Monday, November 3, 2003

நெல்லையின் மிகச்சிறந்தத் திருவிழாவாக நான் தேரோட்டத்தைத்தான் சொல்லுவேன். சிறுவயது முதலே தேரோட்டம் மனதில் ழப்பதிந்துபோனதை அறிய முடிகிறது. ன்மீகத்தைத் தாண்டி அந்தத் திருவிழாவின் மீதான பற்றை உணரமுடிகிறது. சின்ன வயதில் தேரோட்டத்தைக் காட்ட, அப்பா தோளில் தூக்கிவைத்துக்கொண்டு போனது இன்னும் நினைவிருக்கிறது. அப்பர்க்ளாப்டர் பள்ளியின் படிகளில் அண்ணாவும் அக்காவும் காத்திருப்பார்கள். அவர்களையும் கூட்டிக்கொண்டு தேரோட்டம் பார்க்கச் சென்றது ஒரு புகைப்படம் போல கண்முன் விரிகிறது.

வாழ்க்கையோட்டத்தில் மதுரைக்குப் போய் திருநெல்வேலியின் வாசனையே மறந்துபோனது. அப்பர்க்ளா·ப்டர் பள்ளியின் படிகளில் அண்ணனும் அக்காவும் காத்திருந்தது மட்டும்தான் தேரோட்ட நினைவுகளின் எச்சமாய் ஒட்டி இருந்தது. வாழ்க்கை மீண்டும் சுழல மதுரையிலிருந்து மீண்டும் நெல்லைக்கு. கிட்டத்தட்ட று வருடங்களுக்குப் பின் நெல்லையைக் காணும்போது நான் பிறந்து வளர்ந்த தெருவைத் தவிர வேறெதுவுமே நினைவுக்கு வரவில்லை. மெல்ல மெல்ல விளங்க ரம்பிக்கும் முப்பரிமாணப் படம் மாதிரி ஒன்றிரண்டு நினைவுகள் தலைதூக்க ரம்பித்த நேரம் நெல்லையப்பர் கோவிலில் கொடியேற்றத்துடன் ஊரே விழாக்கோலம் பூண்டது. ஏகப்பட்ட கதைகளைப் பாட்டியும் அம்மாவும் தாத்தாவும் சொல்லி 'இது கூட ஞாபகம் இல்லையா? என்று கேட்டுக்கொண்டிருக்க , நான் தேரோட்டத்திற்குத் தயாரானேன்.

நினைவுக்கு வந்த பின்பு நான் பார்த்த முதல் தேரோட்டம் என்னை அத்தனை ஈர்க்கவில்லை. நல்ல பையனாக அம்மாவுடன் சென்று அசைந்து வரும் தேரை மட்டும் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். மீசை முளைக்கத் தொடங்கியிருக்கும்; முளைத்துவிட்ட பையன்கள் தேரை இழுக்காமல் ஓரத்தில் நின்றோ, ஏதேனும் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் நின்றோ பார்வையாளராக மட்டும் இருந்தால், வடம் இழுக்கும் கூட்டத்திலிருந்து செருப்பு வரும். அந்த பயம் உள்ளுக்குள் இருந்தாலும் ஜனக்கூட்டத்தின் உற்சாகத்தையும் வயசுப் பசங்களின் ரவாரத்தையும் அலங்காரம் பண்ணிக்கொண்ட வயசுப்பெண்களின் சிரிப்பொலியையும் இரசிக்கத் தவறவில்லை.

தெருவின் வழியெங்கும் இரு ஓரத்திலும் அங்கங்கு குவித்து வைத்து காராச்சேவு, ஜாங்கரி என விற்பனை. நீளமான மரக்கம்பின் உச்சியில் ஜால்ரா கைகளைத் தட்டிக்கொண்டே இருக்கும் பொம்மையும் அதைச் சுமந்து செல்பவன் கையில் கட்டிவிடும் வாட்சு ஜவ்வு மிட்டாயும் என்னை அதிகம் கவர்ந்தது, தேரோட்டத்தை விட. இப்போது யோசித்துப் பார்த்தால் தேரோட்டம் எனபது தனியாய் தேரோடுவது மட்டுமில்லை என்று புரிகிறது. எல்லாம் சேர்ந்தது.

இரண்டாம் தேரோட்டத்திற்கு முன்பு, அந்த ஒரு வருடத்தில் நண்பர்கள் சேர்ந்துவிட, புதுவிதமான தேரோட்டம் அறிமுகமாகியது. அதே தேர்தான். அதே திருவிழாதான். னால் அனுபவம் மட்டும் வித்தியாசம்.

காலையில் றுமணிக்கு வீட்டை விட்டு கிளம்பி, தேருடனே நடந்து வந்து அது நிற்கும்போது நின்று, அசைந்து நகரும்போது கத்திக்கொண்டே வடம் இழுத்து, நீர்மோர், பானகரம் வாங்கிக்குடித்து, (மறுநாள் தொண்டை கட்டிக்கொள்ளும்) இரண்டு ஓரத்திலும் வரிசையாக நிற்கும் பெண்களைப் பார்த்து கமெண்ட் அடித்து, முரசறைந்துகொண்டே மைக்கில் 'எல்லோரும் வடத்தைத் தூக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள்' என்று அடி மூச்சிலிருந்து கத்திச் சொல்லும் வயசாளியைப் பரிகசித்து, அவ்வப்ப்போது பாராட்டி... முடியும்போது மதியமாயிருக்கும். யாராவது ஒரு நண்பன் வீட்டில் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு, படத்திற்கு ஓடி, சாயங்காலம் மீண்டும் வடம் பிடிப்போம்.

