---ஹரன் பிரசன்னா
தனக்குப் பாண்டிமாரோடு இருந்த கோபங்கள் எல்லாம் இப்படிச் சடாரென நீர்த்துப் போகும் என்று கிருஷ்ணன் பிள்ளை எதிர்பார்க்கவேயில்லை. இத்தனை நாள் தனக்கிருந்த இனவெறியால் சிந்திக்க முடியாமல் போனதை நினத்து வருந்தும் வேளையில் நிஜத்தைத் தெரியவைத்தச் சொர்ணலதாவுக்கு நன்றி சொல்லிக்கொண்டான். நன்றி சொல்லத் தேவையில்லை என்றது அவனது உள்மனம். மூன்றாம் நபர்களுக்குள் இருக்கவேண்டிய
ஒரு சொல் அவர்களுக்கிடையில் வருவதை அவன் அறவே விரும்பவில்லை.
கிருஷ்ணன் பிள்ளை, தனது காதலை சொர்ணலதாவிடம் சொல்லி மூன்று நாள்தான் ஆயிருக்கும். அவளும் நாணிக் கோணி வெட்கி அதை ஏற்றுக்கொண்ட நிமிடம் சடாரென வானத்தில் நீந்தி, மேகத்தைக் கிண்டல் செய்து விட்டு, சூரியனை முறைத்துவிட்டு, நிலவிடம் சேதி சொல்லிவிட்டுத் தரைக்கு வருவதற்குள் சொர்ணா கம்ப்யூட்டர் சென்டரை விட்டு, வெட்கத்தையும் சேர்த்தெடுத்துக்கொண்டு, ஓடிப்பொயிருந்தாள். சொர்ணலாதவை கடந்த மூன்று நாளாய் சொர்ணா என்றுதான் கூப்பிட்டான் கிருஷ்ணன் பிள்ளை. அதை இரசித்தாள் சொர்ணா என்பதை அவன் அறிந்தபோது இனித் தொடர்ந்து அப்படியே கூப்பிட முடிவு செய்தான். அவன் என்ன சொன்னாலும் அவள் சிரித்தாள். அவர்களுக்குள் மூன்று வருடங்கள்.. இல்லை இல்லை... முப்பது வருடங்கள் காதல் இருந்ததாய்த் தோன்றியது அவனுக்கு.
கலமசேரியில் மலையாளக் குட்டிகளை சைட் அடித்துக்கொண்டு தனது இளவயதைக் கழித்துக்கொண்டிருந்த கிருஷ்ணன்பிள்ளைக்குக் கொஞ்சம் கூட எதிர்பார்க்காமல் திருநெல்வேலியில் வேலை கிடைத்தது. போயும் போயும் பாண்டிமாரோடு வேலை பார்க்கப்போறியா என்ற கூட்டுக்காரர்களின் கிண்டலையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தமிழ் மண்ணை மிதித்தான். அன்று அவனிருந்த மனநிலையில் அவனிடம் யாராவது நீ ஒரு தமிழ்ப்பெண்ணைத்தான் மணக்கப்போகிறாய் என்று சொல்லியிருந்தால், சொல்லியது யாரானலும், காறி உமிழ்ந்திருப்பான். அதற்குக் காரணம் இருந்தது. அவன் அதுவரை சொர்ணாவைச் சந்தித்திருக்கவில்லை.
மலையாளி கொலையாளி; மலைப்பாம்பை நம்பினாலும் மலையாளத்தானை நம்பாதே என்று எல்லோரும் அவன் காது படப் பேசுவதெல்லாம் பழகிப் போய், எல்லாம் தன் தலையெழுத்து என்று மனம் நொந்த ஒரு நிமிடத்தில்தான் சொர்ணலாதவைச் சந்தித்தான்.
அவள் கண்கள் பேசுவதைக் கண்டு கொஞ்சம் வசமிழந்த மனசை அதட்டு உருட்டி - ஆ குரங்கி தமிழானு - அடக்கி வைத்தான். அவள் ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து அளந்து கொணட்டி கொணட்டிப் பேசினாள். ஏஸியும் ஏர் ·ப்ரெஷ்ணரின் மணமும் முழுக்க முழுக்க கம்ப்யூட்டர்கள் நிறைந்த அறையும் அவளை படபடப்பாக்கியிருக்கலாம். தினம் தினம் எத்தனை பெண்களும் பையன்களும் இப்படி வந்து போகிறார்கள்..
