Friday, January 20, 2006

கொல்லப்பட்டவர்கள் - சிறுகதை

அவன் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த அந்தக் குறுகிய சந்திலிருந்து இன்னொரு சிறிய முடுக்கு பிரிந்து சென்றது. அதனுள் மூக்கைப் பிடித்துகொள்ளாமல் நடக்கமுடியாது. மூத்திர நெடி கடுமையாக இருக்கும். அந்த மூத்திரச் சந்திற்குள் சென்றான் அவன். அவன் வாய் அவனையுமறியாமல் ஏதோ உளறிக்கொண்டிருந்தது. மதுவின் கட்டுப்பாட்டில் அவன் இருக்கும்போது அவனுக்கு இந்த உலகம் மிக எளிதாகிவிடுகிறது. அவன் உளறிக்கொண்டிருக்கிறான் என்பதை அறிந்துகொண்டே உளறிக்கொண்டிருந்தான். ஆனால் என்ன உளறுகிறான் என்பது பற்றிய பிரக்ஞை அவனிடம் இல்லை.

இன்று சில பேரை அவன் கொல்லவேண்டியிருக்கிறது. அதற்காகக் கொஞ்சம் அதிகமாகவே குடித்திருந்தான். அவனது நிலையில் அவன் இல்லை என்றாலும் என்ன செய்யப்போகிறான் என்பது பற்றிய தீர்மானமான எண்ணம் இருந்தது. உளறிக்கொண்டிருந்தாலும் உள்மனது என்னவோ அவன் கொல்லப்போகிறவர்களைப் பற்றிய பட்டியலைத் துல்லியமாய்த் தயாரித்துவிட்டிருந்தது. கொல்லும் முறைகளில் கூட இரண்டு மூன்று விதங்களை அவன் யோசித்துத் தேர்ந்திருந்தான்.

அவனுக்குப் பிறரைக் கொல்லும் எண்ணம் உதிக்கத் தொடங்கியது பதிமூன்றாம் வயதில்.





அன்றைக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்த ருக்மணி டீச்சர் பாடத்தில் மட்டுமே மும்முரமாக இருந்தாள். அவன் அமர்ந்திருந்த பெஞ்சின் முன்வரிசையில் இருந்த மாணவர்கள் கையில் ஏதோ ஒரு புத்தகத்தை வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பார்ப்பது மேற்படி புத்தகமாகத்தான் இருக்கவேண்டும் என்று அவன் யூகித்தான். அந்தப் புத்தகத்தைப் பார்த்தே தீருவது என்ற எண்ணம் அவனுக்கு வலுத்தது. மற்றவர்கள் கொஞ்சம் அசந்த நேரத்தில் அவன் அந்தப் புத்தகத்தைக் கைக்கொண்டுவிட்டான். பள்ளியின் கழிப்பறைக்குப் பக்கத்தில் செல்லும் சந்தில் நின்று அந்தப் புத்தகத்தை வாசிக்க அதைப் பிரித்தான். பக்கங்களில் பல இடங்களில் கிழிந்திருந்தன. பல புஷ்டியான பெண்கள் பல விதங்களில் நின்றிருந்தார்கள். அந்தப் புத்தகத்தை வரி விடாமல் வாசிப்பது என்றும் அதைப் பத்திரமாக வைத்திருப்பது என்றும் தேவைப்படும்போது எடுத்துப் படிப்பது என்றும் முடிவு செய்தான். அவன் எதிர்பாராதவாறு பியூன் முத்து அங்கு வந்தார்.

"என்னடா பண்ற?"

அவன் விழித்தான். அவர் அவன் கையிலிருந்த புத்தகத்தைப் பறித்துப் பார்த்தார். அவன் பிடரியில் தட்டி, "பிஞ்சுலயே பழுத்திட்டியா? போடா" என்று அதட்டி அவனை அனுப்பினார். அவன் பயந்துகொண்டே அந்த இடத்தை விட்டு ஓடினான். பிறகொரு சமயத்தில், அவர் சத்துணவு சமைக்கும் கூடத்தில் வைத்து அந்தப் புத்தகத்தைப் படிப்பதைப் பார்த்தான். அவனுக்குள் சொல்லமுடியாத கோபம் எழுந்தது. அவனுக்கு அவரைக் கொலை செய்தால் என்ன என்று தோன்றியது.

