அரவிந்தன் நீலகண்டனுடன் ஒருமுறை ராமகிருஷ்ணா மடம் சென்றிருந்தேன். கிட்டத்தட்ட அரசர் போல பேசிக்கொண்டிருந்த அவர் உள்ளே சென்றதும் ஸ்வாமியைக் கண்டதும் யாதுமற்றோர் ஆண்டியாகப் பொத்தென காலில் விழுந்துவிட்டார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நானும் காலில் விழுந்தேன். அரவிந்தன் அவர் உடல் முழுக்க மண்ணில் பாவ காலில் விழுந்தார். நான் ஸ்டைலாக வேறு வழியில்லாமல் காலில் விழுவது போல விழுந்தேன். காலில் விழுவது என்றாலே ஒருவித அலர்ஜி. 90களில் ஜெயலலிதாவின் ஆட்சியில் ஏற்பட்ட எரிச்சலால் இருக்கலாம். யார் காலில் யார் விழுவது என்ற விவஸ்தை இல்லாமல் ஜெயலலிதா காலில் எல்லாரும் விழுவது குறித்து பெரிய எரிச்சல் இருந்தது. அதைத் தொடர்ந்து காலில் விழுவதே கேவலம் என்ற மனப்பான்மை வந்துவிட்டது. அரவிந்தன் ஸ்வாமிஜி காலில் விழுந்ததும், எனக்கு அவர் காலில் விழவேண்டும் என்ற ஒரு நெருக்கடி உண்டாகி, அதைத் தவிர்க்க முடியாமல்தான் ஸ்வாமிஜி காலில் விழுந்தேன். ஸ்வாமிஜி காலில்தானே விழுந்தோம் என்று மனதை எவ்வளவு தேற்றிக்கொண்டாலும் இப்படி காலில் விழும்படி ஆகிவிட்டதே என்று மனது உறுத்திக்கொண்டே இருந்தது. அரவிந்தனிடம் என்ன இப்படி திடீர்னு விழுந்திட்டீங்க, எனக்கும் வேற வழியில்லாம விழவேண்டியதாப் போச்சு என்றேன். எனக்கு விழணும் விழுந்தேன், உங்களுக்கு வேண்டாம்னா விழவேண்டாம் என்று சொல்லிவிட்டார். இன்னும் எதாவது கேட்டால், இங்கன பாத்துக்கிடுங்க என்று ஆரம்பித்துவிடுவார் என்பதால் அப்படியே விட்டுவிட்டேன்.
22ம் வயதில் எனக்குப் பூணூல் போட்டார்கள். வயதானவர்கள் காலில் எல்லாம் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவேண்டும். அம்மா சொல்ல சொல்ல நானும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டிருந்தேன். என் அக்காவின் நண்பர் ஒருவர் வந்திருந்தார். எனக்கும் அவருக்கும் 4 வயதுதான் வித்தியாசம் இருக்கும். ரொம்ப அழகா இருக்காங்கள்ல என்று மரியாதையுடன் அந்த அக்காவை நண்பர்களுடன் சைட் அடித்திருக்கிறேன். எதிர்பாராத ஒரு நொடியில் என் அம்மா அவர் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கச் சொல்லிவிட்டார். இந்த அம்மாவைக் கொலை செய்தால்தான் என்ற என்று தோன்றிவிட்டது. அந்த அக்கா சென்றதும் என் அம்மாவை உண்டு இல்லை என்றாக்கிவிட்டேன். என் திருமணத்துக்கு முன்பாக என் அம்மாவிடம் நானே யார் கால்ல விழணுமோ அவங்க கால்ல விழுவேன், நீ சொல்லவேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
