சம்ஸ்கிருதம் படிக்கவேண்டும் என்கிற ஆசை எனக்கு எழுந்த நேரத்தில், கடந்த புத்தகக் கண்காட்சியில் விஜயபாரதம் ஸ்டாலில் 'பத்து நாளில் சம்ஸ்கிருதம் பேசும்' ஒரு கோர்ஸைப் பற்றிய பிட் நோட்டிஸ் பார்த்தேன். பத்து நாளில் சம்ஸ்கிருதம் எப்படி பேசமுடியும் என்கிற எண்ணம் வந்தாலும், சேர்ந்துவிட்டேன்.
தி.நகர் சாரதா வித்யாலயாவில் நடந்த வகுப்புக்கு முதல்நாள் சென்றபோது என்னுடன் வந்த நண்பனிடம் 'பத்து பேர் இருந்தா அதிகம்' என்று சொல்லிக்கொண்டு போனேன். அங்கு இனிய அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டு வகுப்புகள். ஒவ்வொரு வகுப்பிலும் நாற்பது மாணவர்களுக்கும் மேல். நடக்கமுடியாமல் தள்ளாடி நடந்துவந்த வயதான மனிதரிலிருந்து, தமிழே இன்னும் சரியாகப் பேசத் தெரியாத சிறுவர் வரை. 'படத சம்ஸ்கிருதம்' என்று பாடலோடு தொடங்கிய வகுப்பில், ஆசிரியர் எடுத்த எடுப்பில் 'பவத: நாம கிம்?' என்று தொடங்கினார். ஆசிரியர் என்றால், வயதாகி குடுமி போட்டுக்கொண்டு நாமத்தோடு வெற்றிலை குதப்பிக்கொண்டு வாயில் எச்சிலோடு பேசும் ஓர் உருவத்தை சட்டெனக் கலைத்தார் முரளி. கணினி மென்பொருள் வல்லுநரான முரளியின் வயது 24. குடுமி இல்லை. ஆனால் நீண்ட கூந்தலுடன், தமிழையோ ஆங்கிலத்தையோ உதவிக்கு அழைக்காமல், எடுத்த எடுப்பில் 'பவத: நாம கிம்?' என்றார்.
நாம் பேசிக்கொண்டிருக்கும் ஒரு மொழியின் உதவியின்றி, இன்னொரு புதிய மொழியை கற்றுவிடமுடியும் என்று நான் நம்பியிருக்கவில்லை. ஆனால் ஸ்ம்ஸ்க்ருத பாரதியின் அடிப்படையே, சம்ஸ்கிருதத்தை அம்மொழியின் வாயிலாகவே கற்றுத்தருவதே அன்றி, வேறொரு மொழியின் வாயிலாக அதைக் கற்றுத் தருவது அன்று என்பதை அந்த முதல் நாளிலேயே புரிந்துகொண்டேன். நாம் நம் தாய்மொழியை வேறு எந்த ஒரு மொழியின் உதவியின்றித்தான் படித்திருக்கிறோம் என்று யோசித்துப் பார்த்தேன். அப்படி ஒரு உள்ளார்ந்த மொழியாக சம்ஸ்கிருதத்தை நிறுவவே இப்படி ஒரு முயற்சி என்பது புரிந்தது. ஹிந்தி தெரியாமல் இருந்தால் நல்லது என்று ஏற்கெனவே முரளி சொல்லியிருந்தார். அதன் காரணமும் அங்கே விளங்கத் தொடங்கியது. பத்து நாள்களும் அங்கே பயன்படுத்தப்பட்ட ஆங்கில, தமிழ் வார்த்தைகள் பத்தைத் தாண்டியிருந்தால் அதிசயம். பத்தாவது நாளில் எல்லோரும் சம்ஸ்கிருதத்தில் பேச முயற்சித்தார்கள்.
