Tuesday, August 29, 2006

வேட்டையாடு விளையாடு - திரைப்பார்வை

இதற்கு விமர்சனம் எழுதுவது நேரவிரயம் என்று தெரிந்தும் அதைச் செய்கிறேன்! இறை என்னை மன்னிக்க. :-)

* கமலுக்கு நடிக்க மறந்துவிட்டது. சிரிப்பது, பேசுவது, சண்டைக் காட்சிகள் என எல்லாவற்றிலும் ஒரு செயற்கைத்தன்மை. யதார்த்தம் என்றால் என்ன என்பதை அவர் மீண்டும் கண்டடைவது நலம்.

* கதையே இல்லை என்பது இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சம்!

* பின்னணி இசை தேவையில்லாமல் பல இடங்களில் ஒலிக்கிறது. தேவையற்ற இடங்களில் மௌனமே சிறந்த இசை. இதை மறந்துவிட்டார் ஹாரிஸ் ஜெயராஜ். படம் முழுக்க இரைச்சலோடு பின்னணி இசை. இருந்தாலும் இந்தக் கேடுகெட்ட படத்திற்கு தேவைக்கு அதிகமாகவே செய்திருக்கிறார் ஹாரிஸ். பாடல்கள் நன்று.



* காக்க காக்க-வில் வரும் எடிட்டிங் உத்திகள் இந்தப் படம் முழுவதும் இடம்பெற்றுத் தலைவலியை உண்டாக்குகின்றன. உத்திகளை எத்தனைத்தூரம் பயன்படுத்த வேண்டுமென்பதைக் கௌதம் புரிந்துகொள்ளவேண்டும்.

* கமல் இனி பரீக்ஷார்த்தத் திரைப்படங்களில் மட்டும் நடிப்பது அவருக்கு நல்லது. அவர் அவரைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கலாம். குறைந்தபட்சம் அவர் மீது மிகவும் நம்பிக்கையும் மரியாதையும் வைத்து, அவரது ரசிகர்கள் என்கிற போர்வையில் சிக்காத, நல்ல ரசனையுள்ள மக்களை நினைத்தாவது அவர் இதைச் செய்யவேண்டும்.

* கமல் உடல் பெருத்துவிட்டது. உடல் கமலோடு ஒத்துழைக்கவே இல்லை. குறிப்பாக சண்டைக்காட்சிகளில். நேற்று வந்தவர்கள் எல்லாம் பின்னி எடுத்துக்கொண்டிருக்க, இவர் சிவாஜி ஸ்டைலில் நின்ற இடத்திலிருந்தே அடித்துப் பந்தாடுவது நல்ல காமெடியாக இருக்கிறது. வில்லனைத் துரத்திக்கொண்டு ஓடும் காட்சிகளில் தடுமாறுகிறார்.

* கமல் காக்கிச்சட்டையில் நடந்து வரும் காட்சி மிடுக்கற்றுத் தோற்றமளிக்கிறது. இதில் மட்டும் எப்படி கமல் கச்சிதமாக யதார்த்தத்தைக் கௌவிக்கொண்டார் எனத் தெரியவில்லை. :-)

* படத்தில் லாஜிக் என்று பார்த்தால் ஒரு மண்ணும் இல்லை. எந்தப் பிணத்தைப் புதைத்து வைத்தாலும் கமல் அரைமணி நேரம் முதல் ஐந்து மணி நேரங்களில் கண்டுபிடித்துவிடுகிறார். சரியான ரீல். ரஜினியின் ஹீரோயிஸத்திற்கும் இதற்கும் நிறைய வேறுபாடுகள் இல்லை. ஆனால் ரஜினிக்கு எடுபடும், கமலுக்குச் சறுக்கும்.

* கமலும் ஜோதிகாவும் நேரம் காலம் தெரியாமல் காதலித்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறார்கள்.

