Sunday, May 31, 2009

கவிதை

வெக்கை மிகுந்த
வியர்வை இரவொன்றில்தான் கண்டேன்
வீட்டுக்குள் வளர்ந்து கிடக்கும்
தனித்த மரமொன்றை.
கிளைகள் வீட்டு உத்தரத்தை உரசியிருக்க
வேர்கள் வீடெங்கும் பரவிக்கிடந்தன
கைக்கெட்டிய அரிவாளும் கோடாலியும்
உலோக ஒலியெழுப்பி
மரத்தின் கீழ் மண்டியிட்டன
தனியறைக்குள் உறங்கிக் கிடக்கும்
மெல்லிய சுவாசத்தை அடக்கி
அதிர்ந்தன மரத்தின் இலைகள்.
மரத்தின் கிளைகள் மேலும் நீண்டபோது
வெளியிருந்து ஒரு குருவி
சிறகடித்துப் பறந்து
உள்வந்து அமர்ந்தது.
மரத்தை சூழத் தொடங்கியது
குருவியின் இசை.

8 comments:

ny said...

உங்களின் அதே அக்மார்க்!!

முந்தைய கவிதைக்கும் இதற்கும்
எண்பது நாட்கள் இடைவெளி...
கொஞ்சம் குறையுங்கள்!! :))

Venkatesh Kumaravel said...

நுட்பம். தலைப்பு ஏதாவது தந்திருக்கலாமே!

மாயாண்டி said...

நன்றாய் இருக்கிறது என எழுத முடியாது,புரியாமல் இருக்கும்போது...என்ன கணக்குயா இந்த கவிதைக்கெல்லாம்???

anujanya said...

நல்லா இருக்கு ஹரன்.

அனுஜன்யா

சாணக்கியன் said...

மொதல்ல புரியாத மாதிரி இருந்தது. இரண்டாவது தடவை படிச்ச உடனே புரியற ‘மாதிரி’ இருக்குது. வெக்கை இரவில் வீட்டுக்குள் ஒரு மரம் இருந்தால் எப்படி குளுமையாக இருக்கும் என்ற ஏக்கம்தானா நீங்கள் சொல்லியிருப்பது?

பூபதி said...

நீங்கள் எழுத்தாளரா?

கருப்புசாமிகுத்தகைதாரர் said...

தலைவா, டைட்டில் கவிதைன்னு போட்டிருக்கிங்க? எங்க அது?

ஹரன்பிரசன்னா said...

கருத்துச் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

கவிதைக்குத் தலைப்பு அவசியமா என்று தெரியவில்லை. தலைப்பு வைப்பது பெரிய ரோதனையாகிவிடுகிறது சில சமயங்களில். அதனால் தவிர்த்தேன்.

சாணக்கியன், கவிதைக்கு அர்த்தமெல்லாம் கேட்கக்கூடாது. :-)

பூபதி, உங்கள் கேள்வி என்னை நிலைகுலையச் செய்துவிட்டது என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

கருப்பசாமி குத்தகைதாரர், யார் நீங்கள் எனத் தெரியவில்லை. ஆனால் உங்கள் ஆட்டம் கொஞ்சம் ஜாஸ்தியாக இருக்கிறது என்பதனை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.