சம்ஸ்கிருதத்தில் பேசுவது என்றால், சம்ஸ்கிருத விற்பன்னராகப் பேசுவது அல்ல. இதன் அடிப்படையையும் மிகத் தெளிவாக திட்டமிட்டிருந்தது சம்ஸ்கிருத பாரதி. ஒரே விகுதியோடு முடியும் வார்த்தைகள் (கஜ:, வ்ருக்ஷ:, புத்ர:, ராம: என்பது போல) என்று எடுத்துக்கொண்டு, அவற்றோடு வேற்றுமை உருபுகள் சேரும்போது அவை எப்படி மாறுகின்றன என்பதை அடிப்படையாகக்கொண்டு (ராமன் + இன் = ராமனின் ராம: + அஸ்ய = ராமஸ்ய என்பதைப் போல) எளிமையாக நடத்தினார்கள். Present tense, Past tense, Future tense மட்டுமே சொல்லித்தந்தார்கள். இதை வைத்துக்கொண்டு கதை சொன்னார்கள். இதை அடிப்படையாக வைத்து எளிமையான வாக்கியங்கள் சொல்லச் சொன்னார்கள். இதை வைத்துக்கொண்டு எளிமையான பேச்சை நிகழ்த்தினார்கள். இதன் வழியே, சம்ஸ்கிருதம் கற்பது கடினமானதல்ல என்கிற எண்ணத்தை மெல்ல வளர்த்தெடுத்தார்கள்.
சிறுவர்களின் வேகம் பிரமிக்கத்தக்கதாய் இருந்தது. பதினைந்து வயது சிறுவனின் நினைவாற்றலை எட்டிப்பிடிப்பது எனக்கு சற்று சிரமமாகத்தான் இருந்தது. காரணம், நான் எந்த ஒரு சம்ஸ்கிருத வார்த்தையையும் அதோடு தொடர்புடைய பொருளின் வழியாகவே அடைய முயன்றேன். ஆனால் சிறுவர்களோ சம்ஸ்கிருத வார்த்தையை அவ்வார்த்தை மட்டுமானதாகவே கண்டடைந்தார்கள்.
சம்ஸ்கிருதம் படிப்பதைத் தவிர்த்து இவ்வகுப்புகள் பல நல்ல நினைவுளைக் கொண்டுவந்து சேர்த்தன. கிட்டத்தட்ட பதினோரு வருடங்களுக்குப் பிறகு ஒரு மாணவனாக வகுப்பில் அமர்வது என்பதே பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. நியூ ஹொரைசன் மீடியாவின் ப்ராடிஜி பதிப்பகத்தின் சார்பாக, பள்ளிகளில் சூடாகும் பூமி (Global warming) பற்றிய வினாடி வினா எழுத்துத் தேர்வு நடத்தியபோது பல பள்ளிகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. வகுப்புகளில் மாணவர்கள் அமர்ந்திருப்பதையும், எவ்வித தன்முனைப்பும் இன்றி, ஆசிரியரே எல்லாமும் என்கிற எண்ணத்தோடு அவர்களோடு பேசியதையும் பெரும் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் ஒரு பகுதி இந்த சம்ஸ்கிருத வகுப்பில் அடித்துச்செல்லப்பட்டதாக உணர்ந்தேன்.
இவை போக, சக 'மாணவ நண்பர்கள்' தந்த அனுபவங்கள். என் பக்கத்து நண்பருக்கு வயது 60தான் இருக்கும். 'வாக்கிங்க்குக்கு வாக்கிங்கும் ஆச்சு, சம்ஸ்கிருதமும் ஆச்சு பாருங்க' என்றார். இன்னொருவர், 'இப்படி தமிழும் சொல்லாம இங்லீஷும் சொல்லாம சொல்லித் தந்தா என்ன புரியறதுன்றீங்க? நான் சொல்லிட்டேன். நேரா சொல்லிட்டேன். கேப்பாங்களான்னு தெரியலை' என்றார்.
பத்தாம் நாள் நிறைவு நாளில் இரண்டு சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். அவர்கள் பேசியதில் எனக்கு பல கருத்துகள் உடன்பாடில்லாதவை. ஆனால் இதுபோன்ற வகுப்புகளில் இவற்றைத் தவிர்க்கமுடியாது என்று நினைத்துக்கொண்டேன். பல மாணவர்கள் சம்ஸ்கிருதத்தில் நகைச்சுவை கதைகள் சொன்னார்கள். அனுபவக் கதைகள் சொன்னார்கள். சிறிய நாடகங்கள் நடத்தினார்கள். எல்லாமே சிறந்தவை என்று சொல்லமுடியாது. ஆனால் ஒரு எல்கேஜி, யூகேஜி மாணவர்களாக அவர்களைக் கற்பனை செய்துகொண்டால், அவர்களின் நிகழ்ச்சிகள் அற்புதமானவை என்றே சொல்லவேண்டும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், அஹம் ஏகம் ஹாஸ்ய கதாம் உக்தவான்! (நான் ஒரு நகைச்சுவைக் கதை சொன்னேன்!)
