வெளி அரங்க வேலைகள் பாதி முடிந்திருந்த நிலையில், அங்கே உள்ள வேலைகளையும் இம்மழை புரட்டிப் போட்டது. சாமியாவின் மேல் நிறையத் தண்ணீர் தேங்கி நிற்க, கர்ப்பிணிப் பெண்ணின் பெருத்த வயிறு போல, கீழ் நோக்கி வளைந்து நின்றது சாமியானா. புத்தகக் கண்காட்சிக்கு வரும் இடங்களில் அமைக்கப்பட இருக்கும் விளம்பரத் தட்டிகள் இன்றுதான் அமைக்கப்படும் என்பதால், இன்று தொடக்க நாளாக இருந்தாலும், நாளையே புத்தகக் கண்காட்சி அதன் நிறத்தை அடையும் என நினைக்கிறேன்.
சென்ற முறை முதல் நாள் மதியமே சாப்பிட ஏதேனும் அங்கே கிடைத்தது. இந்த முறை நேற்று சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. வெளியில் சென்று சாப்பிடலாம் என்றால் சரியான மழை வேறு. ஆனால் அரங்கினுள்ளே டீப்பாயில் டீயும், காப்பியும் கிடைத்தது. அந்த மழைக்கு, அதுவும் சரியான வேலை இருக்கும்போது, சூடாக டீ குடிப்பது தேவையான ஒன்றாகவே இருந்தது. (ஆனாலும் மழையில் நனைந்துகொண்டு நாங்கள் சாப்பிடப்போய்விட்டு வந்தோம். வைகுண்ட ஏகாதசி அன்று, ஒரு நல்ல அசைவ உணவகத்தில் சைவச் சாப்பாடு சோறும் காய்கறியுமாக உள்ளே சென்றது. அஹம் பிரம்மாஸ்மி என்பதால் இதெல்லாம் பாவமாகாது என்றே நினைக்கிறேன்.)
இன்று முழுவதும் பதிப்பாளர்களின் அரங்குகள் பெரும்பாலும் அமைக்கப்பட்டுவிடும். பெரிய அரங்குகளை எடுத்திருக்கும் பதிப்பகங்கள் இன்றைக்குள் புத்தகங்களை அடுக்கிவிட்டாலும், உள்ளரங்க வேலைப்பாடுகள் எல்லாம் முடிந்து ஆயத்தமாக நாளை ஆகிவிடும் என்று தோன்றுகிறது. கலைஞன் பதிப்பகம் தனது அரங்கை பொருட்காட்சியின் அரங்குபோல, இரண்டு மண்டபத் தூண்கள் எல்லாம் வைத்து வடிவமைத்துள்ளது. சீதை பதிப்பகம் 'ரூபாய் 1000க்கு வாங்கினால் இன்னொரு 1000 ரூபாய்க்கான புத்தகங்கள் இலவசம்' என்று அறிவித்திருக்கிறார்கள். பெரிய அளவில் பேனர் வைத்து அறிவித்திருக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! புகைப்படங்களை நாளைமுதல் உள்ளிடுகிறேன். தீம்தரிகிட அரங்கு வழக்கம்போல எளிமையாக இருக்கும் என நினைக்கிறேன். பானைகளின் நடுவே தரையில் ரிலாக்ஸ்டாக அமர்ந்திருந்த ஞாநியை நேற்று சந்தித்துப் பேசினேன். இந்த முறை எனது வலைப்பதிவில் என்னென்ன செய்யலாம் என்று பார்க்கிறேன். ஆனால் தினம் ஒரு பதிவுதான் முடியும், அதுவும் மிகவும் கஷ்டப்பட்டால்தான் முடியும். புத்தகக் கண்காட்சி பற்றி ஒரு நாளைக்கு நாலைந்து பதிவுகள் போடும் எழுத்தாளர்களைப் பாரா மல் இருந்துவிடவேண்டியதுதான்.
இன்று தொடக்க நாள். தொடங்கி வைக்க அப்துல் கலாம் வருவாரா மாட்டாரா என்று தெரியவில்லை. என்னை அழைத்தாலும் போகமுடியுமா எனத் தெரியவில்லை. நிறைய அரங்கவேலைகள் இருக்கின்றன. பார்க்கலாம். சென்ற முறை முதல்வர் கருணாநிதி வருவதாக இருந்தது. மழை காரணமாக அவர் வருகை ரத்து செய்யப்பட்டது. இன்னொரு நாள் வந்தார். இந்த முறையும் மழை, அப்துல் கலாமிற்கு உடல்நலக் குறைவு வேறு. என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம். சென்ற முறை கருணாநிதி வரும் நிமிடம் வரையில் வெளி அரங்க வேலைகள் நடந்துகொண்டிருந்தன. கருணாநிதி புத்தகக் கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பேசப்போகும் நிலையில், யாரேனும் ஒருவர் வந்து, 'ஐயா கொஞ்சம் எந்திரிச்சுக்கோங்க, ரெண்டு நட்டு டைட் பண்ணனும்' என்று சொல்வார்கள் என்றெல்லாம் கடுமையாக கற்பனை செய்து வைத்திருந்தேன். மழையின் புண்ணியத்தில் கருணாநிதி தப்பித்தார். இந்தமுறை அப்துல் கலாம் எப்படித் தப்பிக்கிறார் என்று பார்க்கவேண்டும். ஏனென்றால் வெளி அரங்கப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. மழையின் காரணமாக அந்த வேலை மெல்லவே நடக்கிறது.
