Friday, August 6, 2004

நையாண்டி

கேரளத் தொலைக்காட்சிகளில் பிரதானப்பட்ட ஒரு விஷயம் அரசியல் தலைவர்களை மையமாக வைத்து நடத்தப்படும் நையாண்டிக் காட்சிகள். இந்த நையாண்டிக்காட்சிகளை ஏசியாநெட், கைரளி போன்றவற்றின் முக்கிய நேரங்களில் காணலாம்.

அச்சுதானந்தனும் ஏ.கே.ஆண்டனியும் ஏ.வி.பி.பரதனும் ரமேஷ் சென்னிதாலாவும் அடிக்கடி நம் வீட்டு வரவேற்பரைக்கு வந்துபோவார்கள். அவர்களைப் போலவே உருவ ஒற்றுமையுள்ள நடிகர்களைத் தேடிப்பிடித்து நடிக்கவைக்கிறார்கள். அவர்களது ஒப்பனையும் நடிப்பும் மிமிக்கிரியும் அசலான தலைவர்களை அப்படியே கண்முன்நிறுத்தும்.

ஆரம்பத்தில் மலையாளத் தொலைக்காட்சிகளைப் பார்க்கத் தொடங்கிய காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தின. நம்பவே இயலாத ஒன்று என் கண்முன்னே நிகழ்ந்துகொண்டிருப்பதாகத்தான் நான் நம்பினேன்.

கருணாநிதியும் ஜெயலலிதாவும் ராமதாஸ¤ம் வைகோவும் இப்படி வேற்று மனிதர்கள் வாயிலாக நம் வீட்டுக்கு வந்துபோவதை என்னால் எப்படி நினைத்துப்பார்க்க முடியும்? அப்படியொரு சூழலில் வளர்ந்த தமிழனாதலால் இதுபோன்ற அரசியல் தலைவர்கள் மீதான நையாண்டிக்காட்சிகள் பெரும் அதிசயமாகத்தான் தோன்றின.

ஆசியாநெட்டில் ஒளிபரப்பாகும் நையாண்டிக் காட்சிகளில் ஏ.கே.ஆண்டனியும் கருணாகரனும் அச்சுதாநந்தனும் தனித்தனியே காரசாரமாக திட்டிக்கொள்கிறார்கள். ரமேஷ் சென்னிதாலா ஏ.கே.ஆண்டனியையும் கருணாகரனையும் சமாதானப்படுத்த கேரளம் வருகிறார். ரமேஷ் சென்னிதாலா முன்னர் கருணாகரனும் ஏ.கே.ஆணடனியும் பரஸ்பரம் மீண்டும் திட்டிக்கொள்ளத் தொடங்க செய்யும் வழியறியாது ஓட்டமெடுக்கிறார் ரமேஷ் சென்னிதாலா. அன்றைய தினத்தின் மாலையில் ஒரு வீட்டின் மாடியில் அச்சுதானந்தனும் ஏ.கே.ஆண்டனியும் மிக நெருங்கிய நண்பர்களாக, உல்லாசமாகப் பேசிக்கொண்டும் பாடிக்கொண்டும் பொழுதைக் கழிக்கிறார்கள். "எண்டே எல்லாம் எல்லாம் அல்லே" என்று பாடிக்கொண்டு சைக்கிளில் போகும்போது முத்தமிட்டுக்கொள்கிறார்கள்.

வெளியில் பகையுடனும் உள்ளுக்குள் பெரும் நட்புடனும் இருக்கிறார்கள் என்று சித்தரிக்கும் அந்தக் காட்சியின் நகைச்சுவையின் பின்னே ஒரு விமர்சனத்தை வைக்கிறார்களே என்று கேரள அரசியல்வாதிகள் யாரும் யோசிப்பதில்லை. இன்று வரை அந்த "சினிமாலா" நிகழ்ச்சி வெற்றிகரமாக வந்துகொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அச்சுதானந்தனோ ஆண்டனியோ கருணாகரனோ நையாண்டி செய்யப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த சினிமாலா நிகழ்ச்சி வெற்றிவிழாவில் பேசிய கேரள அரசியல்வாதிகள் அனைவரும் அந்த நிகழ்ச்சி தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சியென்றும் ஆரம்பத்தில் காணும்போது சிறிய அதிர்ச்சி
இருந்ததாகவும் பின்னர் பழகிவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல. தமிழில் முன்பு நகைச்சுவையை மட்டுமே பிரதானமாக வைத்து ஆடியோ கேசட்டுகள் வந்ததுபோல இப்போதும் கேரளத்தில் அரசியல் நையாண்டியை வைத்து ஆடியோ கேசட்டுகள் வருகின்றன. இன்று கேட்டுக்கொண்டிருந்த ஆடியோ கேசட் ஒன்றில் இதேபோல கேரளத்தில் முன்னணி அரசியல்வாதிகள் யாவரும் நையாண்டி செய்யப்பட்டிருந்தனர்.