சம்ஸ்கிருதத்தின் பெருமைகளையும், அது எவ்வாறு இந்தியாவோடு தொடர்புகொண்டுள்ளது என்பதையும் ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு நாளும் விளக்கிச் சொன்னார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு குட்டிக் கதை சம்ஸ்கிருதத்தில் சொன்னார்கள். இந்தக் கதைகளின் போது அங்கிருந்த அனைத்து மாணவர்களும் அடைந்த குதூகுலம் இப்போதும் நினைவிலிருக்கிறது. இதன் வழியே கொஞ்சம் யோசித்தால் எப்படி ரஜினி, ஜாக்கிசான் போன்றவர்கள் குழந்தைகளைப் போலவே பெரியவர்களையும் கவர்கிறார்கள் என்பதைக் கண்டடையலாம் என நினைத்துக்கொண்டேன்.
ஒரு பதினைந்து வயது மாணவன் இதுபோன்ற வகுப்பினால், இந்தியப் பற்றையும், புராணக் கதைகளின் பரீட்சியத்தையும் பெறமுடியும். பின்னாளில் இவற்றை அவன் கைவிட நேர்ந்தாலும், இதைத் தெரிந்துகொண்டு புறக்கணிப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும். புராணக் கதைகள் சொல்லப்பட்டபோது, பல கதைகளை என்றோ கேட்ட நினைப்பிலேயே கேட்டுக்கொண்டிருந்தேன். இனி இக்கதைகள் எல்லாம் எப்படி நம் அடுத்த தலைமுறைக்குச் செல்லும் என்கிற சோகம் எழுந்தது. கதை சொல்லும் நேரத்தை நம் தொலைக்காட்சிகள் எந்த அளவு திருடிக்கொண்டுவிட்டன என்பதும் புரிந்தது. நான் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும், என் கணிசமான நேரத்தை என் மகனோடு செலவழிக்கவே விரும்புவேன். அதில் கதை சொல்லலும் அடங்கும். கதை என்றால் நானாக உருவாக்கிய கதைகள். புலியும் ஆடும் மாடும் மயிலும் குரங்கும் டைனசோரும் உலவும் கதைகள். இந்த சம்ஸ்கிருத வகுப்புகள் விளைவாக, இனி என் மகனுக்கு புராணக் கதைகளையும், மரியாதை ராமன், தெனாலி ராமன் கதைகளையும் கண்ணன் கதைகளையும் சொல்லலாம் என்றிருக்கிறேன். இவ்வகுப்பில் சொல்லப்பட்ட இரண்டு கண்ணன் கதைகளை என் மகனுக்குச் சொன்னபோது, அவன் அடைந்த குதூகலம் வார்த்தையில் சொல்லமுடியாதது. முதல்வேலையாக எனி இந்தியனில் சில புத்தகங்களை ஆர்டர் செய்தேன்.
சம்ஸ்கிருதம் சொல்லித்தந்த ஆசிரியர் ஒருவர் இப்படிச் சொன்னார். "உங்கள் தாய் மொழி என்ன? சம்ஸ்கிருதமா? இல்லை. தமிழ். உங்கள் தாய்மொழி? மலையாளம். உங்களது? துளு. ஒரு சம்ஸ்கிருதம் சொல்லித்தரும் ஆசிரியர் எப்படி சம்ஸ்கிருதத்தை தாய்மொழியல்ல என்று சொல்லமுடியும் என்று யோசிக்கிறீர்களா? இப்போது சொல்கிறேன். சம்ஸ்கிருதமும் உங்கள் தாய்மொழிதான். உங்கள் தாய் உங்களுக்குச் சொல்லித் தரும் தாய்மொழி தமிழாகவோ, மலையாளமாகவோ இருக்கட்டும். உங்கள் இன்னொரு தாய் பாரதத் தாய். அவளின் மொழி சம்ஸ்கிருதம்." எந்த ஒரு மொழியையும் புறக்கணிக்காத இந்த அணுகுமுறையே நிச்சயத் தேவை. என் தாய்மொழி தமிழ். என் தாய்நாட்டின் மொழி சம்ஸ்கிருதம் என்று இருப்பதில்தான் என்ன தவறு இருந்துவிடமுடியும்?
ஸம்ஸ்க்ருத பாரதியின் தொலைபேசி எண்: 044-28272632. மின்னஞ்சல் முகவரி: samskritabharatichn@yahoo.com. இதைத் தொடர்புகொள்வதன் மூலம் அடுத்த சம்ஸ்கிருத வகுப்புகளைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளமுடியும்.
நன்றி: தமிழ் ஹிந்து வலைத்தளம் (தமிழ் ஹிந்துவில் வந்த இந்தக் கட்டுரையை விஜயபாரதம் தனது இதழில் பிரசுரித்திருந்தது.)
21 comments:
//பத்தாம் நாள் நிறைவு நாளில் இரண்டு சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். அவர்கள் பேசியதில் எனக்கு பல கருத்துகள் உடன்பாடில்லாதவை. ஆனால் இதுபோன்ற வகுப்புகளில் இவற்றைத் தவிர்க்கமுடியாது என்று நினைத்துக்கொண்டேன்//
ஏன்..? ;-)
-மூக்கு
//உங்கள் இன்னொரு தாய் பாரதத் தாய். அவளின் மொழி சம்ஸ்கிருதம்." எந்த ஒரு மொழியையும் புறக்கணிக்காத இந்த அணுகுமுறையே நிச்சயத் தேவை. என் தாய்மொழி தமிழ். என் தாய்நாட்டின் மொழி சம்ஸ்கிருதம் என்று இருப்பதில்தான் என்ன தவறு இருந்துவிடமுடியும்?//
என்ன கொடுமை இது?
தாய் பேசும் மொழி தாய் மொழி. என் தாய் தமிழ் பேசுகிறார்கள் என்பது நிறுவக் கூடிய உண்மை. பாரதத் தாய் சமசுகிருதம் தான் பேசுகிறாள் என்று எப்படி நிறுவ விரும்புகிறீர்கள்?
சமசுகிருதம் உள்ளிட்ட எந்த மொழியையும் கற்றுக்கொள்வது தனிநபர் விருப்பம். ஆனால், அதற்கு ஏன் "பாரதத் தாயின் மொழி" என்ற விளம்பர வாசகங்கள் எல்லாம்?
//உங்கள் இன்னொரு தாய் பாரதத் தாய். அவளின் மொழி சம்ஸ்கிருதம்.//
:-))
இன்னொரு மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் சமஸ்கிருதத்தை அணுகுவது சரிதான். ஆனால் இதெல்லாம் காமெடியா இருக்கு.
அதெல்லாம் இருக்கட்டும். 'அஹம் பிரம்மாஸ்மி'ன்னா என்ன சரியான அர்த்தம்,அத மொதல்ல கத்துக்கிட்டு வாங்க. இங்க மண்டைப்பிடி சண்டையே நடக்குது. :-)
ஸம்ஸ்க்ருதம் எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால்... அங்கே சின்னச்சின்ன பஞ்சதந்திரக்கதைகள் போன்ற நூல்களிலிருந்து தேர்ந்தெடுத்த சிறுகதைகள் அடங்கிய நூல்கள் விற்கும். படித்துப்பார்த்தால் ஆச்சர்யப்பட்டுப்போய்விடுவீர்கள், இவ்வளவு சுலபமாக்ப் புரிகிறதே என்று. ஒலிப்பேழைகளும் விற்கும். அதுவும் நன்கு புரியும்.
இதே முறையில் ஹிந்தி கற்க நினைத்து கையைச்சுட்டுக்கொண்டதுதான் மிச்சம்.
You have made me feel nostalgic...
பொதுவாகவே சமஸ்கிருதத்தை வாய் மொழியாத்தான் சொல்லி கொடுக்க ஆரம்பிப்பாங்க - எழுத்து இரண்டாம் படி தான். எனக்கு என்னோட சின்ன வயசுல நானும் என் அக்காவும் சமஸ்கிருதம் கத்துக்க போனது தான் ஞாபகம் வந்தது. அஜஹா ஆடு கஜஹா யானை ராமஹா ராமன் :-) சமஸ்கிருதம் சொல்லித் தந்த அந்த அக்காவுக்கு கல்யாணம் ஆகிப் போனதால (அந்த அக்கா இப்போ எங்கே ?) என்னை ஹிந்தி கிளாசுக்கு அனுப்பிட்டாங்க.
வெளில சொன்னா தமிழ்நாட்டுல அடிப்பாங்க - என்னைப் பொறுத்த வரை சமஸ்கிருதம் தமிழை விட ரொம்ப இனிமையா இருக்கும் பேசவும் கேட்கவும் - syntax படியும் ரொம்ப concise language
சூடாகும் பூமி (Global warming) - இதை "புவி வெப்பமயமாதல்" அப்படின்னு மொழி பெயர்ப்பு செய்றாங்க. ஆனா சொல்றதுக்கு அவ்வளோ நல்லா இருக்கற மாதிரி எனக்கு படலை. We need something better. உங்களோட சூடாகும் பூமி ஆட்டத்துல சேத்தி கிடையாது ;-) சரி global warming-அ சமஸ்கிருதத்துல எப்படி சொல்லனும் ?