கொலை செய்யவேண்டும் என்கிற எண்ணம் தோன்றிவிட்டதே ஒழிய அதற்கான மார்க்கங்கள் சுலபமில்லை என்பதை அவன் வெகு சீக்கிரமே அறிந்துகொண்டான். முத்து அவனைப் பார்க்கும்போதெல்லாம் கேலியாகப் பார்ப்பது போலவே அவனுக்குத் தோன்றும். அவனுக்கு வெட்கம் பிடுங்கித் தின்னும். மனதுக்குள் எப்படி அவரைக் கொல்வது என்றே யோசிப்பான். பள்ளி முடித்து, கல்லூரி சேர்ந்து அதைப் பாதியிலேயே டிஸ்கண்டினியூ செய்து, மெக்கானிக் வேலைக்கும் சேர்ந்துவிட்டான். அதுவரை முத்து அந்தப் பள்ளியில் பியூனாகவே இருந்தார். அவரைக் கொல்லும் எண்ணமும் அவனுக்கு வலுவிழந்துவிட்டிருந்தது.





மூன்று வாரங்களுக்கு முன்பு செக்கடி முக்கில் முத்துவை யாரோ கொன்றுவிட்டார்கள் என்று அவன் காதிற்குச் செய்தி வந்தது. ஓடிப்போய்ப் பார்த்தான். ரத்தவெள்ளத்தில் முத்து செத்துக்கிடந்தார். கந்துவட்டிக் கும்பல் கொன்றுவிட்டது என்று பேசிக்கொண்டார்கள்.

அவனுக்குள் முத்து பற்றிய எண்ணங்கள் தீவிரமாகக் கிளர்ந்தெழுந்தன. கொலை செய்யும் அளவிற்கு முத்து பாதகச் செயலை செய்யவில்லை என்றாலும், அன்றைய தினத்தில் அவன் எவ்வளவு அவமானம் அடைந்தான் என்பதும், முதன் முதலில் கொலை எண்ணம் உதித்தது முத்துவின் மேல் என்பதால் அவரைக் கொலை செய்வது அவசியம் என்பதும் அவன் நினைவிற்கு வந்தன. இன்று மிகத் தீர்மானமாய் முத்துவை மீண்டும் கொல்வது என்று முடிவெடுத்தான். அவனுக்குப் பதிமூன்று வயதுதான் என்றும் அவனே தீர்மானித்துக்கொண்டான்.





பள்ளிக்குப் பக்கவாட்டில் செல்லும் சந்துக்குள் சென்று பையன்களுக்குத் தெரியாமல் எடுத்த மேற்படி புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தான். சற்று நேரத்திற்கெல்லாம், சொல்லி வைத்த மாதிரி முத்து வந்தார். அவர் சொல்லப்போகும் வசனங்கள் அவனுக்குத் தெரியும். "பிஞ்சுலயே பழுத்திட்டியா? போடா" என்று அவர் அதட்டினார். அவன் "பழுத்தா என்ன?" என்றான். முத்துவுக்கு என்ன சொல்வது என்று தெரியப்போவதில்லை. "ஏண்டா, நானே கஷ்டப்பட்டு புத்தகத்தை லவட்டிக்கிட்டு வந்தா, என்கிட்ட லவட்டிட்டு நீ படிக்கிறயா?" என்று சொல்லிக்கொண்டே, பின்பக்கம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அவர் கழுத்தில் ஒரு வெட்டு வெட்டினான். அவர் அலறிக்கொண்டே கீழே விழுந்தார். அவன் அவர்மேல் அமர்ந்து, அவர் வாயைப் பொத்திக்கொண்டு, அக்கம் பக்கம் யாரும் வருகிறார்களா என்று பார்த்தவாறே அவரது குரல்வளையை அறுத்தான். முத்து செத்துப் போனார்.

சட்டையை உதறிக்கொண்டு, கையிலிருந்த கத்தியைத் தூரப் போட்டுவிட்டு அவன் அந்த முடுக்கை விட்டு வெளியேறினான்.




அவனது கொலைப் பட்டியலில் அடுத்து உள்ளது மல்லிகா.





