கண்ணகியும் சிலப்பதிகாரமும் இன்று அரசியலாக்கப்பட்டுவிட்ட நிலையில், ‘சிலப்பதிகாரம் (நாவல் வடிவில்)’ என்னும் புத்தகத்தைப் படித்தேன். பெரியார் கேட்ட கேள்விகள் நினைவிலாடின. கண்ணகியை மறுக்கவேண்டியதற்கான நியாயங்களை முன்வைத்தார். சிலப்பதிகாரத்தை எரிக்கச் சொன்னார் என நினைக்கிறேன். முரண் என்னவென்றால், இன்று கண்ணகியும் சிலப்பதிகாரமும் தமிழ் வடிவங்களாக, அவரைத் தலைவராகக் கொண்டவர்களாலேயே முன்னெடுக்கப்பட்டதுதான்.
இப்படி வந்த நினைவை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு, கண்ணகி எப்படி தமிழச்சிகளின் முன்மாதிரி ஆவாள் என்ற கேள்விகள் தரும் தருக்கங்களுக்குள் செல்லாமல், தமிழின் மிக முக்கியமான காப்பியங்களில் ஒன்று என்கிற சுவை நோக்கில் மட்டும் வாசிக்க ஆரம்பித்தேன்.
ஏற்கெனவே பள்ளிகளில் படித்தபோது சிலப்பதிகாரத்தின் சில பாடல்களையும், மொத்தக் கதையையும் கேட்டிருக்கிறேன். அதனை மீண்டும் எளிய தமிழில், எந்த சிக்கலும் இல்லாத நடையில் நாவல் வடிவில் படித்தபோது, மீண்டும் பள்ளியில் படித்த நாள்களுக்குள் சென்று வந்தது போல இருந்தது. பள்ளியில் சிலப்பதிகாரத்தை ஆர்வத்துடன் நடத்திய தமிழாசிரியர்கள் நினைவுக்கு வந்து போனார்கள்.
கதை என்று பார்த்தால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இலக்கியம் எவ்வளவு வல்லமை பெற்றிருந்தது என்பதைப் பொட்டில் அறைந்து சொல்வது போல இருந்தது. ஒரு உணர்ச்சிமயமான நாடகத்துக்கு ஏற்ற வடிவத்துக்கான கதை. மீண்டும் பாடல்களைப் படித்து, வார்த்தைகளையும் அதன் உள்ளுறைகளையும் புரிந்து கொள்ள நேரமில்லை என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான். ஆனால் அப்படி வாசிப்பதுதான் சரியான பொருளையும், சுவையையும் தரவல்லது என்பதில் இரண்டாம் கருத்துக்கே இடமில்லை. அப்படி மூலப் பாடல்களைப் படித்துப் பொருள் கொண்டு, ரசிக்க இயலாதவர்களுக்காக, சிலப்பதிகாரம் நாவல் நடையில் புத்தகத்தை வாசித்தேன்.
ஒருவித அசிரத்தையுடந்தான் இதனை வாசிக்க ஆரம்பித்தேன். அதே போன்ற ஆரம்பப் பக்கங்கள் அதிகம் நாடகத்தன்மையுடன் இருப்பதை உணர்ந்தேன். ஆனால் அதே நாடகத்தன்மையே என்னை கதைக்குள் உள்ளிழுத்துக்கொண்டது என்பதை நான் அறிந்தபோது பெரும் ஆச்சரியம் ஏற்பட்டது. ஒரே காரணம் காப்பியத்தின் கச்சிதமான கதையே.
மீண்டும் மீண்டும் பல்வேறு வடிவங்களில் இதே கதையை இலக்கிய உலகமும் திரை உலகமும் சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டன. ஆனால் இது தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. காரணம், கதையின் தாக்கம் அன்றி வேறல்ல.
கதையின் இன்னொரு முக்கிய அம்சம், ஒவ்வொரு கதாபாத்திரமும் அவரவர்கள் அளவில் பெரிய ஆளுமையாக உயர்ந்து நிற்பதுதான். ஒரு காவியத்தின் தன்மை இதுவாகத்தான் இருக்கமுடியும். ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் இப்படி கதாபாத்திரங்கள் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்பதைப் பார்க்கமுடியும். சிலப்பதிகாரத்தின் மாதவியின் மகள் மணிமேகலையின் கதை தனியொரு காப்பியமாக வளர்வதும் நல்ல ரசனைதான். அதேபோல், கதை சோழ நாட்டில் தொடங்கி, பாண்டிய நாட்டில் எழுச்சி பெற்று, சேர நாட்டில் உச்சம் பெறுவதும் நல்ல உத்தி.
கதை சொல்லல் முறையிலேயே ஆரம்பிப்பதால் மிக எளிதில் திரைப்படம் (அல்லது நாடகம்) ஒன்றின் தேவையை நெருங்கிவிடுகிறது சிலப்பதிகாரம். மாடலன் என்னும் கதை சொல்லி முனி சேரன் செங்குட்டுவனுக்குக் கதை சொல்கிறான். கதை நடந்துகொண்டிருக்கும்போதே இடையில் வரும் கதை சொல்லி, மீண்டும் கதையைத் தொடர்கிறான். மீண்டும் கதை நிகழ்காலத்துக்கு வந்து, நிகழ்காலத்திலேயே முடிவடைகிறது. இதனால் இரண்டு விஷயங்களை சுதந்திரமாகச் செய்யமுடிகிறது. ஒன்று, கதை சொல்லல். இந்தக் கதை சொல்லல் வடிவம் எப்போதும் எல்லாரையும் கவரக்கூடியது. இரண்டாவது, கதைக்கான தொன்மையை உருவாக்குவது. இரண்டும் வெகு நேர்த்தியாகச் செய்யப்பட்டிருப்பதைப் பார்க்கமுடிகிறது. இக்காலத்துக்கு எந்த வகையிலும் பொருந்தாத கண்ணகியின் கதை மட்டும் எக்காலத்துக்கு பிடித்துவிடுவது ஆச்சரியம்தான்.
நாவல் வடிவில் சிலப்பதிகாரம் கொண்டு வந்தது நல்ல யோசனை. அதனை எளிய வடிவிலும், அனைவரும் படிக்கும்படியாகவும் கொண்டு வந்திருக்கிறார்கள். பள்ளி மாணவர்களுக்கு ஏற்ற வடிவம். கானல் வரியில் அப்படி என்னதான் சண்டை நடந்தது என மாணவர்கள் இனி தவிக்கவேண்டியதில்லை! கதையை சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கும் இப்புத்தகம் ஏற்றதாக அமையும்.
இந்தப் புத்தகத்தைப் படிக்கும் முன்புதான், அண்ணாத்துரையின் ‘தீட்டுத் துணி’ புத்தகத்தைப் படித்தேன். எல்லாக் கதையிலும் பிராமணனே மோசமானவன். ‘இடையில மானே தேனே பொன்மானேல்லாம் போட்டுக்கணும்’ போல, எல்லாக் கதையில் ‘பிராமணை போட்டுவிட்டார்’ அண்ணா. அறிஞ்சர் அல்லவா, சும்மாவா. சிலப்பதிகாரத்தில் பிராமணன் எவர் குடியையும் கெடுக்கவில்லை. அதுமட்டுமல்ல, கண்ணகி அந்தணர்களையும் அறவோர்களையும் விட்டுவிட்டு, மற்றவர்களை எரிக்கிறாள். இது அடுக்குமா? பின்னர் எப்படி இது தமிழர் இலக்கியமாகும்? நெஞ்சுக்கு நீதி வேண்டாமா? அண்ணா முதல் தம்பி வரை யோசித்து, வேறு ஏதேனும் ஓர் இலக்கியத்தை, புதிய தமிழர்திருநாள் அன்று புதியதாக அறிவித்தாலும் நல்லதுதான்.
நான் என்ன எழுதினாலும், அதை ஒரு பிஞ்ச் ஆஃப் சால்ட்டுடன் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இங்கே ஏற்கெனவே சொல்லப்பட்டாகிவிட்டது. இவ்வளவு தூரம் எழுதி அந்த பிஞ்ச் ஆஃப் சால்ட்டைப் போடாமால் போனால் என்னாவது?
புத்தகத்தை ஆன்லைனில் வாங்க! - http://nhm.in/shop/978-81-8493-446-5.html
3 comments:
கண்ணகி அந்தணர்களையும் அறவோர்களையும் விட்டுவிட்டு, மற்றவர்களை எரிக்கிறாள். ----
குழந்தைகள் பெண்கள் வயதானவர்கள் ?
//அந்தணர்களையும் அறவோர்களையும் விட்டுவிட்டு,//
அந்த காலத்தில் அந்தணரெல்லாம் அறவோர் போலும்
அண்ணாவும், அவரின் தம்பிகளும் பெரியாரின் பெயரை மட்டும் தானே எடுத்துக்கொண்டார்கள் அதுவும் இவர்களின் அரசியல் இலாபத்திற்காக. அதனால் இவர்கள் பெரியாரின் சில நியாயமான கொள்கைகளையும் கூட கடை பிடிப்பார்கள் என்று எதிபார்கலாமா.......... :-).
இவர்கள்தான் தமிழ் என்றால் வள்ளுவர், தமிழ் பெண் என்றால் கண்ணகி, கவிதை மற்றும் வசனம் என்றால் கருணாநிதி என்று ஆக்கிவிட்டர்களே.
ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய ஒரு சிறுகதைதான் நினைவிற்கு வருகிறது. பெயர் நினைவில்லை. அதில் கண்ணகியும் இளங்கோவடிகளும் சொர்க்கத்தில் இருந்து பூலோகம் வந்து இன்றைய தமிழகத்தின் நிலையை பார்வையிடுவதாய் எழுதி இருப்பார் அவருக்கே உரிய ஸ்டைலில்.
- நரேந்திரன்
Post a Comment