அநானி, இந்திய கலாசாரத்தை மேம்படுத்துவாக நினைத்துக்கொண்டு மற்ற கலாசாரங்களைக் குறைத்துப் பேசினார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை.
ரவிஷங்கர், உங்கள் கருத்து உங்களவில் உண்மையே. தமிழ்த்தாயை வணங்கும் மன அமைப்பு இருக்கும்போது, பாரதத்தாயை வணங்கும் மன அமைப்பும், அந்த தாயின் மொழி சமிஸ்கிருதம் என்னும் மன அமைப்பும் இருக்கலாம். அதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். தமிழ், சமிஸ்கிருதம் என எல்லா மொழி-இன வேறுபாட்டைக் கடந்தவர்களுக்கு நான் சொல்வது நிச்சயம் அபத்தமாகவே இருக்கும்.
சுரேஷ், அஹம் பிரம்மாஸ்மி என்றால் நான் கடவுள் என்பது சரியான மொழிபெயர்ப்பில்லை. பிரம்மம் என்பது வெறும் கடவுள் என்பதோடு மட்டும் சேர்த்தி இல்லை. அஹம் பிரம்மாஸ்மியை அதைப்போல ஒரே வரியில் நேரடியாக மொழிபெயர்க்க முடியாது. எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான். :-)
கிருபா, நிச்சயம் ஒலிப்பேழைகளை வாங்குவேன். என் பையனுக்கு தினம் ஒரு கதை சொல்வதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டு கதை சொல்லி வருகிறேன். உங்கள் மகளுக்கு கதையோடு என்னுடைய கவிதையையும் சொல்லித்தரவும்!
கிருஷ்ணன், சமிஸ்கிருதம் இனிதா தமிழ் இனிதா என்னும் சொல்லும் அளவிற்கு எனக்கு மொழி அறிவு இல்லை. நீங்கள் கேட்கும் கேள்வியை வைத்துப் பார்த்தால், சமிஸ்கிருதத்தில் உங்களுக்கும் புலமை இருப்பதாகத் தோன்றவில்லை. அப்படியென்றால், சமிஸ்கிருதம் இனிமையானது என்று நீங்கள் சொல்வது ஒரு மன ரீதியான முடிவாகவே இருக்கமுடியும். அப்படி நிறையத் தோன்றலாம். நான் கேட்டவரை மலையாளிகள் பேசும் மலையாளம், கன்னடர்கள் பேசும் கன்னடம் எல்லாமே நல்ல தமிழைப் போல இனிமையானதுதான். அதை மட்டுமே என்னால் சொல்ல முடிகிறது. ஒப்பிடமுடியவில்லை.
""கிருபா, நிச்சயம் ஒலிப்பேழைகளை வாங்குவேன். என் பையனுக்கு தினம் ஒரு கதை சொல்வதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டு கதை சொல்லி வருகிறேன். உங்கள் மகளுக்கு கதையோடு என்னுடைய கவிதையையும் சொல்லித்தரவும்"
ஜெயஸ்ரீக்கு நன்றியுடன் அவர் வலைப்பதிவில் இருந்து:
(( நிஜமாவே அழுதுடுவேன் போலிருக்கு. இப்படி எல்லாம் நான் கிறுக்குபிடிச்சு கவிதை எழுதுவேன்னு நீங்க நினைச்சதுக்கே சுடணும்.
.....
அதைவிட முக்கியமா ஹ.பி கவிதையொட(உவ்வேக்)வாலிவரிகளை ஒப்புமைப்படுத்திப் பார்த்த உங்க செயலுக்காக நிபந்தனையில்லாத மன்னிப்புக் கேளுங்க.போகட்டும், இலக்கிய ஆளுமையை ‘ஹ.பி’ன்னு குறிப்பிடறீங்களே, நீங்களும் அந்த க்ரூப்பா? அடிக்கற கும்மியை அங்கனயே அடிங்கண்ணே. நான் பாவம்!
---
கவிதை படிக்கப் போகும் கிருபாவின்
மகளுக்கு வாழ்த்துக்கள்
நடராஜன்
ப்ரசன்னா, என் மகளுக்கு இந்த வயதில் கட்டுரைகளெல்லாம் புரியுமா என்று தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் வயதானதும் உங்களது கட்டுரைகளை.... வந்து... கவிதைகளை படித்துக்காட்டுகிறேன்.
இந்தத்தருணத்தில், உங்கள் மகன் என்னை புத்திசாலி என்று சான்றளித்ததையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். ;-)
M,
என்னமோ ஒரு தாளிக்கும் ஓசை கேட்கிறது, ஆனால் என்ன சொல்றீங்கன்னு புரியலை. :-(
//இந்தத்தருணத்தில், உங்கள் மகன் என்னை புத்திசாலி என்று சான்றளித்ததையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். ;-)//
என் மகன் எதையாவது இப்படித்தான் உளறிக்கொண்டிருப்பான். சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
கிருபா, உங்கள் மகள் படிக்கப் போகும் ஹபி கவிதைகளைப்பற்றிய தாளிப்புத்தான் அந்த ஓசை.
ஹ்பி: உளறுவதை எடுத்துக் கொள்வதா/வேண்டாமா? புரியும்படி எழுதக் கற்றுக் கொடுக்கவும்
நடராஜன்
//தமிழ்த்தாயை வணங்கும் மன அமைப்பு இருக்கும்போது, பாரதத்தாயை வணங்கும் மன அமைப்பும், அந்த தாயின் மொழி சமிஸ்கிருதம் என்னும் மன அமைப்பும் இருக்கலாம். //
பாரதத்தாயை நீங்கள் வணங்குவது குறித்து எனக்கு மறுப்பேதும் இல்லை. பாரதத் தாயின் மொழி சமசுகிருதம் என்று எண்ணுவது உங்கள் மன அமைப்பாகவும், உரிமையாகவும் இருக்கலாம். ஆனால், அதற்கு அறிவடிப்படை இல்லை. மேலும், மற்ற மொழி பேசும் இந்தியர்களை இது இரண்டாம் தரமாகவும் அந்நியமாகவும் காட்டுகிறது என்பதே என் முறைப்பாடு.
தமிழ்த் தாயின் மொழி தமிழ், கன்னடத் தாயின் மொழி கன்னடம், தெலுங்குத் தாயின் மொழி தமிழ் என்பது மறுக்க முடியாத உண்மை. ஏனெனில் தாயாக உருவகப்படுத்துவதே மொழியை முன்வைத்துத் தான்.
இங்கு பாரதத்தைத் தாயாக உருவகப்படுத்துவது அதன் பண்பாடு, நிலப்பரப்பு என பல கூறுகளை முன்வைத்து. (தமிழ்த் தாயை தமிழ் என்பது கொண்டு உருவகப்படுத்தும் ஒற்றைப் பரிமாணம் போல் அல்ல). இந்தியாவின் பண்பாடோ சமயம், மொழி, வாழ்க்கை முறை என்று பலவாறாக வேறுபட்டிருக்கிறது. நிலப்பரப்பு பற்றி சொல்லத் தேவை இல்லை. ஒரு மொழியை மட்டும் பாரதத் தாயின் மொழியாக அறிவிக்க பின்வருவனவற்றுள் ஏதாவது ஒன்றாவது பொருந்துவதற்கான "அறிவியல் அடிப்படை ஆதாரம்" வேண்டும்:
1. இந்திய மொழிகள் அனைத்துக்கும் சமசுகிருதமே மூல மொழி
2. சமசுகிருதமே இந்திய மொழிகளில் அறுதிப் பெரும்பான்மையினரால் பேசப்படுகிறது.
3. சமசுகிருதமே மற்ற இந்திய மொழிகளைக் காட்டிலும் "உயர்ந்தது".
ஆம், ரவி கேட்பதையே நானும் கேட்கிறேன். சமசுகிருதம் ஒரு நல்ல மொழி, அதில் பல இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன, கட்டுக்கோப்பான இலக்கணம் கொண்டது, என் சமய நம்பிக்கைகளின்படி அது கடவுளர்கள் பேசியது, இனிமையான மொழி, அழியும் தருவாயில் உள்ள இந்திய மொழி என்பதால் காக்க வேண்டும் போன்ற எந்தக் காரணத்தினாலும் அதன் மீது பற்று வையுங்கள். ஆனால் பாரதத்தாயின் தாய்மொழி என்பது இந்திய நிலப்பரப்பைப் பற்றிய மிகத்தவறான புரிதலைத் தருவது. முண்டா மொழிகளைப் பேசுபவர்கள் இந்தியர்கள் இல்லையா? நாடு என்ற தனி இறையாண்மை பெற்ற குடியரசு வேறு, மொழி இன அடிப்படையில் இருக்கும் 'நாடு' வேறு. ஆங்கிலத்தில் இந்தியாவை "multinational country" என்பார்கள். இந்தியா கட்டாயமாக முதலாவது வகையைச் சார்ந்தது. இந்நாட்டின் அடிப்படை புவியியல், பண்பாட்டு ஒற்றுமை, பிரித்தானிய எதிர்ப்பில் ஒற்றுமை போன்றனவே அன்றி மொழியோ, இனமோ, சமயமோ அல்ல.
பதில்கள் !!!?!?!?! ஒருமைப்பாடு என்பன்பேரில் தனித்தன்மையை மறைக்க/மறக்க விரும்புவது எவ்வகை யில் சரி ?!
யாத்ரீகன், எனது பதிலைச் சொல்லிவிட்டேன். தமிழ்த்தாய் சரி என்றால், பாரதத் தாயும் சரி என்று நான் நினைக்கிறேன். மறுக்க, மாறுபட உங்களுக்கு உரிமை இருக்கிறது. இந்தியத் தாய் இருப்பாளானால், அது தமிழ்த்தாயை மறுக்கும், மறைக்கும் செயல் என்று நீஙக்ள் நினைத்தால் அது உங்கள் எண்ணம் என்று நினைத்துக்கொள்கிறேன்.
//தமிழ்த்தாய் சரி என்றால், பாரதத் தாயும் சரி என்று நான் நினைக்கிறேன்.//
பாரதத் தாய் என்று ஒருத்தியை உருவகப்படுத்திக் கொள்வதை யாரும் மறுக்கவில்லை.
ஆனால், பல்வேறு அடையாளங்கள் உடைய இந்திய நாட்டில், அந்த பாரதத் தாய்க்கு என்ன அடையாளம் தருகிறீர்கள் என்பது தான் பிரச்சினை.
பாரதத் தாய்க்கு பர்தா போட்டு பாரதத்தாயின் மொழி உருது என்று எவராவது எழுதினால் அதை அவரது மன அமைப்பு என்று ஏற்றுக் கொள்வீர்களா? அப்படி ஏற்றுக் கொண்டால், ஒன்று எழுதுபவன் கிறுக்கன். அல்லது, ஏற்றுக் கொள்பவன் கிறுக்கன். அதே போலத் தான் பாரதத் தாயின் மொழி சமசுகிருதம் என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. சமசுகிருதம் மட்டுமல்ல, பாரதத் தாய் என்று ஒருத்தி இருந்தால், அவள் மீது குறிப்பிட்ட எந்த சமய, இன, மொழி அடையாளங்களையும் ஏற்றுவதை ஒப்புக் கொள்ள முடியாது.
உங்கள் மன அமைப்பாகவே இருந்தாலும் அதற்கு அறிவடைப்படை இல்லாவிட்டால் நகைப்புக்குரியதாகிவிடும். அதே மன அமைப்பை பலரிடம் திட்டமிட்டுப் பரப்புவது விபரீதமாகி விடும்.
"சமசுகிருதம் பாரதத் தாயின் மொழியாதலால் நீங்கள் எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று நீங்கள் அறிவுரை சொல்வது அத்தகைய பரப்பல் வேலையாகத் தான் படுகிறது.
எனக்குத் தமிழ் பிடிக்கும். அது இனிமையானது, இலகுவானது என்று சொல்லிப் பரப்பலாம். ஆனால், தமிழ் தான் உலகின் முதல் மொழி என்றோ இந்தியாவின் மொழி என்றோ நான் பரப்பினால், அதற்கு நான் ஆதாரம் தரக் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஊட்டியில் உள்ள பழங்குடி இனத்தவர் வந்து தங்கள் மொழி தான் பாரதத் தாயின் மொழி என்றால் நாம் சிரித்து விட்டுப் போவோம்.
இதையே தமிழ் தான் பாரதத் தாயின் மொழி என்றால் மொழி வெறியன் என்பீர்கள். குறைந்தபட்சம், தமிழ் எப்படி பாரதத் தாயின் மொழியாகும் என்று கேள்வியாவது வரும்.
ஆனால், நாட்டின் அதிகாரவர்க்கத்தின் மேல் மட்டத்தில் இருந்து சமசுகிருதம் இந்தியத் தாயின் மொழி என்று கூறும் போது கேள்வி கேட்காமல் ஏற்கிறோம். நிறுவ முடியாத திட்டமிட்ட பொய் உண்மை போல் பரவி பொதுமக்களையும் மயக்குகிறது.