தேர் நிலையம் நெருங்கும்போது, ரெம்கேவி பக்கத்தில் வரும்போதே வயசுப் பசங்க காணாமல் போய்விடுவார்கள். அப்படிக் காணாமல் போகாத பயல்கள் ஒன்று வெளியூர்க்காரன்களாய் இருக்கவேண்டும், அல்லது சாது/அப்பிராணியாய் இருக்கவேண்டும். காலையிலிருந்து மாலைவரும் ட்டம்போடும் பயல்களை போலீஸார் குறித்து வைத்துக்கொண்டு, தேர் நிலையம் நெருங்கும்போது பெண்டு நிமித்துவிடுவார்கள் என்பது நடைமுறை.

சிலவருடங்களுக்கு முன்பு வரை தேர் நிலையம் சேர குறைந்தது ஒரு வாரமாவது குமாம். தேர் பெரிய தேராக இருக்குமாம். பதிமூன்று அடுக்குகள் கொண்டிருந்ததாகச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். பதிமூன்று அடுக்குகள் கொண்டதாய் இருந்தபோது நிலையம் சேர ஒரு மாதகாலம் கூட கியிருக்கிறதாம். அந்த ஒரு மாத காலமும் நெல்லை டவுண், ஜங்க்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மாலை மூன்று மணிக்கெல்லாம் முடிந்துவிடும். பையன்கள் வந்து தேர் இழுப்பார்கள் என்று நம்பிக்கை. இப்போதெல்லாம் று அல்லது ஏழு அடுக்குதான் வைக்கிறார்கள்.

கடந்த நான்கு வருடங்களாக ஒரே நாளில் நிலையம் சேர்த்து விடுகிறார்கள். போக்குவரத்து பாதிப்பு, தீவிரவாத/இனவாத குழுக்களின் அச்சுறுத்தல், சட்டம் ஒழுங்கு பாதிப்பு உள்ளிட்ட பல வகைக் காரணங்கள் சொல்கிறார்கள். ஒரு மாத காலமாய் தேர் இழுத்த காலங்களில் தேர் எந்தக் கடையின்/வீட்டின் முன் நிற்கிறதோ அவர்கள் அன்றைய நாளுக்கான பூஜை/நெய்வேத்ய செலவுகளை ஏற்பார்கள். நெல்லையின் இரதவீதிகளில் பல இஸ்லாமியக் கடைகள் இருக்கின்றன. அந்தக் கடைகள் முன்பு நிற்க நேரும்போது அவர்களும் அதை ஏற்று மனமுவந்து செய்திருக்கிறார்கள். இன்னும் நெஞ்சில் ஈரம் உள்ள ஊர்களில் ஒன்றாய் நெல்லையை என்னால் உறுதியாக அடையாளம் காட்டமுடியும்.

இப்போதெல்லாம் தேர் ஒரே நாளில் நிலையம் சேர்ந்து விடுவதால் 'தேரை இழுத்து நடுத்தெருவுல விட்டுட்டீயளேடே' என்கிற கமெண்ட்களைக் கேட்க முடிவதில்லை. தேரோட்டச் சமயம் மட்டுமே எளிதாகக் கிடைக்கும் தேங்காய்மிட்டாய் என்கிற இனிப்பை அன்று மட்டும்தான் உண்ண முடிகிறது. குவித்துவைத்திருக்கும் ஜாங்கிரி, சேவுகளை ஒருநாள் மட்டும்தான் காண முடிகிறது. மாணவர்களுக்கு தேரோட்ட நாள் மட்டுமே விடுமுறை. மற்ற நாள்களில் வழக்கம்போல பள்ளி நடைபெறுகிறது. ஒரு வேளை ஒரே நாளில் நிலையம் சேராவிட்டால் (சனிக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் தேரை நிலையம் சேர்ப்பதில்லை என நினைக்கிறேன்) என். எஸ். எஸ்., காவல்துறையினர் மற்றும் ரிசர்வ் படையினரை வைத்து நிலையம் சேர்த்துவிடுகிறார்கள்.

தேரோட்டத்தை லைவ்வாக உள்ளூர் கேபிள்கள் போட்டி போட்டு ஒளிபரப்புகின்றன. இந்த முறை பண்பலை வானொலியும் அதன் பங்குக்குத் தேரோட்டச் சிறப்புச் செய்திகளை ஒலிபரப்பிதயாகச் சொன்னார்கள். இத்தனையையும் மீறி, தேரோட்டம் காணும் மக்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் கூடிக்கொண்டே வருவதாகத்தான் தெரிகிறது.
nellaiyappar thEr (C) Haranprasanna
தேர்
--ஹரன்பிரசன்னா
நிலையம் சேர்ந்த பின்
தேர்வந்த பாதையில்
சிதறிக்கிடக்கின்றன
தொலைந்த செருப்புகள்

இராதை தேடிய கண்ணன்
புதுமாப்பிள்ளையின் பெருமூச்சு
யானையின் இராஜ நடை
மரக்கம்பின் நுனியில்
சவ்வு மிட்டாயோடு
கைதட்டிக்கொண்டிருந்த பொம்மை
எல்லாவற்றையும் அசைபோட்டுக்கொண்டு
கம்பீரமாய் நிலையத்தில் நின்று
இரவைக் கழிக்கிறது
தேர்
மறுநாளின் எடையிழத்தலை
எதிர்நோக்கி.



No comments: