Tuesday, November 4, 2003
தட்டாண்
---ஹரன்பிரசன்னா
(என் முதல் கதை)
கடந்த நாட்களின் நினைவுகள் எத்தனைதான் சந்தோஷம் தருவதாக இருந்தாலும் எங்கேயோ ஒரு இனம் புரியாத சிறிய சோகத்தையும் விட்டுச் சென்று விடுகின்றது. மாட்டு வண்டி சீராகப் போய்க்கொண்டு இருக்கிறது. இப்படி மாட்டு வண்டியில் போய் எத்தனை வருஷங்கள் ஆகின்றன?. இன்னும் மாறாமல் அப்படியே இருந்தன செம்மண் சாலைகள். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் முன்பு இதன் வழியே நடந்தபோது எப்படி இருந்ததோ அப்படியே. வண்டி வலதும் இடதும் சாய்ந்தவாறு சென்றுகொண்டிருந்தது. முன்பெல்லாம் முக்கூடலில் இருந்து ரெங்கசமுத்திரம் செல்லவேண்டுமானால் ஏதெனும் சைக்கிள் வாடகைக்கு வாங்கிச் செல்வோம். அல்லது யாருடனாவது தொத்திக்கொண்டு போவோம். அதற்கு ஒரு சொல்லப்படாத போட்டியே நடக்கும்.
பஸ்ஸில் இருந்து இறங்கியபோது முக்கூடலிலிருந்து ரங்கசமுத்திரத்திற்குச் செல்ல இன்னும அதே நிலைதான் நீடிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. என்னசெய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது காய்கறி ஏற்றிச் செல்லும் இந்த மாட்டுவண்டியும் அசிரமத்திற்குச் செல்வதாய் கேள்விப்பட்டதால் இதில் ஏறிக்கொண்டேன். வண்டிக்காரர் அதிகம் பேசவில்லை. மாடுகளின் மீதே குறியாய் இருந்தார். சொந்த மாடாய் இருக்கும்.
மேடு பள்ளங்கள் அதிகம் இருந்ததால் வண்டியில் அதிகம் குலுக்கல் இருந்தது. சில கிராமங்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும் மாறுவதே இல்லை போல. ஆனால் வாழ்க்கை அப்படி இல்லை. நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கிறது. திரும்பப் பெறமுடியாத மாறுதல்கள். இந்த நிமிடம் இனி கிடைக்காது என நினைக்கும்போதே நெஞ்சுக்குள் ஏதோ ஒரு சோகம் அப்பிக் கொண்டது.
வண்டியின் பின்னால் தொங்கவிடப்பட்டிருந்த சாக்கை எடுத்து கூரையின் மீது போட்டுவிட்டு மெல்ல வெளியில் பார்க்க ஆரம்பித்தேன். காலை நேரத்து வெயில் முகத்தில் அடித்தபோது சற்று உற்சாகம் வந்தது போல இருந்தது. ஆனாலும் எப்போதும் போல எனக்குள் இருந்த இன்னொரு மனது அதை வேகமாய் மறுத்தது. சுற்றுமுற்றும் கட்டடங்களே இல்லை. தூரத்தில் ஆசிரமத்தின் சமையல் அறை மட்டும் தெரிந்தது. நினைவுகள் என்னை அலைகழிக்கத்தொடங்கின. அவற்றை கயிற்றால் கட்டி என்னை நோக்கி இழுப்பது போல கற்பனை செய்து கொண்டேன். என் மனம் ஒரு பெரிய கம்பு போலவும் அதில் பல னைவுகளின் வால்கள் கயிற்றால் கட்டப்பட்டு இருப்பது போலவும் ஒவ்வொரு நினைவும் ஒவ்வொரு திசை நோக்கிப் பறப்பது போலவும் தோன்றியது. நினைவுகளை திசை திருப்பும் பொருட்டு வண்டிக்காரருடன் பேசலாம் என எத்தனித்தேன்.
'இப்போ அந்த ஆசிரமத்துல யாரு யாரு இருக்கா?"
அவரிடம் இருந்து பதிலே இல்லை. மீண்டும் ஒரு முறை கேட்டேன். அவர் காரியத்தில் மட்டும் கண்ணாய் இருந்தார்.
"ரே.ரே.".
செவிடாய் இருக்குமோ?
அப்போது காற்றில் ஒரு வாசம் பரவியது. பல நாட்கள் பழக்கப்பட்ட வாசம். வழியெங்கும் சிறிது சிறிதாய் மஞ்சள் நிறப் பூக்கள் பூத்திருந்தன. இரண்டு பக்கங்களிலும். காணவே மகிழ்ச்சியாய் இருந்தது. அடுத்ததாய் இன்னும் சிறிது தூரத்தில் தட்டாண்கள் பறக்க வேண்டும். என் உள்மனது சொல்லியது. எத்தனை முறை நடந்த சாலை. உணர்வில் கலந்தவை அந்த வாசமும் அந்தக் காட்சியும். சொன்னாற்போலவே தட்டாண்கள் பறந்துகொண்டிருந்தன. ஒன்றல்ல இரண்டல்ல. நூறல்ல. ஆயிரம் ஆயிரம். சிவப்பு உடலும் கருப்புக் கண்டங்களால் பிரிக்கப்பட்ட வாலும் நிறமற்ற இறக்கையுமாய்த் தும்பிகளின் கூட்டம். என்னால் அதற்கு மேல் என் நினைவுகளைக் கட்டி இழுக்க முடியவில்லை. கம்பில் கட்டப்பட்டிருந்த நினைவுகள் மிகச் சப்தமாய்ச் சிரித்தபடி அறுத்துக்கொண்டு ஓடின. எனக்குள் இருந்த இன்னொரு மனம் சொன்னது.
"அவற்றை விடாதே. பிடி"
நான் அதட்டினேன். சில சமயம் அமைதியாகும். இப்போதும் அமைதியாயிற்று.
"ஏலேய். ஓடிருங்கல. சாமி வருது"ன்னு சொல்லிக்கிட்டே வந்தாரு முருகன் அண்ணாச்சி. பாவம். அவருதான் சாமிகிட்டே எப்பயும் திட்டு வாங்குவாரு. திருப்பி ஒண்ணும் சொல்லமாட்டாரு. கேட்டா சொல்லுவாரு...
"பாவம்ல சாமி. எல்லா அனாதப்புள்ளகளயும் அன்பாப் பாத்துக்குதுல்லா. அது திட்டுனா திருப்பி திட்டுனா பாவம்ல."
சாமிக்கு கோபம் வந்துச்சுன்னா வாயில மூதி மூதின்னு திட்டுவாரு. நாங்க எல்லாரும் ஓடிபோயி கையில ஆளுக்கொரு பொத்தகத்த எடுத்து வெச்சிக்குவோம். சாமி வந்தாரு.
"எல்லா நாயிகளும் சாப்பிட்டீகளால?"
நாங்க எல்லாரும் தலையாட்டினோம்.
"ஒழுங்கா படிக்கணும் கேட்டியளா? எந்த மூதியாவது சேட்டை பண்ணீயளோ. மணிப்பிரம்புதான் பேசும்ல"ன்னவரு எங்களப்பார்த்து, "அந்த மூதி முருகன் எங்கல"ன்னாரு. பதிலு சொல்லுறதுக்கு முன்னாடியே போயிட்டாரு.
அந்த மணிப்பிரம்ப நாந்தான் போயி வாங்கிட்டு வந்தேன். எனக்கு ரொம்ப பெருமயா இருந்திச்சு. யாருகிட்டயாவது சொல்லணும்னு தோணுச்சி. பக்கத்துல பூபதி இருந்தான். அவன்கிட்ட சொன்னேன்.
"மக்கா.அது நான் வாங்குன பிரம்புல".
"அதுக்கு என்னல இப்போ?"
"சாமி என்னய அடிக்கதே ஏ ஹே ஏ ஹே"
"போல மயிரான். ஒன்கிட்ட வந்து எவம்ல கேட்டான் இத?"ன்னுட்டுப் போயிட்டான்.