* கமல் படம் முடியும் தருவாயில் திடீரென்று 'ராகவன் ஆபரேஷன் பிகின்ஸ்' என்று சொல்லி அதிர்ச்சிக் குண்டைப் போடுகிறார். அடுத்த சீனிலேயே ஜோதிகாவுடன் காதல் வசனம் பேசுகிறார். இதுதான் ஆபரேஷன் ஆஃப் ராகவனா?

* வில்லன்கள் என்ன எழவிற்கு கை விரலை வெட்டித் தொங்க வைக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. படம் பார்ப்பவர்களை மிரட்ட வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாயிருக்கவேண்டும்.

* வில்லன்கள் லூசு மாதிரி வருகிறார்கள் போகிறார்கள். கடைசியில் போயும் சேர்கிறார்கள்.

* ஜோதிகா ஒரு பாடலில் திடீரென்று ஒரு குழந்தையுடன் வருகிறார். இது பற்றி முன்பே படத்தில் வசனம் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.

(இன்னொரு முறை பார்த்தால் தெரியும். ஆனால் இந்தக் கொடுமையை இன்னொரு முறை அனுபவிக்க முடியுமா?) அட இதுவேறயா என்கிற எண்ணம் எழுகிறது.

* படத்தின் முதல் காட்சி பிரத்யேகமாக குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. அந்த ஒரு காட்சியிலேயே இந்தப் படம் இப்படித்தான் அமையும் என்று முடிவுக்கு வந்துவிடலாம். அப்படி ஒரு காட்சி! என் கண்ணைப் பிடுங்கிக்கோ என்று சொல்லி சட்டென சென்னைத் தமிழ் பேசி, மறைமுகமாக, படம் பார்க்க வந்திருப்பவர்களை "இப்பமே ஓடிடுங்கப்பா" என்று மிரட்டுகிறார் கமல். இதே போல் அமைந்து எனது வயிற்றெரிச்சலைக் கட்டிக்கொண்ட இன்னொரு படம் 'வால்டர் வெற்றிவேல்.'

* வசனங்கள் சில இடங்களில் பளிச்சென்றும் பல இடங்களில் சொதப்பலாயும் அமைந்துள்ளன. கமல் ஒரு காவல் துறை அதிகாரியைப் பார்த்து அவரால்தான் இந்தப் பிரச்சினையே ஆரம்பித்தது என்கிறார். அடுத்த நொடியில், இருந்தாலும் அவன் ஏற்கனவே பல கொலைகள் செய்திருக்கிறான் என்கிறார். இப்படியாக நிறைய உளறல்கள், நிறையக் குளறுபடிகள் படம் முழுக்க இலவசம்.

* பம்மல் சம்பந்தம்ம, வசூல் ராஜா, மும்பை எக்ஸ்பிரஸ் என்கிற வரிசையில் இன்னொரு கமல் (பாடாவதி) படம். உண்மையான கமல் படம் எப்போது வரும் என்று தெரியவில்லை. நம்பிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது என்பதுதான் முக்கியமாக வருத்தப்படவேண்டிய விஷயமாக இருக்கிறது.

* 29 மதிப்பெண்கள்.

பஞ்ச்: இந்தப் படம் வராமலேயே இருந்திருக்கலாம்.

14 comments:

ஜோ/Joe said...

//இதற்கு விமர்சனம் எழுதுவது நேரவிரயம்//
தெரியுதுல்ல..அந்த நேரத்துல சாமி ,சிவகாசி ,திருப்பதி போன்ற படங்களை பார்க்க வேண்டியது தானே!

Anonymous said...

"நான்தாண்டா தாசில்தான்" என மீண்டும் அழுத்தமாக நிரூபிக்கும் முயற்சி?!

கௌதம் இதைச் செய்ய வேண்டும், ஹாரிஸ் அதைச் செய்ய வேண்டும், கமல் ஒன்றுக்கும் லாயக்கில்லை - இதையெல்லாம் 'மன்மதனை' ரசித்தவர்கள் சொல்வதுதான் காலக்கொடுமை

விதி வலியதுன்னு சும்மாவா சொல்றாங்க :-(

சாத்தான்குளத்தான்

மஞ்சூர் ராசா said...

பிரசன்னா
அவ்வளவு மோசமாவா இருக்கு. டிக்கட் வேறெ வாங்கியாச்செ, வியாழக்கிழமை போவதற்கு.

சரி, நானும் போய் அந்த வயிற்றெரிச்சலை கொட்டிகிட்டு வந்துடறேன்.

ஒரே ஒரு விசயம் எனக்கு புரியலெ, இந்தப் படத்துக்கு போய் 21/2 வருடம் இழுத்தடிப்பு, ஒரு தற்கொலை முயற்சி.

கொடுமையாகத்தான் இருக்கு.

PRABHU RAJADURAI said...

நேற்று உங்கள் நண்பர் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டார்...இன்று நீங்கள் ஏமாற்றிவிட்டீர்கள்!

CAPitalZ said...

///எந்தப் பிணத்தைப் புதைத்து வைத்தாலும் கமல் அரைமணி நேரம் முதல் ஐந்து மணி நேரங்களில் கண்டுபிடித்துவிடுகிறார்.///
தவறு, ஜோதிகாவை மட்டுமே சிறிது நேரத்திற்குள் கண்டு பிடிக்கிறார். மற்றவை எல்லாம், கொலை செய்து பல நாட்கள் கடந்தே கண்டு பிடிக்கிறார்.

///ஜோதிகா ஒரு பாடலில் திடீரென்று ஒரு குழந்தையுடன் வருகிறார். இது பற்றி முன்பே படத்தில் வசனம் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. ///
இல்லை. படத்தில் முன்பே ஒரு கட்டத்தில் அது பற்றி சொல்லப்படுகிறது. கமலுடன் ஜோதிகா ஏன் தமிழ் நாடு வருகிறார்?

படத்தை சரியாகப் பார்க்காமல் விமர்சனம் எழுதி மற்றயவர்களையும் குழப்புகிறீர்களே!

கார்த்திக் பிரபு said...

nan padam parthuttu solrane..adhru munalla ungal thanippatt vimarsanathai paditthu kullapi kolla kudathu en andavani nan vendi kolgirane

அபுல் கலாம் ஆசாத் said...

இனிய பிரசன்னா,

உங்கள் விமர்சனம் குறித்து எதுவும் சொல்ல விருப்பமில்லை. ஆனால், கடைசியாக நீங்கள் எழுதியிருக்கும் பன்ச் டயலாக்கில் தேவைப்படும் 'தீ', 'பொறி', 'வீச்சு', 'குத்து' எதுவுமே கிடைக்கவில்லை.

தட்டையாக ஒற்றைப் பரிமாணத்துடன் ;) இருக்கிறது.

உங்கள் விமர்சனத்தோடு தொடர்பான சில 'பன்ச்'கள் எழுதியிருக்கிறேன்.

1.
வேட்டையாடு விளையாடு - நீ சொல்றது!
போட்டுத்தாக்கி பதிவு போடு - நா(ன்)
சொல்றது!

2.
நியூயார்க் போனாலும் 'நிழல்கள்' விடாது!

'நிழல்கள்' - பிரசன்னாவின் வலைப்பதிவு.

3.
லாஜிக் இல்லாத படம்
மேஜிக் காமிச்சாலும் சக்ஸஸ் ஆகாது?

4.
வேட்டையாடு விளையாடு
மக்கள் சப்போர்ட் இல்லேன்னா....
ஈ ஓட்டு!

