Monday, April 17, 2006

(என்) நிழல் வெளிக் கதைகள் - புத்தகப் பார்வை

அந்திமழையில் என் நிழல் வெளிக் கதைகள் (புத்தகப் பார்வை) வெளியாகியுள்ளது. வாசிக்க இங்கே சுட்டவும்.


பயத்தையும் பீதியையும் கிளப்பும் வாய்மொழிக் கதைகளை நான் அதிகம் கேட்கத் துவங்கியது கல்லுப்பட்டியில் வாழ்ந்த காலங்களில்தான். அதுவரை இருந்துவந்த சூழலுக்கும் (சேரன்மகாதேவி) கல்லுப்பட்டியின் சூழலுக்கும் பெரிய வித்தியாசத்தை உணர்ந்தேன் என்றே சொல்லவேண்டும். மூளைக்குப் பொருந்தாத, ஆனால் நினைத்த மாத்திரத்தில் பயத்தைக் கிளப்புகிற பல கதைகளை யாரேனும் எப்போதும் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். மூன்றாவது வீட்டில் வசித்து வந்த குட்டி அண்ணன் இது போன்ற கதைகளைத் தினமும் இரவு அவிழ்த்துவிடுவார். "அவன் ராத்திரி பயந்துக்குவான்" என்கிற என் அம்மாவின் பேச்சை மீறி, நானும் விஜயகுமாரும் வாய் திறக்காமல் கேட்டுக்கொண்டிருப்போம். ஒரு நாள் குட்டி அண்ணனின் அப்பா சொன்னார். "ராத்திரி கிட்டத்தட்ட ஒரு மணி இருக்கும். ஒண்ணுக்கு முட்டிக்கிட்டு வந்துச்சு. சரி, எதுத்தாப்புல இருக்கிற ஓடைல உட்காருவோம்னு உட்காந்து ஒண்ணுக்குப் போய்க்கிட்டு இருந்தேன். ணங்குன்னு யாரோ மண்டைல அடிச்ச மாதிரி. தலை முச்சூடும் வலி. பின்னாடி திரும்பி பார்த்தேன். ஒரு பயலையும் காணலை. கொஞ்சம் மயக்கமா இருந்தது. தட்டி முட்டி வீட்டுக்கு வந்து அப்படியே தூங்கிட்டேன். காலேல எந்திரிச்சு தலையை பின்னாடி தடவிப் பாத்தா, அருதலி, ரத்தமா இருக்கு. ஒடம்பெல்லாம் ஆடிப்போச்சு. ஒண்ணுக்கு இருந்துட்டு விழுந்த இடத்துல போய் பாத்தேன். அங்க ஒரு ஓணான் செத்துக் கிடந்தது." ஆர்வமும் பயமும் ஒரு சேர நான், "ஓணான் இருந்தா?" என்றேன். குட்டி அண்ணன் சட்டென்று, "கருப்பு அப்படி எதாவது உருவம் எடுத்துதான் வருமாம். இல்லப்பா?" என்றார். அப்போது எனக்கு வயது 14.

இரவு முழுவதும் உறக்கத்திலும் விழிப்பிலும் அந்தக் கதைகள் என்னைச் சுழன்றடிக்கும்.

பண்டாரங்குளம் என்றொரு குளம் உண்டு. காலைக் கடன்கள் கழிக்க கழிப்பறைகளெல்லாம் கிடையாது. போய்க்கொண்டிருக்கும்போது பன்றிகள் பின்னால் காத்து நிற்கும். சில பன்றிகள் சிறுவர்களை முட்டித் தள்ளக் கூடத் தயாராய் இருக்கும். அப்படி பண்டாரங்குளத்தின் வரப்புகளில் ஒதுங்கியிருந்த சமயத்தில் இன்னொரு கதை காதில் விழுந்தது. பண்டாரங்குளத்தில் ஒரு புளியமரம் உண்டு. அந்தப் புளியமரத்தில் ஆணி அடித்திருந்தார்கள். 'ஊரெல்லாம் கருப்பு சுத்தி பொண்ணுங்களையும் புள்ளைங்களையும் புடிச்சுப் போடுதுன்னு சொல்லி ஆணில அடிச்சு கட்டி வெச்சிட்டான் மந்திரவாதி' என்ற கதை அது. அதை நம்பாமல் அந்த ஆணியைத் தொட்டவன் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து செத்தான் என்ற கூடுதல் தகவலும் கிடைத்தது. அதன் பின்பு அந்தப் புளிய மரத்தைக் கடக்கும்போதெல்லாம் என் கண் அந்த ஆணியிலேயே குத்தி நிற்கும். சில நாள்கள் கழித்துப் பார்த்தபோது அந்த ஆணியைக் காணவில்லை. நான் அந்த வயதில், அந்த ஆணியைப் பிடுங்கி எறிந்த வீரனைப் பார்க்க ஆசைப்பட்டேன்.