எழவெடுத்தவன். பொறாமை புடிச்சவன். எனக்கு அதுக்கு மேல படிக்க ஓடல. தட்டாண் புடிச்சி வெளயாடனும்னு தோச்சி. மயிலு எங்க இருக்கான்னு தேடுனேன். ஒரு கல்லுல ஒட்கார்ந்துகிட்டு பொத்தகத்தை தொறந்து வெச்சிகிட்டு வானத்தை பார்த்துகிட்டுக் கெடந்தா. எனக்கு என்னவோ தெரியல. மயிலுன்னா ரொம்ப புடிக்கும். அவளுக்கும் தான். ஆனா எமகாதகி. எப்போ பேசுவா எப்போ திட்டுவான்னே தெரியாது. மெல்ல அவ கிட்டப் போனேன்.
"ஏட்டி. .. வாட்டி போயி தட்டாண் புடிக்கலாம்"
"போல. இப்பதான சாமி சொல்லிச்சு. படிக்கச் சொல்லி"
"நடிக்காதட்டி. எத்தனை தடவ என்கிட்ட வந்து கெஞ்சிருக்க. இப்ப நா கூப்பிட்டா பீத்திக்கிற."
"அப்படித்தாம்ல பீத்திக்குவேன். நீ போல"ன்னுட்டா. எனக்கு கோவம் கோவமா வந்திச்சி.
"இன்னொரு தடவ என்ன போலங்காத. எனக்கு கோவம் வரும்"
"இவரு மகராசா. இவர மரியாதயா கூப்பிடுவாவ. போல வால போல வால போல வால"
"இனிமே என்கிட்ட வந்து என்னைக்காவது கேளூ ஆட்டைக்குச் சேர்த்துக்கோன்னு. அப்பப் பாரு"
"இவரு ஆட்டைக்குச் சேர்த்துக்கலேன்னா எங்க வீட்டுல பருப்பு வேகாதாக்கும்? போல."
எனக்கு ரொம்ப கோவம் வரவும் அவ மண்டயில கொட்டிட்டு ஓடிட்டேன். ஒடனே போயி சாமி கிட்ட சொல்லுவா சிரிக்கி. சொல்லட்டும். நாமளும் ஏதாவது புளுவனும்னு நினைச்சிக்கிட்டே தட்டாண் புடிக்க ஓடிட்டேன்.
இப்பல்லாம் ரொம்ப நாளாச்சு. மயிலு தட்டாண் புடிக்க வந்து. வரவே மாட்டேங்குறா. கேட்டா சாமி கூடாதுன்னு சொல்லிச்சுன்னு சொல்லுதா. எனக்கு கஷ்டமா இருந்திச்சு. மயிலு இல்லாம எனக்கும் தட்டாண் புடிக்கவே ஒடல. அவ கிட்ட கேட்டா பீத்திக்குவா. இருந்தாலும் கேட்டேன்.
"ஏன்ட்டி இப்பல்லாம் என் கூட வெளயாட வரமாட்டேங்க?". பேசாம இருந்தா.
"ஏட்டி கேக்காம்லா."கொரல ஒசத்தி சொன்னேன். திரும்பி மொறச்சிப் பார்த்தா. மெல்ல சொன்னா.
'எலேய். சாமி திட்டுதுல. என்னய கூப்பிடாதல"
"எதுக்குட்டி திட்டுது. எத்தன தடவ வந்திருக்க. இப்ப மட்டும் ஏன்ட்டி புளுவுத? வர புடிக்கலன்னா புடிக்கலன்னு சொல்லுட்டி"
அவளுக்கு கோவம் வந்துட்டு. அவளும் கோவமா சொன்னா.
"ஆமால. எனக்கு ஒண்ய புடிக்கல. இனிமே என்ன கூப்பிடாத . இன்னொரு தடவ கூப்பிட்டா சாமி கிட்ட சொல்லிப்புடுவேன்"
"ரொம்ப மிரட்டாதட்டி. சாமின்னா பயந்துருவோமாக்கும். போட்டி"ன்னு சொல்லிட்டுப் போயிட்டேன்.
கொஞ்ச நேரம் கழிச்சு அவளா வந்தா. என்கிட்ட கெஞ்சிறமாதிரி கேட்டா.
