Monday, January 10, 2005

ஒரு இறப்பின் இரண்டு மூலங்கள் - சிறுகதை

வாக்கிங் போய்விட்டு, விசாகபவன் முன்னே சூடாக உளுந்த வடை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது தலையில் காய்கறிக்கூடையைச் சுமந்து போய்க்கொண்டிருந்த வயதான கிழவி கல் தடுக்கிக் கீழே விழுந்தாள். நானும், வாக்கிங் வராமல் வடை மட்டும் சாப்பிட வரும் மாலியும், கிழவியைத் தூக்கிவிட ஓடினோம். வெறிச்சோடிப் போய் காலையின் பரபரப்புக்காத் தயாராகிக்கொண்டிருக்கும் தெரு சட்டென ஒரு பரிதாபத்தை வரவழைத்துக்கொண்டு அந்தக் கிழவியைச் சூழ்ந்து கொண்டது. மாலி கிழவியின் அருகே குனிந்து "ஆச்சி.. ஆச்சி.." என்றான். கிழவியிடமிருந்து எந்தவொரு எதிர்வினையும் இல்லை. நான் குனிந்து கிழவியைத் தொட்டு உசுப்பினேன். உடல் சில்லிட்டிருப்பதாகப்பட்டது.

பத்து கடை தள்ளியிருக்கும் முடிவெட்டும் கடையிலிருந்து ஒருவன் கைலியை மடித்துக் கட்டிக்கொண்டே ஓடிவந்தான். அவன் முடிவெட்டிக்கொண்டு இரண்டு மாதத்திற்கு மேல் ஆகியிருக்குமோ என்னவோ. கருகருவென நிறைய முடி இருந்தது அவனுக்கு. இப்படி எந்த ஆணுக்காவது நிறைய முடி இருப்பதைப் பார்த்துவிட்டால் ஒவ்வொரு முறையும் என் பாட்டி, 'இப்படி ஒரு பொட்டச்சிக்கு வளரமாட்டேங்கு" என்று அங்கலாய்த்துக்கொள்வாள். வந்தவன் கிழவியைப் பார்த்த கணத்தில் 'உசுரு போயிட்டு' என்றான். "ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போலாம்" என்றேன். மாலி கண் காட்டினான். 'எனக்குத் தெரிஞ்ச கிழவிதான். நா போய் ஆளக்கூட்டியாரேன்" என்று சொல்லிவிட்டு, முடியை இரண்டு தரம் கோதிவிட்டுக்கொண்டு நடையைக் கட்டினான் கடைக்காரன். நாங்கள் நாலு பேர் சேர்ந்து கிழவியை நடைபாதையை விட்டு ஓரமாகக் கிடத்தினோம். மாலி இரண்டாவது முறை கண்ணைக் காட்டினான். நான் கூட்டத்திலிருந்து வெளியில் வந்தேன். யாரோ ஒரு பெண், "இப்படியும் உண்டுமா" என்றாள். வழியில் உருளைக்கிழங்கு, தக்காளி, கொஞ்சம் பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி எனப் பலவும் சிறிய கருப்பு நிற பர்ஸ் ஒன்றும் சிதறிக் கிடந்தன.

மாலி, "வேல இருக்குல்ல?"

"ம்"

"கெளம்பு. அவன் வந்து பாத்துக்கிடுவான். நானும் போவணும். எஸ்.ஆர்.எம். வாரேன்றுக்கான். நீ போய் ஆ·பிஸ¤க்குக் கிளம்புற வேலயப் பாரு" என்று சொல்லிவிட்டு, நான் அந்த இடத்தை விட்டு நகர்கிறேன் என்று அவனுக்குத் திருப்தி ஏற்பட்ட பின்பு, தன் ஸ்ப்லெண்டரை இரண்டு முறை உறுமச் செய்து, ஒன்றுமே நடக்காத மாதிரி ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்துக்கொண்டே போனான்.

நடந்து விட்டுக்கு வந்து, மேம்போக்காகத் தினமலரை மேய்ந்துவிட்டு, தலைக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டு, சாப்பிடும்போது "எப்படிச் செத்துருப்பா?" என்றேன். "யாரைக் கேக்குறீங்க?" என்றாள் மனைவி. "ஒண்ணுமில்லை" என்றேன்.

மூலம்-1


தினமும் வயிற்றுப்பிழைப்புக்காக காய்கறி வாங்கி, கொஞ்சம் இலாபம் வைத்து, தெருத் தெருவாக விற்பாள் போல. தலையில் காய்கறிக்கூடை இருந்தது. அப்படித்தானிருக்கவேண்டும். கருத்த தேகம். சுருக்கங்கள் நிறைந்த உடல். பொட்டில்லை. தாலியில்லை. அரசு இனாமாகத் தரும் சேலையை உடுத்தியிருந்தாளோ? இரவிக்கை இல்லை. எவளோ ஒருத்தி, "இப்படியும் உண்டுமோ" என்று சொன்னது சரிதான். இப்படியும் உண்டுமா? கல் தடுக்கிக் கீழே விழுந்தவள், சிறு இரத்தக் காயம் கூட இல்லாமல், செத்துப் போவாளா? அவளைத் தொட்டுக் கூடப் பார்க்காமல், "உசுரு போயிட்டு" என்றவனை எந்த வகையில் சேர்க்கலாம்? ஒருவேளை அந்தக் கிழவி செத்துப் போவதற்காகவே காத்திருந்தானோ? அப்படிச் சொல்ல முடியாது. அவனுக்குத் தெரிந்த கிழவி என்றுதான் சொன்னான். அவளது மரணம் அவனுக்கு எந்த வகையிலும் தேவையானதாய் இருக்காது. "பாத்த ஒடனே கண்டுக்கிட்டேன் கிழவி போயிட்டுன்னு" என்று பிற்பாடு பிரஸ்தாபிப்பதற்காக அப்படிச் சொல்லியிருக்கலாம். அப்படி இல்லாமலும் இருக்கலாம். நிஜமாகவே கிழவி இறந்துவிட்டாள் என்பதைப் பார்த்த நொடியிலேயே கண்டுகொண்டு சொல்லியிருக்கலாம். என்னால் அப்படி கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். மாலியும் அப்படிச் சொல்லவில்லை. எனக்குத் தெரிந்தது கூட மாலிக்குத் தெரிந்திருக்காது என்பதே காரணமாய் இருக்கவேண்டும். அவனுக்கு அவள் செத்தது சட்டென பிடிபட்டிருக்கலாம்.

எத்தனை மகன்களோ மகள்களோ? மகன் நல்ல வேலையில் இருந்திருக்க வாய்ப்பிருக்காது. இருந்திருந்தால், தெருத் தெருவாய்க் காய் விற்று, அரசு தரும் இனாம் சேலையை உடுத்திக்கொண்டு வாழ்ந்திருக்கமாட்டாள். மகனுக்கும் அவளுக்குமான உறவு எப்படி இருந்திருக்கும்? அம்மா இறந்ததைக் கேட்டு மகன் ரொம்பத் துடித்துப் போயிருப்பானோ? கிழவிக்கு அதிகம் வயசானதாகத் தெரிந்தது. மகனுக்குக் கல்யாணம் ஆகி, அவனுக்கும் வயதாகிப் போயிருக்கலாம். அப்படி இருந்தால் ரொம்ப அழுவான் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்? ஒருவேளை அதிகம் அழுதிருக்கவும் செய்யலாம்.

கிழவி கன்னங்கள் ஒட்டிப்போய், வயிறு ஒட்டிப்போய்க் கிடந்தாள். மருமகள் கொடுமைக்காரியோ என்னவோ. சூதுவாது தெரியாத இந்தக் கிழவியை என்ன பாடு படுத்தினாளோ. நல்ல சாப்பாடு போட்டு, நறுவிசாக வைத்திருந்தால் கிழவி கன்னம் ஒட்டிப்போய், வயிறு ஒட்டிப்போய், சாகப் போகிற காலத்தில் தெருத் தெருவாய்க் காய் விற்கப்போவாளா? மருமகள் அடாவடிக்காரியாய் இருந்திருப்பாள். அதை மகனும் பார்த்துக் கொண்டிருந்திருப்பான். கிழவி மனம் வெறுத்துப்போய் அதிலேயே பாதி செத்துப்போயிருப்பாள். அதுதான் கீழே விழுந்ததும் மீதி இருந்த பாதி உயிரும் பிரிந்திருக்கிறது. இப்படியும் உண்டுமா? மகனும் மருமகளும் சேர்ந்தே அவளைக் கொன்று விட்டார்களே!

ஒருவேளை மகனோ மகளோ இல்லாத அனாதையாக இருக்குமோ? இருக்கலாம். அனாதைக் கிழவிகளுக்குத்தானே தானே அரசு இனாம் சேலை தருகிறது? மகனில்லாத, கலியாணம் ஆகிவிட்ட மகள் மட்டுமே இருந்தாலும் அரசு இனாம் சேலை தரும். மகனிருந்தாலும் தருமோ? மகள் நல்லவளாகத்தான் இருக்கவேண்டும். மாப்பிள்ளைக்குப் பயந்து, கடைசிக் காலத்தில் தன் தாயைக் கவனிக்க முடியாத நிலைமை அவளுக்கு வந்திருக்கவேண்டும். ஐயோ பாவம் அந்தக் கிழவியின் மகள். அவளின் மாப்பிள்ளை என்ன மனிதன்? அவனுக்கும் ஒரு வயோதிகம் காத்திருக்கிறது என்பதை எப்படி மறந்தான்? இப்படித்தான் பலரும் அவரவர்களின் எதிர்கால வயோதிகத்தை மறந்துவிடுகிறார்கள்.

அன்று காலை அந்தக் கிழவி என்னென்ன நினைத்திருப்பாள்? மகனின் காலில் விழுந்து, "வயசான காலத்துல என்ன நல்லா வெச்சிக்கடா" என்று கேட்டுக்கொண்டு, தனக்கொரு வழியமைத்துக்கொள்ள நினைத்திருக்கலாம். அல்லது மகளிடம் தன்னைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி மன்றாட நினைத்திருக்கலாம். அல்லது யார் துணையுமில்லாமல் கடைசி வரை காய் விற்றே பிழைத்துக்கொள்ள தீர்மானித்திருக்கலாம். எப்படியோ அவளின் கடைசி வந்தேவிட்டது. ஒரு கல் தடுக்கிக் கீழே விழுந்து, காய்களும் பழங்களும் சிதறிப்போக, அவள் அமைதியாக அடங்கிப்போனாள்.

"ஸார்! ஏதோ யோசனையிலயே இருக்கீங்க. கமிஷனர் ஊர்ல இல்லை. ·ப்ரீயா இருக்கும். படத்துக்குப் போலாம்னீங்க. பம்பாய் தியேட்டர் சீனிவாசன்கிட்ட டிக்கெட்டுக்குச் சொல்லியிருக்கேன். போலாமா?"

"அதில்லை. காலேல வாக்கிங் போனப்ப ஒரு கிழவி கல் தடுக்கிக் கீழ விழுந்தா. அந்த ஸ்பாட்லயே செத்துட்டா. இப்படியும் நடக்குமா? என்ன கஷ்டமோ என்னவோ"

"ஓ! கேக்கவே கஷ்டமாயிருக்கு. அதிருக்கட்டும். படத்துக்கு நேரமாயிட்டு. போலாமா?"

"வயசானவங்களுக்கு கவர்மெண்ட்ல இனாம் சேலை தர்றாங்களே.. மகன் இருந்தாலும் தருவாங்களா?"

"என்ன சார்?"

"இல்ல. கவர்மெண்ட்டுல வயசானவங்களுக்கு ·ப்ரீயா சேலை தர்றாங்களே.. மகன் இருந்தாலும் தருவாங்களான்னு கேட்டேன்"

'ஏன் சார்? வீட்டுல கேக்க சொன்னாங்களா?"

"நாம படத்துக்குப் போவோம்"

மூலம் -2


அன்றைய தினம் முழுதும் தியேட்டரிலும் மதிய உறக்கத்திலும் மாலை கொஞ்சம் ஆ·பிஸிலும் கழிந்தது. ·பைலை எல்லாம் அடுக்கி வைத்துவிட்டு, நாளை கமிஷனருக்குத் தயாராக இருக்கவேண்டிய ·பைல்களையெல்லாம் ஒரு பிக்ஷாப்பரில் எடுத்துக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பினேன். வீட்டிலும் வேலை பார்த்தால் மட்டுமே ·பைல்களையெல்லாம் முடித்துத் தயாராக வைக்க முடியும். இல்லையென்றால் கமிஷனர் வாயில் விழவேண்டியிருக்கும்.

சுசுகியில் விசாகபவனைக் கடந்தபோது காலையில் கிழவி கீழே விழுந்து இறந்த சம்பவம் மனதுள் திரையிட்டது. அந்தக் கிழவியை யார் கொண்டு போயிருப்பார்கள் என்று யோசனை பரவியது. வண்டியை நிறுத்திவிட்டு விசாகபவனுக்குள் சென்று கா·பி ஆர்டர் செய்தேன்.

"இன்னைக்குக் காலேல ஒரு கிழவி செத்துப் போச்சே... யார் கொண்டு போனாங்க?" - சர்வர் திருதிருவென விழித்தான். "சரி. பில் கொடுங்க" என்று கேட்டு காசைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன். தூரத்தில் சலூன் கடையில், காலையில் வந்தவன் சுறுசுறுப்பாக முடிவெட்டிக்கொண்டிருந்தான். இப்போதெல்லாம் இரவுகளில் முடிவெட்டிக்கொள்ளுவது சகஜமாகிப்போய்விட்டது. மீண்டும் மீண்டும் கிழவியின் சாவைப் பற்றிய எண்ணமே வந்துகொண்டிருந்தது.

மாலியை ·போனில் அழைத்தேன். திட்டினான்.

"ஒனக்குத் தேவையா அந்த எளவெல்லாம்? எதாவது பிரச்சனைன்னா கூடவே நீ போவியா? ஒளுங்கா வீட்டுக்குப் போய்த் தூங்கு" என்றான். "உனக்கு ழ-வே வரமாட்டேங்கு" என்று சொல்லி ·போனைத் துண்டித்தேன்.

அடுத்தடுத்த இரண்டு மூன்று தினங்களில் கிழவியும் அவள் சாவும் என்னைக் கடந்து போய்விட்டன. சரத் சென்னையிலிருந்து எந்தவொரு அவசியமுமில்லாமல் அவன் வீட்டிற்கு வந்திருந்தான். "அப்பா அம்மாவ பாத்துட்டுப் போலாம்னு" என்று அவன் சொல்லியதைக் கேட்டு அவர்கள் சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கும்போது, யாருக்கும் தெரியாமல் பக்கத்துத் தெரு மஹா(லெக்ஷ்மி)வைப் பார்க்கப் போவான்.

"சரத் வந்திருக்கான்னாங்க? நீங்க எப்படி இருக்கீங்க?"

சரத்தின் அம்மா வாய் ஓயாமல் பேசினாள். அந்தத் தெருவில் யார் யாரை வைத்துக்கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்குள் என்ன என்ன பிரச்சனைகள் வந்தது, இப்போது ஓடிக்கொண்டிருக்கும் படங்களில் எந்தப் படம் நல்ல படம், இடையில் சுனாமியில் இறந்துபோன ஒன்றுவிட்ட மாமாவின் மகளைக் கட்டியவருக்காக ஒரு அழுகை என்று எல்லாம் ஒரே நேரத்தில் செய்தாள். நான் உச்சுக்கொட்டிக்கொண்டிருந்தேன்.

"அம்புட்டுதாண்டே வாழ்க்கை. நேத்து இருந்தவக இன்னைக்கில்லை. நோக்காடு கெடந்தே போகக்கூடாது. சாவு வருதுன்னே தெரியாம போயிரணும்"

சரத் சீக்கிரம் வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். சரத்தின் ஆச்சி அதற்குமேல் வாயை அடக்கமுடியாமல் - யார் வந்தாலும் அவள் லொட லொடவென்று பேசக்கூடாது என அவளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது - "செத்தா அந்தக் கெழவி செத்தால்லா.. அவள மாதிரி சாவணும்" என்றாள்.

சரத்தின் அம்மா, "ஆமாடே.. அத்த சொல்றது சரிதான். கல் தடுக்கிக் கீழ விழுந்தா செத்துட்டா. சாவுன்னா இப்படித்தாண்டே வரணும்" என்றாள். தனக்குக் கிடைத்த ஆமோதிப்பில் சரத்தின் ஆச்சி அடுத்து ஏதோ சொல்ல வாயெடுத்தாள். "சரி போதும், வந்தவன பேசியே கொன்னுறாதீய" என்றவள் என்னைப் பார்த்து, "காப்பி சாப்பிடுதயாடே?" என்றாள். நான் அவசரமாக "எந்தக் கிழவி? எப்படிச் செத்தா?" என்றேன். சரத்தின் அம்மா கா·பி எடுக்க சமையலறைக்குள்ளே சென்றாள். அங்கிருந்தபடியே, "இங்க ஒரு கிழவி தெனம் காய் விக்கும். நம்ம தெரு முக்குல காய் விக்கும்லா.. நீ பாத்திருப்ப. ஒனக்கு ஞாபகமில்லியோ? வயசுப் பசங்க எங்க அக்கம் பக்கம் பாக்கீய? அது ரெண்டு நா முன்னாடி காலேல, விக்கதுக்கு காய் வாங்கிட்டு வந்திருக்கு. கல்தடுக்கிக் கீழ விழுந்திருக்கு. அங்கனயே செத்துட்டு" என்றாள்.