"சார்.. நான்.. இங்க.. ஐ வாண்ட் ·பார் சி சி +.."
அவளின் ஆங்கிலம் கண்டு கிருஷ்ணன்பிள்ளை சிரித்துக்கொண்டான். ஆனால் வெளியில் யாரிடமும் சொல்ல முடியாது. உடனே தமிழன்மார்கள் எல்லாம் லோரி என்றும் ஸோரி என்றும் கோப்ம்பெனி என்றும் ஆரம்பித்துவிடுவார்கள் என அவனுக்குத் தெரியும். ஒருவழியாய் தனக்குத் தெரிந்த தமிழில் சொல்லி அவளுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கேட்டு அவளைச் சேர்த்துக்கொண்டான். கிருஷ்ணன் பிள்ளை நினைத்திருந்தால் சொர்ணலதாவுக்கு கொஞ்சம் கூடுதல் டிஸ்கவுண்ட் கொடுத்திருக்கலாம்தான். தமிழச்சிக்குப் போய் கொடுப்பானேன் என விட்டுவிட்டான்.
இபோது கிருஷ்ணன் பிள்ளைக்கு, அன்று டிஸ்கவுண்ட் கொடுத்திருக்கலாமோ என்று தோன்றியது. அவளைக் கண்ட முதல் நாள் முதல் நேற்று முதல்நாள் சொன்ன ஐ லவ் யூ வரைக்கும் ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்த்துக்கொண்டான்.
"சார்.. நான்.. இங்க.. ஐ வாண்ட் ·பார் சி சி +.."
"சார்.. நான்.. இங்க.. ஐ வாண்ட் ·பார் சி சி +.."எனத் தனக்குத்தானே சொல்லிப் பார்த்துச் சிரித்துக்கொண்டான். இன்று உறங்குவோம் என்று கிருஷ்ணன் பிள்ளைக்குத் தோன்றவில்லை.
கிருஷ்ணன்பிள்ளை காதல் அவனை இந்தப் பாடு படுத்தும் என எதிர்பார்க்கவில்லை. மிகுந்த பிரயாசைக்குப் பின் தூங்க ஆரம்பிக்கும்போது கனவில் சொர்ணா வந்து, "என்ன தூக்கம் வரலியா?"என்பாள். இவன் உடனே, "நீ பறையுன்ன தமிழ் எத்தற சுகமானு அறியோ?"என்பான். இப்படி மாறி மாறி ஆளுக்கொரு பாஷயில் கதைத்து முடிக்கும் போது காலை விடிந்திருக்கும். இல்லையென்றால் கனவில் அவள் வந்து "அஞ்சனம் வெச்சக் கண்ணல்லோ மஞ்சக் குளிச்ச நெஞ்சல்லோ"என்பாள். இவன் பதிலுக்கு "இனிக்குந் தமிழ் சுந்தரியே மலையாளத்தில் கொஞ்சுறியே"என்பான். இப்படியே பாடிப் பாடி காலை விடிந்திருக்கும்.
இன்றைக்கு காலையில் நேர்ந்த அந்தச் சம்பவத்துக்குப் பின் , இனித் தூங்கக்கூட முடியாது என்று தோன்றியது கிருஷ்ணன் பிள்ளைக்கு. அவன் இன்னும் தன் புறங்கையைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தான். இதுவரை இல்லாத ஒரு மிருதுத்தன்மை அவனது புறங்கைக்கு எப்படி வந்தது என்ற ஆச்சரியம் இன்னும் அடங்கவில்லை. காலையில் கிருஷ்ணங்கோவிலுக்குப் போயிவிட்டு வரும்போது தெரியாத்தனாமாக சொர்ணாவின் புறங்கையில் அவன் புறங்கை பட்டுவிட்டது. அதிர்ந்து போனான் கிருஷ்ணன் பிள்ளை. சொர்ணாவும் ஒரு நொடி அதிர்ந்தாள். பின் வெட்கப்பட்டுச் சிரித்தாள். கிருஷ்ணன் பிள்ளை தான் ஒரு கவிஞனாய் இல்லாமல் போய்விட்டோமோ என்று முதன்முறையாக வருந்தினான். இருந்திருந்தால் அப்படியே காதல் ரசம் சொட்டச் சொட்ட அந்த நிமிடத்தையும் சொர்ணாவின் வெட்கத்தையும் வார்த்தைகளில் கொட்டியிருப்பான்.
கையின் புறங்கையை முகர்ந்து பார்த்தான். எங்கிருந்தோ காற்றில் "சந்தனத்தில் கடஞ்செடுத்தொரு சுந்தரி சில்பம்"என்ற வரிகள் மிதந்து வந்தது. சொர்ணா வெள்ளைப் பட்டுடுத்தி சந்தனக் கீறலிட்டுச் சிரித்தாள். கிருஷ்ணன் பிள்ளை வெள்ளைப் பட்டில் முண்டுடுத்தி மோகமாய் அவளை நெருங்கினான். அவள் "வேண்டாம்.. வேண்டாம் "எனச் சிணுங்கினாள். அவளின் சிணுங்கல் அவனை மேலும் தூண்ட... அந்த நேரத்தில் போன் ஒலிக்காமல் இருந்திருந்தால் அவளை முத்தமிட்டிருப்பான். ஏக எரிச்சலில் போனை எடுத்தான். கிருஷ்ணன்பிள்ளையின் அம்மா அழுதுகொண்டே அவனது பாட்டி இழுத்துக்கொண்டிருப்பதாய்ச் சொன்னாள். கிருஷ்ணன் பிள்ளைக்கு ரொம்ப வருத்தம் மேலிட்டது. அவனைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்த பாட்டி இழுத்துக்கொண்டிருக்கிறாள் என்ற கேட்டவுடனேயே கலமசேரிக்குப் போய் அவளைப் பார்க்கவேண்டும் என்று தோன்றிவிட்டது அவனுக்கு.
கிருஷ்ணன் பிள்ளைக்கு தலையைச் சுற்றியது. அப்பாவிடமிருந்த கம்யூனிச இரத்தம் அவனுக்குள் இல்லையென்பது அவனுக்குத் தெரியும். அந்த இரத்தம் அப்படியே கிருஷ்ணன் பிள்ளைக்கும் வந்திருந்தால் இப்படி அவசியமில்லாத விஷயங்களைப் போட்டுக் குழப்பிக்கொள்ள நேர்ந்திருக்காது. அவனது கொச்சச்சன் சுகுந்தன்நாயரை நினைத்தாலே கிருஷ்ணன் பிள்ளைக்குப் பற்றிக்கொண்டு வந்தது. அவன் வீட்டில் சொர்ணா விஷயம் தெரிந்த ஒரே நபர் சுகுந்தன் நாயர் மட்டுமே.
சின்ன வயதிலேயிருந்து கொச்சச்சன் மேலே கிருஷ்ணன்பிள்ளைக்கு பாசம் அதிகம் இருந்தது. சுகுந்தன்நாயருக்கும் கிருஷ்ணன்பிள்ளை மேலே வாஞ்சை ஜாஸ்தி. தனது முதல் பையனாகத்தான் அவனைப் பார்த்தார் சுகுந்தன் நாயர். அவனை "மோனே"என்று விளிக்கும்போதே அவரின் நிஜமான வாத்சல்யம் அதில் தெரியும். அந்தச் சுதந்திரம் தந்த தைரியத்தில்தான் கிருஷ்ணன்பிள்ளை தன் பிரேம விஷயத்தை நாயரிடம் சொன்னதும்.
அதைக் கேட்ட மாத்திரத்தில் நாயர், "இது சரியா வராது மகனே "என்றார். கிருஷ்ணன்பிள்ளைக்குத் தூக்கிவாரிப் போட்டது. சுகுந்தன் நாயர் இப்படி நிறைய விஷயங்களில் குறி சொல்வதுமாதிரி ஏதாவது உளறி வைப்பார். அதைக் கேட்கும்போது கிருஷ்ணன் பிள்ளைக்கு எரிச்சல் முட்டிக்கொண்டு வரும். மரியாதை காரணமாயும் அவர் மேல் வைத்த உண்மையான பாசம் காரணமாயும் அதை அப்படியே விட்டுவிடுவான். நாயர் தன் காரியத்திலேயே இப்படி ஏதாவது சொல்லி வைப்பார் என்று கிருஷ்ணன் பிள்ளை எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் கலவரமடைந்து போனான்.