"ஏல ஏல தட்டாம் புடிக்க நானும் வரேம்ல. என்னயயும் சேர்த்துக்கோல."
எனக்கும் ஆசயா தான் இருந்திச்சி. ஆனா ஒரு பொட்டச்சி என்னல்லாம் பேசுனா. நாம ஆம்பள. அவள அளவிட்டாத்தான் அவளுக்கு அறிவு வரும்னு தோணுச்சி.
"இப்ப மட்டும் சாமி திட்டாதோ? போட்டி. என் கூட பேசாத"ன்னுட்டுப் போயிட்டேன்.
அன்னிக்கு பூரா சுத்தி வந்தா. நா ஆம்பள. எனக்கு எத்தன இருக்கும். அவ கூடப் பேசவே இல்ல.அவ அளுதுருவா போல இருந்திச்சி. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு. அளட்டும் மூதி. நல்லா அளட்டும். அப்பதா அறிவு வரும். இப்ப இப்படிப் பண்ணாதான் இனிமே வெளயாடக் கூப்பிட்டா ஒடனே வருவா. பூபதியும் ஆமான்னான். இப்பல்லாம் பூபதி என்கூட நல்லா பேசுதான். மொதல்ல நெனச்சா மாதிரில்லா இல்ல. நல்லா பழகுதான். நாந்தான் தப்பா நெனச்சிட்டேன் போல இருக்கு.
சாயங்காலமா பூபதி வந்து சொன்னான்.
"எலேய். ஒண்ண சாமி கூப்பிடுதுல"
எனக்கு பயமாப் போச்சி.
"எதுக்குல?"
"எனக்கு என்னல தெரியும். கூப்பிட்டாப் போல"
நேத்து வரைக்கும் நல்லா பேசுனவன் இப்ப எடக்கா பேசுற மாதிரி இருந்திச்சி. நாம மொதல்ல நெனச்சதுதான் சரி. ரெண்டாவது நெனச்சதுதான் தப்புன்னு நெனச்சிக்கிட்டேன். எனக்கா பயமா வேற இருக்குது. சாமி கூப்பிட்டாருன்னா கண்டிப்பா மணிப்பிரம்புதான்.
பயந்துகிட்டே மெல்ல போனேன். பின்னாடியே அந்த மாக்கான் பூபதி ராகமா பாடிக்கிட்டே வந்தான்.
"எம்மாடி எய்யாடி எனக்கெல்லா தெரியாதே. எம்மாடி எய்யாடி எனக்கெல்லா தெரியாதே."
எனக்கு கோவத்துல வாயில நல்லா வந்திருச்சி."தாயோளி.சும்மா இருல."ன்னுட்டு மண்டயில ஒரு தட்டு தட்டினேன். அம்புட்டுதான். என்னவோ எழவு விழுந்தமாதிரி கத்திக்கிட்டே சாமி ரூமுக்கு ஓடினான். எனக்கு ரொம்ப பயம் ஆகிபோச்சு. கொஞ்சம் தைரியத்த வரவழச்சிக்கிட்டு என்ன புளுவலாம்னு யோசிச்சிக்கிட்டே சாமி ரூமுக்குப் போனேன்.
அவரு நாற்காலியில சாஞ்சி ஒட்கார்ந்துகிட்டு இருந்தாரு. பக்கத்துல பூபதி ஒப்பாரி வெச்சிக்கிட்டு இருந்தான். இன்னொரு பக்கத்துல மயிலு நின்னுக்கிட்டு இருந்தா. என்னயப் பாத்த ஒடனே சாமி கூப்பிட்டாரு.
"ஏலே மூதி இங்க வால."
நான் நவலாம அங்கயே நின்னேன்.
"எழவெடுத்தவனே. நா அங்க வந்தேன். ஒன்ன உப்புக்கண்டம் போட்ருவேன்"ன்னாரு.
எனக்கு பயத்துல என்ன பண்ணுறதுன்னே புரியல. அந்த திமிரு புடிச்சவ வாயப் பொத்திக்கிட்டு சிரிச்சா. சாமி அவளயும் அதட்டிச்சி.
"ஏட்டி.சும்மா கெடட்டி"
நான் அவரு பக்கத்துல பயந்து பயந்து போனேன்.
"நாயி ஒனக்கு பொட்டப்புள்ள அவ கூட என்னல சோலி?"
என்னவோ அவ போட்டுக்குடுத்துட்டான்னு மட்டும் தெரிஞ்சது. என்னன்னு தெரிஞ்சா அதுக்கு ஏத்தா மாதிரி புளுவலாம். ஆனா என்னான்னு தெரியாததுனால சும்மாவே நின்னேன்.
"வெளக்கெண்ணெ. வாயத் தொறந்து பேசுல. ஊமயாயிட்டியளோ?"
அவ்வளவு நேரம் சும்மாக்கெடந்த பூபதி நல்ல நேரம் பாத்து ஊதிவிட்டுட்டான்.
"ஆத்தி! என்னமா நடிக்கான்யா?. நீங்க கூப்பிட்டீயன்னு சொன்னா என்ன தாயோளிங்கான்யா. அப்பமட்டும் வாயி வந்திச்சி இப்ப வரலயோ? என்னமா நடிக்கான்யா?"
இன்னியோட செத்தோம்டா சாமின்னு புரிஞ்சி போச்சி. சாமி முருகன் அண்ணாச்சியக் கூப்பிட்டாரு.
"ஏல அந்த மணிப்பிரம்ப எடுல. இந்த மூதி ஒண்ணும் படிக்கவும் மாட்டேங்குது. படிக்கிற புள்ளயலயும் தட்டாண் புடிக்க வான்னு சொல்லி கூப்பிடுது. மயிலு மாதிரி புள்ளக வரலன்னா மிரட்டுது. இதுல கெட்ட வார்த்த வேற. எடுல அந்த மணிப்பிரம்ப. பிச்சிப்புடுறேன் பிச்சி."ன்னாரு.
எனக்கு எல்லாம் புரிஞ்சி போச்சி. இந்த சிரிக்கி நம்மல நல்லா மாட்டிவிட்டுட்டா. இந்த ஊமக்குசும்பனும் சேர்ந்துக்கிட்டான். எனக்கு என்ன செய்யிறதுனே தெரியல. வேற வழியே இல்லன்னு...
"சாமி தெரியாம செஞ்சிட்டேன். நெசமா சொல்லுதேன். இனிமே செய்யமாட்டேன். சாமி.சத்தியமா செய்யமாட்டேன்"ன்னேன்.
சாமி நம்புற மாதிரியே தெரியல. எனக்கு கோவம் வந்திருச்சி.
"நாந்தான் சாமி சத்தியமா சொல்லுதேங்கல்லா."ன்னு கொரல ஒசத்தி சொல்லிப்புட்டேன். அம்புட்டுதான். சாமிக்கு கோவம் ரொம்ப வந்திடுச்சி.
"ஏலே செறி.. என்கிட்டயே கொரல ஒசத்துதியா நீ? ஒன்னப் பிச்சிப்புட்டுதாம்ல மறுவேல"ன்னு சொல்லிக்கிட்டு மணிப்பிரம்ப எடுக்கப் போனாரு. எவன் செஞ்ச புண்யமோ. ஒரு பிளசரு வந்து நின்னது. சத்தம் கேட்டதும் சாமி பெரம்ப மறந்துட்டு பிளசரப்பார்க்க ஓடுனாரு. பிளசருல இருந்து மயிலோட அத்தயும் மாமாவும் கூட ஒரு அம்மாவும் அய்யாவும் எறங்குனாவ. அத்தயும் மாமனயும் பார்த்த ஒடனே மயிலு மொகத்துல ஈயாடல. என்னியாட்டி போட்டுக்குடுத்த. ஒனக்கெல்லாம் அய்யோ பாவாம்னு பார்த்தா ஆறு மாசம் பாவம்ட்டி. ஒனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்னு நினைச்சிக்கிட்டேன்.
