இந்தக் கதையை (கதையா, கட்டுரையா, கட்டுரைத் தன்மை அற்ற வெறும் அறிவியலா என்பது பற்றி போகப்போக நிறைய சொல்லியிருக்கிறேன், பொறுமை) மிகவும் சம்பிரதாயமாக ஆரம்பிக்கிறேன் என்பது எனக்கே புரிகிறது. சம்பிரதாயமாக ஆரம்பிக்கும் எதுவுமே அபத்தம் என்பது என் கருத்து. என்றாலும் இப்போது அப்படித்தான் ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது. ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு பல நாவல்களின் தொடக்கமும், சிறுகதைகளின் தொடக்கமும் இப்படி அபத்தங்களுடன் ஆரம்பித்திருப்பதை நினைத்துக்கொள்கிறேன். இன்றைய அறிவியல் உலகத்தில் – அறிவியல் வந்துவிட்டது, இனி யாரும் இதில் அறிவியல் எங்கே இருக்கிறது என்று கேட்கக்கூடாது எனச் சொல்லிவைக்கிறேன். ஆனால் இது அறிவியல் புதினமா அறிவியல் நிகழ்வா எனத் தொடங்கக்கூடும். இவர்கள் எதில்தான் தலையிடாமல் இருந்தார்கள்? ஒரு அறிவியல் கட்டுரை எழுதும் ஒருவனுக்கு இந்நாட்டில் நிகழும் அநீதியைப் பற்றிச் சொல்ல எனக்கே வெட்கமாக இருக்கிறது. இத்தனைக்கும், இது அறிவியல் யுகம்! சரி, நான் இதை ஒரு நிகழ்வாகச் சொல்கிறேன் எனவும் நீங்கள் அதை புனைவாகப் பார்க்கத் தொடங்குகிறீர்கள் என்றும் வைத்துக்கொள்ளலாம். முன்பு, வெகு முன்பு ஊமைப்படங்கள் திரையிடப்பட்ட காலத்தில், ஒருவர் திரையின் முன்னே தோன்றி கதையை விவரிப்பாராம். (என்னிடம் இதற்கான ஆதாரம் இருக்கிறது. ஆதாரத்தைப் போட்டே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும், அநீதி செய்யும் ஜூனியர்களுக்கு நான் இளப்பமா என்ன?) நம் மரபு பழைய எந்த ஒன்றையும் நிராகரிக்கக்கூடாது என்கிற கருத்தாக்கம் அடர்வு பெறுகிற சூழலில் நான் அதை நினைத்துப் பார்ப்பது பொருத்தமாகவே தோன்றுகிறது – அபத்தங்கள் இருக்கமுடியாது (-ஐ ஆரம்பித்து –ஐ முடித்துவிட்டேன். நான் சில கட்டுரைகளில் இதைத் தவிர்த்திருக்கிறேன். கட்டுரை எடிட்டர் கடுமையாகக் கோபப்படுவார். இந்த அறிவியல் கட்டுரையில் (பிராக்கெட்டுக்குள் பிராக்கெட், :) ஸ்மைலியும் உண்டு, ஏனென்றால் அறிவியல் உலகமல்லவா!) அறிவியல் புனைகதையில், அறிவியலில், அறிவியல் கட்டுரையில் (சே, ஏதோ ஒரு எழவில், Hereafter 'அறிவியல் கட்டுரை/கதை' will be referred as 'எழவு') எடிட்டருக்குக் கோபப்பட பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் பிராக்கெட் முடிக்கப்படாத, - முடிக்கப்படாத கோபங்கள் இருக்க வாய்ப்பில்லை. இரண்டாவது பிராக்கெட்டை ஏற்கெனவே முடித்துவிட்டேன், முதல் பிராக்கெட்டை முடித்துவிடுகிறேன்) என்று யாரும் சொல்லமுடியாது. ஏனென்றால் நாம் அந்த அபத்த மரபை மட்டும் மீண்டும் மீண்டும் மீட்டெடுத்துக்கொண்டே இருந்தோம்.
