பிரசாத் ஏதோ ஒரு மோன நிலையில் லயித்தவர் போல, தன்னிலையில் இல்லாது வார்த்தைகளைக் கொட்டிக்கொண்டிருந்தார். குடித்தவன் வார்த்தைகள் போல அவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. பிரசாத் குடித்திருந்தார்தார். தொடர்பற்ற வாக்கியங்களுக்கு இடையில் ஒரு தொடர்பை நம்மால் உருவாக்கிக்கொள்ள இயலுமானால் பிரசாத்தின் வார்த்தைகள் மிகப் பலம் பொருந்தியவை.
மெதுவாக நகரும் கலைப்படம் மாதிரி எங்கள் இருப்பை நினைத்துக்கொண்டேன். பிரசாத் வார்த்தைகளைக் கொட்டுவதற்குத் தேவையான இடைவெளியை எடுத்துக்கொண்டார். ஒரு வரியைச் சொல்லி முடித்துவிட்டு, மிக ஆழமான ஒரு இழுப்பை இழுத்தார். புகையை சில வினாடிகள் உள்ளுக்குள் அடக்கி, மிகவும் இரசித்து வெளிவிட்டார். புகை அடர்த்தியாக வெளிவந்து, சமையலறையுள் விரவி நீர்த்தது. அறையெங்கும் மிக இலேசான புகை மூட்டம் இருப்பதை வெளியில் இருந்து அறையினுள் வரும் புதுமனிதர்கள் மட்டுமே கண்டுகொள்ளமுடியும். என்னாலோ பிரசாத்தாலோ முடியாது. யாராவது வந்து 'வீடு ஒரே புகையா இருக்கே' என்னும்போதுதான் அதைக் கவனிப்போம்.
பிரசாத்தின் மேலிருந்து வந்த விஸ்கி வாசமும் சிகரெட் வாசமும் ஒன்று கலந்து ஒருவித நெடியை சமையலறைக்குள் பரவி விட்டிருந்தது. அதுவும் எனக்குப் பழகிவிட்டிருந்தது.
மெதுவாக நகரும் எங்கள் கலைப்படத்திலும் எப்போதோ ஒருமுறைதான் பிரசாத் பேசினார். அந்த வார்த்தைகள் பிரசாத்தின் ஆழ்மனத்தில் அவர் கொண்டிருந்த சோகத்தின் வெளிப்பாடாக இருந்தன. பிரசாத் பேசும்போது அவரின் கண்ணிமைகள் மேலேயும் கீழேயும் அலைந்தன. அவர் சில விஷயங்களைச் சொல்லிவிட்டு மீண்டும் அமைதியானார். கையிலிருக்கும் சிகரெட்டை மீண்டும் இழுத்தார். எதிரே நின்றுகொண்டிருக்கும் என்னை உற்றுப் பார்த்தார். நான் ஏதேனும் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறாரோ என்று நினைத்து, வாயில் வந்ததைச் சொல்ல எத்தனித்தேன். அதற்குள் அவர் பார்வை கேஸ் அடுப்பில் கொதித்துக்கொண்டிருக்கும் சாம்பாரின் மேல் மாறி நிலைத்தது.
