திடீரென்று ஞாநி என்னிடம் நடிக்க வர்றீங்களா என்றார். வழக்கம்போன்ற உரையாடல்கள் நடந்தேறின. நடிக்கத் தெரியாதே, அதெல்லாம் நடிச்சிடலாம், நம்பிக்கை இருந்தா போதும் போன்றவை. ரிகர்சலுக்கு குத்தம்பாக்கம் சமத்துவபுரத்துக்குப் போனோம். கிட்டத்தட்ட 24 பேர் பங்கேற்றார்கள். நல்லவேளை எனக்கு வசனம் இல்லை.
அம்மா ஐயா ஆதரவாளர்களாக நீங்களே பிரிந்துகொள்ளுங்கள் என்றார். நான் உடனே அம்மா பக்கம் வந்து நின்றுகொண்டேன். ஞாநி இங்கயுமா என்றார். நடிப்பில் கூட கருணாநிதியைப் புகழமுடியாது என்றேன்.
முக்கியக் கதாபாத்திரம் அஞ்சலைதான் என்பது முதல் பார்வையிலேயே தெரிந்துவிட்டது. அஞ்சலையாக நடிப்பது கிறிஸ்டினா என்னும் பெண். அன்றைக்குத்தான் எல்லாரையுமே நான் முதன்முதலாகப் பார்க்கிறேன். கிறிஸ்டினா ஸ்கிரிப்டைக் கையில் எடுத்து, எழுத்து கூட்டி வாசிக்க ஆரம்பித்தார். திக்கித் திக்கி வாசித்தார். இதில் நுனி நாக்கு ஆங்கிலம் வேறு. ஸ்கிரிப்ட்டில் பக்கா சென்னைத் தமிழ்! கிழிஞ்சது கிருஷ்ணகிரி என நினைத்துக்கொண்டேன்.
இரண்டு தடவை வசனம் சொல்லிக் கொடுத்ததும் கிறிஸ்டினாவின் வசன வெளிப்பாடு என்னை அசரடித்துவிட்டது. இந்தப் பெண் இந்த நாடகத்தையே எங்கோ கொண்டு போய்விடுவார் என்ற நம்பிக்கை வந்தது. நாடக அரங்கேற்றத்திலும் அதுவே நடந்தது.
ஞாநி, சாய் கிருபா (ஆப்பம்மா), அஞ்சலை - இந்த மூவரை ஒட்டியே ஒட்டுமொத்த நாடகமும். நாங்களெல்லாம் இவர்களின் பாத்திரங்களை மெருகேற்ற மட்டுமே. அதனைச் செய்தோம்.
நீல்சன் கட்டியக்காரனாக நடித்தார். பக்கம் பக்கமாக வசனம். அநாயசமாகப் பேசினார். எனக்கு வசனங்கள் தராத ஞாநிக்கு மானசீகமாக நன்றி சொல்லவேண்டிய தருணம் இது.
ஞாநி முதல்தடவை பேசும்போது, ரிகர்சலுக்கு வாங்க, நீங்க வருத்தபடற மாதிரி இருக்காது என்றார். எனக்கு என்ன வருத்தம்? அப்படியே இருந்தாலும் பரீக்ஷாவை நினைத்துத்தான் இருந்திருக்கும். எப்படியோ தப்பித்தது பரீக்ஷா குழு.
நாடகத்தை யூ டியூபில் பார்க்க: (நல்ல பிரதி வந்ததும் மீண்டும் வலையேற்றி, நல்ல லிங்க் தருகிறேன்!) இதனை பதிவு செய்து வலையேற்றிய பத்ரிக்கு நன்றி. இப்படி ஒரு பொம்பளை கால்ல விழுந்து நடிக்கிறீங்களே, சே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் எங்க வீட்டு ஜெயலலிதா!
இந்தியா சுடர் என்னும் சேவை அமைப்பு இந்தியாவெங்கும் உள்ள கிராமங்களில் நிறைய சேவைகளை முன்னின்று செய்துவருகிறது. பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்து தருதல், மாணவர்களுக்கு தனிப்பட்ட மனப்பயிற்சி வகுப்புகள் அமைத்தல், பள்ளிகளில் நூலகங்கள் உருவாக்குதல், ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் அமைத்தல் எனப் பல்வேறு செயல்பாடுகளைச் செயல்படுத்தி வருகிறது.
இந்தியா சுடர் ஏற்கெனவே கிழக்கு, ப்ராடிஜி உள்ளிட்ட பதிப்பகங்களில் இருந்து புத்தகங்களை வாங்கி, பள்ளி நூலகங்களுக்கு வழங்கியிருக்கிறது. இன்று, சென்னையில் உள்ள அனாதை (இந்த வார்த்தையைத் தவிர்க்கவே விரும்புகிறேன். வேறு எந்த வார்த்தை சரியான வார்த்தை எனத் தெரிந்தால், அதனைப் பயன்படுத்துவேன்) அமைப்புகள் பலவற்றைச் சேர்ந்த குழந்தைகளுக்கென பிரத்யேகமாக சில போட்டிகளை நடத்தினார்கள். இந்தியா சுடருன் இணைந்து, ட்ரீம்ஸ் இண்டியா, ஹெல்பிங் மைண்ட்ஸ் உள்ளிட்ட சேவை அமைப்புகளும் இதில் கலந்துகொண்டன. திருக்குறள் போட்டி, ஓவியப் போட்டி, மொழிபெயர்ப்புப் போட்டி, வினாடி வினா போட்டி எனப் பலப் போட்டிகள் நடந்தன.
