Friday, April 2, 2004

கவனிப்பாரற்ற மூலை - கவிதை

எல்லா வீடுகளிலும் ஏதோ ஒரு மூலை
அதிகம் கவனிக்கப்படாமல்தான் இருக்கிறது

எந்தவிதக்காரணமுமில்லால்
எப்படியோ நிகழ்ந்துவிடுகிறது
சில புறக்கணிப்புகள்

வீட்டிற்குள் வரும் வண்ணத்துப்பூச்சி
மூலையில் ஒட்டிக்கொண்டபோது
வண்ணத்துப்பூச்சியைத் தொடர்ந்த மனம்
மூலையை மறந்துவிட்டதை உணர்கிறேன்

மூலையில் சிக்கும் காற்று
வீடு முழுதும் நிறையும்போதும்
மூலையைப் பற்றிய பிரக்ஞையில்லாமல்
காற்றைச் சிலாகித்தலோடு அடங்கிப்போகிறேன்

முன்பெல்லாமிருந்த ஒட்டடையும் சிலந்திக்கூடும்
இல்லாமல் ஒழிந்ததின் பின்விளைவு
இந்தக் கைவிடப்பட்ட மூலையென யூகிக்கிறேன்

இப்படியே விடுவதற்கில்லை

     கடிகாரம் மாட்டி வைத்து
     கவனிப்பைக் கூட்டலாம்
     (மூலை பெறும் கவனம் திணிக்கப்பட்டதாய் இல்லாமல்
     இயல்பானதாய் இருக்க விரும்புகிறேன்)

     நெடுநாளாய் முத்தம் தர மறுக்கும்
     பெண்ணை அம்மூலைக்குத் துரத்தி
     கைகளால் அணையிட்டு முத்தம் கொடுக்கலாம்
     (முத்த நினைவைத் தொடர்ந்து நீளும்
     நினைவுச் சுழியுள் மூலை முடங்கிப்போகும்)

     மூலையிலமர்ந்து
     வம்படியாய் ஒரு கவிதை எழுதலாம்
     (கிறுக்கல்களில் கவிதை சிக்கலாம்,
     மூலை சிக்குமென உறுதியில்லை)

தான் கண்டுகொள்ளப்படாததாக
இம்மூலை தானே உரக்கச் சொல்லும்வரை
திணிக்கப்படும் கவனிப்பைக் காட்டிலும்
இயல்பான புறக்கணிப்பே உசிதம்,
அதனால்தானோ என்னவோ
எல்லாவீட்டிலும் ஏதோ ஒரு மூலை
அதிகம் கவனிக்கப்படாமலிருக்கிறது
இயல்பாகவே.