அறையெங்கும் பரவும்
வெளிச்சத்தில்
தன் வீரிய அணுக்களை
விட்டுவிட்டுத் தொலைகிறது
இருள்
விளக்கணைக்கும்
கதவடைக்கும்
ஒவ்வொரு நிகழ்விலும்
சடாரென
முகம்தூக்கும் அணுக்கள்
நீர்த்துப்போகின்றன
மெலிதான வெளிச்ச உட்கசிவில்
முழுதும் இருள்
சாத்தியமே இல்லையென்ற
முடிவை
அசைத்துப் பார்க்கும்
இடியும், அதைத் தொடர்ந்த
மின்வெட்டும்
முற்றாகச் சூழ்ந்த இருளை
துரத்தி
பேய் மழையில் நனையும்
இராட்சத மரத்தைக்
கண்ணுக்குக் காண்பித்து
பயமுறுத்தி
மறையும் நொடி மின்னல்
இவ்வாறாகவும்
வேறாகவும்
தொலைத்துக்கொண்டிருக்கின்றன
இருளும் வெளிச்சமும்
ஒன்றையொன்று