Saturday, July 21, 2007

Life is beautiful - தொடரும் பதட்டம் (திரைப்பார்வை)

Thanks:movies.yahoo.com


Joshua orefice (ஜோஷ்வா ஆர்ஃபிஸ்) தன் தந்தையின் தியாகத்தைப் பற்றிச் சொல்வதாகப் படம் தொடங்குகிறது. Guido Orefice (கைடோ ஆர்ஃபிஸ்) என்கிற இத்தாலி நாட்டுக்கார யூதர் இரண்டாம் உலகப்போர் தொடங்கும் சமயத்தில் இத்தாலியின் ஒரு நகரத்திற்கு புத்தகக் கடை வைப்பதற்காக வருகிறார். அங்கு Dora (டோரா) என்னும் ஆசிரியரைச் சந்திக்கிறார். டோரா இத்தாலி நாட்டுப்பெண் என்றாலும் யூதப்பெண் அல்ல. தொடர்ச்சியாக நேரும் திடீர்ச் சந்திப்புகளில் அவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலருகிறது. டோரா ஏற்கனவே ஒரு நாஜிக்கு நிச்சயம் செய்யப்பட்டவள். அவர்கள் நிச்சயதார்த்தத்தின் போது கைடோ அவளைக் கூட்டிக்கொண்டு ஓடிவிடுகிறான். இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஐந்து வருடங்கள் இனிமையான வாழ்க்கை. ஜோஷ்வா என்னும் மகன் பிறக்கிறான்.

படம் தனது இரண்டாவது பயணத்தைத் தொடர்கிறது. இரண்டாம் உலகப் போர் முடிவை நெருங்கும் சமயம். ஜோஷ்வாவின் பிறந்தநாளன்று யூதர்கள் அனைவரும் நாஜி வதைமுகாமுக்கு (Nazi Concentration Camp) வலுக்கட்டாயமாகக் கூட்டிச் செல்லப்படுகிறார்கள். அப்படி அழைத்துச் செல்லப்படும் 8000 பேர்களில் கைடோவும் ஜோஷ்வாவும் அடக்கம். அலங்கோலமாகக் கிடக்கும் தனது வீட்டைப் பார்த்தவுடன் டோரா புரிந்துகொள்கிறாள். நாஜி வதை முகாமுக்குச் செல்லும் புகைவண்டியில் தானும் செல்ல பிடிவாதம் பிடித்து, வண்டியில் ஏறிக்கொள்கிறாள்.

தன் மகன் ஜோஷ்வா பயந்துவிடக்கூடாது என்பதற்காக இது ஒரு விளையாட்டு என்று சொல்லி நம்ப வைக்கிறான் கைடோ. தொடர்ந்து விளையாட்டின் விதிகளைக் கூறி, ஆயிரம் புள்ளிகளை யார் வெல்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் என்றும் சொல்லி வைக்கிறான். வெற்றிப் பரிசாக நிஜமான பீரங்கி வண்டி கிடைக்கும் என்று சொன்னவுடன் - ஏற்கனவே பீரங்கி வண்டி பொம்மையின்மீது ஆர்வமாக இருக்கும் ஜோஷ்வா - இந்த விளையாட்டிற்குச் சம்மதிக்கிறான்.

வதைமுகாமில் ஆண்களும் பெண்களும் தனித்தனியாக அடைக்கப்படுகிறார்கள். அனைவரும் கட்டாயம் வேலை செய்யவேண்டும். குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு வேலை இல்லை. சில நாள்களில் இவர்கள் கொல்லப்பட்டுவிடுவார்கள். ஒவ்வொரு நாளும் தான் படும் கஷ்டங்களையெல்லாம் மறைத்துக்கொண்டு, ஒவ்வொன்றையும் விளையாட்டு என்று சொல்லி, அதற்கான புள்ளிகளைச் சொல்லி, தன் மகனைக் குதூகலமாக வைத்திருக்கிறான்.

அமெரிக்கப் படைகள் வதைமுகாமை நெருங்குவதைக் கேள்விப்பட்டவுடன், எல்லா யூதர்களையும் கொன்றுவிட்டு, அங்கிருக்கும் ஆவணங்களையும் தீவைக்க முயல்கிறார்கள் நாஜிகள். இனியும் காத்திருந்தால் தன் மனைவியை இழக்க நேரிடும் என்று நினைக்கும் கைடோ, தன் மகனை ஒரு மர அலமாரியில் ஒளிந்திருக்கச் சொல்கிறான். என்ன ஆனாலும் வெளியே வரக்கூடாது என்றும் அன்று மட்டும் அப்படி ஜோஷ்வா வெளியில் வராமல் இருந்துவிட்டால் ஆயிரம் புள்ளிகளை வென்று விடலாம் என்றும் நிஜமான பீரங்கி வண்டி கிடைத்துவிடும் என்றும் சொல்கிறான். ஜோஷ்வாவும் சம்மதிக்கிறான். பின்னர் பெண் வேடமிட்டுக்கொண்டு, தன் மனைவியைத் தேடி, பெண்கள் பகுதிக்குள் நுழைகிறான். அங்கு மாட்டிக்கொள்ளும் அவன், நாஜிகளால் கொல்லப்படுகிறான்.