சரத்தின் ஆச்சி, "அங்கனயே ஒண்ணும் சாகலத்தா. இழுத்துக்கிட்டு கிடந்திருக்கா. அங்க இருக்கிறவனுவோ எவனும் தண்ணி கூட ஊத்தல. நாசமா போறவனுவோ" என்றாள்.

எனக்குப் பகீரென்றது. "பதினஞ்சு நிமிசம் இழுத்துக்கிட்டு கிடந்தவளைத் தூக்கி ஓரமாப் போட்டுட்டு, நம்ம பொன்னுராசுதான் டீ வாங்கி ஊத்திருக்கான். ஒரு வாய் குடிச்சிருக்கா. ரெண்டாவது வாய் குடிக்கவே இல்லை. அப்படியே சீவன் போயிட்டு. பொன்னுராசு புண்ணியம் பண்ணிருக்கான்"

"யாரு பொன்னுராசு?"

"நாவிதன் இருக்காம்லா. அவந்தான். சொக்காரந்தான் செத்த கெழவிக்கு!"

"ஓ! அந்தக் கிழவிக்கு பையன் இல்லியா?"

"இருக்கான். மெட்ராஸ்ல வேல பாக்கான். மருமகளும் வேல பாக்கா. கிழவி திமிரெடுத்தவ. மகன் கூடத்தான் வெச்சிருந்தான் கிழவிய. கிழவி அட்டூழியம் தாங்காம போயிட்டுவா தாயின்னுட்டான். கிழவிக்கு பென்சன் வருது. ஒரு காசு தரமாட்டா பையனுக்கு. மருமவ சும்மா விடுவாளா? கிழவி புருசன் கவர்மெண்ட்டு உத்தியோகத்துல இருந்தான். காக்காசுன்னாலும் கவர்மெண்ட்டுக் காசுன்னு இவ பண்ண பவுசு, அது ஒரு தனிக்கதத்தா. அவனயும் நிம்மதியா இருக்க விட்டாளா? இவ தொல்லை தாங்காமத்தான் செத்தான். வெஷம் குடிச்சுச் செத்தான்னு ஊர்ல பேசிக்கிடுதாக. நமக்குத் தெரியாதப்பா. தெரியாதத நம்ம வாயால பேசக்கூடாது பாரு. பிராமணன் பரலோகம் போனானாம்; மவராசி முடிபோச்சேன்னு அழுதாளாம்ன்ற கதயா, புருசன் செத்தன்னிக்கு, அத்தக்காரி போட்ட சாப்ப்பாடு ருசியா இல்லன்னு ஊரயே நாறடிச்சா. பென்சன் வருது. கவர்மெண்ட்ல மாசா மாசம் அரிசி, வருஷம் ரெண்டு சேலைன்னு வாங்குதா. கையக் கால வெச்சிக்கிட்டு வீட்ல கெடக்கலாம்லா? இருக்கமாட்டா. காசப் பாத்துப் பாத்துச் சேத்தா. என்னத்துக்காச்சு? திடீர்னு கீழ விழுந்து செத்துட்டா. போவும்போது கொண்டா போனா? ரெண்டு கத்திரிக்கா கூடப் போடமாட்டா கிழவி" என்றாள் சரத்தின் ஆச்சி.

நான் செய்துவைத்திருந்த கிழவி மண்கோபுரத்தை கடலின் பேரலைகள் மூர்க்கமாக அடித்துக்கொண்டு போயின.

இப்படியும் உண்டுமா?

(முற்றும்)

7 comments:

Anonymous said...

பிரசன்னாவின் கதை முதல் முறையாய் எனக்குப் புரிந்தது. நல்லா வந்துருக்கு,
பத்திரிக்கைக்கு அனுப்பியிருக்கலாமே?
உஷா

Mookku Sundar said...

நல்லா இருக்கு பிரசன்னா...

நினைப்புக்கும், பதிவுக்கும் உள்ள வித்தியாசம் கொறஞ்சுகிட்டே வருது.. ( உதாரணம் : உனக்கு அந்த எளவெல்லாம் வேணாம் - உனக்கு ழ வே வரமாட்டேங்கு..)

உங்கள் சிறுகதைகளுக்கு இடையே வரும் இடைவெளிகளை இன்னமும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம். நிறைய பழக்கம் வரும். ஆனால் வச வசவென்று எழுதாமல் இருப்பது நல்லது.

Anonymous said...

Åð¼¡Ã ÅÆìÌ ¸¨¾ìÌ ´Õ ¬¦¾ýðʺ¢ðÊ ÌÎìÌÐ. þÕó¾¡Öõ, ¦Ã¡õÀ ÍÁ¡Ã¡É ¸¨¾. ¿¡õ ¿¢¨Éì¸¢È Å¢„ÂòÐìÌ Á¡È¡ §ÅÈ ´ñÏ ¿¼ìÌÐí¸È, ÌÓ¾õ À¡½¢ ¸¨¾Â¡ Ũ¸ôÀÎò¾Ä¡õ.´Õ º¡¾¡Ã½Á¡É ¸¨¾¨Â º¡¾¡Ã½Á¡¸ò¾¡ý ±Ø¾Ïõ. ÅÄ¢óРŢò¾¢Â¡ºÁ¡É ¾¨ÄôÒ ¦¸¡ÎôÀÐ, ̓¡¾¡ Š¨¼Ä¢ø, ¸¨¾ì ÌûÈ ¦ÃñÎ ¾¨ÄôÒ ¦¸¡ÎòÐ ±ØÐÅÐ ±øÄ¡õ ¦Ã¡õÀ º£ôÀ¡ ¸¢õÁ¢ì. «Îò¾¾¡, ´Õ Å¢„Âò¨¾ ¦º¡øÄ¢ì ¦¸¡ñÊÕìÌõ §À¡§¾, ºð¦¼ýÚ, §ÅÈ Å¢„ÂòÐìÌ ¾¡×ÅÐ ¿øÄ, ¦¼ìÉ¢ì. þÐ ÀÄ Ò¾¢Â ±Øò¾¡Ç÷¸¨Çô ÀÊôÀ¾¢É¡ø ²üÀÎõ þý·ôéÂýŠ. ¬É¡ø, «Ð ¸ñÎ À¢Êì¸ ÓÊ¡¾Å¡Ú þÕì¸ §ÅñÎõ. ¸¢ÆÅ¢ ¦ºòÐô §À¡Â¢Õ츢ȡû ±ýÚ ¨¸Ä¢¨Â ÁÊòÐì ¦¸¡ñÎ µÊ ÅÕ¸¢ÈÅÛ¨¼Â ÓÊ ¸Õ¸Õ ±ýÚ þÕ츢ÈÐ ±ýÈ Áɵð¼õ absurd. þ¨¾î ¦ºöÂÏõ ±ý¸¢ÈÐ측¸ ¦ºö¾ Á¡¾¢Ã¢ þÕ츢ÈÐ. «Îò¾ ÓÂüº¢ìÌ Å¡úòÐ.

Anonymous said...

உஷா :-). பத்திரிகைக்கு அனுப்பலை. உங்கள் கருத்துக்கு நன்றி.

மூக்கன் - நன்றி.

அனானிமஸ் யாரென்று தெரியவில்லை.

அசோகமித்திரனின் இரு முடிவுகள் கொண்டது, சுஜாதாவின் சில கதைகளின் சாயலில் இந்தக் கதை இருப்பது உண்மையே. நடையே கதையைத் தாங்கிப் பிடிக்கிறது என்பதும் நிஜமே. எதிர்பார்த்த ஒன்றைப் புரட்டிப்போடும் முடிவு என்கிற ஒரு வரியில் பார்த்தால் இக்கதை ஒன்றுமில்லாமல்தான் போகும். ஒரு கிழவி இறந்துபோனது தந்த சோகங்கள், நான் எதிர்பார்க்காமலேயே எனக்குக் கிடைத்த தகவல்கள்-இவற்றை வைத்து எழுதிப்பார்த்தேன்.

அடுத்த கதைக்கான உங்கள் வாழ்த்துக்கு நன்றி பல.

Boston Bala said...

I liked this story. I was little bit impeded by the 'மூலம்-1' and was more naturally reading in the second part. A rendering to linger in my memory for a very long time. Thanks. -balaji

Anonymous said...

உங்கள் கருத்துக்கு நன்றி பாலாஜி. அன்புடன், பிரசன்னா

Anonymous said...

THE BEST STORY OF TAMIL

L.K.Maneeyarrashan
Hosur
maneeyarrashan@rediffmail.com