சென்னை புத்தகக் கண்காட்சியின் பரபரப்பு தொற்றிக்கொண்டு இன்றோடு கிட்டத்தட்ட 20 நாளிருக்கும். திருநெல்வேலியின் தேரோட்டம் போன்றது சென்னை புத்தகக் கண்காட்சி. இதைவிட என்னால் எளிமையாக விளக்கிவிடமுடியும் என்று தோன்றவில்லை. அந்த நிகழ்ச்சியைவிட அது தரும் பரபரப்புதான் போதை. அவ்வித போதையின் அடிமை நான். 20 நாள்களாக எதிலும் ஒரு கவனமின்மை, எல்லாவற்றிலும் ஒரு சிரிப்பு, எல்லாவற்றிலும் ஒரு சிறிய பதட்டம், ஆனால் உள்ளுக்குள்ளே இன்னொரு மனம் அதையே பார்த்து அமைதி என்று சிரிக்கும் இரட்டைநிலை - இதுதான் சென்னை புத்தகக் கண்காட்சி. ஏன் இப்படி? நீங்கள் ஒரு பதிப்பகத்தின், அதுவும் புத்தகக் கண்காட்சியின் பேசுபொருளாக இருக்கப்போகும் ஒரு பதிப்பகத்தின் புத்தகக் கண்காட்சியை நடத்திப் பார்த்தால்தான் தெரியும்.
எல்லா வேலையும் நாம் திட்டமிட்டபடி கட்டுக்குள் இருந்தாலும், எங்கேயோ ஏதோ கட்டுக்குள் இல்லை என்று தோன்றிக்கொண்டிருப்பது மடத்தனமா உள்ளுணர்வா எனத் தெரியவில்லை. மடத்தனமோ, உள்ளுணர்வோ - இதுதான் இலக்கை நோக்கி விடாமல் விரட்டிக்கொண்டிருக்கிறது என்பது உண்மை. எனவே அதற்கு ஒரு நன்றி.
இந்தமுறை இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல். சென்னை புத்தகக் கண்காட்சியில் நியூ ஹொரைஸன் மீடியாவின் அனைத்துப் பதிப்பகங்களின் புத்தகங்களையும், அதாவது கிழக்கு, நலம், வரம், ப்ராடிஜி உள்ளிட்ட அனைத்து பதிப்பகங்களின் அனைத்துப் புத்தகங்களையும் ஒரே இடத்தில் வாங்கலாம். இதில் வசதி உள்ளது என்பதோடு எங்களது பொறுப்பும் கூடுகிறது. நிச்சயம் இந்தமுறை கிழக்கு வாசகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் கிடைக்கப்போவது உறுதி.
இதில் சுஜாதாவின் புத்தகங்களும் சேர்ந்துகொண்டிருக்கிறது. 60க்கும் மேற்பட்ட சுஜாதாவின் புத்தகங்கள். சுஜாதாவின் வாசகர்கள் கிழக்கு புத்தகங்களையும் பார்க்கப் போகிறார்கள். சுஜாதா தனது புத்தகங்களின் விற்பனையாளர் என்பதோடு, மற்ற புத்தகங்களின் விற்பனையையும் அதிகமாக்குபவர் என்று நான் நம்புகிறேன். இம்முறை அது நிரூபிக்கப்படும்.
எனக்குப் பிடித்த எழுத்தாளர்களும் ஒருவரான ஜெயமோகனின் இரண்டு புத்தகங்கள் - உலோகம், விசும்பு இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். விசும்பு - எததனை முறை படித்தாலும் எனக்குச் சலிக்காத புத்தகம். 2011 மார்ச்சுக்குள், ஜெயமோகன் சிறுகதைகள் தொகுப்பு, ஜெயமோகன் குறுநாவல்கள் தொகுப்பு, ஆழ்நதியைத் தேடி, தமிழிலக்கிய அறிமுகம் போன்ற புத்தகங்கள் வெளிவரும்.
இதுபோக, கிழக்கு வாசகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான பல்வேறு புத்தகங்கள் வெளியாகின்றன.
இவைபோக, மற்ற பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கும் முக்கியமான புத்தகங்களை உடனடியாகக் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும். இந்த முறை, சென்னை புத்தகக் கண்காட்சியின் முதல் நாளிலிருந்து தினமும் பத்து வரி புத்தகக் கண்காட்சியைப் பற்றி எழுத நினைத்திருக்கிறேன். அனானி ஆப்தர் இட்லிவடை வலைப்பதிவில் அது வெளிவரும். எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டு எழுதாமல் போவது எனக்கு ஒன்றும் புதியதல்ல. எனவே ஒருவேளை நான் எழுதாமல் போனாலும் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதால் இதனை தைரியமாகச் சொல்லிவிடமுடிகிறது.
எல்லாப் பதிப்பகங்களும் வெளியிடப் போகும் பல்வேறு புத்தகங்கள் பற்றி எழுதி ஏன் அவற்றைப் பிரபலப்படுத்தக்கூடாது என்று கேட்டார் பாரா. அதற்கு முதலில் என் வலைப்பதிவை பிரபலப்படுத்தவேண்டும் என்றேன்! நான் கடைசியாகப் படித்த இரண்டு புத்தகங்கள் தேகம், சரசம் சல்லாபம் சாமியார் - இதைப் பற்றி நான் என்ன எழுதிவிடமுடியும்? :-)
புத்தகக் கண்காட்சியில் சந்திப்போம்.
சென்னை புத்தகக் கண்காட்சி 2011
ஜனவரி 4 (செவ்வாய்) முதல் ஜனவரி 17 (திங்கள்) வரை.
இடம்:
புனித ஜார்ஜ் ஆங்கிலோ இண்டியன் பள்ளி, பச்சையப்பா கல்லூரி எதிரில், பூந்தமல்லி ரோடு.
நேரம்:
விடுமுறை நாள்களில்: காலை 11 மணி முதல் இரவு 8.30 வரை.
வேலை நாள்களில்: மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
எங்கள் ஸ்டால் எண்:
கிழக்கு - F 13
புத்தகங்களை நிதானமாகப் படித்துப் பார்த்து வாங்க வேலைநாள்களில் வருவது நல்லது. விடுமுறை நாள்களில் கடும் கூட்டம் இருக்கும் என்பதால், உங்களால் புத்தகங்களை நிதானமாகப் பார்க்க முடியாமல் போகலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
3 comments:
ஜெயமோகன் சிறுகதைகள் தொகுப்பில் உயிர்மையில் வெளிவந்த தொகுப்பில் இருந்த கதைகளும் அடக்கமா?
சங்கர்,
அதே புத்தகம் மீண்டும் கிழக்கு வாயிலாக.
சுஜாதா தனது புத்தகங்களின் விற்பனையாளர் என்பதோடு, மற்ற புத்தகங்களின் விற்பனையையும் அதிகமாக்குபவர் என்று நான் நம்புகிறேன். இம்முறை அது நிரூபிக்கப்படும்
- Saar idhu nadandhadhaa? aavaludan edhir paarkiraen
Post a Comment