Friday, December 26, 2008
விண்வெளியில் ஒரு வெற்றிலைத் தாத்தா (நாள் 4)
நெ.40 ரெட்டைத் தெரு புத்தகத்தை ஜே.எஸ். ராகவன் வெளியிட ஸ்ரீகாந்த் பெற்றுக்கொண்டார். விண்வெளி புத்தகத்தை பத்ரி வெளியிட முரளி கண்ணன் பெற்றுக்கொண்டார்
ராமதுரை எழுதிய விண்வெளி புத்தகத்தை வெளியிட்டு பத்ரி பேசினார். தமிழில் அறிவியல் கட்டுரைகள் எழுதுபவர்கள் மிகக் குறைவு என்கிற நிலையில், ராமதுரை எழுதும் அறிவியல் புத்தகங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குறிப்பிட்டார். பெ.ந. அப்புசாமி போன்ற ஒன்றிரண்டு அறிவியல் கட்டுரையாளர்கள் மட்டுமே கண்ணுக்குத் தென்படுகிற நிலையில், கிழக்கு பதிப்பகம் ராமதுரையைக் கண்டறிந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். மிக எளிய தமிழில், யாருக்கும் புரியும் வண்ணம் ராமதுரை எழுதும் அறிவியல் கட்டுரைகளை மிகவும் சிலாகித்த அவர், ராமதுரை பயன்படுத்தும் உவமைகள் அப்படியே மனதுக்குள் தங்கிவிடுவதைப் பற்றிச் சொன்னார். பூமியை மையமாக வைத்து ஒரு குறிப்பிட்ட சுற்றுப் பாதையில் சுற்றும் ஒரு பொருளின் எடை என்பது முக்கியமற்றதாகிறது என்பதை விளக்க ராமதுரை கையாண்டிருக்கும் உவமை, ‘சுற்றுப்பாதையில் ஒரு அம்மிக் கல் சுற்றினாலும், ஒரு கரண்டி சுற்றினாலும் இரண்டு ஒரே வேகத்தில் சுற்றும்’ என்பதாகும் என்று எடுத்துக்காட்டிய பத்ரி, அந்த உவமை எப்படி ஒரு விஷயத்தை எளிமையாக விளக்குகிறது என்பதைப் புகழ்ந்தார். விண்வெளி மட்டுமன்றி, ப்ராடிஜி வெளியீடு மூலமாக மாணவர்களுக்கான அறிவியல் புத்தகங்களை ராமதுரை எழுதும் விதத்தையும் சிலாகித்தார். ஓர் அறிவியல் தாத்தாவைத் தான் கண்டறிந்திருப்பது தன்னுடைய மிகப்பெரிய சாதனை என்றும் தானும் அறிவியல் கட்டுரைகள் எழுதும் வகையில் ராமதுரையே தனது முன்னோடி என்றும் பத்ரி குறிப்பிட்டார்.
இரா. முருகன் எழுதிய நெ.40 ரெட்டைத் தெரு புத்தகத்தை வெளியிட்டு ஜே.எஸ். ராகவன் பேசினார். தன்னால் நகைச்சுவையாக மட்டுமே பேசமுடியும் என்றும், வோல்ட்டேர் அல்லது சூஃபியிசம் போன்ற ஆழமான கருத்துகளைப் பேசமுடியாது என்றும், அப்படி யாரேனும் எதிர்பார்த்து வந்திருந்தால் அவர்கள் ஏமாற்றம் அடையவேண்டியிருக்கும் என்றும் ஆரம்பித்திலேயே குறிப்பிட்டார். தொடர்ந்து ந்கைச்சுவையாகப் பேசிக்கொண்டிருந்த ஜே.எஸ்.ராகவன், புத்தகத்தில் இருந்து எந்தவொரு கேரக்டர் பற்றியும் தான் விளக்கப்போவதில்லை என்றும், அது தன் வாழ்க்கையில் எப்படி தன்னை பாதித்தது என்பதை முன்வைத்து, தன் வாழ்க்கையில் உள்ள கேரக்டர்கள் பற்றி மட்டுமே பேசப்போவதாக நான்கைந்து முறை சொன்னார். இரா. முருகனின் எழுத்து சுயிங்கம் அல்ல, பாதாம் அல்வா என்றெல்லாம் குறிப்பிட்டார். சும்மா இரா முருகன் என்பதுதான் இரா முருகனின் சுருக்கம் என்று சொல்லி பட்டிமன்ற நினைவுகளை மீட்டினார். அவர் பேசப் பேச நிறைய நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் சிரித்துக்கொண்டே இருந்தார்கள். பெரிய பட்டை அடித்துக்கொண்டு தனது நிறத்தை இன்னும் அதிகமாக எடுத்துக்காட்டிய ராம்கியும் அப்போது ஏன் சிரித்தார் என்பது புரியாத புதிர். ஜே.