பெண் என்கிற போதை அவனுக்குள் ஆழ வேரூன்றிக்கொண்டிருந்த சமயத்தில் மல்லிகா அவனுக்குப் பரிட்சயமானாள். மல்லிகா அவனுக்கு ஜூனியர். அவளும் அவனைப் போலவே பி.காம் எடுத்திருந்தாள். அடிக்கடி அவனிடம் சந்தேகங்கள் கேட்பாள். அவனுக்கு எதுவும் தெரியாது என்றாலும் தெரிந்த மாதிரி நான்கு வார்த்தைகள் சொல்லிவைப்பான்.

மல்லிகா எடுப்பாக இருப்பாள். அவன் முன் வளைய வளைய வருவதாக அவன் நண்பர்கள் அவனிடம் சொன்னபோது அவளை ஆழ்ந்து பார்க்கத் தொடங்கினான். அவன் அவளது மார்பகங்களையே எப்போதும் பார்த்துக்கொண்டிருப்பான். இப்படி ஒரு பெண் இருக்கமுடியும் என்றே அவன் நம்பவில்லை. அவள் அத்தனைப் புஷ்டியாக இருந்தாள். அவன் அவளை அப்படிப் பார்க்கிறான் என்பது அவளுக்கும் தெரியும். அவளுக்குள் அதுகுறித்து பெருமையும் சந்தோஷமும் இருந்தது. அதைத் தாண்டி அவன் எதாவது செய்யமாட்டானா என்றும் ஏங்கினாள். அப்போது அவனுக்கு வயது இருபத்தொன்று இருக்கும். அவனைக் காமம் விடாமல் துரத்திய காலம். அவனது நண்பர்கள் வீட்டில் எல்லாரும் எங்காவது வெளியூருக்குப் போனால் டெக் மற்றும் கேசட்டுடன் தவறாமல் ஆஜர் ஆகிவிடுவான். கேசட் வாடகைக்கு விடும் அத்தனைக் கடைகளும் அவனுக்குப் பரிட்சயம். இரண்டே நிமிடங்களில் கேசட் வாங்கிக்கொண்டு வந்துவிடுவான். விதவிதமாகக் கேசட் வாங்குவதில் அவனுக்கு நிகர் யாரும் கிடையாது என்று அவனது நண்பர்கள் சொல்லும்போது அவன் மிகவும் பெருமை கொள்வான். மிருகங்களுடனான கேசட்டை அவன் வாங்கி வந்தபோது அவன் நண்பர்கள் அவனை வியந்தனர்.

மல்லிகாவின் அம்மாவைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. அவள் இரவு நேரங்களில் செல்வதும் வருவதும், அவளது கணவன் கல்யாணம் ஆன சில வருடங்களிலேயே அவளை விட்டு ஓடிப்போய்விட்டதும் ஊருக்குள் எப்போதும் பேச்சாயிருக்கும். இந்த விஷயம் அவனுக்கு ஒரு வகையில் தோதாகப் போய்விட்டது. மல்லிகாவை எப்படியும் தொட்டுவிடலாம் என்று கணித்திருந்தான்.

அன்று இரவு அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அதைப் பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்தான். மல்லிகாவின் வீட்டில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தார்கள். மல்லிகாவும் ஆரம்பத்தில் அவனுக்குக் கொஞ்சம் ஒத்துழைத்தாள். ஆனால் திடீரென்று அவனைத் தள்ளிவிட்டு, "நீ இப்படி பண்ணுவேன்னு எதிர்பார்க்கலை" என்று அழுதாள். அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அதற்குப் பிறகு அவன் அவளுடன் பேசவில்லை.

மல்லிகாவிற்குத் திருமணம் செய்ய அவளது அம்மா ஆகப்பாடுபட்டாள். ஆனால் எதுவுமே அமையவில்லை. அமையாது என்று அவனுக்குத் தெரியும்.






இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊரே மல்லிகாவின் வீட்டு முன்னர் திரண்டிருந்தது. அவனும் ஓடிப்போய்ப் பார்த்தான். யாரோ மல்லிகாவைக் கெடுத்துக் கொன்றுவிட்டிருந்தார்கள். மல்லிகாவின் அம்மா ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தாள். கிழிந்த ஜாக்கெட்டுடன் மல்லிகாவும் மார்பகம் மேல் குத்தி நின்றிருந்தது. அவனுக்கு விகாரமாக இருந்தது.

