Monday, February 23, 2004

பரணிக் கவிதை - 1

ஏட்டி

ஏட்டி!
நிம்மதியாக் கெடந்து நாளாச்சுட்டி
மனசத் தொறந்து சொல்ல
மறுகுதேன் முடியல

களத்துமேட்டுல சொல்லலாம்னா
கௌவிங்க இருக்குறாளுவோ
கெணத்துமேட்டுல சொல்லலாம்னா
கொமரிங்க குளிக்குறாளுவோ

நடுசாமத்துலச் சொல்ல வந்தா
நாய் கெடந்து கொலைக்குதுட்டி
ஆத்தாக்காரி முழிச்சிக்குறா
எழவெடுத்தவ
ஆயிரத்தெட்டு கேக்கா

கருக்கலில சொல்லவந்தா
அண்ணங்காரன்
மானமே வெளுக்கல
மசுரப்புடுங்கப் போறியாலங்கான்

கிராமத்துல பொறந்தவன் நா
கவிதயா சொல்ல முடியும்?

தேனெடுக்கேன் தெனமும்
தேனீக்க கொட்டுதுட்டி
வலிக்கல
ஓன் நெனப்பு நெதமும்
நெஞ்சில கொட்டுதுட்டி
தாங்கல

கேக்காம வெதச்சிட்டேன்
மரமா ஒசந்துட்டு
தூரப் போட முடியல
உசுரோட ஒட்டிகிட்டு

ஆத்துக்குள்ள குளிக்கயில
அயிர மீனு கடிக்கயில
கால் ஒதற மனசு வல்ல
ஒன்ன கடிச்ச மீனோ?

தொறந்து சொன்னாத்தானா?
சிரிக்கி
என் கண்ணப்பாத்தா புரியல?
இங்கிட்டு இம்புட்டுக் கிடக்கு
மனசுல அம்புட்டு இருக்கு
அங்கிட்டு எப்படியோ?
நெசமா சொல்லுதேன்ட்டி
நிம்மதியா கிடந்து நாளாச்சு


2 comments:

Anonymous said...

may be it's a lot o late
u have a spelling mistake there
for "kilavi"
lagara' pilaui

ஹரன்பிரசன்னா said...

அது பிழையில்லை. வேண்டுமென்றே அப்படி எழுதப்பட்டது.