எஸ். ராகவன் புத்தகத்தைப் பற்றிக் கொஞ்சமும், தன் வாழ்க்கையில் அது எப்படி நினைவுகளைக் கிளறுகிறது என்பது பற்றி நிறையவும் பேசினார். இன்னும் ஒரு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் இவர் பேசியிருந்தால், அது வரலாற்றின் முக்கியமான பதிவுகளில் ஒன்றாக இருந்திருக்கும். மயிலாப்பூர் டைமிஸில் தொடர்ந்து 7 வருடங்கள் எழுதுவதாகக் குறிப்பிட்டபோது, அவரது வாசகர்களை நினைத்துப் பெருமையாக இருந்தது. சும்மா இரா முருகனின் நாஸ்டால்ஜியா நினைவுகளின் தொகுப்பு எந்த ஊரை மையமாகக் கொண்டது என்கிற விவரிப்பு இல்லை, அது சிவகங்கையாக இருக்கலாம் என்றார் ஜே.எஸ். ராகவன். ஆர்.கே. நாராயண் மால்குடி (மல்லேஸ்வரம் மற்றும் லால்குடியின் இணைப்பு) என்ற ஒரு கற்பனையூரை உருவாக்கியதுபோல, இரா. முருகனும் ஓர் ஊரை நம் கண்முன் கொண்டுவந்துவிட்டதாகக் குறிப்பிட்டார். முன்னுரையில் கிரேஸி மோகன், ‘சுஜாதாவின் ஆவி கூடுவிட்டுக் கூடு பாய்ந்து இரா. முருகனுக்குள் வந்துவிட்டது’ என்று எழுதியிருப்பதைத் தன்னால் ஏற்கமுடியாது என்றும், ஒவ்வொருவருக்கும் ஓர் எழுத்துப் பாணி உண்டென்றும், அது இரா. முருகனுக்கும் உள்ளது என்றும் குறிப்பிட்டு இரா. முருகனை வாழ்த்தினார்.
ஜே.எஸ். ராகவனைப் பற்றிப் பேசிய பா.ராகவன், இன்று நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதும் ஒரே எழுத்தாளர் ஜே.எஸ். ராகவன் மட்டுமே என்று புகழ்ந்தார்.
கலந்துரையாடல் தொடங்கியது. தமிழில் ஏன் அறிவியல் கட்டுரைகள் வளரவில்லை என்று கேட்டதற்கு, கிழக்கு பதிப்பகம் மூலம் அந்தக் குறை நீங்கும் என்று ராமதுரை குறிப்பிட்டார். அறிவியல் கட்டுரைகளில் சில தொழில்நுட்ப, அறிவியல் வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துவதா இல்லை தமிழ்ப்படுத்துவதா என்று கேட்கப்பட்டதற்கு, தமிழில் சாத்தியமில்லை என்பதைத் தன்னால் ஏற்கமுடியாது என்றும், ஆனால் ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைடு போன்ற அறிவியல் வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துவது என்கிற அரசுமுடிவு சரியானதுதான் என்றும் குறிப்பிட்டார். இரா. முருகன், தான் என்னதான் தமிழில் எழுதினாலும் கல்கி உள்ளிட்ட இதழ்களில் அதை ஆங்கிலத்திலேயே எழுதுவதாகவும், காரணமாக மக்களுக்குப் புரியாது என்று சொல்வதாகவும் குறிப்பிட்டார். சுஜாதா எழுதும்போது ஆரம்பத்தில் ஒரு தமிழ் வார்த்தையைக் குறிப்பிட்டு அதற்கான ஆங்கில வார்த்தையை அதனருகில் அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுவிட்டு, அக்கட்டுரை முழுக்கத் தமிழிலேயே பயன்படுத்துவார் என்று சிலாகித்தார். ‘நீங்களும் ஏன் அதைச் செய்யக்கூடாது’ என்று நான் கேட்டதற்கு, கல்கி அதை அனுமதிப்பதில்லை என்றார். நாவல், கட்டுரை, அறிவியல் கட்டுரை என்று 3 தளங்கில் எழுதும்போது, ஒன்றிலிருந்து இன்னொன்று எப்படி மாறமுடிகிறது என்று பாரா இரா. முருகனைக் கேட்டார். தன்னுடைய நான்காவது தளமாக திரைக்கதை எழுதுவதைக் குறிப்பிட்டுவிட்டு, ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறுவதில் சிக்கல் இல்லை என்றும், ஒன்று எழுதி போரடிக்கத் தொடங்கும்போது அடுத்த வகையை எழுதத் தொடங்குவதாக இரா. முருகன் பதில் சொன்னார். தன்னால் அது இயலவில்லை என்று பாரா குறிப்பிட்டார்.
விண்வெளி ஆராய்ச்சியைப் பற்றி பழங்காலத் தமிழர்கள் எப்படி அறிந்திருந்தார்கள் என்று நான் கேட்டேன். விண்வெளி ஆராய்ச்சியே உலகின் முதல் அறிவியல் சிந்தனை என்று குறிப்பிட்ட ராமதுரை, பழங்கால மக்களுக்கு மின்சாரம் இல்லாததால் இரவில் அவர்கள் வானத்தையே நோக்கிக்கொண்டிருந்தார்கள் என்றும் அதன் மூலம் தங்கள் அனுபங்களைக் குறித்து வைத்தார்கள் என்றும், அனுபவத்தின் மூலம் என்பதால் அதில் தவறுகள் குறைவு என்றும் ராமதுரை குறிப்பிட்டார். என்று மழை வரும் என்று சொல்கிறார்களோ அன்று மழை வருவதில்லையே, ஏன் இந்தக் குழப்பம் என்ற லக்கிலுக்கின் கேள்விக்கு, தானும் அதுகுறித்து ஆச்சரியப்படுவதாகக் குறிப்பிட்ட ராமதுரை, சாட்டிலைட் தரும் தகவல்களுக்கும், அது அறிவிக்கப்படும் நேரத்திற்கும் உள்ள இடையே உள்ள கால அளவு அதிகம் இருப்பது ஒரு காரணம் என்றார். ஜே.எஸ். ராகவன் ஒரு நகைச்சுவை சொன்னார். மற்ற எல்லா நாடுகளிலும் இப்படித்தானே இருக்கிறது என்று சொன்ன எ.எ. பாலாவின் கேள்விக்கு, இந்தியாவில் மட்டுமே அப்படி இருப்பதாக ராமதுரை சொன்னார். தமிழில் அறிவியல் புனைகதைகள் பற்றிய கேள்விக்கு, அது தமிழில் தோற்றுவிட்டது என்று ராமதுரை குறிப்பிட, இரா. முருகன் அது தற்போது கொஞ்சம் வேரூன்றி வருகிறது என்று குறிப்பிட்டு, மரத்தடி யாஹூ குழுமம் நடத்திய அறிவியல் புனைகதை போட்டியில் வந்த அறிவியல் புனைகதைகளை சிலாகித்து, அதில் முக்கியமாக சேவியரின் ஏலி ஏலி கதையைப் பற்றிக் குறிப்பிட்டார்.
மர்மயோகி வருமா வராதா என்று நாயகன் பாணியில் மிரட்டலான கேள்வியைக் கேட்டு இரா. முருகனை பாரா மிரட்டினார். ‘மருதநாயம்தானே’ என்று தொடங்கிய இரா. முருகன் பின்பு மர்ம யோகி என்று மாற்றிக்கொண்டார். மருத நாயகம்தான் மர்மயோகியா என்கிற சந்தேகம் இனி யாருக்கும் இருக்காது என்று நம்பலாம்.
