Thursday, September 30, 2010

இலங்கைப் பயணம் - முழுமையாக

இலங்கைப் பயணத்தின் நிறைவுப் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

http://idlyvadai.blogspot.com/2010/09/3.html

சென்ற ஆண்டே கொழும்பு பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருக்க வேண்டியது. எனது பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட்டிருக்காததால் என்னால் செல்ல இயலவில்லை. இந்த முறை இலங்கைக்குச் சென்றேன். கொழும்பு பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி நடக்கும் அதே தினத்தில், யாழ்ப்பாணத்திலும் யாழ்ப்பாணக் கல்வியியல் கண்காட்சியும் நடைபெற்றது. அதிலும் பங்குபெற எண்ணி, இந்தமுறை கொழும்போடு யாழ்ப்பாணமும் (ஜாஃப்னா) சேர்ந்துகொண்டது எங்கள் திட்டத்தில். நான், பத்ரி, சத்ய நாராயண், மணிவண்ணன் (விற்பனை மேலாளர்), மணிகண்டன் (மார்க்கெடிங் டிசைனர்), சிவகுமார் (மண்டல விற்பனை பிரதிநிதி) என ஆறு பேர் மூன்று குழுக்களாக வேறு வேறு தினங்களில் இலங்கை சென்றோம்.

ஆய்புவன் என்ற பதாகைகளோடு வரவேற்றது கொழும்பு பன்னாட்டு விமான முனையம். எல்லா முக்கியமான இடங்களிலும் தமிழிலும் அறிவிப்பு வைத்திருந்தார்கள். சில அழகான தமிழ்ப் பயன்பாடுகளோடு, சமிஸ்கிருத பயன்பாடும் கலந்த தமிழாக இருந்தது அது. இது தரிப்பிடம் அல்ல (இது நிற்குமிடமல்ல) எனத் தொடங்கியது எங்களுக்கான இலங்கைத் தமிழ். டியூக் மோகன் எங்களை வந்து அழைத்துக்கொண்டு சென்றார். போன் பேசுவது, குறிப்பு எழுதுவது, சாலையைத் தவிர மற்ற இடங்களைப் பார்ப்பது, எங்களுடன் பேசுவது என்ற வேலைகளுக்கு இடையே, சாலையையும் பார்த்துக்கொண்டு வண்டி ஓட்டுவார். முதல் விமானப் பயணம் என்பதால் லேசாகப் பயந்தோம் என்று சொல்லிக்கொண்டு வந்த மணிகண்டன் முகத்தில் டியூக் வேன் ஓட்டுவதைக் கண்டு லேசான கலவரம் தெரிந்ததைப் பார்த்தேன். என் கண்ணிலும் அவர் அதைக் கண்டிருக்கக்கூடும்!

டியூக்குடன் பேசுவது மிக எளிது. காரணம் நீங்கள் எதுவுமே பேசவேண்டியிருக்காது. நமக்கான விஷயங்களையும் சேர்த்து அவரே பேசிவிடுவார். அவரது தமிழ் மெல்ல விளங்கத் தொடங்கியதும், இலங்கைத் தமிழில் ஒரு மணி நேரத்தில் கரை கண்டுவிட்டோமே என நினைத்துக்கொண்டேன் - யாழ்ப்பாணத்து நாதனைச் சந்திக்கும் வரை. நாதன் ஒரு சுவாரஸ்யமான மனிதர். அவருக்கு எப்படியும் 34 வயது இருக்கும் என நினைத்துக்கொண்டிருந்தபோது, தனக்கு 44 வயது எனச் சொல்லி அதிர வைத்தார். நாங்கள் நாதனைச் சந்தித்தது யாழ்ப்பாணத்தில். கொழும்பிலிருந்து ராணுவ விமானத்தில் யாழ்ப்பாணம் சென்றோம். இதனை ஒரு சாகசப் பயணம் என்றே சொல்லவேண்டும். 15 பேர் மட்டுமே அமரமுடியும் ஓர் சிறிய விமானம். ஒப்பீட்டளவில் ஸ்டார் சிட்டி பைக்கைவிடக் கொஞ்சம் பெரியது என்று சொல்லலாம்! இரண்டாம் விமானப் பயணமே இப்படி உயிரைப் பிடித்துக்கொண்டு போகக்கூடியதாக இருக்கும் என மணிகண்டன் நினைத்திருக்க வாய்ப்பில்லை. நான் ஏற்கெனவே துபாயிலிருந்து கிஷ் தீவுக்கு இதுபோன்ற ஒரு விமானத்தில் சென்றிருந்ததால் எனக்கு அதிகப் பயம் ஏற்படவில்லை. ஆனால் இதற்கும் சேர்த்து வரும்போது கலங்கிவிட்டேன் என்றே சொல்லவேண்டும். கிட்டத்தட்ட ஒன்றேகால் மணி நேரப் பயணம். பெரும்பாலும் கடல் மீது. அங்கங்கே சிறிது சிறிதாகத் தீவுகள். புங்குடுத் தீவு, நயினாதீவு எனப் பல தீவுகள். மரத்தடி இணையக் குழுமத்தில் மதி கந்தசாமி அவரது சொந்த ஊரான புங்குடுத் தீவு குறித்து எழுதிய மிகச் சிறந்த கட்டுரை நினைவுக்கு வந்தது. சமீபத்தில் யாழ்ப்பாணத்து ராஜா தியேட்டர் பற்றி கானா பிரபா எழுதிய இடுகையும் நினைவுக்கு வந்தது. இரண்டையுமே பார்க்க நேரமில்லாமல் போய்விட்டது. யாழ்ப்பாண ராணுவ மையத்திலிருந்து பேருந்து நிலையத்துக்கு பேருந்தில் வந்தோம். வழியில் திருநெல்வேலி எல்லாம் வந்தது. பாதையெங்கும் பெரிய பெரிய வீடுகள், தோட்டங்கள், ராணுவ பதுங்கு குழிகள், செல்லால் கடுமையாகத் தாக்கப்பட்டு இடிந்து கிடந்த வீடுகள் என, எங்களுக்கு, புதிய தோற்றங்கள்.

நாதன் யாழ்ப்பாணத்துத் தமிழில் பேசினார். திடீரென்று ஓ என்றும் ஓய் என்றும் சத்தங்கள் எழுப்பினார். அது ஆமாம் என்பதற்கு இணையான வார்த்தைப் புழக்கம் என்பது எங்களுக்கு மெல்லப் புரிந்தது. டியூக்கின் தமிழ் புரிந்தது பெரிய காரியமில்லை, யாழ்ப்பாணத்துத் தமிழ்தான் உண்மையான சவால் என்றும் புரிந்தது. அவர் பேசிய பல வார்த்தைகள் விளங்கவில்லை, ஓ, ஓய் தவிர. நன்கு பழகிய பின்பு, நாங்கள் அவரை ஓ என்று கிண்டல் செய்ய, அவர் ஆமாம் ஆமாம் என்று கிண்டல் செய்து பழி தீர்த்துக்கொண்டார். யாழ்ப்பாணத்து பேருந்து நிலையத்திலிருந்து நாங்கள் தங்குமிடத்துக்கு வேனில் சென்றோம். இனி அனுபவங்களை சில பகுப்புகளாக எழுதிவிடலாம் என நினைக்கிறேன். சென்றதன் முதன்மை நோக்கம் புத்தகக் கண்காட்சி என்பதால் அதிலிருந்தே தொடங்குவதான் நாம் செய்யும் தொழிலுக்கு மரியாதை!

யாழ்ப்பாணத்தில் நடந்தது கல்வியியல் புத்தகக் கண்காட்சி. பள்ளி, கல்லூரி முடித்த மாணவர்களை ஈர்த்து, அடுத்து என்ன படிக்கலாம் எனச் சொல்லும் நோக்கத்துடன் (பெரும்பாலும் வெளிநாட்டில் படிக்க அழைத்துச் செல்லும் நோக்கத்துடன்) நடக்கும் கண்காட்சி. அதில் புத்தகம் விற்கும் நோக்கத்துடன் கடை பரப்பிய ஒரே அரங்கு எங்களது மட்டுமே. முதல் நாள் நாங்கள் கிட்டத்தட்ட 40 பெட்டிகள் புத்தகங்களுடன் அங்கே புத்தகங்களை அடுக்கத் தொடங்கினோம். மற்ற அரங்குகள் எல்லாம் அரை மணி நேரத்தில் ஃபிளக்ஸ், பிட் நோட்டிஸ் என தயாராகிவிட்டன. நாங்கள் புத்தகங்களை அடுக்கி முடிக்க 5 மணி நேரம் பிடித்தது. எல்லா அரங்கு நிர்வாகிகளும் எங்களைப் பார்த்துச் சிரித்திருப்பார்கள். எங்களுக்கே கூட இங்கே வந்தது பிழையோ என்னும் எண்ணம் தோன்றிவிட்டது. மறுநாள் கண்காட்சி நடந்தபோது, மற்ற எந்த அரங்கிலும் கூட்டமில்லை, கிழக்கு அரங்கைத் தவிர. எல்லா அரங்குகளின் பிரதிநிதிகளும் எங்கள் அரங்கைப் பார்வையிட்டார்கள். மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டார்கள். அனைவரும் புத்தகங்களும் வாங்கினார்கள். இது ஒரு புதுமையான அனுபவம். உதயன் பத்திரிகையில் ஒரு விளம்பரம் ஒன்று கொடுத்திருந்தோம். அதனுடன் பத்ரியின் சிறிய நேர்காணலும் வந்திருந்தது. அதைப் பார்த்துவிட்டு புத்தகம் வாங்க வந்தவர்கள் பலர்.

இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ்ப்பத்திரிகைகள் அங்கிருக்கும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஒரு சக்தியாக விளங்குகின்றன. இதனால் நாங்கள் தந்த விளம்பரம் பலரைச் சென்றடைந்தது. தமிழ்நாட்டு தனியார் சானல்களால் இப்போதுதான் அதிகமாகப் பீடிக்கப்பட்டிருக்கும் யாழ்ப்பாணம் இனி வரும் காலங்களில் இந்த பத்திரிகை ஒருங்கிணைப்பில் இருந்து விலகும் என்பதை நினைக்கவே வருத்தமாக இருந்தது. இலங்கையின் எழுத்தறிவு 96% முதல் 99% சதம் வரை என்று சொன்னார்கள். யாழ்ப்பாணத்து மக்கள் புத்தகம் வாசிப்பதை ஒரு முக்கியமான பழக்கமாகவே வைத்திருக்கிறார்கள் என்றுதான் தோன்றியது. இன்னும் நல்ல விளம்பரம் செய்து புத்தகக் கண்காட்சி நடத்தினால் பெரிய அளவில் புத்தக விற்பனை நடைபெறும் என்பதில் ஐயமில்லை. முதல் முறை என்பதால் எங்களால் சிறப்பான முறையில் புத்தகங்களை டிஸ்பிளே செய்ய இயலவில்லை. எந்த புத்தகங்கள் விற்பனை ஆகும், ஆகாது என்பதில் குழப்பம் இருந்தது. அப்படி இருந்தும் நல்ல விற்பனை நடந்தது. எல்லாம் சரியாகச் செய்திருந்தால் இன்னும் 3 மடங்காவது விற்பனை கூடியிருக்கும்.

புத்தகக் கடைகள் என்று பார்த்தால், எனக்குத் தெரிந்து, பூபாளசிங்கம் புத்தகக் கடையும், அன்னை புத்தக நிலையமும் யாழ்ப்பாணத்தில் உள்ளன. பூபாளசிங்கம் புத்தகக் கடை இன்னொன்றும் யாழ்ப்பாணத்திலேயே உள்ளது.இரண்டுமே யாழ்ப்பாணத்து பேருந்துநிலையத்துக்கு அருகில் உள்ளன. இரண்டு கடைகளிலும் புத்தக விற்பனை நன்றாகவே நடைபெறுவதாக அறிந்தேன். இந்த இரண்டு புத்தகக் கடைகளிலும் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் கிடைக்கின்றன.

இலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றால் மரியாதையாகவே பார்த்தார்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டின் மீது வருத்தம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அது பேச்சில் வெளிப்பட்டாலும், நடவடிக்கையில் வெளிப்படவே இல்லை. யாழ்ப்பாணமும் தமிழ்நாட்டிலுள்ள ஒரு மாநிலத்தில் இருந்த உணர்வையே தந்தது. யாழ் நூலகத்துக்குச் சென்றோம். பார்வையாளர்கள் நேரத்தில் வரச் சொன்னார்கள். இரண்டாம் நாள் மீண்டும் சென்றோம். அப்போதும் பார்வையாளர்கள் நேரத்திலேயே வரச் சொன்னார்கள். அந்த நேரத்தில் புத்தகக் கண்காட்சியில் பிஸியாக இருப்போம் என்று சொல்லி, இப்போதே அனுமதிக்கக் கேட்டோம். இந்தியர்கள் இருவர் வந்திருக்கிறார்கள் என்று வெளியில் இருந்த பாதுகாவலர் அனுமதி கேட்டபோது, உள்ளிருந்து அனுமதி உடனே தரப்பட்டது. அங்கிருந்த முதன்மை நூலகரையும் சந்தித்திப் பேசினோம். கிட்டத்தட்ட ஒரு லட்சம் நூல்கள் உள்ளன. அதில் 40,000 நூல்களை மட்டுமே பட்டியலில் அச்சடித்து வைத்திருக்கிறார்களாம். மீதி புத்தகங்களையும் பட்டியலில் சேர்க்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது என்றார் நூலகர். அந்தப் பட்டியல் கிடைக்குமா என்று கேட்டேன். அது நூலகங்களுக்கான தனிப்பட்ட சாஃப்ட்வேர் ஃபைலாக இருப்பதாகச் சொன்னார். அதனை வாங்கிப் பயனில்லை என்பதால் விட்டுவிட்டேன். தமிழகத்தில் ஓர் அரசு அலுவலகத்தில் இது போன்று ஒரு பட்டியலையோ வேறு ஏதேனும் ஒன்றையோ கேட்டால் கொஞ்சம் பயந்துவிடுவார்கள். கொழும்பு புத்தகக் கண்காட்சியிலும், பள்ளியிலிருந்து புத்தகக் கண்காட்சியைப் பார்க்க வந்த தமிழ் வாத்தியார்கள் நாங்கள் கேட்ட ஆவணங்களையெல்லாம் உடனே எங்கள் பார்வைக்குத் தந்தார்கள். அவரிடம் கேட்கவேண்டும், இவரிடம் கேட்கவேண்டும் என்று சொல்லிப் பின்வாங்கவில்லை.

யாழ்ப்பாணக் கல்வியியல் கண்காட்சியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடங்கி வைத்தார். பத்ரியும் குத்துவிளக்கு ஏற்றினார். (நல்லூரு முருகனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று. பிற திருவிளையாடல்கள் பின்னர் வரும்!) கனிமொழி ராஜபக்‌ஷேவைப் பார்த்துச் சிரித்ததைக் கண்டு வெகுண்டவர்கள், பத்ரி டக்ளஸ் தேவானந்தாவுடன் சிரித்துக்கொண்டு பேசுவதைப் பார்த்து என்ன சொல்லப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. கிழக்கு பதிப்பகம் என்பதைப் பார்த்துவிட்டு, கிழக்கு என்றால் என்ன என்று டக்ளஸ் தேவானந்தா கேட்டதாகச் சொன்னார்கள். பின்னர்தான் புரிந்தது, அங்கே கிழக்கு என்றால் மட்டக்கிளப்பு மாகாணம் என்னும் ஒரு பொருள் உண்டு என. புத்தகக் கண்காட்சிக்கு வந்தவர்கள் பலரும் இதனைக் கேட்டார்கள்.

யாழ்ப்பாணப் புத்தகக் கண்காட்சி நடந்த ஜாஃப்னா செண்ட்ரல் காலேஜ் கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் பாரம்பரியம் உள்ளது. ஆறுமுக நாவலர் இந்தக் கல்லூரியில்தான் பயின்றார் (அல்லது பயிற்றுவித்தார்) என நினைக்கிறேன். யாழ்ப்பாணம் வலுவான, முதன்மையான கல்வியியல் மையமாக இருந்தது என்று பத்ரி குறிப்பிட்டார். யாழ்ப்பாணப் புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர் யேசுராசாவைச் சந்தித்தித்தோம். அவரது வழக்கமான பாணியில் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய அவரது கருத்துகளை மறைக்காமல் பகிர்ந்து கொண்டார். சிறீதரணின் ‘ராமாயணக் கலகம்’ குறுநாவல் பற்றி ராயர் காப்பி க்ளப்பில் படித்திருக்கிறேன். அக்கதை உள்ள புத்தகம் எங்கே கிடைக்கும் என்று கேட்டபோது, சிறீதரணின் கதைகளின் தொகுப்பு விரைவில் வெளிவரும் என்றும், பத்மநாப ஐயர் அதற்கான முனைப்பில் உள்ளார் என்றும் குறிப்பிட்டார். சிறீதரணின் அக்கதை, ‘கண்ணில் தெரியுது வானம்’ என்னும் தொகுப்பில் உள்ளது என்றும் சொன்னார். ‘கண்ணில் தெரியுது வானம்’ புத்தகத்தை முன்னர் எனக்கு அனுப்பியிருந்தார் பத்மநாப ஐயர். மீண்டும் படிக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன். யேசு ராசா பல்வேறு எழுத்தாளர்கள், இலங்கைத் திரைப்பட இயக்குநர்கள் எனப் பல விஷயங்களைத் தொட்டுப் பேசிக்கொண்டிருந்தார். எனக்கு வேலை இருந்ததால் அவருடன் நிறைய பேசமுடியவில்லை. சிறிது நேரம் பத்ரி அவருடன் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் விடைபெற்றுக்கொண்டார்.

யாழ்ப்பாணத்து நல்லூர் முருகன் கோவிலுக்குப் போயே திரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. புத்தகக் கண்காட்சி 6 மணிக்கு முடியவும் முருகன் கோவில் செல்லலாம் என நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் 7 மணிக்கே யாழ்ப்பாணமே கிட்டத்தட்ட உறங்கிவிடுவதால், கோவில் திறந்திருக்குமா என்ற ஐயமும், அப்படியே திறந்திருந்தாலும், அங்கிருந்து திரும்ப வர ஆட்டோ கிடைக்குமா என்ற எண்ணமும் எழுந்ததால், மறுநாள் காலை செல்லலாம் என முடிவெடுத்தோம். பத்ரியும், சத்யாவும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். அவர்களும் வருவதாகச் சொன்னதும், நல்லூர் முருகனின் சக்தி எனக்குப் புரிந்துபோனது. ‘நீ பாட்டுக்கு ஒரு பக்கம் சாமி கும்பிடு, நான் இன்னொரு பக்கம் நாத்திகம் பேசறேன்’ என்றார் பத்ரி. நாத்திகம் பேசாத இடத்தில் ஆத்திகம் மனப்பதில்லை என்பதால், அதுவும் முருகனின் திருவிளையாடலில் ஒன்றே என நினைத்துக்கொண்டேன். :> கோவிலில் பத்ரி விபூதி தரித்து காட்சியளித்தார். முருகனைக் கும்பிடுவதா இவரைக் கும்பிடுவதா எனக் குழம்பிய நிலையில், இதுவும் முருகனின் திருவிளையாடல் என்னும் தெளிவு வந்தது!

நல்லூர் முருகன் கோவிலில் ஓரளவு கூட்டம் இருந்தது. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் வெளியில் கடை போட்டு, டோக்கன் போட்டு, வரிசையில் விடும் அளவுக்குக் கூட்டம் வரும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. யாழ்ப்பாணத்தில் சண்டை நடந்துகொண்டிருந்தபோது, அந்தக் கோவிலில் யாருமே இருக்கமாட்டார்களாம். இப்போது யுத்தம் ஓய்ந்த பிறகு கோவிலின் புனரமைப்பு வேலைகள் தொடங்கியிருக்கின்றன. அக்கோவிலின் திருவிழா நடந்து முடிந்து ஒரு வாரம்தான் ஆகியிருக்கிறது என்றார் அன்னை புத்தக நிலையத்தின் நிறுவனர். அந்தத் திருவிழாவை ஒட்டி அங்கே புத்தகக் கண்காட்சி நடத்தியதாகவும் சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது.

யாழ்ப்பாணத்தில் இன்னொரு கல்லூரியில் வேறு ஒரு புத்தகக் கண்காட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அடுத்த முறை அதிலும் பங்கேற்கவேண்டும் என நினைத்துக்கொண்டோம்.

