Tuesday, November 11, 2008

Good Bye Ganguly


இஷாந்த் சர்மாவும் ஹர்பஜனும் தோளில் தூக்கி வைத்து கங்குலியைக் கொண்டுவர இன்னொரு சடங்கு முடிந்தது. ஒரு வாரத்திற்கு முன்புதான் கும்ப்ளேவிற்கு இந்தச் சடங்கை செய்திருந்தார்கள் இந்தியர்கள் என்பதினால் அனுபவம் அவர்களுக்குக் கைக்கொடுத்திருக்கும். தோனி, கங்குலியின் கடைசி டெஸ்ட் என்பதால், ஆஸ்திரேலியா 9 விக்கட் இழந்தபின்பு அவரை அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்கச் சொல்லிப் பெருமைப்படுத்தியிருக்கிறார். இதுவும் முன்பு நடந்துகொண்டிருந்த சடங்குதானா அல்லது புதிய சடங்கு இப்போது தொடங்கியிருக்கிறதா என்று தெரியவில்லை.

சவுரவ் கங்குலியின் முதல் ஆட்டத்திலிருந்து நான் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இந்தியாவின் மிகச்சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவர். உலகின் சிறந்த ஒருநாள் ஆட்டக்காரர்களில் ஒருவர். அவர் இன்னும் இரண்டாண்டுகள் இந்தியாவிற்காக விளையாடியிருக்கலாம். திடீரென ஓய்வை அறிவித்தது குறித்து அதிர்ந்தேன். மிகச்சிறந்த வெளியேறுதலாக, அவர் வெளியேறும் டெஸ்ட் தொடரில் ஒரு சதமும் ஒரு அரை சதமும் அடித்தது குறித்து சந்தோஷமாக இருந்தது.

கங்குலியைப் போன்ற ஆட்டக்காரர்கள் எப்போதாவதுதான் கிடைப்பார்கள். சச்சின் டெண்டுல்கரின் பிரம்மாண்டத்தில், உள்ளொடுங்கிப் போயின கங்குலியின் சாதனைகள். ஒருநாள் ஆட்டத்தில் 22 சதங்கள் என்பது சாதாரண விஷயமல்ல.

பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில், அசாருதீன் மீது தவறுகள் இருந்த நிலையில், தொடர் தோல்வியால் சச்சின் தலைமைப் பொறுப்பை நிராகரித்த நிலையில், கங்குலி இந்திய அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். சோர்ந்து போயிருந்த இந்திய அணிக்கு புதிய உற்சாகத்தைப் பாய்ச்சியவர் கங்குலி. அதுவரை தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் சக ஆட்டக்காரர்கள் மீது கோபத்தை, அட்டக்களத்தில் வெளிப்படுத்தியதில்லை. அசாருதீன் ஆட்டக்களத்தில் ஒரு கணவானாகவே நடந்துகொள்வார். அவர் தவறு செய்யும் சகவீரர் மீது ஆட்டக்களத்தில் கோபம் கொண்டது குறைவு. ஆனால் கங்குலி இவற்றையெல்லாம் ஏறக்கட்டினார். ஏதேனும் வீரர்கள் ஆட்டக்களத்தில் தவறு செய்யும்போது, அங்கேயே வெடித்தார். 'தவறை அங்கே கண்டிக்காமல் எங்கே கண்டிப்பது' என்று செய்தியாளர்களிடம் சீறினார். கங்குலியின் தலைமையின் கீழ் ஜூனியர் ஆட்டக்காரர்கள் நிறைய பேர் விளையாடியதால் இந்தக் கோபமும் எடுபட்டது.

