Monday, June 9, 2008

இந்தியாவைச் சுற்றிய வாலிபன்

மக்கள் தொலைக்காட்சியில் 'உலக ரஷ்யத் திரைப்படங்கள்' வரிசையில் 'மூன்று கடல்களுக்கு அப்பால்' (A Journey beyond three seas) படத்தைக் காண்பித்தார்கள். படத்தின் ஆரம்ப முன்னோட்ட சட்டங்களில் ரஷ்யப் படத்தின் கதாநாயகனின் படத்தோடு நர்கிஸ் படத்தையும் பத்மினி படத்தையும் காண்பிக்க, சற்று குழம்பிப் போனேன். ரஷ்யப் படத்தில் பத்மினியும் நர்கிஸ¤ம் நடித்திருக்க, அதைப் பார்ப்பது சந்தோஷமாகத்தான் இருந்தது.

15ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த முதல் ரஷ்ய யாத்ரிகர் அஃபனாஸி நிகிதியைப் பற்றிய படம் இது. அஃபனாஸி நிகிதி இந்தியாவில் சுற்றியலைந்தபோது இந்தியாவின் கலாசாரம், இந்தியாவில் அவர் கண்ட காட்சிகள் பற்றிய வர்ணனைகளுடன் இந்தியாவின் அன்றைய வர்த்தகம் பற்றி எழுதி வைத்திருக்கிறார். அவர் ரஷ்யா திரும்பியதும் என்ன ஆனார் என்பதை கண்டறிய இயலாமல் போகிறது. ஆனால் அவர் எழுதிய குறிப்புகள் அன்றைய ரஷ்ய அரசின் கையில் கிடைக்க, அதை பாதுக்காத்து வைக்கிறது அரசு. அதை அடியொற்றி எடுக்கப்பட்ட படம் இது.

அஃபனாஸி நிகிதி தன் தாய்நாட்டிலிருந்து வர்த்தகப் பயணமாக ஈரான் வழியாக இந்தியா வந்தடைகிறார். (முதல் இருபது நிமிடங்கள் நான் பார்க்காததால் ஈரானில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை.) ஈரானில் அவர் கொண்டுவந்த பொருள்கள் எல்லாம் களவு போகின்றன. மிஞ்சுவது ஒரு குதிரை மட்டுமே. அழகான அக்குதிரையுடன் இந்தியாவில் நுழைகிறார் அ·பனாஸி. இந்தியாவிற்கு வரும் முதல் ரஷ்ய யாத்ரிகர் அவர். இந்தியச் சந்தைகளில் நடக்கும் கேளிக்கையில் ராம கதையை ஆடிப் பாடுகிறார்கள் மக்கள். அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் அ·பனாஸியின் குதிரை களவு போகிறது. அந்தக் குதிரையைத் திருடியது அந்நகர ஆளுநராகத்தான் இருக்கவேண்டும் என்கிறார் ராமகாதை பாடியாடும் சாது. ஆளுநரிடம் சென்று தனது குதிரையைத் திரும்பக் கேட்கிறார் அ·பனாஸி. இஸ்லாமிய அரசின் பிரதிநிதியாக அங்கு ஆளும் ஆளுநர் அ·பனாஸியைத் தன் படையில் சேர்ந்துவிடவும் மதம் மாறவும் நிர்ப்பந்திக்கிறார். அப்படிச் செய்தால் மட்டுமே அவருக்கு அவரது குதிரை திரும்பக் கிடைக்கும் என்றும் சொல்கிறார். என்ன ஆனாலும் தான் கிறிஸ்துவ மதத்தில் இருந்து இஸ்லாமிற்கு மாறமுடியாது என்று சொல்கிறார் அ·பனாஸி. நான்குநாள்கள் கெடு தரும் ஆளுநர் அதற்குள் மதம் மாற ஒப்புக்கொள்ளவேண்டும் அல்லது அஃபனாஸி ஏதேனும் வேலை தேடிக்கொண்டு அவன் அங்கு வாழத் தேவையான உத்தரவாதத்தை யாரேனும் அளிக்கவேண்டும் என்று உத்தரவிடுகிறார். அ·பனாஸிக்கு சாது ஒரு உபாயம் சொல்கிறார். இரண்டு நாளில் நகருக்கு வரும் தலைவரிடம் சென்று முறையிட்டால் பலன் கிடைக்க வழியுண்டு என்கிறார். அதேபோல் அ·பனாசியும் தலைவரின் வழியை மறித்து உதவி கேட்கிறார். தலைவர் ஏற்கெனவே அ·பனாசியை அறிந்தவர். அவர் ரஷ்யா சென்றிருந்த சமயத்தில் அவருக்கு உதவியர் அஃபனாஸி என்பதால் ஆளுநரிடம் அ·பனாசி தன் நண்பன் என்றும் அவருக்கு வேண்டிய உதவிகள் செய்யவேண்டியது ஆளுநரின் கடமை என்றும் உத்தரவிடுகிறார். குதிரையைத் திரும்பப் பெற்றுக்கொண்டு இந்தியாவைச் சுற்றத் தொடங்குகிறார் அ·பனாஸி.

இதற்கிடையில் பாம்பு கடித்து சாகக் கிடக்கும் சாம்பா என்கிற பெண்ணைக் காப்பாற்றுகிறார் அ·பனாஸி. கடும் மழைக்காலத்தில் குதிரையில் பயணம் மேற்கொள்ள முடியாது என்பதால் சாம்பாவின் வீட்டில் தங்குகிறார். அங்கு அவருக்கும் சாம்பாவிற்கும் இடையில் காதல் மலர்கிறது. ஆனால் நாடு, மதம் போன்ற பிரிவினைகளுடன் அவளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்பதைப் புரிந்துகொண்டு, காதலை வெளியில் சொல்லாமல், மழைக்காலம் கழிந்தவுடன் மீண்டும் புறப்படுகிறார் அ·பனாஸி.

செல்லும் வழியில் ஒரு கோயிலுக்குள் செல்ல முயல்கிறார். அவர் வெளிநாட்டவர் என்பதால் தடுக்கிறார்கள். சாது அங்கு வந்து தத்துவங்களை எடுத்துக்கூறி, தடுத்தவர்களிடம் உண்மையை விளக்க, அ·பனாஸியை கோயிலுக்குள் அனுமதிக்கிறார்கள். சாதுவிற்கு நன்றி சொல்லிவிட்டுப் புறப்படுகிறார் அ·பனாஸி.

வேறொரு ஊரில் வேறொரு பெண்ணைச் சந்திக்கிறார் அ·பனாஸி. அவர் ஒரு சிறந்த நடனப் பெண். அந்த ஊரில் சில காலம் வசிக்கும் அஃபனாஸி தன் குதிரையை விற்று அதற்கு மாற்றாகத் தங்க நாணயங்கள் பெற்றுக்கொள்கிறார். அந்த ஊரின் வைஸ்ராயைச் சந்தித்து ஊரின் மோசமான நிலையை எடுத்துச் சொல்கிறார். அவரைச் சந்திப்பதற்கு நடனப்பெண் உதவுகிறாள். வைஸ்ராயிடம் ஊரில் முதலாளிகள் கொழுத்திருக்கவும் தொழிலாளிகள் ஏழைகள் வாடவுமான நிலை இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் அ·பனாஸி. ரஷ்யாவில் அப்படி இல்லையா என்று ஏளனத்தோடு கேள்வி கேட்கும் வைஸ்ராயிடம், உலகெங்கும் இதே நிலைதான் என்று ஒப்புக்கொள்ளுகிறார் அ·பனாஸி. வைஸ்ராய் அவனை மதித்து, ரஷ்ய அரசுக்கு ஒரு கடிதமும் கொடுத்தனுப்புகிறார். நடனப்பெண்ணிடம் சொல்லிவிட்டு வேறு இடம் நோக்கிக் கிளம்புகிறான் அ·பனாஸி. அவன் மீது ஒருதலையாகக் காதல் கொள்ளும் நடனப்பெண் மனம் உடைந்துபோகிறாள்.

அ·பனாஸியின் மனம் ரஷ்யாவையும் அவனது அம்மாவையும் நினைத்து ஏங்குகிறது. மீண்டும் நாடு திரும்ப முடிவெடுக்கிறான். வரும் வழியில் சாம்பாவின் வீட்டுக்குச் சென்று மறைந்திருந்து பார்க்கிறான். சாம்பா தூளியில் தனது குழந்தையைத் தாலாட்டிக்கொண்டிருக்கிறாள். ஏக்கத்தோடு பார்க்கும் அ·பனாஸி, தன்னிடமுள்ள தங்க நாணயங்களை அவள் வீட்டு ஜன்னலில் வைத்துவிட்டு வெளியேறுகிறான்.

அவனிடம் பணம் இல்லாததால் அவனைத் தங்கள் படகில் ஏற்றிக்கொள்ள வணிகர்கள் மறுக்கிறார்கள். அவன் மாலுமியாக வருகிறேன் என்று சொல்வதையும் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அங்கு உடல்நலமில்லாமல் படுத்துக்கிடக்கும் சாதுவைச் சந்திக்கிறான். அவர் அவனுக்கு மீண்டும் உதவுகிறார். பாட்டுப்பாடி காசு சேர்த்து அவனுக்குத் தருகிறார். அவரிடம் விடைபெற்றுக்கொண்டு, இந்தியாவைப் பற்றிய நல்ல விஷயங்களை ரஷ்யா முழுதும் எடுத்துச் சொல்வேன் என்று கூறிவிட்டு, படகேறுகிறார் அ·பனாஸி.

உலகின் முதல் பயணக்கட்டுரையாக (உறுதியாகத் தெரியாது) இருக்கும் சாத்தியமுள்ள இப்புத்தகத்தை வாசித்திருந்தால் இப்படம் தந்த அனுபவங்களைவிடக் கூடுதலாகப் பெற்றிருக்கமுடியும் என்பது உண்மை. படம் ஒரு திக்கில்லாமல் அலைவதுபோல் ஆகிவிட்டது. உலகத் திரைப்பட வரிசையில் இதை எப்படிச் சேர்த்தார்கள் என்பது தெரியவில்லை. இந்தியாவிற்கு வரும் முதல் ரஷ்யன் அ·பனாஸி. ஆனால் அவருடன் எல்லாரும் ரஷ்யமொழியில் பிளந்துகட்டுகிறார்கள். சாம்பா (நர்கிஸ்) அவரிடம் ரஷ்யமொழியில் பேசுகிறார். ஆனால் ஹிந்தியில் பாட்டுப்பாடுகிறார். நடனப்பெண் (பத்மினி) கதையும் இதே. ரஷ்யமொழியில் பேசிவிட்டு, ஹிந்தியில் பாட்டுப்பாடி மயக்கம் போட்டு விழுகிறார். அஃபனாஸி செல்லும் ஊராக பிடார் என்கிற ஊரை மட்டுமே சொல்கிறார்கள். அவர் எந்த ஊருக்குப் போகிறார், யாரைப் பார்க்கிறார் என்பதற்கான விவரங்கள் சரியாக இல்லை. கடைசியில் எங்கேயிருந்து கப்பலேறுகிறார் என்பதும் சரியாகத் தெரியவில்லை. திடீரென்று ஒரு காட்சியில் விஜயநகரப் பேரரசைப் பார்த்திருக்கிறேன் என்கிறார் அ·பனாஸி. அடுத்த காட்சியில் அவர் இருக்கும் இடம், விஜய நகரப் பேரரசின் கட்டடக்கலையில் உருவான கோபுரங்களைக் கொண்டதாக இருக்கிறது. இன்னொரு காட்சியில், ராம், கிருஷ்ணா என ஒலிக்கும் கோயிலுக்குள்ளிருந்து மூன்று பட்டை போட்ட சைவர்கள் ஓடிவருகிறார்கள். சாது பாட்டுப் பாடிச் சொன்னதும் உடனே அயல்நாட்டவரைக் கோயிலுக்குள் அனுமதித்துவிடுகிறார்கள். சாது தானும் ஒரு அயல்நாட்டவன் என்கிறார். எங்கெங்ல்லாமோ போகிறது படம்.

நர்கிஸ¤க்கும் பத்மினிக்கும் அதிகக் கவலைகள் இருந்திருக்காது. இந்தியப் படங்களில் செய்த அதே அதீத நடிப்பு, அதே அதீத சோகம், அதே காதல் தோல்வி, கையை மடித்து முழங்கையைக் கொண்டு கண்ணை மறைத்துக் கதறல். நர்கிஸை ரஷ்யாவிற்குக் கூட்டிச் சென்றால் செலவு என்று நினைத்தார்களோ என்னவோ, நர்கிஸ¤ம் கதாநாயகனும் ரஷ்யாவைப் பார்க்கும் கனவுக் காட்சியை செட்டில் எடுத்து சேர்த்து ஒட்டிவிட்டார்கள். நர்கிஸ¤ம் பத்மினியும் தாங்கள் ரஷ்யப்படங்களில் நடித்ததாகச் சொல்லிக்கொள்ளலாம். இறந்தபின்பு அவர்களுக்கு குறிப்பெழுத உதவியாக இருந்திருப்பது இணையத்தின் மூலம் புரிகிறது. லதா மங்கேஷ்கரும் ரஷ்யப் படத்தில் பாடல்கள் பாடியிருக்கிறார். சும்மா இல்லை, அதுவும் ஹிந்திப்பாடல்!

அஃபனாஸியை இஸ்லாத்திற்கு மாறச் சொல்லும்போது அவர் அதை மறுக்கிறார் என்று படம் சொல்கிறது. ஆனால் கூகிளில் தேடினால், அவர் கடைசி காலத்தில் இஸ்லாமியராக வாழ்ந்ததற்கான சாத்தியங்களே அதிகம் என்று வருகிறது. அவர் இந்தியாவில் இருந்தததால் ரஷ்யாவில் எப்போது கிறிஸ்துமஸ் வருகிறது எனத் தெரியாமல் ஈத்தையே கொண்டாடினார் என்றெல்லாம் சொல்கிறது கூகிள். அவரது பயணக்குறிப்பின் கடைசிப் பக்கங்களில் காணக்கிடைக்கும் அராபிய தொழுகைக் குறிப்புகளில் இருந்தும், உடைந்த அராபிய எழுத்துகளிலிருந்தும் அவர் இஸ்லாமியராக மாறியிருப்பதற்க்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றே தோன்றுகிறது என்கிறது கூகிள்.

அஃபனாஸியின் வெண்கலச் சிலையொன்று ரஷ்யாவில் இருக்கிறது. இதற்குப் பின்னான ஒரு சுவாரஸ்யமான தகவலைச் சொல்கிறது விக்கிபீடியா. ரஷ்யாவின் அமைச்சர் ஒருவர் இந்தியாவைப் பார்வையிட்டபோது, அப்போதைய பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு அவரிடம் இந்தியாவின் முதல் ரஷ்ய யாத்ரிகர் பற்றிக் கேட்டாராம். அவரது சிலையை தங்கள் நாட்டில் நிறுவியிருந்ததாகச் சொன்னாராம் அமைச்சர். ஆனால் உண்மையில் அப்படி ஒரு சிலையில்லை. ரஷ்ய அமைச்சர் உடனடியாகத் தனது நாட்டுக்குத் தொடர்புகொண்டு, நேரு அடுத்தமுறை இந்தியா வருமுன் அந்தச் சிலையை உடனடியாக நிறுவவேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம். அதன்படி நிறுவப்பட்டதாம் அச்சிலை.

யாரோ ஒரு இந்திய இயக்குநரிடம் கருத்துக் கேட்டுப் படம் எடுத்திருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது. இந்தியப் படங்கள் மாதிரியே அலைகிறது இப்படம். எதற்கெடுத்தாலும் ஹிந்தியில் பாடிக்கொல்கிறார்கள். (ஹிந்தியில் வெளியான பர்தேஸி இந்தப் படத்தின் மொழிமாற்றமா, மறுஆக்கமா எனத் தெரியவில்லை.) படம் வந்து கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் இருக்கவேண்டும். படத்தின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது. இசையும் அப்படியே. இந்தியக் காட்சிகளில் சீன இசைபோன்று வந்தாலும், பின்னணி இசை நன்றாகவே இருக்கிறது. இந்திய நிலப்பரப்பு தெரிந்தவுடன் இசைக்கும் வேதங்களோடு சேர்ந்த பின்னொலியும், தொடர்ந்த மழைக்காட்சிகளும் அருமை. ஆனால் மக்கள் தொலைக்காட்சி இதை உலகத் திரைப்படங்கள் வரிசையில் வைத்ததைத்தான் ஜீரணிக்கமுடியவில்லை. இதுவரை உலகத் திரைப்படங்கள் வரிசையில் ஒரு தமிழ்ப்படம் கூட ஒளிபரப்பாத மக்கள் தொலைக்காட்சி (அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை, தமிழ்த்திரைப்படங்களின் தரம் அப்படித்தானிருக்கிறது என்றாலும்) இப்படத்தைவிட பல விதங்களில் மேன்மையான தமிழ்ப்படங்களான வீடு, சந்தியா ராகம், உன்னைபோல் ஒருவன் படங்களை ஒளிபரப்பலாம். ஒருவேளை இப்படத்தின் மூலமான பயணக்கட்டுரையின் முக்கியத்துவத்தில் ஏமாந்துவிட்டார்களோ என்னவோ.

கட்டுரைக்கு உதவிய சுட்டிகள்.

http://en.wikipedia.org/wiki/A_Journey_Beyond_the_Three_Seas
http://en.wikipedia.org/wiki/Afanasy_Nikitin

5 comments:

ஜயராமன் said...

பிரசன்னா ஐயா,

அருமையான பட விமர்சனம். ஒரு பழைய ரஷ்ய படத்திற்கு இத்தனை மெனக்கெட்டு விவரங்கள் சேகரித்து எழுதிய தங்களின் முனைப்பு வியக்க வைக்கிறது.

இந்த படத்தின் மூல நூல் ஆங்கிலத்தில் கிடைக்குமா? இதன் விவரமும் எழுதவும்.

அக்கால அகண்ட பாரதத்தின் பலப்பல சமுதாய பிம்பங்களை இந்த கதை முன்வைக்கிறது என்று தெரிகிறது. இந்த படம் ஒரு பிரயாணகதையாக இல்லாமல் தனிமனித ஆசாபாசங்களுக்கு முக்கியம் கொடுக்கும் ஒரு கதையாக (மசாலா கதையாக) இருக்கும்போல தோன்றுகிறது. அப்படியெனில் கொஞ்சம் நிராசைதான்!

நன்றி

ஜயராமன்

ப்ரியா கதிரவன் said...

"அண்மையில் ரசித்த திரைப்பாடல்கள்

செவ்வானம் மின்னல் வெட்டி - மொழி"

அது மின்னல் வெட்டி இல்லங்க...
செவ்வானம் சேலைய கட்டி ...

ஹரன்பிரசன்னா said...

ஜயராமன், அந்தப் புத்தகம் இணையத்தில் கிடைப்பதாகத் தெரியவில்லை.

ப்ரியா, திருத்தியதற்கு நன்றி.

anujanya said...

நல்ல ஆய்வுடன் எழுதப்பட்ட விமர்சனம்.

PRABHU RAJADURAI said...

"உலகின் முதல் பயணக்கட்டுரையாக (உறுதியாகத் தெரியாது) இருக்கும் சாத்தியமுள்ள இப்புத்தகத்தை வாசித்திருந்தால்"

மார்க்கோ போலோ, யுவான் சுவாங் போன்றவர்கள் இதற்கு முன்னரே எழுதியிருக்கின்றனரே!