடங்குகிறது. தொடர்ந்து அலுத்துக்கொள்ளும் எழுத்தாளர்கள், அவர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வு அரங்கேறும்போது ஏன் அதனைப் பதிவு செய்யாமல் இருக்கிறார்கள் என்கிறார். அதோடு மட்டுமின்றி எழுத்தாளர்கள், திரைத்துறையைப் பற்றி வானளாவ பேசவும் செய்கிறார்கள் என்பது அவரது கோபம். தங்கள் நல்ல முயற்சிகளை அங்கீகரிக்காத எழுத்தாளர்கள் எவருக்கும் தங்களைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை என்பது பாலுமகேந்திராவின் கோபம். எழுத்தாளர் சுஜாதா கதை நேரம் பற்றி எங்கேயோ குறிப்பிட்டிருக்கிறார் என நினைக்கிறேன். கற்றதும் பெற்றதும் பத்திகளிலா, எங்கே என்று தெரியவில்லை. ஒருவேளை இது பாலுமகேந்திராவுக்குத் தெரியாதா அல்லது அதெல்லாம் ஒரு சிறிய எடுத்துக்காட்டுத்தானே ஒழிய, அதை மட்டும் வைத்துக்கொண்டு எழுத்தாளர்கள் அங்கீகரித்துவிட்டார்கள் என்று எடுத்துக்கொள்ளமுடியாது என நினைக்கிறாரா என்று தெரியவில்லை. இரண்டாம் வகையாக பாலுமகேந்திரா எடுத்துக்கொண்டாலும் அதில் நியாயம் இருக்கவே செய்கிறது.

மொத்தத்தில் பாலுமகேந்திரா சிறப்பாகப் பேசினார். உரையாடல் தொடங்கியது. பின்னர் அவரது தப்புக் கணக்கு திரையிடப்பட்டது. மீண்டும் பாலுமகேந்திரா பேசினார்.

விமலாதித்த மாமல்லன் சார்பாகச் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பாலுமகேந்திரா அவரது பதிலைச் சொன்னார். கேள்வியின் சாரம், விமலாதித்த மாமல்லனின் கதையை பாலுமகேந்திரா மோசமாகப் படம் எடுத்தார் என்பதுதான் என நினைக்கிறேன். அதற்கு பாலுமகேந்திரா ஏற்கெனவே தான் சொன்ன பதில்களிலிருந்தே மேற்கோள் காட்டிப் பதிலளித்தார். ஓர் எழுத்தாளரின் கதை என்பது, அதன் படைப்பாற்றலைத் துறந்துவிட்டால், தினத்தந்தியில் வரும் ஒரு சிறிய செய்தித் துணுக்கைப் போன்றதுதான் என்றார்.

தப்புக் கணக்கு திரையாக்கலில் உள்ள சில குறைகளைப் பற்றி விமலாதித்த மாமல்லன் கேள்வி கேட்ட நேரத்தில் லேசான வெப்பம் பரவியது. மாமல்லன் சொன்ன காட்சிக் குற்றங்கள் எனக்கு ஏற்க இயலாதவை. ஆனால், தப்புக் கணக்கு திரைக்கதையில் ஒரு குழந்தையை அசாதாரணக் குழந்தையாகக் காட்ட அக்குழந்தை கேட்பதாகக் காட்டப்படும் கேள்விகளின் தொடர்வரிசை குறித்த மாமல்லின் குற்றச்சாட்டான செயற்கைத்தன்மையில் உண்மை உள்ளது என்றுதான் நானும் நினைக்கிறேன். ஆனால், பள்ளி வெட்டவெளியில் செயல்பட்டால் இப்படி கேள்வி கேட்பார்களா, ஒரு குழந்தை வவுத்துலிங்கம் என்று தினமும் பார்க்கும் தன் தாத்தாவையே சொல்லுமா என்பன போன்ற லாஜிக் கேள்விகளையெல்லாம் நான் ஏற்கவில்லை. இதை ஒருவேளை மாமல்லன் படித்தால் அவருடைய தரப்பைச் சொல்லக்கூடும்.

மொத்தத்தில் ஒரு நல்ல மாலை.இதனை சாத்தியப்படுத்திய தோழர்கள் மருதன், பாலு சத்யாவுக்கு நன்றி சொல்லவேண்டும். நேற்று பாலுமகேந்திரா ஒருவித தத்துவ மூடில் பேசிக்கொண்டிருந்தபோது எனக்குள் தோன்றிய தத்துவ நெறி இது. இது இங்கே தேவையில்லைதான். ஆனால் பாலுமகேந்திராவின் அவரது படைப்பு போல, இது எனது படைப்பு. என்னவேண்டுமானாலும் எழுதலாமே! எனவே... தோழர்கள் என்பதே தோளர்கள் என்பதன் மரூஉ. பிற்காலத்தில் மரபு, பாரம்பரியம் இத்யாதி என்கிற தத்துவங்கள் தங்கள் மீது ஏறிக்கொள்ள வசதியாக முற்போக்குக் காலத்தில் தோள் வளர்ப்பவர்களே தோளர்கள் என்றழைக்கப்பட்டார்கள் என்னும் கண்டடைதல்தான் அது. மீண்டும் தோளர்களுக்கு நன்றி.

Saturday, February 12, 2011

பயணம் - மீட்பரின் புதிய சீடர் வருகை

தமிழ் பேப்பரில் பயணம் திரைப்படத்தின் விமர்சனம் வெளியாகியுள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிரான படம் என்றாலே அது இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் என்று நினைக்க வைப்பதில் முற்போக்காளர்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். இப்படம் அதற்கு இன்னுமொரு உதாரணமாக அமையும்.

ஆடுகளம் - கதையின்மை என்னும் பொய்

நன்றி: தமிழ் பேப்பர்

வெற்றிமாறனின் ஆடுகளம். அப்படித்தான் சொல்லவேண்டியிருக்கிறது. கதையில்லை என்னும் புலம்பல்களுக்கு மத்தியில், எல்லாக் கதைகளுமே எடுக்கப்பட்டுவிட்டன என்னும் தப்பித்தல்களுக்கு மத்தியில் ‘ஆடுகளம்’ மிகச்சிறப்பான கதையைக் கொண்டிருக்கிறது. இப்படத்துக்குச் சரியான பெயர் ‘சண்டைக்கோழி’ என்பதாகவோ ‘ஆடுகளம்’ என்பதாகவோதான் இருக்கமுடியும். அந்த வகையில் ஆடுகளம் என்ற பெயரை இதுவரை யாரும் வைக்காததற்கு வெற்றிமாறன் ஒட்டுமொத்த திரைப்பட இயக்குநர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார். :-)

முதலிலேயே ‘சேவற்சண்டை’ மனிதர்களைக் கொல்லும் வரை செல்லும் என்று சொல்லி, படம் பார்ப்பவர்களைத் தயார் செய்துவிடுகிறார். மேலும் படம் முழுக்க அதுவே கதை என்பதையும் தெளிவாக உணர்த்திவிடுவதால், தேவையற்ற எதிர்பார்ப்புகள் குறைந்து, நேரடியான கதைக்களம் ஒன்றுக்குத் தயாராகிவிடுகிறோம். இடைவேளை வரை படத்தின் வேகம் சண்டைச்சேவல் வேகம்தான். ஒன்றிணைந்து கிடக்கும் துருவங்கள், மெல்ல மெல்ல எதிரெதிராக விலகிப் போவதையும், அதனுள்ளே மனிதனின் ஆதிகுணமான பொறாமையும் வன்மமும் குடிபுகுவதையும், பார்ப்பவர்கள் நம்பிக்கை கொள்ளும்வண்ணம் காட்டியிருப்பது முக்கியமானது.

இடைவேளை வரை நேரடியாகப் பங்குபெறும் சேவற்சண்டை, இடைவேளைக்குப் பிறகு, திரைக்கதையின் பின்புலமாகிப் போகிறது. ஓர் உன்னதத் திரைப்படத்துக்கு, சுவாரஸ்யத்தைவிட அனுபவம்தான் முக்கியம் என்றாலும், இடைவேளைக்குப் பிறகு வராத சேவற்சண்டையை நினைத்து ஏங்க வைத்துவிடுகிறார் வெற்றிமாறன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இதனால் படம் இடைவேளை வரை படுவேகமாகவும், இடைவேளைக்குப் பின்னர் கொஞ்சம் மெல்லச் செல்வதாகவும் ஒரு தோற்றம் ஏற்பட்டுவிடுகிறது.

இப்போதிருக்கும் நடிகர்களில் மட்டுமல்லாது, தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான நடிகர்களுள் தனுஷும் ஒருவர் என்பதை இப்படம் நிரூபிக்கிறது. எந்த ஒரு இடத்திலும் இம்மி பிசகாத மதுரை சண்டியர் தோரணை. திறமைத் திமிர். சோகம் வரும்போது அடையும் முகக்கலக்கம். தனுஷ் கலக்குகிறார். பேட்டைக்காரராக வரும் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் – வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு முதிர்ச்சி, நடிப்பில் யதார்த்தம். அவரே பின்னணிக் குரலும் என்றால், அதற்கும் ஒரு பாராட்டு. தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது கிடைக்க வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது. சிறந்த புதுமுக நடிகர் என்று சொல்லி, வ.ஐ.ச.ஜெயபாலனைக் குறைக்காமல், சிறந்த குணச்சித்திர நடிகராக அவரும் தேர்ந்தெடுக்கப்படுவாரானால் மகிழ்ச்சியே.

ஹீரோயினுக்கு அதிக வேலை இல்லை. அழகாக வந்து போகிறார். ஒளிப்பதிவு அட்டகாசம். இசையில் பாட்டுகள் ஏற்கெனவே பிரபலமாகிவிட்டன. இதுபோன்ற வித்தியாசமான படங்களுக்கு இசையமைக்க இளையராஜா உச்சத்தில் இல்லையே என்பதை நினைக்காமல் இருக்கமுடியவில்லை. ஜி வி பிரகாஷ் திணறுகிறார். இளையராஜா உச்சத்தில் இருந்தபோது இசையமைத்த படங்களில் பெரும்பாலானவை குப்பை. ஆதாரக் கதையோ திரைக்கதையோ இல்லாதவை. பாடல்களும் பின்னணி இசையும் மட்டும் ஒட்டாத உயரத்தில் நிற்கும். இன்று பல புதிய இயக்குநர்கள் பல புதிய கனவுகளோடு வருகிறார்கள். அவர்களது திரைப்படங்கள், இளையராஜாவின் பின்னணி இசையில் பெறவேண்டிய அடுத்தகட்ட நகர்வைப் பெறாமலேயே போயிவிடுகின்றன. இது மிகப்பெரிய துரதிஷ்டம். எப்படியோ பாலா மட்டும் தப்பித்துக்கொண்டு விடுகிறார்.

இப்படத்தின் ஒரே ஒரு சின்ன குறையாகச் சொல்லவேண்டியது – இதைக் குறை என்ற வார்த்தையால் குறுக்கமுடியாது என்றாலும் – இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகள், முக்கியமாக நம்பிக்கைத் துரோகம் என்பது குருதிப்புனலை நினைவுபடுத்துகிறது. இது குருதிப்புனலின் அளவுக்கதிகமான தாக்கத்தால் இருக்கலாம். அதிலும் குறிப்பாக, பேட்டைக்காரரைப் பார்க்க தனுஷ் வரும் இடம்.

ஒரு படத்தின் முடிவு என்பதில் கட்டிப் போடப்பட்டிருக்கும் பொதுப்புத்தி இந்தப் படத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதில் நிச்சயம் சிக்கல் இருக்கும். அதுவே இப்படத்தின் கமர்ஷியல் பலவீனமாகவும் அமையலாம். ஆனால், நல்ல படங்களைச் சிந்திக்கும்போதே, கமர்ஷியலாகவும் வெற்றி பெற நினைக்கும் புதிய இயக்குநர்களின் வரவும், அவர்களின் ஆக்கங்களின் தரமும் தமிழ்த்திரைப்படங்கள் மீது பெரும் நம்பிக்கைக் கொள்ள வைக்கின்றன. அந்தவகையில் வெற்றிமாறன் மிக முக்கியமான இயக்குநராக உருவெடுக்கிறார்.

தமிழ்த்திரைப்படங்கள் தமிழ் வாழ்வைப் பேசாமல், எதையோ ஒன்றை, உலகத்தரம் என்னும் முலாமில் முக்கிப் பேசிவிட்டுத் தப்பிவிடுகின்றன. அக்குறையை நீக்க வந்திருக்கும் இத்திரைப்படம், தமிழ்த் திரைப்படங்களில் முக்கியமானது.

காவலன் - கொலையரங்கம்

நன்றி: தமிழ் பேப்பர்


சன் பிக்சர்ஸ் தயாரிக்காத, வினியோகிக்காத திரைப்படம் என்பதால், காவலன் திரைப்படத்தைத் திரையிட தியேட்டர்களே கிடைக்கவில்லை. பெரிய பாடுபட்டுத்தான் இப்படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். பல இடங்களில் அதிமுக பினாமிகள்தான் படத்தை ரிலீஸ் செய்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். வேறு வழியில்லாமல் இப்போது விஜய் அதிமுக ஆதரவாளராகவே தன்னைக் காண்பித்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுவிட்டது. ஏற்கெனவே அரசியலில் உள்ளே வெளியே என்று ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த விஜய், இனிமேல் அந்த ஆட்டத்தைக் குறைத்துக்கொண்டு அதிமுகவின் நன்றி விசுவாசியாகக் கொஞ்சம் காலத்தையாவது ஓட்டவேண்டிய நிர்ப்பந்தம். இப்படிப்பட்ட முன்னாள் விசுவாசிகளெல்லாம் இன்று என்ன நிலையில் இருக்கிறார்கள் என்று அவர் யோசித்துப் பார்த்துக்கொள்வது நல்லது.

சன் பிக்சர்ஸ் தயாரித்த திரைப்படத்தின்போது தான் அனுபவித்த தேன்நிலவுக் காலத்தின் இன்னொரு முகம் இப்போது விஜய்க்குப் புரிந்திருக்கும். இது மெல்ல ரஜினிக்கும், கமலுக்கும் நேர்வதைத் தவிர்க்கமுடியாது. அன்றுதான் சன் பிக்சர்ஸின் மாயவலையைப் புரிந்துகொள்வார்கள் அவர்கள். இது எத்தனை சீக்கிரம் நடக்கிறதோ அத்தனை சீக்கிரம் நடப்பது நல்லது.

திரைப்படம் ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில், சன் பிக்சர்ஸ் இந்தத் திரைப்படத்தை வெளியிட தியேட்டர்கள் தராததற்கு நன்றிதான் சொல்லவேண்டும் எனத் தோன்றிவிட்டது. (கலையரங்கம் தியேட்டர் ஒரு தனிக்கொடுமை!) சன் டிவியில் வரும் மெகா சீரியல்கள் இதைவிடக் கொஞ்சம் தரமானதாக இருக்கும் என்று உறுதியாகக் கூறலாம்.

மலையாள கமர்ஷியல் இயக்குநர்கள் மலையாளத் திரைப்படங்களை சீரியல்கள் போலவே வைத்திருக்கப் படும்பாடு நாம் அறிந்ததே. அவர்களே தமிழில் படமெடுக்கும்போது, அதே பாணியில் எடுத்து நம்மைப் படுத்துவதைப் பொறுத்துக்கொள்ள பெரிய மனோபலம் வேண்டும். முதலில் ஒரு ப்ளாஷ்பேக்கில் ஆரம்பித்து, பின்னர் படத்தின் கிளைமாக்ஸுக்கு முன்னர் அதனை முடித்து, திடீரென ஒரு டிவிஸ்ட் கிளைமாக்ஸ் கொடுத்து, நம்மைப் படுத்தி எடுக்கும் அதே ஃபார்முலா கதை. குறைந்த பட்ஜெட், நிறைய செண்டிமெண்ட், யூகிக்கக்கூடிய காட்சிகள், வளவள வசனம், மினிமம் கேரண்டி.

கொஞ்ச நாளாக பெரிய ஹிட் இல்லாத விஜய், விக்ரமனும் இப்போதெல்லாம் படம் எடுப்பதில்லை என்னும் தைரியத்தில், மினிமம் கேரண்டியான செண்ட்டிமெண்ட் + காமெடியில் இறங்கிவிட்டார். சோகம் என்னவென்றால், லோ கிளாஸ் செண்டிமெண்ட், லோ கிளாஸ் காமெடி.

இந்த லோ கிளாஸ் காமெடி பழகிப்போய், சில இடங்களில் வடிவேலு நம்மைச் சிரிக்க வைத்துவிடுவதும் உண்மைதான். பின்னர் ஏன் சிரித்தோம் என்று வழக்கம்போல யோசிக்கதத் தொடங்கிவிடுகிறோம். ஆனால், சாமானிய மனிதர்களும், பெண்களும் விடாமல் சிரித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். கிளைமாக்ஸ் காட்சியில் என் மனைவி கண் கலங்கி தியேட்டரை விட்டு வெளியேறியதைக் குறிப்பிடவேண்டியது என் கொடுப்பினையா தலையெழுத்தா என்பது தெரியவில்லை.

அசின், ஐஸ்வர்யா ராய்க்குப் போட்டியாகப் பாட்டியாகிவிட்டார். பாடல்களில் ‘யாரது’ பாடல் மட்டும் காதில் ரீங்கரிக்கிறது. இரண்டு விஜய் வரும் பாடல் பார்க்க சுவாரஸ்யம். மற்றபடி பெரிய நடிகர் பட்டாளத்தின் இம்சை இலவச இணைப்பு. லாஜிக்கே கிடையாது என்பது பம்பர் பிரைஸ். நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ் எல்லாம் சம்பந்தமே இல்லாமல் எண்ட்ரி கொடுத்து, இது மலையாள இயக்குநர் ஒருவரின் படம்தான் என்று ஊர்ஜிதப்படுத்திவிட்டுப் போகிறார்கள். இப்போதெல்லாம் படம் எடுக்காத பாஸில்தான் எவ்வளவு நல்லவர் என்று நம்மை நினைக்க வைத்துவிடுகிறார் சித்திக்.