இந்திய அணியின் மிகப்பெரிய சாபம் அணிவீரர்களுக்குள் இருக்கும் ஈகோ. சச்சின் - திராவிட் - கங்குலி காலத்தில் இது மிகப்பெரிய அளவில் குறைந்தது என்றே சொல்லவேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில உரசல்கள் இவர்களுக்குள்ளே இருந்தபோதும், பெரும்பான்மை சமயங்களில் இவர்கள் இணைந்தே செயல்பட்டார்கள். முக்கியமாக அசாருதீன் தலைமைப் பொறுப்பிலிருந்து டெண்டுல்கல்கரின் தலைக்கு தலைமைப் பொறுப்பு வந்தபோது ஏற்பட்ட தொடர் தோல்விகளின்போது, கங்குலியும் டிராவிட்டும் டெண்டுல்கருக்கு சிறந்த ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இதைப் பற்றி இந்தியா டுடே அப்போது ஒரு கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தது. அதேபோல் கங்குலி தலைமைப் பொறுப்பை ஏற்றபோது இந்தக்கூட்டணி தொடர்ந்தது. ஓர் ஆட்டம் என்பது அக்ரெஸிவ்வானது, அதில் தவறில்லை என்கிற நிலையை இந்திய கிரிக்கெட்டில் நிலை நிறுத்தியவர் கங்குலியே. அவர் சட்டையைக் கழற்றி சுற்றிக் காண்பித்ததற்கு (இங்கிலாந்துடனான ஆட்டமா, நினைவில்லை) வரிந்து கட்டிக்கொண்டு அவரைப் போட்டுத் தாக்கின ஊடகங்கள்.

ஒரு செயலை இந்தியர்கள் (உள்ளிட்ட ஆசியாக்காரர்கள்) செய்யும்போதும், அதே செயலை ஆஸ்திரேலியர்கள் அல்லது ஆங்கிலேயர்கள் செய்யும்போதும் உலக ஊடகங்கள் எப்படி நடந்துகொள்ளும் நாம் அறிந்ததே. அந்த உலக ஊடகங்களை ஒட்டி இந்திய ஊடகங்கள் வால் பிடிப்பதும் புதியதல்ல. சட்டையைக் கழற்றி சுற்றிய விஷயத்திலும் அதுவே நடந்தது. எதிரணி அப்படி நடந்துகொண்டிருந்தாலும், இந்திய அணியின் தலைமை அப்படி செய்திருக்கக்கூடாது என்கிற உபதேசங்கள் முன்வைக்கப்பட்டன. ஆட்டம் என்பது அக்ரெஸிவானது என்கிற எண்ணமுடைய கங்குலி இவற்றையெல்லாம் சட்டை செய்யவே இல்லை. நான் கங்குலியை மிகவும் ரசித்தது இதுபோன்ற தடாலடிகளிலேயே.

கங்குலியின் தலைமைப் பொறுப்பின்போது அவர் யாராலும் அண்டமுடியாத தீவாக மாறினார் என்கிற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. தான் விரும்பாத ஓர் ஆட்டக்காரரை அணியில் சேர்த்துவிட்டால், அவரை ஒழித்துக்கட்டுவதற்குக் கங்கணம் கட்டினார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பெரும்பான்மை ஊடகங்களில் வந்த இந்த செய்தி உண்மையாக இருக்கலாம். இதற்கான தண்டனையை அவர் கிரெக் சேப்பல் மூலம் அனுபவித்தார். ஃபார்ம் என்பது எல்லா நேரத்திலும் ஒருவருக்கு இருக்கமுடியாது என்பதை மறந்திருந்த கங்குலி, சேப்பல் மூலம் அதை நினைவுபடுத்திக்கொண்டார். டால்மியாவின் ஆதரவில் அதிகமாகச் செயல்பட்ட கங்குலியின் தேவையற்ற செயல்கள் சேப்பலின் அதிரடியால் முடிவுக்கு வந்தன. ஓர் அதிரடி இன்னோர் அதிரடியை அடக்கியது என்றே சொல்லவேண்டும். இந்தச் சறுக்கல் இல்லாமல் இருந்திருந்தால் கங்குலி இன்னும் இரண்டாண்டுகள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் விளையாடியிருக்கமுடியும்.

இந்த மோதலுக்கு கங்குலி கொடுத்த விலை அதிகமானது. அவர் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதோடு, அணியிலிருந்தும் நீக்கப்பட்டார். இது அதிகபட்ச முடிவு. இந்த முடிவு முட்டாள்தனமானது. கங்குலி போன்ற சிறந்த ஆட்டக்காரர்களுக்கு இந்திய கிரிக்கெட் அரசியல் தரும் தொல்லைகள் எல்லை மீறியவை. டால்மியா மூலம் அரசியல் செய்த கங்குலி அதே அரசியலுக்குப் பலியானார். லக்ஷ்மண் சொன்னது போல, சீனியர் ஆட்டக்காரர்களை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, ஓய்வெடுக்கச் சொல்லி நிர்ப்பந்திக்காமல் இருந்தாலே போதுமானது. எல்லா நேரத்திலும் லக்ஷ்மண் சொன்னதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றாலும், கங்குலி, சச்சின், டிராவிட் போன்ற ஆட்டக்காரர்களுக்கு அது பொருந்தவே செய்கிறது.