கல்லுப்பட்டிக்குப் பக்கத்து ஊர் காரைக்கேணி. கல்லுப்பட்டியைக் காட்டிலும் இது மாதிரியான பேய்க்கதைகள் உலவும் பட்டிக்காடு. அங்குப் படுகளம் என்றொரு விழா நடக்கும். அந்த விழாவுக்கு ஒரு முறை சென்றிருந்தேன். கண்ணாக்குட்டி எங்களை எல்லா இடத்திற்கும் அழைத்துச் சென்றான். அங்கிருந்த இடங்கள் என்னவோ ஒன்றிரண்டுதான். ஆனால் அவற்றையெல்லாம் விடாமல் துரத்தித் துரத்திக் காட்டினான் கண்ணாக்குட்டி. இலைகளே இல்லாத முள்மரங்கள் நிறைந்த காடு ஒன்று இப்போதும் என் மனதில் நிறைந்து கிடக்கிறது. பாரதிராஜா ஏன் இன்னும் அந்த முள்மரங்களுக்குக் கீழே ஒரு ஷாட் கூட எடுக்கவில்லை என்பது எனது அந்நாளைய கேள்வியாக இருந்தது. கண்ணாக்குட்டி பாதாள பைரவி என்றொரு அம்மனைக் காண்பிப்பதாகச் சொன்னான். அதைக் காண்பிக்கப் போவதற்கு முன்பாகப் பாதாள பைரவியைப் பற்றிப் பெரிய பெரிய கதைகளைச் சொன்னான். ஒரு காலத்தில் அந்த அம்மன் சாலையை மறித்த படி படுத்துக் கிடந்தாள். இதனால் காரைக்கேணியிலிருந்து மற்ற ஊர்களுக்குச் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள். அந்த அம்மனை அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு மாற்றிப் பிரதிஷ்டை செய்ய யாரும் முன்வரவில்லை. எல்லாரும் பயந்தார்கள். ஒரே ஒரு பூசாரி மட்டும் தைரியத்துடன் அந்த அம்மனின் இடத்தைச் சாலையை விட்டுக் கண்மாய்க்கு நடுவில் மாற்றினார். அம்மனையும் கண்மாயின் நடுவே அமர்த்தினார். மறுநாள் காலை அந்தப் பூசாரி இரத்தம் கக்கிச் செத்துக் கிடந்தாராம். அதுமட்டுமல்லாமல் வேறு சில கதைகளும் சொன்னான். அந்த அம்மன் மிகவும் உக்கிரமானது என்றும் அவள் முன் நின்று பொய் சொன்னாலே மறுநாள் சாவு உறுதி என்றும் கண்ணாக்குட்டி சொல்ல, அந்த அம்மனைப் பார்த்துத்தான் ஆகவேண்டுமா என்கிற பயம் தொற்றிக் கொண்டது. ஏதோ ஒரு வெளிநாட்டுக்காரன் ஊர்மக்கள் சொல்வதை மதிக்காமல் அந்த அம்மனைப் புகைப்படம் பிடித்ததாகவும் ஆனால் அன்றே அவன் ஒரு விபத்தில் இறந்துபோனதாகவும் சொன்னான். மிகுந்த