இணையக் குழுமம் ஒன்றில் இப்படி காலில் விழுவது பற்றிப் பேச்சு வந்தபோது, காலில் விழுவது தேவையற்ற செயல் என்று சொன்னபோது, அடித்துத் துவைத்துக் காயப் போட்டுவிட்டார்கள். சொந்தக்காரர்கள் காலில் திருமணத்தில் விழுவது வேறு, கண்ட கண்ட மேடைகளில் இப்படி அரசியல்வாதிகள் காலில், குரு என்று சொல்லி மாஸ்டர்கள் காலில் விழுவதையெல்லாம் என்னால் சகிக்கமுடியவில்லை என்று சொன்ன நினைவு. ஆனால் காலில் விழுவதே இந்திய மரபு என்று தீர்ப்படித்துவிட்டார்கள். என்ன இந்திய மரபோ! இந்த இந்திய மரபில் ஏதோ ஒரு வகையில் அடிமைத்தனம் ஒளிந்திருப்பதாகவே தோன்றுகிறது. முதலிரவில் கணவன் காலில் மனைவி விழவேண்டும். மனைவி கணவன் காலில் விழவா முதலிரவில் காத்துக்கொண்டிருப்பார்கள்? ஆனால், அத்தை மாமா சொல்லி அனுப்பினாங்க என்று சொல்லி, நான் எத்தனையோ மறுத்தும், 19 வயதுப் பெண் அப்படித்தான் காலில் விழுந்தாள். இந்தச் சடங்கும் நல்லதுக்குத்தான். அதற்குப்பின் நான் எத்தனையோ தடவை கெஞ்சியும் அவள் சொன்ன பதில், நான் என்ன லூஸா உங்க கால்ல விழுறதுக்கு என்பதுதான். வரலக்ஷ்மி விரதத்தில் மட்டும் வேறு வழியில்லை, மனைவி கணவன் காலில் விழுந்துதான் ஆகவேண்டும். ஆனால் இந்தப் பண்டிகை வருடத்துக்கு ஒருமுறைதான் வந்து தொலைக்கிறது.
தினமும் மனைவி கணவன் காலில் விழுந்தால் குடும்பத்துக்கு நல்லது என்று எனக்குத் தூரத்து உறவான ஒரு அக்காவின் மாமியார் சொல்லிவிட்டார். அவர்கள் வீட்டுக்குப் போயிருக்கும்போது அந்த அக்கா தன் கணவனின் காலில் விழுவதைப் பார்த்து எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. எப்பலேர்ந்து இதெல்லாம் என்றேன். மாமியார் சொல்லியிருக்காங்க, குடும்பத்துக்கு நல்லதாம் என்றார். ஒரு மாதம் கழித்து மீண்டும் அந்த அக்கா வீட்டுக்குச் சென்றிருந்தேன். இரவு நெடுநேரம் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தோம். அப்படியே தூங்கப் போய்விட்டோம். திடீரென்று அந்த அக்கா ஏன்றீ ஏன்றீ என்று தன் கணவனை பதட்டத்துடன் அழைத்தார். அந்த அண்ணன் ரெண்டு ரூம் தள்ளி ஓரிடத்தில் படுத்திருந்தார். தூங்க ஆரம்பித்திருந்தார். தூக்க கலக்கத்துடன் என்ன என்றார். ஒரு நிமிஷம் இங்க வாங்க, கால்ல விழ மறந்துட்டேன், காலை காமிச்சுட்டுப் போங்க என்றார். அவர் புலம்பிக்கொண்டே எழுந்து வந்து காலைக் காண்பித்தார். அக்கா உடலை கொஞ்சம் கூட நகட்டாமல் படுத்தமேனிக்கு தன் கணவனின் காலை லேசாகத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு தேங்க்ஸ்றீ என்றார். நான் தலையில் அடித்துக்கொண்டேன்.
இத்தனை காலில் விழுதலும் வேறு மாதிரியானது.