அவுக நாலு பேரும் சாமியும் உள்ள ரூமுக்குள்ளார போயிட்டாக. பூபதி நா அடிப்பேன்னு பயந்துக்கிட்டு ஓடிட்டான். மயிலு பக்கத்துல போனேன். அவ கண்ணுல தண்ணி வர்ற மாதிரி இருந்திச்சி. எனக்கு ஆச்சரியமாப்போச்சி. அளுதா எட்டு ஊருக்கு அளுவா. கள்ளளுவி. இப்போத்தான் நெசமா அளுதா. சத்தமே இல்ல. நல்லா வேணும்னு கைல சைக காமிச்சேன். போல மூதின்னுப் போயிட்டா. இவளுக்கெல்லாம் இது போதாதுன்னு நினைச்சிக்கிட்டேன்.
மறு நா பிரேயருக்கு வரும்போதும் உம்முன்னுட்டுதான் வந்தா. ராத்திரில்லாம் அளுதுருப்பா போல. எனக்கும் கஷ்டமா இருந்திச்சி. அந்த அத்தயும் மாமாவும் கூட வந்த ரெண்டு பேரும் அங்கதான் இருந்தாக. எல்லாத்துக்கும் முட்டாய் கொடுத்துக்கிட்டே வந்தா. எனக்கு ஒண்ணும் புரியல. என்கிட்டயும் கொடுத்தா. நா பையக் கேட்டேன்.
"ஏன்ட்டி அளுவுத?"
பதில் ஒண்ணும் சொல்லல. என்னயப் பார்த்ததும் கூட கொஞ்சம் அளுவுற மாதிரி தோச்சி எனக்கு. பிரேயரு முடிஞ்சி எல்லாரும் போயிட்டாங்க. முருகன் அண்ணாச்சிக்கிட்ட கேட்டேன். அவரு சொன்னதக்கேட்ட ஒடனே எனக்கு தூக்கிவாரிப் போட்டுட்டு.
"அவள அந்த அய்யாயும் அம்மாவும் அவுக கூட கூட்டிக்கிட்டு போகப் போறாக. அதுக்கு அவ அத்தயும் மாமாவும் சரின்னு சொல்லிட்டாக. இனிமே அவ அங்கதான் இருப்பா. இங்க வரமாட்டா. இவளுக்கு வேண்டியதெல்லாம் அவுகளே பார்த்துக்குவாக. தையல் எல்லாம் படிக்க வைப்பாக. இவ அந்த அம்மாவுக்கு ஒத்தாசயா வீட்டு வேலப் பார்த்துக்கிட்டு அங்கயே சாப்பிட்டுக்கிட்டு கெடந்துக்க வேண்டியதுதான்."
எனக்கு என்ன செய்யிறதுன்னே தெரியல.
"இப்ப எதுக்கு அவள அனுப்புறாரு சாமி?"
"எலேய் எத்தனை நாளுல இங்கயே இருக்க முடியும்? எல்லாத்தயும் எல்லா நாளும் இங்கயே வெச்சிக்க முடியுமால? ஒரு ஆளு போனா இன்னொரு ஆள எடுக்கலாம்லல."
இப்படி ஒரு லம வரும்னு நா நெனச்சிகூட பார்க்கல.சாமி மயிலு மயிலுன்னு உசுரயே விடுவாரே. சாமி எப்படி இத செஞ்சாருன்னு நா யோசிச்சிக்கிட்டு இருக்கும்போதே முருகன் அண்ணாச்சி சொன்னாரு.
"எலேய்.ஒணக்கும் இப்படித்தாம்ல. நாளைக்கு நல்ல ஆளா வந்து ஒன்னிய கூட்டிக்கிட்டு போறேன்னு சொன்னாகன்னா போயிறவேண்டியதுதான். இது என்ன ஒனக்கு பொறந்த எடமால. சாகுற மட்டும் கெடக்க?"
என்னத்தன்னு சொல்ல. எம்புட்டோ சண்டை போட்டோம். ஆனா இன்னைக்கு அவ போறான்னு கேக்கும்போதே கள்ளிப்பால குடிச்சா மாதிரி இருக்கு. எனக்கு ஒண்ணுமே ஓடல. அளுகயா வந்திச்சி. பூபதியும் உம்முன்னு இருக்கான். அவனுக்கு என்ன எளவெடுத்ததோ தெரியல இப்படி இருக்கான்.
