Wednesday, November 12, 2003


பத்தினிப் பாறை

--ஹரன் பிரசன்னா

எப்போதும்
தனியாய்
அமைதியாக இருக்கிறது
அந்தப் பாறை

வெயிலிலும்
மழையிலும்
வெள்ளத்திலும்
வறட்சியிலும்
புயலிலும்
இப்படி எப்போதும்
தனியாய்
அமைதியாய்த்தானிருக்கிறது.

எல்லா பாறைகளும் இப்படி
சீந்துவாரற்றுக் கிடப்பதில்லை
அதிர்ஷ்டம் உள்ள
வடிவான பாறைகள்
மஞ்சள் தூவப்பட்டு
குங்குமம் பூசப்பட்டு
கடவுளாகிவிடுகின்றன
அவற்றின் பாடு
கொண்டாட்டம் என்று சொல்லும்படியாக

ஒரு பாறையின் புலம்பல்
மனிதர்களுக்குக் கேட்பதில்லையென்பதைவிட முக்கியம்
சக பாறைகளுக்கும் கேட்பதில்லையென்பது.

அரிப்பெடுத்த எருமை
முதுகுரசும்போது
பாறையின் மனசைப் பார்ப்பதில்லை,
தாலி கட்டியவனுக்கு
எருமையை ஒப்பிடுதல்
தவறென்ற போதிலும்.

No comments: