Thursday, July 15, 2004

உன் மதமா என் மதமா?

மரத்தடியில் இடப்பட்ட ரூமியின் கவிதையொன்று மதரீதியான கேள்விகளை முன் வைக்கச் செய்திருக்கிறது.

கவிஞர்களுக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கவேண்டும். அவர் எப்படி விஷ்ணுவை அப்படிச் சொல்லலாம் என்கிற கேள்வியையே நான் முற்றாகப் புறக்கணிக்கிறேன். எனக்குக் கடவுள் நம்பிக்கையுண்டு, ஹிந்து மத நம்பிக்கையுண்டு என்றாலும், கவிதையளவில் அதைச் சொல்லும் கவிஞனின் மீது கேள்வி கேட்கமாட்டேன். இந்த நேரத்தில், மற்ற மதங்களையல்லாது ஹிந்து மதத்தை மட்டுமே சாடும் அரசியல்-வோட்டுச்சிந்தை கவிஞர்களுக்கு இருக்காது என்று நம்புகிறேன், என்பதையும் சொல்லிக்கொள்ள நினைக்கிறேன்.

கவிதைகள் அவை எப்படி இருந்தாலும் ஒரு சமுதாயத்தின் குரலாகத்தான் அங்கீகரிக்கப்படுகிறது. ஒரு சமுதாயத்திலிருந்து தொடர்ந்து கவிதைகள் வருவது அந்தச் சமுதாயம் இயங்குகிறது என்பதன் வெளிப்பாடு. அந்த வகையில் கவிதைகள் வருவது நல்லது. ஆனால் எல்லாக் கவிதைகளையும் தேடிப்படிக்கும் நபர்களுக்கு, நாளாவட்டத்தில் இரண்டொரு கருத்தை மட்டும் வைத்து அதை நேரடியாகச் சொல்ல நினைக்கும் மனப்பாங்கைக் கொண்ட கவிதைகள் அசதியைத் தந்துவிடுவது யதார்த்தம். அவர்கள் நல்ல கவிதைகளை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை மௌனமான விலக்கலால் புறந்தள்ளிவிடுவார்கள். நாகூர் ரூமியின் கவிதை அப்படியொரு புறந்தள்ளலுக்கு ஆளாகவேண்டிய கவிதை.

சமுதாயத்தைச் சீர் திருத்த நினைத்தும் கருத்துப்போக்குள்ள தீவிரக் கவிஞர்களாக ஆரம்பிக்க நினைக்கும் கவிஞர்கள் கண்ணில் பட்டதையெல்லாம் சாடுவது போல ஒரு சாடல்தான் நாகூர் ரூமியின் கவிதையும். அதில் விஷ்ணு, சிவனைப் பற்றி அவர் சொன்னது தவறில்லை, கவிதையில் அதை ஒரு குறியீடாகக் கொள்ளலாம். அதைத் தொடர்ந்து சிவனைச் சொன்னவர் அல்லாவைச் சொல்வாரா என்பதும் அவர் எப்படி சிவனைச் சொல்லலாம் என்பதும் பாமரத்தன்மை கொண்ட கேள்விகள்.

என்ன ஆனாலும் அது கவிதையே ஆனாலும் மற்ற மதத்தினரைப் ண்படுத்தக்கூடாது என்பது சிலரது வாதமாக இருக்கலாம். அவர்களுக்கு விஷ்ணு, சிவன் போன்ற பெயர்கள் எரிச்சலை ஏற்படுத்துவது இயல்பே. ஆனால் கவிதையின் கருவை வைத்து விஷ்ணு, சிவன் போன்ற கடவுளர்களின் மீது எழுப்பப்படும் கேள்விகள் எனக்கு எரிச்சலை ஏற்படுத்துவதில்லை. காரணம் அது போன்ற கவிதைகளை எப்போது வாசிக்க முற்படும்போதும் விஷ்ணு, சிவன், அல்லாஹ், ஜீஸச் என்று நீட்டியே வாசிக்க விழைகிறேன்.