நையாண்டியை நகைச்சுவையின் அடிப்படையில் மட்டுமே அணுகவேண்டும் என்கிற தெளிவு எத்தனை தமிழக அரசியல்வாதிகளுக்கு இருக்குமென்று தெரியவில்லை. தனிப்பட்ட முறையில் விமர்சிக்காத வகையில் (இது பற்றிக் கடைசியில்) இதுபோன்ற நையாண்டி நிகழ்ச்சிகளில் தவறேதும் இருப்பதாகப் புலப்படவில்லை.

ரஜினிகாந்தையும் கமல்ஹாசனையும் மணிரத்னத்தையும் வைரமுத்துவையும் இதுபோல நையாண்டிக்குள்ளாக்குபவர்கள் அதைக் கொஞ்சம் விரித்தெடுத்து தமிழகத்தின் அரசியல் தலைவர்களூக்கும் முடிந்தால் இலக்கியவாதிகளுக்கும் பரப்பவேண்டும்.

தமிழக அரசியல்வாதிகளும் இலக்கியவாதிகளும் நையாண்டி, நகைச்சுவைக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். எத்தனைத்தூரம் தீவிர இலக்கியவாதியாக ஒருவர் செயல்பட்டாலும் இலக்கியம் தவிர்த்த பிற வேளைகளில் அவர் ஓர் மனிதரே. அவருக்கும் இயல்பிலேயே நகைச்சுவை உணர்வுகள் இருக்கக்கூடும். அதைத் தொடும் நையாண்டிகளை அவர்கள் எதிர்க்கக்கூடாது. இதுவே அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.

அரசியல்வாதிகள் ஒருவித பணபலத்திற்கும் பதவிபலத்திற்கும் உட்பட்டு, நையாண்டியாகக்கூட தங்கள் மீது விமர்சனங்கள் வரக்கூடாது என்று எதிர்பார்க்கிறார்களோ என்று எண்ண வைக்கிறது தமிழக அரசியல்வாதிகள் தங்கள் முன்னிறுத்துக்கொள்ளும் போக்கு.

நையாண்டிகளை முன்வைக்கும் படைப்பாளிகளும் நையாண்டி தனிப்பட்ட தாக்காக மாறாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியம். கேரளத்தின் நகைச்சுவை ஆடியோ கேசட் ஒன்றில் ஒரு தமிழக அரசியல்வாதி "ஆனை போல தடி" என்று விமர்சிக்கப்பட்டதாகவும் அப்படி விமர்சித்தவர் ஒரு ஷ¥ட்டிங் சமயம் தமிழ்நாடு வந்தபோது "நன்கு" கவனிக்கப்பட்டதாகவும் அறிந்தேன். நையாண்டிகளை அவரவர்களின் துறையோடும் துறை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளோடும் வைத்துக்கொள்வதுதான் சரி.

உடல்வாகைக் கேவலமாகச் சித்தரிக்க முயலும் இவை போன்ற தனிப்பட்ட தாக்குதல்கள் தவிர்க்கப்படவேண்டும் என்பதும் கவனத்திற்கொள்ளவேண்டியதே.

துக்ளக்கில் "சத்யா" எழுதும் நையாண்டிக்கட்டுரைகளில் சில ஆழமான நகைச்சுவை உணர்வைக்கொண்டதாக இருக்கும்.