நான் என் கவனத்தைச் சொட்டும் நீரின் மேல் மாற்றினேன். எங்களைச் சுற்றிய கலைப்படம் அந்த நேரத்தில் மிகவும் இரசிக்கத்தக்கதாயிருக்கிறது என்று நினைத்தேன். இந்நேரத்தில் பிரசாத்தைப் பற்றிக் கொஞ்சம் நினைக்கலாம். பிரசாத்தின் அறிமுகம் கலீக் என்ற வகையில்தான் தொடங்கியது. சிகரெட் குடிப்பவர்கள் அரைமணிக்கொருதரம் வெளியில் செல்லும் போது கொஞ்சம் இறுகியது. குடிப்பவர்கள் இராத்திரி கூடும் பொழுதில் இன்னும் இறுகப் பிடித்துக்கொண்டது. நாற்பத்தைந்து வயதில் திருமணம் ஆகாமலிருக்கும் ஒருவர் குடித்தால், அவர் தன்னிலையில் இல்லாதபோது அவரிடமிருந்து வரும் குமுறலின் பலத்தை பிரசாத்திடம்தான் கண்டேன். பிரசாத் ஒருகாலத்தில் அவரை இலக்கியவாதியாகவும் நினைத்துக்கொண்டவர்.அதனால் அவரது குமுறல் இரண்டு மடங்காக இருந்தது. ஒரு முப்பது வயது இளைஞனைப்போல் தோற்றமும் சிவப்புத் தோல் சருமமும் கைநிறையச் சம்பளமும் உள்ள பிரசாத் திருமணம் செய்துகொள்ளவில்லை. இதற்காக அவர் சொல்லாத காரணங்களில்லை. கொஞ்சம் தொகுத்துப்பார்த்தால் இவர் காதலித்த பெண் இவரை ஏமாற்றிவிட்டதாகச் சொல்லலாம். ஏனென்றால் இந்த ஒரு காரணத்தை மட்டுமே அவர் சொல்லவில்லை. ஆனால் இந்தக் காரணத்தையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுபோக அவருக்குத் திருமணம் ஆகியிருக்கவேண்டும் என்ற பலத்த சந்தேகம் எனக்கு இருந்தது.
கலைப்படத்தில் பிரசாத் பேசத்தொடங்கினார். அவரின் பார்வை கொதிக்கும் சாம்பாரின் மீதுதான் இன்னும் நிலைக்குத்தி இருந்தது. இந்த முறை பிரசாத்தின் வசவு எங்கள் மேனேஜரின் மீதானது. அவர் பிரசாத்தை அண்டர் எஸ்டிமேட் செய்கிறார் என்று நினைத்துக்கொண்டு, தன் நேரம் வரும்போது தன்னை நிரூபித்து அவர் முகத்தில் கரியைப் பூசுவதாகத் துணை நினைவை எழுப்பிக்கொண்டு, அதன்பின் சொன்ன வார்த்தைகளே பிரசாத் சொன்னவை. வரிகளுக்குப் பின்னால் சென்று பார்த்து அதைப் புரிந்துகொண்டேன். அவர் சொல்வதை மட்டும் கேட்டால் ஒன்றும் புரியாது. தினமும் பிரசாத்திடம் பேசுவதால் "பின் சென்று பார்ப்பதில்" எனக்குக் கஷ்டம் இருப்பதில்லை.
பிரசாத் சிகரெட்டை மீண்டும் இரசித்து இழுத்தார். இந்த முறை பாதிப் புகையை மூக்கின் வழி விட்டார். நான் என் பையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்தேன். அதைப் பற்ற வைக்க பிரசாத்திடம் சிகரெட்டைக் கேட்க எத்தனித்தேன். பிரசாத்தின் கவனம் என் மீது விழவேயில்லை. ஆள்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையில் சிறுத்துக்கொண்டிருக்கும் சிகரெட்டின் மீது இருந்தது. லேசாகச் சிரித்தார். கலைப்படத்தின் காட்சிகள் ஏதோ ஒரு கணத்தில் இறுக்கத்தை இழப்பது போல. இரண்டு வினாடிகள் இடைவெளியில் சத்தமில்லாமல் மெல்ல குலுங்கிச் சிரித்தார். நான் அவரை "என்ன?" என்பது போலப் பார்த்தேன். இலேசான சிரிப்பினூடே, இரண்டு விரல்களுக்கு