Saturday, June 11, 2011

தள்ளுபடி அதிரடி

இந்தப் பதிவை நான் சீரியஸாகத்தான் எழுதுகிறேன் என்றாலும் கடைசியில் இது மார்க்கெட்டிங் பதிவாகவும் எஞ்சும் அபாயம் உள்ளது என்பதை இப்போதே சொல்லிவிடுகிறேன்.

அதிரடித் தள்ளுபடி என்று கிழக்கு பதிப்பகம் சில புத்தகங்களை கிட்டத்தட்ட 80% தள்ளுபடியில் விற்பனை செய்தது, செய்துவருகிறது. இது முதலில் அறிவிக்கப்பட்டபோது சந்தோஷத்துடன் வாங்கிச் சென்ற வாசகர்கள் ஒருபுறம், இது எழுத்தாளர்களை அவமானப்படுத்துகிறது என்று வருத்தப்பட்டவர்கள் ஒருபுறம். வாசகர்கள் இப்படிப் பழகிவிட்டால் புதிய புத்தகங்கள் வரும்போது இனி அதனை வாங்கமாட்டார்கள் என்று கருத்துச் சொன்னவர்கள் ஒருபுறம்.

பொதுவாக ஒரு புத்தகத்தை 1200 அச்சடிப்பது என்பது மரபு. (இப்படி இல்லாமல் குறைத்து, மிகக்குறைத்து, அல்லது நன்றாக விற்பனையாகும் புத்தகங்களை மிக அதிகரித்தும் அச்சடிக்கப்படுகின்றன. அவை பிரச்சினையற்றவை. எனவே, அதைப்பற்றி இங்கே எங்கேயும் பேசவில்லை.) அப்படி அச்சடிக்கும் புத்தகங்கள் நாம் எதிர்பார்த்த மாதிரி விற்பனை ஆகவில்லை என்றால் அவை தேங்கத் தொடங்கும். 3 வருடங்களில் விற்கவில்லை என்றால் அதுவே சுமையாகவும் ஆகலாம். பொதுவாக 100 புத்தகங்கள் அச்சிட்டால், அதில் சூப்பர் ஹிட் புத்தகங்கள் அதிகபட்சம் 5 வரலாம். ஹிட் புத்தகங்கள் 10 வரலாம். மோசமில்லை என்னும் ரகத்தில் இன்னொரு 20 வரலாம். மீதி 65 புத்தகங்கள் இப்படித் தேங்கிப் போகும் அபாயம் கொண்டவைதான். (இந்த எண்ணிக்கைக்கும் புத்தகங்களின் தரத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.)

இந்தப் புத்தகங்களை என்ன செய்வது? அதிலும் 1500 தலைப்புகளில் பல்வேறு புத்தகங்கள் வரை அச்சிட்ட பதிப்பகங்கள் என்ன செய்ய இயலும்? இவற்றை பத்திரமாக வைத்திருக்க புத்தகக் கிடங்குக்கு ஆகும் செலவு, அவற்றைக் கையாளும் பாதுகாக்கும் பணியாளார்களின் சமபங்களங்கள் எல்லாவற்றையும் எப்படி நிர்வகிப்பது?

இந்தப் பிரச்சினை புத்தகத் தொழிலில் மட்டும் இருப்பதில்லை. எல்லாத் தொழிலிலும் உண்டு. ஆனால் அவ்வப்போது ஸ்டாக் கிளியரன்ஸ் சேல்ஸ் என்ற ஒன்றைப் போட்டு காலி பண்ணிவிடுவார்கள். புத்தகம் பொருத்தவரையில், தமிழ்நாட்டில் இப்பழக்கம் இல்லை என்பதால், அதனை கிழக்கு செய்தபோது நிறைய கேள்விகள் எழுந்தன.

உண்மையில் கிழக்கு பதிப்பகம் இது போன்ற புத்தகங்களை இந்த விலையில் மகிழ்ச்சியோடு விற்கவில்லை. இதனை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு புத்தகத்தை 1200 கூட விற்கமுடியாதா என்ற கேள்வி எழலாம். அதற்கான சரியான வழிமுறைகளை எந்தப் பதிப்பகமும் இன்னும் எட்டியிருக்கவில்லை என்பதுதான் சோகமான உண்மை. இதுபோக, ப்ரைடுக்காகவும், மன மகிழ்ச்சிக்காவும் கொண்டு வரப்படும் புத்தகங்கள். அவையும் விற்கவில்லை என்றால் புத்தகக் கிடங்கில் தேங்கவே தொடங்கும். வேறு வழியின்றித்தான் இதனைச் செய்யவேண்டியிருக்கிறது.

இதைச் செய்வதால் ஏற்படும் பிரச்சினைகளாகச் சொல்லப்படுபவை, உண்மையில் கிழக்கை மற்றும் இதுபோன்று இனி வேறு பதிப்பகங்கள் செய்ய முன்வந்தால் அவற்றையும் பாதிக்காது என்றே நான் நம்புகிறேன். இப்படி குறைந்த விலையில் புத்தகம் வாங்கிப் பழகியவர்கள் இனிமேல் புதிய புத்தகங்களை வாங்கமாட்டார்கள் என்று நான் நம்பவில்லை. உண்மையான புத்தக விற்பனை புத்தக விரும்பிகளிடமே முதலில் ஏற்படுகிறது. அவர்கள் இதற்கெல்லாம் காத்திராமல் உடனே வாங்கிவிடுவார்கள் என்பது முதல் பாயிண்ட். இரண்டாவதாக, நாம் எல்லா புத்தகப் படிப்பாளர்களையும் ஏற்கெனவே அடைந்துவிட்டோம் என்னும்போதுதான் இந்த ‘புத்தகம் இனி விற்காது’ என்ற எண்ணமே ஏற்படும். ஆனால் உண்மையில் நாம் பெரும்பாலான புத்தக வாசிபபாளர்களைச் சென்று அடையவே இல்லை. எனவே இந்தத் தள்ளுபடி விற்பனையில் பயன் அடையப்போவது, நாம் ஏற்கெனவே சென்றடைந்திருக்கும் ஒரு சிறிய விகிதத்தில் ஒரு மிகச் சிறிய விகிதம் மட்டுமே. ஏனென்றால்,ஒரு தமிழ்ப் பதிப்பகத்தைத் தெரியாதவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்டதமிழர்களின் எண்ணிக்கைக்குச் சமமானது.

அடுத்ததாக எழுத்தாளர்களின் வருத்தம். முதலில் இது நியாயமானது என்பதைச் சொல்லிவிடுகிறேன். ஆனால் இது மனம் சார்ந்த வருத்தம். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் பதிப்பாளர்களுக்கு வேறு வழியில்லை என்பது புரியலாம். புத்தகத்தை எடைக்கு எடை போட்டோ, ரிபிராசஸஸ் செய்ய விலைக்குப் போட்டோ கொன்றுவிடலாம் என்று ஒரு வாதம் வருகிறது. நான் இதனை நிச்சயம் ஏற்கவில்லை. குறைந்த விலையில் கொடுத்தால் வாங்க ஆளிருக்கும்போது ஏன் இதனைச் செய்யவேண்டும்? புத்தகத்தின் விலை தங்கள் பர்ஸைவிட அதிகம் என்னும்போது மட்டும் ஒரு புத்தகத்தை வாங்காமல் செல்பவர் இதனைப் பயன்படுத்தி புத்தகம் வாங்கிக்கொண்டால் அது ஓர் எழுத்தாளருக்கு நிச்சயம் மகிழ்ச்சியே ஏற்படுத்தவேண்டும். ஓர் எழுத்தாளர் எழுதுவதே தனது புத்தகம் பரவலாக வாசிக்கப்படத்தானே!

மேலும், இப்படி வாசித்துப் பழகியவர்கள், சில வருடங்களில் ஒரு புத்தக வாசிப்பாளராகவே மாறும் வாய்ப்பு இருக்கிறது. இதோடு, இப்படி தள்ளுபடி விலையில் விற்பனை செய்யும் பதிப்பகங்களுக்கு நல்ல மார்க்கெட்டிங் கிடைக்கிறது. இதனையெல்லாம் சரியாக விற்காத புத்தகங்களின் மூலம் சம்பாதித்துக்கொள்ள முடியும்.

ஒரு புத்தகத்தை ஏன் 1200 கூட விற்கமுடியவில்லை? புத்தகம் வாசிக்கும் பழக்கம் நம்மிடையே குறைவு என்பது நிச்சயம் உண்மையே. ஆனால் ஒரு புத்தகத்தின் 1200 படிகளை வாங்கும் வாசிப்பாளர்கள்கூடவா இல்லை? இருக்கிறார்கள். தமிழ்நாடெங்கும் பரவலாக இருக்கிறார்கள். (வெளிநாட்டிலும்தான்!) அவர்களை அடையும் வழி காஸ்ட்லியானதாக இருக்கிறது. டிவியில் விளம்பரங்கள் வரத் தொடங்கினால் மிக எளிதில் ஒரு பதிப்பகம் பிரபலமாகலாம். நிச்சயம் புத்தகங்களும் விற்கும். ஆனால் அந்த டிவி விளம்பரத்துக்குத் தரும் காசுக்கு இணையான லாபத்தை புத்தகங்களில் பார்க்க முடியாது அல்லது வருடங்களாகும்.

டிவி விளம்பரம் என்றில்லை, முன்னணி நாளிதழ்கள், முன்னணி வெகுஜன இதழ்கள் எல்லாவற்றின் விளம்பர ரேட்டும் இதேபோலவே இருக்கின்றன. ஆனந்தவிகடன், குமுதம் போன்றவற்றின் ஒரு பக்க விளம்பரம் கிட்டத்தட்ட 1.5 லட்சம். இந்த 1.5 லட்ச விளம்பரத் தொகையை ஈடுகட்ட, 100 மதிப்புள்ள புத்தகம் எத்தனை விற்க வேண்டும் என்று கணக்கிட்டுப் பாருங்கள். ஒரு 100 ரூபாய் மதிப்புள்ள புத்தகம் விற்றால் பதிப்பகத்துக்கு நிகர வருமானம் (நிகர லாபம் அல்ல என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்) 30 ரூபாய்தான் கிடைக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரே விளம்பரத்தில் அத்தனை புத்தகம் விற்குமா? விற்காது. இதுதான் பிரச்சினை.

தள்ளுபடி விற்பனையின் ஒரே மகிழ்ச்சி, தான் வாங்க நினைத்திருக்காத புத்தகங்களையும் கூட வாசகர்கள் வாங்கிச் செல்வது. நெடுநாளாக வாங்க விரும்பி, பணம் அதிகம் என்ற ஒரே காரணத்துக்காக வாங்காமல் இருந்த ஒரு புத்தகத்தை வாசகர் கிட்டத்தட்ட நெக்குருகி வாங்கிச் செல்வது. இன்று கிழக்கு முன்னெடுத்திருக்கும் இந்த தள்ளுபடி விற்பனையை நிச்சயம் எல்லாப் பதிப்பகங்களும் முன்னெடுத்தே ஆகவேண்டும். சில வருடங்கள் ஆகலாம். ஆனால் வேறு வழியில்லை. இப்படிச் செய்யாமல், 10 அல்லது 12 வருடங்கள் விற்காமல் ஒரு புத்தகத்தை வைத்துப் பலனில்லை.

இன்னும் ரீ ப்ரிண்ட், டேமேஜ் பற்றியெல்லாம் நான் சொல்லவில்லை. கிழக்கு பதிப்பக விற்பனையில் கிளியரன்ஸும், டேமேஜ் புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. டேமேஜ் புத்தகங்கள் என்பது - அழுக்கடைந்த புத்தகங்கள், ஒரே ஒரு பக்கம் மட்டும் அல்லது அட்டை குறைபாடுடைய புத்தகங்கள். இவற்றையும் விலைக்குப் போடுவதற்குப் பதிலாக மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு வைத்திருக்கிறோம். இந்த டேமேஜ் புத்தகங்களில் மிக நன்றாக விற்பனை ஆகும் புத்தகங்களும் வரலாம். இதைப் பார்த்துவிட்டுத்தான் சில எழுத்தாளர்கள் நமது புத்தகம் சரியாக விற்கவில்லை என்று முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். டேமேஜ் புத்தகங்கள் தனியாகவும், கிளியரன்ஸ் புத்தகங்கள் தனியாகவும்தான் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கடைசியாக ஒன்று, ஏற்கெனவே சொன்னதுதான், நல்ல விற்பனை என்பதற்கும் புத்தகத்தின் தரத்துக்கும் தொடர்பில்லை.

பின்குறிப்பு 1: கிழக்கு பதிப்பகத்தின் கிளியரன்ஸ் சேல்ஸ் இப்போது திநகர் எல் ஆர் ஸ்வாமி ஹாலில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. திநகர் பஸ் நிலையம் அருகில் உள்ள சிவா விஷ்ணு கோவில் எதிரில்.

பின்குறிப்பு 2: இணையத்திலும் தள்ளுபடி விற்பனை கிடைக்கிறது. பார்க்க: https://www.nhm.in/shop/discount/
 
பின்குறிப்பு 3:  என் கவிதைத் தொகுப்பான நிழல்கள் புத்தகம் எத்தனை வருடங்கள் ஆனாலும் க்ளியரன்ஸ் சேல்ஸில் கிடைக்காது. எனவே இப்போதே வாங்கிவிடவும். :> வாங்க: https://www.nhm.in/shop/AAA-AA-AAAA-AAA-9.html

1 comment:

M.S.Devarajan said...

sir 26 புத்தகங்கள் 660 ரூபாய் தான் எனக்கு 1540 ரூபாய் லாபம்.. thank u so much sir...