நேற்று நாதஸ்வரம் நாடகத்தில் வேறு ஒரு மாதிரியாகக் காலில் விழுந்தார்கள். 4 வாரங்களாக செம அறுவையாகப் போய்க்கொண்டிருந்த நாடகத்தில், இனிமே இந்த எழவைப் பார்க்கத்தான் வேண்டுமா என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று புதுக்கதையை நுழைத்து கொன்றெடுத்துக்கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராமல் உணர்ச்சி மயமான கட்டம் நீண்ட நாள்களுக்குப் பிறகு. நான் முதலிலேயே இந்தக் காட்சியை எதிர்பார்த்தேன். ஒட்டுமொத்த குடும்பமும் ஒரு சின்ன பெண்ணின் காலில் விழுகிறது, அவள் வீட்டை விட்டு ஓடிப் போய்விடக்கூடாது என்பதற்காக.
18 வயதில் பாலகுமாரன் நாவல்களை ஒன்றுவிடாமல் படித்துத் தீர்த்துக்கொண்டிருந்தேன். மொட்டைமாடியில் அவள் தலை வழியாக நைட்டியைக் கழற்றினாள் போன்ற வரிகள் எல்லாம் வாழ்நாளுக்கும் துரத்தி அடிக்கும். பதின்ம வயதுகளில் பாலகுமாரனைப் படிக்காமல் விட்டவர்கள் நிச்சயம் எதையோ இழந்தவர்கள்தான். அவரது நாவல் ஒன்றிலும் பழுத்த பிராமணர் ஒருவர் இப்படித்தான் தடால் என்று யார் காலிலோ விழுவார். நாவல் பெயர் நினைவில்லை. அந்த வரியைப் படித்தபோது உடலெங்கும் அதிர்வு பரவியது நினைவுக்கு வந்தது. வேர்கள்.
என் அத்தைக்கு 16 வயதில் திருமணம். என் தாத்தாவுக்கு அப்போது 60 வயது. கல்யாணத்தில் காப்பி வர லேட்டாகிவிட்டது. என் மாமாவின் அக்கா காப்பிக்காக பிரச்சினை செய்து, தன் தம்பியை தாலி கட்டவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். பெரிய களேபரம் ஆகிவிட்டது. என் தாத்தா தன் கனத்த சரீரத்தைத் தூக்கிக்கொண்டு கடும் கோபத்தோடு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் என் மாமாவின் அக்கா காலில் விழுந்துவிட்டார். எப்படியோ கல்யாணம் ஆகவேண்டும் என்பதற்காக. நான் இதனைப் பார்த்த நினைவில்லை. ஆனால் என் அம்மா உணர்ச்சி வேகத்தோடு தன் மாமனார் காலில் விழுந்ததை விவரித்தது, நான் கூடவே நின்று பார்த்த உணர்வை உண்டாக்கிவிட்டது. ’அத்தனை பேரும் பார்த்துக்கிட்டு இருக்காங்க. உங்க தாத்தா, நல்ல கனமான உடம்பு. அங்காரக்ஷதை நெத்தில தீர்க்கமா இருக்கும். கோஜன (கோபிக்கட்டி) முத்திரை எல்லாம் பார்த்தாலே பெரிய மனுஷன்னு கும்பிடத் தோணும். ஹெ எம்மா வேற இருந்திருக்காரா ஊர்ல நல்ல மரியாதை. நல்ல படிப்பு. ஆனா முன்கோபி. கோபம் வந்துட்டா என்ன செய்யறோம்னே இல்லை. உங்க பாட்டிக்கு கோவில்தான் கட்டணும். இப்படி ஒரு மனுஷன் கூட் வாழறதே தவம் மாதிரிதான். ஊர் மொத்தமும் கல்யாணத்துக்கு காத்துக்கிட்டு இருக்கு. இவளானா காப்பி வல்லைன்னு குதிக்கிறா. அப்பல்லாம் ஏது ஃபோன்? பால் லேட்டுன்னா என்ன பண்றது? இவ காப்பி இல்லைன்னா கல்யாணம் இல்லைங்கிறா. எங்களுக்கு என்ன செய்றதுன்னு தெரியலை. உங்கப்பா நான் காப்பி வாங்கிட்டு வரேன்னு ஓடறார். இவ பால் வந்து எனக்கு இங்க காப்பி போட்டாகணும்ன்றா. பார்த்தார் உங்க தாத்தா. சபைல அவ முன்னாடி வந்து நின்னார். தோள்ல இருந்த துண்டை எடுத்து இடுப்புல கட்டிக்கிட்டார். எப்படியோ கல்யாணத்தை பண்ணுங்கன்னு சொல்லி கை கூப்பிக்கிட்டு பொத்துன்னு சபை முன்னாடி அவ கால்ல விழுந்துட்டார். பஞ்சகச்சை கட்டிக்கிட்டு ஒரு பிராமணன் இப்படி கால்ல விழுறதைப் பாத்துட்டு எல்லாரும் பதறிட்டாங்க. எனக்கானா அழுகை ஒரு பக்கம், கோபம் ஒரு பக்கம். அவ அருகதை என்ன இவர் தகுதி என்ன. அவ வயசு என்ன இவர் வயசு என்ன. ஆனா கல்யாணம் ஒழுங்கா நடக்கணுமே. அப்புறம் அவ தன் தம்பியை தாலி கட்ட விட்டா. அந்த பிராமணர் கால்ல விழுந்த சாபம் சும்மா விடுமான்னு ஊரே பேசிக்கிட்டு இருந்தது.’
இது நடந்து 30 வருடங்களுக்குப் பிறகு எங்கள் தூரத்து சொந்தத்தில் இன்னொரு கல்யாணம் நடந்தது. அங்கேயும் எதோ பிரச்சினை. வீட்டு மாப்பிள்ளையை புது மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கவனிக்கவில்லை என்று வீட்டு மாப்பிள்ளை ஆட ஆரம்பித்துவிட்டார். சண்டை பெரிதாகி பெரிதாகி ஒரு கட்டத்தில் மாப்பிள்ளையின் தாய் கதறி அழ ஆரம்பித்துவிட்டார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த புது மாப்பிள்ளை சட்டென முன்னே வந்து, என்னவோ அம்மா தப்பு பண்ணிட்டாங்க, மன்னிச்சுக்கோங்க என்று சொல்லி, கல்யாண வேஷ்டி சட்டையுடன் சாஷ்டாங்கமாகக் காலில் விழுந்துவிட்டார். அந்தக் கல்யாணத்துக்கு என் அண்ணாவும் சென்றிந்தார். காலில் விழுந்த கூத்து முடிந்ததும், அந்த மாப்பிள்ளையின் தாய்மாமா என் அண்ணாவைக் காண்பித்துச் சொன்னாராம். இதோ நிக்கிறானே இவன் தாத்தா ஊரே மெச்சின பெரிய மனுஷன். அவரே தன் பொண்ணுக்கு கல்யாணம் ஆகணுமேன்னு கால்ல விழுந்திருக்கார். நாமல்லாம் எம்மாத்திரம் என்றாராம். 30 வருடங்கள் கழித்து என் தாத்தாவின் செயல் ஒரு மண்டபத்தில் பேசப்பட்டதில் என் அண்ணாவுக்கு இனம் புரியாத சந்தோஷம், பெருமை. எனக்கும் அப்படியே.
என் தாத்தா காலில் விழுந்து 35 வருடம் கழித்து, என் மாமாவின் அக்கா மகனுக்கு கல்யாணம் நடக்க இருந்தது. கல்யாணத்துக்கு 1 மாதம் முன்பு என் மாமாவின் அக்காவின் கணவர் இறந்துவிட்டார். துக்க்கத்துக்கு வந்த என் மாமா எங்களிடம் தன் அக்காவைப் பற்றிச் சொன்னது, ஒரு பெரிய மனுஷனை காலில் விழ வெச்சா இப்படித்தான் ஆகும் என்றார்.
No comments:
Post a Comment