Thursday, October 5, 2006

பின்னோக்கி நகரும் பெருங்காலம் - கவிதை

ஆலமரத்தின் பரந்த கருநிழலும்
மஞ்சள் வெளிர் மஞ்சள் படர்வுகளும்
கண் எல்லையிலிருந்து மறைய
பின்னோக்கி நகரும் பெருங்காலம்

எப்போதோ அமிழ்ந்தொளிந்த
ஆழ்மனக் காட்சிகள்
கண்ணை மறைத்துப் பெருங்காட்சியாய் விரிய
ஒரு நொடி பேரமைதி,
அப்போதே அத்தையின் மரணம்.
ஒரு வருடத்திலெல்லாம் மாமா.
வீட்டில் கருமை சூழ்ந்த ஒரு தினத்தில் அம்மா
அப்பாவுக்காகக் காத்துக்கொண்டிருந்தபோது
ஒலித்தது புதிய குரல்

யாராலும் தடுக்கமுடியாத
காலத்தின்
பின்னோக்கியப் பெரும்பயணத்தில்
ஓரடி முன்னேயென
தொடர்ச்சியாய்ப் புதிய குரல்கள்,
வீடெங்கும் வாசற்படிகள்.
காலத்தின் வெளியெங்கும்
பரவிக்கிடக்கும் தடங்கள்
மென்மையாய் புதியதாய்
பாவங்களற்றதாய்
பூவினொத்ததாய்.

3 comments:

ராசுக்குட்டி said...

//தொடர்ச்சியாய்ப் புதிய குரல்கள்,
வீடெங்கும் வாசற்படிகள்.
காலத்தின் வெளியெங்கும்
பரவிக்கிடக்கும் தடங்கள்
மென்மையாய் புதியதாய்
பாவங்களற்றதாய்
பூவினொத்ததாய்.//

வரலாறு ஒரு பெண்டுலம் போலே என்று சொன்னவன் விஞ்ஞானியா கவிஞனா என்றெனக்குத்தெரியாது, ஆனால் இக்கவிதை அருமை

மீண்டும் மீண்டும் நல்ல கவிதைகளைத்தருகிறீர்கள் பாராட்டுக்கள்!

Anonymous said...

//வீடெங்கும் வாசற்படிகள்.
காலத்தின் வெளியெங்கும்
பரவிக்கிடக்கும் தடங்கள்
மென்மையாய் புதியதாய்
பாவங்களற்றதாய்
பூவினொத்ததாய்.//

நல்ல வரிகள் ஹரன்.


//பாவங்களற்றதாய்
பூவினொத்ததாய்//

இது பாரதியின் ஒரு பாடலை நினைவுபடுத்துகிறது.. காணி நிலம் வேண்டும்..பராசக்தி கானி நிலம் வேண்டும்..

ஹரன்பிரசன்னா said...

சுப்பிரமணிய சாமி, உங்களால் என் கவிதைகளை நானே மீண்டும் வாசிக்கிறேன். :)

//வீட்டில் கருமை சூழ்ந்த ஒரு தினத்தில் அம்மா
அப்பாவுக்காகக் காத்துக்கொண்டிருந்தபோது//

கடைசியில் அந்த கருமை சூழ்ந்த தினம் வந்தேவிட்டது. :) :(