பயத்துடன் அந்த அம்மனைப் பார்க்கப்போனேன். சிமிண்ட்டில் செதுக்கப்பட்ட சிலையுடன் பலவித வண்ணங்களைக் கொண்டு பாதாள பைரவி நீரற்ற கண்மாயில் கையையும் காலையும் விரித்துப் படுத்துக் கிடந்தாள். அதன் காலோரத்தில் ஒரு புகைப்படம் ஒன்று கிடந்தது. யாரோ ஒருவனின் புகைப்படம் அது. அதைப் பற்றிக் கண்ணாக்குட்டியிடம் கேட்கவில்லை. நான் கேட்டு, அவன் இன்னொரு புதுக்கதையை ஆரம்பித்தால் அதைக் கேட்கிற தைரியம் எனக்கு இல்லை. மறுநாள் மாமாவிடம் (கண்ணாக்குட்டியின் அப்பா) பேசிக்கொண்டிருந்தபோது கண்ணாக்குட்டி சொன்ன கதையெல்லாம் பொய் என்றார்! அவர் ஒரு வரலாற்றைச் சொன்னார். அக்காலத்தில் ஏகாளி (வண்ணான்) வர்ணத்தைச் சேர்ந்தவர் அந்த அம்மனை கண்மாயில் வைத்தாராம். அப்படிக் கண்மாயில் வைத்துத் தன்னை வழிபடவேண்டுமென்று அந்த ஏகாளியைப் பாதாள பைரவியே சொன்னாளாம். கண்மாயில் துவைத்துக்கொண்டு, தன்னை வழிபட்டுக்கொண்டிருக்குமாறு பாதாள பைரவி அந்த ஏகாளியைப் பணித்தாளாம். அவரும் அது போலவே செய்துவந்தார். வருடத்திற்கு ஒரு முறை பாதாள பைரவிக்கு விழா எடுக்க நினைத்த அவர், நிறையப் பேருக்குத் தேவையான உணவைச் சமைத்து பிற சாதியைச் சேர்ந்த (தேவர்) பெரியவர்களைச் சாப்பிட அழைத்தாராம். அதை ஏற்க மறுத்த அச்சாதியினர் அவர் உணவை உண்ண வரவில்லை. மனம் சோர்ந்து போன ஏகாளி, அந்த உணவையெல்லாம் பாதாள பைரவியின் முன்னே ஒரு குழியைத் தோண்டி அதிலிட்டு மூடி வைத்துவிட்டார். மறு வருடம் மீண்டும் விழா நாளில் அக்குழியைப் பறித்துப் பார்த்தபோது, அந்த உணவு கெடாமல், மண் விழாமல் அப்படியே இருந்ததாம். இதைப் பார்த்துப் பாதாள பைரவியின் சக்தியை உணர்ந்து கொண்டு அனைவரும் அவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்புச் செய்தார்களாம். சாலையை அம்மன் மறித்தது எல்லாம் திருநெல்வேலி பக்கத்தில் வேறொரு அம்மன் (வண்டி மறிச்ச அம்மன்) என்றும் அக்கதையைப் பாதாள பைரவிக்குப் பொருத்தி அளந்துவிட்டான் கண்ணாக்குட்டி என்றும் மாமா விளக்கினார்.