என் பிரச்சினை இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். என்னால் ஒரு விஷயத்தை ஒரு விஷயமாக மட்டும் சொல்லமுடியாது. அது முதல் பிரச்சினை. (இரண்டாவது பிரச்சினை என்ன என்பதை, முதல் பிரச்சினை தீர்ந்த பின்னர் சொல்கிறேன்.) இதன் மூல காரணம் என்னவாக இருக்கும் என்று யோசியுங்கள். அக்காலங்களில் திண்ணைப் பேச்சு என்று ஒன்று உண்டு என்று சொல்வார்கள். அதுவே பின்னர் மின்னஞ்சல் பேச்சாகப் பரிமாணம் பெற்றது. அந்த திண்ணைப் பேச்சின் எச்சமே என்னுள் தேங்கிக் கிடக்கிறது. நான் அதிகம் பேசுவதால் எனக்கு வயதாகிவிட்டது என்றும், அறிவியல் பற்றிப் பேசுவதால் விஞ்ஞானி என்றும் நீங்கள் யூகித்திருக்கலாம். நாந்தான் சொன்னேனே, அறிவியல் உலகில் ஏன் அபத்தங்கள் இருக்கக்கூடாது என்று.
அக்காலங்களில் பாட்டிக் கதை என்று சொல்வார்கள். நானும் என் பணிக்காலத்தில் நடந்த ஒரு கதையையே உங்களிடம் சொல்லப்போகிறேன். இதுவரை சொன்னது ஒரு முன் தயாரிப்பு. உடலுறவில் முத்தம், தடவுதல் போன்ற முன் தயாரிப்பைப் போன்றதே இதுவும். பாட்டிக் கதையில் எடுத்த எடுப்பில் ஒருவர் கதைக்குள் செல்வதில்லை. 'ஒரு ஊர்ல ஒரு' என்கிற பிரயோகம் பன்னெடுங்கலாமாக இருந்தது என்று வாசித்திருக்கிறேன். அது வெறும் 'ஒரு ஊர்ல ஒரு' இல்லை. ஒரு முன் தயாரிப்பு. நான் மரபை மீட்டெடுக்கிறேன். இந்த 'எழவிலும்' நீங்கள் அதை மீட்டெடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நம் பழங்காலத்துத் திரைப்படங்கள் ஆரம்பிக்கும்போது ஒருவித மங்கல இசை வருமே, அது போன்ற ஒரு மங்கல இசையை நினைத்துக்கொள்ளுங்கள். நான் அந்த மூன்று பேரையும் அறிமுகப்படுத்தப் போகிறேன்.
ஒருவன் பெயர் வினோத். இன்னொருவன் பெயர் ஜீவன். மூன்றாமவன் பெயர் கண்ணையன். (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. :) முன்பு வெளிவந்த தமிழ் தினசரிகளில் இப்படி வந்ததை நீங்கள் இந்நேரம் நினைவுக்குக் கொண்டுவந்திருக்கவேண்டும்.) இந்த மூவரால்தான் பிரச்சினை.
விஷயம் சின்ன விஷயம்தான் என்றார் மேத்யூ. அவர்தான் தலைமை விஞ்ஞானி. நிரலியில் ஏதேனும் பிரச்சினை இருக்கும் பார் என்றார். ஒன்றும் புரியவில்லையா? முன் தயாரிப்பு இல்லாமல் திடீரென பிரச்சினைக்குள் செல்லும் வழக்கம் செத்துவிட்ட இன்றைய யுகத்தில், அதையும் ஒரு மரபெனக் கருதி புதுப்பிக்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள்.
நான் நிரலியை முழுக்கப் பரிசோதித்தேன். துல்லியமாக இருந்தது. பிரச்சினைகளே இல்லை. மேத்யூவிடம் சொன்னேன். 'தாயோளி' என்றார். அவர்தான் எனக்கு இதுபோன்ற பழம் தெறிகளைக் கற்றுக்கொடுத்தது. அவர் சொல்லச் சொல்லத்தான் பழம் வார்த்தைகளையும், பழம் பழக்க வழக்கங்களையும் பற்றி தேடத் துவங்கினேன். இதனாலேயே என் கட்டுரைகள் பெருமளவில் கவனிக்கப்பட்டன. மரபு ரீதியான விஷயங்கள் இன்றைய நிலையில் முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில், நான் அவற்றை மீண்டும் எழுதத் தொடங்கியபோது, அவர்களுக்குள் இருக்கும் ஒரு விஷயமாகவே அதை வாசித்தவர்கள் கண்டடைந்தார்கள். அவர்களுக்குள் இருக்கும் மரபை மீட்டுவதன்மூலம் நான் அவர்களை மிக எளிதில் அணுகலாம் என்பதைக் கண்டுபிடித்தேன். இப்படித்தான் மேத்யூவைப் பின்னுக்குத் தள்ளி, எடிட்டரின் திட்டோடு, அதிக ராயல்டியையும் பெறத் தொடங்கினேன்.
மீண்டும் மூன்று பேர் பிரச்சினை. 'நல்லா பாத்தியா' என்றார் மேத்யூ. தவறுகள் இருந்தால் அதை முதல் பார்வையிலேயே கண்டுபிடித்துவிடுவார் மேத்யூ என்பது எனக்குத் தெரியும். நான் நிரலிகளைப் பார்க்காமலேயே சொல்லிவிடலாம், அதில் தவறுகள் இல்லையென. இருந்தாலும் ஒவ்வொன்றாய்ப் பார்த்தேன். என் மூளை எல்லாவற்றையும் உபயோகித்தேன். ஒன்றும் சரிப்பட்டுவரவில்லை. அந்த மூன்று பேரும் அப்படித்தான் இருந்தார்கள். எப்படி? முன்பு கொசு என்கிற ஒரு உயிரினம் இருந்தது என்பது நினைவிருக்கலாம். அதை விரட்ட ஒரு கொசுவர்த்தி என்கிற ஒரு விஷயமும் இருந்தது. அதற்கு சுருள் சுருளான ஒரு வடிவமும் இருந்தது. அதைப் போன்ற ஒரு சுருள் வடிவத்தைப் பின்னோக்கிய நினைவுக்கு ஒரு குறியீடாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் அதி பழைய படங்களில். அதைக் கிண்டல் செய்து, அதற்குப் பின்னர் வந்த படங்களில் அந்த கொசுவர்த்திச் சுருளைச் சுற்றிக் காண்பிப்பார்கள். (எப்படி நான் ஆரம்பித்த இடத்திற்கு வரப்போகிறேன் என்பது எனக்கே குழப்புகிறது!) அப்படி நீங்கள் ஒரு கொசுவர்த்தியையும் அது உங்கள் கண்முன் சுற்றுவதாகவும் நினைத்துக்கொள்ளுங்கள். ஆம், உங்களைக் கொஞ்சம் பின்னோக்கி அழைத்துப்போகிறேன்.
மிக வெற்றிகரமான விழாவாக அதை அறிவித்தார் மேத்யூ. மனிதனை ரோபோவாக மாற்றிக் காண்பித்ததில் உள்ள தடைகளையெல்லாம் எளிதாகக் கடந்ததற்காக அவருக்கு பாரத் ரத்னா விருதும் அளிக்கப்பட்டது. (பாரத் ரத்னாவின் பெயரை இந்திய ரத்னா என்று மாற்றி, மரபை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக மீண்டும் அதை பாரத் ரத்னா என்று மாற்றினார்கள். இதுவரை இது தெரியாதவர்கள் அவர்களது பொது அறிவைக் கொஞ்சம் கூட்டிக்கொள்ளலாம். உபரித் தகவல், திண்ணைப் பேச்சு இப்படித்தான் பொதுஅறிவில் ஆரம்பிக்கும்!) அன்றிரவு நடந்த பார்ட்டியில் சில சந்தேகங்களை நான் கிளப்பினேன். அதில் ஆரம்பித்தது பிரச்சினை. இந்த சந்தேகங்களுக்காக நிறைய முறை பாராட்டியிருக்கிறார் மேத்யூ. அதைவிட அதற்காகத் திட்டியுமிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
நான் கேட்ட சந்தேகம் மிக எளியது. இந்த ரோபோவாக மாறிய மனிதர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டால் என்ன ஆகும் என்பதுதான் அது. அதற்கு வாய்ப்பே இல்லை என்றார் மேத்யூ. ஏனென்றால் நிரலியில் அவை ஒன்றுக்கொன்று எதிரியாக உணரும் நிரலி சேர்க்கப்படவில்லை என்றார். எங்கும் அன்பு, எங்கும் சகோதரத்துவம், எங்கும் அமைதி என்று (தொப்பை குலுங்க, பிரெஞ்சு தாடி விரிய கண்ணாடியின் வழியே காணும் கண்களுடன் சிரித்தார் மேத்யூ என்று எழுதியிருப்பார் சுஜாதா என்னும் ஓர் எழுத்தாளர். அவரே தமிழில் அறிவியல் புனைகதைகள் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கியவர் என்று சொல்லப்படுகிறது. 2000மாவது வருடங்களில் நிறைய எழுதி தள்ளியிருக்கிறார். அறிவியல் கதைகளின் முன்னோடி. அவர் செய்த அபத்தங்கள் பற்றி இன்னொரு முறை சொல்கிறேன். இப்போது உங்களுக்கு இன்னொன்று புரிந்திருக்கும், அபத்தத்தில் தொடரும் எதுவும் அபத்தத்திலேயே முடியவேண்டியதில்லை என.) அலுங்காமல் குலுங்கால் சிரித்தார் மேத்யூ. ஏனென்றால் அவருக்குத் தொப்பை இல்லை, பிரெஞ்சு தாடி இல்லை. (இலக்கிய வகை காவியம் ஆகவேண்டுமென்றால் அறுசுவை இருக்கவேண்டும் என்கிற தியரி நீண்ட நாளாக இருந்தது. அதை அடியொட்டி இப்போது உங்களுக்கு நகைச்சுவையை வழங்கிவிட்டதாக நம்புகிறேன். மீதி ஐந்து சுவைகளை இக்கட்டுரைக்கு எதிர்க்கட்டுரை எழுதப்போகும் அநீதியாளர் ஜூனியர் மேத்யூ தருவார். பொறுத்திருங்கள்.)
திடீரென மேத்யூ சொன்னார், 'நாம் மோத வைத்துப் பார்த்தால்தான் என்ன?' என்று. மீண்டும் முன்பொரு காலத்தில் என்று சொல்வதற்கு வருந்துகிறேன். என் 'எழவு' எதிரியான அநீதியாளர் ஜூனியர் மேத்யூ நான் எத்தனை முறை மரபு என்றும், முன்பொரு காலத்தில் என்றும் எழுதியிருக்கிறேன் என புள்ளி விவரங்களோடு வரக்கூடும். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. (இந்த வரி வரவில்லை என்றால் என் கட்டுரையில் சுரத்தே இல்லை என்று அர்த்தம் என்று எடிட்டர் அடிக்கடிச் சொல்லுவார்.)
சோதனை தொடங்கியது. முதலில் ஒரு நிரலியைச் சேர்த்தோம். மூன்று பேரில் ஒருவனைப் பணக்காரனாகவும், இன்னொருவனை ஏழையாகவும் படைத்தோம். மூன்றாமவனை பிச்சைக்காரனாக்கினோம். மூவருக்கும் அவர்களின் கதாபாத்திரத்திற்கான வரையறையை அளித்தோம். அவர்களின் கீழ்க்கோப எல்லையை குறைத்தோம். மூவரையும் இரவு ஒரே அறையில் அடைத்தோம். இன்னும் சிறிது நேரத்தில் 'ரணகளம் ரத்தபூமியாக' மாறும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் அறைக்குள்ளிருந்து எந்த ஒரு சத்தமும் இல்லை. உள்ளே பார்த்தபோது மூவரும் அருகருகே உறங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் உறக்க நேரத்திற்கு முன்பாகச் சண்டை வந்திருக்கவேண்டும் என்பது எங்கள் நிரலியின் வரையறை. மேத்யூ மெல்ல நெற்றியைச் சுருக்கினார். சுருக்கங்கள் வழியே மெல்ல வியர்வை வழிந்து, பிரெஞ்சு தாடி இல்லாத அவரது ஒற்றை நாடியின் வழியே வழிந்து நெஞ்சில் சொட்டியது. மேத்யூ யோசித்தார், யோசித்தார், யோசித்துக்கொண்டே இருந்தார்.
மீண்டும் நிரலிகளையெல்லாம் என்னென்னவோ மாற்றினார். துப்பாக்கி, வெடிகுண்டு என எல்லாம் கொடுத்து ஒருவரை ஒருவர் பார்த்தாலே சுடவும், குண்டு எறியவும் நிரலி எழுதினார். ம்ஹூம். ஒன்றும் உதவவில்லை. மூவரும் இயல்பாகப் பேசிக்கொண்டார்கள். தூக்க நேரத்தில் சரியாக உறங்கத் தொடங்கினார்கள். சண்டை மட்டும் இல்லை.
மூன்று மனிதர்களும் இயல்பிலேயே ஆண்கள்தானா எனச் சோதித்தார். ஒருவேளை யாரேனும் ஒருவர் ஆணாக மாறிய பெண்ணாக இருந்தால், அதற்கான கூடுதல் நிரலியைச் சேர்க்க நினைத்திருப்பார் போல. ஆனால் இந்த நிரலி தேவையற்றது என்று ஏற்கெனவே நிராகரிப்பட்ட ஒன்றுதான். இருந்தாலும் யோசித்தார். இந்த நேரத்தில் ஒரு பழமொழி சொல்வதில், மரபை மீட்டெடுப்பதில் மகிழ்ச்சி எனக்கு. :) பசிச்சவன் பழங்கணக்கப் பார்த்தானாம்.
மூவருமே பிறப்பிலேயே ஆண்கள்தான் என்பதும் ஊர்ஜிதம் ஆயிற்று. அதற்கு மேலும் நெற்றியைச் சுருக்க வழியில்லை என்பதை மேத்யூ உணர்ந்துகொண்டு, வேறொரு மேனரிசமாக கன்னத்தில் கைவைத்துக்கொண்டார். இதை சரி பார்க்காமல் அவர் வாங்கிய பாரத் ரத்னாவைத் திரும்பக் கொடுத்துவிடலாமா என்று யோசித்திருப்பார் என நினைக்கிறேன்.
இங்கே கொஞ்சம் நிகழ்காலத்துக்கு வாருங்கள். இப்போது மேத்யூ நான் கண்டுபிடித்த பதிலை ஒட்டி பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டு மரணமடைந்துவிட்டார். அதில் அவர் எதிர்கொண்ட தகவல்கள் அவரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கவேண்டும் என்பது மட்டும் புரிகிறது. 'இதை கவனிக்காம நாம நிரலி எழுதினதே தப்பு' என்று அவர் புலம்பியிருக்கவேண்டும். இன்றைக்கு மேத்யூ இல்லாத நிலையில், ஒன்றுமே தெரியாமல் அநீதியாளர் ஜூனியர் மேத்யூ என்னை எதிர்த்துக்கொண்டிருக்கிற வேளையில், இக்கட்டுரை என்னை பாரத் ரத்னாவாக்கும் என்பது மட்டும் இப்போதே தெரிகிறது.
மேத்யூ நெற்றியைச் சுருக்காமல் கன்னத்தில் கைவைத்துக் கொண்டிருந்த நேரத்தில், நான் பழம் இலக்கியங்களைப் புரட்டிக்கொண்டிருந்தேன். ஒரு சில கல்வெட்டுக்களைப் படித்துக்கொண்டிருந்தேன். திடீரென ஒரு விஷயம் எனக்குள் பிடிபட, கிட்டத்தட்ட மூன்று பேரையும் நோக்கி ஓடினேன். மேத்யூ நான் என்ன செய்கிறேன் என்று பார்த்துக்கொண்டிருந்தார். நான் மூவரையும் பார்த்துச் சிரித்துவிட்டு அவர்களின் நிரலியை ஒவ்வொன்றாகப் பார்த்தேன். நான் எதிர்பார்த்த விஷயம் அதில் இல்லை. அந்த மூவரின் பூர்வத் தகவல்களைச் சேகரித்தேன். நான் நினைத்தது சரியாக இருந்தது.
மேத்யூவிடம் சொன்னேன். 'உங்கள் பாரத் ரத்னாவிற்குப் பிரச்சினை இல்லை.'
'அப்படியா?'
'ஆம், 'சண்டை போடு' என்கிற பழைய நிரலியுடன், ஒரே ஒரு நிரலியை மட்டும் சேர்க்கிறேன், என்னாகிறது பாருங்கள்' என்றேன். மூவரின் நிரல்களிலும் ஒரேஒரு நிரலியை மட்டும் சேர்த்தேன். அவர்கள் அந்த வரையறையை ஏற்றுக்கொள்ளச் செய்தேன். ஒரு அறைக்குள் அடைத்தோம். இரண்டு நிமிடங்கள்கூட இருக்காது, அடிதடி சத்தம். சரியான சண்டை. நாங்கள் நிரலியில் சேர்க்காத கெட்ட வார்த்தைகளெல்லாம் வருகிறதோ என்கிற சந்தேகம்கூட எனக்கு வந்தது.
மேத்யூ ஆச்சரியம் பொங்க, 'என்ன செய்தாய்' என்றார்.
'நீங்கள் ஜாதியை மறந்துவிட்டீர்கள். அவர்கள் மூவரும் ஒரே ஜாதி. அதை மாற்றினேன். ஒவ்வொருவருக்கு ஒரு ஜாதி என்று வைத்தேன். பிரச்சினை தீர்ந்தது' என்றேன்.
இதை மரபின் மீட்சியாகப் பார்க்கவேண்டுமா, அல்லது தொடர்ச்சியாகப் பார்க்கவேண்டுமா எனத் தெரியாமல் மீண்டும் நெற்றியைச் சுருக்கிய மேத்யூவின் முகம் என் கண்முன்னே இன்னும் இருக்கிறது.
ஜூனியர் மேத்யூவிற்கு இதை சவாலாகவே சொல்கிறேன். ஒரே ஜாதியைச் சேர்ந்த மூன்று பேரை உன் நிரலியால் சண்டையிட வை, நான் என் சொத்தையெல்லாம் உனக்கு எழுதி வைக்கிறேன். சவாலுக்குத் தயாரா சின்ன பையா?
-- சீவன், 24-11-2108
(பின்குறிப்பு: ஏய் எடிட்டர், இக்கட்டுரையில் ஏதேனும் கைவைத்தால், சில புதிய தெறிகளை உனக்கு அனுப்பலாம் என்றிருக்கிறேன். கவனம்.)
நன்றி: பண்புடன் குழுமம்
2 comments:
வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி –> Add a Gadget –> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt=”தமிழ் ஸ்டுடியோ.காம்” src=”http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg”/>
பிரசன்னா,
ரொம்ப ஜாலியான கதை. அதனாலேயே இதை அறிபுனைவு என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அறிபுனை என்றால் கொஞ்சமேனும் சீரியஸாய் இருக்க வேண்டாமோ? :-)
நிரலியில் ஜாதியில்லாத காரணத்தினால் சண்டை நிகழவில்லை என்பது சுவையான கற்பனை. எக்ஸ்டிரா பிட்டிங்குகளை கழற்றி விட்டு மேற்சொன்ன கற்பனையை கதையின் கடைசி வரியாக அமைத்து மிகவும் முனைப்புடன் எழுதியிருந்தால் நல்லதொருபடைப்பாக மலர்ந்திருக்கும் என்பது என் பார்வை.
Post a Comment