யாழ்ப்பாணத்தில் மலாயன்
என்னும் கடையில் சைவ உணவு சாப்பிட்டோம். அசைவ உணவுக் கடைக்குள் சென்றாலே மீனின் வாடை (வாசம்?!) மூக்கைத் திணறடிக்க, அக்கடையில் சைவ உணவைச் சாப்பிட என்னால் இயலவில்லை. நல்ல சைவக் கடை எது என விசாரித்து மலாயன் கடைக்குச் சென்றோம். மரக்கறி உணவு என்றார்கள். மரக்கறி என்றால் சைவம்தான் என உள்ளூரத் தோன்றினாலும், கறி என்னும் வார்த்தை கொஞ்சம் பயத்தைக் கொடுத்தது. இலங்கையில் வெள்ளிக் கிழமைக்கு பெரும் முக்கியத்துவம் உள்ளது. அன்று, குறிப்பாக யாழ்ப்பாணத்தில், பலரும் மரக்கறி உணவையே சாப்பிடுகிறார்கள். அதனால் மலாயன்
கடையில் கடுமையான கூட்டம். உருண்டை உருண்டையாக சம்பா அரிசி பரிமாறி, அதன் மேலேயே ஒரு ஓரத்தில் சாம்பார், இன்னொரு ஓரத்தில் பொரியல், இன்னொரு ஓரத்தில் கூட்டு, இன்னொரு ஓரத்தில் சென்னா என எல்லாவற்றையும் பரிமாறிவிட்டார்கள். இங்கே எல்லாவற்றையும் தனித்தனியாக உண்ட எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அதன் சுவை அசர வைத்துவிட்டது. இரண்டாவது முறையும் அதே போல் வாங்கி உண்டேன். மறுநாளும் அதே கடைக்கு வந்து அதே போல் சாப்பிட்டேன். அப்படி ஒரு சுவை. மலாயன் கடை மட்டும் அங்கே இல்லாவிட்டால் நான் மிகவும் ஆடிப் போயிருப்பேன். நாதனுக்கு அசைவம் இல்லாவிட்டால் உணவே உள்ளே இறங்காதாம். ஆனால் நாங்கள் அங்கிருந்த 3 நாளும் நாங்கள் சைவக் கடையில் சாப்பிட்டபோதெல்லாம் அவரும் சைவமே சாப்பிட்டார். சாப்பாடு என்றில்லாமல் டிஃபன் என்று பார்த்தால், எல்லாக் கடைகளிலும் இடியாப்பமே கிடைக்கிறது. அதுவும் சம்பா அரிசியில் செய்தது. தொட்டுக்கொள்ள எல்லா நாளும் சொதி தருகிறார்கள். நாம் சென்று அமர்ந்தவுடன் ஒரு தட்டில் 40 இடியாப்பம், 5 வடை, 5 தோசை என வைத்து விடுகிறார்கள். நமக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளவேண்டும். மீதியை எடுத்துக்கொண்டு போய், எவ்வளவு மீதி உள்ளதோ அதிலிருந்து நாம் உண்டதைக் கண்டுபிடித்து பில் போடுகிறார்கள். நாங்கள் புத்தகக் கண்காட்சியில் விற்பனையான புத்தகங்களை இப்படித்தான் கண்டுபிடிப்போம். இங்கே வந்தும் ரிகன்சிலேஷனா எனப் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தோம்.

புங்குடுத் தீவு, நைனாத்தீவுக்கு செல்ல நினைத்தோம். நேரமின்மையால் செல்ல இயலவில்லை. யாழ்ப்பாணத்து இளநீரைக் குடிக்க முடியவில்லை என்று நாதனிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். மறுநாள் காலை, நாங்கள் கொழும்பு செல்லும் முன்பு, இரண்டு இளநீரைக் கொண்டுவந்தார். நானும் பத்ரியும் குடித்தோம். இலங்கையில் நான் குடித்த இள நீரைப் போன்ற சுவையில் தமிழ்நாட்டில் எங்கேயும் குடித்ததில்லை. நாதனின் அன்புக்கு நன்றி சொல்லிவிட்டு, ஜாஃபனா ராணுவத் தளத்திலிருந்து கொழும்புக்கு எங்களைத் தூக்கிச் செல்லும் ராணுவ விமானத்தை நினைத்து பயந்தபடியே எங்கள் பயணத்தை கொழும்பு நோக்கித் தொடர்ந்தோம்.

யாழ்ப்பாணம் மறக்கமுடியாத ஊர்.

இனி கொழும்பு பன்னாட்டு புத்தகக் கண்காட்சிக்குச் செல்வோம்....

சென்னை, பெங்களூரு, டெல்லி புத்தகக் கண்காட்சிகளுடன் இப்புத்தகக் கண்காட்சியை என் மனம் ஒப்பிட்டுக்கொண்டே இருந்தது. அது எப்படி சென்னை புத்தகக் கண்காட்சியையும் கொழும்பு புத்தகக் கண்காட்சியையும் ஒப்பிடலாம் என்பவர்கள் இங்கேயே நிறுத்திக்கொள்ளவும். மிகப் பெரிய அளவுகோல்கள் இல்லாமல், நாம் இதனைச் செய்யவில்லையே என்னும் பெரிய ஆதங்கமே என் ஒப்பிடுதலின் மையப்புள்ளி.

டெல்லி புத்தகக் கண்காட்சியுடன் ஒப்பிட்டால், இந்தக் கொழும்பு புத்தகக் கண்காட்சி கொஞ்சம் சிறியது. ஆனால் உள்ளரங்க அமைப்புகளின் சுத்தம், டெல்லியில் காண இயலாதது. பெங்களூரு புத்தகக் கண்காட்சி நல்ல சுத்தத்துடன் நடைபெற்றாலும், கொழும்பு புத்தகக் கண்காட்சியில் பன்னாட்டுத் தரம் அதில் இல்லை. இவற்றோடு சென்னை புத்தகக் கண்காட்சியை ஒப்பிடுவதே நாம் இவற்றுக்குச் செய்யும் அவமரியாதை என்றாலும், இப்படி ஒப்பிடாமல் நம்மால் வளர இயலாது என்பதால்... எனக்கே முடியலை. சென்னையில் 33 வருடங்களாகப் புத்தகக் கண்காட்சி நடத்துகிறோம். நமக்குத் தெரிந்ததெல்லாம் வெற்று பரப்பு அரசியல் மட்டுமே. ஒரு பதிப்பகத்துக்கு இதுக்கு மேல இடம் கொடுக்காத, அங்க அதை வைக்காத, இது யார் ஏன் உன் புத்தகத்தை விக்கிறாங்க என்பது போன்ற மிகவும் மட்டமான அரசியல் மட்டுமே நமக்குத் தெரிந்தது. ஏனென்றால் நாம் பல புத்தகக் காட்சிகளைச் சென்று பார்ப்பதில்லை. எப்படியெல்லாம் மிக மோசமாகப் பின் தங்கியிருக்கிறோம் என்று ஆராய்வதில்லை. புத்தகக் கண்காட்சியைத் திறக்க ஜெயலலிதாவோ கருணாநிதியோ வருவார்களா என்பதில் குறி வைத்துத்தான் கண்காட்சியையே தொடங்குகிறோம். புத்தகக் கண்காட்சி என்றால் புத்தகம் விற்பது மட்டும்தான் என்னும் ஒற்றைக் குறிக்கோளில் ஊறிப் போய் இருக்கிறோம். என்றாவது கருணாநிதியாவது ஜெயலலிதாவாவது பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள கழிப்பறைக்குப் போக நேர்ந்தால் அப்போது தெரியும் அதன் அவமானம் புத்தகக் கண்காட்சியை நடத்துபவர்களுக்கு.

கொழும்பு புத்தகக் கண்காட்சி முழுக்க முழுக்க மையப்படுத்தப்பட்ட குளிர் சாதன அறையில் நடந்தது. விளக்குகளால் அந்த இடமே பகல் போலப் பளபளத்தது. வழியெங்கும் புத்தகக் கண்காட்சியைப் பறை சாற்றும் பதாகைகள். கண்ணில் காணும் இடமெல்லாம் விளம்பரங்கள். புத்தகக் கண்காட்சி நடக்கும் சாலையின் இரு மருங்கும் புத்தகக் கண்காட்சியைச் சொல்லும் விளம்பரங்கள். கொஞ்சம் மிகையாகச் சொல்வதென்றால், அதைப் பார்வையற்ற ஒருவரால் கூட உணர்ந்துவிடமுடியும். இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை, முக்கிய இடங்களுக்கு இரண்டு இலவசப் பேருந்துகள். தொடர்ந்து உயர்தர மொழியில் அறிவிப்புகள். சென்னை புத்தகக் கண்காட்சியில் அறிவிப்பாளர்களுக்கு விசாரணையின்றி மரண தண்டனை தரலாம். யாரோ ஒரு நிர்வாகி பேசுவார். வணக்கம். ஹலோ, கொஞ்சம் பேசாம இருங்க. வணக்கம். புத்தகக் கண்காட்சிக்கு... புத்தகக் காட்சிக்கு வந்திருப்பவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.. வரவேற்கிறோம். புத்தகங்கள் விற்பனைக்கு வைத்துள்ளது. புத்தகங்களை தொலையாமல் பார்த்துக்கொள்ளப் படுவீர்கள் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். இப்படி என்னவெல்லாமோ பேசுவார்கள். பேசிக்கொண்டிருக்கும்போதே அங்க என்னப்பா என்றெல்லாம் பக்கத்தில் பேசிக்கொள்வார்கள். அதுவும் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பாகும். நீண்ட அரங்கில் பின்னால் உள்ளவர்களுக்கு அவர்கள் பேசுவதே கேட்காது. அந்த அழகில் இருக்கும் ஒலிபெருக்கிகள். கொழும்பு பன்னாட்டுப் புத்தக நிலையத்தில் இந்த ஒலிபரப்புக்க்கென்றே தனியான தனித்துவம் பெற்ற குழு. கூட்டம் உள்ள நேரத்தில் அதிக ஒலி வைத்துப் பேசினார்கள். இதெல்லாம் சின்ன விஷயம் என்னும் மனப்பான்மைதான் நம்மை நசிந்து போகச் செய்கிறது. இத்தனைக்கும் கொழும்பு பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடப்பது இது 12ம் வருடம். 33 வருடங்கள் அனுபவம் உள்ள நாம் கிட்டத்தட்ட 20 வருடங்கள் பின் தங்கியிருக்கிறோம். குறைந்தபட்சம் இதெல்லாம் தேவை என்னும் மனப்பான்மையாவது நமது புத்தகக் கண்காட்சியை நடத்துபவர்களுக்கு வருமா எனத் தெரியவில்லை.

கொழும்பில் போயா நாள் (பௌர்ணம் தினம், இலங்கைத் தமிழில் பூரண தினம் என்று அறிவித்தார்கள்) விடுமுறை நாள். பெரும்பாலான கடைகளுக்கு விடுமுறை. மது விற்கக்கூடாது, மாமிசம் விற்கக்கூடாது என்று சொல்லிக்கொண்டார்கள். (உண்மையா எனத் தெரியவில்லை.) தனிப்பயிற்சியும் வைக்கக்கூடாதாம். அனைவரும் புத்த விகார்களுக்குச் செல்வதற்காக இந்த ஏற்பாடாம். என்ன ஒரு அதிகாரம்! தமிழ்நாட்டில் அமாவாசை அன்று விடுமுறை விட்டு, மது விற்கக்கூடாது, கோவிலுக்குச் செல்லுங்கள் என்று சொன்னால் என்ன ஆகும்? அப்படி செய்யாமல் இருக்கும்வரை மட்டுமே நம் நாடு இந்தியா. விடுமுறை நாளில் கூட்டம் குவிந்துவிட்டது. ஒரு கட்டத்தில் ஒன்றுமே செய்ய இயலவில்லை. நாங்களே வெறும் பார்வையாளராக மாறிப் போனோம்.

பல கடைகளில் வரிசையில் நின்று உள்ளே போனார்கள். சார்சவி, எக்ஸ்போ கிராபிக்ஸ் போன்ற அரங்குகள் எல்லாம், உள்ளே நுழையும் வழியை அடைத்துவிட்டன. கடைக்குள்ளே இருப்பவர்கள் புத்தகங்களை வாங்கிவிட்டு வெளியில் வந்த பின்புதான், வெளியில் இருப்பவர்கள் உள்ளே செல்லமுடியும் என்று சொல்லிவிட்டார்கள். வெளியில் இருப்பவர்கள் பொறுமையாக வரிசையில் நின்றார்கள். சொர்க்க வாசல் திறந்ததும் பக்தர்கள் திமுதிமுவென்று உள்ளே ஓடுவது போல, அரங்கின் கதவு திறந்ததும் வெளியில் காத்திருந்தவர்கள் உள்ளே ஓடினார்கள். நம் ஊரில் இப்படி ஒரு காட்சியை நான் பார்த்ததே இல்லை. கிழக்கு பதிப்பகத்தின் அரங்கை மூடி வைத்து, கொஞ்சம் காத்திருங்க என்றால், யார் காத்திருப்பார்கள் என நினைத்துப் பார்த்தேன். அப்படி காத்திருக்கும் நாள்தான் பதிப்பாளர்களுக்கான பொன்னாள்.

கொழும்பு பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் அமைப்பாளர்கள் செய்த பிழை என்றால், அரங்க நடைபாதையைச் சிறியதாக அமைத்ததுதான். இதனால் கொஞ்சம் பேர் போனாலே அங்கே ஜாம் ஆகிவிடும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதிலும் விடுமுறை நாள்களில் யாராவது இது குளிரூட்டப்பட்ட அறை என்று சொன்னால் சிரிப்பார்கள். அந்த அளவுக்குக் கூட்டம், வெக்கை. மற்ற நாள்களில் அதே அரங்கத்தில் குளிரில் நின்றுகொண்டிருந்தோம். தேடித் தேடி ஏசியை அணைத்தோம்.

கொழும்பு புத்தகக் கண்காட்சியின் இன்னொரு பிரச்சினை, அரசு பள்ளி கல்லூரிகளுக்குத் தரும் பண ஒதுக்கீடு. இதிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ளவேண்டியது உள்ளது.
புத்தகக் கண்காட்சியை ஒட்டி, இலங்கை முழுவதுமுள்ள அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் என எல்லாவற்றுக்கும் அரசால் பண ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ், சிங்களப் பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் 65 ஆயிரம் இலங்கை ரூபாய்! ஆங்கிலப் பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய். கல்லூரிகளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய். பல்கலைக்கழகங்கள் எவ்வளவு வேண்டுமானால் வாங்கிக் கொள்ளலாமாம்.
இந்தப் புத்தகக் கண்காட்சியில் வாங்கவேண்டும் என்பது விதி. எனவே இந்தத் தொகையைச் செலவிட, எல்லாப் பள்ளிகளும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வருகின்றன. கிட்டத்தட்ட 30 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் வந்தார்கள். திரிகோணமலையிலிருந்து, யாழ்ப்பாணத்திலிருந்து என எல்லாப் பகுதியிலிருந்தும் வந்து புத்தகங்கள் வாங்கினார்கள். இதன் தோல்வி என்று நான் பார்ப்பது, இங்கே வருபவர்கள் பள்ளிக்கு என பள்ளிப் பாடங்கள் தொடர்பான புத்தகங்களை மட்டுமே வாங்குவதைத்தான். இதனால் பள்ளிகளுக்கு விற்பதற்கென்றே ஒரு சந்தை உருவாகி, அது தொடர்பான புத்தகங்களையே பதிப்பிக்கிறார்கள். இதனால் ஒட்டுமொத்த புத்தகக் கண்காட்சியும் இந்த அரசு கல்லூரிகளையும் பள்ளிகளையும் சார்ந்திருப்பது போன்ற தோற்றம், குறிப்பாக பதிப்பாளர்கள் மத்தியில், ஏற்பட்டுவிடுகிறது. அரசு ஒதுக்கும் பணத்தை, பள்ளிப் பாடங்கள் அல்லாத, பொதுப் புத்தகங்களை வாங்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்குமானால் அது நல்லது. இல்லையென்றால், இந்த விற்பனையை மையப்படுத்தி மட்டுமே புத்தகங்கள் தயாரிக்கும் வழக்கம் நிலைப்பெற்றுவிடும். இதில் இன்னொரு விஷயம், பில்லில் உள்ள தொகையைவிடக் குறைவாகப் பணம் கொடுத்து, பில்லில் உள்ள பணத்துக்கு அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றுக்கொள்வது. இதை எல்லாருமே அங்கே ஏற்றுக்கொள்கிறார்கள். இல்லை என்றால், பள்ளிகள் வேறு பதிப்பாளரிடம் இருந்து வாங்கிடுவார்கள் என்று அச்சம் கொள்கிறார்கள். எல்லா பதிப்பாளர்களும் சேர்ந்து இதனை எதிர்த்தால், பள்ளிகள் செல்ல வேறு இடமில்லை என்பது இவர்களுக்குப் புரியவில்லை. தமிழ்நாட்டு அரசும் புத்தகக் கண்காட்சியை ஒட்டு, ஒரு குறிப்பிட்ட தொகையை அரசுப் பள்ளிகளுக்கும், அரசு மானியம் பெறும் பள்ளிகளுக்கும் ஒதுக்கலாம். அதனை அந்த அந்தப் பகுதியில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் வாங்கவேண்டும் என்று கட்டாயப் படுத்தலாம். இதனால் பள்ளிகளுக்கு புத்தகம் வாங்கும் பழக்கம் ஏற்படுவதோடு, நாமே அறியாமல் ஒரு பெரிய நூலகம் பள்ளிகள் தோறும் உருவாகும். அதுமட்டுமின்றி, எங்கெல்லாம் புத்தகக் கண்காட்சி இல்லையோ அங்கெல்லாம் நடத்தியே தீர வேண்டிய வியாபார நிர்ப்பந்தமும் ஏற்படும். இது அந்த அந்தப் பகுதி மக்களுக்கும் நல்லது. கருணாநிதியின் கால்ஷீட் வாங்குபவர்கள் இதனையும் பேசி வாங்குவது நல்லது.


நான் கொழும்பில் இருந்த மூன்று நாள்களில், முதல்நாள் மிதமான மழை. மற்ற இரண்டு நாள்கள் முழுவதும் நல்ல மழை. ஆனால் மழையோடு வாழப் பழகிவிட்டவர்கள் போல, மழை நாள்களிலும் குடையோடு புத்தகக் கண்காட்சிக்கு மக்கள் வந்த வண்ணம் இருந்தார்கள். சென்னை புத்தகக் கண்காட்சியின் பெரிய சாதனை அதற்குக் கூடும் மக்கள் கூட்டம். விடுமுறை நாள்களில், கொழும்பு புத்தகக் கண்காட்சிக்கு இணையான கூட்டத்தை நாம் சென்னையிலும் பார்க்கமுடியும். ஆனால் வேலை நாள்களில், கொழும்பு புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்கள் அதிகம். இன்னொரு ஆச்சரியம், காலை கடும் கூட்டம் தொடங்கி மாலையில் கூட்டம் ஓய்ந்துவிடுவது. சென்னையில், பெங்களூரில் எல்லாம் மாலைதான் கடும் கூட்டமே வரத் தொடங்கும்.

டெல்லியைப் போல கொழும்பிலும் பல்வேறு ஹால்களில் புத்தக அரங்கங்கள் அமைக்கப்படுவதால், சென்னை, பெங்களூருவைப் போல, இந்த வழியில் செல்லவேண்டும், நாளை அந்த வழியில் செல்லவேண்டும் என்னும் குழப்பங்கள் இல்லை. அதேபோல் ஒரு பதிப்பாளருக்கு ஓரிடம்தான் என்னும் பிரச்சினையும் இல்லை. ஒரு பதிப்பாளர் விரும்பினால் ஒவ்வொரு ஹாலிலும் அரங்கங்கள் அமைத்துக்கொள்ள முடியும். சென்னை புத்தகக் கண்காட்சியை பன்னாட்டுத் தரத்தில் டிரேட் செண்டரில் நடத்தினால், நாமும் இப்படிச் செய்யமுடியும். இல்லை என்றால், அரங்கம் எங்கே கிடைக்கிறதோ அதைப் பொருத்தே விற்பனை என்னும் நிலையை நம்மால் கடக்கவே முடியாது.

கிழக்கு அரங்கில் 5 பெண்கள் வேலை பார்த்தார்கள். சென்னையில் பெண்களை வேலைக்கு வைத்துக்கொள்வது பெரிய தொந்தரவு. (பெண்ணியவாதிகள் மன்னிக்க - இது யதார்த்தம் சார்ந்தது!) அவர்களுக்கு சரியான கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி சென்னையில் கிடையாது. மேலும் இரவு 8 மணிக்கே வீட்டுக்கு வந்து பழக்கப்பட்டுவிட்ட ஒரு பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறோம். அங்கே இரவு 9 மணிக்கு புத்தகக் கண்காட்சி முடிந்து, பெண்கள் இரவு 11.30க்குத்தான் வீட்டுக்குப் போனார்கள். மறுநாள் காலை புத்தகக் கண்காட்சிக்கு வர 6.30 மணிக்கே தயாராகிவிடுகிறார்கள். நம் அரங்கில் ஏதேனும் பெண்களை வேலைக்கு வைத்தால், அங்கே ஓர் இளைஞன் வந்து ஏதேனும் கேள்வி கேட்டால், அந்தப் பெண் பதில் சொல்லாமல் மெல்ல விலகி விடும் ஆபத்து அதிகம். கொழும்புவில் பெண்கள் மிக சகஜமாக ஆண்களுடன் பேசுகிறார்கள். பெரிய அளவில் சங்கோஜமெல்லாம் இருக்கவில்லை. இத்தலைமுறையைச் சேர்ந்த கொழும்பு வாழ்த் தமிழ்ப் பெண்களுக்கு பெரும்பாலும் சிங்களம் தெரிந்திருக்கிறது. இதுவும் பெரிய பலம். அவர்கள் பொட்டு வைத்திருந்தால் தமிழர்கள் என்று கண்டுகொள்ளலாம் எனச் சொன்னார் ஒருவர். இது போக பொட்டு வைத்துக்கொள்ளாத கிறித்துவ, இஸ்லாமியப் பெண்களைக் கண்டுபிடிப்பது கடினம் என நினைத்துக்கொண்டேன். ஆனால் இஸ்லாமியர்கள் பெரும்பாலும் தமிழர்களே என்றும் சொன்னார் அவர். (இதையெல்லாம் நான் ஆராய்ந்து சரியா தவறா எனப் பார்க்கவில்லை. கேட்டதைப் பகிர்ந்துகொள்கிறேன் என்பதை நினைவில் கொள்ளவும்.)


கொழும்பில் காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுவதால், எங்களால் அதிகம் வெளியில் சுற்றிப் பார்க்க இயலவில்லை. கொச்சுக்கடை சிவன் கோவிலுக்குச் சென்றோம். சூர்யாஸ் ஹோட்டலுக்குச் சென்று சைவ உணவு சாப்பிட்டோம். மதுராஸ் கடைக்குச் சென்றோம். இலங்கைக்காரர் ஒருவர் நடத்தும் ஹோட்டல், தமிழ்நாட்டு வுட்லாண்ட்ஸுடன் தொடர்புடையது என்று அங்கிருப்பவர் சொன்னார். உணவின் தரம் உயர்தரம்.கொழும்பு புத்தகக் கண்காட்சிக்கு மயூரன் வந்திருந்தார். அவர் பத்ரியுடன் பேசிக்கொண்டிருந்தார்.

கொழும்பின் 50 வருடப் பாரம்பரியமுள்ள ஒரு புத்தக விற்பனையாளருடன் பேசிக்கொண்டிருந்தேன். இந்த பத்து நாள்களில் 10 மில்லியன் இலங்கை ரூபாய்க்கு விற்பனை நடக்கும் என்றார். 60% ஆங்கிலப் புத்தகங்கள், 40% சிங்களப் புத்தகங்கள் என்றார். அப்படியானால் 4 மில்லியன் இலங்கை ரூபாய் சிங்களப் புத்தகங்கள் விற்பனை. அதாவது கிட்டத்தட்ட 16 லட்சம் இந்திய ரூபாய்க்கு சிங்களப் புத்தகங்கள் விற்பனை மட்டும். அப்படியானால் இதைவிட மிகப் பெரிய பதிப்பகங்கள் எப்படியும் இதைப் போல 5 மடங்கு விற்பனை செய்திருக்கலாம். இதில் சோகம் என்னவென்றால், இதில் பெரிய விழுக்காடு விற்பனை பள்ளி கல்லூரிகளை நம்பி மட்டுமே என்பதுதான். பல பதிப்பகங்கள் பள்ளி கல்லூரிகளுக்கென தனி பில்லிங் பிரிவே வைத்திருந்தன.

சிங்கள மொழியில் நிறைய தேவையான ஆங்கில மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன என்றும், இது தமிழில் இன்னும் நிகழவில்லை என்றும் பத்ரி சொன்னார். அதன் சாதக பாதக விஷயங்கள் குறித்தும் பேசினார். இது பற்றி பத்ரி எழுதுவார் என நினைக்கிறேன்.

நான் அங்கிருக்கும் கடைகளைச் சுற்றிப் பார்த்தேன். புத்தகங்களின் விலை ஒப்பீட்டளவில் இந்திய விலையைவிட அதிகமாகவே இருந்தன. அங்கே புத்தகம் அச்சடிக்க ஆகும் செலவே அதற்குக் காரணம் என்று ஒரு பதிப்பாளர் தெரிவித்தார். அதிலும் தமிழ்ப்புத்தகங்களை 500 என்றளவில் மட்டுமே அச்சிடுகிறார்கள் என்பதால் விலையேற்றத்தைத் தவிர்க்கமுடியவில்லை என்றார் அவர். தமிழில் நாவல்கள், சிறுகதைகள் தொகுப்பு என்பன வெகு சொற்ப அளவிலேயே இருந்தன. இலங்கையிலேயே பதிப்பிக்கப்பட்ட தமிழ்நூல்கள் எல்லாமே ஆய்வு நோக்கிலேயே எழுதப்பட்டிருந்தன. அதனால் நான் பலவற்றை வாங்கவில்லை. இலங்கையிலேயே பதிப்பிக்கப்பட்ட தமிழ்நூல்கள் வெகு சொற்பமே. பெருமளவில் இங்கே இருந்து அங்கே சென்று விற்கப்படும் புத்தகங்களே. அவற்றை அங்கே வாங்குவதில் பொருளில்லை என்பதால் வாங்கவில்லை. இலங்கை அரசாங்கமே பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. அனைத்தும் முக்கியமான நூல்கள். கல்வி வெளியீட்டுத் திணைக்களம் வெளியிட்ட இப்புத்தகங்கள், பழைய புத்தகக் கடைகளில் நிறையக் கிடைத்தன. அந்தப் பழம் தமிழில் என்னால் தொடர்ந்து எல்லாப் புத்தகங்களையும் படித்துவிடமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு வராததால் நான் நிறைய வாங்கவில்லை. நான் வாங்கிய புத்தகங்கள்: வியத்தகு இந்தியா (கல்வி வெளியீட்டுத் திணைக்களம் வெளியீடு, The wonder that was India என்னும் புத்தகத்தின் மொழிபெயர்ப்பு, 1951ல் மொழிபெயர்க்கப்பட்டது!), அசன்பே சரித்திரம் (ஈழத்து முதல் தமிழ்நாவல் என்று அறியப்படுவது), இணைபிரியாத் தோழர் (அம்பயஹலுவோ என்னும் நன்கு அறியப்பட்ட சிங்கள சிறுவர் நாவலின் தமிழ்வடிவம்), சூள வம்சம் கூறும் இலங்கை வரலாறு (மகா வம்சம் போல, இலங்கையின் பின் வரலாற்றைச் சொல்லும் நூல் என நினைக்கிறேன், அந்த நூலில் தரப்பட்டுள்ள விவரத்தைப் பின்னர் பகிர்ந்துகொள்கிறேன்), இலங்கை நாட்டார் கதைகள் போன்றவை மட்டுமே.

அதே போல் இலங்கையிலேயே தயாரிக்கப்பட்ட தமிழ்ப்படங்களை வாங்க நினைத்தேன். யாரிடம் கேட்டு எங்கே வாங்குவது எனத் தெரியவில்லை. நான் கேட்ட நண்பர்கள் எல்லாம் திரைப்படம் பார்க்காதவர்களாகவே இருந்தார்கள். அப்படியே பார்த்திருந்தாலும் விஜய், அஜித், ரஜினி, கமல் என்றுதான் சொன்னார்கள். அடுத்தமுறை வாங்கவேண்டும். யேசுராசாவின் கட்டுரை வழி, 1993 வரை 28 தமிழ்ப்படங்கள் தயாரிக்கப்பட்டதாக அறிகிறேன். குத்துவிளக்கு ஒரு முக்கியமான படம் என்று எழுதியிருந்தார். சில படங்கள் கிடைத்தால் நன்றாக இருந்திருக்கும். கிடைக்கவில்லை. அல்லது நான் சரியாகத் தேடவில்லை.

இனி நான் சந்தித்த சில நண்பர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள் தொடரும்...

இலங்கையின் அன்றாட வாழ்க்கையைப் பற்றிப் பலர் கேட்கிறார்கள். உண்மையில் அங்கிருந்த 9 நாளில், பெரும்பாலும் புத்தகக் கண்காட்சியில் இருந்துவிட்டு, இலங்கையின் பெரும்பாலான, பிரச்சினைக்குரிய பகுதிகளைப் பார்க்காமல் இதைப் பற்றி எழுதுவது சரியல்ல. நான் கண்ட பகுதிகள் யாழ்ப்பாணமும், கொழும்பும்தான்.

இரண்டிலுமே பாதுகாப்பு மிக முக்கியமான விஷயமாக உள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பு இதைவிட மிகக் கடுமையான பாதுகாப்பு இருந்ததாகவும், இப்போது மெல்ல மெல்ல பாதுகாப்பைக் குறைத்துக்கொண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் அங்கிருப்பவர்கள் சொன்னார்கள். யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் உள்ள ராணுவ வீரர்களும் காவல்துறை வீரர்களும் ஒருவித அமைதியான மனநிலையில் இருப்பதாகத்தான் தோன்றியது.




போர் பற்றிய பயம் குறைந்துவிட்டதால், யாழ்ப்பாணத்தில் இரவுகளில் 9 மணி வரை எல்லாம் கடைகள் திறந்திருக்க ஆரம்பித்திருக்கின்றன. முன்பெல்லாம் கடைகளை மாலை 4 அல்லது 5 மணிக்கே பூட்டிக்கொண்டு போய்விடுவார்களாம்.

கொழும்பில் மிக இயல்பான வாழ்க்கையைப் பார்க்கமுடிந்தது. நாங்கள் வேனில் சென்றபோது கிட்டத்தட்ட 4 முறை நிறுத்தப்பட்டு, வேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சோதனை என்றால், வேன் டிரைவரிடம் மட்டும் பேசி, ஆவணங்களைச் சரி பார்த்து அனுப்பிவிடுகிறார்கள். டிராக் மாறி வந்தால், அதிக வேகத்தில் வந்தால் உடனே அங்கே ஃபைன் கட்டச் சொல்லிவிடுகிறார்கள்.

யாழ்ப்பாணத்தின் விளையாட்டு மைதானங்களில் நிறைய சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. முன்பெல்லாம் விளையாடுவார்களா என்று உடனிருந்த இலங்கைத் தமிழர்களிடம் கேட்டபோது, விளையாடுவார்கள் ஆனால் எப்போது செல் வெடிக்கும் என்ற பயத்துடனேயே விளையாடுவார்கள் என்று சொன்னார்கள். இப்போது அந்தப் பயம் முற்றிலும் இல்லை.

இப்போதைக்கு இலங்கையின் முக்கியக் கவலை, அங்கிருக்கும் அண்டர் வேர்ல்ட் தாதாக்கள்தான் என்றார் ஒரு நண்பர். இவர்களை ஒழிப்பதையே இப்போதைக்கு முக்கிய லட்சியமாக அரசு வைத்திருக்கிறது என்றார் அவர். நிறையப் பேர் திடீர் திடீரென்று காணாமல் போகிறார்கள். இதைப் பற்றிய செய்தியைத் தொடர்ந்து தினசரிகளில் காணமுடிந்தது.

நாங்கள் அங்கிருந்த சமயத்தில் எதிர்பாராத விபத்தொன்றில் டேங்கர் ஒன்று வெடித்து இரண்டு சீனர்கள் உட்பட சிலர் பலியாகிவிட்டனர். கிட்டத்தட்ட அனைவருக்கும் இது சாதாரண விபத்தா அல்லது புலிகளின் எழுச்சியா என்னும் ஆசை தோய்ந்த சந்தேகம் இருப்பதை உணர முடிந்தது. ஒருவகையில் நிம்மதியுடனும் இன்னொரு நிலையில் இனி என்னாகும் என்னும் கவலையோடும் அவர்கள் இருப்பதாகத்தான் தோன்றியது. நான் பார்க்காத மற்ற இடங்களில் என்ன நிலை என்று தெரியவில்லை. மேலும், நான் பார்த்த இடங்களிலும் நான் சொன்னதுதான் சரியான நிலை என்று அறுதியிட்டும் கூற இயலவில்லை.

* - * -

இனி இங்கே எழுதப்போவது நாங்கள் கண்ட மனிதர்கள் எங்களுடன் பகிர்ந்துகொண்டவை மட்டுமே. பெரும்பாலும் நானே நேரடியாகக் கேட்டவை, சில நான் நேரடியாகக் கேட்காமல், என்னுடன் வந்த நண்பர்கள் என்னுடன் பகிர்ந்துகொண்டவை. இதை நான் அப்படியே பகிர்ந்துகொள்கிறேனே ஒழிய, இதன் அரசியல் சரி தவறுகளுக்குள் நான் நுழையவில்லை. இதில் உண்மை பொய் இருக்கிறதா என்றெல்லாம் பார்க்கவில்லை. மேலும், தமிழர்கள் அவதிப்படும் இடங்களுக்குச் சென்று பார்த்தெல்லாம் எழுதவில்லை. அங்கிருந்த தமிழர்கள் ஓரிருவர் சொன்னதை மட்டுமே இங்கே பகிர்ந்துகொள்கிறேன். அவர்கள் ஆண்டுக் கணக்கோடு, நிலவியல் விவரணையோடு தெளிவாகச் சொன்னார்கள். என்னால் அதனை சரியாகச் சொல்லமுடியுமா எனத் தெரியவில்லை. மேலும் அவர்களது யாழ்ப்பாண தமிழ் வழக்கு மொழி அதி வசீகரமுடையது. சோதனை என்னும் பெயரில் அதனை எழுதி அழகிய தமிழைக் கொடுமைப்படுத்த விரும்பவில்லை. எனவே அப்படியே எனக்குத் தெரிந்த தமிழில் எழுதுகிறேன். நம்மிடம் பகிர்ந்துகொண்ட நண்பர்களிடம் ஒலி அல்லது ஒளிப்பதிவு செய்து அதனையே வலையேற்றிவிடலாம் என்று எண்ணியபோது அனைவரும் பின்வாங்கிவிட்டார்கள். தங்கள் கருத்து உலகெங்கும் பரவவேண்டும் என்ற எண்ணமும் உள்ளது, (ஒருவர் ஆவேசமாக பிபிசி வரைக்கும் இதெல்லாம் தெரியணும் என்றார்) அதே சமயம் தங்கள் பெயர் வெளிவரக்கூடாது என்பதிலும் கவனம் உள்ளது. இனி நீங்களே படியுங்கள்.

அந்த நண்பருக்கு ஒரு மனைவி, மூன்று குழந்தைகள். முல்லைத்தீவில் பிறந்தவர். மட்டக்களப்பில் வாழ்பவர். வேலை நிமித்தம் சில ஆண்டுகள் யாழ்ப்பாணத்திலும் வாழ்ந்திருக்கிறார். தற்போது யாழ்ப்பாணத்தில், ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறார். இன்னொருவர் வீட்டு மராமத்து வேலைகள். கலவையாக அவர்கள் தங்களது வாழ்க்கையில் இருந்து சொன்ன விஷயங்கள் இங்கே.

அவரது தம்பி இயக்கத்தைச் சேர்ந்தவர், அதாவது சேர்க்கப்பட்டவர். இயக்கத்தில் 4 மாதங்கள் மட்டுமே இருந்திருக்கிறார். காலில் ஒரு குண்டு பாய்ந்து, இன்னும் அக்குண்டு எடுக்கப்படாமலேயே உள்ளது. இப்போது அவருக்கு 29 வயது இருக்கலாம். திருமணம் ஆகிவிட்டது இப்போது. இயக்கத்தில் தமிழ்ப் போராளிகளின் எண்ணிக்கை குறைந்தபோது, இயக்கத்திலிருந்து வலுக்கட்டாயமாக வந்து தமிழர் பகுதியில் இருக்கும் இளைஞர்களைக் கூட்டிச் சென்றிருக்கிறார்கள். இதனை அறிந்த நம் நண்பரும் அவரது குடும்பமும், அந்த நண்பரின் தம்பியை மறைத்து வைத்துவிட்டது. இயக்கத்தை சேர்ந்தவர்கள் வந்தபோது அவரது தம்பி இல்லாததால், அவருக்குப் பதிலாக நம்மோடு பேசிய நண்பரையே கூட்டிக்கொண்டு போய்விட்டார்களாம். தம்பியைக் கொண்டுவந்து விட்டுவிட்டு, இவரைக் கூட்டிச் செல்லலாம் என்று சொல்லிவிட்டார்களாம். வேறு வழியின்றி, தம்பியை விட்டுவிட்டு, இவரை அழைத்து வந்திருக்கிறார்கள். அப்படி அங்கு சேர்ந்த அந்தத் தம்பி 4 மாதங்கள் அங்கே இருந்திருக்கிறார். பின்னர் கடைசி கட்டப் போரில் எப்படியோ அங்கிருந்து தப்பி வந்துவிட்டார். இயக்கத்திலுள்ளவர்களை சரணடையச் சொல்லியபோது இவரும் சரணடைந்துவிட்டார். இவர் இருந்தது 4 மாதங்கள் மட்டுமே என்பதாலும், இவர் மிக அடிப்படை நிலையில் மட்டுமே பணி புரிந்திருந்ததாலும் அவருக்கு ஒரு வருடம் 7 நாள்கள் சிறைத்தண்டனை கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னார் நண்பர். இன்னும் பலர் வீட்டில் சிறார்களை அழைத்துச் சென்று, மறுநாளே ஒரு பெட்டியில் கொண்டு வந்து தருவார்களாம், அவன் இறந்துவிட்டான் என்று. இப்படி இறந்ததாக நினைத்துவிட்ட இரண்டு பையன்களை இப்போது உயிருடன் பார்த்துக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்படியானால் புதைக்கப்பட்டது யார் என்று தெரியவில்லை என்றார்.

யாழ்ப்பாணம் (1985?) இலங்கை அரசு வசம் இருந்த நேரம். புலிகள் இயக்கம் யாழ்ப்பாணத்தைச் சுற்றி வளைத்துவிட்டது. புலிகளின் கட்டளை, யாழ்ப்பாணத்துத் தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்குச் செல்லவேண்டும் என்பது. அங்குள்ள தமிழ் மக்கள் புலிகளின் மீது பெரிய நம்பிக்கை இருந்ததால், கையில் கிடைத்த பொருள்களுடன் வன்னி நோக்கிச் சென்றது. கிட்டத்தட்டட் 5 லட்சம் பேர் என்றார் அவர். இரண்டு நாளாக கிட்டத்தட்ட 40 கிமீ நடந்ததாகச் சொன்னார். யார் உணவு தருவார்கள் என்றபோது, பல தமிழர்கள் அங்கங்கே உணவு உண்டாக்கிக் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள் என்றும், வன்னியிலும் உணவெல்லாம் தயாராகவே இருந்ததாகவும் சொன்னார். ஆனால் அத்தனை எளிதில் அவர்களை வன்னிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை ராணுவம். இவர்கள் செல்லும் வழியெங்கும் குண்டுகள் வீசி, பல பொதுமக்களைக் கொன்றிருக்கிறார்கள். எப்போது என்ன நடக்கும் என்ற பதைபதைப்பில்தான் வன்னி சென்றதாகச் சொன்னார். இவர்கள் வன்னி சென்றதும், பின்னாலேயே இயக்கமும் வன்னி வந்துவிட்டது என்றும் சொன்னார்.

எப்போது எங்கே எதற்காக செல் வெடிக்கிறது என்பதே தெரியாது. வீடெங்கும் பங்கர் அமைத்து வைத்துக்கொள்வோம். கொஞ்சம் வசதி உள்ளவர்கள் பங்கரை நன்றாகவே வடிவமைத்துக்கொள்வார்கள். பலர் உடைந்துபோன பலகையின் மீது தென்னம்பாளையைப் போட்டு (இன்னும் நிறைய சொன்னார், ஞாபகமில்லை) பங்கர் உருவாக்கிக்கொள்வார்கள். செல் விழவும் குழந்தைகள் பழக்கப்படுத்தியதைப் போல அங்கே சென்று ஒளிந்துகொள்ளும். கடும் மழையில் பங்கரில் நீர் சேர்ந்திருக்கும். பாம்புகளும்கூட குடிவந்திருக்கும். அது தெரியாமல் அங்கே ஒளிந்துகொண்டு, பாம்பு கொத்தி இறந்தவர்கள் அநேகம்.

சண்டை என்பது எப்போதும் தமிழ் இயக்கங்களுக்கும் ராணுவத்துக்கும்தானே ஒழிய, தமிழ் மக்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் பெரிய அளவில் இல்லை. ஒருவித இறுக்கம் இருக்கும் என்பது உண்மைதான் என்றாலும், பெரிய பெரிய சண்டைகள் எல்லாமே இயக்கத்துக்கும் ராணுவத்துக்கும்தான் என்றார்.

கடைசி 3 மாத காலக்கட்டத்தில் ரொம்ப கஷ்டப்படுவிட்டோம். முல்லைத் தீவில் இருந்தோம். அரசு எச்சரிக்கை விட்டு சரணடையச் சொல்கிறது. இயக்கமோ எங்களை சரணடைய அனுமதிக்கவில்லை. மீறிச் சென்றால் இயக்கமே எங்களைக் கொன்றுவிடுமோ என்ற அச்சம் நிலவியது. மட்டகளப்பு, சண்டை நடக்கும் பகுதி, அதைத் தாண்டி அந்தப் பக்கத்தில் கேம்ப். நாங்கள் இங்கிருந்து கேம்புக்குச் செல்லவேண்டும். கேம்ப்பில் இருந்து சண்டை நடக்கும் பகுதிக்கு அரணாக பல தடைகளை இயக்கம் ஏற்படுத்தியிருந்தது. சிறுவர்களை பணிக்கு அமர்த்தியிருந்தது. அவர்களும் சரியாகப் பயிற்சி அளிக்கப்படாதவர்கள். இயக்கத்தின் வசம் ஆளே இல்லை என்னும் நிலையில் சிறுவர்களை பணிக்கு கட்டாயமாக அமர்த்தவேண்டியது தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது. இயக்கத்தைச் சேர்ந்த பலர் போரில் ஈடுபட மனமில்லாமல் ராணுவத்திடம் சரண்டைந்துகொண்டிருந்தார்கள். நம் நண்பர் முல்லைத்தீவிலிருந்து தன் மனைவி, மூன்று குழந்தைகளிடமிருந்து இயக்கத்திடமிருந்து தப்பித்து கேம்ப் சொல்ல முடிவெடுத்தார். இடையில் சிறிய சாக்கடை போன்ற ஒன்றைக் கடக்கவேண்டியிருக்கும். அங்கே இருப்பதெல்லாம் மல மூத்திரம்தான். வேறு வழியில்லை, அதனைக் கடக்கவேண்டும். நண்பர் தன் இரு மகன்களைக் கூட்டிக்கொண்டு அதில் இறங்கிவிட்டார். அவருடன் பல தமிழர்கள் அப்படிக் கடந்தார்கள். ஆனால் பாதியில் இயக்கம் தப்பிக்க நினைத்தவர்களை வளைத்து, அழைத்துக்கொண்டு சென்றுவிட்டது. நண்பரின் மனைவியும், மூன்றாவது கைக்குழந்தையும் (ஒன்றரை வருடம்) அந்தப் பக்கம் இயக்கத்தின் பக்கத்தில். எப்படியோ தப்பிய நமது நண்பரும் அவரது இரண்டு மகன்களும் இந்தப் பக்கம். ராணுவம் தப்பி வந்தவர்களையெல்லாம் வண்டி வைத்து கேம்புக்கு அழைத்துச் சென்றது. அங்கு, தப்பி வந்தவர்களிடம், இயக்கத்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். தப்பி வந்தவர்களில் பலரது குடும்பம் அங்கேயே இருந்ததால், பலரும் தாங்களாகவே முன் வந்து இயக்கம் எப்படியெல்லாம் அரண் அமைத்திருக்கிறது, எந்த வழியில் சென்றால் பிடிக்கலாம் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். அடுத்த இரண்டு நாள்களில் ராணுவம் அப்பகுதியை நோக்கி முன்னேறியது. இயக்கம் தன் பிடியில் உள்ளவர்களை இனி சமாளிக்க முடியாது என்று சொல்லி, தான் தப்பிக்க நினைத்து ஓடியிருக்கிறது. அப்போது நடந்த கடும் சண்டையில் உயிரிழந்த பொது மக்கள் பலர். நண்பரின் மனைவி தன் கைக்குழந்தையை எடுத்துக்கொண்டு, தான் தப்பிக்கவேண்டிய பகுதியில் சண்டை நடப்பதால், அதன் எதிர்வழியாகச் சென்று கேம்ப்புக்குப் போய்விடலாம் என நினைத்து, எதிர்ப்பக்கமாக ஓடியிருக்கிறார். வழியெங்கும் பொது மக்களின் பிணங்கள், தலைகள், கைகள், ரத்தம். அதற்குமேல் அந்த வழிச் செல்ல முடியாது எனக் கருதி, வேறு வழியின்றி, முதலில் நண்பர் தப்பித்த அதே வழியிலேயே சென்றிருக்கிறார். அதே முத்திர மலக் குளத்தின் வழிச் செல்லும்போது, தன் முதுகில் சுமத்திக்கொண்டு வந்த கைக்குழந்தை அந்த நீரில் விழுந்துவிட, இவருக்கும் மயக்கம் வர, என்ன நடந்தது என்றே தெரியவில்லை. யாரோ ஒரு பெண் கைக்குழந்தையைக் கைப்பற்றித் தூக்கி எதிர்ப்புறம் விட்டிருக்கிறார். அவரே இவரது தலைமுடியைப் பிடித்துக்கொண்டு இழுத்துவந்து அக்கரையில் போட்டுவிட்டுப் போயிருக்கிறார். விழித்துப் பார்த்தவருக்கு பெரிய ஆச்சரியம். எப்படியோ தப்பித்து குழந்தையுடன் கேம்ப் சென்றிருக்கிறார். நமது நண்பர் ஒரு கிறித்துவர். மரியாள்தான் தன் குழந்தையைக் காப்பாற்றியது என்றும், யேசுவே தன் மனுஷி ஜீவித்திருக்கக் காரணம் என்றும் கூறினார். இப்படி தப்பித்து வந்தவர்களுள், கேம்ப் பக்கம் ஓர் ஆணும் அவரது ஒன்றரை மாத சிசுவும் மாட்டிக்கொண்டு விட்டது. மனைவியோ இயக்கத்தின் பிடியில். பசிக்கு அழும் குழந்தைக்கு, ஒரு பெண்ணைப் பிடித்து பால் புகட்டச் சொன்னதாம் ராணுவம். அன்று சமைந்த பெண்கள் பற்றியெல்லாம் பல கதைகளைச் சொன்னார் நண்பர்.

மட்டக்கிளப்பில் இருந்து கிளம்பும்போது, பெரிய குழி வெட்டி, அதனுள்ளே பாலிதீன் பையைப் போட்டு, மூன்று டிவி, கிரைண்டர் மிக்ஸி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷினெல்லாம் போட்டு, மூடி வைத்துவிட்டு வந்தாராம். எப்படியும் சில நாள்களில் திரும்பிவிடலாம் என்று நினைத்தாராம். ஆனால் இதுவரை அங்கே திரும்ப போகமுடியவில்லை. இன்னும் ராணுவத்தின் பிடியில் இருக்கும் அப்பகுதியில், கன்னி வெடிகள் பல இருப்பதால், அதனை நீக்கிய பின்பே மக்கள் வசம் ஒப்படைப்போம் என்று ராணுவம் கூறிவருகிறதாம். அழகான வீட்டைக் கட்டி இரண்டு ஆண்டுகள் அங்கே வாழ்ந்திருக்கிறார். இலங்கை மதிப்பில் 40 லட்ச ரூபாய் வீடு. அந்த வீட்டின் புகைப்படத்தைக் காட்டினார் நண்பர். இப்போது அந்த வீடு செல்லடித்து உருவமே இழந்துவிட்டிருக்கிறதாம். மேற்கூரைகள், விலையுயர்ந்த பொருள்களையெல்லாம் ராணுவத்தவர்களே கொண்டு சென்றுவிடுகிறார்களாம். அவரது பைக் ஒன்றை அங்கேயே வைத்துவிட்டு வந்தாராம். அங்குள்ள பைக்களையெல்லாம் மக்களுக்கு மீண்டும் ஒப்படைப்பது என்று ஒரு கேம்ப் நடைபெற்றதாம். அதில் ஒன்றுக்கும் ஒப்பேறாத வண்டிகளை மட்டுமே மக்களுக்குத் தந்து, பெரிய கண் துடைப்பில் ஈடுபட்டார்களாம் ராணுவத்தவர்கள். இவரது நல்ல வண்டியை அவர்கள் தரவில்லையாம் இன்னும். இதே நிலைதான் இவரது நண்பரின் நல்ல வண்டிக்குமாம். இது போல பல வீடுகளின் பொருள்கள் எல்லாம் எங்கே போயின என்றே தெரியவில்லையாம்.

கடைசி மூன்று மாத காலத்தில் பலசரக்குப் பொருள்களின் விலை தாறுமாறாக விற்கப்பட்டதாம். ஒரு கிலோ அரிசியின் விலை 12,000 இலங்கை ரூபாய். ஒரு கிலோ சர்க்கரையின் விலை 3,000 இலங்கை ரூபாய். கேம்பில் ராணுவம் அரிசியும் சர்க்கரையும் வழங்குமாம். அதனை வாங்க பெரிய கியூ நிற்குமாம். காலையில் சென்றால் மாலைதான் வாங்கிவரமுடியுமாம். இப்போதெல்லாம் அங்கேயே ரேஷன் கடை அமைத்து பொருள்களை விநியோகிக்கிறார்களாம். பணமில்லாதவர்கள் எப்படி வாழ்வார்கள் என்றபோது, அப்படி அப்படித்தான் என்றார். கையில் பொருள் இருப்பவர்கள் உணவு தந்து உதவுவதும் உண்டாம்.ஒரு 20க்கு 20 அறையை நான்காக துணி போட்டுப் பிரித்து, ஒவ்வொரு இடத்திலும் ஒரு குடும்பம் தங்க வைக்கப்படுமாம். சிறிய வியாதிகளுக்குப் பார்க்க அங்கேயே மருத்துவமனையும் டெண்ட் அடித்துக்கொண்டு இருக்குமாம். லட்சக் கணக்கில் அங்கு இருந்த மக்களை ஒவ்வொரு பகுதியாக பரிசோதித்து பரிசோதித்து வெளியே அனுப்பியதாம் ராணுவம். மீண்டும் விடுதலைப்புலிகளின் தலை தூக்கிவிடக்கூடாது என்பதற்காக இந்த எச்சரிக்கையாம். தற்போது அந்த முகாமில் 30,000 பேர் இருப்பதாகச் சொன்னார். (நேற்று இலங்கை அரசு வெளியிட்டிருக்கும் குறிப்பில் முகாமில் 27000 பேர் உள்ளதாக அறிவித்திருக்கிறது.) இது போக கிட்டத்தட்ட 9,000 பேர் சரண்டைந்த புலிகள் சிறைகளில் உள்ளார்கள் என்றார். நமது நண்பர் எத்தனையோ முறை மனு அளித்தும் அவரை வெளியில் விடவில்லை ராணுவம். உடல்நிலை சரியில்லை என்று சொல்லி, வெளியில் மருத்துவமனைக்குச் சென்று, அங்கிருந்து மனைவி குழந்தையுடன் தப்பித்திருக்கிறார் நம் நண்பர். ராணுவம் மீண்டும் தேடி வரவில்லையா என்று கேட்டதற்கு, அதெல்லாம் வரமாட்டார்கள் என்றார். அவர் கேம்ப்பில் இருந்தபோது அவருக்குக் கொடுக்கப்பட்ட ஐடி கார்ட்டை எல்லாம் காட்டினார் எங்களிடம்.