மல்லிகாவை இன்று விடப்போவதில்லை என்று அவன் தீர்மானித்து வைத்திருந்தான்.






அன்று இரவு அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவனுக்கு இப்போது இருபத்தொன்று வயது. மல்லிகாவும் ஆரம்பத்தில் ஒத்துழைத்தாள். ஆனால் அவனைத் திடீரென்று தள்ளிவிட்டு, "நீ இப்படி பண்ணுவேன்னு எதிர்பார்க்கலை" என்று அழுதாள். "ஏண்டி நீ என்ன பத்தினியா" என்று மூர்க்கமாகக் கத்தினான் அவன். மல்லிகா அதிர்ந்ததைப் பார்க்கும்போது அவனுக்குள் சந்தோஷமும் வெறியும் வலுவடைந்தது. அவளைப் படுக்கையில் தள்ளி, அவள் மேல் பாய்ந்தான். அவளது கைகளைப் பின்புறமாகக் கட்டி, "உன்னல்லாம் கொல்லனும்டி தேவடியா" என்று சொல்லிக்கொண்டே, பின்புறம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவள் வயிற்றில் குத்தினான். அவள் கத்திக்கொண்டே அவன் மீது சரிந்தாள். முழுவதுமாகச் சரிந்தாள். அவளின் உடல் முழுதும் அவன் மீது படர்ந்திருந்தது. "இனிமே மயங்க மாட்டாண்டி இவன்" என்று சொல்லி, வயிற்றிலிருந்து கத்தியை உருவி, மீண்டும் குத்தினான். மல்லிகா முழுவதுமாக அடங்கினாள்.





வீட்டை விட்டு வெளியில் வந்து கத்தியைத் தூக்கி எறிந்தான்.

இன்னும் ஒரு கொலை மட்டும் பாக்கியிருக்கிறது.





அவனது சொந்தம் என்று சொல்லிக்கொண்டவர்கள் அவனுக்கு லட்சுமியைக் கட்டி வைத்தார்கள். அவனுக்குக் கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்கிற எண்ணமே இருந்திருக்கவில்லை. ஆனால் லட்சுமியைப் பார்த்ததும் அவளின் உடலுக்கு ஆசைப்பட்டு ஒத்துக்கொண்டான். இதை அவனே பலமுறை அவளிடம் சொல்லியிருக்கிறான். ஆனால் லட்சுமி எப்போதும் எதையோ பறிகொடுத்தவள் போல இருந்தாள். அவளிடம் ஒரு புதுப்பெண்ணிற்கு உரிய எதுவுமே இருந்ததில்லை. அவனுக்கு அதைப் பற்றிய எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. இரவில் அவள் தயாராய் இருக்கவேண்டும் என்பது மட்டுமே அவனுக்கு தெரிந்த வாழ்க்கை.

ஒருநாள் இரவில் அவன் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஆண்குரல் கேட்டு விழித்தான். லட்சுமியைக் காணவில்லை. ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். லட்சுமி தனபாலுடன் பேசிக்கொண்டிருந்தாள். தனபால் ஏதோ மறுக்க, அவள் விடாமல் அவனிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். அவனுக்கு அவள் என்ன சொல்கிறாள், தனபால் எதை மறுக்கிறான் என்று விளங்கவில்லை. அவனுக்கு கோபம் வந்தது. ஆனாலும் ஒன்றும் நடக்காத மாதிரி சென்று படுத்துக்கொண்டுவிட்டான்.

இரண்டு மூன்று தினங்களில் அவன் எதிர்பார்த்த மாதிரியே லட்சுமி அவனுடன் நன்றாகப் பேசினாள். அவனுக்குச் சந்தேகம் வலுத்தது. அவனுக்குத் தனபால் பற்றியே யோசனையாக இருந்தது. இருவரும் ஓடிப்போகப் போகிறார்களோ? லட்சுமி அதற்கான வேலைகளில்தான் ஈடுபட்டிருந்தாள். லட்சுமி அவனை ஒன்றும் தெரியாதவனாகப் பாவித்திருந்தாள். ஆனால் அவன் லட்சுமியின் மன ஓட்டங்களை மிக எளிதில் கணித்துவிட்டிருந்தான். அவன் அவளிடம் நேரடியாகவே கேட்டுவிட்டான். அவள் கொஞ்சம் அதிர்ந்தாலும், மெல்ல சுதாரித்துக்கொண்டு, "ஆமா இப்ப என்ன? உன்கூட எவ இருப்பா? எருமை மாதிரி மேல பாயிரியே. தனபாலுக்குப் பொம்பளை மனசு புரியும்", என்று சொல்லி அழுதாள். அவளுக்கும் தனபாலுக்கும் கல்யாணத்திற்கு முன்பே தொடுப்பு இருந்தது அவனுக்குப் புரிந்தது. அவள் மேல் கோபம் கோபமாக வந்தாலும் அவனுக்கு அதற்கு மேல் என்ன செய்யவேண்டும் எனத் தெரியவில்லை. அவளை அறைய வேண்டும் என வெறி வந்தது. ஆனால் அறைய முடியவில்லை. வீட்டை விட்டு வெளியேறினான்.

அன்றிரவு அவன் வீட்டுக்கு வந்தபோது கதவு பூட்டி இருந்தது. எவ்வளவு தட்டியும் லட்சுமி கதவைத் திறக்கவில்லை. அவனுக்குப் பயம் வந்தது. கதவை உடைத்துப் பார்த்தபோது, லட்சுமி தூக்குப் போட்டுச் செத்துப் போயிருந்தாள்.





ஆனால் இன்று அவன் லட்சுமியை விடப்போவதில்லை. அவன் மனதில் வெறி இருந்தது. அவன் அவளிடம் நேரடியாகவே கேட்டுவிட்டான். அவளும் அதே போல் "ஆமா இப்ப என்ன? உன்கூட எவ இருப்பா?", என்று சொல்லி அழுதாள். "ஏண்டி தேவடியா முண்ட, அந்த நாய் கூட ஓடிப்போகப் போறியா? நா உன்னை சும்மா விடமாட்டேண்டி, பொலி போட்ருவேன்" என்று ஆவேசமாகக் கத்தினான். தொடர்ந்து, "என்னடி பாக்கிற? உன்னல்லாம் உசுரோட விட்டா நா ஆம்பிளைன்னு சொல்லிக்கிட்டுத் திரியறதே கேவலம்டி" என்று சொல்லிக்கொண்டு, ஓரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த அரிவாள்மனையை எடுத்து, அவள் உச்சந்தலையில் வெட்டினான். லட்சுமி தலையைப் பிடித்துக்கொண்டே கீழே சரிந்து விழுந்ததைப் பார்த்தான்.




அவனுக்குக் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. பெரும் எதிரிகளை எல்லாம் ஒழித்துக் கட்டிவிட்டது போலவும், அவனது வாழ்வின் சிறிய எதிரிகள் எல்லாம் அவனுக்குப் பயந்து அவன் முன் மண்டியிட்டுக் கிடப்பது போலவும் அவனுக்குத் தோன்றியது. அதிலும் முக்கியமாய், தனபால் "என்னை விட்ருங்கண்னே விட்ருங்கண்னே" என்று கெஞ்சிக்கொண்டிருந்ததைப் பார்த்துச் சிரித்தான். வீட்டை விட்டு வெளியில் வந்து அரிவாள்மனையை வீசி எறிந்தான். அந்தச் சத்தம் கேட்டு, அவன் வீட்டுக் கூரையிலிருந்து ஒரு பூனை தாவிக் குதித்து ஓடியது. அவன் கொஞ்சம் பயந்து, பின் சுதாரித்துக்கொண்டு, "தாயோளீ, நாளைக்கு லிஸ்ட்ல உன்னையும் வக்கிறேன் பாரு" என்றான் சன்னதம் வந்த குரலில்.

-oOo=

2 comments:

கானகம் said...

Dear Hari.. What a fantastic story... Really impotents minds generally works in this way. dream is the one of the way out for our perversion and our long term goals. Things which we can not do in reality can be achieved in reality by going dep into it or allow the dream to ocupy you.. Finally in this story he afraid of a cat and for that his reaction is well said.. A potent story teller is hidden in you.. Kep it up and hats off to you..

கானகம் said...

Why the prebvious stories and poems links leters are very small or almost invisible.. Please try to correct it immediately..