எழுதியது ஒரு முஸ்லீம் என்பதால் "அதுவும் பிறமதத்தவர் எப்படி எழுதலாம்" என்கிற கேள்வி அடிப்படையற்றதும் ஆழமான பார்வையில்லாததும். இந்தக் கேள்விகள் எழுப்பும் பிற்கேள்விகள் என்னென்ன? அப்படியானால் ஹிந்துவே ஹிந்து மதக்கடவுளர்களின் மீது கேள்விகளை எழுப்பினால் பிழையில்லையா? அல்லது இதுவரை எந்த ஹிந்துவும் ஹிந்துமதக் கடவுளர்களின் மீது கேள்விகளை எழுப்பியதில்லையா? ரூமி எழுதிய கவிதையின் சாரம் பிடிக்கவில்லை என்பதை எழுதியவர் ரூமி என்பதால் பிடிக்கவில்லை என்றபடியாகக் காட்டுவது ஒரு எழுத்தாளனுக்கு ஏற்படுகிற இன்னொரு தடசம்.

நாகூர் ரூமியின் கவிதை ஒரு கருத்தை நேரடியாகச் சொல்ல முனைகிறது; கடவுளை நிந்தனை செய்கிறது என்பது மட்டுமே. ஆனால் அடிப்படையில் கடவுள் நம்பிக்கையுடைய நாகூர் ரூமி இக்கவிதையின் மூலம் சொல்ல நினைப்பது என்ன? பூராவும் விஷமான பின்னும் விழிப்பானா கடவுள் என்ற அவர் முன் அவரே எழுப்பிக்கொண்டுள்ள கேள்விக்கு, இறை நம்பிக்கையுடைய அவரே பதில் சொல்லவேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. உலகில் நடக்கும் கொடுமைகளையும் மக்களின் துயர்களையும் கண்ணுற்று நான் இறைநம்பிக்கையைத் துறக்கிறேன் என்ற அறிவிப்போடு இக்கவிதையை அவர் சொல்வாரானால் அந்தக் கவிதையின் உண்மையின்பால் வந்தது; மனக்குமுறலின், கவிஞருக்குச் சமுதாயத்தின் மீதிருக்கும் கோபத்தினால் வந்தது என, கருத்தை நேரடியாகச் சொல்லும் கவிதை என்றளவிலாவது பாராட்டலாம். இல்லாத பட்சத்தில் எதையாவது எழுதி, தனக்கு ஒப்புமையில்லாவிட்டாலும் (தனக்கு ஒப்புமையற்ற விஷயங்களைக் கவிஞன் எழுதக்கூடாதா என்றால் எழுதாமல் இருப்பதே சிறப்பு, அதுவும் இதுபோன்ற ஆழ்நம்பிக்கையுடைய, பிற ஆழ் நம்பிக்கையின்பால் கேள்வி எழுப்பும் கவிதைகளை எழுதாமலிருப்பதே நேர்மையானது என்று நினைக்கிறேன்.) எழுதிக் கவிதையென்று இடும் வேகத்தில் வந்த சப்பையான கவிதை என்றே நான் கொள்வேன்.

அதைத் தொடர்ந்து ரூமியின் பதிலில் முற்றாகக் மரத்தடிக்குழுமம் புறக்கணிக்கப்பட்டிருப்பது அவரைப்போன்ற எழுத்தாளர்களுக்கு அழகா என்ற கேள்வியையும் முன்வைத்திருக்கிறது. ஒரு படைப்பை வைத்துவிட்டு அதற்கான விமர்சனங்களுக்குப் பதில் சொல்வது ஒருவகை. பதில் சொல்லாமல் இருப்பது ஒரு வகை. ரூமி மூன்றாம் வகையாக இனிமேல் மரத்தடியில் எழுதுவதில்லை என்கிறார். இத்தனைக்கும் மரத்தடியில் அந்தக் கவிதையின் பொருளில் தவறில்லை என்று எழுந்த குரல்களே அதிகம்.

ஒல்லி மழை/குண்டு மழை என்று வார்த்தைகளை வைத்து விளையாடியா ஒரு சாதாரணமான கவிதைக்குப் பெரும் விளம்பரமும் மறுமொழிகளும் கொடுத்து மறைமுகமாக இதுபோன்ற முகத்திருப்பலுக்காக எழுதப்படும் ஒன்றிற்கு ஆதரவளித்துவிட்டோமோ என்று தோன்றாமலுமில்லை.

2 comments:

PKS said...

Adappaavi manusha! ithai maraththadilaye ezhuthi irukalaame. Moderator and co-owner e epadi veliya vanthu ezhuthinaa enna artham? :-)) naanga ellam ithu pathi maraththadila pesa koodathu enru arthamaa :-)) - PK Sivakumar

Anonymous said...

what do you mean "thasadam". In this analisys u have used this tamil word. Is it really a tamil word or trying to make another "tamilil puthiya Vaarththai"

Let me know Hari.

Generally your analisys really a good one and bold. Good & Keep it up.

Anbudan kumar.