ராணுவம் சண்டையின்போது பொதுமக்களின் மீதும் தாக்குதல் நடத்தியதும் உண்மை. அதேபோல இயக்கமும் சிறுவர்களையும் பொது மக்களையும் கேடயமாகப் பயன்படுத்தியதும் உண்மை என்றார். ராணுவம் பயன்படுத்திய குண்டு பாஸ்பரஸ் குண்டுகள். ஒரு குண்டை எறிந்தால், அது ஒன்பது குண்டாகப் பிரிந்து தாக்குமாம். மேலே பட்டால் அந்த இடமே ரணமாகிக் கொப்பளித்துவிடுமாம். (ஒருவித புன்னகையுடன், இதை சப்ளை செய்தது உங்கட இந்தியாதான் என்றார்.)

மட்டகிளப்பிலிருந்து கேம்புக்கு தப்பிப்பதைத் தடுக்க, இயக்கம் பல்வேறு யுத்திகளைச் செயல்படுத்தியதாம். அதில் ஒன்று, அங்கே இருக்கும் ராணுவத்தவர்கள் பெண்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்துகிறார்கள் என்பது. ஆனால் அப்படி நடந்தது குறைவுதான் என்றார். உடனே அப்படி நடக்கவே இல்லை என்று சொல்லிவிடமுடியாது, நடந்தது என்றும் சொன்னார். ஆனால் புலிகள் சொன்ன அளவு நடக்கவில்லை என்றார். சட்டென, உங்கட ஐபிகேஎஃப் செய்ததைவிடக் குறைவுதான் சிங்களவர்கள் செய்தது என்றும் சொன்னார். ஐபிகேஎஃப்பும் எல்லா இடங்களிலும் அப்படி நடந்து கொள்ளவில்லை என்றும், ஆனால் சில இடங்களில் மிக மோசமாக நடந்துகொண்டது என்றும் சொன்னார்.

செஞ்சோலை படுகொலை பற்றிச் சொன்னார். பள்ளியில் படிக்கும் சிறார்களை இரு நாள் பயிற்சிக்கென வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றது இயக்கம். பயிற்சி கொடுத்தால் நிச்சயம் ராணுவம் அழிக்கும் என்று தெரிந்தே இதைச் செய்தார்கள். ராணுவத்துக்கு பயிற்சி பெறுவது பள்ளி சிறார்களா எனத் தெரியுமா தெரியாதா என்று உறுதியாகச் சொல்லமுடியவில்லை. முதல் குண்டு விழவும், பயிற்சி அளித்தவர்கள் சிறார்களை ஓடிச் சென்று வண்டியில் ஏறச் சொன்னார்கள். பயந்து போன பிள்ளைகள் வண்டியில் ஏறவும் வண்டியிலும் குண்டு விழுந்தது. படுகொலை ராணுவம் செய்ததுதான் என்றாலும், பயிற்சிக்கென அழைத்துச் சென்றது இயக்கம்தான் என்றார்.

பிரபாகரன் இறந்த அன்று எப்படி உணர்ந்தீர்கள் என்றேன். சட்டென அவர் இறந்துட்டதா இன்னும் தெரியலையே என்றார். பின்னர், 3 மாத காலம் நடந்த சண்டையின் வெறுப்பில் பிரபாகரன் மீது கடும் கடுப்பில் இருந்தோம். ஆனால் அவர் இறந்ததாகச் சொன்ன அன்று ரொம்ப வருத்தப்பட்டோம் என்றார். இனி ஏதேனும் பிரச்சினைகள் என்றால் என்ன செய்வது என்றும் தோன்றியதாகச் சொன்னார். ஆனால் இலங்கை ராணுவம் அவரது உடல் போன்ற ஒன்றையும், அவரது முகம் போன்ற ஒன்றையும் வைத்து பொய் சொல்லிவிட்டதாகச் சொன்னார். உண்மை என்றால் ஏன் அவரது உடலை பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

பிரபாகரனைப் பாத்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, 1985ல் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானபோது, யாழ்ப்பாணம் அருகில் ஏதோ ஒரு கோவிலில் அவர் வந்தார் என்றும், அப்போது பார்த்ததுதான் என்றும் சொன்னார். கடைசியாக இயக்கத்தில் சேர்ந்தவர்கள் ஐந்து ஆண்டுகாலம் இயக்கத்தில் இருந்திருந்தாலும் அவரைப் பார்த்திருக்க இயன்றிருக்காது என்றார்.

இனி இயக்கம் துளிர்விடுமா என்று கேட்டோம். அதற்கான வாய்ப்பே இல்லாமல் செய்துவிட்டது அரசாங்கம் என்றார். ஒருவேளை துளிர்விட்டால் நீங்கள் ஆதரிப்பீர்களா என்று கேட்டோம். நிச்சயம் இல்லை என்றும், தெரிந்தால் அவர்களைக் காட்டிக்கொடுத்துவிடுவோம் என்றும், இன்னொருமுறை இப்படி போரின் இன்னல்களைத் தாங்கிக்கொள்ள இயலாது என்றும் சொன்னார். வெளி நாட்டிலிருந்து பணம் கொடுக்கிறவர்களுக்கு இங்கே நாங்கள் படும் வேதனை புரிவதில்லை என்றார். பின்னர் மீண்டும், இனி சில வருடங்கள் கழித்து ஏதேனும் பிரச்சினை என்றால் என்ன என்ன நடக்கும் என்றெல்லாம் தெரியவில்லை என்றார்.

புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நார்வே தூதுக் குழுவின் மூலம் நடந்த போர் அமைதி உடன்படிக்கைக் காலம்தான் புலிகளுக்கு இப்படி ஒரு வீழ்ச்சியைத் தந்துவிட்டது என்று சொன்னார். கிட்டத்தட்ட 4 வருடங்கள் போரில்லாமல் பழகிவிட்டவர்கள் மீண்டும் போருக்குத் தயாராக இருக்கவில்லை. காட்டிலும் மேட்டிலும் திரிந்தவர்களுக்கு போர் என்பது எளிமையான விஷயமாக இருந்தது. அது மாறி, இனி போர் செய்ய இயலாது என்னும் நிலைமைக்குச் சென்றதும், பலர் சரணடையத் தொடங்கியதும் பெரிய இழப்பு என்றார். கருணாவை விட்டிருக்கக்கூடாது என்றார். அதுவும் பெரிய பலவீனம் என்றார். கிழக்கு பகுதியில் கருணா பொருட்படுத்தத்தக்க ஒரு பெரிய பிரிவை தன் வசம் வைத்திருந்தார் என்றார்.

அமைதி ஒப்பந்தம் இருந்த காலத்தில், இயக்கத்தின் வசம் இருந்த தமிழர் பகுதிகளுக்குள் சரக்குகள் செல்ல, இயக்கம் வரி விதித்தது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தரை வழியாகச் செல்ல இன்று ஓர் இரவு போதும். யாழ்ப்பாணத்தின் பேருந்து நிலையத்தில் இப்போதெல்லாம் கொழும்பு கொழும்பு என்று பஸ்ஸில் ஏறச் சொல்லிக் கூவிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது நிலைமையே வேறு. சரக்கு வண்டிகளுக்கு, ராணுவத்துக்கு ஒரு வரி, இயக்கத்துக்கு ஒரு வரி என இரு முனை வரி கட்டவேண்டும். ஒரு சரக்கு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து சேர 4 நாள்கள் ஆகும். 15 நாள் ஆனதெல்லாம் உண்டு. அப்படி வரும் பணம் மூலமும், வெளிநாட்டிலிருந்து வரும் உதவிப் பணம் மூலமும் இயக்கத்துக்கு பெரிய அளவில் பணம் சேர்ந்தது. கடைசி சண்டையின்போது அந்தப் பணத்தை ஆளாளுக்கு எடுத்துச் சென்றார்கள். ஒரு செல் பட்டு அந்தப் பணம் அப்படியே தீ பிடித்து எரிந்ததைப் பார்த்ததாகச் சொன்னார்.

தமிழ் மக்களின் இன்னல்களுக்குக் காரணம் இயக்கமா, ராணுவமா எனச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் நாங்கள் பட்ட கஷ்டம் யாரும் பட்டிருக்கமுடியாது. இது மட்டும் உண்மை. இந்தியா எங்களை கைவிட்டுவிட்டது. தமிழ்நாட்டு மக்களுக்கு எங்களைப் பற்றி நினைப்பே இல்லை என்றார். இன்னொரு முதியவர், இந்திரா காந்தி இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்கவே நடந்திருக்காது என்றார்.

நான் மேலே சொன்னவை எல்லாம், இரண்டு மூன்று மனிதர்களின் கருத்துகள். அவர்கள் யாருமே புலி/ராணுவ/இந்திய வெறுப்பு/ஆதரவு மனநிலையில் இருந்து பேசவில்லை என்பது என் அவதானிப்பு. ஆனால், இலங்கையில் வாழ்ந்த, இலங்கையின் அரசியல் பற்றிய தொடர் அவதானிப்பில் இருப்பவர்கள் வேறு மாதிரி இதனை எதிர்கொள்ளலலாம். அதற்கான அத்தனை நியாயங்களும் இருக்கின்றன. நான் கேட்டவரையில் என் நினைவில் உள்ளதைப் பகிர்ந்திருக்கிறேன். என் அரசியல் நிலைப்பாடுகளின் காரணமாக எதையும் திரித்து எழுதவில்லை என்பதை மட்டும் படிப்பவர்கள் நம்பினால் போதுமானது. என்னுடன் வந்த ஐவருமோ அல்லது ஐவரில் இருவரோ இதனை நான் கேட்கும்போது கூட இருந்தார்கள் என்பது முக்கியமானது.

முற்றும் :-)

1 comment:

ஜோதிஜி said...

சற்று எழுத்துக்களை பெரிதாக போட்டால் படிப்பவர்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்குமே?