விடிகிறது. அலமாரியிலிருந்து வெளிவரும் ஜோஷ்வாவின் முன்னே வந்து நிற்கிறது நிஜமான பீரங்கி வண்டி. தனது வெற்றிக்கான வண்டி என நினைத்து சந்தோஷப்படுகிறான் ஜோஷ்வா. ஜோஷ்வாவும் அவனது அம்மா டோராவும் 'நாம் வென்று விட்டோம்' என்று சொல்லி இணைவதுடன் முடிகிறது திரைப்படம்.

ஆரம்பக் காட்சிகளைப் பார்த்துவிட்டு, தமிழ்ப்படம் போல இருக்கிறதே என்று என்னை நினைக்க வைத்த திரைப்படம், இறுதியில் என்னைப் பதட்டம் கொள்ளச் செய்துவிட்டது. படம் முடிந்த சில மணி நேரங்கள் அந்தப் பதட்டத்தை உணர்ந்தேன். ஒரு தந்தைக்கும் மகனுக்குமான ஒரு பாசத்தை இப்படி ஒரு கோணத்தில் முன்வைத்த படம் என்னை அதிசயிக்க வைத்துவிட்டது. கைடோவும் டோராவும் காதல் செய்யும் காட்சிகளையெல்லாம், அவை அபத்தமாக இருந்தாலும், பின்னர் அவர்கள் எதிர்கொள்ளப்போகும் பெரும் வதையை பார்வையாளர்கள் உணரத் தேவையான களமாக மாற்றியதில் இயக்குநரின் திறமை அசாத்தியமானது. இயர்க்குநர் இந்தப் படத்தின் கதாநாயகனாக நடித்த Robert Benigini. (ராபர்ட் பெனிகி.) அவரது மனைவியாக நடித்த நடிகை அவரது நிஜ மனைவியாம்.

படத்தின் ஆரம்பத்தில் வரும் வசனங்களும் காட்சிகளும் பின்னர் எவ்வளவு சாமர்த்தியமாக பயன்படுத்தப்படுகின்றன என்பதை யோசிக்கும்போது, திரைக்கதையின் உச்சம் புரிகிறது. ஒரு காட்சியில் கைடோ ஒரு மனிதனிடம் 'உங்கள் அரசியல் நிலைப்பாடு என்ன?' என்று கேட்கிறான். அந்த மனிதன் சண்டையிடும் தன் மகன்களை நோக்கி, 'பெனிட்டோ, அடாஃப்! நல்ல பையன்களாக இருங்க' என்கிறான். சொல்லிவிட்டு மீண்டும் கைடோவை நோக்கி, 'என்ன கேட்டீங்க?' என்கிறான். கைடோ அந்தக் கேள்வியை மீண்டும் கேட்காமல், 'மற்ற விஷயங்கள் எல்லாம் எப்படி இருக்குன்னு கேட்டேன்' என்று சொல்லி முடித்துக்கொள்கிறான். தன் மகன்களுக்கு இப்படிப் பெயர் வைத்திருக்கும் நாஜிக்கு யூத வெறுப்பு எவ்வளவு இருக்கும் என்பதைச் சட்டென புரிந்துகொண்டுவிடுகிறான் கைடோ.

கைடோவும் ஜோஷ்வாவும் கடைக்குச் செல்கிறார்கள். அங்கு ஒரு அறிவிப்புப் பலகை, 'நாய்கள் மற்றும் யூதர்கள் அனுமதி இல்லை' என்கிறது. ஜோஷ்வா ஏன் இப்படி எழுதியிருக்கிறது என்று கேள்வி கேட்கிறான். வழக்கமான முறையில் கைடோ ஒரு கற்பனை பதிலைச் சொல்கிறான். இந்தக் கற்பனையே அவனுக்குக் கடைசிவரை கை கொடுக்கிறது. பெரிய ஆபத்திலிருக்கும்போதுகூட இப்படி ஒரு கற்பனை விளையாட்டைச் சொல்லியே அவன் த மகனைச் சந்தோஷமாக வைத்திருக்கிறான்.