கிழக்கு பதிப்பகத்தின் சார்பில் ‘இந்தியாவின் அடுத்த ஐந்து ஆண்டுகள் - என் கனவு’ என்னும் போட்டி நடத்தப்பட்டது.
இந்திய வரலாறு புத்தகத்தைப் படித்த திரு. டி.ஆர். சந்தான கிருஷ்ணன், இந்தப் புத்தகம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களையும் சென்றடைய வேண்டும் என்று விரும்பினார். அதற்குத் தன்னால் ஆன முயற்சியைச் செய்வதாகச் சொல்லி, இன்னும் சில ஆர்வர்லர்களுடன் சேர்ந்து, இந்தப் புத்தகத்தை இலவசமாக மாணவர்களுக்குக் கொடுக்க முன்வந்தார். இதனை ஒரு போட்டியின் வழியாகச் செயல்படுத்தினால், மாணவர்களை அது ஊக்குவிப்பதோடு, புத்தகத்தின் மதிப்பும் - அது ஒரு பரிசு என்ற அளவில் - கூடும் என்று கருதி, ‘இந்தியாவின் அடுத்த ஐந்து ஆண்டுகள் - என் கனவு’ என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டிகள் நடத்த விரும்பினார். அதனை கிழக்கு பதிப்பகம் செயல்படுத்துகிறது. இது குறித்த மேலதிக விவரங்களுக்கு: bookstokids.blogspot.com
இந்த இரண்டையும் ஒன்றாகச் செயல்படுத்த முடிவெடுத்து, இந்தியா சுடருடன் இணைந்து, மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி இன்று நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ‘இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு’ நூலின் முதல் பாகம் பரிசளிக்கப்பட்டது. இதன் இரண்டாம் பாகம் வெளிவந்தபின்பு, அப்புத்தகமும் இந்த மாணவர்களுக்கு தரப்படும்.
வெற்றி பெற்றவர்களின் புகைப்படங்கள், அவர்கள் எழுதிய கட்டுரைகள் bookstokids.blogspot.com வலைத்தளத்தில் பதிப்பிக்கப்படும்.
இந்தத் தலைப்பை முதலிலேயே கொடுக்காமல், அந்த நேரத்தில் மாணவர்களுக்கு அறிவித்தோம். சில மாணவர்கள் மிகச் சிறப்பாக எழுதினார்கள் என்றே சொல்லவேண்டும். எல்லா மாணவர்களுக்குள்ளும் ஒற்றுமை என்னும் உணர்வு வேரூன்றியிருப்பதைப் பார்க்கமுடிந்தது. எல்லாரும் சொல்லி வைத்தாற்போல் வறுமையைப் பற்றிப் பேசினார்கள். சில மாணவர்கள் கணினித் துறையில் இந்தியா உலகை ஆளவேண்டும் என்று எழுதினார்கள். லஞ்சம் ஒழியவேண்டும் என்று மாணவர்களுக்கு ஆர்வம் இருக்கிறது. ஆனால் அது எப்படி என்றுதான் தெரியவில்லை. இந்தியா ஒரு வல்லரசு ஆவதில் மாணவர்களுக்குப் பெரும் ஆர்வம் இருப்பதைப் பார்க்கமுடிந்தது.
சில மாணவர்கள் வித்தியாசமாகவும் எழுதியிருந்தார்கள்.
ஒரு மாணவர் அப்துல்கலாம் பிரதமராகவேண்டும் என்று எழுதியிருந்தார்.
ஒரு மாணவர் இனி அமெரிக்கா இந்தியாவை ஆளமுடியாது என்றும், ஆளக்கூடாது என்றும் எழுதியிருந்தார்.
ஒரு மாணவர் சுற்றுப்புறச் சூழல் தூய்மை பற்றி எழுதியிருந்தார். அதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பது அவர் எண்ணம்.
இரண்டு மாணவர்கள் விடுமுறை விண்ணப்பம் எழுதியிருந்தார்கள்.
வித்தியாசமான நாளாக இன்று கழிந்தது.
இந்தியா சுடரைப் பற்றி ஆசிரியர் சண்முக வடிவு சொல்லும் கருத்துகளைக் கேளுங்கள்.
கட்டுரைப் போட்டியில் பங்குபெற்ற மாணவர்களில் ஒரு பிரிவு மாணவர்களைக் காண்பிக்கும் வீடியோ:
இது போல, கிழக்கு பதிப்பகத்தின் மூலம் போட்டிகள் நடத்தி, மாணவர்களுக்குப் புத்தகங்களை பரிசளிக்க விரும்புகிறவர்கள் haranprasanna at nhm.in என்னும் முகவரிக்கு மடல் அனுப்பலாம். பள்ளி மாணவர்களுக்கு படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்க வேறு ஏதேனும் கருத்துகள் இருந்தாலும் சொல்லவும்.
இது போக, இன்று ஒரு ஆசிரியர் - கரூர் என நினைக்கிறேன் - பேசினார். அவரை வீடியோ எடுத்தேன். ஏதோ ஒரு கணத்தில் அது அழிந்துவிட்டது. :( அதனை எப்படியும் நாளை மீட்டெடுத்துவிடுவேன். அதனைத் தனிப்பதிவாகப் போடுகிறேன். இன்றைய ஹைலைட்டே அந்த அரசு தலைமை ஆசிரியரின் பேசுத்தான். அது அழிந்தது பெரிய வருத்தமாகிவிட்டது. :(