அன்புடன்
ஆசாத்

Hawkeye said...

tamizh sariyaka ezhutha varathu athanaal ippadiye type adikkiren.

flight'il jothikavum kamalahasanum pesum pozhuthu avalukku oru kuzhanthai (maya) irupathaaga koorugiraal. athai ungal theatril cut seithu vittan polum.

antha irandu villain'galum chinna vayathil irunthu kolai seithu varugirom. piragu niruthi vittom. oru naal iravu police station'il antha inspector kodumai paduthiya piragu thaan meendum kolai seiyaa thuvanginom endru koorugiran. athaiyum ungal theateril cut seithu vitaargal.

matrapadu ungal review janaranjamaaga thaan irunthathu. nandraaga rasithen.

Anonymous said...

What do you mean by Kamal film?

Anonymous said...

தமிழ் சினிமாக்களில் logic தேடுவதுமாதிரி அபத்தம் வேறு எதுவுமில்லை.எல்லா அபத்தங்களையும் மீறி கொடுத்த காசுக்கு எதாவது தேறுகின்றதா என்று மட்டும் பார்க்கவும்.அந்த வகையில் பார்த்தால் இது ஒன்றும் மிக மோசமான படம் அல்ல.சினிமா என்ற பெயரில் 'நரகலை' நிறைய பார்த்திருக்கிறோம்.

விமர்சனம் நடுநிலையோடு செய்யப்படவில்லை என்பது என் எண்ணம்.டிக்கட் எடுப்பதற்கு முன்பே படத்தை பற்றி ஒரு முடிவுக்கு வந்தது போல் உள்ளது உங்கள் எழுத்து.

Athi said...

Athu eppadi...?? Oru padathai paakka porathukku mundhiye, athai pathi kizhi kizhi'nnu kizhikkanum'ngira ennathoda thaan poveengalaa?? Unga kannula padathula irukkura nalla visayangal ethuvumey theriyaathaa? Appadiye neenga nallaa illai'nnu sonnathula mukkaal vaasi visayangal padathai pathi mosamaa ezhuthanum'nu kanganam katti kittu ezhuthunaappula thaan irukku.
Ithoda niruthikkiren. Indha vimarsanathukku ithukku mela mukkiyathuvam kudukkurathu koodavum nera viraiyam thaan!!

Jeyapalan said...

தண்டனை!!!!

29/100 எதற்கு ஐயா, அந்த இரண்டு பாடல்களுக்குமா? தகும்.

Anonymous said...

பிரசன்னா

என் நண்பர் ஒருவர் இந்த படத்தில் வேலை நீயுயார்க் வரை வந்து வேலை பார்த்தார். அவருக்காக நான் படத்தை டி வி டியில் பார்க்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு வர வேண்டியதாகி விட்டது. பார்த்த வயித்தெரிச்சலில் நான் அவருக்கு எழுதிய மடலை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்/

அன்புடன்
ச.திருமலை

-----------------------------

நேற்றுதான் வே ஆ வி பார்க்க முடிந்தது, அதுவும் நீங்கள் சம்பந்தப்பட்டீர்களே என்ற ஒரே காரணுத்தாகவே பார்த்தேன், எனக்கு இந்தப் படம் காண வேண்டும் என்ற ஆர்வம் ஆரம்பம் முதலே கிடையாது. மிக மிகச் சாதாரணமானதொரு படம். கமலஹாசனின் தரத்திற்கு இன்னும் உருப்படியாக எடுத்திருக்கலாம். கமலஹாசன், தேவையில்லாத வெளிநாட்டுப் படப்பிடிப்பு என்று எல்லா திறன்களையும் வீணடித்திருக்கிறார்கள். தமிழ் படத்தில் "அந்த நாள்" என்ற வீணை பாலச்சந்தர் படத்திற்கு பின்னால் உருப்படியான ஒரு திரில்லர் கூட இன்று வரை வந்ததில்லை. வே ஆ வி மற்றுமொரு தண்டம். முதலில் தமிழ் பட இயக்குனர்கள் ஜீனர் என்றால் என்னவென்று புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் அவியல் மாதிரி குடும்பம், திரில்லர், காதல், கத்திரிக்க்காய் , சண்டை என்று எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு உருப்படியில்லாத குப்பைகளை எடுக்கிறார்கள். ஒரு திரில்லர் படத்தில் என்ன மசுத்துக்கு காதல் வேண்டிக் கிடக்கிறது ? அதுவும் ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் பத்துவதில்லை. திரில்லர் என்றால் முழுக்க முழுக்க த்ரில்லர் எடுக்க வேண்டும் எடுக்கத் தெரியவில்லை என்றால் சி பி ஐ டைரிக் குறிப்பு, ஆவாநாழி,. யவனிகா , உத்தரம் என்று த்ரில்லருக்கு இலக்கணம் கூறும் திரைப்படங்களையாவது பார்த்து விட்டு எடுக்க வேண்டும், படத்தில் கதைக்கும் முக்கியத்துவம் இல்லை அல்லது கதையே இல்லை. துப்பறியும் காட்சிகள் அபத்தமானவை. ஒரு நல்ல துப்பறியும் கதை கூடவா இந்த இயக்குனருக்குக் கிடைக்கவில்லை. ஒரு உருப்படியான த்ரில்லர் கதையயக் கூட தேர்ந்தெடுக்க முடியாதவன் எல்லாம் என்ன ....க்கு டைரக்ட் செய்ய வர்றானுகளோ தெரியல. இந்தப் படத்தை நன்றாக இருக்கிறது என்று எல்லோரும் சொன்னார்கள், தமிழர்களின் ரசனை இவ்வளவு மோசமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. ஆ வியில் ஜெய மோகன் சொன்னதைப் படியுங்கள். முற்றிலும் உண்மை. ரசனைகெட்ட மக்களுக்கு ரசனையில்லாத படைப்பாளிகள்தானே கிடைப்பார்கள் ?

படத்தில் என் கண்களில் பட்ட சில அற்ப குறைகள்

1. ஏன் பிரகாஷ்ராஜ் ந்யூயார்க் போக வேண்டும் ? அங்கு அவருக்கு என்ன இருக்கிறது ? யார் இருக்கிறார்கள் ? ஏன் இந்தியாவில் உள்ள ஊர்களள எல்லாம் விட்டு விட்டு நியூயார்க் ? அவர் மகளுக்கு அங்கு எம் எஸ் படிக்க விசா கொடுத்தார்கள் சரி, அவரது கொலைக்குப் பிறகு இவருக்கு யார் விசா கொடுத்தார்கள் ? ஏன் கொடுக்க வேண்டும் ? எப்படி போனார்கள் ? அதுவும் நிரந்தரமாக தங்கி விடுகிறார்கள் ? என்ன கொடுமமயான கதை அமைப்புடா சாமி? அவர்கள் அங்கு செல்ல வேண்டுமானால் அவர் அங்கு குடியுரிமை பெற்றிருக்க வேண்டும், அதற்கு சான்சே இல்லை அவரோ தமிழ் நாட்டு போலீஸ். அல்லது அவரது ரத்த உறவு வேறு யாராவது அங்கு குடியுரிமையோ ஹெச் 1 னிலோ இருக்க வேண்டும். அதுவும் இல்லலயாம். அப்படி ஏதாவது அமைக்க வேண்டும் என்று கூட கூறு கெட்ட கதாசிரியருக்குத் தெரியவில்லை. எப்படி அங்கு போகிறார்கள் எதற்காக அங்கு போகிறார்கள் ?/ ஆரம்பமே சுத்த அபத்தம் லூசுத்தனமான கதை அமைப்பு ப்ரகாஷ்ராஜ் என்னவோ எனக்கு மனசே சரியில்லை ஊட்டிக்குப் போறேன் என்று சொல்லுவது போல் கூலா எனக்கு மனசே சரியில்லை நான் நியூயார்க் போகிறேன் என்று கிளம்பி விடுகிறார். நியுயார்க் என்ன அவர் வீட்டுக் கொல்லலப் புறமா ? யாரு விசா ஸ்பான்சர் செய்யிறாங்க எப்படி போறாரு ?


2. ஜோதிகா வேலை தேடி நி யூயார்க் வந்த்துள்ளேன் என்கிறார். அது என்ன திருப்பூரா அல்லது சிவகாசியா ? வேலை காலி உண்டு என்று போர்டு போட்டுத் தொங்க ? அதிலும் அவர் என்ன வேலை தேடுகிறார் என்று சொல்லக் கூடத் துப்பில்லை இயக்குனருக்கு, மொட்டையாய் வேலை தேடுகிறாராம் ரூம் போட்டுக் கொண்டு ? நல்ல ஜோக். வேலை தேடுவதென்றால் டைஸ், மான்ஸடர் போன்ற இடங்களில் தேடுவார்கள் லாட்ஜில் ரூம் போட்டுக் கொண்டு யாரும் தெருவில் அலைந்து வேலை தேட மாட்டார்கள். அதுவும் சியாட்டிலில் இருந்து நியூயார்க் வந்து ரூம் போட்டு, கொஞ்சமாவது கொள்தம் மேனனுக்கு மூளை இருக்கிறதா ? அபத்தத்தின் உச்சம் அது.



3. அமெரிக்காவில் போலீஸ் இன்னொரு அமெரிக்க துறைக்கே அவ்வளவு எளிதாக தகவல் தரமாட்டார்கள். ஒரு டுபாக்கூர் தமிழ் நாடு போலீசுக்கு அதுவும் அமெரிக்கா போலீஸ் எல்லா உதவிகளையும் தகவல்களளயும் வழங்குகிறதாம், இயக்குனர் கொஞ்சமாவது லா அண்டு ஆர்டர் மாதிரியான சீரியல்களைப் பார்த்து விட்டு இந்த படத்தை எடுத்திருக்காலாம். சுத்த பேத்தல். பெரும் ஓட்டை. நண்பரின் சக அதிகாரியின் உடலை வாங்க யாரும் அவ்வளவு தூரம் வர வேண்டாம், தூதரக அதிகாரிகளே பார்த்து அனுப்பி விட்டிருப்பார்கள். அப்படியே வந்தாலும் கமலஹாசனால் அதிக பட்சம் இந்தியத் தூதரக அதிகாரிகளை மட்டுமேதான் பார்த்திருக்க முடியும், அதைத் தவிர ஒரு டிராஃபிக் போலீஸ் கூட அவரை மதித்துப் பேசியிருக்க முடியாது. நிலமை அப்படி இருக்க அவர் வர்றாராம், அவரை வரவேற்கிறார்களாம், அவருக்காக காத்திருக்கிறார்களாம் ? படத்தைப் பார்த்து சிரித்து சிரித்து வயிறு புண்னாகி விட்டது. சுத்த அமெச்சூர்த்தனமான கதை அமைப்பு. இந்த ஆள் எல்லாம் சிறந்த இயக்குனர் என்றால் தமிழ் பட உலகம் கோமா ஸ்டேஜுக்கு வந்து விட்டது என்று அர்த்தம்


4. சரி அப்படியாவது வந்தாரே, ஒரு சுஜாதாவின் ப்ரியா கதை போல் எதையாவது புத்திசாலித்தனமாக சிந்தித்து துப்பறிகிறாரா என்றால் அதுவும் இல்லை, போலீஸ் மோப்ப நாய் போல பிணம் கிடைக்கும் இடத்தை ஊர் தெரியாத ஊரில் இடம் தெரியாத இடத்தில் கண்டு பிடிக்கிறாராம்.என்ன கொடுமைடா சாமி ? மூளை திவாலாகிப் போனவன் கூட இப்படி ஒரு டுபாக்கூர் சீனை வைக்க மாட்டான். இவர்களுக்கு எல்லாம் கிரியேட்டிவிடி சுத்தமாக வறண்டு விட்டதா என்ன ?


5. கொலைகாரர்கள் தீ வைத்து விட்டு ஓடுகிறார்கள், உடனடியாக அவர்களுக்கு டிக்கட் கிடைக்கிறது, இது என்ன மதுரை கொட்டாம்பட்டி மொபசல் பஸ்ஸா நினைத்தவுடன் ப்ளேன் கிடைக்க ? அது போலவே ஜோதிகா நினைத்தவுடன் கமலஹாசனுடன் ப்ளேன் ஏறி விடுகிறார். அதுவும் தமிழ் நாட்டின் டப்பா போலீசுக்கு ஃப்ர்ட்ஸ் கிளாஸ் டிக்கட் வேறு, எவன் தர்றான் ? ப்ரேமியே எக்கானமி கிளாசில் போகிறார். ஜோதிகாவுக்கே வேலை இல்லை அவர் எப்படி இரண்டு பேருக்கு ஃப்ர்ஸ்ட் கிளாஸ் எடுக்க முடியும்? கொஞ்சமாவது எதையாவது யோசிப்பானுங்களா இல்லையா ?


6. அப்புறம் ஜோதிகா என்னவோ டிக்கட் எண்டார்ஸ் பண்ண ஏர்போர்ட்டுக்குப் போகனும் போகனும் என்கிறார். அதென்ன எண்டார்ஸ்மெண்டு ? நானும் 20 முறை அமெரிக்கா வந்து போயிருக்கிறேன். அப்படி ஒரு எண்டார்ஸ்மெண்டுக்காக நான் எப்பொழுதும் ஏர்போர்ட்டுக்குப் போனதேயில்லை. அதென்ன சார் எண்டார்ஸ்மெண்டு புதுசா இருக்கே ? கன்ஃபர்மேஷனா? அதுக்கு போனில் சொன்னால் போச்சே அது கூட தேவையில்லையே? கதையெழுதத் தெரியவில்லையென்றால் உங்களைப் போன்ற தெரிந்த ஆசாமியிடமாவது கேட்டுத் தொலைக்கலாம் அல்லவா ?


7. கமல்ஹாசனுக்கு அவ்வளவு பெரிய கத்திக்குத்து ஆப்பரேஷனுக்கு யார் பணம் தருவார்கள் இன்ஷுரன்சா? அப்புறம் கமல் காட்டிய இடத்தில் குழி தோண்டுகிறார்கள் இரண்டு கருப்பர்களை வைத்து, கொஞ்சமாவது ஆங்கிலப் படத்தைப் பார்ட்து அது போன்ற காட்சிகளை வைத்திருக்கலாம்.

8. அதென்ன கிரைம் பிரான்ஸ் டி சி பி எப்போ பார்த்தாலும் முழு யுனிஃபார்மிலேயே இருக்கிறார். எந்த கிரைம் டி சி பி யுனிஃபார்ம் போடுகிறார் 24 மணி நேரமும் ?

9. அமெரிக்கர்கள் அனைவரும் ராகவன், ருத்ராட்சம், ஆரோக்கியராஜ் என்ற இந்தியப் பெயர்களை சர்வசாதாரணமாக சரியாக உச்சரிக்கிறார்கள் அதற்கு சான்சே இல்லை. ராகவன் என்ற பெயரை ரகாவான் என்றுதான் எந்தவொரு அமெரிக்கரும் உச்சரித்திருக்கக் கூடும். அதில் கூடவா கவனம் செலுத்த முடியவில்லை. எந்த வெள்ளைக் காரன் சார் எடுத்த எடுப்பிலேயே உத்திராட்சம் என்று சரியாகச் சொல்லுவான், தமிழனுக்குக் கூட அது சொல்ல வராதே ?