இதனாலேயே உங்கள் மனவுருவம் உங்களது உரிமையாக இருந்தாலும் பொதுப் பிரச்சினையாகிறது.
அடிக்கடி ஏதாவது எழுதுங்க சார். எப்போ உங்க வலைத்தளத்திற்கு வந்தாலும் பழைய செய்திகளே உள்ளன!
இன்று பகல் ஒரு பெரிய மறுமொழி இட்டிருந்தேனே? கிடைக்காவிட்டால் சொல்லுங்கள். திரும்ப இடுகிறேன். நன்றி.
//இந்தியத் தாய் இருப்பாளானால், அது தமிழ்த்தாயை மறுக்கும், மறைக்கும் செயல் என்று நீஙக்ள் நினைத்தால் அது உங்கள் எண்ணம் என்று நினைத்துக்கொள்கிறேன்.//
நீங்கள் யாத்ரீகனின் பதிலைப் புரிந்து கொள்ளவில்லை. அல்லது, வேண்டுமென்றே திசை திருப்புகிறீர்கள். தமிழ்த் தாய், தெலுங்குத் தாய் எல்லா தாய்களும் இந்தியத் தாயுடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியுடன் இருக்கலாம். பிரச்சினை இல்லை.
இந்தியத் தாயின் மொழி அடையாளம் என்ன என்பது தான் பிரச்சினை.
ரவிஷங்கர், திசை திருப்ப ஒன்றும் இல்லை. நான் இந்திய நாட்டின் மொழி என்று சமிஸ்கிருதத்தை சொல்வதன்மூலம், தமிழை மட்டம் தட்டுகிறேன் என்று நினைக்கிறீர்கள் என்பது புரிகிறது. நம் தாய்மொழிக்கு நிகரான ஒரு மொழி என்கிற அர்த்தத்தில் சொன்னேன். ஆனால் மறுமொழிகளைப் பார்த்தால், தமிழை கீழே தள்ளி சமிஸ்கிருதத்தை மேலே ஏற்றும் ஒரு முயற்சியை நான் செய்வதாகப் பொருள்கொள்வதாகத் தோன்றுகிறது. நிச்சயம் அப்படி அல்ல.
//தமிழை மட்டம் தட்டுகிறேன் என்று நினைக்கிறீர்கள் என்பது புரிகிறது//
இல்லை, தமிழ் குறித்து நீங்கள் அப்படி ஏதும் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடவில்லை. நாம் தமிழர் என்பதே இங்கு ஒரு பொருட்டல்ல. ஒரு வங்காளியாக இருந்தாலும் குசராத்தியாக இருந்தாலும், இங்கு எழும் கேள்வி ஒன்றே ஒன்று தான்:
"சமசுகிருதம் இந்தியத் தாயின் தாய் மொழி என்பதற்கான அறிவடிப்படை என்ன?"
தயவு செய்து இந்த நேரடிக் கேள்விக்குப் பதில் தரவும்.
****
நாம் பேசிக்கொண்டிருக்கும் ஒரு மொழியின் உதவியின்றி, இன்னொரு புதிய மொழியை கற்றுவிடமுடியும் என்று நான் நம்பியிருக்கவில்லை. ஆனால் ஸ்ம்ஸ்க்ருத பாரதியின் அடிப்படையே, சம்ஸ்கிருதத்தை அம்மொழியின் வாயிலாகவே கற்றுத்தருவதே அன்றி, வேறொரு மொழியின் வாயிலாக அதைக் கற்றுத் தருவது அன்று என்பதை அந்த முதல் நாளிலேயே புரிந்துகொண்டேன். நாம் நம் தாய்மொழியை வேறு எந்த ஒரு மொழியின் உதவியின்றித்தான் படித்திருக்கிறோம் என்று யோசித்துப் பார்த்தேன்.
****
Nowadays, all the language courses are framed this way. I don't think it is anything to do with any scientific reasearch on how you need to learn a language or even the reason you have attributed to. It is just that the learners speak different languages and they do not have a common language ! I am living in europe for the past 4 years. I have attended german course and then when i moved to netherlands i did a dutch course too. And i personally feel that if they have used english in between, i might have atleast continued learning those languages !!எவ்வளவு நேரம் தான் மூஞ்சிய பாத்துக்கிட்டு இருக்கறது ! But the students are of different nationalities and they don't speak english ! And so, that is the only way.
But somehow i can't visualize sanskrit as a spoken language and personally, i don't see the need either.
Post a Comment