எனக்கு முன்னுள்ள இருக்கையில்
முதலில் ஒரு பட்டாம்பூச்சி வந்தமர்ந்தது
பின்பு ஒரு பெருநோய்க்காரன் வந்தமர்ந்தான்
ஒரு விபசாரி வந்தமர்ந்தாள்
யோகி போல் வேடமணிந்த
சிறு குழந்தை ஒன்றமர்ந்தது
யாருமற்ற பெருவெளியில்
தனித்திருக்கும்
அவ்விருக்கையில்
நான் சென்று அமர்ந்தபோது
என் வெளியேறுதலுக்காகக்
காத்திருக்கிறது பெருங்கூட்டம்
துடுப்புகளற்ற படகு
அமைதியற்ற நதியொன்றில்
பயணம் செய்து வந்தவன்
படகுகளை தந்துவிட்டுச் சென்றான்
மேலெங்கும் நீர் தெறித்துக் கடக்க
துடுப்புகளை வாங்க மறந்தேன்
நான் பயணத்தில் எதிர்கொண்ட பேரலைகள்
என்னை நனைத்துவிட்டுச் சென்றன
கரை மீள
படகுகளைப் பெற்றுக்கொண்ட புதியவன்
மறக்காமல் துடுப்புகளைக் கேட்டான்
ஆற்றின் ஆரவாரத்தை
துடுப்புகளின்றி எதிர்கொண்டவன் சொன்னேன்,
படகுகளும் அவசியமற்றவை.
குழந்தையின் வீடு
வீட்டின் கதவைத் திறந்ததும்
ஓடி வந்து கட்டிக்கொள்கிறது குழந்தை
ரத்தம் கேட்டு அலைந்துகொண்டிருந்த
பூனையொன்று ஜன்னல் தாண்டி ஓட
ஒரு மூலையில் பூக்கிறது
அதிமணம் கொண்ட மலர்
குழந்தை
முத்தமிடுகிறது
கழுத்தைக் கட்டிக்கொள்கிறது
காரணமே இன்றி சிரிக்கிறது, குதிக்கிறது.
அதன் நெற்றியை மெல்ல வருடுகிறேன்
குழந்தையையும் படைத்து
மிருகத்தையும் படைத்தவன்
குரூரனாக இருந்தாலும்
ஒரு மிருகம்
ஒரு குழந்தையை
பெற்றுக்கொள்ளுமாறு படைத்தவன்
கடவுளாகத்தான் இருக்கமுடியும்.
நன்றி: பண்புடன் குழுமம்
3 comments:
//அவ்விருக்கையில்
நான் சென்று அமர்ந்தபோது
என் வெளியேறுதலுக்காகக்
காத்திருக்கிறது பெருங்கூட்டம்//
Great....
//குழந்தையையும் படைத்து
மிருகத்தையும் படைத்தவன்
குரூரனாக இருந்தாலும்
ஒரு மிருகம்
ஒரு குழந்தையை
பெற்றுக்கொள்ளுமாறு படைத்தவன்
கடவுளாகத்தான் இருக்கமுடியும்.//
Superb..
Jeyakumar
ஹரன்,
மிக அழகிய கவிதைகள். உங்கள் கவிதைகளின் வசீகரமே, ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பரிமாணங்கள் தந்து, மைய்யப்புள்ளி நகர்வதுதான். வாசிப்பின்பத்திற்கு நன்றி தவிர்த்து வேறு என்ன சொல்ல முடியும்.
அண்மையில் ரசித்த திரைப்பாடல்கள் update செய்யவில்லையா? வாரணம் ஆயிரம் நிச்சயம் உங்கள் பட்டியலில் இருக்கும்.
அனுஜன்யா
அனுஜன்யா, ரசித்த பாடல்களை அப்டேட் செய்யவேண்டும். நன்றி.
Post a Comment