நன்றி: சொல்வனம்.
    சூனியக்காரி
    சூனியக்காரியின் நீண்ட கரங்கள்
    காற்றின் வழியே உள்நுழைந்து
    வீட்டுக் கிளியைப் பற்ற
    மெல்ல கலவரத்துடன்
    கடந்து சென்றேன்
    பின்னொரு நாளில்
    அவள் நிழல் வீட்டுக்குள் நுழைந்தது
    கதவைத் திறக்கும்போது
    உள்ளே சறுக்கியோடும் இலை போல
    காணாமல் போனது இன்னோர் உயிர்
    நிழல் நகரும் இடங்களில்
    என் பதட்டமும் நகர
    உதவிக்கு அலறியது
    வீட்டுக்குள்ளிருந்து ஒரு குரல்
    தனித்து விடப்பட்ட
    என் மீது
    பரவத் துடிக்கும்
    அவள் குறித்த யோசனையில்
    கலவரத்தின் உச்சியில்
    அடிமனத்தில் சுரக்கிறது
    ஒரு திடீர் வசீகரம்
    மெல்ல நகரும் ஒரு பகல்
    மெல்ல நகரும் இப்பகலில்
    கைகள் மேல் தூக்கி
    வானத்தை இடிக்க
    சோம்பல் முறித்தேன்
    ஈரத்துணி
    காற்றில் ஆடி நிற்க
    நாசியில் அந்தியின் நெடி
    நிழலும் வெயிலும்
    வெறிகொண்டோடும் இரண்டு
    பூனைகளைப் போல் ஓட
    வெண்ணிற, சாம்பல் போர்வைகள் வருடி
    வெளிவருகிறது வீடு
    அங்கே அப்போது அந்நொடியில்
    கவிழ்ந்த பேரமைதியில்
    இரவைக் காட்டி
    தலைக்குள்ளிருந்து சைகை செய்கிறாள்
    கண்ணாடி வளையணிந்த
    என் ஊமைப்பெண்
    நம்மைக் கடந்து செல்லும் நிமிடம்
    நீண்ட நாள்கள் கழித்து
    ஒரு மலர்க்கொத்துடன் வந்தாய்
    என்றோ பறித்த
    மலரொன்றின் சருகுகளை
    நான் கொண்டு வந்திருந்தேன்
    யாருக்காகவோ காத்திருப்பதான பாவனையில்
    நம்மைக் கடந்து சென்றன
    நிறைய யோசனைகள்
    என்றோ நமக்கான
    இக்கவித்தருணத்தை
    கவிதையாக எழுதியவன்
    நம்மைப் பார்த்திருக்கிறான்
    மலர்க்கொத்திலிருந்து
    ஒரு மலரைப் பிய்த்து நீ எறிகிறாய்
    என் கண்ணுக்கு மட்டுமே தெரிவதான
    நட்சத்திரம் அங்கே தோன்றியது
 
 
3 comments:
முதல் கவிதை அக்மார்க் ஹரன் என்றாலும், இரண்டாவது மிகப் பிடித்திருக்கிறது.
//நாசியில் அந்தியின் நெடி// :)
மூன்றாம் கவிதை நீங்க எழுதியதுதானா என்று மீண்டுமொருமுறை வாசித்துப் பார்த்தேன் :). வெகு நாட்களுக்குப் பின் 'மீண்டுமொரு காதல்
க(வி)தை. சரி, 'நாள்கள்' என்றும் எழுதலாமா?
அனுஜன்யா
நாள்கள் என்று எழுதலாமா என்று கேட்கக்கூடாது. :) ஏனென்றால் நாள்கள் என்று மட்டுமே எழுதவேண்டும். நாட்கள் என்றால் நாள்பட்ட கள் என்னும் அர்த்தம் வரும். ஆனால் வெகுஜன வழக்கில் நாட்கள் என்பதும் பழகிவிட்டது.
பேஸ்மென்ட் இவ்வளவு வீக்கா இருக்கும் போதே கவிதை முயற்சி எல்லாம் உனக்குத் தேவையா? ... நான் என்ன சொன்னேன் :)
நன்றி ஹரன். இவ்வளவு நாள்கள் தெரியாமல் இருந்திருக்கிறேன்.
அனுஜன்யா
Post a Comment