Tuesday, July 21, 2009

சில கவிதைகள்

மேகத்துடன் ஒரு பயணம்

களைப்புடன் சிக்னலில் காத்திருந்தபோதுதான்
கவனித்தேன்
என் கண்ணெங்கும் சூழ
உலகமே ஒருநிமிடம் பின்னகர
தலைக்குப் பின்னே
கழுத்தோடு வழிந்து
பின்னமர்ந்துகொண்டது அம்மேகம்
பக்கத்து வண்டிக்காரன்கள்
எதுவும் நடக்காதது போல
ஆக்ஸிலேட்டரை முறுக்கிக்கொண்டிருந்தான்கள்.
மெல்லக் கை முளைத்து
கால் முளைத்து
தலை முளைத்தபோது
என்னை இறுகப் பிடித்துக்கொண்டு
பொருளில்லாமல் சிரிக்கத் தொடங்கியது
வீடு வந்ததும் கீழே குதித்து
‘இன்னொரு ரவுண்டு போலாமா’ எனக் கேட்டது.
மெல்லிய காற்றில்
காற்றெனக் கலைந்து போனது
வானத்தை நோக்கி.
மேகத்தின் இடத்தில் பூத்திருந்தது
இரு துளி நீர்.

-oOo-

அலையென வரும் நிழல்

நடுத்தெருவில் நின்றிருந்தபோது
என்னைக் கடந்தது மேகம்
ஒரு பூனையின் நிழலில்
நகங்கள் என் மீது கீறாதிருக்க
மெல்ல விலகினேன்
மேல் வழிந்தோடியது வெயிலும்
பூனையின் வாலும்
பூட்டிக் கிடக்கும் கதவுகளுக்குள்ளே
இம்மேகத்தைத் தொலைத்துவிட்டவர்கள்
என்ன செய்துகொண்டிருப்பார்கள்?
என்னைத் தழுவி
ஜன்னலின் கதவிற்பட்டு
மீள்கிறது
மேகம் அனுப்பியிருந்த காற்று.

-oOo-

அகம்

மரங்களின் கிளைகள் மெல்ல அசைய
பறக்கும் ப்றவைகள் போக
உதிரும் இலைகள் போக
அதிலேயே இருக்கின்றன
பறக்காதவையும் உதிராதவையும்.
சிறுவன் ஒருவன் கல்விட்டெறிய
பறந்தோடும் உதிர்ந்தோடும் கூட்டங்களோடு
கிளைகளிலிருந்து சத்ததோடு சிதறுகின்றன
உடைந்த கண்ணாடித் துண்டுகள்
இவ்வுலகத்தின் பிம்பத்தைக் காட்டியும்
என்னுருவைக் காட்டிக்கொண்டும்.

-oOo-

2 comments:

ny said...

SIR!!

great... :)

ரா.கிரிதரன் said...

//பக்கத்து வண்டிக்காரன்கள்
எதுவும் நடக்காதது போல
ஆக்ஸிலேட்டரை முறுக்கிக்கொண்டிருந்தான்கள்.
//

அவனவனுக்கு வார்க்கப்பட்ட மேகத்தில் பிஸியாக இருந்திருப்பார்கள் ;)