நீ காய் நகற்றவேண்டிய வேளை
உன் நீண்ட நேர யோசனையின் பின்னே
தொடர்கிறது என் கவனம்
சில நாள்களாய்
வெற்றிச்சுகத்தைவிட
மற்றவரின் தோல்வியில் சுகம் காணும் குரூரம்
காய் நகற்றத்தொடங்கியதை
நானும் உணர்கிறேன்
இப்படி வெட்டிக்கொள்வதைக் காட்டிலும்
வெவ்வேறு கட்டங்களிலிருந்து கைகுலுக்கிக்கொள்ள
இருவருமே விரும்புவதை
நிகழவிடாமல்,
சாய்கின்றன நமது சிப்பாய்கள்
நமது தன்முனைப்புக்கான போட்டி நிற்கும்வரை
தொடரப்போகும் ஆட்டங்களில்
உன்னை வீழ்த்த நானும்
என்னை வீழ்த்த நீயும்
சிறைபடாமல் இருக்கும்பொருட்டு
எனது பொய்க்குதிரையையும் யானையையும்
நான் கைவிடத் தயாராகும்போது
நீயும் இறங்கிவரத் தயாராகவேண்டுமென்பதே
உனது நினைவும்
நிஜத்தில்
போட்டியென்ற ஒன்றில்லை என்று சொன்னாலும்
இருவரின் கையென்னவோ
வாளன்றைச் சுழற்றியபடியேதான்.
முடிவில்லாமல்
உனக்கும் எனக்குமான சதுரங்கம்.
4 comments:
பாப்லோ நெரூதா எழுதியதை விட நல்ல கவிதையை எழுதியிருக்கிறீர்கள். இதை தமிழின் நெம்பர் 1 இலக்கிய இதழான உயிர்மையில் வெளியிட ஆவன செய்யவும். மரத்தடி, தமிழோவியம் போன்ற தரமற்ற இதழ்களிலும் குழுக்களிலும் எழுதி உங்கள் திறமையை வீணடிக்க வேண்டாம். அதேபோல இகாரஸ் பிரகாஷ் போன்றவர்களின் பேச்சைக் கேட்டு கல்கி, குமுதம், விகடன் போன்ற இலக்கிய சீரழிவு இதழ்களிலும் எழுத முயலவேண்டாம்
ராச. கவுதமன்
வணக்கம் ராசகௌதமன். :-) உங்கள் மறுமொழி & ஊக்கமொழிக்கு நன்றி. இந்தக் கவிதையை உயிர்மைக்கு அனுப்பிவைக்கிறேன். பார்க்கலாம். பாப்லோ நெரூதா கேள்விப்பட்டிருக்கிறேன் என்றளவில் மட்டுமே எனக்கு நினைவு வருகிறது. அவர் எழுதியவற்றைப் படித்ததில்லை. அதையும் தேடிப்பார்க்கிறேன். நன்றி.
அன்புடன்,
ஹரன்பிரசன்னா
"பாப்லோ நெரூதா கேள்விப்பட்டிருக்கிறேன் என்றளவில் மட்டுமே எனக்கு நினைவு வருகிறது. அவர் எழுதியவற்றைப் படித்ததில்லை" -
அதனாலென்ன கெட்டுவிட்டது? குந்தர் க்ராஸையும் கார்சியா மார்க்வெசையும் கூகிள் வழியாக மட்டுமே அறிந்தவர்கள் தங்களைத் தாங்களோ அல்லது தன் குழுவினரை விட்டோ மேற்கண்டவர்களுக்கு நிகரான தவிர்க்க முடியாத தமிழ் படைப்பாளிகள் என்று சொல்லிக் கொள்ளும் போது உங்களை நெரூதாவுக்கு இணையான தமிழ் கவிஞர் என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.
ராச. கவுதமன்
ராசகௌதமன், நேற்று கூகிளில் தேடி பாப்ல நெருடாவின் கவிதைகளைப் பிடித்தேன். கிட்டத்தட்ட 25 கவிதைகள் கிடைத்தன. ஒருமுறை வாசித்தேன். இன்னொரு முறை வாசிக்கவேண்டும். சில கவிதைகள் முதல் வாசிப்பிலேயே உள் சென்று உட்கார்ந்துகொள்கின்றன.
அன்புடன்
ஹரன்பிரசன்னா
Post a Comment