ஏன் ஒருவர் பாடிகார்டாக இருக்கவேண்டும் என்பதில் தொடங்கி, ஏன் அவர் யூனிஃபார்ம் போட்டுத் தொலைக்கவேண்டும், ஏன் அவரை கல்யாணம் செய்துகொள்ளும் இரண்டாம் கதாநாயகியின் அப்பா மௌனமாக இருக்கவேண்டும், ஏன் போலிஸுக்குப் பதில் சாதாரண ஒருவர் பாடிகார்டாக போகவேண்டும் என இப்படிப் பல ஏன்கள்? அதில் இன்னொன்று, ஏன் ரோஜா என்பதும் அடங்கும். இத்தனை கொடுமைகளையும் ஒரே ஆளாகச் சுமக்கிறார் விஜய்.

சொல்லாமலே, காதல்கோட்டை, ‘ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்’ (காலமெல்லாம் காதல் வாழ்க) போல இன்னொரு ஃபோன் காதல். நினைத்தேன் வந்தாய், லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும் போல விஜய். சுறா, எறா என்றெல்லாம் பார்த்துவிட்டு, இப்படி விஜய்யைப் பார்க்கவே கொஞ்சம் ஆச்சரியமாக (நிறைய பரிதாபமாகவும்!) இருந்தது உண்மைதான். அத்தனையையும் மெல்ல மெல்ல மறக்கடித்துவிடுகிறார். அதிலும் தனது காதலியைப் பார்க்கப் போகிறோம் என்ற காட்சிகளில் அவரது பரிதவிப்பு அருமை. பல கொடுமைகளுக்கு இடையில் கொஞ்சமாவது நம்மை சந்தோஷமாக வைத்திருந்தது விஜய்யும் வடிவேலுவும்தான்.

இத்தனை பெரிய செண்டிமெண்ட் மொக்கை என்று இந்தப் படத்தைக் குறிப்பிடும் வேளையில், இன்னொன்றையும் சொல்லவேண்டும். விஜய்க்கு தொடர் ஃப்ளாப்பாக இருந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், பெண்கள் கூட்டத்தால் இந்தப் படம் ஒரு வெற்றிப்படமாக அமையும். சன் பிக்சர்ஸ் தவிர வேறு யார் படம் தயாரித்தாலும் அப்படத்தைச் சுதந்தரமாகத் திரையிடக்கூட முடியாது என்ற நிலையில் இந்தப் படம் வெற்றி பெறவேண்டியது முக்கியத் தேவை.

Saturday, November 6, 2010

வம்சம்

உலகத் திரைப்படங்கள் தங்கள் வாழ்க்கையைப் பதிவு செய்யும்போது தமிழ்ப்படங்கள் மரத்தைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன என்பதன் அபத்தத்தைப் புரிந்துகொண்டு வந்த தமிழ்த் திரைப்படங்கள் சொற்பமே. ஹே ராம், விருமாண்டி படங்களைப் பார்த்தபோது, கதைகளுக்குப் பஞ்சம் என்னும் அபத்த வாதத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. கதைக்கென யோசிக்க, மெனக்கெட யாரும் தயாரில்லை. குறைந்த யோசிப்பில் அதிக லாபம் அல்லது கைக்கடிக்காத படம் என்பதில்தான் அனைவருமே கவனம் செலுத்துகிறார்கள். தமிழில் வாழ்க்கையைப் பேசவேண்டுமானால், அரசியல், மத, ஜாதி வராத மாதிரி யோசிக்கவேண்டும் என்னும் ஒருவித நிர்ப்பந்தத்துக்குள் இயக்குநர்கள் உழல்வது புரிகிறது. எதற்குத் தேவையில்லாத பிரச்சினை என்னும் எண்ணம் காரணமாக இருக்கலாம். கமல் இதனை எளிதாக எதிர்கொண்டுவிடுவதால் அவரால் சிறந்த கதைகளைக் கொண்ட படங்களைக் கொடுத்துவிடமுடிகிறது.

ஜாதியை வெளியே வெளிப்படையாகப் பேசும் கதாபாத்திரங்கள் கொண்ட படங்களை எடுப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பாரதிராஜா அதனை வேறு வேறு வடிவங்களில் வெளிப்படுத்துவார். கமல் தேவர் மகனில் நேரடியாகச் சாதியைப் பற்றிப் பேசினாலும், அதிலிருந்த ரொமாண்டிசைசேனும், ஹீரோயிஸமும் அதனை ஜனரஞ்சகப் படமாக்கியது என்றுதான் சொல்லவேண்டும். விருமாண்டியில் கமல் ஹீரோயிஸத்தையும் ஜாதி பற்றிய விவரணைகளையும் மிக அறிவுபூர்வமாகக் கலந்திருந்தார். அதிலும் கமல் என்னும் நடிகருக்குள்ளான இமேஜ் தந்த எல்லையைக் காணமுடிந்தது. கமல் அவரது நிலையில் கவனமாக இருப்பதும் நல்லதுதான். அமீரின் பருத்திவீரன் தெளிவாக வெளிப்படையாக ஜாதியை முன் வைத்திருந்தால் பெரிய கலகம் ஏற்பட்டிருக்கக்கூட வாய்ப்புள்ளது. ஆனால் அந்தப் படத்தின் அடிநாதமே அதுதான். அமீர் எந்த எண்ணத்துடன் அதனை எடுத்தார் என்பது தெரியாது. ஆனால் மிக முக்கியமான விஷயம்தான் அவர் தொட்டது.

இந்நிலையில் வம்சம் படம் முக்கியத்துவம் பெறுகிறது. இது ஓர் அருமையான திரைப்படம் அல்ல. ஒரு தமிழ்த் திரைப்படத்துக்கே உரிய எல்லைகள், பிரச்சினைகள் இப்படத்துக்கும் உள்ளன. ஹீரோயிஸ அடிப்படையில் எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ், ஃப்ளாஷ் பேக் காட்சிகளின் இழுவை போன்றவை. அதனையும் மீறி, மறவர் சமூகத்தின் கதை என்ற அளவில், அதனை மிகவும் வெளிப்படையாகவே சொல்லி வம்சம் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. இப்படமும் மற்றப் படங்கள் போலவே ஜாதிய மேன்மையை முன்வைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதனையும்கூட இப்படம் மிகத் தெளிவாக வெளிப்படையாகவே முன்வைக்கிறது. கருத்தியல் அடிப்படையில் இந்த ஜாதி மேன்மை, அதிலும் மேல்ஜாதி மேன்மையை பறைசாற்றும் படங்கள் தரும் எதிர்மறை விளைவுகள் யோசிக்கத் தகுந்தவையே.

ஆனால், ஒரு திரைப்படம் என்ற அளவில், இதனையும் பதிவு செய்வது மிக மிக அவசியமே. மறவர்களின் பல வம்சங்களைக் குறிப்பிட்டு, அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை, ஈகோக்களை முன்வைத்திருக்கிறார் இயக்குநர். அவர்களின் ஈகோவும் பிரச்சினையும் எப்போதும் வெட்டுக் குத்தோடு தொடர்புடையதுதான் என்பதனைச் சொல்லவும் கொஞ்சம் தைரியம் வேண்டும். அது இயக்குநருக்கு இருக்கிறது. ஒருவேளை இது வெளியில் அப்பட்டமாகத் தெரியாமல் இருப்பதற்காகத்தான் ஜாதி மேன்மை என்பதைக் கேடயமாகப் பயன்படுத்திக்கொண்டாரோ எனத் தோன்றுகிறது.

இலங்கையில் புத்தகக் கண்காட்சியின்போது ஒரு மறவ நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, மறவர்கள் பற்றிப் பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். அதில் பல விஷயங்கள் இந்தப் படத்தில் பதிய வைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கள்ளச் சாராயமும் பன்றிக் கறியும் இப்படத்தின் வெற்றிக்கான குறியீடாகவே மாறியுள்ளன. இவர்கள் பெண்களைக் கேவலப்படுத்துவதில்லை என்பதையும் இப்படத்தில் சொல்லிவிடுகிறார் இயக்குநர். இதனால் பெண்களைக் கேவலப்படுத்தும் சம்பிரதாயமான தமிழ்ப்படக் காட்சிகளில் இருந்து எளிதாக வெளிவந்துவிடுகிறார். அதேசமயம், கதாநாயகி நடுத்தெருவில் வில்லன் மீது சாணியைக் கரைத்து ஊற்றும் காட்சிக்கும் அதனைப் பயன்படுத்திக்கொண்டுவிட முடிகிறது. இப்படத்தின் சிறப்பான காட்சி இதுவே. அதேபோல் அந்த கதாநாயகியைக் கேவலப்படுத்த, இன்னும் இரண்டு பெண்களை அழைத்துக்கொண்டு வில்லன் கும்பல் சுற்றுவதும் நல்ல யோசனைதான்.

கருணாநிதியின் வம்சத்தைச் சேர்ந்த ஒரு நடிகர் நடித்திருந்தும், படத்தை இப்படி எடுத்திருப்பது ஆச்சரியம்தான். அவருக்கான காட்சிகள் பிற்பகுதிகளில் வந்து படத்தையே புரட்டிப் போட்டுவிட்டாலும்கூட, ஒரு பேண்ட் கூட இல்லாமல், படம் முழுக்க வேட்டி, லுங்கிகளில் வலம் வரவும் இன்றைய கதாநாயகர்களும் தில் வேண்டியிருக்கிறது. ஒரு மறவருக்கான திமிர் அருள்நிதியின் தோற்றத்துக்கு இல்லை. ஆனால் இதையே இன்றைய நிலையிலான ஒரு மறவப் பொதுப் பிம்பமாக வைப்பதில் பாண்டிராஜ் சொல்ல வரும் சேதியும் அடங்கிவிடுகிறது. அந்த உருவம் மக்களின் பொதுப்புத்தியில் எப்படிப் பதிந்திருக்கிறது என்பதைப் பயன்படுத்திக்கொண்டு, சரியான கல்வியே இவர்களைப் பண்படுத்த வல்லது என்பதை அவர் சொல்லாமல் சொல்லிவிடுகிறார். கிராமத்தில் இருந்துகொண்டு கிராம வாழ்க்கை வாழாமல் இருப்பதும்கூட இதிலிருந்து வெளிவர உதவும் என்று இயக்குநர் நினைக்கிறாரா எனத் தெரியவில்லை. கடைசிக் காட்சியில் கதாநாயகன் பேண்ட் ஷர்ட் வண்ணம் இறங்கிச் செல்லும்போது, அவரது மகன் எதிரியாக இருந்தவனின் மகனைத் திருவிழாவுக்கு அழைக்கிறான். பேண்ட் போட்டுக்கொண்டு, காரின் அருகில் நடந்தால் சகிப்புத்தன்மை வந்துவிடுகிறதா என்ன?

எப்பாடு கொண்டாவது பிற்பாடு கொடாதவர் உள்ளிட்ட பல்வேறு வம்சங்களின் பெயர்களைச் சொல்வதே கூட தமிழில் அரிது. ஒருவகையில் இது ஆழமாகப் பேசப்படுவதால், பொதுவான ஒரு படம் என்பதிலிருந்து விலகி, அப்பகுதியைச் சேர்ந்த அந்த மக்களுக்கான படம் என்று காணப்படக்கூடிய ஆபத்தும் உள்ளது. இதுவே இப்படத்துக்கு நேர்ந்திருக்கிறது என நினைக்கிறேன். படம் முழுக்க, கிராமத் திருவிழாவின்போது நடக்கும் கொண்டாட்டங்களைக் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இது கொஞ்சம் அலுப்பதைத் தருகிறது. என்றாலும், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், இன்று இப்படி நடப்பதெல்லாம் அருகி வருகிறது என்னும் நிலையில், பெரிய மகிழ்ச்சியுடன் பார்த்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. நடிகர்கள் தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஜெயப்ராகாஷின் அமுல்பேபி முகம் வில்லனுக்கு ஒப்பவில்லை. கதாநாயகனின் அம்மாவாக வருபவரும் ஒட்டவில்லை. பாண்டிராஜ் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கவேண்டும்.

ஜாதி என்பதைப் பொத்திப் பொத்திப் பேசுவதும், அல்லது மேம்போக்காக அணுகி அதனை ஒட்டுமொத்தமாக ஒரு சாதி என்றாக்கி, அதற்குண்டான நுண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டுப் பேசுவதும்தான் தமிழ்ப் படங்களின் அணுகுமுறையாக இருந்து வந்துள்ளது. பிராமணர்கள் மட்டும் விதிவிலக்கு. பிராமணர்கள் பற்றிய படங்களை மட்டும் வெளிப்படையாகவே பேசிவிடுவார்கள். வேற்று ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்றால், மிகக் கவனமாகவே பேசுவார்கள். எல்லா மேல்சாதிகளையுமாவது ஒன்றாக வைத்துப் பேசவேண்டும் என்ற உணர்வுகூட இவர்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடியது. அந்த வகையில் இந்தப் படம் ஒரு முதற்படி. இனியும் அடுத்தடுத்த, பிராமணர்களோடு சேர்த்து மற்ற மேல்சாதிகளின் குணங்களையும் தோலுரிக்கும் படங்கள் வரட்டும். இதனை எதிர்பார்ப்பதே அதிகம்தான் என்றாலும், இந்தப் படம் அது நடக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. இந்தப் படம் மறவர் வம்சத்த்தின் மேன்மையோடு தேங்கிவிட்டாலும், பருத்திவீரன் போன்ற கதையில், அதைவிட ஆழமாக அடுத்த படிக்குச் செல்லும் படைப்புகள் வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

Sunday, October 3, 2010

எந்திரன் - சன் டிவி - தொடரும் குமட்டல்

இந்தக் கட்டுரை தமிழ்ஹிந்து தளத்தில் வெளியாகியிருக்கிறது. வாசிக்க இங்கே சொடுக்கவும்.

http://www.tamilhindu.com/2010/10/suntv-n-enthiran-the-abominable-nexus/

நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் ‘யார் இந்தியாவின் நிஜமான சூப்பர் ஸ்டார்’ என்னும் நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. இந்தியாவெங்கும் இருந்து மக்கள் எஸ் எம் எஸ் அனுப்பியிருந்தார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. 88% பேர் ரஜினிதான் நிஜமான சூப்பர் ஸ்டார் என்று சொல்லியிருந்தார்கள். 3% பேர் அமிதாப், 3% பேர் ஷாருக், 3% பேர் சல்மான் - ஏறக்குறைய இப்படி இருந்தது மக்களின் தீர்ப்பு. ரஜினியின் திரைப்படங்களுக்கு ஏன் இந்த பிரபல்யம் என்று அலசத் தொடங்கினார்கள். அமிதாப், ஷாருக் போன்ற நடிகர்களிலிருந்து ரஜினி எப்படி மேலேறிச் செல்கிறார் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். 1970களில் அமிதாப் ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பது கிடையாதாம். தனது படங்கள் வெளியானபோதுகூட அதைப் பற்றிப் பேசமாட்டாராம். ஆனால் இப்போதெல்லாம் தனது படங்களுக்கு விளம்பரம் செய்ய வருவதும், ஏதேனும் தொலைக்காட்சித் தொடரில் (டாக் ஷோ) தோன்றினால் அதற்கான முன்னேற்ற நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதும் இயல்பாகிவிட்டது. தங்களது படங்கள் வெளியாகும்போது ஷாருக்கும் சல்மானும் பெரிய பெரிய பிரமோக்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் ரஜினி ஈடுபடுவதில்லை என்று சொன்னது அந்தத் தனியார்த் தொலைக்காட்சி சானல்.

ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. ஒருநாள் முழுக்க சன் டிவியில் ரஜினி தோன்றி கிளிமாஞ்சாரோ பாடலைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருந்தார். ரஜினி வாக்கு கொடுத்த கதை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இதனை ரஜினியே மேடையில் சொன்னார். எந்திரன் திரைப்படம் சன் பிக்சர்ஸின் கையில் வந்தபோது, இதற்கான பிரமோக்களில் தான் பங்கேற்பதாக ரஜினி வாக்குக் கொடுத்திருந்தாராம். ஆனால் படம் முடிந்ததும், அந்த பிரமோ என்பது தன் குணத்துக்குச் சற்றும் பொருந்துவல்ல என்பது ரஜினிக்கு உறைத்திருக்கிறது போல. அதிலிருந்து பின்வாங்கி விட்டார். ஆனால் அதனையும் கலாநிதி மாறன் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டாராம். ரஜினி ஒரு மேடையில் ஏறிவிட்டால் எப்படி உணர்ச்சிவசப்பட்டு விடுவார் என்பது நாம் அறிந்ததே. எந்திரன் வெளியீட்டு மேடைகளில் அவர் கலாநிதிமாறனைப் புகழ்ந்த விதமும் அப்படியே. அதற்கான வணிகக் காரணங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. வணிகக் காரணங்கள் மட்டுமே எப்போதுமே ரஜினியை நிர்ணயித்துவிடுவது வருத்தமளிக்கும் ஒன்றுதான்.

கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் என்னும் ஒற்றை கம்பெனியின் ராட்சதப் பிடிக்குள் தமிழ்த் திரையுலகம் சிக்கிக் கொண்டுவிட்டது. அதிலிருந்து வெளியேறும் வழி என்னவென்று பார்த்தால், அங்கே வரவேற்கக் காத்துக்கொண்டிருப்பவர்கள் கருணாநிதி குடும்பத்தின் வாரிசுகள். வங்குவத்தி வங்குவத்தின்னு கோவிலுக்குப் போனா அங்க ரெண்டு வங்குவத்தி திங்கு திங்குன்னு ஆடிச்சாம் கதைதான் இப்போது இங்கே நடந்துகொண்டிருக்கிறது. கருணாநிதி பேரன்கள் கையில் ரஜினி சிக்காமல் சன் பிக்சர்ஸில் அவர் மாட்டிக்கொண்டது ஒரு வகையில் அவருக்கு நல்லதுதான். ஆனால், மணிரத்னத்தின் வீட்டில் குண்டு விழுந்த பின்பு, தமிழ்நாட்டிலேயே குண்டு வெடிப்புகள் நடக்கின்றன என்பது சட்டென நினைவுக்கு வந்து, ஜெயலலிதாவைக் கேள்வி கேட்ட ரஜினி, ஒட்டுமொத்த திரையுலகத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துகொண்டிருக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றி ஏன் இன்னும் எதுவும் கேட்காமல் இருக்கிறார்? தன் வணிகம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவா?

