[6]
உன் பேச்சில்
நிதானமிழந்துவிட்ட ஒரு வார்த்தைக்காக
குமுறிக்கொண்டிருக்கிறேன்,
எச்சிற் தெறிப்பைக்
கவனிக்காதது போலிருந்து
இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும்போது
ஒடுங்குகிறது என் சுயம்
[7]
கூடையிலிருந்து சிதறி ஓடும்
ஆரஞ்சுப்பழத்தை விரட்டிப் பிடிக்காதீர்கள்,
திக்குகளறுத்து
எல்லையறுத்து
மானுடம் வெல்லும் அது.
[8]
நான் வீசிய சோழிகளெல்லாம்
குப்புற விழுந்தன
நீ வீசிய சோழிகளெல்லாம்
வானம் பார்த்து
இந்தத் தலைகீழ் விகிதங்களுக்கு இடையில்தான்
எப்போதும் அலைகிறது வாழ்க்கை
[9]
அந்நியப்பட்டு வீட்டுள் நுழைந்துவிட்ட
றெக்கைகள் படபடக்கும் தட்டான்
தனிமையை விரட்டி
மீட்டெடுக்கிறது
மழையின் குதூகலத்தை
மண்வாசத்தை
வீடெங்கும் பச்சைத் துளிர்ப்பை.
[10]
என் டயரியின் பக்கங்களில்
சில குறிப்புகள் எழுதியிருக்கிறேன்
இரு புறாக்கள் புணர்ந்ததைக் கண்டது முதல்
என் ஆழ்மனதில்
கேட்கும் சங்கொலிக் குறிப்பைத் தவிர.
No comments:
Post a Comment