10. கமலஹாசன் நினைத்துப் பார்க்கும் காட்சியில் அவருக்குத் தெரிந்திராத காட்சிகள் எல்லாம் அவரது நினைவில் வருகின்றன அது எப்படி ? கொஞ்சமாவது சென்ஸ் வேண்டாம் ?

மற்றபடி நடிப்பு எல்லாம் சுமார்தான், கமலஹாசன் மற்றும் ப்ரகாஷ்ரரஜின் டெம்ப்ளேட் நடிப்பு பார்த்துப் பார்த்து அலுத்து விட்டது. வில்லன்கள் காரெக்டரைசேஷன் படு காமெடி. கொள்தம் மேனனுக்கு இந்திய டாக்டர்கள் மேல் அப்படி என்ன கடுப்போ ? தேவையில்லாத பாடல்கள் அபத்த நடனங்கள் கடும் எரிச்சலை மூட்டுகின்றன. இதிலே கமலின் சொந்தக் கதையை வேற படத்தில் சைடு கதையாய் ஓடுகிறது. த்ரில்லர் எடுக்க வந்தால் த்ரில்லர் எடுங்க சாமி, த்ரில்லர் படத்தில் எதுக்கு போலீஸ்காரர் அவரது மனைவி/காதலியை மூக்கால் உடம்பு பூரா மோந்து பாக்குற கண்றாவியை எல்லாம் காண்பிக்க வேண்டிய அவசியம் என்ன ? ஒரு செவன் படத்தைப் பார்து விட்டு தப்பும் தவறுமாய் கவுதம் இன்னும் எத்தனை அபத்தக் களஞ்சியங்களை எடுக்கப் போகிறாரோ ? இது போன்ற வெத்து வேட்டுக்களையும் ஆகா ஓகோன்னு எல்லோரும் பாராட்டும் பொழுது சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.


ஓட்டை உடைசல் கதையமைப்பு, தேவையில்லாத காட்சி அமைப்புகள், திரில்லர் படத்திற்கு தேவையில்லாத காதல், குடும்பக் காட்சிகள், அபத்தமான வில்லன்கள் என்று படம் மொத்தத்தில் படு டப்பா படம். சொதப்பி இருக்கிறார்கள். கமலஹாசன் இது போன்ற் ஆட்களை அருகில் சேர்க்காமல் இருப்பது அவருக்கு நல்லது. இந்தப் படம் பார்த்த பித்தம் தெளிய நான் உடனடியாக சி பி ஐ டைரிக் குறிப்பப இன்னும் ஒரு முறை பார்த்தே தீர வேண்டும். யாரோ ஒரு பைனான்சியர் காசு போட தயாரா இருந்தால் இப்படி எல்லாமா மொட்டை அடிக்கிறது ?

அது சரி, படத்தில் நல்லதாகப் பார்க்கத்தகுந்த காட்சி ஒன்று கூடவா இல்லை என்று கேட்கிறீர்களா? இருந்தது. டைட்டில் போடும் பொழுது Our Thanks to ****** என்று உங்கள் பெயரைப் போட்டார்களே அந்த ஒரு சீன் மட்டும் எனக்குப் பிடித்திருந்தது, கை கூட தட்டினேன். அத்தோட ரிமோட்டை ஆஃப் பண்ணி இருந்தால் இப்படி எழுதி உங்களை ரோதனை பண்ணிக் கொண்டிருந்திருக்க மாட்டேன் :)) என் சரியில்லாத நேரம் முழு படத்தையும் பார்த்து தொலைத்தேன். என் மார்க் மைனஸ் -35. தமிழ் நாட்டு சினிமா உருப்பட சான்சே இல்லை.

அன்புடன்
ச.திருமலை

கானகம் said...

ஹரன் உங்களது வீமர்சனத்தைவிட பிண்ணூட்டங்கள் அருமை.