இடையில் இருக்கும் சிகரெட்டைக் காட்டி, "அல்மோஸ்ட் செக்ஸி!" என்றார். நானும் சிரித்தேன். கட்டை விரலால் சிகரெட்டி பின்பக்கத்தைத் தட்டி சிகரெட்டைக் கொஞ்சம் முன்னகர்த்தினார். நான் சிரித்தேன். என்கையிலிருக்கும் சிகரெட்டைப் பற்ற வைக்க அவரின் சிகரெட் வேண்டும் என்று நான் கேட்க வாயெடுக்க நினைத்தபோது, கொஞ்சம் பலமாகச் சிரித்தார். "செக்ஸி!" என்றார். சிகரெட்டின் எரியும் முனையில் சாம்பல் சேர்ந்துவிட்டிருந்தது. கட்டை விரலால் இரண்டு முறை தட்டினார். சாம்பல் தெறித்துக் காற்றில் பறந்தது. ஒரு சிறிய துகள் காற்றிலாடி கொதிக்கும் சாம்பாரில் விழுந்தது போலிருந்தது. பிரசாத் அதைக் கவனிக்கவில்லை. பிரசாத் மீண்டும் மௌனமானார். என் கையிலிருக்கும் சிகரெட்டை மீண்டும் உள்ளே வைத்துவிடலாமா என்று நினைத்தேன். பிரசாத் சொட்டிக்கொண்டிருக்கும் குழாயை, பலமாகத் திருகி அடைத்தார். சொட்டும் நீர் நின்றது. சாம்பார் கொதிக்கும் சப்தத்தை மீறி அறையில் அமானுஷ்ய மௌனமும் இலேசான புகையும் சிகரெட்டின் நெடியும் பிரசாத்தின் கடந்த கால ஏக்கங்களும் அவர் மீதான என் வருத்தங்களும் நிறைந்திருந்தன. கலைப்படத்தின் அமைதியான காட்சிகள் அவை.
வாசல் மணி ஒலித்தது. இலேசாக அதிர்ந்து அடங்கினேன். பிரசாத் கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு வேகமாக விரைந்தார். ஒரு பாட்டில் விஸ்கியும் ஒரு சிகரெட் பாக்கெட்டும் சாம்பாருக்குத் தாளிக்க கடுகும் வாங்கிவரச் சொல்லியிருந்த பையன் வந்திருப்பான். அவனுக்குக் காசைக் கொடுத்துவிட்டு பிரசாத் சமையலறைக்குள் வந்தார். அவர் கையில் சிகரெட் பாக்கெட்டும் கடுகும் மட்டுமே இருந்தது.
அவர் வருவதற்குள் எரியும் கேஸ் அடுப்பில் என் சிகரெட்டைப் பற்ற வைத்திருந்தேன். பிரசாத்தைப் போல் நிதானமாக, இரசித்து என்னால் சிகரெட் புகைக்க முடியாது. கடனென இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு வீசியெறிந்துவிடுவேன். அப்படிச் செய்யும்போதெல்லாம் ஏதோ நினைவு வந்தவராக பிரசாத் சிரிப்பார். ஏன் சிரிக்கிறார் என நான் புரிந்துகொண்டதில்லை.
பிரசாத்தின் இரவுகள் சட்டெனத் தீராது. மறுநாள் விடுமுறையென்றால் நீண்டுகொண்டே இருக்கும். விஸ்கி பாட்டில் காலியாகும் வரை அவர் உறக்கம் தொடங்காது. சிகரெட் பாக்கெட்டுகள் எண்ணற்றவை காலியாகிக் கிடக்கும். இதைப் பற்றியெல்லாம் என்றுமே பிரசாத் நினைத்துப்பார்த்ததில்லை. கேட்டால் மேன்சன் வாழ்க்கை என்பார்.
எனக்கான இரவு முடியும் நேரம் நெருங்கிவிட்டது. பிரசாத்திடம் சொல்லிவிட்டுச் சென்று படுத்துக்கொள்ளலாம். படுத்தாலும் தூக்கம் வரப்போவதில்லை. எதையேனும் யோசித்துக்கொண்டிருப்பேன். பிரசாத் சாம்பாரில் தாளித்துக்கொட்டுவதில் மும்முரமாக இருந்தார். ஒரு சிறிய வாணலியில் எண்ணெயை இட்டு, அதில் கடுகை இட்டு வெடிக்க வைத்தார். யாருக்கோ சொல்வதுபோல "கருவேப்பிலை இல்ல" என்றார்.
