Wednesday, April 20, 2005

லகலகலகலகல

   ரஜினியின் படமொன்றிற்கு விமர்சனம் என எழுதுவது இதுவே முதல்முறை! விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட (:P) அவரின் படங்களுக்கெல்லாம் எதற்கு விமர்சனம் என்று நினைத்திருந்துவிட்டேன் என்று சொன்னால் சும்மா விடமாட்டார்கள்!

   பாபாவின் தோல்விக்குப் பிறகு வந்திருக்கும் சந்திரமுகி, படம் வருவதற்கு முன்பே, வழக்கம்போல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டிருந்திருந்தது. அரசியலோ ஆன்மீகமோ இருக்காது என்று உறுதியாகத் தெரிந்த தகவல் ரஜினி ரசிகர்களுக்கு பெரிய ஆசுவாசத்தைத் தந்தது. மணிச்சித்திரத்தாழின் ரீமேக் என்றவுடன், அந்தக் கதை எப்படி ரஜினிக்குப் பொருந்தி வரும் என்று யோசிக்காத ரசிகன் இல்லை. மோகன்லால் இடைவேளைக்குப் பின்னரே மலையாளப் படத்தில் வருவாராம். (நான் இன்னும் மணிச்சித்திரத்தாழ் பார்க்கவில்லை). ரஜினி இடைவேளைக்கு பின்னர் வந்தால் திரையரங்குகள் என்னாவது?! எந்தவொரு சமரசமுமில்லாமல் ரஜினியோ வாசுவோ படமெடுக்கக்கூடியவர்கள் அல்ல என்பது தெரிந்த விஷயமாதலால் மணிச்சித்திரத்தாழ் "சந்திரமுகி"யாக மாற்றப்பட்டுவிடும் என்கிற நம்பிக்கையும் இருந்தது. இத்தனை எதிர்பார்ப்புகளுடன் ஏப்ரல் 14-ம் தேதி, இரண்டாவது காட்சியில் அமர்ந்திருந்தேன். (டிக்கெட் கிடைக்க நடந்த சம்பவங்கள் தனிக்கதை. அது என்னுடைய சுயசரிதையில் நிச்சயம் வெளிவரும்!!!)

   முதல் பதினைந்து நிமிடங்களில் ரஜினி ரசிகர்களுக்கான படம் முடிவடைந்துவிடுகிறது. அதன்பின் படம் பொதுப் பார்வையாளர்களுக்குரியது. ஆன்மீகம், அரசியலை விட்டுவிட்ட ரஜினி, அதற்குப் பதிலாய் மாந்த்ரீகம், மந்திரம் போன்றவற்றைக் கையில் எடுத்துக்கொண்டுவிட்டார். கொஞ்சம் பிசகினாலும் "ஏமாத்துறாய்ங்க" என்று ஒரே வரியில் ஊத்திக்கொள்ளக்கூடிய கதையை ரஜினிக்கு ஏற்றவாறு கையாண்டிருக்கிறார் வாசு. படத்தின் எழுத்துப் போடுவதற்கு முன்பாகவே, பாய்ந்து பாய்ந்து அடித்தல், காலைத் தலைக்கு மேலே தூக்கி நின்று சிரித்தல், சுவிங்கம் மென்றுகொண்டே ஸ்லோ-மோஷனில் நடந்து எதிரிகளைப் பந்தாடுதல், காலைச் சுற்றும்போது புயல் மையம் கொண்டு சத்தைகள் பறந்து அடங்குதல் என்று ரஜினி ரசிகர்களுக்கான காட்சிகளை வேக வேகமாக முடித்துவிட்டுக் கதைக்கு நகர்ந்துவிடுகிறார். சின்னச் சின்ன நெருடல்கள், கேள்விகளை எல்லாம் (ரஜினி படத்தில் லாஜிக்கா?) கொஞ்சம் கூடக் கண்டுகொள்ளாமல், வேட்டைக்கார பங்களாவில் சூடு பிடிக்கிறது படம். அந்த டெம்போ படத்தின் இறுதி வரை குறைவதே இல்லை. அதுவும் படத்தின் உச்சக்கட்டக் காட்சியான "ரா ரா" தெலுங்குப் பாடலின் இசை, ஜோதிகா மற்றும் ரஜினியின் நடிப்பு, படமாக்கிய விதம் அனைத்தும் படத்திற்கு ஒரு கிரீடத்தையே சூட்டிவிடுகிறது என்றால் மிகையில்லை.

   படத்தின் நிஜ சூப்பர் ஸ்டாராகச் சொல்லவேண்டியது இரண்டு பேரை. ஒன்று வித்யாசாகர். இன்னொருவர் ஜோதிகா. வித்யாசாகரின் பின்னணி இசை வெகு அபாரம். படத்தைத் தாங்கிப்பிடிப்பதே அவரின் இசையும் பாடல்களுமே. வித்யாசாகர் இத்தனைச் சிறப்பாக இதுவரை இன்னொரு படத்தில் பின்னணி இசையை அமைத்ததில்லை. படத்தின் காட்சி ஒவ்வொன்றிலும் அவரின் அயராத உழைப்புத் தெரிகிறது. உச்சக்கட்டக் காட்சியான "ரா ரா" பாடலுக்கு இசையமைத்த விதத்திற்கு அவருக்கு ஒரு ஷொட்டு. அத்திந்தோம் பாடல் இன்னொரு கலக்கல். இந்த மெட்டு 80 களில் இளையராஜா போட்டுச் சலித்ததுதான் என்றாலும் ரஜினிக்கு இது போதுமானது என்று கணித்தே வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். படம் சூடு பிடிக்கும் இடமே அத்திந்தோம் பாடலில் இருந்துதான். "கொக்கு பற பற" பாடல் படமாக்கப்பட்ட விதம் ரஜினி படங்களில் வெகு அபூர்வமாக நிகழக்கூடிய ஒன்று. "கொஞ்ச நேரம்" இந்த வருடத்தின் சிறந்த மெலோடிகளில் ஒன்று. படமாக்கும் விதத்தில் கொஞ்சம் சொதப்பியிருக்கிறார்கள். ரஜினிக்குத் தேவையான இசையை பாடல்களிலும், தரமான பின்னணி இசையையும் தந்து தன் பங்கை சிறப்பாக ஆற்றியிருக்கிறார் வித்யாசாகர்.

   ஜோதிகா. இப்படி ஒரு நடிப்புத் திறமை இவரிடம் இருக்கிறது என்று நம்பி, சோபனா செய்த கதாபாத்திரத்தை இவரால் செய்யமுடியும் என்று தேர்வு செய்த இயக்குநர் நிச்சயம் பாராட்டுக்குரியவர். படத்தின் கடைசி அரைமணி நேரக் காட்சிகளில் ஜோதிகாவின் நடிப்பு வேகம் பிரமிப்பில் ஆழ்த்துகிறது. "ரா ரா" பாடலில் அவரின் நடிப்பும், வேட்டைக்கார ராஜா மீது எண்ணெய் ஊற்றும்போது அவர் உட்கார்ந்திருக்கும் ஸ்டைலும்,. வேட்டைக்கார ராஜாவைப் பார்த்து அவரின் பாணியிலேயே "லகலகலகலகலகலகல" என்றும் சொல்லும் ஸ்டைலும் அதிசயிக்க வைக்கின்றன. இந்த வருட தமிழக அரசு விருது இவருக்குத்தான் கிடைக்கும். ஜோதிகாவுக்கு டப்பிங் கொடுத்த கலைஞர் யாரென்று தெரியவில்லை. தெலுங்கில் சந்திரமுகியாக அவர் பேசும் விதம் அதிசயிக்க வைக்கிறது. அவருக்கும் ஒரு விருது நிச்சயம்.

   இனி ரஜினி புராணம்! 57 வயது ரஜினிக்கு என்றால் நம்பவே முடிவதில்லை. ஒவ்வொரு காட்சியிலும் அவரின் ஸ்டைலும் காட்சியை உணர்ந்து நடிக்கும் தன்மையும், அவரது ஆளுமையும் - ரஜினிக்கே உரியது. சில காட்சிகளில் ரஜினியின் நடிப்பு மிகத் தீர்க்கமாக இருக்கிறது. வடிவேலுவும் ரஜினியும் இணைந்து செய்யும் நகைச்சுவைக் காட்சிகள் கலகலக்கின்றன. வடிவேலு நினைத்ததை ரஜினி சொல்லும் இடங்கள் நன்றாக இருக்கின்றன. பூட்டிய அறைக்கு வெளியே, வேட்டைக்கார ராஜாவாக ரஜினி இரண்டு முறை நடக்கும் ஸ்டைல் மற்றும் நடிப்பு வேறு யாருக்கும் வராத ஒன்று. "ரா ரா" பாடலில், "லகலகலகல" என்று சொல்லிக்கொண்டு, ஓட்டமும் நடையுமாக, துள்ளலுடன் ரஜினியைக் காணும்போது, ஒரு வேகம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. தலைப்பாகையைக் கீழே போட்டுவிட்டு, அதை எடுக்க ஒரு அமைச்சர் குனியும்போது ரஜினி சிரிக்கும் காட்சியும், கள்ளக்காதலினின் தலையைச் சீவிவிட்டுக் காது குண்டலத்தை எடுத்து மாட்டிக்கொண்டு பாடும் காட்சியும் ரஜினி சிறப்பாக நடித்திருக்கும் இன்னும் சில காட்சிகள். மற்றப் படங்களைக் காட்டிலும் இதில் ரஜினி வராத காட்சிகள் அதிகம். இது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் துக்கத்தை ஏற்படுத்தும் விஷயம். படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்களிடம் இந்தக் கருத்தைக் கேட்க முடிந்தது. "பஞ்ச் டைலாக் இல்லை. இதெல்லாம் என்ன?" என்றார் ஒருவர். எங்கோ நடக்கும் ஒரு கதையில் ரஜினி வந்து போவதாகப் புலம்பினார் இன்னொரு ரசிகர். இதன் காரணம், உச்ச கட்டக் காட்சிகளில், ஜோதிகா செய்த ஹைஜாக்கில் அனைவரும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்கள் என்பதே.

   படத்தில் குறைகளே இல்லை என்பதில்லை. அது இருக்கிறது. நிறைய இடங்களில் லாஜிக் இடிக்கிறது. தேவையற்ற குழப்பங்கள் எழுகின்றன. எப்படியென்று தெரியாமல் சில விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் இவையெல்லாம் மிகக்குறைவான காட்சிகள் என்பதே படம் பிழைத்துக்கொள்ளும் காரணம்.

   மணிச்சித்திரத்தாழ் என்கிற க்ளாசிக் படத்தை, ரஜினிக்குத் தகுந்த முறையில் கையாண்டிருக்கிறார்கள். மணிச்சித்திரத்தாழில் இல்லாத சில காட்சிகளைச் சேர்த்திருந்தப்பதன் மூலம் ரஜினிக்குச் சிறந்த வாய்ப்பைத் தந்திருக்கிறார்கள்.

   பிரபு அவரது வேலையைக் கச்சிதமாகச் செய்கிறார்.

   சந்திரமுகியின் பலத்தில் ரஜினியின் கொடி பறக்கிறது.

[மதிப்பெண்கள்: 47]

7 comments:

Anonymous said...

மிக மிக ரொம்ப சரியான விமர்சனம்......நான் முகமூடி இல்லை......
கூடிய விரைவில் உங்களை சந்திப்பேன்....வலைப்பதிவில்

இப்படிக்கு
அனைவருக்கும் இரு வருடமாக குறைந்தது 50 அடிகள் கொடுக்கும்
சரக்கு

Anonymous said...

ரஜனியிடம் இருந்து எதிர் பார்த்தது எமக்கு கிடைக்கவில்லை. என்றாலும் படம் பார்க்ககக்கூடியதாக உள்ளது

Anonymous said...

மலையாள ஒரிஜினல் படத்தைப் பார்த்தவர்களுக்கு இந்தப் படம் சற்று கோமாளித்தனமாகத் தெரிகிறது என்பதே உண்மை. ஜோதிகா கண்களை உருட்டுவது கூட படு அபத்தம்!!

Anonymous said...

மலையாள மூலப் படத்துடன் இந்தப் படத்தை ஒப்பிடுவதே அபத்தம். அது தரமான படம். இது ரஜினி படம். ரஜினி படத்தை, ஒரு தரமான படத்திற்கான அளவுகோலுடனோ சிறந்த முயற்சிப்படத்திற்கான அளவுகோலுடனோ அளக்க முயலக்கூடாது.

Anonymous said...

அருமையான அலசல். ரஜினி பஞ்ச் டயலாக் பேசாமலும் ரசிகர்களை குஷிபடுத்துகிரார். பைட், லகலக ஸ்டைல், காமெடி, பாடல் என அனைத்திலும் அசத்தியிருக்கிறார்.

சந்திரமுகியின் பலத்தில் ரஜினியின் கொடி பறக்கிறது. சரிதான். ஆனால் ரஜினியின் பலத்தால் தான் சந்திரமுகி ஓடுகிறது அன் அனைவரும் அறிந்ததே
R.raja

Anonymous said...

Very Good Commentary or analisys from hari. Welldone Hari. I felt exactly what you felt. But I saw Manichthira thaazh I could not get the full utility..
jeyakumar-Doha

Anonymous said...

vimarsanam ok