கங்குலி சதமடிக்கும் தருணங்கள் மிகச் சிறப்பானவை. 45லிருந்து 6 அடித்து 50ஐக் கடக்கவும், 95லிருந்து 6 அடித்து சதம் கடக்கவும் அவருக்கு மிகவும் பிடிக்கும். கண்ணை கண்ணை முழித்துக் கொண்டு, பிட்ச்சில் பாதி ஏறி சிக்ஸ் அடிக்கும் அழகு இன்னும் கண்ணில் நிற்கிறது. ஒரு பந்து மேலே பட்டுவிட்டால் சுருண்டு உடனே விழுந்துவிடுவார் கங்குலி. நாங்கள் எல்லாரும் ‘சரியான சோளக் கொல்லை பொம்மையா இருக்கானே' என்று சொல்லிச் சிரிப்போம். இனி அந்தக் காலங்கள் திரும்பி வராது. இன்னும் இரண்டு வருடங்கள் இருந்து ஆடியிருக்கவேண்டிய கங்குலியை ஒழித்துக்கட்டியது கிரிக்கெட் அரசியல். அரசியல் என்றாலே அது அரசியலாகத்தான் இருக்கும். கங்குலி வெளியேறும் இப்போதைய வருத்தத்தில் நிழலாடுகின்றன இரண்டு முகங்கள். சச்சின், டிராவிட். இன்னும் என்ன என்ன சோதனைகளோ இருவருக்கும்.

ஒரு டெஸ்ட் தொடர் வெற்றி என்கிற நிம்மதியோடு வெளியேறும் கங்குலியை என்றென்றும் இந்திய கிரிக்கெட்டும் உலக கிரிக்கெட்டும் மறக்காது.

(குறிப்பு: எவ்வித ஆதாரத்தையும் பார்க்காமல் நான் என் மனதில் இருந்த சித்திரங்களை மட்டும் வைத்து எழுதியது. மேலும் ஒருநாள் ஆட்டங்களை மனதில் வைத்தே எழுதியது. தவறுகள் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். :) )

2 comments:

ARV Loshan said...

அருமையான பார்வை.. நான் கூட கங்குலி ரசிகன் இல்லை. ஆனாலும் அவருடைய வீரம்(விளையாட்டில்),செலுத்துகின்றஅதிகாரம் மிகவும் கவர்ந்தவை.
அந்த அதிகாரம் எல்லை மீறிப் போனதனாலேயே அவருக்குக் கெட்ட பெயர் வரக் காரணம்.
அவர் சுயநலவாதி என்பதும் பரவலான கருத்தாகவே உள்ளது..

நேரம் இருந்தால் என் கங்குலி பற்றிய பதிவையும் கொஞ்சம் பாருங்கள்..

அவர் ஓய்வை அறிவித்தவுடன் எழுதியது.

http://loshan-loshan.blogspot.com/2008/10/blog-post_08.html

anujanya said...

கங்குலி இந்திய கிரிகெட்டின் தவிர்க்கமுடியா அத்தியாயம். தலைமைக்கு புது விளக்கம் கொடுத்தவர். பெரும்பாலான சமயங்களில், பிராந்திய சாய்வுகளுக்கு இடம் தராதவர். ஊடகங்களைச் சமாளிப்பதில் மிக வல்லவர். (அசார் இதில் மிகவும் சிரமப்பட்டார்). சச்சின், டிராவிட் அளவு இல்லாவிட்டாலும் தேர்ந்த ஆட்டக்காரர் என்பதில் சந்தேகமில்லை.

அவரைப் பிடிக்காதவர்களுக்கும், அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டபின் திரும்பி வந்து சாதித்தது, அவர் மீது பெரிய மரியாதையை தந்தது. மறக்கமுடியாத வீரர்.

அவர் சட்டையை கழற்றி கொண்டாடியது இங்கிலாந்தை வென்ற நாட்வெஸ்ட் போட்டியில் தான். இன்னொரு உலுக்கிய சம்பவம், ஆஸ்திரேலியா அணித் தலைவரான ஸ்டீவ் வாவை டாஸ் போடும் முன் வெகுநேரம் காத்திருக்கச் செய்தார்.

அனுஜன்யா