நான் பொறுமை இழந்து அடுத்த சிகரெட்டை எடுத்தேன். பிரசாத்தின் விரல்களிலிருந்த சிகரெட் இறுதியை எட்டியிருந்தது. அவர் இழுத்ததைவிட, வெறுமனே அது காற்றில் புகைந்த நேரமே அதிகம். இடது கையின் ஆள்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் மத்தியில் சிகரெட்டை வைத்துக்கொண்டு, வலதுகையால் தாளித்த எண்ணெயெயைச் சாம்பாரில் கொட்டினார். சத்தத்துடன் சாம்பாரின் ஒரு துளி பிரசாத்தின் கையின் மீது தெறித்தது. பிரசாத் கையை உதறினார். சிகரெட் கீழே விழுந்து அணைந்தது. பிரசாத் அதை எடுத்து, டேப்பைத் திறந்து நீரில் காண்பித்து முழுவதுமாக அணைத்தார். பின் ட்ஸ்ட்பின்னில் தூக்கி எறிந்தார்.
சமைத்தவற்றை எடுத்துக்கொண்டு டைனிங் ஹாலுக்குச் சென்றார். வேறு வழியின்றி நானும் அவர் பின்னே சென்றேன். அவர் மீதிருந்த கழிவிரக்கம் மெல்ல விலகி, நான் தூங்கப் போகவேண்டும் என்ற எண்ணம் தலைகொண்டது.
பிரசாத் ஒரு வித்தியாசமான ஆளுமை. அவருக்கு என்னை விட்டால் வேறு யாரையும் நண்பர்கள் எனச் சொல்லிக்கொள்ள முடியாது. ஆனால் பல பெயர்களைச் சொல்லி அவர்களெல்லாம் என் நண்பர்கள் என்பார். இன்றிருக்கும் பெரிய எழுத்தாளர்களின் பெயரைச் சொல்லி, நாங்களெல்லாம் ஒரே சமயத்தில் எழுதினோம் என்பார். இவற்றையெல்லாம் வெறுமனே கேட்டுக்கொண்டிருக்கவே எனக்குப் பிடிக்கும். அவற்றில் எவ்வளவு உண்மையிருக்கும் என்பதைப் பற்றி யோசிப்பதை நான் நிறுத்திவிட்டிருந்தேன். சில சமயங்களில் பிரசாத் என்னை வடிகாலாக வைத்துக்கொண்டிருக்கிறாரோ என்று நினைப்பதுண்டு. இருந்தாலும் என்ன தவறு என்று கேட்டுக்கொண்டு அமைதியாகிவிடுவேன்.
இப்போது பிரசாத் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். இடது கையில் புகையும் சிகரெட். பிரசாத்தின் சித்திரத்தை கையில் சிகரெட் இல்லாமல் யோசிக்கமுடிந்ததே இல்லை. அவரது வாழ்க்கையையும் நிறையப் புகை நிறைந்ததே. அவர் எல்லோரிடமும் தனக்குத் திருமணம் ஆகவில்லை என்றே சொல்லி வைத்திருந்தார். ஆனால் அதில் எனக்குப் பலத்த சந்தேகம் இருந்தது. அவரது அறையில் காணக் கிடைத்த சில கடிதங்களும் அடிக்கடி வரும் தொலைபேசிகளும் எனக்கு அந்தச் சந்தேகத்தை அளித்திருந்தன. ஆனால் அவர் அடிக்கடி தனக்குத் திருமணம் ஆகவில்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அதனால் அதை நம்புவதே அவருக்குத் திருப்தி தரும் என்று நம்பத் தொடங்கினேன்.
