போய்ச் சேர்ந்தான் ரங்கராஜன்,
வந்து சேர்ந்தான் ஹரன் பிரசன்னா
என்று தொடங்கலாம். ஏற்கெனவே கர்ச்சீஃப் போட்டு வைத்திருக்கிறார் என்பதால் சாரு நிவேதிதாவிற்குக் கோபம் வரலாம். அதனால் நானாகவே வந்து சேர்ந்தேன் என்று அடக்கத்தோடு சொல்லிவிட்டு குதலைக்குறிப்புகளைத் தொடங்குகிறேன்.
பத்தி எழுத்து என்பது சாதாரணமானதல்ல. யாரைப் பத்தியாவது எழுதவேண்டும். அதைப் படித்துவிட்டு, யாரைப் பத்தி எழுதினோமோ அவர்கள் பத்தி விரித்து ஆடவேண்டும். நாம் ஏதேனும் பதிலுக்குச் சொல்ல விஷயம் பத்திக்கிட்டு எரியவேண்டும். இப்படி பல பத்திகள் உள்ள ஒரு பத்தி எழுத்தை சுஜாதாவும், சாருவும், ஞாநியும் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள். நான் அவர்கள் போலல்லாமல், தோன்றியதை எழுதப்போகிறேன். இதில் ஆழம் இருக்காது. வலிந்து திணிக்கப்படும் நகைச்சுவைகள் இருக்கலாம். பொருட்படுத்தக்க விஷயங்கள் விடப்பட்டு, பொருட்படுத்தத் தகாத விஷயங்களைப் பத்தி பேசலாம். டைரிக் குறிப்புகள் போல, நான் திருச்சிக்குப் போனேன், திருநெல்வேலிக்குப் போனேன் என்றிருக்கலாம். (நாளை திருச்சி போகிறேன்!) அதாவது வெறும் சுவாரஸ்யத்தை மையப்படுத்தி மட்டுமே இதை எழுதப்போகிறேன். இதில் இலக்கியத்தைத் தேடாமல் இருப்பது நல்லது. (சுவாரஸ்யம் இருந்தால் அது இலக்கியம் கிடையாதா என்கிற பழங்காலப் பின்னூட்டங்கள் தடைசெய்யப்படுகின்றன.) இவற்றையெல்லாம் உங்களுக்கல்ல, எனக்கே சொல்லிக்கொள்கிறேன் என்பதுதான் முக்கியம். வாரா வாரம் வரலாம் என்பதைவிட முக்கியமான செய்தி, எந்த வாரமும் வராமல் இருக்கலாம் என்பதுதான்.
முருகனிடத்திலிருந்து தொடங்குகிறேன். வேறு யார், எம்பெருமான் கடவுள் முருகன்தான். வடபழனி கோவிலுக்குச் சென்றிருந்தேன். கோயில் தூய்மையாக இருந்தது. சென்னையில் வடபழனி கோயிலும், கபாலீஸ்வரர் கோயிலும் ஓரளவிற்குத் தூய்மையாகப் பேணப்படுகின்றன. வடபழனி கோவிலுக்குள் நுழையுமிடத்தில் காலைக் கழுவிக்கொள்ள தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் கப்பல் விட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. மழை பெய்து ஓய்ந்தபின்பு, தெருவில் ஓடும் செம்மண் நிற நீரில் கப்பல் விட்டிருக்கிறோம். சென்னையில் இப்போது மழை என்றாலே பேய் மழைதான் பெய்கிறது. நாம் கப்பல் விடாமலேயே பல வீடுகளின் பொருள்கள் தெருவில் மிதந்து வருகின்றன. வடபழனி கோவிலில் கப்பல் விடச் சம்மதிப்பார்களா எனத் தெரியவில்லை. கோவிலில் நல்ல கூட்டம். கடவுளைத் தரிசித்துவிட்டு, அங்குள்ள புத்தகக் கடையில் உள்ள புத்தகங்களைப் பார்த்தேன். நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் 115 ரூபாய்க்கு கிடைத்தது. டிஸ்கவுண்ட் உண்டா என்று கேட்க நினைத்தேன். புத்தகம் விற்பவர் பாராவிற்கு உறவினராக இருந்தால், பிச்சைக்காரத்தனமா கேக்கறீங்களே என்று சொல்லக்கூடும் என்பதால், கேட்கவில்லை. புத்தகம் சில இடங்களில் மடிந்தும், லேசாகக் கிழிந்தும் இருந்ததால் வாங்கவில்லை. முதியோர்கள் அமரும் இடத்தில் அமர்ந்து, சர்க்கரைப் பொங்கலும் புளியோதரையும் சாப்பிட்டேன். கோயில்களில் இன்னும் கூட்டம் வந்துகொண்டுதான் இருக்கிறது. முருகன் சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம்.
மயிலாப்பூர் திருவிழா இந்த மாதம் 22ம் தேதியிலிருந்து 25ம் தேதி வரை நடந்தது. கிழக்கு பதிப்பகத்திலிருந்து ஸ்டால் போட்டிருந்தோம். மக்களுக்கு புத்தகக் கடைக்குச் சென்று புத்தகம் வாங்க நேரமில்லை. நேரமிருந்தால் சென்று வர எளிமையான வழிகள் இல்லை. சென்று வர வாகனங்கள் இருப்பவர்களுக்கு சோம்பேறித்தனம். இப்படி பல விஷயங்களை பதிப்பகங்கள் மீற ஒரே வழி, அவர்களைச் சென்றடைவது. இது மயிலாப்பூர் திருவிழாவில் வெற்றிகரமாக நடந்தது. பலர் புத்தகம் வாங்கிச் சென்றார்கள். இப்படியெல்லாம் புத்தகம் வந்திருக்கிறதா என்று கேட்டுக்கொண்டார்கள் சிலர். கபாலீஸ்வரர் கோயிலில் அர்ச்சகராக இருக்கும் ஒருவர், பத்து பத்து ரூபாயாக எடுத்துக்கொடுத்தார். விபூதியும் குங்குமமும் ரூபாயில் ஒட்டியிருக்க, மங்களகரமாக விற்பனை நடந்தது. நிறைய கிளி ஜோசியக்காரர்கள். ஏகப்பட்ட பேர் ஜோசியம் பார்த்துச் செல்கிறார்கள். ‘பையனை நம்பி பொண்ணைக் கொடுக்கலாமா’ என்று கவலையோடு கேட்கிறார் ஒரு பெண்மணி. கிளி பரிகாரம் சொல்கிறது. ‘சாமிய கும்பிட்டுட்டு சீட்டு எடு’ என்றதும், அங்கிருக்கும் ஒரு சாமி படத்தை மூன்று முறை சுற்றிக் கும்பிட்டுவிட்டு சீட்டு எடுக்கிறது. கிளிக்காரர் (வீட்டுக்காரர் மாதிரி!) இரண்டு நிமிடம் கிளியை விட்டுவிட்டுச் சென்றார். அவர் வரும் வரை விடாமல் கத்திக்கொண்டிருந்தது கிளி. அவர் வந்ததும் அமைதியாகிவிட்டது. நிறைய பிச்சைக்காரர்கள். பிச்சைகள் விழுந்தவண்ணம் உள்ளன. தயங்கி தயங்கி ஒருவரிடம் சில்லறை கேட்டேன். ‘நல்லவேளை இப்பமே கேட்டீங்க, இல்லைன்னா சிண்டிகேட் பேங்கல வாங்கிட்டுப் போயிருப்பாங்க’ என்றார். தை அமாவாசை அன்று குளத்தில் பொரி தூவினார்கள். ஒரே நாளில் இத்தனை பொரிகளைச் சாப்பிட்டால் மீன்களுக்கு அஜீரணம் வருமா என்று தெரியவில்லை. அறிவியல் வலைப்பதிவில் யாரேனும் இதைப் பற்றி எழுதும்வரை காத்திருக்கவேண்டியதுதான்.
புத்தகக் கண்காட்சியில் அதிகம் விற்பனையான புத்தகங்கள் பற்றிய பட்டியல் குமுதம் இதழில் வந்துள்ளது. கிழக்கு பதிப்பகத்தின் ‘இந்தியப் பிரிவினை’ 8வது இடத்தில் உள்ளது என நினைக்கிறேன். முதலிடம் கோபிநாத்தின் ‘இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க ப்ளீஸ்.’ இவ்வளவு பணிவுடன் ஒருவர் சொல்லும்போது ஏன் வாங்கவேண்டும் என்பதால் நான் வாங்கவில்லை. இப்புத்தகம் புத்தகக் கண்காட்சியின் ஆறாம் நாளோ ஏழாம் நாளோதான் விற்பனைக்கு வந்தது என நினைக்கிறேன். அப்படி இருந்தால், அது அதிக அளவு விற்று முதல் இடத்தைப் பிடித்திருக்க வாய்ப்புகள் குறைவு. இப்பட்டியலில் ஆனந்தவிகடனின் ஒரு புத்தகம்கூட இல்லை என நினைக்கிறேன். இதுவும் நம்பும்படியாக இல்லை. குமுதத்தின் மூன்று புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இது இன்னும் நம்பும்படியாக இல்லை. எனக்குத் தெரிந்து, இந்தியப் பிரிவினை அல்லது ஆனந்த விகடனின் ஏதேனும் ஒரு புத்தகமே முதலிடத்தில் இருக்கமுடியும் என்று நினைக்கிறேன். இது ஒரு யூகம் மட்டுமே. இது தவறாகவும் இருக்கலாம். குமுதம் போன்ற இதழும் இப்படி யூகத்தில்தான் வெளியிடுகிறதா என்ன? 33 புத்தகங்களில் 3 புத்தகங்கள் முதல் பத்தில்; ஒரு வருடத்தில் மிகக்குறைந்த பதிவுகள் மட்டுமே எழுதிய லிவிங் ஸ்மைல் வித்யாவின் வலைப்பதிவு முதல் பத்தில் (அதிஷாவின் பதிவு இப்பட்டியலில் வந்திருப்பதை, அவர் சந்தனப் பொட்டு வைத்திருப்பதால், மன்னித்துவிடலாம்) என சாதனைகளைப் படைத்துக்கொண்டிருக்கிறது குமுதம். ஆனாலும் அதிகம் விற்பனையான முதல் பத்து புத்தகங்களில் ‘இலங்கையில் சமாதானம் பேசுதல்’ புத்தகத்தைச் சேர்த்ததைத்தான் ஜீரணிக்கமுடியவில்லை. புத்தகத்தின் விலையையும், புத்தகத்தின் இலக்கியத் தன்மையையும் வைத்துப் பார்த்தால், இது சாத்தியமாகியிருக்காது என்றுதான் தோன்றுகிறது.
பத்தி எழுத முடிவு செய்துவிட்டேன், பத்திக்கு நல்ல பெயர் வேண்டும் என்று சில நண்பர்களிடம் கேட்டேன். கோணல் பக்கங்கள் போல, கற்றதும் பெற்றதும் போல கேட்சிங்காக இருக்கவேண்டும் என்றும் சொன்னேன். ஒரு நண்பர் ‘கோணல் பக்கங்களுக்குப் பதிலா பூணூல் பக்கங்கள்னு வைங்க. உங்களுக்கு சரியா வரும்’ என்றார். கிழக்கு பதிப்பகம் அதிரச் சிரித்தோம். ‘வலது கை பழக்கமுள்ளவனின் இடது கைக்குறிப்புகள்னு வைக்கலாம்’ என்று நான் சொன்னபோது, ‘தலைப்பை மட்டும்தான் படிப்பாங்க, மத்ததைப் படிக்க நேரமிருக்காது’ என்றார் ஒரு நண்பர். கடைசியாக நானே ஒரு முடிவுக்கு வந்தேன். குதலைக் குறிப்புகள். குதலை என்றால் மூன்று அர்த்தங்களை லிஃப்கோ தமிழ் அகராதியில் பார்த்தேன். 1. மழலைப் பேச்சு 2. மென்மையான பேச்சு 3. அறிவில்லாதவன். ‘இதெல்லாம் வெகுஜன மக்களுக்குப் புரியுமா’ என்று எஸ்.எம்.எஸ்ஸினார் தோழர். ‘இந்த வார்த்தையை நான் வெகுஜனப்படுத்துகிறேன்’ என்றேன். ‘குட் நைட்’ என்று பதில் வந்தது.
12 comments:
ஹா ஹா ஹா
//இந்த வார்த்தையை நான் வெகுஜனப்படுத்துகிறேன்’ என்றேன். ‘குட் நைட்’ என்று பதில் வந்தது.//
Kamal Styleலில்- வெல்,நம்பிக்கை..
நடத்துங்க!
குதலை-குதப்பல்னு முதல் பார்வையில் படுது. பழக பழக பழகிரும்.
//குதலை-குதப்பல்னு முதல் பார்வையில் படுது. பழக பழக பழகிரும்.//
வெல்,நம்பிக்கை..
//இந்த வார்த்தையை நான் வெகுஜனப்படுத்துகிறேன்//
நல்லாப் படுத்துறீங்க!
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... இப்பவே கண்ணைக் கட்டுதே!
//கோணல் பக்கங்களுக்குப் பதிலா பூணூல் பக்கங்கள்னு வைங்க. //
:-))
பத்தி எழுத்து நகைச்சுவையான சமாச்சாரம் அல்ல. மொழியின் தொன்மையோடு மிகுந்த பரிச்சயமும் சமகால அறிவில் தெளிவும் வருங்காலத்தைப் பற்றிய தீர்மானமான யூகமும் இருக்க வேண்டும். தமிழில் சுஜாதாவைத் தவிர வேறு பெயர் எதுவும் தோன்றாதது துரதிர்ஷ்டமே.
Glad to see you back. Looking forward to the column. The preamble is understandably (but undeservedly) apologetic. You don't have to be. Your comment about a certain writer was on the money. His reaction was way over the line. All the best!
ஹரன்,
ஆல் த பெஸ்ட். குதலைக் குறிப்புகள் - 1 நல்லாவே இருக்கு. இதுல வந்த கிளிதான் 'நீராம்பல்' ஆனது போலும்! நீங்க 'தமிழ்மணம்' திரட்டியில் சேர்ந்தால், இன்னும் நிறைய பேர் படிக்க ஏதுவாக இருக்கும்.
முன்னமே ப்ராமிஸ் செய்தபடி 'திரைப்பாடல்கள்' இன்னும் அப்டேட் செய்யவில்லை. 'திரைப்படங்களும்' அவ்வகையே. சுத்தப் புத்தகப் புழுவாகி விட்டீர்கள் :)
அனுஜன்யா
opening-e villangamaa...vadapazhani murugan kaappaathattum :P
அடுத்த பகுதி எப்போ? (கேக்கக் கூடாதோ ;)
அட்லீஸ்ட் என் கிட்ட வெகுஜன படுத்திடீங்க.
மணிகண்டன், :-)
Post a Comment