மறுநாள் படுகளம் தொடங்கியது. படுகளத்தின் வரலாற்றை நினைவில் இருந்து சொல்கிறேன். தென்னமனூர் மற்றும் கவசக்கோட்டை என்ற இரண்டு ஊர்கள் உண்டு. கவசக்கோட்டையில் இருந்து ஒரு வள்ளத்தான் குருவி தென்னமனூருக்கு வந்துவிட்டது. தென்னமனூரைச் சேர்ந்த ராஜா அந்தக் குருவியைத் தர மறுத்துவிட்டான். கவசக்கோட்டை ராஜா அந்தக் குருவி தனக்குச் சொந்தமானது என்றும் அது தனக்கு வேண்டுமென்றும் கேட்டான். ஆனால் அதை மறுத்த தென்னமனூர் ராஜா, வேண்டுமென்றால் நாள் குறித்துச் சண்டையிட்டு, வென்றால் அதைக் கொண்டு போ என்று சொல்லிவிட்டானாம். நாள் குறிக்கப்பட்டது. தென்னமனூருக்கும் கவசக்கோட்டைக்கும் இடையில் காரைக்கேணியில் சண்டை. தென்னமனூர் ராஜா கவசக்கோட்டை ராஜாவுக்கு ஒரு நிபந்தனை விதித்தான். சண்டைக்கு வருபவர்கள் இரு தரப்பிலும் ஒருவர் ஒருவராக மட்டுமே வரவேண்டும் என்பதே அது. கவசக்கோட்டை ராஜா சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவன். அதை ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு ஆளாக சண்டைக்கு அனுப்பினான். ஆனால் தென்னமனூர் ராஜா ஐந்தாறு பேர்களாக ஆளை அனுப்பி, கவசக்கோட்டை சண்டைக்காரர்களைத் தோற்கடித்துக் கொன்றுவிட்டான். சென்றவர்கள் யாருமே திரும்பவில்லை என்பதை நினைத்த கவசக்கோட்டை ராஜா தங்களின் பரம்பரைச் சாமிகளைக் காவலுக்கு வைத்தான். தென்னமனூர் ராஜா ஐந்தாறு பேர்களாக அனுப்பிக் கொன்று விட்டுப் போனது தெரியாமல் கசவக்கோட்டை ராஜா சாமிகளை வேண்டிக்கொண்டான். ஒரு சேவலை அறுத்து ஒரு ஈட்டியில் குத்தி நட்டான். ஒரு ஆட்டின் குடலை உருவிவிட்டு, அந்த ஆட்டைத் தன் தலையில் மாலையாகப் போட்டுக்கொண்டாள் ஒரு கிழவி. அந்தச் சேவலும் அந்த ஆடும் சாகாமல் உயிரோடு இருந்தன. அவை சாமிகளின் சக்தி. அவற்றை வணங்கிவிட்டுக் தானே தனியாகச் சண்டைக்குச் சென்றான் கவசக்கோட்டை ராஜா. அவனும் சதிக்குப் பலியானான். அவன் பலியான போது, கழுத்தறுபட்ட சேவலும், குடலற்ற ஆடும் உயிர் துறந்தன. அதைப் பார்த்து அவர்களது ராஜா தோற்றுப்போனதை அவ்வூர் மக்கள் அறிந்துகொண்டார்களாம். இக்கதை அப்படியே படுகளத்தில் நடத்திக் காட்டப்பட்டது. 'சேவல் ஈட்டியில உயிரோட இருக்கும்டி' எனச் சொல்லி என்னை அசத்தி வைத்திருந்தான் கண்ணாக்குட்டி. ஆட்டைக் கழுத்தில் போட்டுக்கொண்டு ஒரு கிழவி சாமியாடிக்கொண்டிருந்தாள். மாலை ஐந்து மணி வாக்கில் அச்சேவல் மூன்று முறை தலையைத் தூக்கி உயிரை விட்டதைத் தூரத்திலிருந்து காண்பித்தான் கண்ணாக்குட்டி. முதல் நாள் இரவில் எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்ட நிலையில், தென்னமனூர்க்காரர்களாக வேடமிட்டவர்கள் ஐந்து பேரும் கவசக்கோட்டை ராஜாவாக வேடமிட்ட ஒருவரும் சேவலின் பச்சை இரத்தத்தையும் ஆட்டு இரத்தத்தையும் குடித்துக்கொண்டு கூச்சலிட்டு ஓடிவந்தார்கள். நான் என் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஊரோரத்தில் வெளியில் திரையிடப்பட்ட ஆண்டவன் கட்டளையையும் பூம்புகாரையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஜெயமோகனின் நிழல் வெளிக் கதைகள் இப்படி காலம் காலமாகத் தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் கதைகளைப் பிடித்துக்கொண்டுள்ளது. இப்படி மரபு ரீதியான கதைகளையும் வாய்மொழிக் கதைகளையும் அறிவுக்கு ஒவ்வாதவை என விலக்கி வைத்துவிடலாம். ஆனால் அவை தரும் பழக்க ரீதியான தொடர்ச்சியையும் அக்கதைகளில் நிலவும் நிஜம் கலந்த கற்பனைகளையும் இரசிக்கத் தொடங்கினோமானால் மூதாதயர்களைப் பக்கத்தில் வைத்துப் பார்த்த கிளர்ச்சி உண்டாவதை உணரலாம். என்றோ இளம்பருவத்தில் கன்னி கழியாமல் செத்துப் போன ஒரு பெண்ணை இன்னும் கன்னித்தெய்வமாக வழிபடும் குடும்பத்தின் வேர்கள் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வருவதைப் புரிந்துகொள்ளலாம். உலகின் எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான பதில் இல்லை, அப்படியே இருந்தாலும், அவை தேவையுமில்லை. சில விஷயங்கள் மனதைப் பொருத்தும் உணர்ச்சி சார்ந்தும் சந்ததிகளுக்குள்ளே பரிமாறிக்கொள்ளப்பட்டு வேர் பிடித்துக்கொள்கின்றன. ஜெயமோகனின் நிழல்வெளிக் கதைகளும் இத்தகையப் பரம்பரை ரீதியிலான கதைகளே.

வடிவத்தைப் பொருத்தவரையில் அனைத்துக் கதைகளும் வெகு சிறப்பாக அமைந்திருக்கின்றன. சிறுகதையின் சிறப்பான உயரங்களைத் தொட்டவர்களுள் ஒருவர் ஜெயமோகன். அதைத் தனியே சொல்லவேண்டியதில்லை. நிழல்வெளிக் கதைகளும் ஜெயமோகனுக்குரிய தனித்துவமிக்க மொழியில் சிறப்பான வடிவத்தில் வெளிப்பட்டுள்ளது. உயிர்மை இதழில் வந்த கதைகளும் வேறு சில கதைகளும் இச்சிறுகதைத் தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

இக்கதைகளில் மிகச் சிறப்பான கதைகளாக நான் கருதுவன பாதைகள், ஏழுநிலைப் பந்தல், தம்பி மற்றும் இரண்டாவது பெண். பாதைகள் கதையில் ஜெயமோகனின் எழுத்து வன்மை முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒவ்வொரு அறை திறக்கும் விதமும் மனதை மயக்கும், வசீகரிக்கும், குழப்பும் ஓவியங்களின் விவரிப்பும் ஒரு தேர்ந்த எழுத்தானுக்கு மட்டுமே உரித்தானவை. தம்பி கதையின் உயிர்நாடி ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் பேசப்பட்ட விஷயம்தான். என்றாலும் கதை சொல்லப்படும் நேர்த்தியும், 'ம்ம்ம்பீ'யின் பிம்பமும் நம்முள் புகுந்துகொள்ள, சரவணன் இறப்பதை நேரில் காண்பது போன்ற எண்ணம் உண்டாகிவிடுகிறது. 'ஏழு நிலைப் பந்தலும்', 'இரண்டாவது பெண்ணும்' வசீகரமான வட்டார வழக்குடன் நெஞ்சில் அறைந்து பீதியை உண்டாக்குகின்றன. குறிப்பாக 'இரண்டாவது பெண்' கதையில் வரும் விவரிப்புகள், நம்மைச் சுற்றி இருக்கும் சூழலை மறக்கச் செய்து, இருளில் உறைந்துபோன நிலையை உண்டாக்கிவிடுகின்றன. ஐந்தாவது நபர் கதையில் வரும் தர்க்கங்களைக் கொண்டு கதையின் முடிவை வாசித்தோமானால் அக்கதை வேறொரு இடத்தில் திறப்புக் கொள்கிறது. பிளாஞ்செட்டில் இருக்கும் நான்கு நண்பர்களின் ஒட்டு மொத்த மனநிலை சேர்ந்து உருவாக்கும் எண்ணங்கள் ஐந்தாவது நபராக பிளாஞ்செட்டில் வேலை செய்கிறது என்கிற தர்க்கத்தை ஏற்றோமானால், மாஸ்டர் சரசுவைக் கொன்றார் என்பதை அந்த நான்கு பேரில் ஒருவரோ அல்லது நான்கு பேருமோ (மாஸ்டர் உட்பட) சொல்ல நினைத்திருக்கிறார்கள் என்ற வகையில் யோசிக்கத் தொடங்கலாம். மற்றக் கதைகளும் தத்தம் அளவில் சிறப்பாகவே வந்துள்ளன.

அயர்ச்சி தருகிற விஷயம் என்று பார்த்தால் எல்லாக் கதைகளும் ஒரே போல் தொடங்குவதும் ஒரே போல் முடிவதும் என்பதைக் கூறலாம். பெரும்பாலும் எல்லாக் கதைகளிலிலும் யாரோ ஒருவர் சொல்லத் தொடங்குகிறார்கள். இப்படியில்லாமல் நேரடியான நிகழ்கதைகளைப் போலவே வடிவமைத்திருக்கமுடியும். இவை சொல்லப்பட்டு வந்த கதைகள் என்பதால் ஜெயமோகன் இப்படி அமைத்தாரா என்பது தெரியவில்லை. மிகச் சிறப்பாகச் சொல்லப்படும் இரண்டாவது பெண் சிறுகதை கடைசியில் ஒரு திடும் திருப்பத்தைக் கொண்டுள்ளது போல் தோன்றுவது யதார்த்தமாக - இவை எல்லாமே யதார்த்தத்தை மீறின கதைகள் என்றாலும் - இல்லை.

கதைகளின் முழுக்க வரும் யட்சிகள் நம்மைத் தம் பிடியிலிருந்து விட நேரமாகிறது.

நிழல்வெளிக் கதைகள், உயிர்மை பதிப்பகம், விலை 60.00 INR.

No comments: