Wednesday, March 16, 2005

கூத்து - கவிதை

த்ரௌபதி சேலையுரியப்பட்டபோது
அவள் பேசிய நீண்ட வசனங்களில்
அதிக நடிப்புக்கு அவள்-அதிக அழுகைக்கு அவர்கள்;
அர்ச்சுனன் தபசில்
ஒவ்வொரு படிக்கும்
நீண்ட பாடலை
பொறுமையுடன் கேட்ட
பெருமக்கள்-இவர்கள்
பேரன் பேத்திகள்
பார்வையாளர்களிலிருந்து
தங்களை நடிகர்கள் வரிசைக்கு
மாற்றிக்கொண்டவர்கள்

ராஜா மார்த்தாண்டவர்மன்
கையிருந்த பளபள அட்டைக் கத்தியைப்
("சோதி முத்து" ரொம்பக் கஷ்டப்பட்டுத் தூக்குவானாம்!)
பத்திரமாக வைத்திருப்பதைப் பார்த்துப் போகிறார்கள்
இரசனை மிக்க
நவீன தேசத்துக்காரர்கள்

கூத்து மேடையின் படியெங்கும்
பதிந்திருக்கும்
கால்ரேகைகளிலும்
கிருஷ்ணனின் தலைக்கவசத்திலும்
பீமனின் கதையிலும்
செத்துப்போன சோதிமுத்து வீட்டில் கிடக்கும் சில
கூத்துப் பொருள்களிலும்
இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கிறது
இன்னும் வரப்போகும் ஜென்மங்களில்
அழியப்போகிற கூத்து

த்ரௌபதியிடம் சொல்லிவைக்கவேண்டும்
துச்சாதனனால் அவளுக்குத் தொல்லையில்லை என்றும்
அவளால் கிருஷ்ணனுக்கு வேலையிருக்காது என்றும்.

5 comments:

Anonymous said...

கூத்துப் பொருள்களிலும்
இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கிறது
இன்னும் வரப்போகும் ஜென்மங்களில்
அழியப்போகிற கூத்து


இந்த நான்கு வரிகளும், குறிப்பா கடைசி வரியும் தூள்!

க்ருபா

Anonymous said...

க்ருபா, என் வலைப்பூவெல்லாம் படிக்கிறதுண்டா? :-) உங்கள் கருத்துக்கு நன்றி.

அன்புடன், ஹரன்பிரசன்னா

Anonymous said...

திரு ப்ரசன்ன அவர்கலே குட்து ரொம்ப நல்ல இருக்குங.வழ்துக்கலுடன்,
செந்தில்குமர்

Anonymous said...

திரு ப்ரசன்னா அவர்களே கூட்து ரொம்ப நல்ல இருக்குங.வாழ்த்துக்களுடன்,
செந்தில்குமார்

Anonymous said...

இதெல்லாம் ஒரு கவிதயா??

என்னமோ போங்கப்பா....

இதயும் நாலு பேரு பாராட்டுதாம்லேய்..

யாரோ...