இதில் போதாக் குறைக்கு சன் பிக்சர்ஸ் தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளை தனது கைப்பிடியில் வைத்துக்கொள்ள விரும்புவதாகவும், அதற்குப் போட்டியாக கருணாநிதியின் பேரன்களே களமிறங்கி இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. உழைப்பு, தொழில், முன்னேற்றம் என்றெல்லாம் காரணங்கள் சொன்னாலும், பதவியும் ஊடகமும் தரும் செல்வாக்கில்லாமல் இதுவெல்லாம் சாத்தியமில்லை என்பதை எந்த ஒரு பாமரனும் உணரமுடியும். ஒரு குடும்பத்தின் கைப்பிடிக்குள் தமிழ்த் திரையுலகம் இப்படி சிக்கிக்கொள்வது ஆரோக்கியமானதல்ல. இதுபோக, சன் டிவிக்கோ கலைஞர் டிவிக்கோ திரைப்படத்தை ஒளிபரப்புவதற்கான உரிமம் கொடுப்பதில் நடக்கும் கூத்துகள் தனி. இன்றைய கருணாநிதியின் அரசியல் புலத்துக்கு முன்னால், சன் பிக்சர்ஸின் ஊடகப் புலத்துக்கு முன்னால் எந்த இயக்குநரால், எந்த நடிகரால் எதிர்த்து நின்றுவிட முடியும் என நினைத்துப் பாருங்கள். ரஜினி போன்ற உச்ச நடிகரே இப்படி வீழ்ந்து கிடந்தால், மற்றவர்களின் பரிதாப நிலை நமக்குப் புரியும்.

suntv-endhiran

முன்பெல்லாம் ரஜினி படம் வெளியாகிறது என்றாலே சில படங்கள் அந்த சமயத்தில் வெளிவராது. இதன் காரணம் ரஜினி என்னும் உச்ச நடிகரின் படத்தோடு போட்டி போடுவது அவசியமற்ற வேலை என்பதுதான். இது தயாரிப்பாளர்களும், நடிகர்களும், இயக்குநர்களும் தாங்களாக எடுக்கும் ஒரு முடிவு. இன்று அப்படியல்ல. நீங்கள் போட்டி போட நினைத்தாலும், உங்களுக்கு தியேட்டர் கிடைக்காது. அதை மீறி வெளியிட்டால் உங்கள் திரைப்படம் சன் டிவியின் திரை விமர்சனம் (இப்போது இந்தப் பகுதி பெரும் நகைச்சுவைப் பகுதியாகிவிட்டது வேறு விஷயம். நேற்று வரை சன் பிக்சர்ஸ் தயாரித்த தில்லாலங்கடி திரைப்படம்தான் திரை விமர்சனம் பகுதியில் முதல் இடம் என்று கேள்விப்பட்டேன். நான் இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லை என்பதால், ஒரு நண்பர் சொல்லித்தான் இது எனக்குத் தெரியவந்தது) பகுதியில் குதறப்படலாம். தனது ஒரு படம் குதறப்பட்டதை எதிர்த்து பேசிய சத்யராஜ் இன்றெல்லாம் வாய் திறப்பாரா என்று கூடத் தெரியாது. ஏனென்றால் அன்று சன் டிவி ஒரு சானல் மட்டுமே. இன்று திரையுலகில் அது ஒரு சக்ரவர்த்தி. டிவி, திரைப்படம் என்பது போதாதென்று, தினமும் 10 லட்சம் பிரதிகள் விற்கும் ஒரு பத்திரிகை, இது போக வார இதழ்கள், இந்தியாவெங்கும் பண்பலை - இவர்களை எதிர்த்துப் பேச உண்மையான தைரியம் இருக்கவேண்டும் அல்லது முட்டாளாக இருக்கவேண்டும். இந்த நிலை இப்படியே நீடிப்பதைத்தான் ரஜினி விரும்புகிறாரா என்ன?

இதில் எந்திரன் வெளியீடு என்று சொல்லி சன் டிவி அடிக்கும் கும்மாளம் குமட்டலை வரவழைக்கிறது. முன்பும் எத்தனையோ ரஜினி படங்கள் வந்திருக்கின்றன. இதே ரசிகர்கள் பாலாபிஷேகம், பீராபிஷேகம் எல்லாம் செய்திருக்கிறார்கள். அது ஒரு குறிப்பிட்ட சிறிய எல்லைக்குள் அங்கங்கே நடந்த ஒரு விஷயமாக அமுங்கிவிடும். ஆனால், இன்று சன் டிவி அதற்குத் தரும் அங்கீகாரம் அதன் எல்லையை மிகவும் விரிவாக்கி, தமிழர்களே இப்படியெல்லாம் நடந்துகொள்ளும் முண்டங்கள்தான் என்னும் பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஒரு நடிகருக்கு இப்படி நடப்பதெல்லாம் பெரிய எரிச்சல் தரும் விஷயங்கள். இது ஒரு ரசிகரின் அல்லது சில ரசிகர்களின் தனிப்பட்ட விஷயமல்ல. சமூகம் எப்படி திரைப்படத்தினால் புரையோடிப் போயிருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இது. முன்பே இது குறித்துப் பலர் பேசியிருக்கிறார்கள். இந்த முறை இதனையும் சன் டிவி மார்க்கெட்டிங் உத்தியாக்கிவிட்டது. ரஜினி படத்துக்காக பால் குடம் எடுப்பதும், 1500 படிகள் கொண்ட கோவிலுக்கு முழங்காலில் நடந்து படியேறிப் போவதும், பாலாபிஷேகம் செய்வதும், தேர் இழுப்பதும், ரசிகர்கள் பச்சைக் குத்திக் கொள்வதும், அலகு குத்திக் கொள்வதும் - என்ன ஒரு சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? இதனைத் தொடர்ந்து ஒரு சாகசமாக ஒரு முக்கியமான சானல் தொடர்ந்து காட்டிக்கொண்டிருந்தால், வளரும் இளைஞர்கள் மனதில் இதெல்லாம் நல்ல விஷயம் என்பதாகப் பதிந்துவிடாதா? ஆனால் இதையெல்லாம் யோசிக்கும் நிலையில் இல்லை சன் பிகசர்ஸ். அதன் இலக்கு தான் போட்ட 150 கோடிக்கு நிகராக எத்தனை மடங்கு லாபம் சம்பாதிக்கமுடியும் என்பது மட்டுமே.

suntv-endhiran

ரஜினி போன்ற நடிகர்கள் இந்த குமட்டல்களையெல்லாம் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது இன்னொரு குமட்டல். படம் வெளி வந்த பின்பாவது ரஜினி இது குறித்துப் பேசுவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். தான் சொல்லியும் ரசிகர்கள் கேட்பதில்லை என்னும் சாக்கு போக்கெல்லாம் எடுபடாது. ஜெயலலிதா ரஃபி பெர்னாட்டுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இப்படித்தான் சொன்னார். தான் எத்தனை முறை சொல்லியும் தன் காலில் அமைச்சர்களும் தொண்டர்களும் விழுகிறார்கள் என. காலில் விழுந்த இரண்டு அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்பியிருந்தால், அடுத்த எந்த அமைச்சர் காலில் விழுந்திருப்பார்? ரஜினியும் தனக்கு பாலாபிஷேகம் செய்யும், தேர் இழுக்கும் ரசிகர்களை எல்லாம் சரியாகக் கண்டித்திருந்தால் அவர்களும் நிச்சயம் கேட்டிருப்பார்கள்.

தன் மகள் கல்யாணத்துக்கு நிச்சயம் வரக்கூடாது எனச் சொல்லி, அதனைச் செய்துகாட்டவும் தெரிந்த ரஜினிக்கு இது ஒன்றும் பிரமாதமான காரியமல்ல. ரஜினிக்கு இப்படி நடக்கும்போது, ரஜினியாக வரத் துடித்துக்கொண்டிருக்கும் இளைய தளபதிகளும், அல்டிமேட் ஸ்டார்களும் இதனையே நகலெடுக்கவே விரும்புவார்கள். அப்படி ரஜினி செய்யாவிட்டால், இன்றைக்கு ரஜினிக்கு அவர் ரசிகர்கள் செய்துகொண்டிருப்பது தமிழ்நாட்டின் திரை கலாசாரமாக மாறும். எனவே ரஜினியே இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும். அஜித் தனது பேருக்கு முன்பாக இனிமேல் அல்டிமேட் ஸ்டார் என்றெல்லாம் போடக்கூடாது என்று சொன்னார் சமீபத்தில். கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. இதேபோன்ற ஒரு சுய பரிசோதனையை ரஜினி செய்யவேண்டும்.

ரசிகர் மன்றங்களால் சில நற்பணிகள் அங்கங்கே நடக்கிறது என்றாலும், பெரிய அளவில் இந்த ரசிகர் மன்றங்கள் என்ன சாதித்தன என்பது தெரியவில்லை. எந்த ஒரு நடிகரும் ரசிகர் மன்றத்தை நம்பி இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. ஆனால் வெளியில் எந்த ஒரு நடிகரும் இதனைச் சொன்னதில்லை. ரஜினி தனது எல்லா ரசிகர் மன்றங்களையும் கலைத்துவிட்டு, அதில்கூட முன்மாதிரியாக இருக்கலாம் ரஜினி. நடிப்பு என்பது ஒரு தொழில். திரைப்படமும், நடிப்பும் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்றால், அதனைப் பாருங்கள், பாராட்டிவிட்டுச் செல்லுங்கள், அது போதும் என்று ரஜினி அறிவித்தால்தான் என்ன?

எந்திரன் வெளியீட்டை ஒட்டி மேடையில் பேசிய அத்தனை நடிகர்களும் தங்கள் ரசிகர்களையே நகலெடுத்தார்கள். ஒவ்வொரு நடிகரும் ஒரு விசிலடிச்சான் குஞ்சாக வந்துவிட்டுப் போனார்கள். இவர்களுக்கெல்லாம் தன்முனைப்பு என்ற ஒன்றே இல்லையோ என்றுதான் நினைக்கத் தோன்றியது. நடிகர்களின் வழியேதான் ரசிகர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்றும் நினைக்கத் தோன்றுகிறது. தன்மானமுள்ள நடிகர்களாகத் தங்களை முன்னிறுத்திக்கொண்டு முன்பு குரல் கொடுத்த நடிகர்கள் எல்லாம் ஓடிப் போன சுவடே தெரியவில்லை.

suntv-endhiran

ரஜினி முன்பெல்லாம் புகை பிடிப்பவராகப் பல படங்களில் தோன்றுவார். ஸ்டைல் என்பதே தன் அடையாளம் என்று ரசிகர்களை அவர் அடைந்த விதமே இந்த புகையின் வழியாகத்தான் எனலாம். திடீரென்று பாமக குரல் கொடுத்தது. ரஜினியால் பல இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்று. ஒரு படி மேலே போய் ரஜினியை அக்கட்சி மிரட்டியது என்றே சொல்லவேண்டும். ரஜினி புகை பிடிப்பது போன்ற படங்கள் வந்தால் அதனை வெளியிட விடமாட்டோம் என்றார்கள். உண்மையில் இது ஜனநாயகத்துக்கு எதிரானது. ரஜினி புகை பிடிக்கும் படங்களால் இளைஞர்கள் கெடுகிறார்கள் என்று நீங்கள் பிரசாரம் செய்யலாம். அமைதி வழியில் அதனை எதிர்த்துப் போராடலாம். தொடர்ந்து ரஜினியுடன் பேசலாம். ஆனால் அப்படி வரும் படத்தைத் திரையிட விடமாட்டோம் என்பது அராஜகம். ரஜினி இதற்குப் பணிந்து போனார். வணிகக் காரணங்கள். அடுத்த படத்தில் சுயிங்கம் மென்று கொண்டு வந்தார்.

புகை பிடிப்பதால் இளைஞர்கள் கெட்டுவிடுவார்கள் என்று போராட்டம் நடத்திய பாமக இன்று ஏன் விரல் சூப்பிக்கொண்டிருக்கிறது? ஒரு நடிகருக்கு நடக்கும் இத்தனை குமட்டல்களையும் ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது? சன் டிவியில் பரப்பல்களைப் பார்த்து வெறுமனே அமைதியாக இருப்பது ஏன்? எந்திரன் கருணாநிதியின் ஆசியையும் பெற்று விட்டது என்பதற்காகவா? ஒரு சமுதாயத்தையே சீரழிக்கும் விதமாக தொடர்ந்து சன் டிவி ரஜினி ரசிகர்களைக் காட்டிக்கொண்டிருப்பது குறித்து பாமக வாய் திறக்காதது ஏன்? நாளை கிடைக்கவிருக்கும் சீட்டும் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காகவா? இப்படி ரசிகர்கள் என்னும் போர்வையில் ஒரு சமுதாயத்தின் மக்களைக் கீழ்மைப்படுத்துவது தவறு என்று ரஜினிக்கு எதிராகப் பாமக இன்று எதுவும் பேசாமல் கள்ள மௌனத்துடன் இருப்பது, அது சன் பிக்சர்ஸைப் பாதித்து, அரசியலில் தன்னையும் பாதித்துவிடும் என்பதற்காகவா?

முதலில் ரஜினி ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். படத்துக்கான மார்க்கெடிங் போர்வையில் சன் டிவி நிகழ்த்திக்கொண்டிருப்பது ரஜினியின் சுயமரியாதையின் மீதான தாக்குதலே அன்றி வேறல்ல. தனது ரசிகர்களின் சர்க்கஸ்களைக் காட்டிக்கொண்டிருப்பதன் மூலம் தன்னைக் கேவலப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை ரஜினி உணரவில்லை என்றால், பொதுமக்களின் மத்தியில் ரஜினியின் இமேஜ் நிச்சயம் பாதிப்புக்குள்ளாகும். அது ஏற்கெனவே பாதிப்புக்குள்ளாகிவிட்டது என்பதும் ஓரளவு உண்மையே. ரஜினி என்னும் தனிமனிதரின் மனித இருப்புக்கும், இப்போது நடந்துகொண்டிருக்கும் அவலங்களுக்கும் தொடர்பே இல்லை என்பது பலருக்குத் தெரியும். அதை எல்லோருக்கும் தெரிந்ததாக ஆக்க ரஜினி முயல்வது அவருக்கு நல்லது. இல்லை என்றால் ஒரு தன்மானமற்ற கும்பலை நாளைய சந்ததியாக உருவாக்கி வைத்துவிட்டுப் போவதில், என்னதான் சன் டிவியின் எரிச்சலூட்டும் அதீத பரப்புரை காரணமாக இருந்தாலும், ரஜினிக்கு பெரும் பங்கு உண்டாகியிருக்கும். பின்பு அதனை நீக்குவது என்பது பெரும்பாடாகிவிடும். சன் டிவியின் கேவலப்படுத்தும் ப்ரமோக்களுக்கு ரஜினி உடனே ஒரு முற்றுப் புள்ளி வைப்பது நல்லது. 60 வயதுக்குப் பிறகு, ஒரு சூப்பர் ஹிட் எந்திரனுக்குப் பிறகு, இனி சன் பிக்சர்ஸில் ரஜினி நடிக்காமல் இருந்தால், அவருக்கோ நாட்டுக்கோ ரசிகர்களுக்கோ என்ன ஒரு பெரிய நஷ்டம் இருந்துவிடப் போகிறது?

நடிகராகத் தன் பலத்தை ரஜினி அறிந்துகொள்வது அவர் சார்ந்திருக்கும் திரையுலகத்துக்கும், அவரது ரசிகர்களான நாளைய தலைமுறைக்கும் நல்லது.

Saturday, October 2, 2010

எந்திரன் - பெரிதினும் பெரிது கேள்

எனது எந்திரன் விமர்சனம் தமிழ்பேப்பர் இணையத்தளத்தில் வெளியாகியிருக்கிறது. வாசிக்க இங்கே சொடுக்கவும். http://www.tamilpaper.net/?p=258

டெல்லி எருமை என்று திட்டினால் கோபம் வரும், அதையே கொஞ்சம் மாற்றி பசு போல என்று சொன்னால் பெருமையாக நினைத்துக்கொள்வார்கள் என்பார்கள். அதேபோல, காதில் பூ சுற்றிப் படம் பார்க்கச் சொன்னால் கோபப்படுவார்கள். அதையே அறிவியல் புனைகதை என்று சொல்லிப் பார்க்கச் சொன்னால், அந்தப் படம் நன்றாகவும் இருந்துவிட்டால், பெருமையாகப் பார்த்துவிட்டுப் போவார்கள். எந்திரன் – அறிவியல் புனைகதையின் வழியே நம் காதில் பூ சுற்றுகிறது. இதுவரை ஆங்கிலப் படங்கள் சுற்றி வந்த அதே பூவை ஒரு தமிழ்ப்படம் சுற்றுகிறது. அது நமக்குத் தெந்திருந்தும், வியப்பு ஏற்படாமலில்லை. ஏனென்றால் 150 கோடி பெறுமானமுள்ள பூ இது.

பொதுவாகவே ரஜினியின் திரைப்படங்களில் அவர் தமிழ்நாட்டு ஜேம்ஸ்பாண்டாகவும் சூப்பர்மேனாகவும்தான் வலம் வருவார். ஒரு அடி அடித்தால் பத்து பேர் எப்படி எகிறி விழுவார்கள் என்று சீரிய திரை விமர்சகர்களும் ஆய்வாளர்களும் ரஜினியை மட்டும் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அறிவியல் புனைகதை என்று சொல்லி அதற்கு சாமர்த்தியமான ஓர் அடித்தளத்தைக் கொடுத்து அவர்கள் வாயையும் அடைத்துவிட்டார் ஷங்கர். ஆனாலும் அவர்கள் சும்மா இருக்கப்போவதில்லை. இப்படத்தில் இருக்கும் அறிவியல் ஓட்டைகளையும், கலாசாரப் பழமைவாதத்தையும், சாதியத்தைத் தூக்கிப் பிடிக்கும் காட்சிகளையும் எப்படியாவது கண்டுபிடித்து எழுதுவார்கள். நாம் ரோஜாவை ரோஜாவாக அணுகுவோம்.

அறிவியல் புனைகதை என்னும் அடித்தளத்தை அமைத்துக்கொண்டு, தனது ஆதர்ச சூப்பர் ஹீரோவான ரஜினியை என்னவெல்லாம் செய்ய வைக்க முடியுமோ அதையெல்லாம் செய்து பார்க்க ஆசை கொண்ட ஷங்கர், அதில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார். ஒன்றிரண்டு காட்சிகளில் அந்த ஆசை கொஞ்சம் மீறிப்போய், விட்டலாச்சாரியா படங்களுக்கு அருகில் சென்றாலும்கூட, தொழில்நுட்ப வல்லமையைக் கொண்டு அதனைச் சமன் செய்கிறார். பொதுவாக இதைப் போன்ற படங்களையெல்லாம் கமலை வைத்து மட்டுமே பார்த்துப் பழகிப் போன ரஜினி ரசிகர்கள் தங்கள் தலைவர் இப்படி வருவதைப் பார்த்து எந்தக் காட்சியில் கை தட்டவேண்டும் என்பதைக் கூட அறியாமல் மெய்ம்மறந்து பார்க்கிறார்கள்.

படப்பிடிப்பில்...

ஏற்கெனவே பல நேர்காணல்களில் ரஜினி சொன்னது போல எதிர்பாத்திரம் அவரை அதிகம் ஈர்க்கிறது என்பதை இப்படத்திலும் காணமுடிகிறது. கடைசி 45 நிமிடங்கள் ரஜினி எடுக்கும் விஸ்வரூபம் அசரச் செய்கிறது. ரஜினிக்கு இணையாக அக்காட்சிகளில் தொழில்நுட்பமும் இசையும் கொள்ளும் எழுச்சி, நாம் ஓர் இந்தியப் படத்தை, அதுவும் தமிழ்ப்படத்தைப் பார்க்கிறோமா அல்லது அமெரிக்கத் தரத்திலான ஹாலிவுட் படத்தைப் பார்க்கிறோமா என்னும் சந்தேகத்தை ஏற்படுத்திவிடுகிறது.

தங்களது படங்களில் வரும் பாடல் காட்சிகளில் கிராபிக்ஸை ஊறுகாய் போல மட்டுமே தமிழ் இயக்குநர்களுக்குப் பயன்படுத்தத் தெரியும் என்ற வசைச்சொல் பல காலமாக இருந்தது வந்தது. அதனை ஓரளவு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் போக்கியது. இத்திரைப்படம், தமிழ்த் திரைப்படங்களில், கிராபிக்ஸில் பெரிய சாதனையையே நிகழ்த்தியிருக்கிறது.

பெரிதினும் பெரிது கேள் என்பதை ஷங்கர் தன் வழியில் புரிந்துகொண்டிருக்கிறார். இரண்டு ரஜினி போதாது என்று நினைத்தாரோ என்னவோ, கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்குத் திரையெங்கும் ரஜினியின் உருவங்கள். ஒரு ரஜினி ரசிகனுக்கு இது வாழ்நாள் ட்ரீட்டாக இருக்கும். அத்தனை ரஜினியைப் பார்த்து ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் மூழ்கிப் போன நான் இன்னும் அதே நினைப்பிலேயே இருக்கிறேன்.

திரைக்கதையின் வேகத்தில் எப்போதும் நம்பிக்கை கொண்டிருக்கும் ஷங்கர் இந்தப் படத்திலும் ஏமாற்றவில்லை. அடுத்தடுத்து வரும் காட்சிகளின் வேகம் பிரமிப்பைத் தருகிறது. நிர்வாணமான பெண்ணை ரோபோ தூக்கி வரும் காட்சி ஒரு எடுத்துக்காட்டு. ரோபோவின் நம்பகத்தன்மை நிமிடத்துக்கு நிமிடம் மாறும் காட்சி அது. அதேபோல் இன்னொரு கவிதையான காட்சி என்றால், ரோபோ கவிதை சொல்லும் காட்சி.

படத்தில் சில காட்சிகள் தேவையில்லாமல் நுழைந்து எரிச்சலை ஏற்படுத்துகின்றன. கொசு வரும் காட்சி, ஐஸ்வர்யா ராயை ரோபோ கடத்தும்போது வரும் கார் சேஸிங் காட்சி, கிளிமாஞ்சாரோ பாடலுக்கு முன்னால் கலாபவன் மணி வரும் காட்சி போன்றவை. அதேபோல் நம்மை அசர வைக்கும் காட்சிகளும் உண்டு. திரையெங்கும் ரஜினி உருவங்கள் ஆக்கிரமிக்கும் காட்சி, நல்ல ரோபோவாக ரஜினி விகல்பமில்லாமல் நடிக்கும் காட்சிகள் போன்றவை. அதிலும் மறக்கமுடியாத ஓரிடம், ரஜினியின் உடலைச் சுற்றி அம்மன் போல வேல் கத்தி சூலம் போன்றவை நிற்கும் காட்சி. ஷங்கரின் கற்பனை உச்சத்தைத் தொட்ட இடம் இது.

பெரிய மாஸ் ஓப்பனிங் இல்லாமல், ஓப்பனிங் பாடல் இல்லாமல், பஞ்ச் டயலாகுகள் இல்லாமல் இந்நாட்களில் ஒரு ரஜினி படம் வரமுடியும் என நிரூபித்திருக்கிறது இப்படம். வில்லனை எதிர்த்து சண்டை போடாமல் ரஜினி ஓடும் காட்சியும் கூட இதே ரகம்தான். எல்லாவற்றையும் ரஜினி ரசிகர்களுக்காக வட்டியும் முதலுமாகச் செய்து தீர்க்கிறார் ரோபோ ரஜினி.

ரோபோ கெட்டவனாக மாறும்போது, மாறும் ரஜினியின் நிறமும் அவரது உடல்மொழியும் மிரட்டுகின்றன. ரஜினியை சூப்பர் மேனாகப் பார்க்கும் சிறுவர்கள் இந்தப் படத்தை தங்கள் வாழ்நாள் முழுக்க மறக்காமல் வைத்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

அங்கங்கே தனித்துத் தெரியும் பளிச் வசனங்கள் சுஜாதாவை நினைவூட்டுகின்றன. ரோபோஸெப்பியன்ஸ், நக்கல்-நிக்கல் போன்றவை சில உதாரணங்கள். ரோபோவை அறிமுகப்படுத்தும் காட்சியில் சட்டென ஒரு ராகத்தைப் பாடும் ஒரு முதியவரும், கடவுள் இருக்காரா இல்லையா என ஒலிக்கும் குரலும் சந்தேகமேயின்றி சுஜாதாவேதான். ஏ.ஆர். ரகுமானின் இசையும், ரத்னவேலுவின் ஒளிப்பதிவும், ஓர் உலகத்தரமுள்ள திரைப்படத்துக்கு எப்படி ஒத்துழைக்கவேண்டுமோ அப்படி அமைந்திருக்கின்றன.

இதே படத்தில் கமல் நடித்திருந்தால் அது வேறொரு பரிமாணத்தை எட்டியிருக்கும். கூடவே கமலின் சில தன்முனைப்பு எரிச்சல்களும் சேர்ந்திருக்கும். இயக்குநரின் நடிகரான ரஜினி நடித்ததில், இப்படம் வேறொரு பரிமாணத்தைப் பெற்றுவிட்டது. கூடவே ரஜினியின் மாஸும் சேர்ந்துகொண்டதில், இப்படம் மிகப் பெரிய பிரம்மாண்டத்தைக் கண்முன் நிறுத்திவிட்டது.

மொத்தத்தில் எந்திரன் – தி மாஸ்.

Friday, October 1, 2010

எந்திரன் - சுரேஷ்கண்ணனுக்கு நன்றி!

சுரேஷ்கண்ணனுக்கு நன்றி!

பொதுவாக சுரேஷ்கண்ணன் ரஜினி படம் வருவதற்கு முன்பு ஒரு தடவைதான் திட்டுவார். இந்த முறை இரண்டு மூன்று முறை திட்டியதாலோ என்னவோ படம் எக்கசக்கமாக நன்றாக இருந்துவிட்டது. ரஜினி ரசிகர்கள் ஒவ்வொருவரும் சுரேஷ் கண்ணனுக்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள். வணிக சினிமாவுக்கு எதிராக அவரது போராட்டம் தொடரும் என்று அறிவித்திருக்கிறார். அடுத்தடுத்த ரஜினி படத்துக்கும் இப்படி அவர் திட்டி பதிவெழுதி, எஸ்பிபி முதல் பாட்டு பாடினால் எப்படி ரஜினி படம் ஹிட்டாகிவிடுமோ அதுபோல, இவர் திட்டினாலே ஹிட்டாகிவிடும் என்னும் உண்மையை நிலைநிறுத்தக் கேட்டுக்கொள்கிறேன்.

படம் - சான்ஸே இல்லை. ரஜினியின் தீவிர ரசிகர் ஷங்கரைப் பார்க்க நேர்ந்தால் நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்துவிடுவார்.

படம் பற்றிய எனது உணர்வு ரீதியான ரஜினி ரசிகனின் விமர்சனம் தமிழ் பேப்பரில் நாளை வெளிவரும். கோட்பாட்டு ரீதியான விமர்சனங்களை சுரேஷ்கண்ணன்கள் எழுதுவார்கள். இப்படியாக விமர்சகர் சுரேஷ்கண்ணன் ஒரு குறியீடாகவும் மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ் பேப்பரில் நாளை பார்க்கலாம்.

Sunday, September 26, 2010

Shubho Mahurat - பெங்காலித் திரைப்படம்

முன்பு எழுதி, இப்போதெல்லாம் எதுவுமே எழுதுவதில்லை என்னும் பட்டியலில் என்னைச் சேர்த்த, பஸ்ஸைச் சேர்ந்த அனைத்துலகத் தமிழ் கூறும் நெஞ்சங்களுக்கும் நன்றி.

நேற்று லோக் சபா டிவியில் Shubho Mahurat என்னும் பெங்காலி படம் பார்த்தேன். ஒரு துப்பறியும் படத்தை இப்படியும் எடுக்கமுடியுமா என்று அசந்துவிட்டேன். நாம் இதுவரை பார்த்திருப்பதெல்லாம் திடும் திடும் இசையுடன் கூடிய துப்பறியும் படங்கள் அல்லது சிபிஐ டைரிக்குறிப்பு போல வளவள என செயற்கைத்தனமாகப் பேசியே உயிரை எடுக்கும் (உயிரை எடுத்தவரைக் கண்டுபிடிக்கும்! - அந்தநாள் திரைப்படம் ஓர் ஆசுவாசம்) படங்கள். மாற்றாக இந்தப் படம் மனித உணர்வுகளை முன்வைத்துப் பேசுகிறது. திரைத் தொழிலில் இருப்பவர்களின் உணர்வுகளைச் சொல்வதற்கிடையில் இரண்டு கொலைகளுக்கான காரணத்தையும் கண்டுபிடிக்கிறது. இப்படி ஒரு படம் எடுக்க முடியும் என்று நினைத்ததே முதல் சாதனை. அதனை மிக நேர்த்தியாகத் திரையில் கொண்டு வந்தது இன்னொரு சாதனை. திரைத் தொழில் என்றாலே பிறன்மனை நோக்குதல் என்பதற்கு இப்படமும் விதிவிலக்கல்ல. எல்லாருக்கும் அதிகப்படியான யாரோ ஒருவருடன் வெளியில் சொல்ல இயலாத உறவு இருக்கிறது. இதற்கிடையில் இரண்டு கொலைகள் நடக்கின்றன. அதன் காரணத்தைச் சொல்வதுதான் திரைக்கதையின் நோக்கம். யார் கொலை செய்திருப்பார்கள் என்னும் மெல்லிய பதட்டம் நம்மைப் பிடித்துக் கொண்டாலும், அதைக் கண்டுபிப்பது படத்தின் நோக்கம் அல்ல. இதுதான் இந்தப் படத்தை மாறுபட்ட படமாகக் காட்டுவது. நடிகர்களின் மிக இயல்பான நடிப்பு இது போன்ற படங்களுக்கு மிக முக்கியம். இந்தப் படத்தில் அதுவும் கச்சிதமாக அமைந்திருக்கிறது. இதற்குமேல் இப்படத்தைப் பற்றிச் சொன்னால் படத்தைப் பார்க்கும்போது ஆர்வம் குன்றி விடலாம். எனவே மீதிப் படத்தை குட்டித் திரையில் காணுங்கள்.

26-செப்டெம்பர்-2010 மதியம் லோக் சபா சானலில் ஒளிபரப்பாகிறது.

படத்தைப் பற்றிய தகவல்களுக்கு - http://en.wikipedia.org/wiki/Shubho_Mahurat

Saturday, June 19, 2010

ராவணன் - சில குறிப்புகள்

ராவணன் திரைப்படம் குறித்த என கருத்துங்கள் இங்கே.

நன்றி: இட்லிவடை.

* ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பார்கள். திடீரென்று இன்றே படம் பார்க்க நினைக்க வைத்த ஊழ்வினை, டிக்கெட் கிடைக்க வைத்து, படம் பார்க்க வைத்து ஊட்டிவிட்டது.

* எதையும் வெளிப்படையாக வெளியில் சொல்லாமல், படம் எடுத்து அனைவரையும் ஏமாற்ற நினைக்கும் மணி ரத்னத்தின் ஏமாற்று வேலை இதிலும் தொடர்கிறது. படத்தின் ஆரம்பித்திலேயே சொல்கிறார்கள் - இதில் வரும் சம்பவம் யாரையும் குறிப்பிடுவன அல்லவாம். தைரியமிருந்தால் வெளிப்படையாகச் சொல்லிப் படம் எடுக்கவேண்டும். வெளியில் சொன்னால் அராஜகம் செய்வார்கள் என்று மணி ரத்னம் சொல்ல வாய்ப்பில்லை. ஏனென்றால் ஒரு தடவை கூட அவர் பொதுவில் உண்மையைச் சொல்லிப் படம் எடுத்ததில்லை. இருவர் படத்துக்கும் தமிழக அரசியலுக்கும் தொடர்பில்லை என்று சொன்னவர் மணி ரத்னம். தளபதி கதைக்கு மகாபாரதத்துக்கு நன்றி கார்டு போடாதவர். இதில் ராமாயணத்துக்கும் நன்றி கார்டு போடாமல் விட்டுவிட்டார்.


* கார்த்திக்கை அனுமாருக்கு இணையாகக் காட்ட, முதல் காட்சியிலேயே கார்த்திக்கை குரங்கு போல தவ்வ வைத்தது ‘அட்டகாசமான யுத்தி.’ கார்த்திக்கும் கடைசி வரை தனது குரங்குச் சேட்டையை நடிப்புதான் என்று நம்பி செய்துகொண்டே இருக்கிறார். அதிலும் சீதை ஒரு மரத்தடியில் இருக்கும்போதே மேலே இருந்து அனுமார் பேசும் காட்சி நகைச்சுவையின் உச்சக்கட்டம். அந்த அனுமார்தான் நம்மைக் காப்பாற்றவேண்டும்.

* சீதை உலக அழகி என்பதற்காக கிழவி ஆன பிறகும் நடித்துக்கொண்டே இருந்தால் எப்படி? சீதையானாலும் கிழவி அல்லவா! ஒரு சில காட்சிகளில் சரோஜாதேவி போலத் தெரிந்து பல பெரிசுகளின் உயிரை எடுக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

* தமிழ் பேசினால் நடிக்க வராது என்பதை ஐஸ்வர்யா ராய் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

* நடிகர்களின் முகத்துக்கு அருகில் க்ளோஸ் அப் காட்சி வைத்து போரடித்துப் போன மணி ரத்னம், மூக்கு காது கண் என ஒவ்வொன்றுக்கும் க்ளோஸ் அப் காட்சிகள் வைத்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்.

* வசனம் பாதி புரியவில்லை, மீதி கேட்கவில்லை.

* சுஹாசினி ஜெயா டிவியில் பேசுவது போலவே நினைத்துக்கொண்டு தனது இண்டலக்சுவல் பேத்தலை வசனமாகக் கொட்டியிருக்கிறார். இது மணி ரத்னத்துக்கும் பிடித்துப் போன விஷயம் என்பதால் பல இடங்களில் வசனங்கள் பல்லை இழித்துக்கொண்டு நிற்கின்றன.

* திடீர் திடீரென மேட்டுக் குடி என்றெல்லாம் வசனம் வருகிறது. ராமாயணம் வழியே தொழிற்சங்க வசனம் எழுதிப் பார்த்திருக்கிறாரோ என்னவோ. கார்டு போடும்போது நன்றி ரிலையன்ஸ் என்றும் அம்பானி என்றும் போடுகிறார்கள். ஓங்குக முதலாளிகளாகப் பார்த்து நடத்தும் தொழிற்புரட்சி.

* படம் முழுக்க அருவியின் இரைச்சல். கூடவே ஏ.ஆர். ரகுமானின் பின்னணி இசை இரைச்சல். யாரோ ஒரு பெண்மணி கடைசி வரை படம் முழுக்க ஹோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ எனக் கத்திக்கொண்டே இருக்கிறார். பணம் செட்டில் செய்யவில்லையோ என்னவோ. இசைப்புயலாக நுழைந்த போது சின்ன வயசு என்றார்கள். எத்தனை அனுபவம் வந்தாலும் பின்னணி இசையில் இன்னும் சின்ன வயசாகவே அவர் இருப்பது கொஞ்சம் ஓவர்.

* ஒரே ஒரு உருப்படியான பாடலை தேவையற்ற இடத்தில் வைத்து சொதப்பியிருக்கிறார் மணி ரத்னம். வசனமா பாடலா என்று அனைவரும் ஸ்தம்பித்து நிற்கும்படியாக மற்ற வசனப் பாடல்கள் வந்து மறைகின்றன. இது போன்ற படத்துக்கு எதற்குப் பாடல் என்னும் தைரியம் இன்னும் மணி ரத்னத்துக்கு வரவில்லை. படம் கொஞ்சமாவது சம்பாதிக்க வேண்டாமா என்ற எண்ணமாக இருக்கலாம்.

* ராவணன் என்றால் நெகடிவ் கேரக்டர், அதனால் கொஞ்சம் அலட்ட வேண்டும் என்று நினைத்து விக்ரம் அடிக்கும் அலட்டல் தாங்க முடியவில்லை. பக் பக் பக் என்று அவர் என்னவோ செய்யும் காட்சி மனதைப் பிசைகிறது, எப்படி ஒரு நல்ல நடிகரை ஒரே அடியாய் அடித்துப் போட்டுவிட்டாரே மணி ரத்னம் என. அதிலும் ஐஸ்வர்யா ராய் கடைசிக் காட்சியில் அதே போலச் செய்யும்போது, மணி ரத்னத்தின் முகம் கிராஃபிக்ஸில் மறைந்து கே.எஸ்.ரவிகுமார் பக் பக் பக்கெனச் சிரிப்பது படத்தின் ஹைலைட்.

* பிரபுவைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. இதில் கண்மை வேறு. என்ன கொடுமை சரவணன் இது என்று அவர் சீரியஸாகப் பேசிய தமிழ் மக்கள் இப்போதும் அவர் சீரியஸாக நடிக்கும்போதெல்லாம் சிரிக்கிறார்கள். இப்படி ஒரு வரம் கேட்டாலும் கிடைக்காதது.

* ரஞ்சிதாவுக்கு ’ஒரு சீன்’ கூட இல்லை. ஏன் வந்தார் என்பதே தெரியவில்லை. ஆனாலும் தமிழக மக்கள் விடாமல் கைத்தட்டுகிறார்கள்.

* அழகான கதாநாயகி வருகிறார்? என்ன ஆகும் அடுத்து? ஆமாம், காதல்தான். அண்ணன் முரட்டு அண்ணன், என்ன ஆகும் அடுத்து? அதேதான், விக்ரம் கொஞ்சம் முறைப்புடன் கொஞ்சம் சிரிப்புடன் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறார். கல்யாணம் நடக்கிறது, என்ன ஆகும்? நாம் நினைப்பது போலவே ப்ரியாமணியைக் கெடுத்து விடுகிறார்கள். அப்புறம் என்ன ஆகும்? அண்ணன் வீறு கொண்டு எழுந்து, தனிப்பட்ட வன்மம் தீர்க்கக் கிளம்புகிறான். பொதுவுடைமை வசனம் பேச மட்டும் மறப்பதில்லை! இன்னும் எத்தனை நாள்தான் இப்படி பார்ப்பது? அதுவும் மணி ரத்னத்தின் படத்தில்! ஜீரணிக்கவே முடியவில்லை.

* இத்தனை நேரம் ஓடிய படத்தில் ஒன்று கூடவா உருப்படி இல்லை? அந்த சந்தோஷத்தை நமக்குத் தருவது சிவன் மட்டுமே.

* ஐஸ்வர்யா ராயும், விக்ரமும் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள் என்றெல்லாம் உணர்ச்சி வசப்படலாம். அதெல்லாம் எதோடும் ஒட்டாமல் நிற்பது பெரிய குறை.

* பிரிதிவிராஜ் ஐஸ்வர்யா ராயை நினைத்து உருகிறார். ஆனால் ஐஸ்வர்யா ராய் உருகுவதையெல்லாம் காண்பிக்கவில்லை. எங்கே பின்னர் ஐஸ்வர்யா ராய் விக்ரமை நினைத்து உருகுவது போல் காண்பித்தால் மக்கள் நெளிவார்கள் என்று இயக்குநர் நினைத்துவிட்டாரோ என்னவோ. ஆனால் திடீரென்று என் கணவர் கடவுளுக்கும் மேல் என்றெல்லாம் பேசுகிறார் ஐஸ்வர்யா ராய். அங்கே ஏன் கடவுள் வந்தார், ஏன் கடவுள் சிலை வந்தது என்பதற்கெல்லாம் ஒரு லாஜிக்கும் இல்லை. ஒரே ஒரு காரணம், சுஹாசினி தனது இண்டெலக்சுவலைக் காட்டவேண்டும் என்பது மட்டுமே!

* மணி ரத்னம் இப்படி பழங்காலக் கதையை மார்டனாக எடுக்கிறேன் என நினைத்துக்கொண்டு, பாதி கேட்காத வசனத்தைப் பேசிகொண்டு, சுஹாசினியை வசனம் எழுத வைத்துக்கொண்டு, ஐஸ்வர்யா ராயை நடிக்க வைத்துக்கொண்டிருந்தால், இனியும் காணச் சகிக்காது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தைரியமாக வெளியில் உண்மையைச் சொல்லிப் படம் எடுக்க முன்வரவேண்டும். இல்லை என்றால் காதல் கதையை எடுப்பதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். ஒரு நேரத்தில் இரண்டு மொழிகளில் எடுப்பதால், சில காட்சிகளில் வரும் நடிகர்கள் தமிழ் முகமாக இல்லாமல் இருப்பது பெரும் அந்நியத் தன்மையை ஏற்படுத்துகிறது.

* ராவணன் என்று படம் வருகிறது. எப்படியும் சீதை ராவணனுடன் சேர்ந்து விடுவாள் என்று நினைத்து, கலை சுதந்திரத்தை ஆதரிக்கவேண்டும் என்றெல்லாம் முன்முடிவுகளுடன் சென்றேன். படத்தைப் பார்த்தால், சீதை மீண்டும் ராமனுடனே ஓடினால் கூட சந்தோஷப்பட முடியாத அளவு உள்ளது.

Thursday, April 15, 2010

ஏ.ஆர். ரகுமானின் பேட்டியும், நிறுத்தப்பட்ட எனது கமெண்ட்டும்

இந்த சிறிய விஷயத்தை ஒரு பதிவாகப் போடுவதற்கே அசிங்கமாகத்தான் உள்ளது. ஆனாலும் பதிந்து வைப்போம் என்பதற்காக இதனைப் போட்டு வைக்கிறேன்.

ஏ.ஆர். ரகுமானின் பேட்டி உதயம் என்ற வலைப்பதிவில் (http://kalyanje.blogspot.com/2010/04/blog-post.html) வெளிவந்திருந்தது. வாசித்துவிட்டு, நேற்று முன் தினம் நான் ஒரு சிறிய கமெண்ட்டைப் போட்டேன். பேட்டி குறித்த நெகடிவ் கமெண்ட் அது. அது அங்கு வெளியிடப்படவில்லை. அந்த கமெண்ட்டைப் போய் ஏன் நிறுத்தப் போகிறார்கள் என்று நினைத்து நேற்று மீண்டும் இன்னொரு கமெண்ட் போட்டேன், எனது கமெண்ட் ஏன் வரவில்லை ஏதேனும் தொழில்நுட்பப் பிரச்சினையா என்று கேட்டு. அதுவும் இதுவரை வெளிவரவில்லை.

நான் போட்ட கமெண்ட்டுகளைச் சேமித்து வைத்துக்கொள்ளவில்லை. நான் போட்ட முதல் கமெண்ட் இப்படி இருந்தது.

நல்ல காமெடியான பேட்டி. ஏ.ஆர். ரகுமான் இவ்வளவு மோசமாகப் பேட்டி கொடுத்து இதுவரை நான் பார்த்ததில்லை.

//தமிழில் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. அதற்கேற்ற மாதிரி படம் இல்லையென்றால், படம் ஃபிளாப் ஆகிறது. படத்திற்குப் பதிலாக ஆல்பம் பண்ணலாம். படம் பண்ணும்போது என்னாகிறதென்றால், பாட்டு நன்றாக போட்டுக்கொடுத்துவிட்டு ஒரு எதிர்பார்ப்பையும் கிளறி விட்டுவிட்டபின் தியேட்டருக்கு வந்து பார்த்துவிட்டு திட்டிவிட்டுப் போகிறார்கள். ‘ஏன் இந்தாளு இந்தப்படத்துக்கு மியூசிக் போட ஒத்துக்கிட்டாரு, இவனை நம்பி படம் பார்க்க வந்தால், இது என்ன இப்படி இருக்கு?’ என்று கேட்கிறார்கள். அப்படியல்லாமல், இந்த எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கும் படம் கிடைத்தால் கண்டிப்பாகத் தமிழில் படம் பண்ணுவேன். நான் பட்ஜெட் பற்றிப் பேசவில்லை. ஐடியா பற்றிப் பேசுகிறேன். நூறு கோடியில்தான் படம் பண்ண வேண்டும் என்றில்லை. ஒரு கோடியிலும் இருக்கலாம். பத்து லட்சத்திலும் இருக்கலாம். ஆனால், புதிதாகப் பார்வையாளர்களுக்கு ஏதாவது வேண்டும்.//

சரி, கேட்டுக்கிட்டோம்.

இதுதான் நான் போட்ட முதல் கமெண்ட், ஏறக்குறைய இப்படித்தான் இருந்தது.

இரண்டாவதாக நான் போட்ட கமெண்ட், ஏறக்குறைய இப்படி.

நான் போட்ட கமெண்ட் வெளிவரவில்லை. ஏதேனும் தொழில்நுட்பப் பிரச்சினையா அல்லது மட்டுறுத்தலா?

இதுவும் வெளிவரவில்லை.

ஏ.ஆர். ரகுமானின் பேட்டி மீது வைக்கப்படும் மிக மேலோட்டமான குற்றச்சாட்டுக்கூட வெளியிடப்படாமல் ஏன் இருக்கவேண்டும்? அந்த அளவுகூட எதிர்ப்பை விரும்பவில்லை பதிவர் என்பது தெரியவில்லை. திரைத்துறையில் இருப்பதால் அதீத கவனம் எடுத்துக்கொள்கிறாரோ என்னவோ. அல்லது பாராட்டுகள் மட்டும் காதில் கேட்டால் போதும் என்கிற எண்ணமா எனத் தெரியவில்லை.

எல்லாம் அவன் செயல்!

Saturday, March 27, 2010

அங்காடித் தெரு - நாம் வாழும் தெரு

வெகு சிலமுறை நான் சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருக்கிறேன். எல்லாம் நம்ம ஊருப் பசங்க என்பதைக் கேட்டு, பெருமையுடன் காணச் சென்ற எனக்கு அங்கே முதலில் தோன்றியது குழந்தைத் தொழிலாளர் சட்டம் இருக்கிறதா என்பதுதான். பின்னர் அதுவே பழகிவிட்டது. ஒருதடவை ஒரு பையனிடம் என்னப்பா வயசு என்ற கேட்டபோது பதினாறு என்று சொல்லிவிட்டு, உடனே சட்டென்று மாற்றி பதினேழு என்று சொன்னான். ஆனால் அவன் வயது உண்மையில் 14வது இருக்குமா என்ற சந்தேகம் வந்தது எனக்கு. பதினாறுன்னு சொன்னாலும் பதினேழுன்னு சொன்னாலும் ரெண்டும் ஒண்ணுதான் என்றேன். அந்தப் பையன்களை நினைக்கும்போது பாவமாக இருக்கும். எனக்குத் தோன்றும் பாவம் வெறும் ஒரு வரிப் பாவம். ஆனால் வசந்தபாலன் இவர்களுக்குப் பின்னே இருக்கும் உலகத்தையே காட்டிவிட்டார். சென்னையில் வாழும் ஒவ்வொரு மனிதரையும் இந்தப் படம் ஏதோ ஒருவகையில் நிச்சயம் பாதிக்கும். அடுத்த முறை சரவணா ஸ்டோர்ஸ் போன்ற இடத்துக்குச் செல்பவர்களது எண்ணம், பார்வையில் கொஞ்சமாவது மாற்றம் இருக்கும். இந்தப் பசங்களோட கஸ்டமர் சர்வீஸ் மோசம் என்றெல்லாம் யாரும் சொல்வார்களா எனக்கூடத் தெரியவில்லை.

செந்தில் முருகன் ஸ்டோர்ஸின் களமும் ரெங்கநாதன் தெருவும் ஒரு மிகப்பெரிய வில்லனைப் போலத் தோற்றம் அளிக்க வைக்கும் முயற்சியில் வசந்தபாலன் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார். வாழ்க்கையின் சிரிப்பில் தென் தமிழ்நாட்டு இளைஞர்கள் செந்தில் முருகன் ஸ்டோர்ஸால் விழுங்கப் படுகிறார்கள். அங்கே அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், காதல், காமம், கும்மாளம் என எல்லாவற்றையும் இத்திரைப்படம் சிறப்பாக முன்வைக்கிறது. நான் கடவுள் திரைப்படத்தில் பிச்சைக்காரர்களின் உலகத்தில் நமக்குத் தெரியாத பலவற்றை நாம் பார்த்ததுபோல, இத்திரைப் படத்தில் இது போன்ற இளைஞர்களுக்கு நடக்கும் நமக்குத் தெரியாத பல்வேறு காட்சிகள் நம் கண்முன் விரிந்து நம்மைப் பதற வைக்கின்றன.

ஒவ்வொரு சிறிய காட்சியையும் முக்கியக் கதையோடு இணைப்பதில் இயக்குநர் காட்டியிருக்கும் ஆர்வம் பழைய உத்தி. சம்பந்தமில்லாமல் வரும் காட்சிகள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் தன்னம்பிக்கையைக் காட்டுவதற்கோ, அல்லது பின்னர் கதாநாயகன் நாயகிக்கு உதவுவதற்கோ சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பது தெரிந்துவிடுகிறது. இதுபோன்ற சில குறைகள் நிறையவே இருக்கின்றன. படத்தின் பின்பாதியில் கொஞ்சம் இழுவை அதிகம். தேவையற்ற, செயற்கைத்தனம் கூடிய வசனங்கள் உண்டு. படம் முடிந்த பின்பு மீண்டும் இழுக்கப்படும் திரைப்பட உச்சக்கட்டக் காட்சி உண்டு. உச்சக்காட்சி என்ற ஒன்றில்லாமல் தமிழர்களுக்கு முழுத்திரைப்படம் பார்த்த உணர்வு வராது என்பதாலோ என்னவோ வசந்தபாலன் இப்படி செய்திருக்கவேண்டும். அதிலும் நல்ல ஒரு உத்தியைக் கையாண்டிருக்கிறார். படத்தோடு தொடர்பே இல்லாத ஒரு கிளைமாக்ஸை முதலிலேயே காட்டிவிட்டு, உச்சக்காட்சிக்கு முன்னரே வந்துவிடும் உச்சக்காட்சி மனோபாவத்தைக் குறைத்துவிட்டார்.

கதாநாயகியின் தங்கை பெரியவளாகும் கதையெல்லாம் சுற்றி அடிக்கிறது. இக்காட்சி இல்லாமலேயே, கதாநாயகி கதாநயாகனை மீண்டும் எற்பதற்கான சரியான முகாந்திரங்கள் உள்ளன. ஜெயமோகனின் கூர்மையான வசனங்கள் அசத்துகின்றன. கதாநாயகன் கதாநாயகியிடன் மிகக் கோபமாகப் பேசும் வசனமே போதுமானது கதாநாயகி மனம் மாறுவதற்கு. கதாநாயகியின் தங்கை வரும் காட்சிகளெல்லாம் வலிந்து சேர்க்கப்பட்டிருப்பது போலத் தோன்றுகிறது. அதிலும் அந்தப் பெண் இருக்கும் வீடு - தமிழ்த் திரையுலகில் அது யார் வீடாக இருக்கமுடியும்? அந்தப் பெண் கொடுமைப்படுத்தப்படுகிறாள். தீட்டு என்று சொல்லி வீட்டுக்குள் சேர்க்கமாட்டேன் என்கிறார்கள். நாய் கட்டிப்போட்டிருக்கும் இடத்துக்குப் பக்கத்தில் தட்டுமுட்டுச் சாமான்களோடு அவள் கிடக்கிறாள். ஆமாம், அது பிராமண வீடு.

பின்னணி இசையைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால் கர்ண கொடூரம் என்றுதான் சொல்லவேண்டும். இல்லை என்றால் நம்பிக்கைத் துரோகம் என்று சொல்லலாம். இத்தனை ஆழமான, உணர்வு ரீதியான படத்துக்கு பின்னணி இசை செய்யும் மாபாதகத்தை மன்னிக்கவே முடியாது. ஒரு காட்சி தரவேண்டிய சோகத்தை, பதற்றத்தை இசை வழியாகத் தந்துவிட நினைத்து இசையமைப்பாளர்(கள்) செய்யும் குரங்குச் சேட்டைகளை என்னவென்று சொல்ல. தலையெழுத்து. இரண்டு பாடல்கள் கேட்க இனிமையாக உள்ளன.

கதாநாயகன் நன்றாக நடித்திருக்கிறார். அடுத்த படங்களில் புருவத்தை இப்படி நெறிக்கவேண்டியதில்லை. கதாநாயகி - அசத்தல். இவர் கற்றது தமிழ் படத்தில் நடித்தவர் என நினைக்கிறேன். அந்தப் படத்திலேயே நன்றாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் அசுரப் பாய்ச்சல். சிரிப்பு, வெட்கம், கோபம் எல்லாவற்றையும் நினைத்த மாத்திரத்தில் முகத்தில் கொண்டு வருகிறார். இதுவே படத்தின் பலம். என்னைக் கவர்ந்த விடுகதை நீனா, மின்சாரக் கனவு கஜோல், சிதம்பரத்தில் அப்பாசாமி நவ்யா நாயர் வரிசையில் அங்காடித் தெரு அஞ்சலியும் சேர்ந்துகொள்கிறார்.

நடிகர்களைப் புறந்தள்ளிவிட்டு இலக்கியவாதிகளும் அரசியல்வாதிகளும் சிறப்பாக நடிக்கத் தொடங்கிவிட்டார்கள். பெரும் குணச்சித்திர தொழில்முறை நடிகர்களே அசரும் வண்ணம் நடிக்கிறார்கள். அவள் பெயர் தமிழரசி படத்தில் தியடோர் பாஸ்கரனும் வீரச்சந்தானும் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்கள். இந்தமுறை பழ. கருப்பையா. இப்படத்தில் அண்ணாச்சியாக வந்து அட போட வைக்கிறார்.

இன்னொரு பலம் ஜெயமோகன். பல வசனங்கள் மிகக்கூர்மையாக உள்ளே இறங்குகின்றன - காட்சியோடு. காட்சியோடு இறங்கும் வசனம் என்பதுதான் முக்கியம். காட்சி உக்கிரமாக இல்லாமல் வசனம் மட்டும் முழித்துக்கொண்டு நிற்கும் படங்கள் பாலசந்தர்த்தனப் படங்களாக எஞ்சிவிடும். அந்த அபாயம் இப்படத்துக்கு நேரவில்லை. எத்தனை ஆழமாக எழுதினாலும் எப்போதும் ஜெயமோகனுக்குள்ளே விழித்திருக்கும் பெரும் நகைச்சுவையாளர் ஒட்டுமொத்த படத்தையே ஹைஜாக் செய்துவிட்டார் என்றே சொல்லவேண்டுன். நான் கடவுள் படத்தில் எப்படி இதே நகைச்சுவையாளர் படத்தை வேறு தளத்துக்கு மாற்றினாரோ அப்படி இங்கேயும் மாற்றுகிறார். ஜெயமோகன் கதை வசனம் எழுதும் படத்தில் இதுவும் முக்கியமான படமாக இருக்கும். ஒன்றிரண்டு இடங்களில் வரும் தேவையற்ற வசனங்கள், இயக்குநரால் மக்களின் புரிதலுக்காக சேர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன்.

நிச்சயம் நல்ல படம். இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் வெட்டித் தள்ளியிருந்தால் மிக நல்ல படமாக இருந்திருக்கும். விருதுத் திரைப்படங்கள் போன்ற திரைப்படங்களைப் போலவே, இது போன்ற நல்ல திரைப்படங்களும் தேவை. அந்த வகையில் இத்திரைப்படம் முக்கிய இடத்தைப் பெறும். சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பெரு முதலைக் கடைகளில் வேலை பார்ப்பவர்கள் இப்படத்தைப் பார்த்தால் என்ன உணர்வு அடைவார்கள் என்பதை யோசிக்க யோசிக்க இப்படம் இன்னும் பிடிக்கத் தொடங்குகிறது.

(இந்த விமர்சனத்தை இட்லிவடைக்கு அனுப்பியிருந்தேன். அவர் திடீரென்று காணாமல் போய்விட்டதாலும், இதை இதுவரை வெளியிடாததாலும் நானே வெளியிடுகிறேன். வழக்கம்போல இட்லிவடைக்கு நன்றி!)

Thursday, February 25, 2010

படித்துறையில் ஒருநாள்

இப்பதிவை வெளியிட்டுள்ள இட்லிவடைக்கு நன்றி.

இப்பதிவைப் படிக்க இங்கே சொடுக்கவும்.


ஏன் இட்லிவடையில் தொடர்ந்து எழுதுகிறீர்கள், நாந்தான் இட்லிவடை என்றெல்லாம் கேட்கவேண்டாம். :-) எனக்கு இட்லிவடை யாரென்பதுகூடத் தெரியாது. நம்புபவர்கள் நம்பிக்கொள்ளலாம். தேவைப்படும்போதெல்லாம், ஒரு நிமிடத்துக்கு சராசரியாக 7 பேர் படிக்கும் இட்லிவடை பதிவில் தொடர்ந்து எழுதவேன் என்றும் சொல்லிக்கொள்கிறேன்!

படித்துறையில் ஒருநாள்

எல்லாமே வித்தியாசமாக இருந்தது. ஒரு வசனத்தைப் பேச நூறு தடவை முயன்றார்கள். எப்படி சலிக்காமல் இதே வசனத்தைப் பேசுகிறார்கள் என்று முதலில் ஆச்சரியத்தோடும், பிறகு சலிப்போடும், அதன் பிறகு எரிச்சலோடும் பார்த்துக்கொண்டிருந்தேன். ஓர் இயக்குநர் ஒரு படம் எடுத்தவுடன் எப்படி பைத்தியம் ஆகாமல் இருக்கிறார் என்கிற ஆதாரமான சந்தேகம் வந்தது. பக்கம் பக்கமாக வசனம் பேசித் தள்ளிய சிவாஜியை நினைத்து வியப்பாக இருந்தது. சந்திரமுகி கதாபாத்திரத்துக்கு பின்னணி பேசியவருக்கு இதுவரை நான் கோவில் கட்டாததை நினைத்துக் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

இயக்குநர் சுகாவின் படித்துறை படத்தின் டப்பிங்குக்குச் சென்றிருந்தேன். ‘பதறண்டாம் கேட்டேளா, நீங்களும் டப்பிங் பேசணும்’ - திடீரென்று சொன்னார் சுகா. இது என்ன ஒரு மேட்டரா என நினைத்துக்கொண்டு சென்றபின்புதான் தெரிந்து, வேண்டாத வேலையில் இறங்கிவிட்டோமோ என்று. அங்கே ஹீரோ ஒவ்வொரு வசனமாக மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருந்தார். அடுத்து என்னை பேசச் சொன்னார்கள். ஐந்து வார்த்தை உள்ள ஒரு வசனம். மீண்டும் மீண்டும் பேசினேன். படிக்கிற காலத்துல இப்படி படிச்சிருந்தா இன்னும் பத்து மார்க் கூட கிடைச்சிருக்கும் என்று என் அப்பா சொல்வது போல எங்கோ கேட்டது. எனக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. வார்த்தை க்ளியரா இல்லை என்றார் சுகா. இப்ப க்ளியரா இருக்கு, ஆனா எமோஷனலா இல்லை. எமோஷனலா இருக்கு, ஆனா நம்ம ஊர் பாஷ இல்லயே. இப்ப எல்லாம் சரியாத்தான் இருக்கு, ஆனா வசனத்த நீங்களே எழுதிட்டீங்க, நான் எழுதினத பேசினா நல்லாயிருக்கும். இப்படி பல. வசனம் ரொம்ப நீளமா இருக்கு என்று சொல்லலாமா என்று நினைத்தேன்! அடுத்த தடவை முதலில் டப்பிங் வைத்துவிட்டு, அப்புறம் படம் எடுக்கச் சொன்னால் ஈஸியாக இருக்குமே என்றெல்லாம் தோன்றியது. ஒரு வழியாக ஐந்து வார்த்தை வசனத்தைப் பேசி முடித்தேன். (என்ன பேசினேன் என்பது எனக்கு நினைவில்லை. அந்த வசனம் படத்தில் வந்தால் அதை மீண்டும் மனப்பாடம் செய்துகொள்ளவேண்டும்! வரலாறு நமக்கு மிகவும் முக்கியம்.) அடுத்து கொஞ்சம் நீண்ட வசனம். ஆமாம், 7 வார்த்தைகள் இருக்கும் என நினைக்கிறேன். அப்படி இப்படி என்று என்னவெல்லாமோ எப்படியெல்லாமோ சொல்லிப் பார்த்தேன். உண்மையில் கதை எழுதுவதும், கட்டுரை எழுதுவதும், கவிதை எழுதுவதும், முக்கியமாக படத்தை விமர்சனம் செய்வதும் அதுவும் அதனைக் கிழிப்பதும்தான் எவ்வளவு எளிமையானது.

வாய்விட்டே சொன்னேன், ஒரு படத்தை எடுத்த பின்னால டைரக்டருக்கு கோட்டி பிடிக்காததே சாதனதாங்கேன். ஒருவர் சொன்னார், பத்து படத்தையும் பாத்தவன் கதய யோசிச்சேளா என்று. சரிதான் என நினைத்துக்கொண்டேன். இன்னொரு காட்சியில் ஒரு நோயாளி முனகும் சத்தத்தைக் கொடுக்கவேண்டும். இவ்வளவு சத்தமா பேச முடிஞ்சா அவன் ஏன் ஆஸ்பத்திரிக்கு வராங்கிய. சரி என்று கொஞ்சம் குரலைக் குறைத்தேன். இவ்வளவு மெதுவா பேசினா ஒண்ணும் கேக்காது. மீடியமாகப் பேசினேன். இதுல பேச்சே வரக்கூடாது, வெறும் எக்ஸ்பிரஸந்தான். இது படத்தில் 20 செகண்டு வந்தால் அதிகம். அதற்கு ஒரு முப்பது தடவை முயற்சித்தார்கள். நீங்க மூச்சு விடும்போது ஆளு உள்ள இழுக்கான், நீங்க இழுக்கும்போது ஆளு வெளிய விடுதான். சின்க் ஆல பாருங்க. ஒரு வழியாக சின்க் ஆனது. பெருமூச்சு ஒன்றை விட்டேன். இப்ப நா எப்படி வேணா மூச்சு விடலாம் கேட்டியளா. வேறொரு கதாபாத்திரம் பேசிக்கொண்டிருக்கும்போது, டி டி எஸ்ஸில் கேட்கும் சின்ன எக்ஸ்பிரஸனுக்கு இவ்வளவு உழைப்பு.

உண்மையில் சினிமா உழைப்பின் மொழி. எந்த ஒரு மோசமான படத்தின் பின்னாலும் நிச்சயம் உன்னதமான உழைப்பு இருந்தே தீரும், ஏதோ ஒரு வடிவில். அதோடு சேர்ந்து படமும் சிறப்பாக அமையும்போது எல்லாமே உன்னதமாகிவிடுகிறது. தவறும்போது எல்லாமே உதாசினப்படுத்தப்பட்டுவிடுகிறது.

ஓர் உதவி இயக்குநர் சொன்னார். (எனது விமர்சனங்களை படித்திருக்கிறார் போல) இனிமே எழுதும்போது இதெல்லாம் மனசுல இருக்கும்ல என்று. விமர்சகர்கள் மோசமான ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று அவர் தெரிந்துகொள்வார். உண்மையில் இரு தரப்புமே நியாயங்களைக் கொண்டுள்ளது. உழைப்பின் உன்னதத்தோடு வரும் திரைப்படம் ஒன்று மிகவும் விமர்சிக்கப்படும்போது திரைப்படத்துடன் நேரடியாகப் பங்குகொண்டவர்கள் அடையும் நிம்மதியின்மை நிச்சயம் உண்மையானது. ஆனால் விமர்சனம் என்பது இதையெல்லாம் என்றுமே பொருட்படுத்தாமல் இயங்கிவருகிறது. ஏனென்றால் விமர்சனம் என்பது ஓர் ஒப்பீடு மட்டுமே. ஒப்பீடாலேயே தொடர்ந்து மாதிரிகள் கட்டமைக்கப்படுவதால் விமர்சனம் உழைப்பை மெல்லப் புறந்தள்ளுகிறது. ஆனால் விமர்சகன் ஒருவன் படம் எடுக்கும் விதத்தை முழுக்க முழுக்க கூடவே இருந்து பார்த்தானால் அவனது பார்வை இன்னும் கூர்மையடைவதோடு, எதை ஏன் எப்படி சொல்கிறோம் எனபதைவிட எதை எப்படிச் சொல்லக்கூடாது என்பது நிச்சயமாகப் புலப்படத் தொடங்கும் என்று தோன்றியது. பாலுமகேந்திரா சுகாவுக்கு முன்பு எழுதிய கடிதத்தில் ‘என்ன பலன் என்று தெரியாமலேயே கடும் உழைப்பைக் கோரும் ஊடகம் திரைப்படம்’ என்ற பொருள்பட எழுதியிருந்தாராம். கடும் உழைப்பைக் கோரும் ஒரு திரைப்பட அனுபவத்தை இன்று நேரில் பார்த்தேன். நான் இன்று பார்த்தது நூறில் ஒரு பங்கு கூட இல்லை என்பதுதான் இதில் முக்கியமானது. இன்றைக்குப் பார்த்ததாவது மூளையை அழுங்கடிக்கும் விஷயம்தான். டப்பிங்குக்கு முன்னதாக படத்தின் வேலைகள் கோரும் க்ரியேட்டிவிட்டி உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் தேவையான உழைப்பை நாம் இதிலிருந்தே புரிந்துகொள்ள முடியும்.

இன்னும் சில முக்கல் முனகல்களைச் சொன்னேன். டப்பிங் முடிந்தது எனக்கு. கிட்டத்தட்ட 2 மணி நேரத்தில் நான் பேசியது மொத்தம் 2 நிமிடங்கள் இருக்கலாம்! சரி போகலாம் என்றார் சுகா. விருது எப்போ தருவாங்க என்று கேட்டேன். பை கொண்டாந்திருக்கேளா என்றார். இல்லை, கொடுத்த உடனே வேண்டாம்னு மறுக்கணும், கவிஞம்லா என்றேன்.

சுகா இப்படத்தை இயக்குகிறார் என்பது ஓர் ஆர்வம். இன்னொரு ஆர்வம் இளையராஜாவின் இசை குறித்தானது. சுகா இசை என்றால் என்ன என்று தெரிந்தவர். அதாவது இசையோடு தொடர்புடைய விஷயங்கள் தெரிந்தவர் என்றல்ல நான் சொல்வது. நேரடியாகவே இசை என்றால் என்ன என்பதை பற்றிய நல்ல அறிவு உள்ளவர். ஆர்மோனியம் வாசிக்கத் தெரிந்தவர். கர்நாடக ராகங்களில் தேர்ச்சி உள்ளவர். அதனால் அவர் இளையராஜாவோடு பணிபுரிந்து வரும் திரைப்படத்தின் பாடல்கள் குறித்த அதீத ஆர்வம் எனக்கிருந்தது. மூன்றாவதான ஆர்வம் இத்திரைப்படம் நெல்லையோடு தொடர்புடையதென்பது. நான்காவதான ஆர்வம் இப்படத்தில் எஸ்.ராமகிருஷ்ணனும் நாஞ்சில் நாடனும் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள் என்பது.

தேரோடும் என்னும் ராமகிருஷ்ணன் எழுதிய பாடலைக் கேட்டேன். முதல் முறை கேட்டபோது இசையின் ஆழம் என்னை அசர வைத்தது. (எனக்கு இசை என்றாலே என்னவென்று தெரியாது. எனது கருத்து எனது ரசனை சார்ந்தது மட்டுமே.) பாம்பே ஜெயஸ்ரீயும் சுதா ரகுநாதனும் பாடியிருக்கும் இப்பாடல் இளையராஜாவின் முக்கியமான பாடல்களில் ஒன்றாக அமையும். எஸ்ராவின் தமிழ் அழகாக வெளிப்பட்டுள்ளது. அதேபோல் நா. முத்துக்குமார் எழுதியிருக்கும் நீரோடும் எனத் தொடங்கும் (என நினைக்கிறேன்!) பாடல் இன்னொரு அசத்தலான பாடலாக இருக்கும். இந்த இரு பாடல்களைக் கேட்டபோது, குணா, மகாநதி, தேவர் மகன் காலத்தில் இளையராஜா இசை அமைத்த மிகச் சிறந்த பாடல்களின் நினைவு வந்தது. இசையில் தொடங்குதம்மா (ஹே ராம்), உனைத் தேடும் ராகமிது (பொன்மலை), கண்ணில் பார்வை (நான் கடவுள்) வரிசையில் இப்பாடல்கள் இரண்டும் அமையும் எனபதில் ஐயமே இல்லை.

படத்தை அங்கங்கே பார்த்த வகையில், எல்லாருமே புதிய முகங்கள் என்பது தெரிந்தது. மற்றபடி என்ன கதை என்பதெல்லாம் விளங்கவில்லை. ஆனால் ஆர்வம் மட்டும் விண்ணோங்கி வளர்ந்துவிட்டது. படத்தின் ஹீரோ டப்பிங் தியேட்டரில் ஓரத்தில் கீழே உட்கார்ந்திருந்தார். இன்னும் பெயர் வைக்கப்படாத பையன். அடுத்த படத்துல எங்களையே பாத்து நீங்க யாருன்னு கேப்பான் என்றார் நண்பரொருவர். இப்படம் பெரும் வெற்றிபெற்று அக்கேள்வியை அவர் நிஜமாகவே கேட்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

ஆர்யா தயாரிக்கும் படம் இது. ஆர்யா இன்று டப்பிங் தியேட்டருக்கு வந்திருந்தார். படம் தொடங்கிய தினத்தில் இருந்து இன்றுதான் இரண்டாவது முறையாக வந்திருக்கிறார் என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். முதல் படம் இயக்கும் இயக்குநருக்குத் தேவையான சுதந்திரம் சுகாவுக்குக் கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு நல்ல படம் வர நினைக்கும் ஆர்யாவை நினைத்தும் சந்தோஷமாக இருந்தது.

சரி சுகா பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தேன். வானத்தில் சரியும் சூரியன் ரம்மியமாக இருந்தது. இனி ஆட்சியைப் பிடிக்கவேண்டியது மட்டும்தான் பாக்கி.

Sunday, October 25, 2009

நாயி நிரலு - கன்னடத் திரைப்படம் (சில இந்தியத் திரைப்படங்கள் - 05)

லோக் சபா சானலில் நாயி நிரலு (நாயின் நிழல்) என்ற கன்னடப் படம் நேற்று ஒளிபரப்பானது. எஸ். எல். பைரப்பாவின் நாவலை கிரிஷ் காசரவள்ளி இயக்கியிருக்கிறார்.

நேற்று படத்தைப் பார்த்தபோது, இது ஒரு சிக்கலான நாவல் போலத் தோன்றுகிறதே என்று நினைத்தேன். குறுநாவலே ஒரு திரைப்படத்துக்கான சிறந்த வடிவம் என்பது நேற்று மீண்டும் உறுதிப்பட்டது. ஒரு நீண்ட நாவலில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய நீளும் காலங்களும், தொடர்ந்த கதைத் திருப்பங்களும் திரைப்படத்தில் ஓர் அயர்ச்சியை ஏற்படுத்தியது என்றே சொல்லவேண்டும். கிரிஷ் காசரவள்ளி போன்ற இயக்குநரின் கைகளில் சிக்கியதால், அது ஓரளவு தப்பித்தது என்றும் சொல்லவேண்டும்.

நாவலின் மையமான மறுபிறப்பு (நன்றி: விக்கிபீடியா) என்கிற நம்பிக்கையிலிருந்து இப்படம் விதவையான ஒரு பெண்ணின் மையமாக மாறியிருப்பதைக் கண்கூடாகப் பார்க்கமுடிகிறது. ஒரு நாவலைத் திரைப்படமாக்கும்போது, இயக்குநர் தனக்குத் தேவையான சுதந்திரத்தை எடுத்துக்கொண்டே தீரவேண்டும். அந்த வகையில் இயக்குநர் இத்திரைப்படத்தில், நாவலில் சொல்லப்பட்ட சில காட்சிகளைத் தவிர்த்திருக்கிறார் என்பது தெரிகிறது. அதனால் இத்திரைப்படத்தின் மையம், ஒரு விதவைப் பெண்ணின் மீது குவிகிறது. அதன் பின்னூடாக ஒரு சிறந்த மாமனாரின் சித்திரம் மேலெழுவதையும் பார்க்கமுடிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மாமனாரின் சித்திரத்தைப் பற்றித் தெளிவாக எழுதமுடியாது. சிறந்த விற்பன்னராகவும், தன் மீது தீராத விசாரணையும் கொண்டவராகவும் வரும் இவரது பாத்திரத்தைப் படத்தைப் பார்த்துத்தான் புரிந்துகொள்ளமுடியும்.

ஏற்கெனவே நான் பார்த்த காசரவள்ளியின் Kraurya (கதை சொல்லி) திரைப்படம் பாவனைகள் இன்றி மிக நேரடியாகப் பேசிய படம். நாயி நிரலு பாவனைகள் அற்ற படம்தான் என்றாலும், மிக நேரடியான திரைப்படம் என்று சொல்லமுடியாது. படத்தைப் பார்ப்பவர்கள் தாங்களாக உருவாக்கிக்கொள்ளவேண்டிய தீர்மானங்களுக்கு நிறைய இடம் இருக்கிறது. ஒருவர் இத்திரைப்படத்தை மறுபிறப்புத் தொடர்பான நம்பிக்கைகள் சார்ந்த திரைப்படம் என்ற வகையில் பார்க்கலாம். இன்னொருவர் இத்திரைப்படத்தை விதவைகளின் உணர்வுகள் சார்ந்த திரைப்படம் என்று பார்க்கலாம். இன்னும் ஒருவர் இத்திரைப்படத்தை குடும்பத்துக்குள்ளான உணர்வுகளின் பிரச்சினையாகவும், ஒரு தாய்க்கும் மகளுக்கும் நடக்கும் போராட்டமாகவும் பார்க்கலாம். இன்னொருவர் சமூகத்துக்கும் அது உண்டாக்கி வைத்திருக்கும் சம்பவங்களுக்குமான வெளியாகப் பார்க்கலாம். இவையெல்லாமே இப்படத்தில் அடங்கியிருக்கிறது என்றாலும், கிரிஷ் காசரவள்ளி நாவலில் எஸ்.எல். பைரப்பாவின் நாவலில் இருந்து சில குறிப்பிட்ட பகுதிகளை நீக்கிவிட்ட வகையில், இதனை விதவைகளின் உணர்வுகள் சார்ந்த பிரச்சினையாகவே என்னால் பார்க்கமுடிகிறது.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு இளம் விதவையுடன் வாழும் பிராமணக் குடும்பத்தைச் சுற்றி நடக்கிறது கதை. இளம் பிராமண விதவைதான் என்றாலும் அவளுக்கு வயதுக்கு வந்த, கல்லூரியில் படிக்கக்கூடிய மகள் உண்டு. சிறு வயதிலேயே திருமணம் ஆகிப் பிள்ளை பெற்றிருக்கக்கூடிய வாய்ப்புகள் அக்காலத்தில் உள்ள நிலையில், இந்த வயதுக்கு வந்த மகள் என்பதும், அவளது தாய் இளமையான விதவைத் தாய் என்பது முக்கியம் பெறுகிறது. வயதான, படுத்த படுக்கையாகக் கிடக்கும் மாமியார், குடும்பத்தைச் சுமக்கும் மாமனார். இறந்து போன தன் மகனின் மறுபிறப்பாக ஒருவன் பக்கத்து கிராமத்தில் பிறந்திருக்கிறான் என்று யாரோ ஒருவரின் மூலம் அறிகிறார் மாமனார். தன் மனைவியின் தொடர் வற்புறுத்தலுக்குப் பின்பு அவனை வீட்டுக்கு அழைத்து வருகிறார். படுத்த படுக்கையாகக் கிடக்கும் மாமியார் குணம் பெறுகிறார். தன் மகன்தான் அவன் என்று உறுதியாக நம்புகிறார் அவர். ஊரும் நம்புகிறது. ஆனால் விதவைப் பெண்ணோ வந்தவன் தன் கணவனல்ல என்று நினைக்கிறாள். ஊரும் மாமியாரும் வந்தவன் அவள் கணவனே என்று நம்பச் சொல்கிறது. ஒரு கட்டத்தில் அவளுக்கு அவனைப் பிடித்துப் போகிறது. அவளைத் தன் கணவனாக ஏற்றுக்கொள்கிறாள். இங்கே தொடங்குகிறது கதையின் பிரச்சினை.


விதவைப் பெண்ணுக்கும் வந்திருக்கும் இளைஞனுக்கும் ஏற்படும் உறவில் அவள் கருத்தரிக்கிறாள். மாதா மாதம் தலைமுடியை சிரைத்துக்கொள்ளும் சடங்கை இனிச் செய்ய மாட்டேன் என்கிறாள் விதவைப் பெண். இனி தான் விதவையல்ல என்று முடிவெடுக்கிறாள். இதுவரை தன் மகன் என்று நம்பி அவனை வீட்டை விட்டு அனுப்பக்கூடாது என்று சொன்ன மாமியார், அவனை வீட்டை விட்டுப் போகச் சொல்ல, அதுவரை தன் கணவன் என்று நம்பாமல் இருந்த விதவை பெண் அவனை வீட்டை விட்டு அனுப்பக்கூடாது என்று முடிவெடுக்கிறாள். வீட்டுக்கு அவனை அழைத்து வந்த தானே பிரச்சினையின் காரணம் என்று நினைக்கிறார் மாமனார்.

தன் மாமா வீட்டில் இருந்து படித்துவரும் விதவைப் பெண்ணின் மக்ள் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு அதிர்கிறாள். இத்தனைக்கும் விதவைப் பெண்களுக்கு மொட்டையடிக்கக்கூடாது, சமயச் சடங்குகள் கூடாது என்ற கருத்தோடு வளர்ந்த பெண் அவள். தன் அம்மா கர்ப்பம் தரித்திருக்கிறாள் என்று தெரிந்தவுடன் அவளுக்குப் பெரும் அதிர்ச்சியும், கோபமும் ஏற்படுகிறது. இத்தனைக்குப் பின்னும் அவளால் தன் அம்மாவை வெறுக்கமுடியவில்லை. தன் தந்தையாக வந்திருப்பவனை விரட்டிவிட்டால் தன் அம்மா தனக்குக் கிடைத்துவிடுவாள் என நினைக்கிறாள். ஆனால் அவனை வீட்டை விட்டு அனுப்ப அவளது அம்மா சம்மதிக்கவில்லை.

ஊராரின் நிர்ப்பந்தத்தால், யாருமற்ற ஒரு தீவுக்கு, தன் கணவனுடன் செல்கிறாள் அந்த விதவைப் பெண். தான் திருமணம் செய்துகொண்டும் விதவைப் பெண்; விதவைப் பெண்ணாக இருந்தும் திருமணம் ஆனவள் என்னும் குழப்பம் அவளைத் துரத்துகிறது. தான் சுமங்கலியும் அல்ல, அமங்கலியும் அல்ல என்பதுதான் உண்மை என்று நினைக்கிறாள். இதற்கிடையில் மகளின் கோபம் உச்சத்துக்குச் செல்கிறது. ஒரு கேஸ் கொடுத்து தன் தந்தை என வந்திருப்பவனை சிறையில் வைக்கிறாள். அதனால் அவன் கோபம் கொள்கிறான். தன்னைப் பார்க்கவரும் கர்ப்பிணி மனைவியைப் பார்க்க மறுக்கிறான். அவன் யாருமற்ற தீவில் போது, ஓடக்காரப் பெண்ணின் மீது மையல் ஏற்படுகிறது. அதனைப் பயன்படுத்தி, அந்தப் பெண்ணை வைத்து, தன்னைக் கெடுக்க வந்ததாகப் பொய் சாட்சியம் சொல்லச் சொல்லி, அவனை நிரந்திரமாக உள்ளே வைக்கிறார்கள். இரண்டு வருடம் சிறைத்தண்டை என்று தீர்ப்பு வருகிறது. அக்கோபத்தில் தனக்குப் பிறந்த பெண்ணையும் பார்க்க மறுக்கிறான் அவன்.

திரும்பி வருவானா வரமாட்டானா என்கிற நிலையில் அதே தீவிலேயே தங்க தீர்மானிக்கிறாள் ஒரு மகளைப் பெற்றிருக்கும், ஒரு கணவனைப் பெற்றிருக்கும் அந்த விதவைப் பெண்.

இந்த நீண்ட கதைப் பின்னல் கொண்ட இத்திரைப்படம் ஆரம்பம் முதல் இறுதிவரை, எல்லா சட்டகங்களிலும் ஒருவித சோகத் தன்மையை மையச் சரடாகக் கொண்டிருக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஏதோ ஒரு சோகம் நம்மைத் தொட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அது தனது மகன் பற்றிய ஒரு தாயின் சோகமாக இருக்கலாம். இளம் விதவைக்கு அக்காலத்துச் சமூகம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் தரும் அழுத்தமாக இருக்கலாம். தாய்க்கும் மகளுக்குமான போராட்டமாகவோ, தனது மனதுக்குள்ளேயே தான் செய்துவிட்ட செயலை நினைத்து கிழவர் செய்துகொள்ளும் தர்க்கமகாவோ அது இருக்கலாம். இப்படித் தொடரும் சோகமே இத்திரைப்படத்தின் நிறம்.

இத்திரைப்படத்தின் மிக முக்கியமான காட்சிகள் சிலவற்றைப் பற்றிச் சொல்லவேண்டும்.

தனது மகன் திரும்ப வந்துவிட்டான் என்று நினைத்துக்கொண்டு அவனோடு பாசமாகப் பழகும் ஒரு முதிய தாய், தன் மகனுக்காக தன் மருமகளை, விதவைக் கோலத்தை விடுத்து, ஒரே ஒரு தடவை வண்ணப் புடைவை ஒன்றை உடுத்திக்கொள்ளச் சொல்லிக் கெஞ்சும் காட்சி. மருமகள் தொடர்ந்து மறுக்கிறாள். ஆனால் தாயோ விடுவதாக இல்லை. மெல்ல மெல்ல அவள் மனதை மாற்றி, அவளை வண்ணப் புடைவை அணிவிக்கச் செய்கிறாள். ஆனால் பின்னர் மருமக்ளுக்கும் தன் மகனுக்கும் உறவு ஏற்பட்டுவிட்ட நிலையில், ஒன்றுமே செய்யமுடியாதவளாக மருமகளைப் பிடித்து உலுக்குகிறாள். அப்போது மருமகள் வைத்துக்கொண்டிருக்கும் சவுரி கையோடு வந்துவிடுகிறது. அப்போது அந்த முதிய தாய் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் சொல்லும் செய்திகள் ஏராளம்.

இன்னொரு காட்சி, மகளும் தாயும் சந்திக்கும் இடம். எப்படி தன் தாய் இருக்கவேண்டும் என்று நினைத்தாளோ அப்படி தாய் மாறியிருக்கிறாள். ஆனால் இந்த மாற்றம் வந்த விதம் வினோதமானது. இதனை ஏறக அந்த மகளால் முடியவில்லை. எப்படியாவது தன் தாயை மீட்கவேண்டும் என்று நினைக்கிறாள். அழகான வண்ணப் புடைவையுடன், தலை நிறைய முடியுடன், பூவுடன் அம்மாவைப் பார்க்கும்போது அவள் அழகாக இருப்பது தெரிகிறது. ஆனால் அந்த அழகுக்குப் பின் ஏதோ ஒரு வினோதம் இருப்பதை அவளால் ஏற்கமுடியவில்லை. எத்தனையோ கேட்டும் தந்தையாக வந்திருப்பவனை, தன்னைவிட வயதில் சிறிய தந்தையை, வெளியில் அனுப்ப மறுக்கிறாள் தாய். அதுவரை சமயச் சடங்குகளுக்கு எவ்வித மதிப்பும் தராத அந்த மகள், அவ்வருடம் தனது தந்தையின் மரண தினத்தை சிறப்பாகச் செய்துமுடிக்கிறாள். தனது தாயை ஏதோ ஒரு வகையில் பழிதீர்த்துவிட்ட மன நிம்மதி அவளுக்குக் கிடைக்கிறது.

படத்தின் உச்சகட்டக் காட்சி மிக முக்கியமானது. தாயும் மகளும் பேசிக்கொள்கிறார்கள். மகளின் கையில் தன் தாய்க்குப் பிறந்த குழந்தை இருக்கிறது. மகள் தன் தாயிடம் எப்போதும் கேட்டுவந்த அதே கேள்வியை மீண்டும் கேட்கிறாள். ‘வந்தவனை அப்பா என்று நீ நிஜமாகவே நம்பினாயா?’ என்று. இந்தக் கேள்வி கேட்கப்படும்போதெல்லாம் அதனைத் தவிர்க்கும் தாய் அப்போது பேசுகிறாள். ”ஊரெல்லாம் வந்தவனை உன் அப்பா என்றார்கள். ஆனால் என் கணவன் என்று ஏற்க மறுத்தார்கள். உன் பாட்டி அவனைத் தன் மகனாக நினைத்தாள். ஆனால் என் கணவனாக ஏற்க மறுத்தாள். ஊருக்கும், பாட்டிக்கும் எல்லாருக்கும் ஒரு பார்வை இருந்தது. எனக்கும் ஒரு பார்வை இருந்தது.” இடைமறித்து மீண்டும் மகள் கேட்கிறாள். ‘நீ அவனை அப்பா என்று நம்பினாயா’ என்று. அப்போது அவள், ‘ஒரு போதும் நான் நம்பியதில்லை’ என்கிறாள். பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிறாள் மகள். இக்காட்சியின் வழியே நீளும் மனப்பிரதிகள் ஏராளம். இக்காட்சியே அதுவரை படத்தைப் பீடித்திருந்த பெரும் சோகத்துக்கும், நீள நீளமான காட்சிகளுக்கும் ஒரு அர்த்தத்தைக் கொடுக்கிறது. இக்காட்சியில் வரும் கூர்மையான வசனங்கள்தான் இப்படத்தை விதவைகளின் மனப்போராட்ட பிரதியாகவும் மாற்றுகிறது.

தகப்பனாக மறுபிறப்பில் வரும் அவன் பிறந்தது முதலே ஏதோ ஒரு மனக்கோளாறில் இருப்பதாகவே காட்டப்படுகிறது. மிக முக்கியமான நேரங்களில், அவன் குயிலுடன் பேசிக்கொண்டிருக்கிறான். தனது தந்தையின் பெயரை மட்டும் சரியாகச் சொன்னதால், அவன் மறுபிறவி என்று நம்பிவிடுவதாக இத்திரைப்படத்தில் காட்டப்படுகிறது. அவன் சில கேள்விகளுக்குச் சரியாகவும், பல கேள்விகளுக்குத் தவறாகவும் பதில் சொல்கிறான். ஆனாலும் கிராம மக்கள் அவன் சரியாகச் சொல்லும் பதிலை மட்டும் எடுத்துக்கொண்டு, அவன் மறுபிறவிதான் என்று தீர்மானிக்கிறார்கள். ஆனால் நாவலில், அவன் மறுபிறவிதான் என்பதற்கான சில காரணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்று விக்கிபீடியா சொல்கிறது. கிரீஷ் காசரவள்ளி ஒரு நேர்காணலில் இதனை உறுதிப் படுத்துகிறார். நாவல் ஒருவனின் மறுபிறப்பை மையப்படுத்த, தான் கருப்பும் அற்ற வெள்ளையும் அற்ற நிறங்களில் உலவும் மனிதர்களை உருவாக்கியதாகச் சொல்கிறார்.

ஒரு நாவல் திரைப்படமாக்கப்படுவதில் உள்ள சவால்கள், சங்கடங்கள் இத்திரைப்படத்திலும் தெரிகின்றன. ஆனால் நல்ல திரையாக்கம், அருமையான ஒளிப்பதிவு, யதார்த்தமான நடிப்பு என்று மிகக் கச்சிதமாக அமைந்திருப்பதால், படத்தின் ஒவ்வொரு காட்சியும் பொலிவு பெற்றுவிடுகிறது. இதுவே இத்திரைப்படத்தை முக்கியமானதாகவும் மாற்றுகிறது, நம்மைப் பார்க்கவும் வைக்கிறது.

Monday, October 19, 2009

Death of a President - பரிபூரண சுதந்திரத்தின் உச்சம்

சோனியா காந்தி ஜூலை 2009ல் கொலை செய்யப்பட்டுவிட்டார். யார் எதற்காகக் கொன்றார்கள் என ஆராய்கிறது சிபிஐ. கொலை செய்தவர்கள் யாராக இருக்கும் என்று யோசிக்கும்போது, இலங்கைத் தமிழர்களின் பட்டியலை முதலில் பார்க்கத் தொடங்குகிறது சிபிஐ.

இப்படி ஒரு திரைப்படத்தை இந்தியாவில் யோசிக்கவாவது முடியுமா எனத் தெரியவில்லை.

ஓர் அதிபரின் மரணம் என்னும் ஆங்கிலத் திரைப்படம் இதனைச் சாதித்திருக்கிறது. இத்திரைப்படம் ஆவணப்பட உத்தியில் இயக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் புஷ் கொல்லப்பட்டுவிடுகிறார். அதனை விசாரிக்கும் எஃ பி ஐ, புஷ்ஷின் மெய்க்காப்பாளர்கள், அமைச்சர்கள், எஃபிஐ அதிகாரிகள், சந்தேகத்திற்கு உரிய கலவரக்காரர்கள் உள்ளிட்ட எல்லாரையும் விசாரிக்கிறது. அவர்கள் நடந்தவற்றை விவரிக்க விவரிக்க காட்சிகள் உருப்பெறுகின்றன. ஆவணப்படத் தன்மையில் இப்படம் இயக்கப்பட்டுள்ளது மிகப் பெரிய பலமாக அமைகிறது.

சிகாகோவில் வணிகர்களின் கூட்டத்தில் பங்கேற்க வரும் ஜார்ஜ் புஷ்ஷை எதிர்த்து பெரிய கூட்டம் மறியல் செய்கிறது. அதை மீறி புஷ் அக்கூட்டத்தில் சிறப்பாகப் பேசுகிறார். அக்கூட்டம் முடிந்ததும் சிகாகோ மக்களைப் பார்த்துப் பேசும் புஷ் சுடப்படுகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறக்கிறார். ஜார்ஜ் புஷ் பேசும் இடத்துக்கு எதிரே இருக்கும் பலமாடி உணவகத்திலிருந்தே யாரேனும் சுட்டிருக்கவேண்டும் என்று கருதும் எஃபிஐ, அங்கே பணிபுரியும் அலுவலர்களின் பட்டியலைப் பார்க்கிறது. அங்கிருக்கும் முஸ்லிம்களை முதலில் சந்தேகிக்கத் துவங்குகிறது. முதலில் சந்தேகத்துக்கு உள்ளாகும் ஒரு முஸ்லிம் தனது தரப்பைக் கூறுகிறார். அவரது சகோதரர் ஈராக்கில் போரில் இறந்ததுக்குக் காரணம் புஷ்தான் என்று அவரது தந்தை நம்புகிறார். புஷ் கொல்லப்பட்டதும், அவரது தந்தை தன் மகனுக்கு கடிதம் ஒன்றை எழுதிவிட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார். இன்னொரு முஸ்லிம்தான் கொலைகாரனாக இருக்கவேண்டும் என்று எஃபிஐ முடிவு செய்கிறது. கைரேகைத் தடங்கள் ஒத்துப் போவதாலும், அவர் ஆஃப்கானிஸ்தான் சென்றிருப்பதாலும் அவர்தான் கொலையாளியாக இருக்கமுடியும் என்று முடிவெடுக்கிறது எஃபிஐ.

யாரையேனும் கொலையாளி என்று முடிவு கட்டவேண்டிய அழுத்தம் எஃபிஐக்கு. அவர் முஸ்லிமாகவும், ஆஃப்கானிஸ்தானுக்குச் சென்றவராகவும் இருந்தால், அவரை அல்க்வைதாவுடன் எளிதில் தொடர்புபடுத்திவிட முடியும் என்று நினைக்கிறது எஃபிஐ. 11 ஜூரிகள் அடங்கிய சபை இவரையே குற்றவாளி என்றும் தீர்ப்பளிக்கிறது. அவர் இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவெடுக்கிறார். இவரது மேல்முறையீட்டை இழுத்தடிக்கிறது எஃபிஐ. குற்றவாளியின் வழக்கறிஞர் இந்த இழுத்தடிப்பைக் கேள்வி கேட்கிறார். விசாரணை தொடர்கிறது என முடிகிறது திரைப்படம்.

எது உண்மை, எது கற்பனை என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு, படம் முழுதும் விரவிக் கிடக்கும் ஆவணப்படத் தன்மை நம்மை ஆச்சரியப் படுத்துகிறது. உண்மையில் ஜார்ஜ் புஷ் இப்போது உயிரோடு இருக்கிறாரா அல்லது உண்மையில் கொன்றுதான்விட்டார்களா என்று ஒரு நிமிடம் நம்மை யோசிக்க வைத்துவிடுகிறது திரைப்படத்தின் கச்சிதமான ஆக்கம்.

குற்றவாளி யாராக இருக்கலாம் என்னும்போது முதலில் முஸ்லிம்களின் பட்டியலைத்தான் பார்த்தோம் என்கிறது எஃபிஐ. இது ஒரு இனத்துக்கு எதிரான நடவடிக்கை என்று பார்க்கவேண்டாம், அந்த நேரத்தில் அங்கே இருந்துதான் தொடங்கமுடியும் என்கிறார் அவர். இதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், ஒரு முஸ்லிமை, இத்தனை பெரிய கொலைக்கு வெறும் கைரேகையை மட்டுமே வைத்து பொறுப்பாக்க முனைவது, அமெரிக்காவின் மனத்தின் அடியில் உறைந்துகிடக்கும் அல்க்வைதா பயத்தை படம்பிடித்துக் காட்டுகிறது. கைரேகை நிபுணர் ஒருவர் சொல்கிறார், கொலை செய்தவனின் கைரேகை பொதுவாகத் துப்பாக்கியில் கிடைக்காது; நீங்கள் பார்க்கும் திரைப்படங்களில்தான் இப்படிக் காண்பிப்பார்கள், ஆனால் உண்மை அதுவல்ல என்று. இதையும் சேர்த்துக்கொண்டு பார்த்தால் எஃபிஐயின் அவசரத்தையே இயக்குநர் (Gabriel Range) காண்பிக்க நினைத்திருக்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இயக்குநர் சொல்ல வருவது, அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தேவையான, கடுமையாக்கப்படவேண்டிய சட்டங்களைப் பற்றி. அந்த நோக்கில் அவர் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

குற்றவாளி என்று அறியப்படும் முஸ்லிமின் மனைவியும் விசாரணையில் தன் கருத்தைச் சொல்கிறார். ஆஃப்கானிஸ்தானில் அல்க்வைதா அணியில் தன் கணவர் பலவந்தமாகச் சேர்க்கப்பட்டார் என்றும், உடல்நிலை சரியில்லை என்று அவர் நடித்ததால் விடுவிக்கப்பட்டுவிட்டார் என்றும், இதனை யாரிடமும் சொல்லவேண்டாம், பாகிஸ்தான் சென்றதாக மட்டும் சொன்னால் போதும் என்று அவர் சொன்னதாகவும் இவர் சொல்கிறார். உண்மையான ஒரு விசாரணையில் ஏற்படும் குழப்பத்தை திரையில் கொண்டுவருவதில் இக்காட்சியில் பூரணத்துவத்தை எட்டியிருக்கிறார் இயக்குநர். இதைப் பார்க்கும் ஒருவர் குற்றவாளி உண்மையில் யார் என்னும் குழப்பத்தோடே திரைப்படம் பார்க்க வேண்டியிருந்திருக்கும்.

இத்திரைப்படத்தின் வழியாக நாம் காண்பது அமெரிக்கா தரும் சுதந்திரத்தை. முதலில் இது போன்ற ஒரு படத்தை எடுத்தது, இரண்டாவதாக குற்றவாளி என்று சொல்லப்படும் முஸ்லிமுக்கு ஆதரவாகப் பேசும் வழக்கறிஞரின் கேள்விகள், அடுத்ததாக புஷ்ஷுக்கு எதிராகக் காட்டப்படும் கலவரக்காரர்களின் மறியல்களும் கூச்சல்களும். எல்லாவற்றிலும் சுதந்திரம். இதையே இத்திரைப்படம் நமக்கு முகத்தில் அடித்தாற்போல் காண்பிக்கிறது. இந்தியாவில் இது சாத்தியமாகுமா என்ற ஏக்கத்தை உருவாக்கிவிடுகிறது திரைப்படம்.

ஒரு தலைவரின் கொலையை விசாரிப்பது என்பது நாம் கதை போலச் சொல்லப் பிறர் அதனை அப்படியே புரிந்துகொள்வது அல்ல. நாம் எதிர்பார்க்காத திசைகளிலெல்லாம் பயணிக்கும் காற்றைப் போன்றது அது. ராஜிவ் காந்தி கொலை வழக்கின் சிறப்பு அதிகாரியாக இருந்த ரஹோத்தமனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னதையெல்லாம் கேட்டபோது, ஒரு வழக்கின் பல்வேறு புதிர்கள் எப்படி விடுவிக்கப்படுகின்றன என்றும், விடுவிக்கப்பட்ட அதே புதிர்கள் எப்படி மீண்டும் சிக்கலாகிக்கொள்கின்றன என்றும் ஒரு சேரப் பார்க்கமுடிந்தது. ராஜிவ் காந்தி கொலை வழக்கு பற்றிய சிடி ஒன்றையும் ரஹோத்தமன் வெளியிட்டிருக்கிறார். அதைப் பற்றி இன்னொரு பதிவில் எழுதுவேன்.

நேரில் காண்பது என்னவோ ஒரு குண்டு வெடிப்பு அல்லது தோட்டா. அதற்குப் பின்னர் சிதறிக் கிடக்கும் பல்வேறு செய்திகளை அள்ளிக் கூடையில் போடும் காவல்துறையின் ஒரு பரிமாணத்தை வெற்றிகரமாகத் திரையில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர்.

Saturday, October 10, 2009

ஈரம், ஸ்பிரிட் திரைப்படங்கள்

மெண்ட்டல் ப்ளாக் பற்றி எழுதும்போதே சொல்லியிருக்கவேண்டும்.

வார்த்தை இதழில் ஆலோசனைக் குழுவில் இருந்தபோது, பிரசுரிக்கச் சொல்லி கவிதைகள் வரும். அஞ்சல் அட்டையில் அனுப்பவேண்டாம் என்று வார்த்தை இதழில் தெளிவாகத் தெரிவித்த பின்பும் அனுப்புவார்கள். அஞ்சலட்டையில் வந்த மறக்கமுடியாத கவிதை:

“அன்பே
என் உடலைத்தான்
உனக்குத் தரமுடியும்
ஏனென்றால்
என் உயிர்
இந்தியாவுக்கு.”


என்ன ஒரு இந்தியன்!

-oOo-

ஈரம் படம் பார்த்தேன். ஷங்கர் தயாரிப்பில் வந்த நல்ல மொக்கைப் படம் இதுதான். ஆரம்பத்தில் நன்றாக ஆரம்பித்த திரைப்படம், ஆவி, பேய் என்று நுழைந்து கழுத்தை அறுத்துவிட்டது. நல்ல மேக்கிங் இருந்தாலே எந்த ஒரு கதையையும் பார்க்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் ஷங்கருக்கு இடி விழுந்திருக்கும்.

நல்ல துப்பறியும் படம் என்று நினைத்துப் பார்க்கத் தொடங்கிய எனக்கு ஆவி அது இது என்றெல்லாம் படம் அலையத் தொடங்கியது முதல் எரிச்சல் என்றால், அதிலும் ஒரு புதுமையில்லாமல் பழைய ‘13ம் நம்பர் வீடு’ ரேஞ்சுக்கு, கார் தானாக ஓடுவதும், நீரில் விழுந்து சாவதும், திடீரென ஒரு குழந்தை பேய் போல வேஷம் போட்டு அதிரும் பின்னணி இசையில் பயமுறுத்துவதும் என ஒரே இம்சை. படம் முழுக்க எங்கேயாவது தண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது. தியேட்டரிலும் சொட் சொட் எனச் சொட்டியிருக்கும், அதன் பெயர் கண்ணீர்! முடியல.

நான் எங்க வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வந்துடுவேன் என்று ரஜினி ரேஞ்சுக்கு எல்லார்க்குள்ளும் பேய் வருவதுதான் ஹைலைட். அதிலும் தன்னைக் கொன்ற கணவனுக்குள்ளேயே பேய் வந்து அவனை மாட்டிவிடுவது மிகப்பெரிய டிவிஸ்ட் என்று இயக்குநர் கருதியிருக்கவேண்டும். பாவம்.



மேலே உள்ள வீடியோவில் பேயே சாட்சி சொல்லும் காட்சியையும், எஸ்.வி.சேகர் நாடகம் போல ஹீரோ படத்தின் பெயரைக் கடைசியில் சொல்லும் காட்சிகளையும் கண்டு ‘ரசிக்கலாம்.’

படம் ஊத்திக்கொண்டதும் அந்தப் பேய் ஷங்கருக்குள் இறங்கியிருக்கும். இயக்குநர் அறிவழகன் ரிச்நெஸ் முகமூடி போட்டு ஏமாற்றப் பார்த்திருக்கிறார். :-)

இந்தப் படத்தை நிச்சயம் பாருங்க சார் என்று சொன்ன அந்தப் பையனைத் தேடிக்கொண்டிருக்கிறேன். எங்கள் அலுவலகத்தில்தான் வேலை பார்க்கிறான்.

-oOo-

SPIRIT என்று ஒரு திரைப்படம் பார்த்தேன். அனிமேஷன் திரைப்படம். குழந்தைகளுக்கான அனிமேஷன் என்று சொல்வது தவறு. ஒரு ரஜினி படத்தை ரசிப்பது போல இந்தப் படத்தை நான் ரசித்தேன். ‘நீயே குழந்தை மாதிரிதான்’ என்று என்னை நினைப்பவர்கள் இது குழந்தைகளுக்கான அனிமேஷன் என்று சொல்லிக்கொள்ளலாம். :-)

ஒரு குதிரை பிறக்கிறது. சுட்டியாய் வளர்கிறது. எதிலும் வேகம், ஆர்வம், விவேகம். கழுகைவிட விரைவாக ஓடுகிறது. குதிரைக் குட்டிகளை வேட்டையாட வரும் சிங்கத்தை ஓட ஓட விரட்டுகிறது. வேட்டைக்காரர்கள் இதனை சிறைப் பிடிக்கிறார்கள். ஆனால் அவர்களால் இக்குதிரையை அடக்கமுடியவில்லை. என்னென்னவோ செய்கிறார்கள். அவர்களை வீழ்த்திவிட்டு, அவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் காட்டுவாசியுடன், அங்கிருக்கு மற்ற குதிரைகளையும் விடுவித்துவிட்டு ஓடுகிறது. அந்தக் காட்டுவாசி தன்னைக் காப்பாற்றிய குதிரையையே சிறைப்பிடிக்கிறான்! அவனிடம், நம் ஹீரோ குதிரையை ஒத்த, அதே வேகம் விவேகம் உள்ள ஒரு பெண் குதிரை உள்ளது. பிறகென்ன காதல்தான்.

ஹீரோ குதிரை காட்டுவாசியைப் புரிந்துகொள்கிறது. அவனுடன் நட்பாகிறது. குதிரையைத் தேடி வரும் வேட்டைக்காரர்களிடமிருந்து காட்டுவாசியைக் காப்பாற்றுகிறது பெண் குதிரை. காப்பாற்றும்போது ஓடும் வெள்ளத்தில் விழ, அந்தப் பெண் குதிரையைக் காப்பாற்றுகிறது ஹீரோ குதிரை. ஆனால் மீண்டும் வேட்டைக்காரர்களிடம் சிக்கிக் கொள்கிறது.பின்னர் எப்படி காட்டுவாசியைக் காப்பாற்றி, பெண் குதிரையோடு தன் வீட்டுக்குத் திரும்புகிறது என்பது கதை.

குதிரையின் ஸ்டைல் பற்றிச் சொல்லவேண்டும். முன் பக்கம் பறக்கும் தலைமயிரும், பிடரி மயிரும் அக்குதிரைக்கு ஒரு பிரத்யேகமான அழகைத் தந்துவிடுகிறது.

இந்தப் படத்தில் குதிரைக்குப் பதிலாக ரஜினி நடித்தால் (அனிமேஷனில் அல்ல!) இது ஒரு கச்சிதமான ரஜினி திரைப்படமாக மாறிவிடும். இதனால்தான் ரஜினி படத்தை குழந்தைகள் அப்படி விழுந்து விழுந்து பார்க்கிறார்கள் போல.

ஒரு ஆள் எப்படி நூறு பேரை அடித்து வீழ்த்தமுடியும் என்ற லாஜிக்கை மறந்துவிட்டு சுரேஷ் கண்ணன் போன்றவர்கள் ஸ்பிரிட் படத்தைப் பார்க்கமுடியும் என்பதால், அவர் நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதோடு இன்னொரு வேண்டுகோள். எந்திரன் திரைப்படம் வெளிவர இருக்கிறது. எந்த ஒரு ரஜினி திரைப்படம் வந்தாலும் அதனை நாலு திட்டு திட்டி எழுதுவார் சுரேஷ் கண்ணன். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிடும். ஆனால் எந்திரன் திரைப்படத்தை இதுவரை அவர் திட்டாமல் இருப்பது ரஜினி ரசிகர்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களின் மனமறிந்து உடனே அவர் எந்திரனைத் திட்டி ஒரு பதிவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.