சென்ற முறை பபாஸியின் சார்பாக ஏகப்பட்ட இடங்களில் விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த முறை அவை இனிதான் முளைக்கும் என்று நினைக்கிறேன். பொதுவாக பபாஸியின் சார்பில் இந்த முறை விளம்பரங்கள் குறைவு என்று தோன்றுகிறது. நாளை, நாளை மறுநாளைக்குள் இந்த விளம்பர நிலவரங்கள் தெரிந்துவிடும்.
இனி NHM புராணம். கிழக்கு பதிப்பகத்தின் அரங்குகள் பாதி ஆயத்தமான நிலையில், இன்றிரவுக்குள் கிட்டத்தட்ட ஆயத்தமாகிவிடும். நாளை முழுவதுமாக ஆயத்தமாகிவிடும். வரம் வெளியீடுகளில் இந்துமத ஆன்மிக புத்தகங்கள் கிடைக்கும்! நலம் வெளியீடு அரங்கில் உடல்நலம் தொடர்பான புத்தகங்களும், பவிஷ் க்ராஃபிக்ஸ் அரங்கில் கிழக்கு பதிப்பகத்தின் இலக்கியப் புத்தகங்களும் விற்பனைக்குக் கிடைக்கும். ப்ராடிஜியின் புத்தகங்கள் புக் ஷாப்பர்ஸ் அரங்கில் கிடைக்கும். எந்த எந்த அரங்கு எங்கே உள்ளது என்பது உள்ளிட்ட அரங்க வடிவமைப்பு, அரங்க எண்களைத் தனியே உள்ளிடுகிறேன்.
ப்ராடிஜியின் அரங்கில் மாணவர்களுக்கான வினாடி வினா - எழுத்துத் தேர்வு நடத்தலாம் என்று ஓர் எண்ணம் இருக்கிறது. இது சாத்தியமாகுமா இல்லையா என்பது நாளைக்குள் தெரிந்துவிடும். கிழக்கு அரங்கில் இணைய இணைப்பு கோரியிருக்கிறோம். எப்படியும் கண்காட்சி முடியும் நாளுக்குள் இணைய இணைப்பு கிடைப்பதற்கான சாத்தியங்கள் நிறையவே இருக்கின்றன. இருந்தால், அங்கிருந்தே பதிவு உள்ளிடமுடியுமா என்று பார்க்கிறேன். விடுமுறை நாள்களில் இது நிச்சயம் சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன். இருந்தாலும் விடப்போவதில்லை.
NHMன் புத்தகங்கள் பற்றிய உங்கள் கருத்தைச் சொல்ல ஓர் எண்ணை அறிவித்திருக்கிறோம். அந்த எண் 9941137700. இதை நீங்கள் தொடர்புகொண்டு, உங்கள் கருத்தைச் சொல்லலாம். கருத்து மட்டுமின்றி, உங்கள் புத்தகத் தேவை, நீங்கள் இருக்குமிடங்களில் எங்கே NHMன் புத்தகங்கள் கிடைக்கும் என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு வைக்கலாம். நாங்கள் உங்களைத் தொடர்புகொண்டு, உங்களுக்கான பதிலைத் தருவோம். இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? அலுவலகத்தை அழைத்தபோது, அலுவலக எண் பிஸியாகவே இருந்தது என்கிற பிரச்சினைகள் எழாது. என்னையோ அல்லது மார்க்கெட் நண்பர்களையோ அழைத்தபோது, அவர்கள் மொபைல் எண் கவரேஜில் இல்லை அல்லது சிவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது என்கிற பிரச்சினைகள் வராது. நீங்கள் உங்களுக்குத் தேவையான விஷயங்களைத் தெளிவாகக் குறிப்பிட ஒன்றிரண்டு நிமிடங்கள் மட்டுமே ஆகும். இதனால் அழைப்பவரின் செலவு குறையும். புத்தகம் பற்றி கருத்துச் சொல்ல நினைப்பவர்கள், ஆனால் அதைத் தெளிவாக எழுத முடியாதவர்கள், நேரமில்லாதவர்கள் இந்த எண்ணை அழைத்து அவர்கள் கருத்தைச் சொல்லலாம். புத்தகம் பற்றிய விமர்சனம் இருந்தால், அதை நேரில் சொல்லத் தயக்கப்படுபவர்கள் இந்த எண்ணை அழைத்து அவர்கள் கருத்தைச் சொல்லலாம். (எனது கவிதைகளே சிறந்தது என்றோ, அதைவிட எனது கதைகளே சிறந்தவை என்றோ, அதைவிட எனது கட்டுரைகளே சிறந்தவை என்றோ என் ரசிகர்கள் யாரும் சொல்லவேண்டாம் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் பாராவை யாரும் திட்டக்கூடாது என்றும் வேண்டி ‘விரும்பி’க் கேட்டுக்கொள்கிறேன்.) இப்படி சில எண்ணத்தோடு இந்த எண்ணை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.
கிழக்கு அரங்கில் மட்டும் ஒரு நாளைக்கு மூன்று நபர்களுக்குக் குலுக்கல் முறையில் புத்தகங்கள் பரிசு அளிக்கலாம் என்றிருக்கிறோம். முதல் பரிசு 400 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள், இரண்டாம் பரிசு 200 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள், மூன்றாம் பரிசு 100 மதிப்புள்ள புத்தகங்கள்.
மேலதிக விவரங்களை அடுத்த அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.
பின்குறிப்பு: 'வைகுண்ட ஏகாதசி' அன்று மழை வரும் வாய்ப்புண்டு என்று இந்து அறிவியல் (!) சொல்கிறதாம். அதனால் அந்த நாளில் புத்தகக் கண்காட்சி தொடங்கியது நம் தவறே அன்றி, தொடக்க நாளில் மழை வரவைத்தது கடவுளின் தவறில்லை என்று ஒரு வியாக்யானத்தை நேற்று நான் கேள்விப்பட்டேன். எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை என்றாலும் ஒரு பகிர்தலுக்காக மட்டும் இங்கே. :-)
6 comments:
மிகவும் ரசிக்கும் படியாக எழுதிகறீர்கள் பிரசன்னா . கிழக்கு பதிப்பகம் விற்பனையில் பல சாதனைகள் படைக்க என் வாழ்த்துக்கள். குறைந்தபட்சம் உங்கள் வெளியிடுகள் ஐந்தாவது வாங்கவருவேன்.
சென்னை புத்தகக் கண்காட்சியில் தமிழ் இலக்கணம் தொடர்பான நூல்களை வாங்கலாம் என்ற ஆவலில் உள்ளேன். குறிப்பாக தொல்காப்பியம் உரை, நன்னூல் உரை, படிக்க வேண்டிய இலக்கணத் திறனாய்வு நூல்கள். நல்ல எளிய உரைகளையும் பதிப்பாளர்களையும் எனக்குக் கருணை கூர்ந்து பரிந்துரைக்க முடியுமா? இல்லை யாரிடமாவது கேட்டு்ச் சொல்ல முடியுமா?
// (எனது கவிதைகளே சிறந்தது என்றோ, அதைவிட எனது கதைகளே சிறந்தவை என்றோ, அதைவிட எனது கட்டுரைகளே சிறந்தவை என்றோ என் ரசிகர்கள் யாரும் சொல்லவேண்டாம் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் பாராவை யாரும் திட்டக்கூடாது என்றும் வேண்டி ‘விரும்பி’க் கேட்டுக்கொள்கிறேன்.) //
Neenga enna than "vendi Virubmi" kaetu kondaalum engalal "Para yanam" paadamal irukka mudiyathu:)
//ஒரு நாளைக்கு நாலைந்து பதிவுகள் போடும் எழுத்தாளர்களைப் பாரா மல் இருந்துவிடவேண்டியதுதான்.
//
:))
//அதேபோல் பாராவை யாரும் திட்டக்கூடாது என்றும் வேண்டி ‘விரும்பி’க் கேட்டுக்கொள்கிறேன்//
ஆகா! ஓகோ!
அடுத்த கருணாநிதி சுடச்சுட தயார்!
தொலைபேசி எண் 9941137700-ஐ நேற்று இரவு தொடர்பு கொண்டு பேசினேன். முடிவில் எப்படி கட் செய்வது என்று தெரியவில்லை. எனது செய்தி பதிவானதா என்றும் தெரியவில்லை. அதை உறுதி செய்யும் குரலையும் இணைத்தால் நல்லது. இதைப்போல மின்னஞ்சல் முகவரி ஏதாவது உண்டா?
Post a Comment