வதை முகாமில் அடைக்கப்பட்டவுடன், தான் சொல்லும் விளையாட்டு சம்பந்தமான கதைகளைத் தன் மகன் நம்பவேண்டும் என்பதற்காக, நாஜியின் முன்னிலையில் ஜெர்மனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறான். நாஜி அதிகாரி வதைமுகாமின் சட்டங்களைச் சொல்லச் சொல்ல, அதை விளையாட்டின் விதிகளாக ஆங்கிலத்தில் சொல்கிறான். ஜோஷ்வாவும் இந்த விளையாட்டு உண்மையே என்று நம்பிவிடுகிறான். கொஞ்சம் தவறினாலும் கைடோ உயிரிழக்கும் அபாயம் அதிகம். இப்படியே கடைசி வரை ஒவ்வொரு விஷயத்திலும் chance எடுக்கும் கைடோ, ஒரு கட்டத்தில் தன் அன்பான மகனை விட்டுவிட்டு உயிர் துறக்கிறான்.

தான் கொல்லப்பட அழைத்துச் செல்லப்படும்போதுகூட, தன் மகனுக்கு, தன் உடலை அஷ்ட கோணலாகச் செய்து காட்டி சிரிக்க வைத்துவிட்டுப் போகிறான். விஷயம் புரியாத ஜோஷ்வா அந்த அலமாரியின் திறப்பு வழியாக, சிரித்துக்கொண்டே செல்லும் தன் தந்தையைப் பார்க்கிறான். அதுவே தான் தன் தந்தையைக் கடைசியாகப் பார்க்கப்போவது என்பது அவனுக்குத் தெரியாது. ஆனால் இவை அனைத்தையும் அறிந்துகொள்ளும் பார்வையாளர்கள் அடையும் மனநிலையை விவரிக்க முடியாது.

சில காட்சிகளை வாழ்நாளில் மறக்கமுடியாது என நினைக்கிறேன். வதைமுகாமில் தன் மகனைத் தோளில் தூங்க வைத்துக்கொண்டு இருளில் நடந்து வரும் கைடோவின் கண்முன் விரிகிறது ஒரு காட்சி. அங்கு மலையாக பிணங்களும் எலும்புகளும் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. கைடோ அடையும் திடுக்கிடல் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

தன் தந்தையைக் கொல்லத்தான் கூட்டிச் செல்கிறார்கள் என்பது தெரியாமல், ஆயிரம் புள்ளிகளுக்காக, மர அலமாரியில் ஒளிந்த்திருக்கும் மகனின் கண் வழியும் விரியும் காட்சியாக ஒரு காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் திறப்பின் வழியே, கைடோ நடந்து செல்வதைக் காட்டும் காமிராவின் பதிவு அது. மிகச்சிறந்த காட்சிகளில் இதுவும் ஒன்று.

நான் சொன்னால் மேரி நிச்சயம் உதவுவாள் என்று சொல்லி அதைச் செய்வதும் அதைப் பார்த்து டோரா அசந்துபோவதுமான காட்சிகள், காமெடி என்று சொல்லப்படும் காட்சிகள், டெலிபதியில் ஒருவரைத் திரும்பிப் பார்க்க வைக்க முடியும் என்று நம்பிச் செய்யும் காட்சிகள் போன்ற சில, நாம் பார்த்து அலுத்துப்போன காட்சிகள்கூட, கைடோவின் கதாபாத்திரத்தை நிறுவுவதில் பெரும் பங்காற்றியிருக்கின்றன.

கைடோ ஒரு வெயிட்டராக வாழ்க்கையைத் துவங்குகிறான். அவன் வேலை செய்யும் ஹோட்டலுக்கு வரும் நாஜி ஒருவர், கைடோவின் திறமையை நினைத்து வியக்கிறார். எப்பேற்பட்ட புதிரையும் எளிதில் விடுவிக்கிறான் கைடோ. இந்த நாஜியை வதைமுகாமில் இருக்கும்போது சந்திக்கிறான் கைடோ. (அப்போது அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் எனக்குப் புரியவில்லை. அந்த நாஜி கைடோவுக்கு உதவ முற்படுகிறார். அவரின் உதவியை கைடோவும் எதிர்பார்க்கிறான். அந்த நாஜி மீண்டும் ஒரு புதிரைச் சொல்லி அழுகிறார். அதற்கு விடை கட்டாயம் தெரியவேண்டும் என்கிறார். இக்காட்சி எனக்குப் புரியவில்லை. உண்மையில் அவர் கைடோவுக்கு உதவுகிறாரா அல்லது தன் விடுகதையில்தான் குறியாய் இருக்கிறாரா, எதற்கு இக்காட்சி என்பது விளங்கவில்லை. விளங்கியவர்கள் சொல்லவும். நான் இன்னொரு விதமாகப் புரிந்துகொண்டது, தன்னால் உதவமுடியாத நிலையில் இருப்பதாகவும் வாத்துக்கூட்டங்கள் போலத்தான் செயல்படமுடியுமென்று அவர் சொல்வதாக.)

வதை முகாமில் குளிப்பது என்றால் மரணத்திற்கு உட்படுத்துவது என்று பொருள். இது தெரியாத கைடோ, வழக்கம்போல் குளிக்க மறுக்கும் தன் மகன் ஜோஷ்வாவை, குளிக்க வற்புறுத்துகிறான். இதுவும் பார்வையாளர்களைப் பதட்டம் கொள்ளச் செய்யும் இன்னொரு காட்சி. வயதான யூதர்கள் மற்றும் குழந்தைகளை வதைமுகாமில் வாயுக்கலத்தில் (Gas Chamber) வைத்துக் கொல்கிறார்கள். (சிலர் ஓவனில் வைத்தும் கொல்லப்படுகிறார்கள்.) அவர்களைக் கொல்ல அழைத்துச் செல்லும்முன், நாஜிகள் தொடர்ந்து இப்படி அறிவிக்கிறார்கள். "அவரவர்கள் ஆடையை பத்திரமாக அவரவர்கள் இடத்தில், அவரவர்களுக்குக் கொடுக்கப்பட்ட எண்ணுடன் சேர்த்து வைக்கவும். அப்போதுதான் திரும்ப வந்த பின்பு அதை அணிந்து கொள்ளமுடியும்." அறிவிக்கும் நாஜிகளுக்கு நன்றாகத் தெரியும், இப்போது குளிக்கச் செல்லும் வயதான யூதர்கள் யாரும் திரும்ப வரப்போவதில்லை என்று. ஆனாலும் அதைப் பற்றிய எந்தவொரு உணர்ச்சியும் இன்றி அவர்கள் சொல்கிறார்கள்.

தற்செயலாகத் தடுக்கி விழும் ஒரு நாஜி பெண் அதிகாரியைப் பார்த்து, யூதப் பெரியவர் ஒருவர் அந்தப் பெண்ணை மெல்லத் தொட்டு, "அடிபட்டு விடவில்லையே" என்று கேட்கிறார். அந்த நாஜி அதிகாரி பதில் சொல்லாமல் அந்தப் பெரியவரை வெறுப்புடன் பார்க்கிறார். அந்த ஒரு பார்வையிலேயே தெரிந்துவிடுகிறது, அவள் யூதர்கள் மேல் கொண்டிருக்கும் வெறுப்பு. அது ஒரு தனி மனிதன் மேல் கொண்டிருக்கும் வெறுப்பல்ல. இன வெறுப்பு.

இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பான அம்சம், ராபர்ட் பெனிகி அரசியல் கருத்தாக எதையும் உரக்கச் சொல்லாமல் எல்லாவற்றையும் பார்வையாளர்கள் பக்கமே விட்டுவிடுவது. டோராவைப் பார்ப்பதற்காக மாறு வேடத்தில் செல்லும் கைடோ, இத்தாலியின் இனத்தைப் பற்றிச் சொல்வதாக வரும் வேடிக்கைக் காட்சி மட்டுமே, நாஜிகளின் மீது வைக்கப்படும் விமர்சனம் என்று சொல்லவேண்டும். மற்ற எல்லாமே பார்வையாளர்களே திர்மானித்துக்கொள்ள வேண்டும். கைடோ தனது கடையின் பெயரை Jewish Store என்று வைத்திருக்கிறார்.

ராபர்ட் பெனிகியின் நடிப்பும் அவரது மனைவியின் நடிப்பும் சிறுவனாக வரும் நடிகனின் நடிப்பும் யதார்த்தமான நடிப்புக்கு உதாரணமாக விளங்குகின்றன.

படம் ஏற்படுத்திய பாதிப்பு இரண்டு நாள்களுக்காவது நீடிக்கும் என நினைக்கிறேன்.

வாய்ப்பு கிடைக்கிற அனைவரும் நிச்சயம் பார்க்கவும்.

சில குறிப்புகள்:

01. ஜெர்மன் பெயர்களை எப்படி சரியாகத் தமிழில் உச்சரிக்கவேண்டும் எனத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்த விதத்தில் தமிழ்ப்படுத்தியிருக்கிறேன்.

02. நாஜி என்கிற பதத்தை, தன் இனத்தை உச்சமாகக் கருதும் இத்தாலியின் ஜெர்மனியின் இராணுவ வீரர்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறேன்.

2 comments:

Anonymous said...

Prasanna,

Just now I saw the movie and reading your blogs.....Not able explain the feelings.

Ramesh

Lakshman said...

You did said that right. One of the world's best movie.

The hardest feelings of man kind is said in such a easy-going play.

Film making touched its height in this movie.