அப்படி இப்படின்னு அவ போகப்போற நாளும் வந்திருச்சி. என்னைக்கு போகபோறோம்னு தெரிஞ்சதோ அதுக்கு பொறவு அவ யாரு கூடயும் மொகம் கொடுத்து பேசல. என்கூடயும். நானா வலியப்போயி பேசுனா கூட பேசாமாயே போயிட்டா பலவாட்டி. நானும் வுட்டுட்டேன்.
அப்படி இப்படின்னு... இப்போ போகபோறா. எல்லாருக்கிட்டயும் போயி சொல்லிக்கிட்டா. சாமி கிட்ட சொல்லிக்கிட்டா. சாமி அவள கட்டிப்பிடிச்சிக்கிட்டு அளுதாரு. எனக்கு என்னமோ சாமி நடிக்குதுன்னு தோணுச்சி. இம்புட்டு தூரம் அளுவுனா ஏன் அனுப்பனும்? அவளும் கூடச் சேர்ந்து அளுதா. என்கிட்டயும் வந்து சொல்லிட்டுப் போனா. நா பதிலா ஒன்னும் சொல்லல. சொல்ல முடியல. தொண்டக்குள்ள ஏதோ சிக்கிக்கிட்ட மாதிரி இருந்திச்சி. கண்ணு கலங்குனா மாதிரி இருந்திச்சி. ஆனா அடக்கிட்டேன். ஆம்பளயில்லா. இந்த பூபதி மாக்கான் ஓன்னு அளுதுக்கிட்டே கெடந்த்தான். இவன் எதுக்கு அளுதான்? நானே அளாம நிக்கேன்.
பிளசரு கிளம்பப்போவுது. இவ அர மனசா ஏறி ஒட்காந்திட்டா. நாங்க எல்லாம் பாத்துக்கிட்டே இருந்தோம். எனக்கு தோணுச்சி. நம்மளயும் இந்த சாமி இப்படித்தான் அனுப்பப்போவுதுன்னு. என்னத்த செய்ய முடியும்?
இப்படி நெனச்சிக்கிட்டு இருக்கும்போதே பிளசரு கௌம்புறதுக்கு முன்னாடி திடீர்னு வெளிய குதிச்சி ஓடி வந்தா என்கிட்ட. எனக்கு பட படன்னு ஆயிட்டு.
என்னப் பார்த்து சொன்னா.
"எலேய். என்ன மறந்துறாதல. ஒன்ன விட்டுப் போகணுமேன்ற நெனப்பதாம்ல என்னால தாங்கமுடியல. ஏதோ தட்டாண் புடிச்சி வெளயாண்டோம். அவ போயிட்டான்னு இருந்துறாதல. நா பாவம்ல. என்னய மறந்துறாதல. எப்படியும் இங்கயே திரும்பி வந்துருவேம்ல. நீ எங்கயும் போயிறாதல. என்ன மறந்துறாதல."
எனக்கு அதுக்கு மேல அளுகய அடக்கமுடியல. என்னதாம் ஆம்பளன்னாலும்.?
இப்படி நெனச்சிக்கிட்டு இருக்கும்போதே எல்லாரு முன்னாடியும் எனக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டு ஓடிப்போயி பிளசருக்குள்ள ஏறிக்கிட்டா. பிளசரு மறையர வரைக்கும் என்னயே பாத்துக்கிட்டு இருந்தா. எனக்கு ஒன்னுமே ஓடல. எல்லாரும் என்னயவே பாத்துக்கிட்டு இருந்தாக. பூபதி இப்போ அளாம வாயத் தொறந்து நின்னுகிட்டு இருந்தான். சாமி ஒண்ணும் சொல்லாம உள்ளார போயிட்டாரு.
