Saturday, November 6, 2010

வம்சம்

உலகத் திரைப்படங்கள் தங்கள் வாழ்க்கையைப் பதிவு செய்யும்போது தமிழ்ப்படங்கள் மரத்தைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன என்பதன் அபத்தத்தைப் புரிந்துகொண்டு வந்த தமிழ்த் திரைப்படங்கள் சொற்பமே. ஹே ராம், விருமாண்டி படங்களைப் பார்த்தபோது, கதைகளுக்குப் பஞ்சம் என்னும் அபத்த வாதத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. கதைக்கென யோசிக்க, மெனக்கெட யாரும் தயாரில்லை. குறைந்த யோசிப்பில் அதிக லாபம் அல்லது கைக்கடிக்காத படம் என்பதில்தான் அனைவருமே கவனம் செலுத்துகிறார்கள். தமிழில் வாழ்க்கையைப் பேசவேண்டுமானால், அரசியல், மத, ஜாதி வராத மாதிரி யோசிக்கவேண்டும் என்னும் ஒருவித நிர்ப்பந்தத்துக்குள் இயக்குநர்கள் உழல்வது புரிகிறது. எதற்குத் தேவையில்லாத பிரச்சினை என்னும் எண்ணம் காரணமாக இருக்கலாம். கமல் இதனை எளிதாக எதிர்கொண்டுவிடுவதால் அவரால் சிறந்த கதைகளைக் கொண்ட படங்களைக் கொடுத்துவிடமுடிகிறது.

ஜாதியை வெளியே வெளிப்படையாகப் பேசும் கதாபாத்திரங்கள் கொண்ட படங்களை எடுப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பாரதிராஜா அதனை வேறு வேறு வடிவங்களில் வெளிப்படுத்துவார். கமல் தேவர் மகனில் நேரடியாகச் சாதியைப் பற்றிப் பேசினாலும், அதிலிருந்த ரொமாண்டிசைசேனும், ஹீரோயிஸமும் அதனை ஜனரஞ்சகப் படமாக்கியது என்றுதான் சொல்லவேண்டும். விருமாண்டியில் கமல் ஹீரோயிஸத்தையும் ஜாதி பற்றிய விவரணைகளையும் மிக அறிவுபூர்வமாகக் கலந்திருந்தார். அதிலும் கமல் என்னும் நடிகருக்குள்ளான இமேஜ் தந்த எல்லையைக் காணமுடிந்தது. கமல் அவரது நிலையில் கவனமாக இருப்பதும் நல்லதுதான். அமீரின் பருத்திவீரன் தெளிவாக வெளிப்படையாக ஜாதியை முன் வைத்திருந்தால் பெரிய கலகம் ஏற்பட்டிருக்கக்கூட வாய்ப்புள்ளது. ஆனால் அந்தப் படத்தின் அடிநாதமே அதுதான். அமீர் எந்த எண்ணத்துடன் அதனை எடுத்தார் என்பது தெரியாது. ஆனால் மிக முக்கியமான விஷயம்தான் அவர் தொட்டது.

இந்நிலையில் வம்சம் படம் முக்கியத்துவம் பெறுகிறது. இது ஓர் அருமையான திரைப்படம் அல்ல. ஒரு தமிழ்த் திரைப்படத்துக்கே உரிய எல்லைகள், பிரச்சினைகள் இப்படத்துக்கும் உள்ளன. ஹீரோயிஸ அடிப்படையில் எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ், ஃப்ளாஷ் பேக் காட்சிகளின் இழுவை போன்றவை. அதனையும் மீறி, மறவர் சமூகத்தின் கதை என்ற அளவில், அதனை மிகவும் வெளிப்படையாகவே சொல்லி வம்சம் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. இப்படமும் மற்றப் படங்கள் போலவே ஜாதிய மேன்மையை முன்வைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதனையும்கூட இப்படம் மிகத் தெளிவாக வெளிப்படையாகவே முன்வைக்கிறது. கருத்தியல் அடிப்படையில் இந்த ஜாதி மேன்மை, அதிலும் மேல்ஜாதி மேன்மையை பறைசாற்றும் படங்கள் தரும் எதிர்மறை விளைவுகள் யோசிக்கத் தகுந்தவையே.

ஆனால், ஒரு திரைப்படம் என்ற அளவில், இதனையும் பதிவு செய்வது மிக மிக அவசியமே. மறவர்களின் பல வம்சங்களைக் குறிப்பிட்டு, அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை, ஈகோக்களை முன்வைத்திருக்கிறார் இயக்குநர். அவர்களின் ஈகோவும் பிரச்சினையும் எப்போதும் வெட்டுக் குத்தோடு தொடர்புடையதுதான் என்பதனைச் சொல்லவும் கொஞ்சம் தைரியம் வேண்டும். அது இயக்குநருக்கு இருக்கிறது. ஒருவேளை இது வெளியில் அப்பட்டமாகத் தெரியாமல் இருப்பதற்காகத்தான் ஜாதி மேன்மை என்பதைக் கேடயமாகப் பயன்படுத்திக்கொண்டாரோ எனத் தோன்றுகிறது.

இலங்கையில் புத்தகக் கண்காட்சியின்போது ஒரு மறவ நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, மறவர்கள் பற்றிப் பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். அதில் பல விஷயங்கள் இந்தப் படத்தில் பதிய வைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கள்ளச் சாராயமும் பன்றிக் கறியும் இப்படத்தின் வெற்றிக்கான குறியீடாகவே மாறியுள்ளன. இவர்கள் பெண்களைக் கேவலப்படுத்துவதில்லை என்பதையும் இப்படத்தில் சொல்லிவிடுகிறார் இயக்குநர். இதனால் பெண்களைக் கேவலப்படுத்தும் சம்பிரதாயமான தமிழ்ப்படக் காட்சிகளில் இருந்து எளிதாக வெளிவந்துவிடுகிறார். அதேசமயம், கதாநாயகி நடுத்தெருவில் வில்லன் மீது சாணியைக் கரைத்து ஊற்றும் காட்சிக்கும் அதனைப் பயன்படுத்திக்கொண்டுவிட முடிகிறது. இப்படத்தின் சிறப்பான காட்சி இதுவே. அதேபோல் அந்த கதாநாயகியைக் கேவலப்படுத்த, இன்னும் இரண்டு பெண்களை அழைத்துக்கொண்டு வில்லன் கும்பல் சுற்றுவதும் நல்ல யோசனைதான்.

கருணாநிதியின் வம்சத்தைச் சேர்ந்த ஒரு நடிகர் நடித்திருந்தும், படத்தை இப்படி எடுத்திருப்பது ஆச்சரியம்தான். அவருக்கான காட்சிகள் பிற்பகுதிகளில் வந்து படத்தையே புரட்டிப் போட்டுவிட்டாலும்கூட, ஒரு பேண்ட் கூட இல்லாமல், படம் முழுக்க வேட்டி, லுங்கிகளில் வலம் வரவும் இன்றைய கதாநாயகர்களும் தில் வேண்டியிருக்கிறது. ஒரு மறவருக்கான திமிர் அருள்நிதியின் தோற்றத்துக்கு இல்லை. ஆனால் இதையே இன்றைய நிலையிலான ஒரு மறவப் பொதுப் பிம்பமாக வைப்பதில் பாண்டிராஜ் சொல்ல வரும் சேதியும் அடங்கிவிடுகிறது. அந்த உருவம் மக்களின் பொதுப்புத்தியில் எப்படிப் பதிந்திருக்கிறது என்பதைப் பயன்படுத்திக்கொண்டு, சரியான கல்வியே இவர்களைப் பண்படுத்த வல்லது என்பதை அவர் சொல்லாமல் சொல்லிவிடுகிறார். கிராமத்தில் இருந்துகொண்டு கிராம வாழ்க்கை வாழாமல் இருப்பதும்கூட இதிலிருந்து வெளிவர உதவும் என்று இயக்குநர் நினைக்கிறாரா எனத் தெரியவில்லை. கடைசிக் காட்சியில் கதாநாயகன் பேண்ட் ஷர்ட் வண்ணம் இறங்கிச் செல்லும்போது, அவரது மகன் எதிரியாக இருந்தவனின் மகனைத் திருவிழாவுக்கு அழைக்கிறான். பேண்ட் போட்டுக்கொண்டு, காரின் அருகில் நடந்தால் சகிப்புத்தன்மை வந்துவிடுகிறதா என்ன?

எப்பாடு கொண்டாவது பிற்பாடு கொடாதவர் உள்ளிட்ட பல்வேறு வம்சங்களின் பெயர்களைச் சொல்வதே கூட தமிழில் அரிது. ஒருவகையில் இது ஆழமாகப் பேசப்படுவதால், பொதுவான ஒரு படம் என்பதிலிருந்து விலகி, அப்பகுதியைச் சேர்ந்த அந்த மக்களுக்கான படம் என்று காணப்படக்கூடிய ஆபத்தும் உள்ளது. இதுவே இப்படத்துக்கு நேர்ந்திருக்கிறது என நினைக்கிறேன். படம் முழுக்க, கிராமத் திருவிழாவின்போது நடக்கும் கொண்டாட்டங்களைக் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இது கொஞ்சம் அலுப்பதைத் தருகிறது. என்றாலும், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், இன்று இப்படி நடப்பதெல்லாம் அருகி வருகிறது என்னும் நிலையில், பெரிய மகிழ்ச்சியுடன் பார்த்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. நடிகர்கள் தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஜெயப்ராகாஷின் அமுல்பேபி முகம் வில்லனுக்கு ஒப்பவில்லை. கதாநாயகனின் அம்மாவாக வருபவரும் ஒட்டவில்லை. பாண்டிராஜ் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கவேண்டும்.

ஜாதி என்பதைப் பொத்திப் பொத்திப் பேசுவதும், அல்லது மேம்போக்காக அணுகி அதனை ஒட்டுமொத்தமாக ஒரு சாதி என்றாக்கி, அதற்குண்டான நுண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டுப் பேசுவதும்தான் தமிழ்ப் படங்களின் அணுகுமுறையாக இருந்து வந்துள்ளது. பிராமணர்கள் மட்டும் விதிவிலக்கு. பிராமணர்கள் பற்றிய படங்களை மட்டும் வெளிப்படையாகவே பேசிவிடுவார்கள். வேற்று ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்றால், மிகக் கவனமாகவே பேசுவார்கள். எல்லா மேல்சாதிகளையுமாவது ஒன்றாக வைத்துப் பேசவேண்டும் என்ற உணர்வுகூட இவர்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடியது. அந்த வகையில் இந்தப் படம் ஒரு முதற்படி. இனியும் அடுத்தடுத்த, பிராமணர்களோடு சேர்த்து மற்ற மேல்சாதிகளின் குணங்களையும் தோலுரிக்கும் படங்கள் வரட்டும். இதனை எதிர்பார்ப்பதே அதிகம்தான் என்றாலும், இந்தப் படம் அது நடக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. இந்தப் படம் மறவர் வம்சத்த்தின் மேன்மையோடு தேங்கிவிட்டாலும், பருத்திவீரன் போன்ற கதையில், அதைவிட ஆழமாக அடுத்த படிக்குச் செல்லும் படைப்புகள் வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

3 comments:

Agustus said...

இதர சாதியினரைப் பற்றி படங்களில் பேசப்படுவதில்லை என்ற ஆதங்கத்தை(யும்) முன்வைத்திருக்கிறீர்கள். பார்ப்பனர்களைப் போல் இனங்கள் பாதிக்கப்பட்ட அளவுக்கு இதர சாதிகளால் இல்லை என்பதை இதில் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும், பெரும்பான்மையான மக்கள் ரசிக்கும் அளவுக்கு இதரசாதிகளைப் பற்றிச்சொல்ல ஒன்றுமில்லை என்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம். பார்ப்பனப்பெண்களை தோழியாக வைத்திருப்பதையே சாதனையாக நினைக்கும் இனமல்லவா தமிழினம்? புதுமைப்பித்தன் கூட ஐயங்கார்ப்பெண்னைத்தானே அழகுக்கு உவமையாக்குகிறார்?

மதுரை சரவணன் said...

படங்களில் சாதியை பற்றி அருமையாக சொல்லி ..ஒருபடத்தின் விமர்சனம் சூப்பர்.வாழ்த்துக்கள்

Unknown said...

அந்த காற்றுல இலை தூசியெல்லாம் சுற்றி சுற்றி வருதுல்ல. அதை இது வரைக்கும் நான் பார்த்ததே இல்லை. ஏதாவது கிராபிக்ஸ் பண்ணிட்டீங்களோ