Saturday, July 25, 2009

கிழக்கு பாட்காஸ்ட் - ஆஹா FMல்.



ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமை மதியம் 12 மணி முதல் 1 மணி வரை, கிழக்கு பாட்காஸ்ட் என்னும் ஒரு புதிய நிகழ்ச்சி நாளை முதல் ஒலிபரப்பாகும்.

எப் எம் என்றாலே வெறும் திரைப்பாடல்கள் என்கிற அளவில் பழக்கப்பட்டுப்போய்விட்ட பண்பலையில் ஒரு மாறுதலான நிகழ்ச்சி வரப்போவது மகிழ்ச்சியளிக்கிறது. திரைப்படப் பாடல்கள் இல்லாத ஒரு நிகழ்ச்சி, இதுவரை எதாவது ஒரு பண்பலையில் ஒலிபரப்பாகியிருக்குமா என்பது சந்தேகமே. வானவில் பண்பலையில் ஒருவேளை ஒலிபரப்பாகியிருந்திருக்கலாம்.

இப்படி ஒரு நிகழ்ச்சியை ஒப்புக்கொள்ளவே பல பண்பலைகள் தயங்கின என்பதே உண்மை. தமிழ்நாட்டில் இன்றைக்கு வரைக்கும் பண்பலை என்பது வெறும் திரைப்படத்துக்கான ஒரு கருவியாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலை மாற, இந்த நிகழ்ச்சி உதவுமானால் உண்மையிலேயே ஒரு பெரிய வெற்றியே.

பல பண்பலைகளுக்கு இப்படி ஒரு நிகழ்ச்சியை ஒலிபரப்ப முடியும் என்பதையே உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. என்ன சொன்னாலும், எவ்வளவு பேசினாலும், மீண்டும் மீண்டும் திரைப்படப் பாடல்களை ஒலிபரப்புவதிலேயே வந்து முடித்தார்கள். பாடல்கள் இல்லாத நிகழ்ச்சியை யாருமே கேட்கமாட்டார்கள் என்பதே அவர்களது முடிவான நம்பிக்கை. இப்படி பாடல்கள் இல்லாமல், ஓர் அரட்டை நிகழ்ச்சியைக் கேட்கவென்றே நிறையப் பேர் இருபபார்கள் என்பதை அவர்களால் யோசிக்கவே முடியவில்லை.

நாம் ஒரு நிகழ்ச்சியை பாடல்களின் பாதிப்பே இல்லாமல் ஒலிபரப்பிவிட்டால் உடனே அதை அனைவரும் கேட்டுவிடமாட்டார்கள் என்பதையும் நாங்களும் புரிந்துகொண்டிருக்கிறோம், மற்றவர்களைக் கேட்க வைக்க நாமும் முயல்வேண்டும் - என்றெல்லாம் சொன்ன பின்பும் அவர்கள் யோசிக்கத் தயாராக இல்லை.

முதலில் இருந்த இந்த நிகழ்ச்சிக்கான எங்கள் தேர்வைப் புரிந்துகொண்டவர்கள் ஆஹா எஃப் எம் மட்டுமே.

தொலைக்காட்சிகள் எங்கேயோ போய்க்கொண்டிருக்க, இன்னும் பண்பலை வானொலிகள் வெறும் திரைப்படப் பாடல்களிலேயே மூழ்கிக் கிடப்பது அவலம்தான்.

ஒவ்வொரு வாரம் ஞாயிறு அன்று பகல் பனிரெண்டு மணிக்கு அரட்டை. கொஞ்சம் வித்தியாசமான அரட்டை. அறிவுபூர்வமான அரட்டை. நிச்சயம் கேளுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சியில் எதைப் பற்றி விவாதிக்கப் போகிறோம் என்பதை முன்பே அறிந்துகொள்ள விரும்புகிறவர்களும், ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியைப் பற்றி நினைவூட்டவேண்டும் என்று எதிர்பாக்கிறவர்களும் START NHM என டைப் செய்து, 575758 என்கிற எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்பி பதிவு செய்துகொள்ளவும். ஏற்கெனவே பதிவு செய்துகொண்டவர்கள் மீண்டும் பதிவு செய்துகொள்ளவேண்டியதில்லை. இதில் பதிவு செய்துகொண்டால் கிழக்கு பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள், புத்தகக் கண்காட்சி பற்றிய அறிவிப்பு போன்றவற்றையும் எஸ் எம் எஸாகப் பெறலாம்/பெறவேண்டியிருக்கும்!

இந்நிகழ்ச்சியை சென்னையில் இருக்கும் நேயர்கள் மட்டுமே கேட்கமுடியும் என்பதால், இந்நிகழ்ச்சி பற்றிய எஸ் எம் எஸ்ஸும் சென்னை மொபைல் நம்பர்களுக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்படும்.

இனி, வாரா வாரம் புது அவதாரம்!

5 comments:

Unknown said...

கோடைப் பண்பலை 100.5 (கொடைக்கானல்)இது போன்ற பல நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.
தமிழ் நாட்டின் பெரும் பகுதியான இடங்களையும் , கேரளாவின் பல இடங்களையும் ,ஏற்க்காடு 103.7 அஞ்சல் மூலம் கர் நாடகத்திலும் ஒலிக்கிறது.

இந்த ஒலிபரப்பில் வழங்கவும் ஏற்ப்பாடு செய்யலாமே !

பலரும் பயனடையலாமே !

Anonymous said...

வெட்டிப் பேச்சாக, வெட்டி வேலையாக, தங்கள் சாதனைகளை முன்னிறுத்திக் கொள்வதாக இல்லாமல் சாதாரண, நடுத்தர மக்களிற்குப் பயன்படக் கூடிய வகையில், அவர்களது சிந்தனையைத் தூண்டுவதாக, மேம்படுத்துவதாக நிகழ்ச்சி அமையும் பட்சத்தில் வெற்றி நிச்சயம். கிழக்கு அதைச் செய்யும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. உதாரணம் அறிவார்ந்த மொட்டை மாடிக் கூட்டங்கள். அதன் பரிணாம வளர்ச்சி தான் இது என்பதில் ஐயமில்லை. அவ்வப்போது கொஞ்சம் நகைச்சுவையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நிச்சயம் ’ரீச்’ ஆகும்

அன்புடன்
அநங்கன்

கானகம் said...

முதல் ஒலிபரப்பு எப்படி இருந்தது என்பதை எழுதுங்கள்....

Prapa said...

//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

க. தங்கமணி பிரபு said...

வணக்கம்,