சட்டென முகத்தில் ஏதோ தாக்கியது போல இருந்தது. கை தன்னையும் அறியாமல் அதைத் தட்டிவிட அந்தத் தட்டாண் என் மடியில் விழுந்தது. கருப்பு கண்டங்களால் ஆன வாலும் சிவந்த உடலும் நிறமற்ற இறக்கையுமாய் என் மடியில் கிடந்த அதை மெல்ல எடுத்தேன். கண் அருகில் வைத்து நோக்கினேன். பாவமாய் என்னைப் பார்ப்பது போல இருந்தது. அதை வெளியில் தூக்கிப் எறிந்தேன். அது பறக்கமுடியாமல் பறப்பதும் மீண்டும் கீழே விழுவதுமாகத் தத்தளித்தது.
அதுவரை வெளியில் சுற்றிக்கொண்டிருந்த மனதின் நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாய் களைத்துப் போய் மனதிற்குள் அடைவது போல இருந்தது. என்னுள் இருந்த இரண்டாவது மனம் சொல்லியது.
"அதெல்லாம் இல்லை"
எத்தனையோ மாற்றங்கள். எண்ணத்தில் மாற்றம். வாழ்க்கையில் மாற்றம். பேசும் தமிழில் மாற்றம். ஏற்றங்கள். சறுக்கல்கள். எதிர்ப்பார்க்காத சவால்கள். எல்லாம் தாண்டி வரும்போது பத்து ஆண்டுகள் கழிந்திருக்கிறது. கூடவே இந்த இரண்டாவது மனமும் வளர்ந்திருக்கிறது. அவ்வப்போது அது நினைப்பதைச் சொல்லும். பெரும்பாலும் எனக்கெதிராய்ச் சொல்லும். அடக்கினாலும் அடங்காது. அதனால் நான் அமைதியாக இருந்துவிடுவேன்.
வண்டிக்காரர் எனக்குள் நடந்த பிரளயத்தின் சுவடு கூட இல்லாதவராய் காரியத்தில் மட்டும் கண்ணாய் இருந்தார்.
"ரே.ரே."
அவர் வேலை அவருக்கு.
இப்போது நான் எதற்காக ரெங்கசமுத்திரம் செல்கிறேன் என்பது எனக்கே நிச்சயமாகத் தெரியவில்லை. அங்கே யாரிருப்பார்கள்? எனக்கு வரவேற்பு எப்படி இருக்கும்? எதுவும் தெரியாது. ஆனால் ஏதோ ஒரு உந்துதல் என்னை தொடர்ந்து அங்கே செல்லுமாறு சொல்லிக்கொண்டே இருக்கிறது. சாமி இருப்பாரா? முருகன் அண்ணாச்சி இருப்பாரா? பூபதி இருப்பானா? தெரியவில்லை. ஆனால் மயிலு இருப்பற்கான வாய்ப்பே இல்லையென்று நிச்சயமாகத் தெரியும். இருந்தாலும் ஏதோ ஒன்று என்னை நிம்மதியாய் இருக்கவிடாமல் இங்கே வர வற்புறுத்திக்கொண்டே இருந்தது. மயிலின் நினைவோ? அல்லது அவள் எனக்காக ஆசிரமத்தில் காத்திருப்பாள் என்ற எண்ணமோ? உடனே சிரித்துக்கொண்டேன். அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. மேலும் நான் அதை நினைத்து ஆசிரமத்திற்குப் போகவில்லை என்று எனக்குள் சொலிக்கொண்டபோது என் இரண்டாவது மனது கத்தியது.
"பொய். பொய். அவ இருப்பான்னுதான் போற."
இப்போது அதை அடக்க மனம் வரவில்லை. அதன் கற்பனை கூட இனிமையாக இருப்பது போலத் தோன்றியதால் அதைத் தொடர்ந்து பேச அனுமதித்தேன்.
Labels:
சிறுகதை
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நீங்க ரெங்கசமுத்திரத்தில் மடத்தில் தங்கி படிச்சீங்களா? எந்த வருடம்? நானும் அந்த ஊர்காரன் தான்,
நான் ரெங்க சமுத்திரத்தில் படிக்கவில்லை. ஒரே ஒரு தடவை அந்த மடத்துக்குப் போனேன். அவ்வளவுதான்.
Post a Comment