இரா. முருகனிடம் இன்னும் சில கேள்விகள் கேட்க நினைத்திருந்தேன். நேரமாகிவிட்டதால் கேட்கமுடியாமல் போய்விட்டது. நாவலுக்கும் தொடர்கதைக்குமுள்ள வித்தியாசங்கள் (மூன்றுவிரல், விஸ்வரூபம், அரசூர் வம்சம் இவை மூன்றுமே தொடர் வடிவில் வந்தவை), ஆரம்பகாலத்தில் உள்ள எழுத்துக்கும் தற்போதுள்ள எழுத்துக்குமான வித்தியாசங்கள் பற்றிக் கேட்க நினைத்திருந்தேன். வார்த்தை இதழில் வந்த கட்டுரைகள், நெ.40 ரெட்டைத் தெருவில் உள்ள கட்டுரைகள் உட்பட, இரா. முருகனின் எழுத்தில் இருந்த ஒரு சீரியஸ் தன்மை மெல்ல குறைகிறது என்பது என் அனுமானம். முக்கியமாக, ஒரு கட்டுரையின் ஒட்டுமொத்த வெளிப்பாடு என்பதை அவர் விரைவில் இழக்கிறார் என்பது என் கணிப்பு. வாராவாரம் எழுதுவதால் நேரும் பிரச்சினையாக இருக்கலாம். அவரது நகைச்சுவை என்பது கிரேஸி, ஜே.எஸ்.ராகவன் போன்றவர்களின் வெகுஜ ரசனைக்குரியதாகவும் இல்லை, சீரிய தளத்தில் எழுதப்படும் ஆழமானதாகவும் இல்லை, இரண்டுக்கும் இடையில் தத்தளிக்கிறது என்பது என் கருத்து. இதை முதலில் அவர் தாண்டவேண்டும் அல்லது கைவிடவேண்டும் என்பது என் வேண்டுகோள். குட்டப்பன் கார்னர் ஷோப் கட்டுரைகளில் ஒன்றில்கூட இரா. முருகனின் முத்திரை இல்லை என்பது ஒரு வருத்தமான விஷயம். குட்டப்பன் கார்னர் ஷோப் என்பது பெயராகிவிட்டால், ராஜம் கிருஷ்ணன் குறித்த கட்டுரையில் குட்டப்பனைக் காணவில்லை என்றால், அந்தப் பெயரின் பொருள்தான் என்ன? இது ஒரு மிகச்சிறிய கேள்வி மட்டுமே. ஜே.எஸ்.ராகவனும் கிரேஸி மோகனும் தேடும் வெளியில் இரா. முருகன் இல்லை. அவரது இடம் இன்னும் மேலானது என்பதை யார் அறிந்திருக்கிறார்களோ இல்லையோ, இரா.முருகன் நிச்சயம் அறிவார். அந்த இடத்திலேயே அவர் இருந்துகொள்ளவேண்டும் என்பதுதான் இரா.முருகனின் தேவை. இதற்கான இடத்தை இதழ்கள் தர மறுத்தால், அவர் அதை தன் வலைத்தளத்திலாவது நிறுவவேண்டும்.
இதெல்லாம் ஒருபுறமிருக்க, ராமதுரை அறிவியல் தாத்தாவைப் பற்றி எழுதவேண்டும். பத்ரியும் ஜே.எஸ். ராகவனும் பேசிக்கொண்டிருக்க, தன் கைப்பையைத் திறந்து, வெற்றிலையை எடுத்து, அதை பின்னும் முன்னும் நன்கு துடைத்து, சுண்ணாம்பு தடவி, நான்காக எட்டாக மடித்து வாய்க்குள் வைத்து, மெல்லத் தொடங்கினார். வெற்றிலைத் தாத்தாவின் அறிவியல் உணவு ரசனையின் உச்சம்.
Labels:
கூட்டம்,
புத்தகப் பார்வை,
பொது
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அசத்தலான தலைப்பு
தலைப்பும் விவரனையும் அருமை. முதலில் இது இரண்டையும் கவனித்தேன். ஆனால் எனது எண்ணத்தை பதிவு செய்யவில்லை. பாராவின் பதிவில் உங்களது எழுத்துத்திறமையை சிலாகித்து இந்தப்பதிவுக்கு இணைப்பு கொடுத்திருந்தார்.எனவே மீண்டும் படித்தேன். இந்த மொட்டைமாடி கூட்டம் பற்றிய விமர்சனங்கள் உங்களது எழுத்துத்திறமையில் ஒரு மைல்கல். தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
ஜெயக்குமார்
Post a Comment