குழுமங்களிலும் வலைகளிலும் இவைபோன்ற நையாண்டிக்கட்டுரைகள் வருவதில்லை. குழுமங்களிலும் வலைகளிலும் எழுதும்போது இந்த நையாண்டியை இலக்கியவாதிகளுக்கும் சேர்த்தே எழுதலாம். எழுதும்போது கவனத்தில் வைக்கவேண்டியது சுயவிருப்பு வெறுப்பை எழுத்தில் கொட்டாதிருப்பது, தனிப்பட்ட தாக்குதலைச் செய்யாமல் இருப்பது போன்றவையே.

யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லையோ அப்படி யாரும் நையாண்டிக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். ஏனென்றால் நையாண்டியும் ஒருவகை விமர்சனம்தான். நையாண்டிகள் எந்தவொரு வக்கிரத்தையும் அடிப்படையாகக் கொள்ளாதிருக்கும் பட்சத்தில் அவை வரவேற்கப்படவேண்டியவையே.

நையாண்டிக்கட்டுரைகள் அடிப்படையில் நகைச்சுவை உணர்வை முன்வைத்தாலும் அவை நையாண்டி செய்யப்படுவர் எப்படி மக்கள் மன்றத்தில் அறியப்படுகிறார் என்கிற அறிதலையும் முன்வைக்கின்றன. ஆரம்பத்தில் நையாண்டியை மட்டும் கணக்கில் கொள்ளும் வாசகர்கள்/பார்வையாளர்கள் அந்த நகைச்சுவைக்குப் பின்னர் யோசிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்த நகைச்சுவைக்கு ஏன் இந்த அரசியல்வாதி/இலக்கியவாதி/நடிகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்? அவர்களுக்கு அங்கே ஒரு விடை கிடைக்கிறது. அந்த அரசியல்வாதி/இலக்கியவாதி/நடிகர் அப்படித்தான் அறியப்பட்டிருக்கிறார். அந்த அரசியல்வாதி/இலக்கியவாதி/நடிகர் தன் மனதில்
தங்களைப் பற்றிய வேறு ஒரு எண்ணத்தைக் கொண்டிருக்கலாம். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் அவர்கள் அறியப்பட்டதற்கும் அறியப்பட விரும்புவதற்குமான வித்தியாசத்தை உணர்ந்துகொள்ளலாம். இங்கேதான் நையாண்டி நிகழ்ச்சிகளின் வெற்றி இருக்கிறது. இப்படி ஒரு அரசியல்வாதியோ இலக்கியவாதியோ தன்னை அறிந்துகொள்ள இதுதான் வழியா என்றால் இதுவும் ஒரு வழி.

நையாண்டிக் கட்டுரைகள், நிகழ்ச்சிகள் தமிழகத்தில் இன்னும் பரவலாக்கப்படவேண்டும். அதற்கான சகிப்புத்தன்மை அரசியல்வாதிகளிடமும் இலக்கியவாதிகளிடமும் உடனே தோன்றிவிடாது. அதை நையாண்டிக்கட்டுரையாளகளும் நிகழ்ச்சிகள் தயாரிப்பாளர்களுமே ஏற்படுத்தவேண்டும்.

இணையத்தில் ஆரம்பத்தில் ஒருசில கட்டுரைகள் இப்படி எழுதப்பட்டிருந்தாலும் (பொய்யப்பன் செய்திகள்) பின்பு அவை நின்றுபோய்விட்டன. பின்னர் எழுதப்பட்ட ஒன்றிரண்டு ஸ்கிட்டுகளும் அந்த அந்தக் குழுமத்தின் உறுப்பினர்களை மையமாக வைத்து மட்டும் எழுதப்பட்ட "சீசன் ஸ்கிட்டுகளாக" அமைந்துவிட்டன. இன்றிருக்கும் நையாண்டிக்கட்டுரைகளின் வெறுமையைத் தீர்க்க குழுமத்திற்கு ஒருவர் முன்வருதல் அவசியம்.

அவை நகைச்சுவைப் பூர்வமாக கருத்தை முன்வைப்பதற்கும் அதிலிருந்து ஒரு சேரிய விவாதம் தொடங்குவதற்கும் வழிவகுக்கும்.

No comments: