Friday, January 20, 2006

அவன் - சிறுகதை

அன்று மிக மன உளைச்சலாக உணர்ந்தேன். மீண்டும் மீண்டும் மனம் விஷ்ணுவையே நினைத்துக்கொண்டிருந்தது. சிறிய குடுமி வைத்து, நெற்றியிலும் வயிற்றிலும் நாமம் போட்டுக்கொண்டு, பஞ்ச முத்திரை இட்டுக்கொண்டு சமிஸ்கிரதத்தை வாசிக்கும் அவனது தோற்றத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. சயின்ஸ், மேத்ஸ் தொல்லை இல்லை என்றானாம். முதல் முறை மிக சந்தோஷமாகப் போனானாம். இரண்டு முறை ஃபோன் செய்தபோது அழுதிருக்கிறான். நான் யாருக்கும் ஃபோன் செய்யவில்லை. மாதங்கி இரண்டு தடவை என்னைக் கூப்பிட்டு, விஷ்ணுவைப் போய் பார்த்துவிட்டு வா என்றாள். எப்படி அவனை அனுப்பின என்று மீண்டும் மீண்டும் கேட்டேன். இதுல என்னடா இருக்கு என்று படு கேஷுவலாகச் சொல்லிவிட்டு விக்கி விக்கி அழுதாள். வயித்துல இருக்கும்போதே நேந்துக்கிட்டது என்றாள். அப்படி ஆம்பளைப் பையன் பொறக்கணுமா? பொறந்து என்ன ஆச்சு? பன்னெண்டு வருஷம் பார்க்காம இருக்கப் போற? இதுக்கு எதுக்குப் பெத்துக்கிட்ட? - என்ற எல்லாக் கேள்விகளுக்கும் அவளது பதில் வெறும் அழுகை மட்டும்தான். என்னால போய்ப் பாக்க முடியாது. மாமா, உன் கூட வர்றேன்னு சொன்னா கூட்டிக்கிட்டு வருவேன். ஸ்ரீதர் பாவா திட்டுவார். எனக்கெதுக்கு? அம்மா, அப்பா ரெண்டு பேரும் முடிவு பண்ணி கொண்டு போய் விட்டாச்சு. நல்ல காரணம், நேத்திக்கடன். அதை மீற முடியுமா? எத்தனை வருஷம்? பன்னெண்டு வருஷமாம். முதல் நாலு வருஷம் திருவேற்காட்டிலேயே இருக்கலாம். அடுத்த எட்டு வருஷங்கள் பெங்களூருக்குச் சென்று சமிஸ்கிரதமும் புரோகிதமும் படிக்கவேண்டும். ஸ்ரீதர் பாவா ரொம்ப சந்தோஷப்பட்டுச் சொன்னாராமே. நாமம் போட்டுக்கிட்டு, பஞ்சகச்ச கட்டிக்கிட்டு செண்டிக வெச்சிக்கிட்டு பார்க்கவே அழகா இருக்குன்னு. மாதங்கி பதில் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். நான் பேசுறது கேட்குதா இல்லையா என்று கேட்டபோதெல்லாம் ம் என்று மட்டும் சொன்னாள். லேசான குரலில் மாத்வ சம்பதி தெரிஞ்சா நல்லதுதானே என்றாள். இவன் கூட படிச்ச பையன்கள் எல்லாம் டாக்டரா வரட்டும். இவன் அவர்களுக்கே கல்யாணம் செய்து வைக்கட்டும். மாதங்கி மீண்டும் என்னைப் போய்ப் பார்த்துவிட்டு வா என்றாள். சரி என்றேன். மாதங்கி பதில் சொல்லாமல் இருந்தாள். சிறுது நேர மௌனம். பிறகு, "பழம் பிஸ்கட் கொண்டு போடா. வெளிய எதுவும் வாங்கிக்கொடுக்காத. வெங்காயம், பூண்டு சாப்பிடக்கூடாதாம். போன் வாரம் வந்திருந்தான் வீட்டுக்கு. குருமா செஞ்சிருந்தேன். அவனுக்கு உசுரு பாத்துக்கோ. சாப்பிடுடா, பரவாயில்லை, வீடுதானேன்னு சொன்னேன். மாட்டவே மாட்டேன்னுட்டான். உங்க பாவாவுக்கு ஒரே பெருமை. அவன் வாயிலயே வேண்டாம்னு வரவெச்சிட்டாங்கன்னு ரொம்ப பெருமைப்பட்டார். ரெண்டு வாரம்தான் ஆகுது. அதுக்குள்ள மாறிட்டானேன்னு எனக்கும் ஆச்சரியம்....." போதும் உன் புராணமும் உன் பாவா புராணமும் என்று சொல்லி ஃபோனைத் துண்டித்தேன். ஸ்ரீதர் பாவா மீண்டும் என்னைக் கூப்பிட்டார். என்னடா வீட்டுப் பக்கம் வரலை என்றார். பிஸி என்றேன். உடம்பைப் பாத்துக்கோ என்றார். நான் வண்டியில போய்க்கிட்டு இருக்கேன், அப்புறம் பேசுங்க என்று சொல்லி ஃபோனை கட் செய்தேன்.

ஸ்ரீ சுந்தர தீர்த்த மடத்தில் சென்று விஷ்ணுவைப் பார்க்கப் போனேன். காவியை மார்பு வரை கட்டியிருந்த ஒரு ஆச்சார் "யாருன நோட பேக்கு" என்றார். செல்லும் வழியைக் காட்டினார். அங்கே ஒரு மரத்தடியில் விஷ்ணு தனியாக உட்கார்ந்திருந்தான். என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்கொண்டான். சுற்றியும் பல மரங்கள் இருந்தன. நிறைய பையன்கள் வெள்ளை நிற பஞ்சகச்சம் கட்டி அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தார்கள். காம்பவுண்ட் சுவற்றில் கரியால் ஸ்டம்ப் வரைந்திருந்தார்கள். கிரிக்கெட் ஆடுவியாடா என்றேன். என்னை இப்ப வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போவியா என்றான். "அது அப்புறம். கிரிக்கெட் ஆடுவியா?" "ஆமா. ஆச்சாரும் எங்க கூட ஆடுவார். நேத்து அவர் பால்ல சிக்ஸ் அடிச்சேன். அடுத்த பால்ல அவுட்டாயிட்டேன்" "அவுட்டாயிட்டியா? அடுத்த தடவை அவர் பால் போடும்போது, சட்டுன்னு நிறுத்தி, நான் அவுட் ஆகாம இருக்கிறதுக்கு என்ன ஸ்லோகம்னு கேளு" கண்ணில் நீர் வரும் அளவிற்குச் சிரித்தான். "ஏண்டா வீட்ல குருமா சாப்பிடமாட்டேன்ன?" "ஆச்சார் திட்டுவார்" "அந்நியன் பாத்தியாடா?" அந்நியன் மாதிரி குரலை மாற்றிப் பேசிக் காட்டினான். "சிடி போட்டாங்க" "சிவகாசி வரவும்மாமா உன்னைக் கூட்டிக்கிட்டுப் போறேன். சரியா?" "இப்போ?" "இப்ப இல்லை. உனக்கு பிஸ்கட் பிடிக்கும்னு பிஸ்கட் வாங்கிட்டு வந்தேன். இந்தா வெச்சிக்கோ" "இதையே தின்னு தின்னு எரிச்சலா வருது மாமா. அம்மா, அப்பா வாராவாரம் இதுதான் வாங்கிட்டு வர்றாங்க." "உனக்கு வேற என்னவேணும்?" "ஜெம்ஸ் வாங்கிட்டு வருவியா?" "அடுத்த தடவை வாங்கிட்டு வர்றேன்" "அடுத்த வாரம் என் பிறந்தநாள் வருது. கண்டிப்பா வாங்கிட்டு வரணும்... அத்தையையும் கூட்டிக்கிட்டு வா." "எத்தனாவது பிறந்தநாள்டா?" "பதிமூனு" "ஒன் ஃபிரண்ட்ஸ் எல்லாம் காமிடா" "வேணாம். எல்லாரும் என் மேல பொறாமைல இருக்காங்க. நாந்தான் இங்க ஆச்சாருக்கு பெட். அவர் சொன்ன ஒடனே படிச்சி ஒப்பிச்சுடுவேன். அதனால எல்லாரும் என் மேல பொறாமைல இருக்காங்க." "சரி மாமா போகணும்" சட்டென அவன் முகம் மாறியது. மீண்டும் ஒரு சந்தோஷத்துடன் அடுத்த வாரம் அத்தைய கூட்டிக்கிட்டு வருவேல்ல என்றான். வர்றேன் என்றேன்.

ஸ்ரீதர் பாவா மிகவும் விளக்கினார். படித்தாலும் வேலை கிடைக்காது என்று சொல்லி அதற்கான காரணங்களைப் பட்டியலிட்டார். "கிருஷ்ணாச்சார் பாத்தியா? ஒனக்கு பூணூல் போட்டப்ப அவர்தான் வந்தார். அப்ப அவருக்கு வயசு இருபத்தொண்ணு. இப்ப பார், மதுரைல அவர்க்கு சொந்த வீடு இருக்கு" கொஞ்சம் நேரத்தி, "நேந்துக்கிட்டோ ம். அதான்" என்றார். கடைசியாக படிக்க வைக்க முடியலை; செலவு கட்டுப்படியாகலை என்றார். "நீ கோச்சுக்கிட்டு வராம இருந்துடாத. உன் அக்கா அதுக்கும் சேர்த்து அழறா" என்றார். அவரே "ஒரு வார்த்தை உன்னைக் கேட்டிருக்கலாம்தான். எல்லாம் சேர்ந்து என்னை மாத்திடுவீங்க. அதான் கேக்கலை" என்றார்.





அன்று விஷ்ணுவிற்குப் உபநயனம். அன்று காலையிலேயே உத்ராய மடத்திற்கு என்னை வரசொல்லியிருந்தார் ஸ்ரீதர் பாவா. நான் போக நேரமாகிவிட்டது. மடத்தில் மூன்றாவது மாடியில் விஷ்ணுவுக்குப் பூணூல் போட்டுக்கொண்டிருந்தார்கள். மூன்று மாடி ஏறுவதற்குள் வயிற்றில் குழந்தையைச் சுமந்துகொண்டிருந்த ப்ரியா மிகவும் கஷ்டப்பட்டுவிட்டாள். என்னால முடியல பாவா என்று சொல்லிக்கொண்டே மூன்றாவது மாடியை அடைந்துவிட்டாள். ஹோமப் புகை கலந்த, அதிகம் காற்றோட்டமில்லாத, ஒரு ஃபேன் மட்டும் சுற்றிக்கொண்டிருக்கும் அறையில் ஹோமத்தின் முன்பு நின்றிருந்தான் விஷ்ணு. நான் வந்தவுடன் என்னையும் அவன் அத்தையையும் மாறி மாறிப் பார்த்துச் சிரித்தான். நிமிடத்திற்கொருமுறை ஸ்ரீதர் பாவா அவன் தலையை மந்திரம் சொல்லிக்கொண்டிருக்கும் ஆச்சாரைப் பார்த்துத் திருப்பினார். அவன் ஆச்சார் சொல்லச் சொல்ல மந்திரங்களைச் சொல்லிக்கொண்டே, ப்ரியாவுடன் சைகையில் ஏதேதோ பேசினான். அவனது பால் நிற பிஞ்சு உடம்பில் பூணூல் அணிவித்திருந்தார்கள். பிரம்மோபதேசம் செய்யும்போது தலையை எட்டிப் பார்த்துப் பார்த்துச் சிரித்தான். பூணூல் போட்டு முடிந்ததும் ஓடி வந்து, "தேவுடா தேவுடா" என்று பாடினான். ப்ரியாவின் மடியில் பொத்தென விழுந்தான். மாதங்கி அவனைத் திட்டினாள். எல்லோரும் கீழே சாப்பிடப்போனோம். ஆண்களெல்லாம் சட்டையைக் கழற்றினார்கள். மாதங்கி என்னைத் தனியே அழைத்துப்போய் என் கையில் பூணூல் தந்தாள். நானும் சாப்பிட வந்தேன். உத்ராய மடத்தில் வித்தியாசமாகப் பரிமாறினார்கள். அனைவரும் கையில் நீரை எடுத்துக்கொண்டு, ஆச்சார் மந்திரம் சொல்லும் வரையில் காத்திருந்தார்கள். முதலில் பரிமாறப்பட்ட சாம்பார் இரசம் மாதிரி இருக்கிறதென்றேன். விஷ்ணு, இது ரசம்தான் மாமா என்றான். இங்க அப்படித்தாண்டா போடுவாங்க என்றாள் மாதங்கி. "இப்பவே இவனுக்கு பூணூல் அவசியமா? பதிமூனு வயசுல எதுக்கு பூணூல்? ஸ்கூலெல்லாம் முடிஞ்ச பின்னாடி போட்டாப் போதாதா? இவன் பி.டி.பீரியட் எல்லாப் பசங்களும் இவனை ஒரு மாதிரி பார்க்கமாட்டாங்களா?" "இதுல என்னடா ஒரு மாதிரி பார்க்கவேண்டியிருக்கு? இதுவே லேட்டாயிடுச்சுன்னு ஸ்ரீதர் பாவா பொலம்பினார் தெரியுமா? ஏழு வயசுல போட்டா ஸ்லாக்கியமாம். நமக்குக் கொடுத்து வைக்கலைன்னு அவன் பாட்டியும் சொல்லிக்கிட்டே இருந்தாங்க" "நல்ல குடும்பம்" "நீ பேசாம சாப்பிடு. இடது கையால தொடாத. தண்ணியைத் தொட்டுட்டு, இடது கையை அந்தாண்ட வெச்சிட்டுச் சாப்பிடு" "உன் தமிழே ஒரு மாதிர் இருக்கு" "நீயாவது நல்லா இரு. எப்ப கொண்டு போய் விடப்போற அவளை" "அவளையே கேட்டுக்கோ" விஷ்ணு நூறு முறை என் தொடையைப் பிராண்டியிருந்தான். "என்னடா பேசவிடமாட்டேங்கிற?" "சந்திரமுகி பார்த்துட்டீங்களா?" "ம். நீ?" "நாயர், உங்க ஊர் டெண்டர் எங்க கைக்கு வந்தாச்சு. உங்க நாலு லட்ச ரூபாய் காண்ட்ராக்ட எங்க முதலாளி செந்தில்நாதன் வாங்கிட்டார்..... மாப்பு வெச்சிட்டாண்டா ஆப்பு....ரஜினி ஒரு சீன்ல பறந்து அடிப்பானே? யப்பா... அடி தாங்காம அவன் என்னமா போய் விழுவான்? மாமா, இன்னொரு தடவ கூட்டிக்கிட்டுப் போவியா?" "போவீங்களான்னு கேளு" என்றாள் மாதங்கி. "யார்கிட்டயும் கேக்கக்கூடாதுன்னு சொன்னேன்ல?" என்றார் ஸ்ரீதர் பாவா. "பாவா, அவன விடுங்க. நாங்க பேசும்போது நீங்க எதுக்கு அவனைத் திட்றீங்க? விடுங்க" என்றேன். ஸ்ரீதர் பாவா மாதங்கியை முறைத்தார். ப்ரியா விஷ்ணுவைப் பார்த்து போலாம் என்று சைகை காட்டினாள். நான் அவளை முறைத்தேன். 'சரி, விஷ்ணு.. லாய்.. உன்னைத்தான். லாய்..." "என்ன மாமா?" "ஏன் இன்னைக்கு ஒனக்குப் பூணூல் போட்டிருக்கு தெரியுமா?" "ஏன்?" "இந்த வாரம் ஞாயித்துக்கிழமை உனக்குப் பூணூல். அடுத்த வாரம் ஞாயித்துக் கிழமை உனக்குக் கல்யாணம். அதுதான்" "போங்க மாமா" "இல்லடா. நெசமாத்தான். உங்க பாலாஜி சித்தப்பாவுக்கு என்ன பண்ணாங்க? மொத வாரம் பூணூல். அடுத்த வாரம் கல்யாணம். அது மாதிரிதான் ஒனக்கும்" என்று கூட சேர்ந்துகொண்டாள் மாதங்கி. "ஐயோ எனக்கு வேண்டாம்ப்பா. நானும் உன்ன மாதிரி பெரியவான ஒடனே ப்ரியா அத்தை மாதிரி பெரிய பொண்ணைக் கட்டிக்குவேன்" "அது என்னடா ப்ரியா அத்தை மாதிரி?" "அவங்க ஸ்கூல்ல ஒரு பொண்ணைப் பார்த்துட்டானோ என்னவோ" என்றார் ஸ்ரீதர் பாவா. "போப்பா" என்றான் விஷ்ணு.






"பூணூலுக்கு வந்திருக்கும்போதாவது சொல்லியிருக்கலாம். ஒண்ணுமே நடக்கப்போறதில்லைன்ற மாதிரி பேசிக்கிட்டு இருந்தீங்க. உங்க இஷ்டம்தான். உங்க முடிவுதான். இல்லைன்னு இல்லை. ஆனாலும் ரொம்ப கஷ்டமா இருக்கு" "சரி விடு. எவ்வளவோ விஷயம். எங்களுக்கு மட்டும் என்ன அவனைக் கொண்டு போய்விட்டா சந்தோஷமா? தினமும் அழுதுக்கிட்டேதான் தூங்றா உங்க அக்கா" உள்ளே அழுதுகொண்டே காப்பி போட்டுக்கொண்டிருந்தாள் மாதங்கி. சரி நாங்க கிளம்புறோம் என்று சொல்லிவிட்டு நானும் ப்ரியாவும் வீட்டிற்கு வர பஸ் பிடித்தோம். குழந்தைய சுமந்துக்கிட்டு இருக்கிறவளை இந்த நேரத்துல கூட்டிக்கிட்டுப் போணுமா என்று ஸ்ரீதர் பாவாவும் மாதங்கியும் சொல்லிக்கொண்டே பஸ் ஸ்டாப் வரையில் வந்து பஸ் ஏற்றிவிட்டார்கள். மாதங்கி ஒரு வேப்பிலையைப் பறித்து ப்ரியாவுக்கு வைத்துவிட்டாள். "மாமா, விஷ்ணுவ மட்டும்தான் பார்க்கப் போவீங்களா? என்னைப் பார்க்க வரமாட்டீங்களா?" என்றாள் விஜி. "உன் தம்பி இல்லாம எப்டிடி இருக்க?" "அவந்தான் அடிக்கடி வர்றானே. அவன் அங்க இருந்து படிச்சா அவன் ஃப்யூச்சருக்குத்தான நல்லது?" நான் ஸ்ரீதர் பாவாவைப் பார்த்து "நல்ல ட்ரெயினிங்" என்றேன். மாதங்கி என்னைக் கிளம்பு என்றாள். பஸ் மெல்ல நகர்ந்தது. நான் வழியோரக் காட்சிகளில் கவனம் செலுத்திக்கொண்டு வந்தேன். "இருந்தாலும் நீங்க ரொம்ப பேசறீங்க. பாவான்ற ஒரு மரியாதை இருக்கா? அவர் கொண்டு போய் விட்டுட்டாரு. ஆச்சு. அதென்ன அத்தனை தடவை சொல்லிக் காண்பிக்கிறது?" "ரொம்ப பாவமா இருக்குதுடி. அங்க போய் ஐயோ பாவம்" "சரி இல்லைன்னு சொல்லலை. அவர் கேட்டப்ப நீங்க விஜியை தத்து எடுத்துக்கிட்டு இருக்கலாம்ல? கொள்கை அது இதுன்னீங்க. அப்ப விஜியையே தத்து எடுத்துக்கோன்னு சொன்ன உடனே தத்து எடுக்கிற ஐடியாவையே விட்டுட்டீங்க?" "சும்மா ஒளராத. ரெண்டு கொழந்தைங்க. ஒண்ணு மடத்துக்கு. இன்னொன்னும் தத்துன்னா பாவா எதுக்கு?" "அவங்களுக்கு ஆயிரம் கஷ்டம். இனிமே போனா நல்லா இருக்கீங்களான்னு கேட்டுட்டு வாயை மூடிக்கிட்டு இருங்க. உங்க ஆர்க்யூமெண்ட்டெல்லாம் நம்ம குடும்பத்துக்குள்ள வேண்டாம். ஐயோ பாவம் மாதங்கி அக்காதான் ரெண்டு பக்கமும் மாட்டிக்கிட்டு தவிக்கிறாங்க"

அதற்குப் பின் இரண்டு மூன்று முறை விஷ்ணுவைப் பார்க்க மடத்திற்குப் போனேன். ஆச்சார்கள் சிலர் என்னைப் பரிச்சயப் பட்டுக்கொண்டார்கள். ஸ்ரீ ஹரி கதா புத்தகம் எங்கு கிடைக்கும் என்று கேட்டார்கள். அவுட் ஆஃப் ஸ்டாக் என்றேன். விஷ்ணு சுரத்தில்லாமல் பேசினான். எங்களில் யாரையாவது பார்த்தால்தான் அப்படிச் சோர்ந்து போவதாக ஆச்சார் கூறினார். வேத பாடங்களை ஒப்புவிப்பதிலும் சமிஸ்கிரத ஸ்லோகங்களை எழுதுவதிலும் அவனே முதல் என்று அவனைப் பாராட்டினார். "ஸயின்ஸ் மேத்ஸ் எல்லாம் கிடையாதா?" "இந்தக் காலத்துல அதுவும் வேண்டியிருக்கே. வாரத்துக்கு ரெண்டு ட்யூட்டர்ஸ் வந்து சொல்லித் தர்றாங்க" என்றார். "மாமா, அன்னைக்கு ஆராதனை அன்னைக்கு மத்தியானம் மூணு மணிக்குத்தான் சாப்பாடு போட்டாங்க" என்று சொன்னான் விஷ்ணு. "காலேல அவல் உப்புமா தருவாங்களாமே. அம்மா சொன்னாளே" "தந்தாங்க. எனக்குப் பிடிக்கலை" "சாப்பாடு எல்லாம் நல்லா இருக்கா?" "சூப்பரா இருக்கு. மூணு வேளையும் சுடச்சுட. ஆனா எல்லாம் இனிப்பா இருக்கு. சாம்பார், இரசம் எல்லாம் இனிக்குது" "இப்ப ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேக்கா போட்டுட்டாங்களா?" "சேக்கான்னா?" "ராசி ஆயிட்டாங்களா?" "அப்பப்ப ஃப்ரெண்ட்ஸ். அப்பப்ப எனிமீஸ்"

சில வாரங்கள் போகமுடியவில்லை. விஷ்ணுவே எனக்கு ஃபோன் செய்தான். நான் மீண்டும் மடத்திற்குப் போனேன். விஷ்ணு மிகவும் சந்தோஷமாய் இருந்தான். ஆச்சார் காலில் விழும்போது அபிவாதயே சொன்னான். சாப்பிட உட்காரும்போது சுற்றிக் கட்டினான். சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்கும்போது ஸ்லோகம் சொன்னான். காயத்ரி மந்திரம் சொன்னான். எச்சி சாப்பிடமாட்டேன் என்றான். சூழலுக்குள் வாழப்பழகிக்கொண்டுவிட்டான் என்று புரிந்தது. நிறைய நண்பர்களுடன் பேசினான். எல்லாரிடமும் மாமா என்று அறிமுகம் செய்துவைத்தான். இவருக்குத் தெரியாததே கிடையாது என்றான். "உன்னோட பெஸ்ட் ஃபிரண்ட் யாருடா?" "அவ இங்க இல்லை" "அவளா?" "ஆமாம்.. வாங்க காட்றேன்"

மடத்திற்கு வெளியே செல்லும் சாலை நீண்டு போய் வலது பக்கம் திரும்பியது. அதன் ஓரத்தில் ஒரு பள்ளி இருந்தது. "அது கவர்மெண்ட் ஸ்கூல்தான?" அதன் பின் வாசல் வழியே அழைத்துச் சென்றான். மதிய உணவிற்காக சமைத்துக்கொண்டிருந்தார்கள். இவனைப் பார்த்ததும் ஒரு சின்ன பெண் ஓடி வந்தது. "இவதான் செல்வி. என் பெஸ்ட் ஃப்ரெண்ட்" என்றான். "உங்க அம்மா எங்க இருக்காங்க?" "அதோ சமைக்கிறாங்களோ அவங்கதான்" "அப்படியா. எப்பவும் நல்ல ஃபிரண்ட்ஸா இருக்கணும்" "சரி அங்கிள்" விஷ்ணு "அப்றம் வர்றேன்" என்று அவளிடம் சொல்லிவிட்டு வந்தான். "எப்படிடா இவளை ஃபிரண்ட் பிடிச்ச?" "இவ எங்க மடத்துக்குப் பக்கத்துல இருக்கிற ஸ்கூல்லதான் படிக்கிறா. சைக்கிள் ஓட்டிக்கிட்டு இருக்கும்போது கீழ விழுந்துட்டா. நாந்தான் ஹெல்ப் பண்ணேன். அப்படியே ஃபிரண்ட்ஸ் ஆயிட்டோ ம்" "சரி மாமா கிளம்பறேன். நீ ஒழுங்கா படி" "அடுத்த தடவை வரும்போது அத்தையைக் கூட்டிக்கிட்டு வா. நா செல்வியைக் காட்டணும்" "சரி."

பஸ்ஸில் வரும்போது நினைவுகள் முழுதும் எங்கெங்கோ சிறகிட்டுப் பறந்தன. மிகவும் நிறைவாக உணர்ந்தேன். வீட்டிற்கு வந்ததும், எப்போது எப்படி முடியப்போகிறது என்ற முடிவறியாத ஒரு புனைவை ஆரம்பித்தேன். இங்கேயே இக்கதை முடிகிறது அல்லது தொடங்குகிறது.


அத்தியாயம் - 1


நான்கடி உயரம் உடைய மஞ்சள் நிறச் சுற்றுச் சுவர் நீண்டு கொண்டே செல்லும். அதன் முடிவில் கரி அப்பிய அந்தச் சமையலறை இருக்கும். எப்போது அங்கிருந்துதான் பேசிக்கொண்டிருப்பார்கள் அவர்கள் இருவரும். அவனுக்கு வயது 13 ஆகப்போகிறது. அவளுக்கு வயது 12 ஆகிறது. அவன் உயரத்தை அவள் கரிக்கோடால் அந்தச் சமையலறையின் சுவரில் வரைந்திருந்தாள். அதற்குச் சற்று கீழே அவளின் உயரத்தை அவன் அளந்திருந்தான். அணில்கள் உள்ளே வந்து கிழே சிதறிக் கிடக்கும் சில பருக்கைகளையோ தானியங்களையோ கொறித்துக்கொண்டு அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டுச் செல்லும். முதலில் அணில்கள் உள்ளே வந்த போது அவன் மிகப் பதறினான். அவள் அதைப் பார்த்து இரசித்து வெகுவாய்ச் சிரித்தாள்.

"அணிலுக்கு போய் பயப்படுறியே"

அவன் பேசவில்லை. அவனைப் பொறுத்தவரை அவன் பேச அவளும் அவள் குடும்பமும் தகுதியற்றது. அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் விலகிச் சென்றான். இப்போதெல்லாம் அப்படியில்லை. அவன் அங்கு வந்து அவளுடன் பேசிக்கொண்டிருப்பதை மற்றவர்கள் யாரும் பார்க்கக்கூடாது என்றுதான் அதிகம் பயந்துகொண்டிருந்தான். அங்கு வராமல், அவளைப் பார்க்காமல் அவனால் இருக்கமுடியாது என்பது அவனுக்குத் தெரியும். யாருமில்லாமல் அவள் மட்டும் எந்த நேரத்தில் தனியாக இருப்பாள் என்பதை அவன் நன்கு அறிந்து வைத்திருந்தான்.

"என்ன என்னயவே முறைச்சிப் பார்த்துக்கிட்டு இருக்க?"

"ஒண்ணுமில்ல. சும்மாத்தான்..... நீ கூடத்தான் என்னயவே பாத்துக்கிட்டு இருக்க"

"ஏன் பாத்தா என்னவாம். எவ்வளவு செகப்பா இருக்க தெரியுமா நீயி?"

"அவ்ளோ செகப்பா? இருக்கும். அம்மா கூட அடிக்கடிச் சொல்லுவாங்க"

அம்மா என்று சொல்லவும் அவன் பேச்சு தடைபட்டது. அவள் அவனைச் "சொல்லு" என்றாள்.

"அம்மா கூடச் சொல்லுவாங்க. ஆனா நீ கருப்பு. நாங்க ஸ்கூல்ல படிக்கும்போது கருப்பா இருக்கிற பொண்ணுங்களை கருப்பிம்போம்"

ஸ்கூல் என்று சொல்லும்போது அவன் கொஞ்சம் உடைந்தான்.

"அப்போ நானும் கருப்பியா? ஒனக்கு ரொம்பத்தான் வாய்"

"கருப்பா இருந்தாலும் நல்லா இருக்க. நாந்தான் செகப்பாயிட்டேன். ஆம்பளப் பசங்க கருப்பா இருந்தாத்தான் அழகுன்னு அக்கா சொல்லுவா"

அக்கா என்னும்போதும் கொஞ்சம் உடைந்தான்.

"எங்க வூட்ல எல்லாரையும் கருப்பா பாத்து பாத்து உன்னைப் பாக்கும்போது எனக்கு ஆச்சரியமா இருக்கு"

சமையலறைக்குள்ளிருந்த சிறிய மேடொன்றில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். அந்த மேடு சமையலறையை இரண்டாகப் பிரித்தது. அவள் இரண்டாம் அறையின் ஒரு மூலையில் சாய்ந்து நின்ற படி பேசிக் கொண்டிருந்தாள். கைகளால் கழுத்திலிருந்த பாசியை உருட்டிக்கொண்டிருந்தாள். வெளியிலிருந்து உள்நோக்கி வேகமாகக் காற்றடித்தது. ஓரத்தில் எரிந்துகொண்டிருந்த அடுப்பு காற்றால் உக்கிரமாகி சத்தத்துடன் எரிந்தது. காற்றில் அவன் அணிந்திருந்த பஞ்ச கச்சம் சிறிது விலகி அவனது தொடை பளீர் என்று தெரிந்தது. அவள் அவன் தொடையையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் கொஞ்சம் வெட்கமடைந்தான். விலகியிருந்த கச்சத்தை சரி செய்துகொண்டான்.

அவள், "தொடை ரொம்ப செகப்பு" என்று சொல்லிச் சிரித்தாள். அவன் எழுந்து அவளருகே சென்றான். அவள் சிரிப்பை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். சட்டென அவளை நெருங்கி முத்தமிட்டு, அவளைக் கட்டிக்கொண்டான். அவளும் அவனை இறுக்கிக் கட்டிக்கொண்டாள். அவன் முதுகில் கிடந்த பூணூலை கைகளில் சுற்றிக்கொண்டு இறுக்கினாள். அவன் கையிலும் மார்பிலும் இட்டுக்கொண்டிருந்த கோபிச்சந்தனம் வேர்வையில் கரைந்து வழிந்தது.

எப்போதும்போல் உள்ளே வந்த அணில், அக்கம் பக்கம் பார்த்துவிட்டு சட்டென்று வெளியில் தாவி, புகை படிந்திருந்த மஞ்சள் சுவரில் ஏறி ஓடியது.

-oOo-

1 comment:

Anonymous said...

ஹரன்,
எப்படி இப்படி ஒரு நல்ல கதை கவணிப்பாரற்று போயிற்று??

குழந்தையை இது போன்ற பாடசாலைகளில் விடுவதாக நேர்ந்து கொள்கிற கலாச்சாரம் எனக்குப் புதியது.

விஷ்ணு..
மாதங்கி..
ஸ்ரீதர்
கிருஷ்னாச்சார் என்ற பெயர்கள் கதை நடக்கும் சூழ்நிலைக்கும் களனுக்கும் பொருத்தமாய் அமைகிறது.

//கொஞ்சம் நேரத்தி, "நேந்துக்கிட்டோ ம். அதான்" என்றார். கடைசியாக படிக்க வைக்க முடியலை; செலவு கட்டுப்படியாகலை என்றார்.//

இதுதான் சகலத்துக்கும் காரணமோ???

நல்ல கதை ஹரன்..