Tuesday, November 28, 2006

சே.ராமானுஜத்தின் கைசிகி நாடகம் - ஓர் அறிவிப்பு


கைசிகி நாடகம் இந்த வருடமும் டிசம்பர் 1ம் தேதி, திருக்குறுங்குடி நம்பி கோவில் வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

கைசிக ஏகாதசியன்று இரவு முழுதும் நாடகம் நடத்தப்படுவதைக் காண்பது புண்ணியம் என பக்தர்கள் கூறுவது ஒருபுறம் இருப்பினும், அதன் நாடகச்செறிவும், சமுதாயப்பார்வையும் பல அறிஞர்களை ஈர்த்திருக்கிறது.

1900களில் பொலிவுடன் விளங்கிய இந்நாடகப் பாங்கு, கால ஓட்டத்தில் சிதைந்து, அனிதா ரத்னம், பேராசிரியர். சே.இராமானுஜம் போன்றோர்களின் முயற்சியால் மீண்டும் உயிர்பெற்று, கடந்த சில வருடங்களாக புதுப்பொலிவுடன் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 5 வருடங்களாக புராதன வழக்கு சிதையாமல் , ஓலைச்சுவடிகளில் கிடைத்த பாடல்களைக் கொண்டு, பழைய நடிகர்களை ஊக்குவித்து மீண்டும் கட்டமைத்து, சீர்திருத்தப்பட்டுவந்த இந்நாடகம் இப்போது ஒருவாறு முழுதும் சீர்திருத்தப்பட்டு விட்டது எனலாம்.

வருடாவருடம் கைசிகி காண நாடக வல்லுநர்களும், ரசிகர்களும் அதிகரித்து வருகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. "கைசிகி காண்பது ஒரு அலாதி அனுபவம்" என்கிறார்கள் கண்டு ரசித்தவர்கள். நாடக வல்லுநர்கள், தேசிய நாடகப் பள்ளி மாணவர்கள் , பன்னாட்டு வல்லுநர்கள் இம்முறை திரளப் போகிறார்கள் -திருக்குறுங்குடியில். கைசிகி காண விழையும் நண்பர்கள் திருநெல்வேலி, சாத்தான்குளம், நாங்குநேரி வழியே திருக்குறுங்குடி செல்லலாம். பேருந்து வசதி நெல்லையில் உண்டு.

கைசிகி குறித்து எனது வலைத்தளத்திலும் முன்பு சிறிய அளவில் எழுதியிருக்கிறேன். ஆர்க்கைவ்-இல் இருக்கும்.

"எங்கனையோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர்.
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நாம்கண்டபின்.
சங்கோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனிவாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே"


என நம்மாழ்வார் பாடிய நம்பியின் வடிவழகை, கைசிகியோடு உணர்ந்து அனுபவியுங்கள்.

நன்றி: க.சுதாகர்.


கைசிகி நாடகப் பிரதி உருவாக்கப்பட சே.ராமானுஜம் எடுத்துக்கொண்ட உழைப்புப் பற்றி வெங்கட் சாமிநாதன் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். வாய்மழி மரபாக மட்டுமே கிடைத்த இந்நாடகத்தை மீட்டெடுக்க சே.ராமானுஜம் மேற்கொண்ட அசாத்தியமான முயற்சிகள் பாராட்டிற்குரியவை. ஓர் உத்தேச வடிவில் மட்டுமே கிடைக்கப்பெற்றதை மீண்டும் மீண்டும் செதுக்கி, அதைக் கண்டவர்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கேட்டு இதை இந்த வடிவிற்குக் கொண்டு வந்திருக்கிறார் சே.ராமானுஜம். தமிழ் நவீன நாடக உலகிற்கு சே.ராமானுஜம் ஆற்றிவரும் பங்களிப்பு மிகவும் போற்றுதலுக்குரியது. அவரது நாடகங்களைக் காண நான் ஆவலாய் இருக்கிறேன். என்றேனும் சென்னையிலோ அல்லது அதைச் சுற்றிய பகுதிகளிலோ சே.ராமானுஜத்தின் நாடகம் அரங்கேறுமானால் அவசியம் பார்க்க விரும்புகிறேன். திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருக்கும் நண்பர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளவும்.

1 comment:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Haranprasanna அவர்களே வணக்கம்!
நல்ல சமயத்தில் நினைவுபடுத்தியமைக்கு நன்றி!
டிச 01 கைசிக ஏகாதசி அல்லவா? அந்த சமூகப்புரட்சி குறித்து அன்று பதிவிட எண்ணியுள்ளேன்! தாங்கள் அவசியம் வரவேண்டும்! இதோ சுட்டி: http://madhavipanthal.blogspot.com/

பேராசிரியர். சே.இராமானுஜம் அவர்களின் பணி அளப்பரியது! நர்த்தகி வலைத்தளமும் திருமதி அனிதா ரத்னம் அவர்களும் நல்லதொரு சேவையைச் செய்துள்ளார்கள்!

நாடகத்தின் வீடியோ கேட்கும் அளவுக்குப் பேராசை கூடாது:-) நேரில் காண வேண்டும்; ஆனால் சில நிழற்படங்கள் காணலாம் அல்லவா? அன்பர்கள் யாராவது சென்றால், அனுமதி பெற்று சில படங்களைக் காணத் தரலாம்! நன்றி!!

"ஏவலம் காட்டி இவன் ஒருவன்
இப்படியே புகுந்து எய்திடா முன்
கோவலர் கூத்தன் குறிப்பு அறிந்து
குறுங்குடிக்கே என்னை உய்த்திடு மின்"