Thursday, March 4, 2004

தொகுப்பு - கவிதை

காற்றில் ஆடும் சிறிய வேப்பஞ்செடியின் பாத்தியில்
மீந்திருக்கும் சிறுநீர் வாடை
காற்றோடு கலந்தடிக்கும்போது
வேப்பஞ்செடிக்காக விசனப்பட்டு
அம்மா சத்தமாய் வெய்வாள், என்
மௌனச்சிரிப்பு காற்றில் கலக்கும்

தொடர் ஏச்சுக்குப் பயந்து
ஓடும் என் கால் சத்தம் கேட்டுப்
பரபரப்படையும் அணில்
திசை தெரியாமல் மரம்தேடி
செடிகளில் மோதிச் செல்ல, கோபிக்காமல்
சிரித்து ஆடிய செடிகள்
என்னைப்போலவே குழந்தைமை தொலைத்து இன்று மரங்களாய்.

வெள்ளையை மறைத்துக் கரும்புகை பீடித்துச்
சவாலாய் நிற்கும் வீட்டின் சமையலறைப் பின்சுவரில்
மாங்காய்க்கொட்டைக் கிறுக்கல்களில்
ஒருவன் கெட்டவார்த்தை சொல்ல
மற்றவன் கலவிப் படம் வரைய
பெயர் சொல்லாமல் என் காதல் சொன்னேன்
பதிலாய் எவனோ வக்கிரம் சொன்னான்
மறுபதில் இப்போதெழுத
பள்ளியில்லை; சுவரில்லை
படிக்க அவனில்லை; புரிய அவளில்லை
மேலும், அந்த நான் இல்லை

ஞாபகங்கள் உந்தித்தள்ள
வழியில் வீழ்ந்துகிடக்கும் காய்ந்த சருகுகளில் கண்கள் குத்தி
மெல்ல நடக்கின்றேன்
கைவிட்டுப் போன என் வீடு
வெளிச்சுவரில் புதிய கரிக்குச்சிப் படங்களோடும்
உட்புறச்சுவர்களில் மோதும் அந்தரங்க நினைவுகளோடும்
இன்னும் அங்கே இருக்கிறதாம்

இந்தக் கவிதை அமீரக அண்டுவிழா மலரிலும் வெளியாகியிருக்கிறது. ஆசிஃப்மீரானுக்கு நன்றி பல.