"அது என்ன கொச்சச்சா? அப்படிச் சொல்லிட்டீங்க"என்றான் கிருஷ்ணன் பிள்ளை. நாயர் பெரிதாய் விளக்கம் ஒன்றும் கொடுக்கவில்லை. "நம்ம குடும்பத்துக்கு நல்லதில்லை. இது சரியாகாது மோனே"என்று மீண்டும் சொல்லிவிட்டு அமைதியாக இருந்துவிட்டார்.
கிருஷ்ணன்பிள்ளை இதைக் கேட்ட சில தினங்களுக்குக் கொஞ்சம் வருத்தமாய் இருந்தான். பின் ஒரு தடவை சொர்ணாவைப் போனில் கூப்பிட்டுப் பேசிய பின் கொச்சச்சனையும், அவர் சொன்ன விஷயங்களையும் மறந்துபோய்விட்டான். ஆனால் நேற்று நடந்த சம்பவம் அவனை மீண்டும் கொஞ்சம் கலவரப்படுத்தியிருந்தது.
திருவனந்தபுரம் ரோட்டில் சொர்ணாவும் கிருஷ்ணன்பிள்ளையும் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மழை பிடித்துக்கொண்டது. பக்கத்திலிருக்கும் ஒரு பள்ளி வளாகத்தில் ஒதுங்கினார்கள். ஞாயிற்றுக்கிழமையான காரணத்தால் பள்ளியில் யாருமில்லை. சுற்றிலும் மரங்கள் பசுமையாய் சிலிர்த்துப் போயிருந்தது. மழையின் மண்வாசனையும் தூறலும் சொர்ணாவின் அருகாமையும் கிருஷ்ணன்பிள்ளைக்கு ஒரு கிளர்ச்சியை தந்துவிட்டது. சொர்ணாவும் அதே நிலையில்தான் இருந்தாள். சொர்ணாவின் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தான் கிருஷ்ணன்பிள்ளை. தனிமையும் மழையும் பலப்பல எண்ணங்களைக் கிளற மெல்ல முன்னேறி அவள் கைகளைப் பற்றினான். கையை உதறுவாள் என்று எதிர்பார்த்திருந்த கிருஷ்ணன்பிள்ளைக்கு அவள் அப்படிச் செய்யாதது தைரியத்தைக் கொடுத்தது. இன்னும் கொஞ்சம் முன்னேறினான். மெல்ல அவளின் முகத்தை நிமிர்த்தினான். அவள் உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன. ஒரு நீர்த்துளி உதட்டில் இருந்துகொண்டு கிருஷ்ணன்பிள்ளையின் உயிரை வாங்கியது. அவள் கைகள் ஒருவித நடுக்கத்தில் இருப்பதை உணர்ந்த கிருஷ்ணன்பிள்ளை பிடியை இறுக்கினான்.
எங்கிருந்தோ வந்த ஆடு ஒன்று மே என்று கத்தியபடி அவர்களைக் கடந்து கொண்டு ஓடியது. மழைக்குப் பயந்து அதுவும் ஒதுங்கியிருக்கவேண்டும். ஆட்டின் குரல் சொர்ணாவை தன்நிலைக்குக் கொண்டுவந்தது. மென்மையாக கிருஷ்ணன்பிள்ளையின் பிடியைத் தளர்த்திவிட்டு கொஞ்சம் ஒதுங்கி நின்றாள். கிருஷ்ணன்பிள்ளை ஆட்டைத் துரத்திக்கொண்டு ஓடினான். சொர்ணலதா அதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தாள்.
மழை வெறித்த பின்பு தன் அறைக்குத் திரும்பி வந்த கிருஷ்ணன்பிள்ளை எப்போதும் போல் வீட்டிற்குப் போன் செய்தான். சுகுந்தன் நாயருக்கு நெஞ்சுவலி வந்ததாயும் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாயும் அவன் அம்மா வருத்தம் கலந்த குரலில் சொன்னாள். கிருஷ்ணன்பிள்ளைக்குத் தூக்கி வாரிப் போட்டது. "இது சரியா வராது"என்று சுகுந்தன் நாயர் சொல்வது போலத் தோன்றியது அவனுக்கு.
இப்போது ஒன்றன் பின் ஒன்றாய் எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்ததில் சுகுந்தன் நாயர் சொல்வதில் உண்மை இருக்குமோ என்று தோன்றத் தொடங்கியது கிருஷ்ணன்பிள்ளைக்கு. அவளது புறங்கை மேலே பட்ட அன்றுதான் அவனது முத்தச்சிக்கு மேல் சரியில்லாமல் போனது. பகவதி புண்ணியத்தில் அவள் பிழைத்துக்கொண்டாள். நேற்று சொர்ணாவை மீண்டும் தொட்டபோது கொச்சச்சனுக்கு நெஞ்சு வலி வந்தது.
இப்படியெல்லாம் கண்மூடித்தனமாய் யோசிக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டாலும் இந்த எண்ணங்களை, கிருஷ்ணன்பிள்ளையால் களைய முடியவில்லை. நெடு நேரத் தீவிர யோசனைக்குப் பின் அயர்ச்சியில் அப்படியே உறங்கிப் போனான்.
அதிகாலையிலேயே சொர்ணா கூப்பிடுவாள் என்று எதிர்பார்க்காத அவனுக்கு, அவள் குரலைக் கேட்டதும் சந்தோஷமாய் இருந்தது. அவளுடன் பேச ஆரம்பித்தக் கொஞ்ச நேரத்திற்கெல்லாம், நேற்று இரவு தானாய் ஏற்படுத்திக்கொண்ட கற்பனைகள் எத்தனை மோசமானவை என்று அவனுக்குப் புரிந்தது. இனி அப்படி நினைக்கக்கூடாது என்பதை ஒரு சபதமாகவே எடுத்துக்கொண்டான்.
ரொம்பத் தயங்கித் தயங்கி சொர்ணா கேட்டாள்.
"இன்னைக்கு ·ப்ரீயா இருந்தா படத்துக்குப் போகலாம். எங்க வீட்டுல எல்லாரும் மதுரைக்குப் போயிருக்கிறாங்க. எனக்கு படிக்க வேண்டியிருக்குதுன்னு நான் வரலைனு சொல்லிருக்கேன். இன்னைக்கு உங்களுக்கு டைம் இருக்குமா?"
கிருஷ்ணன் பிள்ளைக்கு நம்பவே முடியவில்லை. எத்தனை நாளாய்க் கெஞ்சியிருப்பான். ஒருநாள் கூட மசியாத சொர்ணா, தானே அழைத்து சினிமாவுக்குப் போகலாமா என்கிறாள். அந்தச் சந்தோஷத்தைச் சொல்ல வார்த்தைகளில்லை அவனிடம்.
"செரி.."என்றான். அவன் குரலில் இருந்த சந்தோஷம் அவனுக்கே தெரிந்தது.
திரையில் காட்சிகள் வேகவேகமாய் மாறிக்கொண்டிருந்தன. கொஞ்சம் புரிந்தும் நிறைய புரியாமலும் படத்தை இரசித்துக்கொண்டிருந்தான் கிருஷ்ணன்பிள்ளை. சொர்ணாவின் அருகாமை அவனுக்குச் சொல்லமுடியாத சந்தோஷத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. இருவரின் கைகளும் அருகருகில் இருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் சொர்ணாவின் கையைப் பிடிக்கலாம். அவள் ஒன்றும் உதறி விட மாட்டாள் என்று தெரியும் அவனுக்கு. உதறவேண்டுமானால் மழைக்கு ஒதுங்கிய நாளிலேயே உதறியிருக்கலாம். கையை இன்னும் இரண்டடி நகர்த்தினால் சொர்ணாவின் மிருதுவான கைகளைப் பற்றி விட முடியும்.
இப்படி நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் லேசான வெப்பத்தோடு சொர்ணாவின் கைகள் தன் கைகள் மீது பரவுவதைக் கண்டு அவளைப் பார்த்தான். அவனும் அவள் கையை
பலமாகப் பற்றிக்கொண்டான். கைகளை மெல்ல இறுக்கினான்.