மூன்றாம் அறையிலிருந்து கேசவன் வந்தான். எங்களைப் பார்த்துச் சிரித்தான். பிரசாத் அவனைப் பார்த்துச் சிரிக்கவில்லை. நான் கேசவனைப் பார்த்துச் சிரித்தேன். "கிச்சன் ·ப்ரீயாயிட்டு போலயே. அப்ப நான் சமைக்கலாம்" என்றான். நான் கிச்சனில் சமைப்பதில்லை. வெளியில்தான் சாப்பிடுகிறேன். அதனால் இந்தக் கேள்வி பிரசாத்திற்குரியது. ஆனால் பிரசாத் பதில் சொல்லவில்லை.
பிரசாத் யாருடனும் அவ்வளவு எளிதில் பேசமாட்டார். கேசவனுக்கு எரிச்சல் வந்திருக்கவேண்டும். அவன் என்னிடம் பிரசாத்தைப் பற்றிப் பல முறை திட்டித் தீர்த்திருக்கிறான். இன்றோ நாளையோ அவன் கேட்ட கேள்விக்குச் பிரசாத் பதில் சொல்லாமல் இருந்ததைப் பற்றித் திட்டித் தீர்க்கத்தான் போகிறான். "பிரசாத் சமைச்சிட்டார். நீ சமை" என்றேன் லேசான புன்னகையோடு. கேசவன் என்னை ஆழமாகப் பார்த்துவிட்டு, அவன் அறைக்குச் சென்றுவிட்டான். நாளை என்னைப் பார்க்கும்போது, பிரசாத்தை மேன்சனை விட்டுக் காலி செய்யச் சொல்லவேண்டும் என்பதைப் பற்றி கேசவன் நிச்சயம் வலியுறுத்துவான்.
கேசவன் வந்த அடையாளமோ நாங்கள் பேசிக்கொண்டதன் சலனமோ பிரசாத்திடம் இல்லை. பிரசாத் தட்டை வழித்து நக்கினார். சமையலறையில் உள்ள வாஷ் பேசினில் தட்டைக் கழுவினார். அங்கேயே வாய்க்கொப்பளித்துத் துப்பினார். பிரசாத் இப்படி சமையலறை வாஷ் பேசினில் வாய் கொப்பளித்துத் துப்புவதைப் பற்றிப் பலமுறை கேசவன் கோபப்பட்டிருக்கிறான். நானும் பிரசாத்திடம் சொல்லியிருக்கிறேன். "கேசவன் கோபப்பட்டானா? அவன் யாரு கோபப்பட" என்றார் ஒருமுறை. இன்னொரு முறை "அவன் கெடக்கான் தாயோளீ" என்றார்.
சமையலறையில் எல்லாவற்றையும் மூடி வைத்துவிட்டு மெயின் ஹாலில் வந்து அமர்ந்தார். டிவியை ஆன் செய்து, விசிடி ப்ளேயருக்குள் ஒரு விசிடியைச் செருகினார். திரை உமிழ்ந்தது. நீலப்படம். தினம் ஒரு நீலப்படம் பார்க்காமல் பிரசாத் உறங்கியதே இல்லை. பலமுறை பார்த்துவிட்ட அந்நீலப்படத்தின் அடுத்தடுத்த காட்சிகள் எனக்கு மனப்பாடம். பிரசாத் கையிலிருந்த சிகரெட்டிலிருந்து அறையெங்கும் புகை சூழ்ந்தது.
"ஜன்னலைத் திறந்து வைக்கட்டுமா" என்று பிரசாத்தைக் கேட்டேன்.
"இப்பவா" என்றார்.
"புகையா இருக்கே"
"திறந்து வெச்சா புகை போயிடுமா"
"சரி நான் படுத்துக்கப் போறேன்"
"அப்ப புகை போயிடுமா"
அமைதியாக இருந்தேன்.
"என்ன பேச்ச காணோம்?"
"சும்மாதான்"
"புகை நம்ம வாழ்க்கையோட சிம்பல் தெரியுமா? என்னைக்காவது ஒரு நாள் முழுக்க சலனமோ குழப்பமோ சந்தேகமோ அடுத்த நாள் பற்றிய பயமோ இல்லாம இருந்திருக்கியா? குழந்தையா இருக்கிறப்ப விட்று. நான் சொல்றது நீ யோசிக்க ஆரம்பிச்ச பின்னாடி. நீ யாருன்னு ஒனக்குத் தெரிஞ்ச பின்னாடி. என்னைக்காவது புகையில்லாம இருந்திருக்கியா? புகை நம்ம வாழ்க்கையோட சிம்பல். ஜன்னலைத் திறந்து வெச்சிட்டா புகை போயிடும்னு சொல்றது அசட்டுத்தனம் இல்லையா?"
"எனக்குத் தூக்கம் வருது"
"தூங்கு. ஆனா தூக்கம் வருமா"
"தெரியலை"
"சரி.. போய் படு," என்று சொல்லிவிட்டு டிவிக்குள் ஆழ்ந்தார். நான் மெயின் ஹாலைவிட்டு விலகி என் அறைக்குள் சென்று கதவை அடைத்துவிட்டுப் படுத்தேன்.
படுத்த சிறிது நேரத்திற்கெல்லாம் அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. திறந்தேன். கேசவன்.
"என்னடா தூங்கிட்டியா"
"இல்ல, இப்பத்தான் படுத்தேன்"
"என்னடா ஆச்சு உனக்கு?"
"ஏன், ஒண்ணுமில்லையே. நல்லாத்தானே இருக்கேன்"
"டேய், சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத. ஒரு ரெண்டு மாசம் லீவு போட்டுட்டு ஊருக்குப் போயிட்டு வா. நா மேனேஜர் கிட்ட சொல்லியிருக்கேன். லீவு தர்றேன்னு சொல்லியிருக்கார்"
"எனக்கு எதுக்கு லீவு?"
"பிரசாத் பிரசாத்னு அவனோட சுத்தாதடா. அவன் ஆள் சரியில்லை. நம்ம ஆபிஸ்ல யாராவது அவனோட பேசறாங்களா? எப்பவும் குடி, சிகரெட்."
மெயின் ஹாலை எட்டிப் பார்த்தேன். பிரசாத்தின் முன்னே விஸ்கியும் இடது கையில் சிகரெட்டும் இருந்தது. நீலப்படத்தின் ஏதோ ஒரு காட்சியைப் பார்த்துவிட்டு தலையை லேசாக உயர்த்தி லேசாகச் சிரித்தார்.
"ஒரு நாள்கூட அவரால ப்ளூ ·பிலிம் பார்க்காம இருக்கமுடியலை. அவர் வயசு என்ன? உன் வயசு என்ன? எப்பவும் அவர்கூட சுத்திக்கிட்டு, உம்மனா மூஞ்சி மாதிரி... நம்ம ஊர்ல எப்படியெல்லாம் இருந்த? ஏண்டா இப்படி மாறின? என் கூட நீ பேசறதே இல்லை"
"கேசவன். போதும் நிறுத்து. எனக்குத் தூக்கம் வருது"
"சொல்றதைக் கேளு. ரெண்டு மாசம் லீவு போட்டு ஊருக்குப் போயிட்டு வா. எல்லாம் சரியாயிடும். அதுக்குள்ள அவரை நம்ம ரூமை விட்டுக் காலி பண்ணிடறேன். இன்னொரு விஷயம் சொல்றேன் கேளு. நேத்து சீனு சொல்றான், ஒனக்கும் அவருக்கும் இடையில என்னவோ தப்பு இருக்குன்னு. இதெல்லாம் ஒனக்குத் தேவையா?"
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
"அவரை என்னைக்கோ ரூமை விட்டு அனுப்பியிருப்பேன். உன் பிடிவாதத்தாலதான் வெச்சிருக்கேன்"
நான் குழப்பத்தில் நின்றிருந்தேன். சில சமயம் நானே யோசித்திருக்கிறேன், பிரசாத்தை விட்டுக் கொஞ்சம் விலகி இருப்பது நல்லது என்று.
"சரி இப்ப போய் படு. நாளைக்குப் பார்த்துக்கலாம்" என்றான்.
அறைக்குள் சென்று படுத்தேன். அரைத்தூக்கத்தில் ஏதேதோ பிம்பங்கள் என் கண்ணில் நிழலாடின. பிரசாத் சத்தமாகச் சிரித்தார். அமைதியாக இருந்தார். நிறையத் தத்துவங்கள் சொன்னார். திடீரென என் மீது பாய்ந்தார். திடுக்கிட்டு விழித்தேன். அவரது பெட் காலியாக இருந்தது. மெயின் ஹால் விளக்கின் வெளிச்சம் என் அறையில் கசிந்தது. பிரசாத் இன்னும் டிவி பார்த்துக்கொண்டிருக்கவேண்டும்.
எப்போது உறங்கினேன் எனத் தெரியாமல் உறங்கிப்போனேன்.
அறைக்கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தேன். மீண்டும் கேசவன். பதட்டமாக இருந்தான். என் கையை இழுத்துக்கொண்டு சென்று மெயின் ஹாலில் நிறுத்தினான். பிரசாத் மெயின் ஹாலின் மெத்தையில் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு சாய்ந்து கிடந்தார். அவரது வாயின் ஓரத்திலிருந்து இரத்தம் வழிந்திருந்தது. அவர் இறந்துவிட்டதாகக் கேசவன் கூறினான்.
"சூசயிட் பண்ணிக்கிட்டார்டா. என்ன பண்றதுன்னு தெரியலை. மேனேஜர்க்கு போன் பண்ணி சொல்லியிருக்கேன். அவரோட ·ப்ரெண்ட் ஒருத்தர் வக்கீலாம். அவரையும் கூட்டிக்கிட்டு வர்றேன்னு சொல்லியிருக்கார்"
எங்கள் கலைப்படத்தின் இக்காட்சி எனக்கு விளங்கவில்லை.
"ரொம்ப புகையா இருக்குடா"
"எங்கடா"
"ஒண்ணுமில்லை விடு. நான் ஊர்க்குப் போகணும்"
"அதான் நல்லது, போய்ட்டு வா. நா பார்த்துக்கறேன்"
கேசவன் சில காரியங்களை அடுக்கிக்கொண்டே போனான். நான் ஜன்னல் கதவைத் திறந்துவைத்தேன். மீண்டும் பிரசாத்தைப் பார்த்தேன். அவரது இடது கையின் கீழே ஒரு சிகரெட் துண்டு கிடந்தது. புகையற்றிருந்த சிகரெட்டின் மீது பிரசாத்தின் கண்கள் நிலைக்குத்தி நின்றிருந்தன.
2 comments:
Another good one, Haran. Congrats!
May I know more about you?
அன்பு ஹரி....
//
அமானுஷ்ய மௌனமும் இலேசான புகையும் சிகரெட்டின் நெடியும் பிரசாத்தின் கடந்த கால ஏக்கங்களும் அவர் மீதான என் வருத்தங்களும் நிறைந்திருந்தன. கலைப்படத்தின் அமைதியான காட்சிகள் அவை.
///
என்ன அருமையான சூழ்நிலை விளக்கம். அதை கலைப்படத்தின் காட்சிகளாக உருவகம் செய்தது நன்று.
///
அவர் சொல்வதை மட்டும் கேட்டால் ஒன்றும் புரியாது. தினமும் பிரசாத்திடம் பேசுவதால் "பின் சென்று பார்ப்பதில்" எனக்குக் கஷ்டம் இருப்பதில்லை.
///
எங்கள் கலைப்படத்தின் இக்காட்சி எனக்கு விளங்கவில்லை.
"ரொம்ப புகையா இருக்குடா"
மனதில் இருப்பதை சூழ்நிலையுடன் ஒப்பிடுதல் ப்ரசாத் மாதிரி ஆட்களுக்கு ஒரு வடிகால் போல.. இல்லையா ப்ரசன்னா. ஜெயக்குமார்.
Post a Comment