Friday, May 18, 2007

அஞ்சலி - நகுலன்

பேராசிரியர் டி.கே.துரைசாமி என்பவர் பின்னாளில் நகுலன் என்றறியப்பட்டார். ஆங்கிலத்திலும் தமிழிலும் கவிதை, நாவல், விமர்சனம் என எழுதி நவீன இலக்கியவாதிகளில் முன்னோடியாகத் திகழ்ந்த நகுலன் நேற்றிரவு (17.05.07 இரவு) இயற்கை எய்தினார்.

நவீன கவிஞர்களில் முன்னோடிகளில் ஒருவராக அறியப்படும் நகுலன் ஆரம்ப காலங்களில் தன் கைச்செலவிலேயே சில கவிதைத் தொகுப்புகளைக் கொண்டுவந்தார். Thanks: AnyIndian.comபின்பு காவ்யா பதிப்பகம் அவரது கவிதைகளின் மொத்தத் தொகுப்பை வெளியிட்டது. சில மாதங்களுக்கு முன்னால் "கண்ணாடியாகும் கண்கள்" என்ற அவரது கவிதைத் தொகுப்பையும் காவ்யா வெளியிட்டது. அதில் நகுலனின் புகைப்படங்கள் தரமான தாள்களில் அச்சிடப்பட்டிருந்தது. அதில் நகுலனை ஒரு குழந்தையாகக் கண்டடையலாம். அவரது புகைப்படங்களைக் கண்டபோது வயதானவர்கள் எல்லாருமே ஒரே போன்ற முகத்தை அடைந்துவிடுகிறார்கள் என்கிற என் எண்ணம் மேலும் வலுப்பட்டது.

கடந்த சில வருடங்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்த அவர், நினைவுகளின் குழப்பம், தீவிர இலக்கியவாதிகளுக்கு மனதளவில் ஏற்படும் நெருக்கடி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். திருமணம் செய்துகொள்ளாத நகுலனை அவரது அன்னையின் தோழியான பிருத்தா கடைசி காலங்களில் கவனித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

நகுலன் தன் வாழ்நாளில் பெற்ற ஒரே விருது விளக்கு விருது மட்டுமே.

நகுலனின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

நகுலன் நினைவாக:

ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
·ப்ளாஸ்க்
நிறைய ஐஸ்
ஒரு புட்டிப்
பிராந்தி
வத்திப்பெட்டி/ஸிகரெட்
சாம்பல் தட்ட்
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு

அதிகமான விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் உள்ளான நகுலனின் கவிதை (கோட்ஸ்டாண்ட் கவிதைகள்):

ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன் என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்லை

இன்னொன்று:

நில்
போ
வா

வா
போ
நில்

போ
வா
நில்

நில்போவா?

(இந்தக் கவிதை விருட்சத்தில் வெளியாகியது. இதைத் தொடர்ந்து பிரமிள் அவரது அதிரடிக் கவிதைகளில் நகுலனையும் அதை வெளியிட்ட விருட்சம் அழகிய சிங்கரையும் தாக்கி ஒரு கவிதையை எழுதினார்.நகுலனின் கவிதையைக் கண்டு கோபமடைந்த கும்பகோணன் நாராயணன் இதைக் கேள்விகேட்டு விருட்சத்திற்கு எழுதினார். அதை நகுலனின் அழகிய சிங்கர் தெரிவித்த போது, நகுலன், இக்கவிதைக்கு விளக்கமாக இரண்டு பக்கங்களில் எழுதி அனுப்பினாராம். அழகிய சிங்கர் சொன்ன தகவல் இது.)

தமது கவிதைகளில் அதிக அளவு கடவுளைப் பற்றியும் புராண இதிகாச மாந்தர்களைப் பற்றியும் நேரடியாகவும் குறியீடாகவும் நகுலன் எழுதியிருப்பதைப் பார்க்கமுடிகிறது. எப்படியும் ஏதோவொரு குறியீடு பெரும்பாலான கவிதைகளில் கவிஞனின் அனுமதியோடோ அனுமதியின்றியோ குடிகொண்டுவிடுகிறது.

இன்று நகுலன் கவிதைகளாகவே மிஞ்சுகிறார்.

9 comments:

Hari said...

ஹரன்,
"நில் போ வா"-விற்க்கு என்னதான் அர்த்தம்?

பிச்சைப்பாத்திரம் said...

..........ம்

Haranprasanna said...

ஹரி, "நில் போ வா"வின் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை. இதுபோன்ற கேலிக்கவிதைகளை நகுலன் எழுதியிருக்கிறார் என்றுதான் நான் எடுத்துக்கொண்டேன். இதற்கு அவர் வலிந்து விளக்கம் கொடுத்தாலும் என்னால் அதை ஏற்கமுடியுமா எனத் தெரியவில்லை. நகுலனின் கவிதைகள் தத்துவச் சிக்கலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுபவை. இதுபோன்ற பல கவிதைகளை அவர் தத்துவ நோக்கில் விளக்க முற்படுவார் போல. ராமச்சந்திரன் கவிதையும் அதே போலவே. இரா.முருகன், யுவன் சந்திரசேகர் - ஜெயமோகன் பேட்டி என அக்கவிதைகள் பெற்ற விளக்கம் ஏராளம். அதிலாவது கொஞ்சம் இடமிருந்து உள்நுழைய. நில் வா போ-வில் அதுவும் இல்லை என்பதே என் எண்ணம்.

சுரேஷ், ம்.......

மஞ்சூர் ராசா said...

முக்கியமான மூத்த கவிஞரும் இலக்கியவாதியுமான நகுலன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலி.

Sridhar V said...

அவருடைய புனைப்பெயரே ஒரு புதுமைதான்.

"எப்படி எப்படி எழுதினால் என்னைத் தெரிந்துகொள்ளலாம் என்றுதான் விதம் விதமாக எழுதிப் பார்க்கிறேன்" - நகுலன்

அன்னாரின் ஆன்மா சாந்தியடைவதாக.

சன்னாசியின் இந்த பதிவில் அவருடைய நாவல்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

நளாயினி said...

இழகிய கவிஞனின் தனிமை என்னை நிறையபாதித்திருக்கிறது.

Haranprasanna said...

checking

Unknown said...

அன்னாருக்கு எனது அஞ்சலிகள்

Anonymous said...

//அதை நகுலனின் //

நகுலனிடம் என்றிருக்கவேண்டும்

என்றும் அன்பகலா
கணேஷ்