தோளை அவள் பக்கமாகச் சாய்த்து அவள் முகத்தை மிக அருகில் இருந்து இரசித்தான். அவள் அவன் கைகளை மேலும் மேலும் இறுக்கினாள். இன்னும் கொஞ்சம் வசமாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, கொஞ்சம் நெருங்கி, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவளின் கன்னங்களில் உதடுகளால் லேசாய் முத்தமிட்டான். அவள் கண்களைத் திரைகளிலிருந்து விலக்கவே இல்லை. அதே சமயம் கிருஷ்ணன்பிள்ளையின் கைகளை இன்னும் இறுக்கினாள்.
கைகளை மெல்ல விடுவித்துக்கொண்டான் கிருஷ்ணன்பிள்ளை. அவளின் முகத்தை அவனை நோக்கித் திருப்பினான். அவளது சுவாசம் அவன் மீது வெம்மையாகத் தாக்கியது. அவளின் கழுத்து நரம்புகள் புடைத்திருந்தன. கண்கள் பாதி சொருகிய நிலையில் இருப்பதாகப் பட்டது கிருஷ்ணன்பிள்ளைக்கு.
விரல்களால் சொர்ணாவின் உதடுகளை மெல்ல வருடினான். அவளது கழுத்து நரம்புகள் புடைத்து அடங்குவது, அந்த மங்கலான வெளிச்சத்தில் கூடத் தெளிவாய்த் தெரிந்தது. மீண்டும் ஒருமுறை உதடுகளை வருடினான். முகத்தை முன்னே இழுத்து, மிக அழுத்தமாய் உதடுகளில் முத்தமிட்டான் கிருஷ்ணன்பிள்ளை. சூர்யா யாரையோ சுட்டுக்கொண்டிருந்தபோது சொர்ணாவும் கிருஷ்ணன்பிள்ளையும் வேறு ஏதோ ஒரு உலகத்தில் இருந்தார்கள்.
படம் முடிந்து வரும்போது இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. ஒரு தடவை ஸாரி சொல்லிவிடலாமா என்று கூடத்தோன்றியது கிருஷ்ணன்பிள்ளைக்கு. ஆனாலும் அமைதியாய் இருந்துவிட்டான்.
அவளை பஸ் ஏற்றி அனுப்பிவிட்டுத் தானும் பஸ் பிடித்து ரூமிற்குள் நுழையவும் போன் ஒலிக்கவும் சரியாக இருந்தது. வேகமாய் எடுக்கப் போனான். கட்டாகி விட்டது. யார் அழைத்திருப்பார்கள் என்று அவனால் யூகிக்க முடியவில்லை. சொர்ணா அழைத்திருப்பாளோ? இருக்காது. இப்போதுதானே போனாள். ஒருவேளை.. கலமசேரியிலிருந்து அழைத்திருப்பார்களோ.. இப்படித் தோன்றிய போதே கொஞ்சம் பயம் வர ஆரம்பித்தது அவனுக்கு. இன்றைக்கும் ஏதாவாது நேர்ந்திருக்குமோ என்ற எண்ணம் வர ஆரம்பித்தது. நேற்றுதான் கொச்சச்சனை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாய் அம்மா சொன்னாள். ஒருவேளை அவருக்கு ஏதாவது...
மீண்டும் போன் ஒலித்தது. அவனுக்கு அதை எடுக்கவே பயமாய் இருந்தது. "நம்ம குடும்பத்துக்கு இது சரியாகாது"என்று கொச்சச்சன் சொன்னது மீண்டும் நினைவுக்கு வந்தது. இந்த முறையும் எதாவது நேர்ந்திருந்தால் என்ன செய்வது என்றே கிருஷ்ணன் பிள்ளையால் யோசிக்க முடியவில்லை. மனதை அடக்கிக்கொண்டு போனை எடுத்தான்.
"ஹலோ"
"சொரணா பேசறேன்"
கொஞ்சம் நிம்மதியானது கிருஷ்ணன் பிள்ளைக்கு.
"ம் பறா.."என்றான் கிருஷ்ணன் பிள்ளை. விசும்பல் சத்தத்திற்கிடையில் சொர்ணா சொன்னாள்.
"ஏதோ ஆகிஸிடெண்ட்டாம். அப்பாவை சீரியஸாக ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறாங்க"என்று சொல்லிவிட்டு அழத் தொடங்கினாள்.
No comments:
Post a Comment